தின / வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: குடும்பம்
முதல் வெளியீடு: 1975
இணைய வெளியீடு: November 15, 2026
பார்வைகள்: 486
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வாய்க்காலின் வழியே குதித்தோடி வந்து, பாத்தியினுள் நிறையும் தண்ணீரைப் பார்த்தபடி நிற்கிறாள் இராசமணி, நுங்கும் நுரையுமாக இறைப்பு இயந்திரக் குழாயிலிருந்து குதித்துக் கலகலத்த ஆரவாரச் சிரிப்பு அடங்கி, சிறிது வேகந்தணிந்து, நெளிந்து வளைந்து, ஓர் இலாவண்ணியத்துடன் ஓடிவந்து, அந்தப் பாத்தியினுள் சங்கமிக்கும் நீரைப் பார்த்துக்கொண்டிருப்பதே ஒரு வேடிக்கையான பொழுதுபோக்குத்தான். 

தினமும் மகிழ்வையும் உற்சாகத்தையும் அளிக்கும் அந்தப் பொழுதுபோக்கு இன்று அப்படியில்லையே. ஒரே காட்சி தான் எனினும், உள்ளத்தையும் அதன் நிலையையும் பொறுத் தல்லவா அதனால் ஏற்படும் உணர்ச்சிகள் அமைகின்றன. 

இனம்புரியாத வேதனையொன்று உள்ளத்துள் வளைந்து வர ஏதோ சிந்தனைகள்! 

இராசமணி மண்வெட்டியை எடுத்து, மண்ணை வெட்டிப் போட்டு, மற்றொரு பாத்தியினுள் நீரைத் திருப்புகிறாள். 

“கிணற்றில் தண்ணீர் வற்றியிருக்குமோ?” இந்த எண்ணம் தலைநீட்டவும் அவள் விரைந்துபோய்க் கிணற்றை எட்டிப் பார்க்கிறாள். நீர் வெளியேறி வற்றிக்கொண்டிருக்கும் போதே ஒரு புறம் குபுகுபுவென நீர் ஊற்றெடுத்துக் கிணற்றுள் பெருகுவது தெரிகிறது. இராசமணி திரும்புகிறாள். இறைப்பு எந்திரத்திலிருந்து ஆராவாரத்தோடு குதித்தோடும் நீர் அவளைப் பார்த்துச் சிரித்து உரவாரிக்கிறது. 

இராசமணி தனக்குள்ளே சிரித்துக் கொள்கிறாள். 

கிணற்றினுள்ளே அமைதியாகக் கிடந்த நீர் வெளியேறிச் சில நிமிடங்களில் மீண்டும் பூமியின் கருவறைக்குள்ளே சங்கமிப் பதற்கிடையிலேதான் எத்தனை ஆட்டம். பாட்டம். துள்ளல் ஆரவாரிப்பு எல்லாம். 

அதனுடன் மனித வாழ்வையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண் டாள் இராசமணி. இரண்டுக்கும் எவ்வளவு ஒற்றுமை, இந்த ஒற்றுமைதான் எங்கள் குடும்பம் இப்படித்துள்ளி ஆர்ப்பாட்டம் போட இந்தத் தண்ணீரையே காரணமாக்கியதோ? 

சிந்தித்துக்கொண்டே நீரை திசைதிருப்பி மற்றவாய்க்காலுட் போகவிடுகிறாள் அவள். அவளது சிந்தனையும் திசை திரும்புகிறது. 

நேற்றிரவு தொடக்கம் அவள் மனதை எங்கே செல்ல விட்டாலும் அது இப்படித்தான் இந்தச் சிந்தனையுடனும் நினைவு களுடனும் வந்து இலயித்து விடுகிறது. 

“பாவம் சின்னையா எப்படி இருக்கிறாரோ?” இந்த நினைவு எழும்பொழுதே ஏக்கமும் வேதனையும் அவளது நெஞ்சினுள் முட்டி மோதிக்கொள்கின்றன. 

உள்ளத்தின் பரபரப்பும் வேதனையும் தாளாமற்போக, சற்றுமுன் பக்கத்துத் தோட்டத்துக்குள்ளே நின்ற தங்கம்மா அக்காவிடம் இதே கேள்வியை இராசமணி கேட்டபோது கிடைத்த பதில் அவளுள்ளத்திலே ஒரு பயத்தையும் குற்ற உணர்வின் குறுகுறுப்பையும் மூட்டிவிட்டிருந்தது. 

“இராத்திரியெல்லே குத்துவிழுந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகக் காருமில்லை காலமைக்கிடையில் இரத்தம் போட்டுது. கடுமைதான் பிள்ளை” தங்கம்மா அக்காவின் பதில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்துகொண்டேயிருக்கிறது. இராச மணியின் நெஞ்சினுள் ஏதோ உருளையாகக் கிடந்து புரள்வது போன்ற வேதனை. 

மனம் பழைய நினைவுகளுடன் ஒன்றிவிட, அவளுடைய கைகள் தம் பணியைத் தொடர்கின்றன. 

சின்னையா பொன்னுத்துரை, அவளுடைய தந்தை பொன்னம்பலத்தின் உடன் பிறப்பு. சின்னம்மா முத்துப்பிள்ளை, அவளது தாய் சிவக்கொழுந்துவின் ஒன்றுவிட்ட தங்கை. இராசமணி பள்ளிசெல்லும் பருவமடையும் வரை ஒரே வீட்டில் வாழ்ந்த குடும்பங்கள் அவை. 

சின்னையாவுக்குக் குழந்தைகளில்லை. இராசமணியும் அவளது அண்ணன் சிவநேசனும் சின்னையா சின்னம்மாவின் பிள்ளைகளாகவே வளர்ந்தவர்கள். 

வளர்ந்தவர்கள். தம்பி சிவலிங்கம் பிறந்து ஐந்தாறு மாதங்களுக்கிடையிலேயே சின்னையா வேறு வீடு கட்டி விட்டார். 

பொன்னுத்துரை வேறு வீடு கட்டித் தனியே வாழ விரும்பி யது பொன்னம்பலத்துக்கு பிடிக்கவில்லை. தன்னுடனேயே தம்பி இருக்க வேண்டுமென்று அவருக்கு ஓர் ஆசை. 

“டேய்! உனக்குக் கமம் நல்லாய் முகம் பார்த்ததிலை, கையிலை காசு கொஞ்சம் புரளுது. அதுக்காகப் புதுவீடு கட்ட வேணுமே இருந்தது போலை ஒண்டாய் இருப்பம்டா?” பொன்னம்பலம் இப்படி எவ்வளவோ கூறிட்டார்த்தார். பொன்னுத் துரை எண்ணித் தீர்மானித்தால் தீர்மானித்ததுதான். 

வீடுகட்டிக் குடிபுகுந்தபோது பொன்னம்பலந்தான் முன்னின்று எல்லாம் செய்ய வேண்டியிருந்தது. பொன்னுத்துரையின் வேண்டு கோளை அவரால் மறுக்க முடியவில்லை. தம்பி என்றால் அவருக்கு உயிர். 

புதுமனையில் அவர்கள் குடிபுகுந்த தினம் இராசமணிக்குக் கனவுபோல் நினைவிருக்கிறது. 

நினைவிருக்கிறது. அவள் கையில் தின்பண்டமும் மனத்தில் குதூகலமுமாகக் குதித்துத் திரிந்தாள். அன்று மாறி மாறி மூன்று புதுச் சட்டைகளை அவளுக்கு அணிந்து பார்த்துச் சின்னம்மா கட்டிக் கட்டி முத்தமிட்டாள். 

“சின்னம்மா பிள்ளையை விட்டுட்டு இந்த வீட்டுக்கு வந்திட்டா. நீங்கள் அவவோடை கோவமில்லையே?” செல்லம்மா மாமி அவளிடம் இப்படிக் கேட்டபொழுது, அவளுக்குச் சின்னம்மாவைப் பிரியும் உணர்வோ கோபமோ நிரந்தரமாகக் கோபிக்கப்போவதை அறியும் தீர்க்க தரிசனமோ இல்லை. 

“இதுவும் எங்கடை வீடுதானே என்ன சின்னம்மா?” என்று இராசமணி அதற்குக் கள்ளங்கபடமின்றிப் பதிலளித்தபோது ஓமடா என்ரை ராசாத்தி தங்கக்கட்டியடா” என்று சின்னம்மா அள்ளி அணைத்தாள். அந்த வீடு ஒரு வருடங்கூட அவர்க ளுடைய வீடாக நிலைக்கவில்லை 

“வளர்த்த கடா மார்பிலை பாஞ்சிட்டுது. சீ இவனுமென்ரை தம்பியோ?” இதய எரிமலை குமுறப் போவதற்கு அறிகுறியாகப் பொன்னம்பலத்தின் வாய் அதிர்ந்த முதல் அதிர்விலே ஏற்பட்ட ஒலி இதுதான். அவளுக்கு அது நன்றாக’ நினைவிருக்கிறது. 

அண்ணனுடன் ஒளித்து விளையாடிக் கொண்டிருந்த இராசமணி தந்தை வீட்டிற்குள் வந்ததும் வராதுமாகச் சீறி விழுந்ததைக் கண்டதும் பயந்து ஓடுங்கி விட்டாள். ஏதோ அசம் பாவிதம் நடக்கப்போகும் உணர்வு இழையோட அவள் கூடத்து மூலையிலே போய் உட்காந்து ஏதோ புத்தகத்தையும் எடுத்து வைத்துக் கொண்டாள். அண்ணன் எங்கே ஓடிவிட்டானோ? இருந்தால் அவளுக்குச் சிறிது பயங்குறைவாக இருக்கும். தோட்டத்துக்குப் போய்விட எண்ணினாலும் எழும்பக்கூட இயலாத தொரு பலவீனம் அவளைப் பிடித்தழுத்தி வைத்திருந்தது. 

“உவன் பொன்னுத்துரையன்ரை கொழுப்பைப் பார்த்தியே. அவன்ரை வளவை அளப்பிச்சுப் பாத்தவணம். நாலு குழி குறைவாய்க் கிடக்குதாம். எல்லையை அரக்கி ஆர் போட்டதாம். அந்த நாய் என்னை இப்பிடிக் கேட்குது. ஐயா படபடவென்று பொரிந்து தள்ளினார். 

“அவரேதும் பகிடிக்குக் கேட்டிருப்பர். நீங்களிதைப் போய்ப் பெரிசாய்த் தூக்கிறியளே?” அம்மா சமாதானஞ் செய்ய முயல்கிறாள். 

“அவன் பகிடிக்குக் கேட்ட மாதிரித்தான் கேட்டவன். ஆனால் பகிடி பகிடியாய் எல்லாம் எப்படிப் போகுதெண்டு எனக்கு விளங்குது. தன்ரை மனிசிக்கு வீடு பொருத்தமில்லை. அதுதான் வருத்தம் எண்டு என்னென்னவோ சொல்லி இந்த வீட்டை விட்டுப் போயிட்டான். இப்ப தன்ரை காணி என்ரை காணி, எல்லை என்ற கதை, நாளைக்கு ‘நீ யார்? நான் யார்?’ எண்டு கேப்பன்” ஐயா கோபங் குறையாமலே துள்ளினார். 

“சீ, அப்பிடிச் சொல்லாதேங்கோ உங்கடை தம்பிதானே அவருக்கு உங்களிலை நல்ல பற்று.” 

“இந்த பற்றும் பாசமும் காசோடை ஒத்த விஷயமெனை. இப்ப அவன்ரை கையிலை காசு துள்ளுது. இளமை இரத்தமும் உந்தக் காசுமிருக்கும் மட்டுந்தான் எல்லாற்ரை ஆட்டமும் பாட்டமும். பிறகு ஒண்டுமிருக்காதணை, நாளைக்கு இறைக்க வரட்டும் உன்ரை காணிக்குக் கிணத்துப்பங்கு எங்கையடா எண்டு கேக்கிறேன். அவன் நாளைக்கு இறைக்கிற கெட்டித்தனத்தைப் பார்ப்போம். 

ஐயாவின் சீற்றமும் அம்மாவின் சமாதானமும் அன்று இந்த ரீதியிலே சென்றதாகத் தான் இராசமணிக்கு நினைவு. ஐயாவின் அடிமனத்திலே அதற்கு முன்பே வேர்விட்டிருந்த கோபம் பிடுங்கி எறிய முடியாத இராட்சத பலங்கொண்டதாக வளர ஆரம்பித்தது. 

மறுநாள் விடியுமுன்பே கிணற்றடியில் நடந்த சண்டை ஆரவாரத்துடன்தான் இராசமணி கண்விழித்தாள் சண்டை, பொலீஸ், வழக்கு, கோடு இப்படியே அந்தப் பகை பலம் பெற்று வளர்ந்தது. காசு கரைந்தது. அன்பு வரண்டது. 

சிவநேசன்கூட. சின்னையாவுடன் பலதடவை நேருக்கு நேர் சண்டை போட்டுவிட்டான். 

போட்டுவிட்டான். அவன் சின்னையா சின்னம்மாவைப் பற்றிப் பேசும் பேச்சு! அதைக் 

பேச்சு! அதைக் கேட்கும்போது ஏதொவொரு வேதனையுணர்வு இராசமணியினுள்ளே எழுவதற்குத் தவறுவ தில்லை. அந்தச் சின்னப்பயல் சிவலிங்கமே எப்படியெல்லாமோ பேசும்போது….. 

அம்மாகூட இன்று மாறிவிட்டாள். அப்பாவைவிட இன்று தீவிர சண்டையில் நிற்பவள் அம்மாதான். 

சின்னம்மாவும் சின்னையாவும் மட்டும் பேசாமலிருக் கிறார்களா? அவர்கள் அம்மாவையும் ஐயாவையும் ஏசும் போதெல்லாம் இராசமணியின் மனம் கோபத்திலும் வேதனையிலும் குமுறியெழுத்தான் செய்யும். 

ஆனால்… ஆனால்… அதே உள்ளத்தின் அடிப்புலத்தில் எங்கோ சாம்பருள்ளே புதைந்து, மறைந்து, கனிந்து கிடக்கும் ஒளித்துண்டமாக சிறுவயதிலேயே ஊறிச் செறிந்துவிட்ட பாச உணர்வு பதுங்கிக்கிடக்கிறதோ? 

ஆமாம், அதைப் பலமுறை அவள் உணர்ந்திருக்கிறாள். உலகத்தின் மாசுக்கள் படியாத குழந்தை உள்ளத்திலே படிந்து விடும் எதுவுமே அதில் ஊறிச்சுவறி விடுமோ? 

அப்படியானால் அத்தகைய பாச உணர்வு அவளுடைய குடும்பத்திலுள்ள ஏனையோரிடமில்லையா? அவர்களது உள்ளங் களை அவளால் உணர முடியாதுதான். ஆனால் இரவு நடந்த சம்பவம். 

கார்க்கார நல்லதம்பியின் மைத்துனனுக்கும் சின்னையாவுக்கும் ஏதோ தகராறாம். அது காரசாரமாகிச் சாராயமுங் கலந்து சின்னையாவின் நெஞ்சக் குருதியைச் சுவை பார்க்கும் வெறியாகி காலனின் கையருகே, அவரைக்கொண்டு சென்றவேளை… 

“சிவமண்ணை… அண்ணை… சிவமண்ணை..” சின்னையா வின் பக்கத்துவீட்டுச் சிறுவன் முருகனின் குரல் இராசமணியை உறக்கத்தின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்தபோது என்ன நேரமென்றே அவளுக்குப் புரியவில்லை. 

கதவு திறக்கும் சப்தம் கேட்கிறது. 

“பொன்னையாண்ணையை ராசுவன் குத்திப் போட்டான். ஆஸ்பத்திரிக்குப் போகக் கார் வேணுமாம்”. 

கண்களைச் சுழற்றி மூடி இராசமணியைச் சூழ்ந்து நின்ற உறக்கம் பட்டென்று பறக்கிறது. இதயம் படபடவென அடித்துக் கொள்கிறது. 

“கார்விடேலாதாமெண்டு போய்ச்சொல்லு” ஐயாவின் குரலில் நாதமிட்ட பழிவாங்குமுணர்வை அவளுடைய மனம் பிரித்துணர்ந்து பெருமூச்செறிகிறது. 

“ஐயா, பாவம் அவருக்கு… 

“போடாவெண்டா… ” 

மனிதத்தன்மையின் கதவுகள் படாரென்ற ஓசையுடன் மூடிக்கொள்கின்றன. 

சின்னையாவின் நெஞ்சிலே பீறிடும் குருதி இராசமணியின் இதயத்திலே வழிகிறது. 

“என்ன செய்வது? நான் என்ன செய்வது? மனம் தத்தளிக்க இருளைத் துழாவும் நீர் நிறைந்த கண்களுடன் அவள் புரண்டு புரண்டு படுத்தபொழுது 

“தம்பி.. தம்பி அப்பு மேனை.. சிவம்…”

“தம்பி, சிவம், இன்னும் ஒருவாய்” என்று கொஞ்சி அன்ன மூட்டிய அன்னையின் கைகள் கதவுகளைப் படபடவென்று இடிக்கின்றன. 

இராசமணி பாயிலே புரண்டு புரண்டு கிடந்து. இறுதியில்.. எழுந்திருந்து இரு கரங்களுள்ளும் முகத்தைப் புதைத்துக் கொள்கிறாள். 

சின்னம்மாவின் கெஞ்சும் குரல் கதறிக் கதறி பதில் கிடைக்காது நின்றுவிடுகிறது. 

அழுது அழுது ஆறாத துயர் இராசமணியிமிடருந்து விம்மலும் விக்கலுமாகப் புறப்படுகிறது. 

“என்ன சத்தம்?” ஐயா கேட்கிறார். 

“ஐயா காரை… காரை. விட்டாலென்ன?” மென்று விழுங்கித் துயரம் தொண்டையை அடைக்க, எவ்வளவோ பாடுபட்டு வரவழைத்த துணிவோடு இராசமணி கேட்கிறாள். 

“எங்களைப் படுத்தின பாட்டுக்குத்தான் அவருக்கு உப்பிடி நடந்திருக்கு. அவருக்குக் கார் விடவேணுமோ?” சிவநேசனின் குரல் சீறிப்பாய்கிறது. 

“இன்னொருக்காக் கேட்டாளென்றால் கார் விடத்தான் வேணும். இவளையுங் கொண்டுபோய் அவனோடை ஆஸ்பத்திரியிலை போட” 

ஐயாவின் குரலின் வேகமே இராசமணியின் சப்த நாடிகளையும் அடக்கி ஒடுக்கி விடுகிறது. 

கண்களிலே வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறாள் இராசமணி. துயரத்தின் ஒத்தாசையுடன் அவள் செய்யும் வேலைகள் அனைத்துமே அன்று தாமதமாவது அவளுக்குப் புரிகிறது. 

கடைசிப் பாத்திக்குத் தண்ணீரைத் திருப்பிவிட்டுவிட்டு, அவள்போய் இறைப்பு எந்திரத்தை நிறுத்துகிறாள். 

காரொன்று ஒழுங்கை வழியாகப் போகிறது. அவள் கிணற்றுக் கட்டில் ஏறி நின்று பார்க்கிறாள். அது சின்னையாவின் வீட்டின் முன்னே போய் நிற்பது தெரிகிறது. 

இறைப்பு எந்திரம் நின்று விடுகிறது. அங்கும் ஒரு மனித எந்திரம் நின்றுவிட்டதை இராசமணி புரிந்துகொள்கிறாள். 

அப்படியே கினற்றுக் கட்டிலிருந்து கோவென்று கதறி யழுகிறாள் இராசமணி. பாசத்தின் துடிப்பும் குற்றம் புரிந்த துடிதுடிப்பும் அவளுள் மோதுகின்றன. தானும் தவறு செய்து விட்டதுபோல் கிணறும் கோவென்ற ஒலியுடன் பொலபொலவெனக் கண்ணீர் உகுக்கிறது. 

– தினகரன் 23.02.1975.

– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *