கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2025
பார்வையிட்டோர்: 257 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கந்தசாமியும் இன்னும் ஐந்தாறுபேரும் வெளியி லேயே நின்றார்கள். உள்ளுக்கு நல்ல சனமாயிருக்கும் போல இருந்தது. மார்க்கண்டு, சைக்கிளில் வெய்யில் படாமல் வேலிக்கரை யோரமாக, ஒழுங்கையிலேயே நிறுத்திப் பூட்டினார். 

‘டோண்டாண், டுட்டுடு….’ என்று பறை அதிர்ந்து கொண்டிருந்தது. பெண்களின் ஒப்பாரி, பெரிதாக — இரைச் சலாக ஏறி இறங்கிக் கேட்டது. 

மார்க்கண்டரைக் கண்டதும், “என்ன, அண்ணை இப்பதானே வாறியள்?” என்று கேட்டபடி அவரோடு கூடிக் கொண்டு கந்தசாமியும் உள்ளே போனான். 

படலைக்கு இரண்டுபக்கமும் வாழை கட்டியிருந்தது. முத்தையர் வீட்டுத் தலைவாசல் நிரம்பி முற்றத்திலும் ஆட்கள் குழுமி நின்றார்கள். வீட்டுத் திண்னையில் பெண்கள் கூட்டம். இங்கிருந்து பார்த்தபோது, கட்டிலும் கட்டிலிற் பெட்டியுந் தெரிந்தன. திண்ணைக்கும் தலைவாசலுக்குமிடையிலிருந்த மூற்றத்தில் பந்தல் போட்டு, வெள்ளை கட்டியிருந்தது. 

“உவன் பாவிக்கென்ன, முப்பது வயதிருக்குமே?”…. என்றார் மார்க்கண்டு. குரல் அநுதாபத்தில் ஊறி வந்தது. 

“போன ஐப்பசிதான், முப்பது – என்னிலும் சரியாகப் பத்துவயதுக்கு இளமை….” 

“அண்டைக்கும் கோவிலடியிலை கண்டு கதைச்சவன், பாவி – அடிச்சுவளத்தினாலும் ஆறுமாதம் செல்லும்….” மார்க்கண்டர், எட்டி வேலியடியில் எச்சிலைத் துப்பிவிட்டுப் பிறகு சொன்னார்: 

“….ஆனா; அந்த உடம்புதான் கூடாது!” 

இப்ப இந்த ஹாட் அற்ராக்தானே ஒண்டு -புதுசா நிண்ட நிண்டபாட்டிலை எல்லாரையும் விழுத்துது….” 

ஒரு சின்னப்பெடியன் சுருட்டுத்தட்டத்தைக் கொண்டு வந்து நீட்டினான். 

“என்னட்டை இஞ்சை கையிலை கிடக்கு…. நீ, எடு….” என்றார் மார்க்கண்டு. 

சுருட்டைப் பத்திக்கொண்டு, நெருப்புப்பெட்டியைத் தட்டத்தில் போட்டபோது அவர் கேட்டார். 

“மெய்யே, கந்தசாமி…. இவனுக்கு இதெப்படி நடந்தது?” 

கந்தசாமி, முத்தையருக்குப் பக்கத்துவீடு. அவன் சொன்னான். 

“நேற்றுச் சனிக்கிழமையெல்லே….இரண்டு மணிக்குக் கடையாலை வந்தவனாம்…. வந்து, குளிச்சுச் சாப்பிட்டுட்டு பேப்பர் வாசிச்சுக்கொண்டு கிடந்தவன்…. இருந்தாப்போலை, ‘நெஞ்சுக்கை ஏதோ செய்யுது…. கொஞ்சத் தண்ணி தாங்கோ’ எண்டு கேட்க, தண்ணியோட தங்கச்சியார் வந்து பாக்கிறதுக்குள்ளை, ஆள் பேச்சுமூச்சில்லை பிறகென்ன? சும்மா ஒரு மன ஆறுதலுக்குத்தான் ஆஸ்ப்பத் திரிக்குக் கொண்டுபோனது….” 

இரண்டுபேரும் பெருமூச்சுவிட்டார்கள். 

“என்னமாதிரி – தங்கக் கம்பிபோலை – பெடியன் மிதிச்ச இடத்துப் புல்லுச்சாகாது…. மல்லன் மாதிரி ஒரு பிள்ளையை இந்த வயதிலை தூக்கிக் குறுக்கிறதெண்டா- முத்தையருக்கு இடிவிழுந்த மாதிரித்தான் இருக்கும்….” 

“பின்னை? தாய்க்காரி நேற்றுக் கிறுதிதூக்கி எறிஞ்சு படுத்தபடுக்கைதான் – இன்னும் எழும்பேல்லை….” 

மாமர நிழலில் வெட்டிப் போட்டிருந்த பச்சைத் தென்னோலையில் போய்க் குந்தி, கொஞ்சநேரத்தின் பிறகு மார்க்கண்டர் கேட்டார். 

“இப்ப எப்பிடி, உன்ர மகனுக்கு?” 

“அவனுக்கு என்னண்ணை…. அந்தக் குறையொண் டைவிட வேறையொரு வித்தியாசமுமில்லை….” 

“இப்ப – பத்து வயதாச்சோ?” 

“ஓ…. நானும் கையெடுக்காத கடவுளில்லை. காட்டாத டாக்குத்தரில்லை….ஆனா, இப்ப தின்னவேலிச் சாத்திரியார் சொல்லியிருக்கிறார்…. 

-அவன் புது நம்பிக்கையுடன் சொன்னான்: 

“பயப்பிடுறதுக்கு ஒண்டுமில்லையாம்; பிள்ளைக்குப் பன்னிரண்டுவயது முடிய, எல்லாம் தன்பாட்டிலை சரி வருமாம்…. அவர், ஆள் வலு கெட்டிக்காரன்….” 

“அப்பிடியே?….” என்றார் மார்க்கண்டர், வெறுமனே. “இஞ்சபாருங்கோவன், கண்ணுக்கு முன்னாலை….”” கந்தசாமி, தலைவாசலுக்கும் பந்தலுக்கும் பின்னால் தெரிந்த திண்ணையைக் காட்டினான்: 

“இவன் பெடியனும் அவரிட்ட தன்ரை சாதகத்தை கிட்டடியிலை ஒருக்காக்கொண்டு போய்க்காட்டினவன்…. அந்த ஆள் பாத்திட்டுச் சொல்லிப்போட்டுது…. ‘உனக்குஇப்ப ஒண்டும் நான் சொல்லமாட்டன். முப்பத்தொருவயது முடியட்டும், வா’ எண்டு….” 

மார்க்கண்டர் கேட்டுக்கொண்டிருந்தார். 

“பாத்தீங்களே?” என்றான் கந்தசாமி, உற்சாகமாக. 

– மல்லிகை, 1978.

– முளைகள் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: பிப்ரவரி 1982, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *