நிறைவு





“”சுஜி… துபாயிலிருந்து சங்கர் பேமிலியோடு வர்றதாக போன் பண்ணினான். அவன் பெண் நிமாவை டாக்டர்கிட்டே காட்டணுமாம். ஒரு வாரம் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.”
கண்களை கசக்கியபடி வரும் மகனை கையில் பிடித்தபடி வந்தாள் சுஜி.
“”ஏன்… என்ன ஆச்சு. எதுக்கு அழறான்.”
“”ம்… முதுகில் ரெண்டு வச்சேன். சரியா படிக் கிறதில்லை. கணக்கிலே நாற்பது மார்க் தான் வாங்கியிருக்கான். எதிலேயும் சூட்டிகை கிடையாது. இப்படி அசமஞ்Œமாக இருக்கான். இவனை எப்படித்தான் கரைசேர்க்கப் போறோம்ன்னு தெரியலை.”
அலுத்துக் கொண்டாள் சுஜி.
மகனைத் தன் அருகில் இழுத்தவன், “”ஏண்டா இப்படி இருக்கே. அப்பா உனக்கு நல்லாதானே கணக்கு புரியும்படியா சொல்லிக் கொடுத்தேன். ஏன் அப்புறம் சரியாப் போடலை.”
அவன் குரலிலும் கண்டிப்பு எட்டிப் பார்த்தது.
“”இனிமே நல்லா செய்யறேன்பா.”
அழுகை குரலில் சொல்ல, நாலாவது படிக்கும் மகனை அதட்டி, “”போ போய்படி…” விரட்டினான்.
“”என்ன சொன்னிங்க… உங்க ப்ரெண்ட் சங்கரா வர்றாரு?”
“”ஆமாம் சுஜி. நம்ம பிள்ளைங்க ரெண்டு பேருக்கும் எக்ஸாம் டைம். கூட உட்கார்ந்து சொல்லிக் கொடுத்தால் தான் மண்டையில் ஏறும். எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. இந்த சமயத்தில் வர்றதாகச் சொல்றான்.”
“”பாவங்க வரட்டும். சமாளிப்போம். அவர் பெண் நிமா ஸ்பெஷல் சைல்ட், பையனாவது நல்லபடியா பிறந்திருக்கக் கூடாதா. அவனுக்கும் போலியோ வந்து கால் சரியாக நடக்க முடியாமல், இரண்டு குழந்தைகளையும் வச்சுக்கிட்டு சிரமப்படறாங்க… நிமாவுக்கு டாக்டர் கன்சல்டேஷன் இருக்கும்ன்னு நினைக்கிறேன். அதான் வர்றாங்க போலிருக்கு.”
பெண்ணைத் தூக்கியபடி, மகனைக் கைப்பிடித்து அழைத்து வரும் சங்கரையும், அவன் மனைவியையும் வரவேற்றனர்.
“”வா சங்கர்… நல்லா இருக்கியா?” புன்னகையுடன் அவர்களை பார்த்தவன், “”ரொம்ப நல்லா இருக்கோம். நிமிக்கு தான் டாக்டர்கிட்டே காட்டணும். இப்ப அவக்கிட்டே நிறைய இம்ப்ரூமென்ட். ஒரு வருஷம் கழிச்சு… அழைச்சுட்டு வரச் சொன்னாரு. அதான் வந்துட்டோம்.” சொன்னவன் மகளை முத்தமிட்டான்.
“”நிமி, அங்கிளுக்கும், ஆன்ட்டிக்கும் வணக்கம் சொல்லு. அவன் மனைவி நித்யா, மகளின் இரு கைகளையும் சேர்த்துப் பிடிக்க, நிமி புரியாமல் அவர்களைப் பார்த்து தலை சாய்த்துச் சிரித்தாள்.
பார்ப்பதற்கு சுஜிக்கு வருத்தமாக இருந்தது.
கடவுள் ஏன் இந்தக் குழந்தையை இப்படிப் படைத்து விட்டான். மனம் வேதனைப்பட்டாள்.
சாப்பிட்டபடி நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“”வேணு, நிமியை ஆர்ட் காலரிக்கு கூட்டிட்டுப் போகணும்பா… டிராயிங் நல்லா வரைவா தெரியுமா… ஒரு தடவைக்கு நாலு தடவை சொல்லும்போது, புரிஞ்சுக்கிற தன்மை அவகிட்டே இப்ப வந்திருக்கு. அழைச்சுட்டு போனா சந்தோஷப்படுவா. நாளைக்கு டாக்டரை பார்த்த பின், ஈவினிங் போகலாமா, உனக்கு டைம் இருக்குமா? உன் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு எல்லாரும் போய்ட்டு வரலாம்.”
“”பிள்ளைகளுக்கு எக்ஸாம்-டைம். அதான் யோசிக்கிறேன்.”
நண்பனின் ஆசையைக் கெடுக்க விரும்பாமல், “”சரி போகலாம்” என்றான். “மனதினுள், பேசுவது கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல், தனி உலகில் மிதந்து கொண்டிருக்கும் நிமிக்கு என்ன புரியப் போகிறது என்று அழைத்துச் செல்ல ஆசைப் படுகிறான்…’ என நினைத்தான்.
ஆனால், மகளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு ஓவியத்தை யும், கணவன், மனைவி இருவரும் அவளுக்கு விளக்கிச் சொல்வதும், நிமி அவர்களை புரியாமல் பார்ப்பதும், அவர்கள் மகளை அணைத்துச் சிரிப்பதும், வேணுவுக்கு பார்க்க வேடிக்கை யாக இருந்தது.
இரவு கணவனிடம் தனிமை யில், “”பெரியவனுக்கு இரண்டு நாளா காய்ச்சல் அடிக்குதுங்க. விட்டு விட்டு வருது. எனக்கென்னமோ பயமா இருக்கு. உங்க ப்ரெண்ட் ஊருக்குப் போனதும், டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போயி, எல்லா டெஸ்ட்டும் பண்ணிப் பார்த்துடணும்.”
அவள் குரல் கவலையுடன் ஒலித்தது.
“”ஆமாம் சுஜி. நானும் அவனைக் கவனிச்சுட்டு தான் வர்றேன். எப்பவும் டல்லாகவே இருக்கான். ஒண்ணு கவனிச்சியா… நாம இப்படி நல்லா இருக்கிற குழந்தைகளை வச்சுக்கிட்டு, இப்படி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கோமே… சங்கரை பார்த் தியா… அவனும், அவன் மனைவியும் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. எனக்கு புரியலை. அவங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத மாதிரி எப்படி இவங்களால் இருக்க முடியுது?”
“”ஆமாங்க… நித்யா மகனைக் கூட்டிக்கிட்டு கடைக்குப் போயி, விதவிதமாக டிரஸ், ஷூன்னு வாங்கிட்டு வந்து, அவனுக்கு போட்டு அழகு பார்த்து சந்தோஷப்படறா. என்கிட்டேயும், “அக்கா என் மகன் ரொம்ப சூட்டிகை. படிப்பில் கெட்டிக்காரன். எதையும் ஒரு தடவை சொன்னா போதும், இப்படியொரு அறிவான மகன் கிடைக்க, நாங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கோம்கா…’ என்று அவள் என்கிட்ட மகனைப் பத்தி பெருமையாச் சொன்னபோது, அவனோட சூம்பிப் போன கால் தான் என் மனசில் நின்னுது. அவங்க ரெண்டு பேரையும் புரிஞ்சுக்கவே முடியலை.”
“”நாங்க கிளம்பறோம் வேணு. உங்களோடு ஒரு வாரம் இருந்தது மனசுக்கு நிறைவாக இருந்தது. எங்க குழந்தைகளோடு நாங்களும் சந்தோஷமாக இருந்தோம்.”
“”சரி சங்கர் நல்லபடியா போய்ட்டு வா. நானும் சாயந்திரம் பையனுக்கு டாக்டர் கிட்டே அப்பாயிண்மென்ட் வாங்கியிருக்கேன். என்ன ஜுரம்ன்னு தெரியலை. எனக்கு அதுவே மனசுக்கு சங்கடமா இருக்கு.”
“”என்ன வேணு இது. சின்ன விஷயத்துக்கெல்லாம் இப்படி மனசைப் போட்டு அலட்டிக்கிறே. இன்னும் ஒரு வாரத்தில் நார்மலாக ஆயிடுவான் கவலைப்படாதே.”
நண்பனை உற்சாகப்படுத்தினான்.
“”நான் உன்னை ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே.”
“”எதுக்கு இந்த பீடிகை. சும்மா கேளு.”
“”உன்னையும், உன் மனைவியையும் பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கு சங்கர். மத்த குழந்தைகள் மாதிரி நார்மலாகப் பிறக்காமல், உண்மையில் மனசுக்கு வேதனையாக இருக்கு. குழந்தைகளோடு பலவிதத்தில் உங்க வாழ்க்கை போராட்டமாக மாறிப் போயிருக்கு. இருந்தாலும், நீயும், உன் மனைவியும், முகத்தில் ஒரு சிறு வேதனையோ, சஞ்சலமோ காட்டாமல் இயல்பாகவே இருப்பது, இன்னும் சொல்லப் போனால், சந்தோஷமாக இருப்பது என்னை ஆச்சரியப்படுத்துது சங்கர். உன் நிலையில் நான் இருந்தா, என்னால நினைச்சுப் பார்க்கவே முடியலை.”
புன்னகையுடன் சங்கரும், நித்யாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“”இதில் வேதனைப்படவோ, சஞ்சலப்படவோ எதுவும் இருப்ப தாக எங்களுக்குத் தெரியலை வேணு. கடவுள் இந்த ஜென்மத்தில் இந்த இரண்டு குழந்தைகளையும் எங்களுக்குப் பிள்ளைகளாகக் கொடுத்திருக்கான்.
“”அந்தக் குழந்தைகளின் குறைகளைப் பெரிசுபடுத்தாமல், அவர்களை நல்லமுறையில் ஆளாக்கிக் காட்டணுங்கிறதுதான், கடவுள் எங்களுக்குக் கொடுத்த கட்டளையாக நாங்க நினைக் கிறோம்.
“”எங்களுடைய அன்பான, அணுசரணையான கவனிப்பில், நிமியோட குறைபாட்டை சரிசெய்ய எங்களால் முடியும், அவள் திறமையை வெளிப்படுத்தி, சமூகத்தில் அவளுக்கு ஒரு நல்ல இடத்தை ஏற்படுத்தித் தர முடியுங்கற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு வேணு.
“”என் மகன் தன் குறையை மறந்து, தன்னம்பிக்கை உள்ளவனாக இந்த உலகில் வலம் வருவான்கிற எண்ணத்தோடு, அவனை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி வளர்த்துட்டு வர்றோம். விதைக்கிற விதை எல்லாம் செழிப்பாக வளர்ந்துட்டா, அப்புறம் தோட்டக்காரனுக்கு வேலை ஏது? சரியா வளராமல் சூம்பிப் போயிருக்கிற செடியை, அதிக கவனம் எடுத்து வளர்த்து, அதன் வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுவானே… அந்த மனசு தான் எங்களுக்கு இப்ப இருக்கு. அதனால, நல்ல குழந்தைகளை, பிள்ளைகளாக அடைஞ்சவங்களை பார்த்து பொறாமைப்படவோ, எங்கள் நிலை நினைத்து வேதனைப்படவோ எங்களுக்கு நேரமில்லை.
“”எங்களோட முழு கவனமும், எங்க குழந்தைகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்குவதில் தான் இருக்கு. அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியும் எங்களை சந்தோஷப் படுத்துது. இந்த நிறைவு எங்களுக்குப் போதும்”
நண்பனின் பேச்சு அவன் மனதைத் தொட, ஈர விழிகளுடன் அவனை பெருமை பொங்கப் பார்த்தான் வேணு.
– செப்டம்பர் 2012