நிழல் சிரிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2026
பார்வையிட்டோர்: 161 
 
 

மகேஸ்வரியின் வீட்டுத் திண்ணையில் சிரிப்புச் சத்தம் அக்கம் பக்கத்து தெரு வரை கேட்டது. இன்று மகேஸ்வரியின் மகள் லாவண்யாவிற்கு நிச்சயதார்த்தம். உறவினர்கள் சூழ வீடு களைகட்டியிருந்தது.

“அக்கா, இந்த மருதாணி டிசைன் பாருங்களேன்! அப்படியே அச்சு அசலா வந்திருக்கு,” என்று குழைந்தாள் சுமதி.

சுமதி, மகேஸ்வரியின் தம்பி மனைவி. மகேஸ்வரியின் குடும்பத்தில் எந்த விசேஷம் என்றாலும் சுமதிதான் முன்னால் நிற்பாள். ஆனால், அவளது அந்த அதீதப் பாசம் பல நேரங்களில் மகேஸ்வரிக்கு ஒருவித நெருடலையே தரும்.

லாவண்யாவின் கைகளில் மருதாணி சிவந்து கொண்டிருந்தது.

​”பாத்தியா மகேஸ்வரி, எங்க வீட்டுல இருந்து கொண்டு வந்த மருதாணி இலைதான் இது. எப்படிச் சிவந்திருக்கு பாரு! என் மனசு மாதிரி இதுவும் சுத்தமானது,” என்று உரக்கச் சிரித்தாள் சுமதி.

மகேஸ்வரி புன்னகைத்தாள். ஆனால், அந்தப் புன்னகையில் ஒரு சோர்வு இருந்தது. சுமதியின் கணவன் (மகேஸ்வரியின் தம்பி) ரவி, சமீபத்தில் ஒரு சொத்து விஷயத்தில் மகேஸ்வரியை ஒருமையில் பேசிவிட்டுப் போனவன். இன்று எதுவும் நடக்காதது போல, சுமதி இங்கே கலகலவென்று பேசிக் சிரித்து கொண்டிருப்பது மகேஸ்வரிக்கு வியப்பைத் தந்தது.

மதியம் உணவு நேரம். பந்தியில் சுமதிதான் பரிமாறிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு இலையாகப் போய், “சாப்பிடுங்க அண்ணி, இது நம்ம வீட்டு விசேஷம் இல்லையா?” என்று உபசரித்தாள்.

​சிறிது நேரம் கழித்து, கொல்லைப்புறத்தில் பாத்திரங்கள் கழுவும் இடத்திற்கு சுமதி சென்றாள். அங்கே அவளது தோழி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். மகேஸ்வரி தற்செயலாக உள்ளே துணி எடுக்கச் சென்றபோது, சுமதி பேசுவது காதில் விழுந்தது.

“பார்த்தியாடி… இவங்க பொண்ணுக்கு இந்த அளவுக்கு ஒரு வரன் அமையும்னு நான் கனவுல கூட நினைக்கல. ஏதோ அவங்க அப்பா சேர்த்த சொத்து இருக்குன்னு பையன் வீட்ல ஒத்துக்கிட்டாங்க போல. இல்லன்னா, இந்த குதிரை மூஞ்சிக்கு இவ்வளவு பெரிய இடமா?” என்று சுமதி ஏளனமாகச் சிரித்தாள்.

கூட இருந்தவள், “ஏன் சுமதி, வெளிய அக்கா அக்கான்னு அத்தனை பாசம் காட்டுற, இப்ப இப்படிப் பேசுறியே?” என்றாள்.

​”அது வெறும் வேஷம்டி! இந்த கல்யாணம் நல்லபடியா முடிஞ்சாத்தான், என் வீட்டுக்காரர் கேட்ட அந்த நாலு சென்ட் இடத்தை மகேஸ்வரி அக்கா எழுதித் தரும். அதுவரைக்கும் நான் இந்த வீட்டு வேலைக்காரியா கூட இருப்பேன். மனசுல இருக்குற விசயம் முகத்துல தெரிஞ்சா காரியம் கெட்டுடுமே!”

மகேஸ்வரி அங்கேயே ஸ்தம்பித்து நின்றாள். சுமதியின் சிரிப்பு, ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பைப் போல அழகாகத் தெரிந்தது, ஆனால் அதன்  சிரிப்பிற்கு பின்னால் ஒரு சிலந்தியின் வலை இருப்பதை இப்போதுதான் மகேஸ்வரி உணர்ந்தாள்.

மாலையில் நிச்சயதார்த்தச் சடங்குகள் முடிந்தன. லாவண்யா தன் சிவந்த கைகளை ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். ​சுமதி அருகில் வந்து, “என்ன மருமகளே, அத்தை வச்ச மருதாணி சூப்பரா இருக்கா?” என்று கன்னத்தைக் கிள்ளினாள்.

​மகேஸ்வரி குறுக்கிட்டாள். “சுமதி, ஒரு நிமிஷம் இங்கே வாயேன்.”

​தனி அறைக்கு அழைத்துச் சென்ற மகேஸ்வரி, அமைதியாகச் சொன்னாள். “சுமதி, மருதாணி சிவக்குறதுக்குக் காரணம் அதுல இருக்குற சாயம் கிடையாது, நாம அதை எவ்வளவு நேரம் வச்சிருக்கோம்ங்கிறதுதான். ஆனா, அந்தச் சிவப்பு கொஞ்ச நாள்ல மங்கிப் போயிடும் சுமதி ,மனுஷங்க காட்டுற போலி பாசமும் , நிழல் சிரிப்பும் மாதிரி.”

சுமதியின் முகம் சட்டென்று மாறியது. “அக்கா, என்ன சொல்றீங்க?”

​”நீ கொல்லைப்புறத்துல பேசினதைக் கேட்டேன் சுமதி. அந்த நாலு சென்ட் இடத்துக்காக நீ இவ்வளவு கஷ்டப்பட்டுச் சிரிக்கணும்னு அவசியம் இல்லை. ரவி கேட்டப்பவே நான் தரமாட்டேன்னு சொல்லல. ஆனா, அன்புங்கிற பேர்ல, நீங்க ஆடுற இந்த நாடகம் தான் எனக்கு வேதனையா இருக்கு. மருதாணி கையில ஒட்டலாம், ஆனா மனசுல ஒட்டாது சுமதி.”

அறையில் நிசப்தம் நிலவியது. சுமதியின் முகத்தில் இருந்த ‘அந்த  போலி சிரிப்புத் திரை கிழிந்து, உள்ளே இருந்த சுயநலம் அப்பட்டமாகத் தெரிந்தது.

அன்று இரவு, லாவண்யா தன் அம்மாவைப் பார்த்துச் கேட்டாள், “அம்மா, மருதாணி ஏன் கொஞ்ச நாள்லயே அழிஞ்சு போகுது?”

மகேஸ்வரி சொன்னாள், “ஏன்னா, அது வெறும் வெளிப்பூச்சு கண்ணா. ஆனா,  நீ காட்டுகிற உன்னோட உண்மையான நல்ல குணமும், அன்பும்  தான் எப்போவுமே அழியாதது. வெளியில சிரித்து பேசுகிற எல்லாரையும் நம்பிடாக் கூடாது. மனசுக்குள்ள என்ன இருக்குன்னு பார்த்துப் பழகு.” என்று மகளுக்கு அறிவுரை கூறினாள் சுமதி.

மருதாணி சிவப்பது வெளியில் அழகுதான். ஆனால், அந்தச் சிவப்பு சில நேரங்களில்  ஆடைகளில் கறையாகவும் மாறிவிடுகிறது. மனித மனங்களும் அப்படித்தான்—வெளியே ஒரு வண்ணச் சிரிப்பு , உள்ளே வேறொரு  நிழல் எண்ணம்.

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *