நேர்த்திக்கடன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 1, 2025
பார்வையிட்டோர்: 292 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிமூ அண்ணனுக்கு வயது நாற்பத்தைந்து. பார்க்கும்போது அப்படித் தெரியமாட்டார். ஒல்லியாய் உயரம் மிகக் குறைவாய் இருப்பார். எனது நெஞ்சுக்கு எதிரே அவர் முகம் இருக்கும், இருவரும் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தால்! எனக்கு அவர் நெருங்கிய சினேகம். நான் பணிபுரியும் ஆலையில் அவர் ஒரு தினக்கூலித் தொழிலாளி. அவர் போன்ற தினக்கூலித் தொழிலாளிகளுக்கு வேலையில் நான் பொறுப்பாளி. சார் போடுவார்கள்; வெளியே போய் சவுடால் பேசுவார்கள். கொஞ்சம் கோபமாய்ப் பேசினால் ‘வீட்டுக்கு இப்புடித்தானே சார் போவீங்க…’ என்று அன்பாய் விசாரிப்பார்கள்.

நமக்கு இதெல்லாம் சகஜம். வேலைக்கு வந்து ஆறு வருடங்களா கின்றன. எத்தனையோ பேரை பார்த்தாகி விட்டது. சில பேரிடம் வேலை வாங்க பொம்பளக்கதை பேச வேண்டும். சிலபேரிடம் சினிமாக்கதை பேசவேண்டும். சிலபேரிடம் செண்டிமெண்ட் ஒர்க்அவுட் ஆகும். சில பேரிடம் நாம் மட்டும் பேசிப் பயனில்லை. அவர்களைப் பேசவைக்க வேண்டும். பேச்சு முடியும் போது, ‘ஏங்க… அப்புடியே போயி ஒரு அஞ்சு மூட்டை அள்ளி உள்ளே தட்டிட்டு போயிடுங்க… பெரிசு பார்த்தா அரட்டை அடிக்கிறாங் கன்னு டென்ஷனாயிடும், அப்புறம் நாந்தான் இதுக்கெல்லாம் திட்டு வாங்கணும்..’ என்று மேனேஜரைப்பற்றி போட்டுக்கொடுக்க வேண்டும்; ‘பெரிசு’ என புகழ்ந்தும் புகழாமலும் இகழ்ந்தும் இகழாமலும் குறிப்பிடத் தெரியணும். சில சமயம் நம்மை அவர்கள் ‘போட்டுக்’ கொடுத்துவிடுவார்கள். அதற்கும் ரெடியாய், ‘பெரிசு நல்ல மனுஷம்ப்பா; சும்மா பேசுவாரு, உதவினா ஒடனே பண்ணுவாரு’ என்று சாட்சி வைத்துப் பேசவேண்டும்.

பலபேரிடம் நாம் எதைப்பற்றி பேசினாலும் வேலை ஆகாது. பேசி முடிக்கும்போது, ‘என்னா சார் பண்ணச்சொல்றீங்க.? வீட்டுக்கஷ்டம்; மூணு குழந்தைங்க. ஒரு பொண்டாட்டி. குடும்பத்தை ஓட்ட கஷ்டமா இருக்கு சார். வீட்டு வாடகை அஞ்சி மாசமா கொடுக்கலே. வேலை வெட்டி இல்லாமெ ஒரு வருஷம் இருந்தேன். அப்போ பார்த்து பக்கத்து வீட்லே இருந்த ஒரு பொண்ணுகூட ‘செட்டப்பு’ ஆயிடுச்சி. அதுவும் இப்போ அஞ்சி மாசம் முழுகாம! ரெண்டு சம்சாரத்தோட அல்லாடுறேன் சார்’ என்பார்கள். ஏதோ நான்தான் மூணு புள்ளையையும் பெற்றுக்கொள்ளச் சொல்லிவிட்டு பக்கத்து வீட்டில் ஒரு ‘கீப்’பும் வைத்துக்கொள்ளச் சொன்னதுபோல!

‘பதினெட்டு வயது என சொல்லிக்கொண்டு வேலைக்கு வந்த பன்னிரெண்டு வயது சிறுவன்’ இசக்கியில் இருந்து ‘எழுபது வயதை ஐம்பத்தி ஒன்பதாக்கி’ இதோ சுண்ணாம்பு மூட்டை வைத்து தள்ளிக் கொண்டு போய்க்கொண்டிருக்கும் ஐயா நாகூர் பிச்சை வரை எல்லோருக்கும் பிரதானம் வயிறு. சில பேருக்கு சில வயிறுகள். அம்மா, அப்பா, தம்பி, தங்கை, மனைவி, குழந்தைகள் என்று! வயிறு என்பது ஏதோ ஒற்றை வார்த்தைதான். அதன் நீட்சிதான் பல மாயங்களைச் செய்கிறது.

கிருஷ்ணமூர்த்தி அண்ணனுக்கு..ம், நான் முதலிலே சொன்னவர் தான், அவருக்கு நான் என்றால் ஏனோ ஒரு பிரியம். நானும் அவரை மட்டுமே அண்ணன் என்றழைப்பேன். மற்ற எல்லோரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவேன். கூட ஒரு வாங்க போங்க சேர்த்து. ஆனால் இவரை மட்டும் அண்ணன்.

“சுந்தர்..! ஹாப்பர்லெ ‘பாசிட்டிவ்’ அடிக்குது. அந்தக் கன்வேயர்லே இருந்து ‘டஸ்டா’ வருது. ‘கம்ப்ரெஷர்’ போட்டு கொஞ்சம் லோடு ஏத்தச் சொல்லலாமே..”.

முதலில் அவர் வேலைக்கு வந்தபோது எல்லோரும் போலவே நானும் நக்கலாகத்தான் பேசினேன்; பார்த்தேன். அவர் உருவம், உயரம், மூன்று பாதிகளைச் சேர்த்தது போல ஒருமாதிரி கண்கள்! ஆனால் இப்போது அவர் பேசிய வார்த்தைகளும் அதன் ஆங்கில உச்சரிப்புகளும் என்னை அவரை அதிசயமாய் பார்க்க வைத்தன. மெல்ல விசாரிக்க ஆரம்பித்தேன்.

பி.ஏ படித்தவர். பி.ஏ என்றால் அந்தக் கால பி.ஏ. அவ்வளவு ஆங்கிலப்புலமை; முடிந்த வேலை செய்வார். உடல்வாகு அப்படி. கடினமான வேலைகளை நான் கொடுப்பதில்லை. சில பேர் கொடுப்பதாக அவர் என்னிடம் சொல்லமாட்டார். ஆனால் தெரியும்; செய்வார்கள். ஆளுமை பதவிகளில் இருக்கும் சிலபேருக்கு தமக்குக் கீழே இருப்பவர்கள் முட்டாளாய் இருக்க வேண்டும். கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால்கூட அவ்வளவுதான். தாழ்வு மனப் பான்மை வந்துவிடும்.

கிமூ அண்ணணுக்கு இரண்டு பெண்களாம். மூத்த பெண் ஒரு ஜவுளிக் கடையில் வேலை செய்கிறாள். இரண்டாவது பெண் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். வயதான அம்மா அப்பா. இரண்டு அண்ணன்கள். சுழற்சி முறையில் அம்மா அப்பா நான்கு மாதம் ஒரு மகன் வீட்டில். இப்போது இவர் வீட்டில். வறுமை அவர் வீட்டில் வீடு கட்டி செல்வச்செழிப்பாய்’ வாழ்ந்துவந்தது. எப்போதாவது அவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். இப்போதுவரை அதற்கு நேரமில்லை.

அவர் வாழ்க்கைக்கதை அனைத்யுைம் என்னிடம் பகிர்வார். தான் பட்ட துன்பம் அனைத்தையும் சொல்லுவார். தன் கை தனது வயிற்றுக்காகவும் தனது வயிறு சம்பந்தப்பட்ட அனைவருக்காகவும் படட கஷ்டம், படும் கஷ்டம் அனைத்தையும் சொல்வார். அவற்றில் பாதி என் தந்தை எனக்கு சொன்னதாய் இருக்கும். நான் பார்த்தவையாய் இருக்கும். வேகாத வெயிலில் இடுப்பெலும்பு உடைய மரம் உடைத்தது நினைவுக்கு வரும். நெஞ்சம் உருகும். இதயம் குலைந்து இப்படியெல்லாம் கஷ்டப்பட எதற்காக நாம் பிறந்திருக்க வேண்டும் என நினைக்கத் தோன்றும். ஆனால் அவர் முகத்தில் அதற்கான வருத்தமே காணக் கிடைப்பதில்லை. கஷ்டங்களை அவர் சொல்லும்போது கூட, “எப்படியோ அம்மா அப்பாவை கடைசி காலத்துலெ சந்தோசமா வெச்சிருக்கோம் சுந்தர். அது போதும். நாம பிச்சை எடுத்தாவது அவங்களை சந்தோசமா வெச்சிக்கணும். அதுதாம்பா… நமக்கு சந்தோசம்” என்பார்.

காதலித்து திருமணம் செய்துகொண்டிருக்கிறார். உடல் ஊனமான ஒரு பெண்ணை! அவர் சொல்லச்சொல்ல எனக்குள் என்னவோ ஒரு மாதிரி இருக்கும். இருபது வயதில் இருந்து அசைவம் சாப்பிடுவதில்லை. வள்ளலார் பாடல்கள் படித்ததில் இருந்து சாமி கும்பிடுவ தில்லை. ஒவ்வொரு வள்ளலார் ‘ஜோதி’ தினத்தன்றும் முடிந்த அளவுக்கு தெருவில் காசு வசூலித்து அன்னதானம் போடுவாராம். தன் அந்த மாத சம்பளமும் அதில் முடிந்துவிடும் போல!

பட்டினியைக் கூட ரசித்து அனுபவிப்பார். இரவு வேலை நேரங்களில் எங்களது சாப்பாடு போக கேண்டீனில் மீதமிருப்பதை தங்களுக்கு வாங்கித்தரச் சொல்லி ஒரு பிரிவினர் அன்பாய் எங்களை வேண்டிக் கொண்டிருக்கையில் கூட, அவர் எதுவும் கேட்க மாட்டார். கொண்டு வந்தால் சாப்பிடுவார். இல்லையேல் யாரிடமும் கேட்கமாட்டார், என்னிடம் கூட.

“என்னமோ தெர்யலை சுந்தரு. இன்னைக்கி எனக்கு வேலைக்கி வரவே புடிக்கலெ. கைகாலெல்லாம் ஒரே அசதி. நாளையிலேர்ந்து நாலு நாளைக்கி வரமாட்டேன்ப்பா. அம்மா அப்பாவெ கூட்டிக் கிட்டு ராமேஸ்வரம் போறேன். அம்மாவுக்கு ரொம்ப ஆசெ. ரெண்டு நாளு அங்கெ போயி இருந்து சாமி கும்புட்டுட்டு வரணுமின்னு. நான் சின்னப்புள்ளயா இருந்தப்போ நேந்துக்கிச்சாம். அதுவும் இந்த வலது கையிலே என்னமோ பெரிய கட்டி மாதிரி வந்து கையையே எடுக்கணும்ன்னு எல்லாரும் சொன்னப்போ, அது அங்கெ உள்ள சாமிக்கு நேந்துக்கிச்சாம், எம்புள்ளக்கி கை செரியாயிட்டா, அவனைக்கூட்டியாந்து ரெண்டு கை நெறய காணிக்கை போடச் சொல்றென்னு.”

“காணிக்கையை கையில்லாதவங்களுக்கு போட்டாலாவது ரெண்டு வேளை நிம்மதியாச் சாப்பிடுவாங்க; அதுக்கும் அம்மா வேண்டாங்கிது. அதுகிட்டே சொல்லிப் பாத்துட்டேன். ‘என்னதான் அது இதுன்னு பண்ணுனாலும் காணிக்கையையும் கட்டாயம் பண்ணியாகணும்னு சொல்லுதுப்பா. ஏற்கனவே நெறைய கடென். இதுலே இப்போ இது வேற. செரி. அம்மாவுக்காக. இதையும் பண்ணலாம்பா.”

“கோயிலுக்கே நான் போனதில்லை சுந்தரு. இப்போதான் மொதல்லே போகப்போறேன்; அதுவும் ஏம் அம்மாவுக்காக. ரெண்டாம் பொண்ணுக்கு நாளைக்கி ரிசல்ட் வருதுப்பா. மொதல் மார்க்கு வாங்குவேன்னு சொல்லியிருக்கா. பாப்போம். பெரியவ நல்லா படிப்பா, என்னமோ அவளைத்தான் படிக்கவெக்கெ முடியாமே போச்சி. இவளையாவது கைகாலை அடமானம் வெச்சாவது நல்லா படிக்கவெக்கணும்பா..”

“செரிண்ணே. அப்போ இன்னைக்கிம் லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கி கெளம்பவேண்டியதுதானே.. நைட் ஷிப்ட் எதுக்குண்ணே வந்தீங்க?”

“இல்லேப்பா. அம்மாதான் சொன்னாங்க. இன்னைக்கி மட்டும் பொயிட்டு வா. நாலு நாளு லீவு போடப்போறீயேன்னு. அதாம்பா வந்தேன்.”

“சரின்னே. நல்லபடியா பொயிட்டு வாங்க. பணம் எதுவும் வேணு முன்னா சொல்லுங்க. இப்போ கொஞ்சம்தான் இருக்கு. காலையிலெனா ‘பேங்க்’லெ எடுத்து தருவேன். ஒண்ணும் நினைக்காதீங்க. சொல்லுங்க. பணம் எதுவும் வேணுமா?”

“இல்லேப்பா. சூப்பர்வைசர்ட்டே கேட்டிருக்கேன். காலையிலே தர்றேன்னு சொல்லியிருக்கார். போதும்பா…”

“என்னப்பா சுந்தர்.. முக்கியமான ப்ரச்சனை ஏதுவுமா.. ரொம்ப நேரமா பேசுறீங்க போல இருக்கு….”

அவரைப் பார்த்ததும், கிமூ அண்ணன் கொஞ்சம் விலகிப்போனார். அவர் விலகுவது தெரிந்து, வந்த எனது இன்சார்ஜ் சொன்னார்.

“கிருஷ்ணமூர்த்தி, மேலே ரெண்டாம் ‘புலோர்’ லெ ‘ஐனூத்தி பத்து’ ‘கன்வேயர்’ பக்கத்திலே ஒரு ஐம்பது மூடை ‘ரீ புராசெஸ் மெட்டீரியல்’ இருக்கு. அதைக் கொஞ்சம் உள்ளே தட்டி விட்டுடுங்க. டாப் கவெரை தொறந்து பாத்து போடுங்க. போடும்போது ‘பாரின் மெட்டீரியல்’ ஏதும் உள்ளே போயிடாம பாத்துக்குங்க. ‘போல்ட் நட்டு’ன்னு ஏதாவது உள்ளே போயிட்டா அப்புறம் மொத்தத்தையும் கழட்டுறமாதிரி வந்துரும். கூட வேண்ணா நாகூர் பிச்சைய கூட்டிக்கிங்க. அத முடிச்சுட்டு ‘ஹாப்பர்’ பக்கத்துல கொஞ்சம் சோடா பவுடர் கெடக்கு பாருங்க, அதையும் ‘ஷவெல்ல’ வழிச்சி சுத்தம் பண்ணிடுங்க.”

“என்னப்பா சுந்தரு, மேயிர மாட்டை நக்குன மாடு கெடுக்குறது மாதிரி. ரொம்ப ப்ரீயா பேசாதப்பா அவங்ககிட்டேயெல்லாம். அப்புறம் ஒரு வேலையும் பாக்கமாட்டானுக..” கி.மூ அண்ணன் போன பின்தான் சொன்னார்.

“இல்லே சார் அந்த வேலையப்பத்தித்தான் சொல்லப்போனேன். கீழே கிரவுண்ட் புளோர்ல பம்ப் ஏரியாவெல்லாம் இப்போத்தான் கிளீன் பண்ணச்சொல்லி பண்ணிட்டு வந்தாரு. ஆறாவது நைட்டு ஷிப்ட்டுல சார். டயர்டா இருப்பாங்க. கொஞ்சம் பேசி ப்ரெஷ் பண்ணிட்டோம்னா அப்புறம் நாம வேலையை சொல்லலாம். அதுக்காகத்தான்..”

“சரி.. பாத்துக்கோ. எப்படியும் எல்லா மூடையையும் போட்டு முடிக்கச் சொல்லு.. சரியா?”

“ஓக்கே சார். பாத்துக்கிறேன்..”

“ராஜா என்ன பண்றான்..”

“உள்ளே இருக்கான் சார்… கன்ட்ரோல் ரூம்லே..”

“அவென் ஏன்யா அங்கே இருக்கான்.. பேனல்மேன் இருக்கான்லெ, அப்புறமென்ன அவனும் உள்ளே? மூட்டை போடுறதை பாத்துக்கச் சொல்லி அவனை அனுப்பு. நீ சாப்பிடலைன்னா சாப்பிட்டுப் போயிடு.”

“சரி சார்..” ராஜாவை ரேடியோவில் கூப்பிட்டேன்.

“ராஜா, கேண்டீன்லெ போய் சாப்பிட்டு வறேன். மேலே மூட்டை போடுறாங்க. கொஞ்சம் போய் பாத்துக்க. நான் சாப்பிட்டு வந்திடுறேன்.”

சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ராஜா அவசரமாக என்னை ரேடியோவில் அழைத்தான். உடனே அங்கு ஓடினேன்.

கி.மூ அண்ணன், தனது இடது கையால் வலது கையின் மேற்பாதியை பிடித்துக்கொண்டிருந்தார். வலது கையின் முழங்கை மூட்டிலிருந்து இருந்து வேகமாய் ரத்தம் சொட்டிக்கொண்டிருக்க, முழங்கை மூட்டிற்குக் கீழே கையில்லை.

இதயம் பதட்டத்தில் துடிதுடிக்க, “என்னாச்சி, என்னாச்சிண்ணே.. எப்படி? அய்யோ!”

“கோணி ஒண்ணு உள்ளே மாட்டிக்கிச்சிப்பா. டக்குன்னு அவசரத்துல அதை இழுக்க உள்ளே கைய விட்டுட்டேன். மாட்டிக்கிச்சி.” அவர் முகத்தில் எந்தவொரு வேதனையும் எனக்குத் தெரியவில்லை.

உடனே அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு மேலே போய் அந்தக் கையைத் தேடினேன். ‘கன்வேயரி’ ன் உள்ளே மாட்டிக் கொண்டிருந்தது அது. கன்வேயரை திருப்பிச் சுற்றி அதை வெளியே எடுத்தேன்.

என் கை மேலே அந்தக் கை! அந்த கையின் ஒரு விரலில் செப்பு மோதிரம்; அதில் அந்த சாமி படம்!

துண்டாகிப்போன அக்கையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தபொழுது பின்னாலிருந்து சில வயிறுகள் கூக்குரலிட்டு அழுவது எனக்குக் கேட்டது!

– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *