நினைவலைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 206 
 
 

ரயில் மங்களூரை நெருங்கிக்கொண்டிருந்தது. ரங்கப்ரசாத் சட்டென விழித்துக்கொண்டான்.

மேல்பெர்த்தில் முழித்துக்கொண்டே படுத்திருந்த தன் அப்பா மாதவனைப் பார்த்து, “ரயிலின் ’கூ’ என்கிற சத்தம் கூட குழலோசையாய் கேட்கிறதுப்பா! பக்கத்தில் க்ருஷ்ணஷேத்திரமான உடுப்பி இருக்கிறதுனால அப்படி இருக்குமோ?” என்று கேட்டான் வியப்புடன்.

மாதவன் பதில் ஒன்றும் சொல்லாமல் குளிர்சாதனப் பெட்டியில் சென்னையிலிருந்து பயணம் செய்துவந்த அலுப்பு நீங்கியவரைப்போல இரு உள்ளங்கைகளையும் சூடு பறக்க தேய்த்து கண் இமைமேல் வைத்துவிட்டு பின் முழித்துப்பார்த்தார்/. ஐம்பத்தி இரண்டு வயதுக்கு பத்துவயது குறைத்து சொல்லலாம் போன்ற இளமையான முகவெட்டு. பெரிய கண்கள். தீர்க்கமான நாசி. பெண்மையின் இலேசான சாயல் கலந்த சற்றே மென்மையான சிவப்பு நிறக்கன்னங்கள். அடர்த்தியான கிராப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே நரை. மாதவனின் உயரமும் நிறமும் அந்த நாளின் பிரபலமானஹிந்தி திரை நடிகர் ஒருவரை நினைவுபடுத்திவிடும்.

“டாட் ஈஸ் ஆல்வேஸ் ஹாண்ட்சம்!’ ரங்கப்ரசாத் மனசுக்குள் சொல்லி மகிழ்ந்துகொண்டான்.

“நாந்தான் உங்கப்பாக்கு ஏத்த ஜோடி இல்லைடா ரங்கா! ஆனா அத்தைபிள்ளையான இவரைத்தான் கல்யாணம்பண்ணிக்கணும்னு சின்னவயசிலிருந்து கனவுகண்டு அதை நிறைவேத்திக்கொண்டேன்! உங்கப்பாவோட மனசும் அழகாகவும் இருந்ததுதான் அவரை நான் பிடிவாதமா கல்யாணம் செய்துக்க காரணமாயும் இருந்தது”

அம்மா உயிரோடு இருந்தபோது அடிக்கடி தன்னிடம் சொன்னதை ரங்கப்ரசாத் நினைத்துப்பார்த்து சிரித்துக்கொண்டான். தனக்கும் அப்பாவின் சாயல் அப்படியே இருப்பதில் உள்ளூற பெருமையாகவும் இருந்தது.

ஒய் திஸ்கொலைவெறிடி என்றது செல்போன்.

எடுத்து காதில்வைத்தபடி,”ஹலோ வர்ஷா.. அப்பாகூட சௌத் சைட் வந்திருக்கேன்..ஏதும் முக்கியமான விஷயமா அப்றோமா பேசலாமா?”என்று சொல்லி போனை அணைத்துவிட்டான்.

“யாருப்பா வர்ஷா? டில்லி ஆபீசில் தமிழ்ப்பொண்ணா? டு யூ லவ் ஹர்? அப்படீன்னா அவளை காக்க வைக்காமல் கல்யாணம் பண்ணிக்கோ..ஏன்னா வாய்விட்டு சொல்லாத வார்த்தை பின்னாடி மனசில் எப்போவும் கனத்தையும் கண்களில் ஈரத்தையும் கொடுத்திட்டே இருக்கும்! ”

“கமான் டாட்! வர்ஷா என்னைவிட நாலுவயசு பெரியவ கல்யாணம் ஆகி அழகா ஒரு குழந்தையும் இருக்கு….ஏதாவது இண்டர்நெட்ல உப்புப்பெறாத விஷயத்துக்கு போன் செய்து விமர்சனம் செய்வா… அதான் அப்படிக்கேட்டேன் மத்தபடி காதல் வலைல இன்னும் நான் விழலைப்பா….ஆனா வலைவீசிட்டுதான் இருக்கேன் பட்சி சிக்கினதும் பிதாவுக்குத்தான் முதல் ஓலை அனுப்புவேன் ஹ்ஹஹா்!

தனது வெளிப்படையான பேச்சுக்கு மாதவன் ரசித்து பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தவன் அவர் மௌனமாய் எங்கோ பார்த்தபடி இருக்கவும்

“அப்பா! ஏன்ப்பா ஒண்ணும் பேசாம டல்லா இருக்கீங்க? மனசைத்திறந்தே வைக்கிறதில்லப்பா நீங்க?”

உரிமையாய் சிணுங்கலாய் கோபித்துக்கொண்ட மகனிடம் மெலிதான புன்னகையை வீசினார் மாதவன் பிறகு,” ரங்கா..மனசைத்திறந்தே வைத்திருக்க அது சத்திரமில்லப்பா , ஒருவிதத்துல நினைவுகளின் கல்லறைன்னு கூட சொல்லலாம். இந்த மனம் என்கிற ஒன்றுதானே நம்மையும் விலங்கினத்தையும் பிரித்துவைக்கிறது? மனிதன் என்பவன் வெறும் சதையும் ரத்தமும் தான் என்று கூறிவிட முடியுமா? மனித உருவுக்குள் அபூர்வ சக்தியான மனமும் ஆன்மாவும் ஊடுருவி நி்ற்பதால்தானே அவன் மனிதன் ஆகிறான்? அடடா, நான் பாட்டுக்கு ஏதாவது இப்படிப்பேசி உன் மூடைக்கெடுத்துடப்போறேன்..ரங்கா இந்தப்பயணத்தில் உன் அம்மா இருந்திருக்கணும் “

“ஆமாப்பா இந்தப்பயணத்துல அம்மா நம்மகூட வரலைங்கிற சோகம் உங்க கண்லயே தெரியறதுப்பா! என்ன செய்றது அம்மா, திடீர்னு ரண்டு வருஷம் முன்னாடி ஹார்ட் அட்டாக்கில் போவாங்கன்னு யாருக்குப்பா தெரியும்? அந்தத் துயரத்தை மறக்க தானே நான் இப்படி தெற்குபக்கம் ஒரு டூர் போட்டு இஷ்டமே இல்லாமலிருந்த உங்களை அழைச்சி வந்துருக்கேன்?”

”இஷ்டம் இல்லை என்று சொல்லமாட்டேன் ஆனால் அதே நேரம் விருப்பமாய் வந்தேன் என்பதும் நிஜம் இல்லை.சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ‘தி டேல் ஆஃப் சிட்டீஸ்’ என்கிற நூலிலிருந்து சிலவரிகளை சொல்ல நினைக்கிறேன்…’மகத்தான நேரம் இது; மட்டமான நேரமும் அதுவே

அறிவுகாலக்கட்டம் அது ;அசட்டுத்தன கட்டமும் அதுவே

ஒளியின் பருவம் அது;இருளின் பருவமும் அதுவே

நம்பிக்கையின் வசந்தம் அது; நம்பிக்கையின்மையின் குளிரும் அதுவே

எங்கள்முன் எல்லாமே இருந்தது;எங்கள்முன் எதுவுமே இல்லை’

என்கிறமாதிரி இரண்டு விதமான உணர்ச்சிகளின் கலவைதான் மனித மனம்னு நினைக்கிறேன்..பார்த்தியா திரும்பவும் உன்னை போரடிக்கிறேன்? அம்மாவும் நீயுமாய் வந்திருந்தால் பொதுவாக பலவிஷயம் பேசிட்டே ஊர் சுத்தலாம். நான்அதிகம் பேசமாட்டேன் ..பேசினால் இப்படி ஏதாவது மேற்கோள் காட்டி உன்னை சிரமப்படுத்துகிறேன்,இல்லாவிட்டால் மௌனசாமியாராகிவிடுகிறேன்”

“ எப்படித்தான் நீங்களும் அம்மாவும் லைஃப் பார்ட்னர்ஸ் ஆனீங்களோப்பா? அம்மா எப்போதும் உற்சாக நயாகரா, நீங்க எப்போதும்கிணற்றுத்தண்ணீர். வேடிக்கையான பொருத்தம்! சரி சரி, சூட்கேசை எடுத்துட்டு கீழே இறங்கலாம்ப்பா…என்னோட.ஆபீஸ் கார் ஸ்டேஷன் வாசல்ல வந்திருக்கும். நேரா ஹோட்டல் ரூமுக்குப்போயிடலாம். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டபிறகு மங்களூரைச்சுற்றி எல்லா இடமும் போய்வரணும். ..”

மாதவன் மகனின் பேச்சுக்கு வழக்கம்போல ஒரு சிக்கனப்புன்னகையை பதிலாக்கிவிட்டு ரயில் வண்டியினின்றும் கீழே ப்ளாட்பாரத்தில் இறங்கினார்.

கன்னடமும் துளுவும் மலையாளமும் கதம்பமாய் கலந்து ஒலிக்கும் பிளாட்பார சந்தடியினின்றும் வெளியே வந்தனர். அவர்களை அழைத்துப்போக வந்த ரங்கப்ரசாத்தின் அலுவலகக் காரில் இருவரும் ஏறினார்கள்

டிபன் காபியை முடித்துக்கொண்டதும் மறுபடி ஹோட்டலின் அறைக்கு வந்து படுத்துக்கொண்ட மாதவனைப்பார்த்து ரங்கப்ரசாத் கவலையுடன் கேட்டான்.

”என்னப்பா , மறுபடியும் தூக்கமா? ஊர் சுற்றிப்பார்க்க வரலையா? உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு பயணத்துக்கு உங்களை இழுத்துவந்துட்டேனா அப்பா?”

“இல்லப்பா வாழ்க்கையே ஒரு பயணம்தான். இதுல நம்மைப்பெரிதும் மகிழ்விக்கும் சின்னச்சின்ன விஷயங்களை அடையாளம் கண்டு கொள்ளணும் என்றார் ஒரு பெரிய விஞ்ஞானி. சிலகாலமே நிற்கும் பெரிய சாதனையைவிட இவை உங்களை மகிழ்விக்கும் என்பது அவர் அறிவுரை. இந்தமாதிரிப் பயணமெல்லாமும் அப்படித்தான்..ஆனா என்னவோ எனக்கு களைப்பாய் இருக்கு..”

“ஏன்ப்பா..உடம்புசரி இல்லையா? ஆர் யு ஆல்ரைட்?”

பரிவுடன் கேட்டபடி அருகில்வந்து கழுத்தில் கைவைத்துப்பார்த்தான்.

பிறகு அவனே,”ஜுரமே இல்லையே! அப்றோம் என்ன எழுந்திருங்கப்பா…..அம்மாவா இருந்தா இததனை நாழி ஜம்ம்முனு ஒரு ஜீன்ஸ் டாப்ஸ் போட்டுட்டு கூலிங்கிளாசை சுழட்டிக்கிட்டே,”சீக்கிரம் சீக்கிரம்’ன்னு துறுதுறுப்பாயிருப்பாங்க… அம்மா இருந்தா கோயிலுக்குத்தான் முதல்ல போவாங்க அதனால முதல்ல உடுப்பிகோயில்தான். அப்புறம்தான் மால்பே பீச் , இதர இடங்களைப்பார்க்கணும்”

“ கோயிலுக்கு நீ மட்டும் போய்ட்டுவா..பீச்சுக்கு சாயந்திரம் நான் உன்கூடவரேன்”

“சரிப்பா…நான் உங்களைக் கட்டாயப்படுத்தலை…..ரெஸ்ட் எடுங்க….ஆபீஸ் கார்ல நான் மட்டும் உடுப்பி போய்ட்டு க்ருஷ்ண தரிசனம் முடிச்சி வரேன்.”

ரங்கப்ரசாத் அதற்குமேலும் மாதவனை வற்புறுத்த விரும்பவில்லை.


மங்களூரிலிருந்து அறுபதே கிலோமீட்டரில் இருந்த உடுப்பியை நோக்கி கார் சாலையில் விரைந்துகொண்டிருந்தது.

’நம்மூரு மல்லிகே மைசூரு மல்லிகே’ என்று பண்பலை வானொலியில் ஒலித்த கன்னடப்பாடலை , ரங்கப்ரசாத்தைப்போலவே இளைஞராய் தெரிந்த ட்ரைவர் ரசித்து தலையாட்டியபடி காரை செலுத்திக்கொண்டிருந்தான்.

“தமிழ் தெரியுமா ட்ரைவர்? ஹிந்தி மாலும் ஹை?” எனக்கேட்டான் பின் சீட்டில் அமர்ந்திருந்த ரங்கப்ரசாத்.

“தமிழ் நல்லா தெரியும் சார். ஹிந்தி பேசினா புரிஞ்சுப்பேன்…பெங்களூர்ல தான் பத்துக்ளாஸ்வரை படிச்சேன் அதனால கன்னடம் தாய்மொழின்னாலும் எல்லா பாஷையும் பேச வரும் சார்” என்றான் ட்ரைவர் உற்சாகக் குரலில்.

“அப்படியா? நல்லதாப்போச்சு… இருக்கிற ரெண்டுநாளைக்கும் நீங்களே கைடா இருந்திடுங்க…. உங்க பேரு ?”

“மஞ்சுநாத் சார்..மங்களூர் பக்கம் எல்லா இடமும் எனக்கு அத்துப்படிசார் நானே உங்களை கூட்டிட்டுப்போறேன் சார்’

“தாங்க்ஸ் மஞ்சுநாத்”

”உடுப்பிக்கு இப்பதான் முத தடவையா வரீங்களா சார்?”

“ஆமாம். இருபத்தி அஞ்சுவருஷமா டில்லி வாழ்க்கைதான் .வடக்கேயே பொறந்து அங்கயே படிச்சி அங்கயே வேலைபாக்கறேன்.ஆனா எங்கம்மா அடிக்கடி தெற்குபக்கத்துக் கோயில்களைப்பத்தி சொல்வாங்க…தமிழ்நாட்டுல பலகோயில்களுக்கு அம்மாகூட போயிருக்கேன்…”

” இது அற்புதமான கோயில் சார்! மேற்கு பார்த்த கிருஷ்ணரை தரிசிப்பது ரொம்ப விசேஷம்னு சொல்வாங்க.ருக்மணி ஆராதனை செய்த சாளக்ராமசாமியாம் இந்த உடுப்பிகிருஷ்ணரு.. இந்த கோயில் குளத்துல வருஷம் ஒருவாட்டி கங்கைவந்து கல்க்குதாம் மார்கழிமாசம் குளத்துநீரை தலைல தெளிச்சிட்டுப்போக கூட்டம் வரும். கனகண கிண்டின்னு ஒன்பது துவாரம் இருக்கிற வெள்ளி ஜன்னல் வழியாத்தான் சாமிய பாக்கமுடியும். தன்னோட எளியபக்தன் கனகதாசருக்காக தானே திரும்பி நின்னு தரிசனம் கொடுத்தாராம் க்ருஷ்ணர்!”

“ஆமா அந்தக்கதைலாம் கேள்விப்பட்டிருக்கேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு புராணக் கதைகள், ஆன்மீகம் ,இலக்கியம் எல்லாத்திலியும் ஆர்வம் உண்டு. .அதனால .நின்னு நிதானமா உடுப்பிஷேத்திரத்தை நான் பார்த்துட்டுவரேன் மஞ்சுநாத் நீங்க பொறுமையா காத்திருக்கணும் என்ன?”

“கண்டிப்பா சார்”

தூரத்திலேயே கோயிலின் ராஜகோபுரம் தெரியவும் ரங்கப்ரசாத்,”உடுப்பி வந்தாச்சா?” என்று துடிப்பான குரலில் கேட்டான

“ஆமாம் சார். காரை கோயில் வாசல்ல நிறுத்தறேன் இறங்கிக்குங்க…. செல் நம்பர் குறிச்சிக்குங்க எப்போ அழைச்சாலும் நான் வரேன் சார்!” என்று தன் அலைபேசி எண்ணை அவனுக்கு அளித்துவிட்டு மஞ்சுநாத் நகர்ந்தான்.

ஹோட்டலைவிட்டுப்புறப்படும்போதே ஞாபகமாய் சட்டைபோட்டுக்கொள்ளாமல் பட்டு வேஷ்டியும் மேல்துண்டுமாய் புறப்பட்ட ரங்கப்ரசாத் , கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

’ஊருக்குப்பெயர்க்காரணம் : “உடு’ என்றால் நட்சத்திரம். “பா’ என்றால் தலைவன். “உடுபா’ என்பதே மருவி “உடுப்பி’ ஆனது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்காக 27 நட்சத்திரங்களுடன் இத்தல கிருஷ்ணனை வழிபட்டு சாபம் நீங்க பெற்றான். எனவே இங்குள்ள கிருஷ்ணன் நட்சத்திரங்களின் தலைவனாகவும், கிரகங்களின் நாயகனாகவும் கருதப்படுகிறார்

துவாபரயுக முடிவில் தேவகிக்குத் தான் தன் குழந்தையான ஸ்ரீகிருஷ்ணரின் பால லீலைகளைப் பார்க்க முடியவில்லை என்று வருத்தப் படுகிறாள். தன்னைப் பெற்ற தாயின் வருத்தம் தீரக் கிருஷ்ணர் தன் தாயான தேவகிக்கு மீண்டும் பாலலீலைகளை நிகழ்த்திக்காட்டுகிறார். அதை மறைந்திருந்து பார்க்கும் ருக்மிணி அந்த பாலகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், வெண்ணை திருடி உண்ணும் பாலகன், யசோதையிடம் திருவாய் திறந்து உலகம் காட்டிய கண்ணனின் பாலலீலைகளில் மெய்ம்மறந்து அந்த பாலரூபம் தனக்கு தினமும் தான் பூஜை செய்து வழிபட ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கண்ணனிடமே கண்ணனைத் தருமாறு கேட்கிறாள். கண்ணனும் இசைந்து விஸ்வகர்மாவிடம் சொல்லிச் செய்து தரச் சொன்ன அந்த பாலகிருஷ்ணன் ஒரு கையில் மத்தோடும், மறு கையில் கயிறோடும் இருக்கிறான். ருக்மிணி பூஜை செய்து வந்த அந்த விக்ரஹம், அர்ஜுனன் கையில் கிடைக்க அவன் அதை ருக்மிணியின் தோட்டத்தில் மறைத்து வைக்கிறான். காலப்போக்கில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப் படுகிறது. துவாரகாவிலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு சிறிய கப்பலில் அந்த விக்ரஹம் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட நிலையில் ஏற்றப்பட்டு மேற்குக்கடற்கரைப் பகுதிக்கு வியாபாரத்திற்கு வருகிறது. உடுப்பிக்கு அருகில் “வடபண்டேஸ்வர்” என்னும் கடற்கரைப் பட்டினத்திற்கு அருகில் வரும்போது புயற்காற்று அடிக்கிறது. பகவான் ஸ்ரீமத்வருக்கு ஞானதிருஷ்டியில் கப்பலும் அதற்குள் கோபிச்சந்தனத்தால் மூடப்பட்ட கிருஷ்ணரும் தெரிகிறார்கள். உடனே அவர் கடற்கரை நோக்கி போய்த் தன் மேல்வஸ்திரத்தை வீசிக் காற்றை நிறுத்துகிறார். கப்பல் தலைவன் அவரின் புனிதம் உணர்ந்து தன் கப்பலையே அவருக்குக் காணிக்கையாக்குகிறான். ஆனால் மத்வரோ அந்த கோபிச்சந்தனத்தோடு திருப்தி அடைகிறார். அதைக்கொண்டுவந்து உடுப்பியில் பிரதிஷ்டை செய்கிறார்.’

ரங்கப்ரசாத் தான் படித்ததை நினைவுபடுத்திக்கொண்டான்.

புஷ்கரணியின் படிக்கட்டில் வந்து நின்றவன் குனிந்து நீரை இரு கரங்களிலும் அள்ளி தலைமேல் தெளித்துக்கொண்டான்.

வசுதே வசுதம் தேவம் கம்சசாணுர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

யாரோ கிருஷ்ணமந்திரத்தை ஜபித்தபடி சென்றனர். கோயிலின் சூழ்நிலையே மனதிற்கு ரம்மியமாக இருந்தது.

கனகதாசர் கண்ணனைக் கண்ட ஜன்னலாகிய நவதுவாரத்தை நோக்கி நின்ற க்யூவரிசையில் தானும் போய் நின்றுகொண்டான்.சட்டென அம்மாவின் நினவுவந்தது க்ருஷ்ணர்கோயில் என்றால் அம்மா சின்னப்பெண்ணைப்போல குதூகலமாய் கண்ணன் பாட்டைப்பாடியபடியேதான் வருவாள் ஹரிநாமம் சொன்னால் பனிபோல துன்பம் விலகும் என்பாள். ரங்கப்ரசாத்தின் வாய் ’ஹரிஹரிஹரி’ என்றே முணுமுணுத்தபடி இருந்தது.

க்யூமெல்ல நகர்ந்தது

.ஏழையோபணக்காரனோ யாராயிருந்தாலும் க்யூவில் நின்று கனகதாசர் கண்ட அந்த ஜன்னல் வழியேதான் க்ருஷ்ணதரிசனம் காணவேண்டும். என்கிற கோயிலின் கொ்ள்கை அவனுக்குப்பிடித்திருந்தது, இறைவன் முன்பு அனைவரும் சமம் அல்லவா?

ஆண்களும் பெண்களுமாய் அமைதியாய் க்யூவில் நின்றுகொண்டிருந்தபோது நாற்பத்திஐந்துவயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி மெலிந்த உடம்பும் பிரகாசக்கண்களுமாய் நீண்ட சுருள் சுருளான கேசத்தை விரித்துப்போட்டபடி மெல்ல நடந்துவந்தவள் ஒவ்வொருவரின் அருகேயும் சென்று,”நன்ன கண்டனு யாவக பர்த்தாரே?” என்றுகேட்டுக்கொண்டுவந்தாள்.

ரங்க்ப்ரசாத் குழப்பமாய் அவளையே பார்த்தபடி க்யூவில் முன்னேறிக்கொண்டிருக்கையில் அவனுக்குப்பின்னே நின்றபெண் ஒருத்தி தமிழில்,” வந்துடுத்து உடுப்பிபைத்தியம்!” என்று சொல்லி சிரித்தாள்.

இன்னொருத்தி இப்படி சிரித்தவளிடம்,”யாரு இவ? நாங்க வெளியூர்லேந்து வந்தவங்க..உள்ளூர்க்காரி நீதான் விவரம் சொல்லணும் சொல்லேன்” என்றாள்

“ஐயோ அதையேன் கேக்கறே மீனா? இவ பேரு ருக்குமணி சுருக்கமா ருக்கு, இருபத்தி அஞ்சிவருஷமா இவ இப்படித்தான் கோயில்ல தினமும் வந்து ’ நன்ன கண்டனு யாவக பர்த்தாரே அதாவது என் புருஷன் எப்போ வருவாரு?ன்னு எல்லார்கிட்டயும் கேட்டுட்டு இருக்கா..”

”ஏன், இவ புருஷன் இவளை விட்டுட்டுப்போயிட்டானா?”

” கல்யாணமே நடக்கல. ஆனா இவளையே பண்ணிக்கிறதா வாக்குகொடுத்துட்டு காதலிச்சிப்போனவன் திரும்பிவரவே இல்லை இவ அந்தஅதிர்ச்சில பைத்தியமாகிட்டா பாவம். அவ அப்பா! பேரு வரதாச்சாரி. அவருக்கு பூர்வீகம் கும்பகோணம்தான் .தமிழ்குடும்பம்தான் இங்க மடம் ஒண்ணுல சமையல்வேலைக்கு முப்பதுவருஷம்முன்பு வந்தார் கல்யாணம் பண்ணிண்டார் அழகா பொண்னு பொறந்தா பிரசவமானதும் மனைவிபோய்ட்டா இந்த எழுபத்தி அஞ்சி வயசுவரைக்கும் அவர்தான் இவளைக்காப்பாத்திண்டுவரார் ..பார்க்க அழகா இருந்தாலும் பைத்தியத்தை யார் கல்யாணம்பண்ணிப்பா சொல்லு?”

”ஐயோ பாவம்தான்”

உரையாடலைக்கேட்ட ரங்க்ப்ரசாத் இப்போது பரிதாபமாய அந்தப் பெண்ணைப்பார்க்க ஆரம்பித்தான்.

கன்னடத்தில் கேட்டபடி யே வந்தவள் சட்டென தமிழில்,”என் புருஷனை நீங்கபார்த்தீங்களா?’ என்று கேட்டபடியும் வந்தாள்.

”பைத்தியம் தமிழும் பேசுதே?” மறுபடி பெண்கள் பேசத்தொடங்கினர்.

“ அதான் சொன்னேனே பூர்வீகம் தமிழ்க்குடும்பம்தான்னு. தமிழும் பேசும் கன்னடமும் பேசும்.தினம் ஒரு ரவுண்ட் வந்துடுவா கேள்விகேட்டுட்டு சரியான லூஸு”

”என்புருஷனை பார்த்தீங்களா?”

முழியைமேலும்கீழும்தாழ்த்திக் கேட்டபடியே ஒவ்வொருவரையும் மேலும் கீழும் பார்த்தபடி நடந்துவந்தாள்.

ரங்கப்ரசாத்தின் அருகில் வந்தவள் ,”என் புருஷனை பாத்தீங்…” எனக்கேட்டவள் முடிப்பதற்குள் சட்டென முகம் மலர்ந்தாள்.

அவன்கைகளை இறுகப்பற்றியபடி,”என் புருஷன் ! … என்புருஷன் ! “ என்றாள் பெரியகுரலில் உற்சாகமாக. விழிகள் வியப்பில் விரிந்தன.

ரங்கப்ரசாத் திடுக்கிட்டு அப்படியே நின்றான். அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த வரதாச்சாரி,” ருக்கு.. இனிமே உன்னைவீட்டோட தூண்ல கட்டித்தான போடணும். இப்படி தடால்னு கோயிலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் வந்தாலும் இப்படி பக்தாளை தொல்லை பண்ணக்கூடாதுன்னு ஆயிரம் தடவை எச்சரிச்சும் நீ இங்கவந்துட்டியேடிம்மா.” என்றுகோபமாய் சீறியபடி அவளைத் தரதரவென கையைப் பிடித்து இழுத்துப் போனார்.

அவள் விடாமல் ரங்கபிரசாத்தையே திரும்பித்திரும்பி பார்த்தபடி போனாள்.

”சரியான கிறுக்கு! வாலிப வயசுப் பையனைப் பார்த்து என் புருஷன்னு உளறுதுபாரு லூசு” என்று பின்னே நின்றபெண் பரிகாசமாய் சொல்லிவிட்டு,” நீ போ தம்பி இதையெல்லாம் கண்டுக்காதே” என்றாள் ரங்கப்ரசாத்திடம்.

க்ருஷ்ணதரிசனம் முடித்ததும் ரங்க்ப்ரசாத் குழப்பமாய் யோசித்தபடியே பிராஹாரத்தில் நின்றான். ஒரு சில நிமிஷங்கள்தான் பிறகு ஒருமுடிவிற்கு வந்தவனாய் ரதவீதியில் அந்த மடத்தைவிசாரித்துக்கொண்டு வரதாச்சாரியின் இருப்பிடத்திற்கு போய் விட்டான்..

ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்த மரக்கதவை விரல்களால் அழுந்தத்தட்டினான் ஓரிரு நிமிடங்கள் கடந்தன..

வரதாச்சாரி முற்றத்திற்கு மெல்ல நடந்து வந்தவர்”பையா நீயா? கோயில்ல பார்த்தேனே உன்னை? இதபாருப்ப்பா நீ யாரு என்னனு தெரில்லப்பா எனக்கு வயசு எழுபத்தி அஞ்சு ஆறது, கண்பார்வை வேற சரியா இல்ல. ஏதோகாலத்தை ஓட்டிண்டுஇருக்கேன் .என்பொண்ணு ருக்கு உன்னை அப்படி கோயில்ல சொன்னது தப்புதான்ப்பா. அதுக்காக சண்டைபோடற எண்ணத்துல வந்திருந்தால் வயசுல நீ சின்னவன் ஆனாலும் உன் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுக்கறேன்” என்று நா தழுதழுத்தார்.

”தாத்தா! நான் சண்டைபோடவரலை! அந்தம்மாவின் நிலமைக்கு நிஜக்காரணம் என்னன்னு கேட்கவந்தேன் என்னை உங்கபேரனா நினச்சி சொல்லமுடியுமா?”கெஞ்சுதலும் பணிவுமாய் ரங்கப்ரசாத் இப்படிக்கேட்டதும் விரக்தியாய் ஒரு பெருமூச்சுவிட்டவர் சொல்ல ஆரம்பித்தார்.

”இந்தமடத்துல இருபத்தி ஆறுவருஷம் முன்னாடி ஒரு தமிழ்ப்பையன் மெட்ராஸ்லேந்து வந்தான் மங்களூர்ல கெமிக்கல் கம்பெனில ஆறு மாசத்துக்குவேலைன்னு சொன்னான்.அவனுக்கு உடுப்பி ரொம்பப் பிடிச்சுதாம். இங்கயே மடத்துல ஒரு அறைல தங்கிக்கறேன்னான். பார்க்க கண்ணியமா தெரிஞ்சான், நானும் ஆறுமாசம் தானேன்னு என் இருப்பிடத்துல ஒரு அறையை அவனுக்குக்கொடுத்து தங்க வச்சேன். அந்த காலகட்டத்துல அவனும் ருக்குவும் மனசார விரும்பிட்டா.அதை என்கிட்டயும் ருக்கு சொனனா. குலம்கோத்திரம் தெரிஞ்சதால் நானும் சம்மதிச்சேன் , மெட்ராசுக்கு ஆத்துக்குப்போய் அப்பாகிட்ட அனுமதிகேட்டுண்டு வரேன்னு போனான்,அவனை நம்பி ஒரு விலாசமும் நாங்க வாங்கிக்கல. போனவன்கிட்டருந்து ஒரு தகவலும் இல்லை .இருக்கானா போய்ட்டானானனும் தெரில்ல அவனை மறந்துட்டு வேற பையனை கல்யாணம்பண்ணிக்கோன்னு ருக்குட்ட சொன்னேன். அவள் ”காத்திருக்கேன்ப்பா”ன்னா .வருஷம் நாலாச்சு. ஒருநா,” அவன்வரமாட்டான் உன்னை ஏமாத்திட்டாண்டி பைத்தியக்காரி”னு ஆங்காரமாய் கூச்சல்போட்டேன்.அப்போதான் ருக்குக்கு சித்தபிரமைபிடிச்சிபோய்ட்டது. பாக்காத வைத்தியமில்லப்பா..குணமே ஆகலை. ’ என்புருஷனைப்பார்த்தீங்களா?’ன்னு எல்லார்கிட்டயும் இப்படியே பலவருஷமாய் கேட்டுண்டுவரா இன்னிக்கு உன்னையே தன்புருஷன்னு சொல்லிட்டா பைத்தியம் முத்திப்போச்சுப்பா நான் என்ன பண்ணுவேன்?”

தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் வரதாச்சாரி..

“தாத்தா நீங்க நினைக்கிற மாதிரி உங்கபொண்ணு பைத்தியம் இல்லை.காதலிச்சவரைத்தவிர வேற யாரையும் ஏற்கவோ மறக்கவோ மனமில்லாத நிலையில் மனநிலை சரி இல்லாததுபோல நடிக்கிறாங்க..” என்றான் ரங்கப்ரசாத் தீர்க்கமான குரலில்.

”என்னப்பா சொல்றே?”வரதாச்சாரி குழப்பமும் அதிர்ச்சியுமாய் கேட்டார்.

“இருங்கோ வரேன்” என்று உள்ளே போனவன் அங்கே கதவுக்குபின்னால் நின்று கொண்டிருந்த ருக்குவின் கையைப்பிடித்து இழுத்துவந்து, “ இப்ப சொல்லுங்க உங்களை கல்யாணம் செஞ்சிக்கிறதா சொல்லி ஏமாத்திப்போனவர் பேரு மாதவனா ?’என்று அதிரடியாய் கேட்டான்.

ருக்கு அதிர்சியுடன் நிற்க , வரதாச்சாரி,” அம்பி !உனக்கு .. உனக்கு… எ …எப்படி தெரியும்?” என்று குழப்பமாய் கேட்டார்.

ரங்கப்ரசாத் அவர்கள் திகைப்புடன் பார்க்கும்போதே அந்த நடுமுற்றத்தில் நின்றபடி செல்போனில் மாதவனை அழைத்தான்.

“அப்பா வாழ்க்கை என்பது ஓராயிரம் கற்பனைகளும் ஒரு சில நிஜங்களும் என்று நினைவில் கொள். மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது ன்னு கார்ல் மார்க்ஸ் சொன்னதை நீங்க அடிக்கடி எனக்கு சொல்வீங்க….நிஜம் ஒன்று இப்போ எதிரில் நிற்கிறது…அப்பா உடுப்பிக்கு நீங்க என்கூட வராத காரணத்தை நேர்ல கண்ட நிஜம் சொல்லிவிட்டது. பெட்டர் லேட் தேன் நெவெர் ….ருக்மணிகள் எப்போதும் மாதவன் நினைவாகத்தான் இருப்பார்கள் அப்பாபுரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் உடனேபுறப்பட்டுவாங்க ..” என்று சொல்லித்திரும்பியபோது ருக்மணியின் கண்களில் சரிந்துகொண்டிருந்தது நீர்திவாலைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *