நெல் வியாபாரியின் மோசடி
கதையாசிரியர்: நெ.சி.தெய்வசிகாமணி, மரியாதைராமன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 13, 2025
பார்வையிட்டோர்: 18
(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கனகலிங்கம் என்பவன் ஒரு நெல் வியாபாரி. ஒருநாள் அவனிடம் ராமலிங்கம் என்பவன் நெல் வாங்குவதற்காக வந்தான்.
“அய்யா, நெல்வாங்க வந்திருக்கிறேன். உங்களிடம் உள்ள நெல்லை மாதிரிக்குக் காட்டுங்கள்” என்று கனகலிங்கத்திடம் கேட்டான் ராமலிங்கம்.
கனகலிங்கம் உள்ளே சென்று ஒரு சிறிய கூடையில் சிறிது நெல்லை எடுத்து வந்து காண்பித்து, ‘ஒரு வராகனுக்கு வாங்கினாலும் இது தான். பத்து வராகன்க ளுக்கு வாங்கினாலும் இது தான். என்னிடம் வேறு நெல் கிடையாது” என்றான் கனகலிங்கம்.
‘சரி, ஒரே ஒரு ரகம்தான் வைத்திருக்கிறார் போல் இருக்கிறது!’ என்று நினைத்த ராமலிங்கம் கனகலிங்கம் காட்டிய நெல்லிலேயே பத்து வராகன்களுக்குத் தரச் சொல்லிப் பணத்தைக் கொடுத்து விட்டு நெல்லை அளக்கச் சொன்னான்,
பணத்தை வாங்கிக் கொண்ட கனகலிங்கம், “நெல்லை அளக்க வேண்டிய தேவையில்லை. இதோ இந்தக் கூடையில் இருக்கிறதே நெல், அது தான்; வேறு நெல் என்னிடம் கிடையாது. எடுத்துச் செல்” என்றான் கனகலிங்கம்.
“என்ன அநியாயம் இது! நான் பத்து வராகன்கள் கொடுத்திருக்கிறேன்!” என்றான் ராமலிங்கம்.
“நான்தான் அப்பொழுதே சொல்லி விட்டேனே! நீ ஒரு வராகனுக்கு வாங்கினாலும் இது தான்; பத்து வராகன்களுக்கு வாங்கினாலும் இது தான் என்று. நீ இதற்கு ஒப்புக் கொண்டுதானே பத்து வராகன்களைக் கொடுத்தாய்?” என்றான் கனகலிங்கம்.
“நான் மாதிரிக்குத்தான் அந்த மாதிரி சொன்னீர் களென்று நினைத்தேன்” என்றான் ராமலிங்கம்.
“அப்படியானால் அது உன் தப்பிதம்தான்; நான் அதற்குப் பொறுப்பாளியில்லை” என்றான் கனகலிங்கம்.
ராமலிங்கம் மரியாதைராமனிடம் சென்று தன் வழக்கை எடுத்துரைத்தான்.
மரியாதைராமன் கனகலிங்கத்தையும் கூட்டி வரச் செய்தான்.
அவனிடம் விசாரணை செய்தபோது அவன் முன்போல், “ஒரு வராகனுக்கு வாங்கினாலும் இதுதான்; பத்து வராகன்களுக்கு வாங்கினாலும் இதுதான் என்று முதலிலேயே இவரிடம் சொல்லி விட்டேன். எனவே என் பேரில் தவறு இல்லை” என்றான்.
“உங்களுடைய வழக்கில் உடனடியாகத் தீர்ப்பு வழங்க முடியாது. இன்னும் ஒரு மாதம் கழித்துத்தான் தீர்ப்பு வழங்க முடியும். அதுவரை நீ ராமலிங்கம் வீட்டில் இருந்துகொண்டு அவர் வீட்டில் சாப்பிட்டு வர வேண்டும்” என்றான் மரியாதைராமன்.
இதைக் கேட்டதும் கனகலிங்கத்திற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
“ஒரு மாதம் வரை இலவசச் சாப்பாடு கிடைக்கப் போகிறதே!” என்று நினைத்தான் கனகலிங்கம்.
“ராமலிங்கம், இருவருக்கும் வேண்டிய சாப்பாட்டை நீதான் தயாரிக்க வேண்டும். நீ தயாரிக்கிற சாப்பாட்டில் பாதியை நீ சாப்பிட்டுவிட்டு பாதிச் சாதத்தைக் கனகலிங்கத்திற்குப் போட வேண்டும்” என்றான் மரியாதைராமன்.
இதைக் கேட்டதும் ராமலிங்கத்திற்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது.
‘குதிரை செத்ததுமல்லாமல் குழி தோண்ட முக்கால் பணம்’ என்பதைப் போல், நம்முடைய பத்து வராகன்களும் போய் ஒரு மாதத்திற்குக் கனகலிங்கத் திற்குப் பாதிச் சாப்பாடு போட வேண்டிய நிலை ஏற்பட்டது குறித்து மிகவும் வருந்தினான்.
கனகலிங்கம் சென்ற பிறகு ராமலிங்கத்தைத் தனியாகக் கூப்பிட்ட மரியாதைராமன், “ராமலிங்கம், உன் வருத்தத்திற்குக் காரணம் புரிகிறது. உன் நன்மைக்குத் தான் சொன்னேன். நான் சொல்கிறபடி நட” என்று கூறியவனாய் ரகசியமாய் அவனிடம் ஏதோ கூறினான் மரியாதைராமன்.
மரியாதைராமன் கூறியதைக் கேட்டதும் ராமலிங்கத்தின் முகத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டது.
மறுநாள் கனகலிங்கம் ராமலிங்கத்தின் வீட்டுக்கு வந்து விட்டான். ராமலிங்கம் மரியாதைராமன் சொன்னவாறு சமைத்துக் கொண்டிருந்தான்.
சாப்பாட்டு நேரமானதும் கனகலிங்கத்தின் முன்னால் ஓர் இலையைப் போட்டு ஒரு சாதத்தில் பாதியைக் கிள்ளி இலையில் வைத்து, ‘சாப்பிடு’ என்றான் ராமலிங்கம்.
“என்ன அயோக்கியத்தனம். பாதிச் சாப்பாடு போடுவதற்குப் பதில் பாதிச் சாதத்தைப் போட்டி ருக்கிறாயே!” என்று கோபமாகக் கேட்டான் கனகலிங்கம்.
“வீண் பேச்சுப் பேசாதே! நீதிபதி உனக்குப் பாதிச் சாதத்தைத்தான் போடச் சொன்னார். ஒரு மாதம் வரை இதைத்தான் உனக்குப் போடுவேன். வேண்டுமானால் போய் நீதிபதியிடம் முறையிட்டுக் கொள்” என்றான் ராமலிங்கம்.
கனகலிங்கம் மரியாதைராமனிடம் போய் “அய்யா, ராமலிங்கம் வடிக்கும் சாதத்தில் பாதிச் சாதம் எனக்குப் போடச் சொன்னீர்கள். அவனோ ஒரு சாதத்தில் பாதியைத்தான் எனக்குப் போடுகிறான்” என்றான்.
“நான் சொல்லும்போது நீயும் மறுப்புச் சொல்லாமல் ஒப்புக் கொண்டாயே, இப்பொழுது வந்து குறை சொன்னால் எப்படி?” என்று கனகலிங்கத்திடம் கேட்டான் மரியாதைராமன்.
“பாதிச் சாதம் என்றால் மொத்தச் சாப்பாட்டில் பாதிச் சாதம் என்றுதான் நான் நினைத்துக் கொண்டேன்!” என்றான் கனகலிங்கம்.
“ராமலிங்கமும் அப்படித்தான் நீ சொல்லும் போது நினைத்துக் கொண்டார். அதனால் அவர் பேரிலும் தவறில்லை. அவருடைய பத்து வராகன்களுக்குச் சேர வேண்டிய நியாயமான நெல்லை அளந்து கொடுக்க உனக்கு விருப்பமில்லாவிட்டால் நீ ஒப்புக் கொண்டபடி ராமலிங்கத்தின் வீட்டில் இருந்து கொண்டு ஒரு மாதம் வரை பாதிச் சாதத்தைச் சாப்பிட்டுக் கொண்டிரு” என்றான் மரியாதைராமன்.
“என்னால் பாதிச் சாதத்தைச் சாப்பிட்டு ஒரு வேளை கூட இருக்க முடியாது. நான் அவருக்கு நியாயமாகச் சேர வேண்டிய நெல்லை அளந்து கொடுத்து விடுகிறேன்” என்றான் கனகலிங்கம்.
– மரியாதைராமன் கதைகள், முதற் பதிப்பு: ஏப்ரல் 1981, கண்ணப்பன் பதிப்பகம், சென்னை.
| பதிப்பாசிரியர் முகவுரை (மரியாதைராமன் கதைகள் - பதிப்பியல் நோக்கில சில குறிப்புகள்) மரியாதைராமன் கதைகள் இப்பொழுது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது. இவ்வேளையில், முதற்பதிப்பு வெளிவந்த காலத்திற்குப்பின் இக்கதைகள் தொடர்பாக என்னால் தொகுக்கப்பெற்ற சில அரிய குறிப்புகளை இங்குப் பதிவுசெய்கிறேன். அவற்றோடு இப்பதிப்பினைக் குறித்தும், மரியாதைராமன் கதைப்பதிப்புகள் குறித்தும் குறிப்பிடத் தக்க செய்திகளையும் இங்கே அளிக்கின்றேன். இச்செய்திகள் இக்கதையிலக்கிய ஆர்வலர்க்கும் அன்பர்களுக்கும் பயன்மிக நல்கும் பான்மையனவாகும். புகழ்மிகு கதையிலக்கியங்கள் : விக்கிரமாதித்தன்…மேலும் படிக்க... |