கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 4,860 
 
 

(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

ஆடி மாதம் 2002.

கார் ஓடிக்கொண்டிருக்கிறது. 

மெலனிசாம்ஸன்கார் ஓட்டிக்கொண்டிருக்கிறாள். கார் ரேடியோவி லிருந்து பிரபல பாடகனாக ஒரு காலத்தில் வாழ்ந்து மறைந்த ஜோன் லெனனின் ‘இமாஜின்’ என்ற பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

லண்டனில் வசந்தகாலம். மேகங்கள் மந்தைக் கூட்டங்கள் மாதிரி வானில் விரைகின்றன. இளம் வெயில் இதமாக இருக்கிறது. சனிக்கிழமை என்றபடியால் கடை கண்ணிகளுக்குப் போவோரின் கார்கள் தெருக்களை நிறைந்திருக்க காருக்குள் ஜோன் லெனனின் ‘இமாஜின்’ பாட்டு ரவியின் காதையும் கருத்தையும் நிறைத்திருந்தது. ‘இமாஜின்’- ‘கற்பனை செய்’ என்று அந்தக் கலைஞன் பாடுகிறான். 

உலகத்தில் அமைதியையும், அன்பையும், நட்பையும், வறுமை யற்ற வாழ்வையும் கற்பனை செய்தவனின் பாடல் அது. அந்தப் பாடல் எழுதிக் கொஞ்ச நாட்களில் ஜோன் லெனன் அமெரிக்காவில் வைத்துக் கொல்லப்பட்டான். அவன் பாடலை அமெரிக்க உளவுவாதிகள் விரும்ப வில்லை என்பது வதந்தி. “ஜோன்லெனனை உனக்குப் பிடிக்கும்போல் இருக்கிறது” கார் ஓட்டிக்கொண்டிருந்த மெலனி, ரவி தன் விரல்களால் பாட்டுக்கு ஏற்பத்தாளம் போடுவதைப் பார்த்துவிட்டுக் கேட்டாள். இசை ஒரு தெய்வீகக் கலை. எந்த மனிதரையும் உருக்கிவிடுகிறது என்பது அவள் அபிப்பிராயம். ‘ஜோன் லெனன் மட்டுமல்ல யாரும், எந்தப் பாடகனும், எந்தக் கவிஞனும் வறுமையற்ற வாழ்வு பற்றி, நோயற்ற மனிதர் பற்றி, பகைமையற்ற உறவுகள்பற்றி, காதல் நிறைந்த மனிதர் பற்றிப் பாடினால் பிடிக்கும், அப்படியான உலகத்தைக் கற்பனை செய்பவர்களில் நானும் ஒருத்தன்’ ரவி மெலனியைப் பார்த்துச் சொன்னான். அந்தப் பாட்டு அவன் சிந்தனையை எங்கோ திருப்பியது. 

ரவிக்கு இன்றைக்கு இந்தப் பிரயாணம் செய்வதை நம்ப முடியாம லிருக்கிறது. அதைப்பற்றி அவளிடமே சொல்ல வேண்டும் போலிருந் தது. மனம் விட்டு எதையும் பேசுமளவுக்கு அவன் நெருக்கத்தை யுண்டாக்கவில்லை, மெலனி அவனுடைய மேலதிகாரி. அவன் இலங்கையிலிருந்து மேற்படிப்பிற்காக லண்டனிற்கு வந்த இளம் டாக்டர். வயது முப்பது. அவள் அவனுக்குப் பலவிதங்களில் உதவியாக இருக்கும் மேலதிகாரி. அவள் ஒரு மெடிகல் ரெஜிஸ்ரார், அவன் அவளுடைய சீனியர் ஹவுஸ் ஆபிஸர். 

“வறுமையற்ற வாழ்வு, பகைமையற்ற உறவு, காதல் நிறைந்த மனிதர்கள்…. ரவி நீ நன்றாக கற்பனை செய்கிறாய். ஜோன் லெனனை விட மிகவும் நன்றாகக் கற்பனை செய்கிறாய்” மெலனியின் முகத்தில் சந்தோசம் தெரிந்தது. கண்கள் சிரித்தன. 

”பரம்பரையாயிருக்கலாம்” ரவி பதில் சொன்னான். 

“என்ன?” இவனிடம் மேலதிக விபரம் கேட்கும் ஆவல் அவள் பார்வையில் தெரிந்தது. 

“என் தகப்பன் ஒரு கவிஞன். எத்தனையோ நல்ல கற்பனைகளை நனவாக்க யோசித்த மனிதன்…’ ரவி கண்களை மூடிக்கொண்டான். தகப்பனைப் பற்றி மேலதிகமாகப் பேசமுடியவில்லை. நினைவுகள் எங்கேயோபோகின்றன. 1985ம் ஆண்டு இலங்கையில் அவன் சிந்தனை பாய்கிறது. 

யாரோகதவைத் தட்டுகிறார்கள். 

இலங்கைச் சிங்கள ராணுவத்தினர், ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்ளும் தமிழ் இயக்கத்தினர் என்று எத்தனையோ பேர் மக்களைக் கலக்கிக் கொண்டிருந்த காலம். 

வெளியில் போக முடியாமல் மனிதர்கள் – தமிழ் மனிதர்கள் சிறைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்று அது. 

ரவியின், தகப்பன் சிதம்பரம் மாஸ்டர், யார்கதவைத் தட்டினார்கள் என்று பார்க்கப் போய்க்கதவைத்திறந்தார். காலன் வந்து கதவைத் தட்டிய கொடுமை தெரியாத மனிதன் கதவைத் திறந்தார். வானத்தில் நிலவு மேகங்களைத் துரத்திக்கொண்டு பவனிவந்து கொண்டிருந்தது. தூரத்தில் மட்டக்களப்பு வாவி நிலவில் தங்க நட்சத்திரங்களைக் கொட்டி நகர்வது போல் நிலவு வெளிச்சத்தில் பளபளத்துக் கொண்டிருந்தது. இரவு தன் பயங்கரக்கரங்களால் உலகை மூடிக் கொண்டிருந்தது. நோயால் அவதிப் படும் யாரோ ஒரு வயோதிகர் ஓயாமல் இருமுவது கேட்டது. பக்கத்து வீட்டுப் பூனை மதில்மேல் படுத்திருந்தது. அயல்வீட்டுக் குழந்தை- இப்போதுதான் பிறந்து நான்கு நாட்களாகின்றன, உலகம் புரியாமல் ஓலம் போட்டுக் கொண்டிருந்தது. 

அப்பாகதவைத் திறக்கப் போனார். 

அடுத்த கணம் காதைப் பிளக்கும் குண்டுச் சத்தம். ‘ஐயோ’ அம்மாவின் அலறலில் பதின்மூன்று வயது ரவீந்திரன் தான் படித்துக் கொண்டிருந்த பாடப் புத்தகத்தை உதறிவிட்டு ஓடிவந்தான். பத்தொன் பது வயது அக்கா, தகப்பனின் நிலை கண்டு மயங்கிப் போன தாயைத் தாங்கிக் கொண்டாள். அந்தத் தாயின் எதிர்காலம் அஸ்தமித்த கணமது. 

இருதம்பிகளும் இரத்தம் பீறிட இறந்து கிடக்கும் தகப்பனைப் பார்த்து அலறியதில் அக்கம் பக்கத்தார் ஓடிவந்தார்கள். எட்டு வயதுத் தங்கை, “அப்பா,அப்பா” என்று கதறி, இறந்து போனவரின் சட்டை யைப் பிடித்து உலுக்குகிறாள். 

அப்பாகண்ட கற்பனைகளுக்கும் அன்றைய நிலைமைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 1985 ம் ஆண்டு அவனின் தகப்பனின் வாழ்க்கை சட்டென்று துண்டிக்கப்பட்டு விட்டது. 

“என்ன ரவி தூக்கம் வருகிறதா?” ரவியின் மௌனத்தை அவதானித்த மெலனி திரும்பிப் பார்த்துக் கேட்டாள். 

தூக்கமா? அவன் சிலிர்த்துக் கொண்டான். தனது துக்கத்தை அவளிடம் சொல்லலாமா? 

இவ்வளவு காலமும் அவர்கள் வேலை செய்யும் டிப்பார்ட் மென்டில் ஏதும் பார்ட்டி நடந்தால் எத்தனையோ வேற்று மனிதர்களைச் சந்தித்திருக்கிறான். அவர்கள் மெலனிக்குத் தெரிந்தவர்களாயிருந்தால் ரவிக்கும் அறிமுகம் செய்துவைப்பாள். உத்தியோக தோரணையில் அவள் ஒரு சிறந்த மேலதிகாரி. அவனை ஊக்கப்படுத்துபவள். ஆனால் அவளைப் பற்றித் தனிப்பட்ட முறையில் அவனுக்கு அதிகம் தெரியாது. அவளுடைய கனிவான குரலை அவனுக்குப் பிடிக்கும். உத்தியோகத் தோரணையில் கண்டிப்பாக சொல்லும் விஷயங்களும் பிடிக்கும். “லண்டனில் இருக்கும்போது எத்தனையோ விஷயங்களைப் படிக்க லாம், எவ்வளவோ இன்ரஸ்டிங்கான இடங்களைப் பார்க்கலாம், அதெல்லா வற்றையும் மறக்காதே.” என்று ஆலோசனை சொன்னதும் பிடிக்கும். 

அதற்கப்பால், இன்றுவரையும் அவர்கள் இருவரும் ஒருநாளும் ஒரு இடத்திற்கும் தனியாகப் போகவில்லை. ஜோன் லெனனின் பாட்டை ரசிக்கவில்லை. ஒரு இளம் சோடியாகக் காரில் இருந்துகொண்டு இசை பற்றிப் பேசவில்லை. 

“முன்பின் அறிவித்தல் இல்லாமல், இன்று காலை உனக்குப் போன் பண்ணி, பிரைட்டன் பீச்சுக்கு வருகிறாயா, என்று நான் கேட்டது சரியில்லைதான், மன்னிக்கவும்.” அவளின் குரலில் மன்னிப்பு உண்மை யான தொனியில் ஒலித்தது. 

“அப்படிச் சொல்ல வேண்டாம். மாமாவிடம் வருவதாகச் சொல்லி யிருந்தேன்.வருவது சாத்தியம் என்று சொல்லி யிருந்தேன். நிச்சயமாக வருவதாகச் சொல்லவில்லை. அத்துடன் இந்த வார விடுமுறையில் நேரமிருந்தால் எனது தமக்கை வீடு போவதாக இருந்தேன். ஆனால் அந்த விடயங்களை அடுத்த கிழமை பார்த்துக் கொள்ளலாம்தானே?” 

“நிறைய உறவினர்கள் லண்டனில் இருக்கிறார்கள்போலும்” மெலனியின் கேள்வியில் ஆச்சரியம். 

“நாங்கள் இலங்கைத் தமிழர்கள். உயிரைப் பாதுகாப்பதற்காக உலகமெல்லாம் நாடோடியாய் அலைபவர்கள். எங்களின் உறவுகள் உலகத்தில் எழுபத்து நான்கு நாடுகளில் பரந்து கிடக்கிறார்கள்” ரவி சொல்லிக் கொண்டிருந்தான். 

கார்ட்ரபிக் லைட்டில் நின்றது. 

நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்தது. லண்டனில் கொஞ்சம் வெயில் அடித்தால் மிகவும் சந்தோசமாயிருக்கும். இந்த ஆங்கிலேயர் களைப் பார்க்க ரவிக்குச் சிலவேளை ஆச்சரியமாக இருக்கும். 

இவர்கள் சுதந்திரமானவர்கள். அரசியல், பொருளாதாரம், தனி மனித உறவுகள் ஆகியவற்றை சுயசிந்தனையின் ஆற்றலுடன் வெளி யிடத் தயங்காதவர்கள். சுதந்திரமற்ற இலங்கைத் தமிழர்களுக்கும் சுதந்திரமுள்ள இந்த ஆங்கிலேயர்களுக்கும் எத்தனையோ வித்தியாச முண்டு. கார் ஸ்ராட் பண்ணியதும் இவனின் நினைவில் என்னவிருக்கும் என்று தெரிந்ததுபோல் மெலனி அவனைப் பார்த்தாள். 

“இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அமைதிச் சூழ்நிலை நிரந்தரப்படுத்தப்படும் சூழ்நிலையிலிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?” 

இந்தக் கேள்வியை மெலனி சாம்ஸனிடமிருந்து ரவி எதிர்பார்க்கவில்லை.  

“அமைதி நிரந்தரமாக வரவேண்டுமென்று பெரும்பாலான இலங்கை மக்கள் வேண்டுகிறோம். இன விரோதத்தை வளர்த்து, அதனால் தொடர்ந்த சண்டையில் இறந்த மனிதர்கள் ஆயிரக் கணக்கானோர் – அழிந்த செல்வங்கள் எத்தனையோ. எதிர்காலம் ஒரு நல்ல விடிவைத் தர எங்கள் நாட்டில் அமைதி தேவை. அல்லல்படும் மக்களில் முப்பது வீதம் பேர் மனநோய்களால் அவதிப்படுகிறார்கள். எங்கள் நாட்டுக்கு அமைதி தேவை.” ரவியில் குரலில் உணர்ச்சி பெருகியது. அவள் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தாள். 

“இன்று நான் இந்தப் பிரயாணத்தை ஏற்படுத்தியதற்கு எனக்கு நானே நன்றி சொல்லப் போகிறேன்.” அவனைப் பார்த்துச் சொன்னாள். 

“அப்படியா! ஏன்?” உண்மையான ஆர்வத்துடன் கேட்டான்ரவி. 

“எனக்கு இதுவரை தெரியாத ரவியைப் பார்க்கிறேன்”. அவள் குரலில் சந்தோசம். 

“என்னைப்போல் எத்தனையோ ரவிகள் அனாதைகளாக உலக மெல்லாம் சிதறுப்பட்டுக் கிடக்கிறார்கள். 

அமைதி தேவை, அதைத் தொடர்ந்து எதிர்காலத்தைச் சுபிட்சப் படுத்தும் திட்டங்களும் தேவை. அவன், மனம் திறந்து சொன்னான். 

“நீங்கள் ஒரு சைக்கியாட்ரிஸ்டாக இருக்காமல் ஒரு அரசியல் வாதியாக இருந்திருக்கலாம்” மெலனியின் குரலில் உண்மையான எதிர்பார்ப்பு. 

“ஐயய்யோ, ஆளை விடுங்கள். அரசியல் ஒரு சாக்கடை.” அவன் அலறினான். 

மெலனி வாய்விட்டுச் சிரித்தாள். இந்தச் சிரிப்பு மனதிற்கு இதமாக இருந்தது.உத்தியோகத் தோரணைக்கு அப்பாலான சிரிப்பு. அதை அவன் ரசித்தான். 

தற்செயலான இந்தப் பிரயாணம் மனதில் ஒரு திருப்தியைத் தந்தது ரவிக்கு. ஏனென்றால் எல்லாரிடமும் அவன் மனம் விட்டுப் பேசமாட்டான். 


ரவி வரமாட்டான் என்று ராமநாதனுக்கு நிச்சயமானது. வருவதா யிருந்தால் போன் பண்ணியிருப்பான். இதுவரைக்கும் அவனிடமிருந்து எந்த போன் காலும் வராதபடியால் அவன் இன்று மத்தியானச் சாப் பாட்டுக்கு வரப்போவதில்லை என்று நிச்சயித்து விட்டார். 

சித்திராவையும் எதிர்பார்த்தார். கேம்பிரிட்ஜ் நகரிலிருந்து லண்ட னுக்கு வந்து போவது பெரிய காரியமில்லை, அவர் மகள் சித்திரா கேம் பிரிட்ஜ்நகரில் சோசியல் வேர்க்கராக இருக்கிறாள். வார விடுமுறையிலும் ஏதோ வேலை வந்துகொண்டிருக்கும். 

பின்னேரம் அவருடைய பழைய மாணவர் சங்கக் கூட்டம் இருக்கிறது. அதுவரைக்கும் அவர் மனைவி திலகவதி எதையாவது சொல்லித் தொண தொணவென்றிருப்பாள். குழந்தைகள் இல்லாத வீட்டில் ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக் கொண்டிருக்கும் முதுமை வாழ்க் கையது. திலகவதியின் சமையல் மூக்கைத் துளைத்தது. ஒரே ஒரு மகளின் வருகையை எதிர்பார்த்து ஏதோவெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள். அத்துடன் மருமகன் ரவியையும் எதிர்பார்த்திருந்தாள். 

அவள் முகத்தில் அந்த எதிர்பார்ப்பின் சந்தோசம் தெரிந்தது. பகல் பன்னிரண்டு மணியாகப் போகிறது. 

ரவிக்குப் பிடித்த உளுந்துவடை, பாயாசம் செய்கிறாள். அவளின் சமையலை ரசிக்க அவன் வரமாட்டான் என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடையப்போகிறாள். ராமநாதன் தோட்டத்திற்குப் போனார். தோட்டத் தில்துப்புரவுப்படுத்தும் வேலை செய்பவன் நாளைக்கு வருவான். நல்ல வெயிலடித்தது. கையில் பத்திரிகையுடன் கதிரையையும் எடுத்துக் கொண்டு போனார். 

தோட்டத்தில் உட்கார்ந்து பத்திரிகை படித்தாலும் மனமோ, மகள் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் அங்கலாய்த்தது. அவர்களின் மகள் சித்திரா கேம்பிரிட்ஜ் நகரில் சோஸியல் வேக்கராக இருக்கிறாள். சிலவேளைகளில் வார விடுமுறைக்கு வருவாள், பத்திரிகையில் மனம் செல்லவில்லை. இன்னொரு தரம் உள்ளே வந்தார். ட்ரான்ஸிஸ்டர் ரேடியோவைத் தூக்கிக் கொண்டார். அலைபாயும் மனத்தை இழுத்து ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற உந்தல் செயலில் தெரிந்தது. M.S.சுப்பு லட்சுமியின் ‘மீரா’ படப் பாடல்கள் அடங்கிய டேப்பைப் போட்டார். 

காற்றில் தலை சாய்த்துத் தாளம் போடும் ‘கமிலியா பூக்கள்’, மீராவின் -“காற்றினிலே வரும் கீதம்” பாட்டுக்காகத் தாளம் போடுவது போலிருந்தது. கமிலியா பூக்களை ரசித்தவர் தோட்டத்தை ஒருதரம் நோட்டம் விட்டார். தோட்டத்தைத்திருத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அவருக்கு அறுபது வயதாகிறது. இருதயம் அவ்வளவு சரியாக வேலை செய்யமாட்டேன் என்கிறது. ஏதும் கொஞ்சம் வேலை செய்தால் மூச்சு வாங்குகிறது. 

அவர் ஒரு சத்திரவைத்திய நிபுணர். ஆனால் தன் இருதய நோய் பற்றி யாரிடமும் மூச்சு விடவில்லை. “சும்மா சின்னப் புழை தானே” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார். 

திலகவதிக்கு அது தெரிந்தால் துடிதுடித்து விடுவாள். அவளுக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. அவளுக்கு முப்பத்திஎட்டு வயதில் டையா பெட்டிஸ் வந்துவிட்டது. அதற்கு மருந்தெடுத்துக் கொண்டும், டாக்டர் களைப் பார்த்துக் கொண்டும் திரிகிறாள். இந்த நிலையில் அவருக்கு இருதயத்தில் ஏதோ புழை என்று தெரிந்தால் பதறிவிடுவாள். அவர்களின் ஒரே ஒரு மகள் சித்திரா, இருபத்தி எட்டு வயதாகிறது. இன்னும் அவள் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பது திலகவதியை உருக்குகிறது என்று தெரியும். தங்களுக்கு ஏதும் நடப்பதற்குள் மகளுக்குத் திருமணம் நடக்க வேண்டுமென்பது அவள் ஆவல். 

சுப்புலட்சுமியின் காற்றினிலே வந்த கீதம் பக்கத்து வீட்டு வெள்ளைக்காரனுக்கும் கேட்டிருக்க வேண்டும். எட்டிப் பார்த்தான். 

பக்கத்து வீட்டு வெள்ளைக்காரனின் பெயர் மைக்கேல். மனைவி யின் பெயர் கரலைன். இருவரும் அண்மையிலிருக்கும் பாடசாலையில் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். வேலிக்கு மேலால் வெறும் புன்னகையாய் ஆரம்பித்த உறவு இப்போது மிகவும் நெருங்கிப் பழகுகிறார்கள். நல்ல மனிதர்கள் என்று உறவு கொண்டாடுவாள் திலகவதி. அவளின் வாழ்க்கையில் – லண்டனுக்கு வந்து பதினெட்டு வருடங்களில் கொஞ்சம் கூடுதலாகப் பழகும் ஆங்கிலேயர்கள் அவர்கள்தான். 

“குட்மோர்னிங்… இல்லை இல்லை, குட்ஆப்டர்நூன்’ வேலிக்கு மேலால் சொன்னான் மைக்கேல். ஆறடி உயரமான அவன் திடகாத்திரமாய்த் தெரிந்தான். 

“குட் ஆப்டர்நூன் மைக்கேல்” ராமநாதன் பதிலுக்குச் சொன்னார். மகனைப் பார்த்து ஒரு தகப்பன் சொல்லும் பாசம் அவர் குரலில். 

கரலைன் பக்கத்துத் தோட்டத்தில் தெரிந்தாள். திலகவதி வடைப் பார்சலுடன் வந்தாள். மைக்கேலுக்கு இந்திய – இலங்கைச் சாப்பாடுகள் பிடிக்கும். கரலைன் வடையைப் பார்த்தாள்.”ஓட்டை போட்ட கேக்கா’ என்று விசாரித்தாள். 

“இல்லை உளுந்து வடை” திலகவதி உளுந்து வடை பற்றிய விரிவிலக்கணத்தை அவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். திலகவதி சமையல் கலை பற்றிய பாடங்கள் எடுத்தால் மிகவும் விசேடமாயிருக்கும். 

“மிகவும் நன்றாயிருக்கிறது” கரலைன் சந்தோசப்பட்டாள். உளுந்து வடையில் பொதிந்திருந்த காரம் அவளின் கண்களில் நீர் வரப் பண்ணிக் கொண்டிருந்தது. 

“இன்றைக்கு சில விசிட்டர்கள் வருவதாக இருக்கிறார்கள்”. திலகவதி மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்கும்போது டெலிபோன் மணியடித்தது. 

ராமநாதன் உள்ளே போனார். 

திலகவதியும் பின்தொடர்ந்தாள். 

“யார் சித்திராவா” அவள், அவர் அருகில் நின்று முணுமுணுத் தாள் .அவர் இல்லை என்று தலையாட்டினார். அவள் கேள்வியைத் தொடர்ந்தாள். 

“ரவியா” 

அவர் இல்லை என்று தலையாட்டினார். 

அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. ரவியும் வரவில்லை. சித்தி ராவும் வரவில்லை. அவள் சோர்ந்து விட்டாள். துயரம் முகத்திற் படிந்தது. போன் பண்ணியவர் ராமநாதனின் நண்பர். பின்னேரக் கூட்டம் பற்றிச் சொன்னார். 

“ரவி வரமாட்டானா” திலகா கேட்டாள். 

“அவன் வருவதாயிருந்தால் எப்போதோ வந்திருப்பான். நான் நினைக்கல்ல வருவான் எண்டு” திலகவதியின் ஏமாற்றமான முகத்தை அவர் பார்க்காமல் சொன்னார். இன்னொருதரம் தோட்டம் பக்கம் போகாமல் சோபாவில் உட்கார்ந்தார். பத்திரிகையில் மனம் செல்ல வில்லை. சனிக்கிழமைகளில் வேலைக்குப் போனால் காலை பதினொரு மணிக்குப்பின் வீட்டுக்கு வந்துவிடுவார். 

இன்று மகள் வருவாள் என்ற எதிர்பார்ப்பில் கொஞ்சம் முந்தியே வீட்டுக்கு வந்திருந்தார். 

ரவியைப் பற்றிக் கேட்டவள், சித்திராவைப் பற்றிக் கேட்காதது ஆச்சரியமாக இருந்தது. திலகவதி எப்படியும் சித்திரா வருவாள் என்று எதிர்பார்ப்பது புரிந்தது. மகளில் உயிரை வைத்திருக்கும் திலகவதிக்குச் சிலவேளை சித்திரா வயது வந்து தங்களைப் பிரிந்து போய்விட்டாள் என்பதே கணக்கில் இல்லை. “ரவிக்கு விருப்பமான வடையும் பாயாச மும் செய்தேன்” திலகாவின் குரலில் ஏமாற்றம். ரவிக்கு ஏன் இப்படி உபசாரம் செய்கிறாள் என்பது அவருக்குத் தெரியும். அவருக்குச் சிரிப்பு வந்தது. ஒருகாலத்தில் ரவியின் தாயை – ராமநாதனின் தங்கையை திலகவதிக்குக் கண்ணில் காட்டக்கூடாது. ராமநாதனின் தங்கை கமலா தங்களுக்குப் பிடிக்காத, அல்லது தாங்கள் பார்க்காத மாப்பிள்ளையைச் செய்துவிட்டாள். மத்தியதர வாழ்க்கை வாழும் கொழும்புத் தமிழ்ப் பெண்ணான கமலாதங்கள் அந்தஸ்துக்குக் குறைந்தவனில் மனம் பதித்து விட்டாள். தாய் தகப்பனின் அனுமதி கிடைக்காது என்று தெரிந்தும் கமலா தனக்குப் பிடித்தவனின் குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன் திருமதி கமலா சிதம்பரமானாள். 

நீண்ட நாட்களின் பின் கமலா தமயனுடன் தொடர்பு கொண்டாள். “அண்ணா, நீ என்றாலும் எனது விருப்பத்திற்கு உதவி செய்வாய் என்று நினைத்தேன்” என்ற கமலாவின் கடிதம் அவள் எவ்வளவு தூரம் ஏமாற்றம் அடைந்திருக்கிறாள் என்பதைக் காட்டியது. அவரின் கடைசித் தங்கையவள். குடும்பத்தின் கட்டுப்பாட்டால் தங்கையின் திருமணத்திற்கு ஒரு உதவியும் செய்யவில்லை. அவர் உதவி செய்யத் தொடங்கியபோது கமலா இழக்க வேண்டியவை எல்லாவற்றையும் இழந்துவிட்டாள். 


சித்திரா இந்க் கிழமை லண்டனுக்குப் போவதாக யோசித்திருக்க வில்லை. ஆனாலும் ஒவ்வொரு கிழமையும் எதிர்பார்ப்பதுபோல் இந்தக் கிழமையும் அவள் பெற்றோர் அவளை எதிர்பார்ப்பார்கள் என்று தெரியும். 

இருபத்து எட்டு வயது மகளுக்கு இன்னும் செல்லம் பண்ணும் திலகவதி எல்லா இலங்கைத் தமிழ்த்தாய்களும் போலத்தான் இருக்கிறாள். 

பதினெட்டு வருடம் லண்டனில் வாழ்ந்தும் திலகவதியால் அவளுடைய சமயலறை உலகிற்கப்பால் போக முடியாமலிருப்பது அவளின் மகளுக்கு ஆச்சரியம் அல்ல. பெரும்பாலான தமிழ்த் தாய்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். தாயின் மனநிலை தெரிந்தாலும் சித்திரா இன்று தாய் தகப்பனைப் போய்ப் பார்க்க முடியாமலிருக்கிறது. மதியம் ஒரு மணி யாகிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு முதல்தான் அவளின் மைத்துனி சுமதி போன் பண்ணினாள். 

சுமதி பேசிய தோரணையிலிருந்து அவள் மனம் மிகவும் குழம்பிப் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்தது. 

“உனது தம்பியிடம் பேசினாயா?” சித்திராவுக்கு சுமதியின் குடும்ப விஷயங்களில் தலையிட விருப்பமில்லை. ஆனாலும் சுமதி தன்னிடம் எதிர்பார்க்கும் உதவி ஒரு சகோதரி இன்னொரு சகோதரியிடம் எதிர்பார்க்கும் உறவு. 

“இந்த வாழ்க்கையை நினைத்தால் எனக்கேன் இந்த விதி என்று யோசிக்கிறேன்.” 

சுமதி மிக மிக நொந்துபோன நேரங்களில் கடவுள், விதி என்றெல்லாம் பேசத் தொடங்கிவிடுவாள். விரக்தி வரும்போது விதியில் பழிபோடும் பல மனிதர்களில் சுமதியும் ஒருத்தி. தனிமனித உணர்வுகள் வாழ்க்கையைப் பரிணமிக்கிறது என்பது தெரியாதவள், சித்திராவின் மாமி கமலாவின் மூத்த மகள் சுமதி. மூத்த மகள் சுமதியையும் மூத்த மகன் ரவியையும் தவிர மற்ற மூன்று குழந்தைகளையும் இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல கோணங்களில் இழந்து விட்டவள் கமலா. 

சித்திராவின் தகப்பன் தனது தங்கையிடம் பரிதாபம் கொண்டவர். அவளுக்கு உதவி செய்ய, டாக்டர் ராமநாதன், சுமதிக்கு லண்டன் மாப்பிள்ளையைப் பேசி செய்து வைத்தார். முப்பத்தி ஏழு வயதில் இரு குழந்தைகளுடன் கிட்டத்தட்ட வாழாவெட்டியாக இருக்கிறாள் சுமதி. சுமதிக்கும் அவள் கணவருக்கும் எப்போதும் பிரச்சினை. 

“இவர் இப்படியானவர் என்று தெரிந்தால் நான் கல்யாணம் செய்யாமல் காலமெல்லாம் கன்னியாகவே இருந்திருக்கலாம்… ஆண்கள் தங்கள் சுயநலத்திற்கு ஏன் பெண்கள் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்?”

சுமதியின் கேள்விக்கு சித்திராவால் பதில் சொல்ல முடியாது. மனித உறவுகளின் சிக்கல்கள் பற்றிய கேள்வியிது. 

இந்தக் கிழமை சித்திரா மிகவும் கடுமையாக வேலை செய்ததால் உடம்பெல்லாம் களைத்துப் போயிருக்கிறது. நேற்று உலகக் கால்பந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்துக் கோஷ்டி ஆர்ஜென்டினாவைத் தோற்கடித்தது. அந்த வெற்றியைக் கொண்டாட இங்கிலாந்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டாட்டம். அந்தச் சந்தடியில் இரவெல்லாம் சரியான தூக்கமில்லை. 

பக்கத்து வீட்டிலுள்ள ஜேன் என்னும் பெண்ணுக்குக் கால்பந் தாட்டம் பிடிக்காது. “இந்த ஆண்கள் ஏன் இப்படி பைத்தியம் பிடித்துக் கிடக்கிறார்களோ தெரியாது என்றாள். சித்திராவுக்குச் சிரிப்பு வந்தது. ஜேன் எதையும் பொருளாதார – அரசியல் ரீதியாக ஆராய்வாள். “சித்திரா, இந்த காற்பந்தாட்டப் போட்டி ஒருவிதத்தில் ஒரு ஏகாதிபத்தியப் போட்டி மாதிரி. பணமுள்ள நாடுகள் தோல்வியடையும்போது பார்க்கச் சந்தோச மாக இருக்கிறது.’ ஜேன் சந்தோசத்துடன் சொன்னாள். ஆங்கிலேயர் ஆர்ஜென்டின் வீரர்களிடம் தோற்றதைப் போற்றுகிறாள். “ஜேன் நீ இங்கிலிஸ்காரி. இப்படிப் பேசுவது ஆச்சரியமாக இருக்கிறது.” ஜேன் செய்து தந்த அந்த கரட் கேக்கை மிகவும் ருசித்தபடி சொன்னாள் சித்திரா. 

“சும்மா போ, பணத்தால் மதம் பிடித்துப்போய் இருக்கும் மேலை நாட்டாருக்கு ஆப்பிரிக்க நாடுகளும் தென் ஆப்பிரிக்க நாடுகளும் பாடம் படிப்பிப்பதைப் பார்க்கச் சந்தோசமாக இருக்கிறது.’ 

ஜேன் இங்கிலாந்து தொழிற்கட்சியில் அங்கத்தவராக இருக்கிறாள். அவள் உலகத்தைப் பார்க்கும்விதம் வேறு. அவள் எதிர்பார்க்கும் எதிர்காலம் வேறு. கேம்பிரிட்ஜ் பெண்கள் அமைப்பொன்றில் வேலை செய்கிறாள். வசதியற்ற பெண்களுக்கு உதவி செய்வது, படிப்பு, தொழில் போன்ற விடயங்களில் அவர்களை ஊக்குவிப்பது போன்ற விடயங்களை அந்த ஸ்தாபனம் செய்கிறது. ஜேன் ஒரு அகில உலகவாதி. அடக்கப்பட்டோர் உரிமைகளுக்காகப் போராடுவாள். 

தனது யுனிவர்சிட்டிப் படிப்பு முடிந்ததும் மூன்று வருடங்கள் ஆப்பிரிக்காவில் – உகாண்டா நாட்டில் ஏழை எளியோர்களுக்கு உதவி செய்யும் ஸ்தாபனம் ஒன்றில் வேலை செய்தவள். “ஒருசில பேராசை பிடித்த அரசியல்வாதிகளால் உலகத்தில் இத்தனை கொடுமை நடக்கிறது. இடி ஆமீனால் உகாண்டா நாடு சிதிலமடைந்தது. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுச் செல்வத்தை உறிஞ்சு கிறார்கள். அந்தப் பணத்தை மேற்கத்திய வங்கிகளில் போடுகிறார்கள். அதன் பின் தங்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு உதவி செய்யச் சொல்லி பணம் படைத்த மேற்கு நாட்டு அரசியல்வாதிகளைக் கெஞ்சு கிறார்கள். உதவி என்ற பெயரில் அவர்கள் கொடுக்கும் பணம் உருப்படியாக மக்கள் தேவைக்குப் பயன்படுவதில்லை. இது மீண்டும் அரசியல்வாதிகளின் வீட்டுப் பணமாகச் செலவழிக்கப் படுகிறது.” 

“ஜேன், நீ எனக்கு இதெல்லாம் சொல்லத் தேவையில்லை. நான் பதினாறு வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து உயிரைக் காப்பாற்ற இந்த நாட்டுக்கு வந்தேன். எனக்கு அப்போது பன்னிரண்டு வயது. உலகத்தை ஒரு விளையாட்டுப் பூமியாகப் பார்க்கும் வயதில் இன அழிப்பு என்ற பெயரில் மிகவும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த நாங்கள் 83-ம் ஆண்டு அகதிகளாய் அனாதைகளாய் உயிர் தப்ப அலைந்தது உனக்குப் புரியாது. ஏழ்மையைப் பார்த்திருக்கிறாய். ஏழ்மையை அனுபவிக்க உனக்குச் சந்தர்ப்பம் இல்லை.” ஜேன், சித்திரா சொல்வதை உண்மை என்று ஒப்புக் கொண்டாள். 

சித்திராலண்டனுக்குப் போக வெளிக்கிட்டபோது கதவைத் தட்டிய சத்தம் கேட்டு வெளியே வந்தாள். 

ஜேன்தான் நின்று கொண்டிருந்தாள். முகத்தில் களையில்லை. கண்களில் பரபரப்பு. ஏதோ துன்பமான விடயத்தைத் தொண்டையில் பிடித்து வைத்திருக்கும் பாவம். கண்கள் பனித்திருந்தன. ‘சித்திரா… ஜேனின் குரலில் படபடப்பு. முகத்தில் கலவரம், கண்களில் பனிப்பு. 

“என்ன ஜேன், உடம்புக்கு ஏதும் சுகமில்லையா?” சித்திராஜேனை அன்புடன் அணைத்துக் கொண்டு கேட்டாள். 

ஜேன் சித்திராவை நேரே பார்க்காமல் வானத்தைப் பார்த்தாள். நீலவானம் மிகவும் தெளிவாக இருந்தது. 

“சித்திரா நான் உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும்.” தயக்கம் குரலில் 

“சரி… இன்னும் கொஞ்ச நேரத்தில் லண்டனுக்குப் போகிறேன். என்ன விடயம்.” 

“நீபிஸியாயிருந்தால் நான் இந்தப் பேச்சை எடுப்பது சரியில்லை”. ஜேன் அப்படிச் சொன்னாலும், தயவு செய்து கொஞ்சநேரம் என்னுடன் பேசு என்பதுபோல் அவள் கண்கள் கெஞ்சின. 

“சரி உள்ளே வா” ஜேன் குழந்தைபோல சித்திராவைத் தொடர்ந்து உள்ளே வந்தாள். 

மிகவும் பரபரப்பாகக் காணப்பட்ட ஜேன் வழக்கமாக மிகவும் பொறுமையான பெண். மற்றவர்களுக்கு உதவுவதில் மிகவும் ஈடுபாடுள்ளவள். 

சித்திரா ஒரு சோசியல் வேர்க்கர். 

ஜேன் ஒரு பெண்கள் அமைப்பு உழைப்பாளி. 

இருவரும் பக்கத்து வீடுகளில் வாழக் கிடைத்தது மிகவும் சந்தோச மானவிடயம் என்று நினைப்பவள் ஜேன். இருவரும் நல்ல சினேகிதிகள். ஜேனில் சித்திராவுக்கு மதிப்பும் அன்பும் உண்டு. மிகவும் கசுவலாக உடைகள் அணிவாள் ஜேன். ஜேன் நினைத்தால் எத்தனையோ பெரிய வேலை எடுக்கலாம். ஆனால் பெண்களுக்கு உதவுவது அவளுக்குப் பிடித்திருக்கிறது. “பணம் ஒருபிசாசு, மனிதனை மிருகமாக்கிவிடும்”. இது ஜேன் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளில் ஒன்று. பணம் இருந்தால் மற்றவர்களுக்கு உதவுவாள். அவளுக்கு உதவி தேவையாம்! என்ன உதவி? அவளின் போய் பிரண்ட் டேவிட்டிடம் கேட்க முடியாத உதவியா?”சித்திரா நான் கர்ப்பமாயிருக்கிறேன்.” ஜேனின் குரலிலிருந்த பரபரப்பு சித்திராவை ஆச்சரியப்படப் பண்ணியது. சந்தோசப்பட வேண்டிய விடயமல்லவா இது? “கொங்கிராயுலேஸன்ஸ்” சித்திரா ஜேனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். 

அத்தியாயம் – 2 

சாப்பாட்டு நேரத்தில் கொஞ்சம் வைன் குடித்திருந்ததால் மனம் கொஞ்சம் இதமாக இருந்தது. ரவிக்கு அரசியல் பிடிக்காது. அடுத்த மனிதர்களைப் பற்றிப் பேசுவது பிடிக்காது. அதிக பேராசை பிடிக்காது. அவசரப்படுத்தும் கல்யாணங்கள் பிடிக்காது. மெலனியுடன் மத்தி யானம் சாப்பிட்டான். சிவப்பு வைன் குடித்தார்கள். ஆங்கிலேயப் பெண்ணுடன் வைன் குடித்த முதல் அனுபவம்! மாமா ஞாபகத்திற்கு வந்தார். நிச்சயமாகத் தன்னால் வரமுடியாது என்று இவன் சொல்லா விட்டாலும் இவன் வருகையை அவர் எதிர்பார்த்திருப்பார் என்று தெரியும். திலகவதி மாமியின் அருமையான சமையல் நாக்கில் ஜலம் வரப்பண்ணும். 

அவன் இப்போது மெலனியுடன் ஆங்கிலேயச் சாப்பாடு சாப்பிட் டிருக்கிறான். அவர்கள் இதை விரும்ப மாட்டார்கள் என்று தெரியும். 

இங்கிலாந்துக்கு வரும்போது இதெல்லாம் எதிர்பார்த்து வரவில்லை. மேல்படிப்பு படிக்க வேண்டும். இலங்கைத் தமிழர் இங்கிலாந்தில் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்து வந்திருந்தான். 

“இங்கிலாந்துக்குப் படிக்கப்போன நிறையத் தமிழ் டாக்டர்கள் இலங்கைக்குத் திரும்பி வருவது கிடையாது”. 

இலங்கையில் ரவியின் மேலதிகாரி இப்படிச் சொன்னார். 

மாமா ராமநாதனும் அப்படித்தான் லண்டனுக்கு வந்தார். மேற்படிப்புக்காக வந்தார். 

லண்டன் மாநகரத்தில் ‘அமைதியான’ வாழ்க்கை அமைத்துக் கொண்ட ஆயிரக்கணக்கான தமிழ் டாக்டர்களில் அவரும் ஒருவராகி விட்டது ரவிக்கு ஆச்சரியமாக இருந்தது.மாமா இலங்கைத் தமிழரின் விடுதலையை நாடுபவர். அதற்காக லண்டனிலிருந்து கொண்டு எத்தனை யோ விதங்களில் வேலை செய்கிறார். நிதியுதவி சேர்த்து இலங்கைக்கு அனுப்புகிறார். அப்படியிருந்தும் இலங்கைக்குத் திரும்பிப் போக மாட்டேன் என்கிறார். தமிழர்களுக்கு விடுதலை தேவை என்று இரவும் பகலும் நினைக்கும் இந்த மனிதன் இலங்கை திரும்ப மாட்டாராம். “தமிழர் விடுதலைக்குப் பாடுபடுவதென்பது போலியா” ரவி நேரே கேட்டான். ஏனோதானோ என்று இலங்கைத்தமிழர் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கும் எத்தனையோ பேர்களைச் சந்தித்திருக்கிறான். தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் அவன் குடும்பத்தில் அவனுக்கு உயிரான நால்வரை இழந்தவன் அவன். 

இலங்கையில் ஆறாய் ஓடும் தமிழரின் குருதியில் அவன் குடும்பத்தின் நான்கு பேரின் குருதியும் சங்கமித்திருக்கிறது. 

“இலங்கை எங்கள் தாயகம். எல்லோர்க்கும் சொந்தம் இந்நிலம். வாழ்வோம் இந்த நாட்டிலே, மானத்தோடு வாழுவோம்”. 

சங்கீதா இந்த வரிகளை மிகவும் உணர்ச்சியாகிப் பாடிக் கேட்ட போது அவனுக்கு வயது பதினைந்து. அவளுக்கு வயது பத்து. தான் பிறந்த இடத்தைத் தாயகமாக நினைத்த தமிழர்களுக்கு இனவாத சிங்கள ஆட்சி தடையுத்தரவு போட்டது. அதை எதிர்த்தவர்கள், இறந்தவர்கள் ஏராளம். தகப்பனையிழந்த துக்கத்தில் தாய் தூண்டிற் புழுவாய்த் துடித்த போது அந்த ஊர் மக்கள் அவர் மறைவை நினைவுபடுத்த அமைத்த கூட்டத்தில் சங்கீதா பாடினாள். 

சங்கீதா ரவியின் கடைசி சகோதரி. தகப்பனின் மறைவு அவளை எப்படி மாற்றியிருக்கிறது என்று அவளின் உணர்ச்சி கரமான பாடலிலிருந்து தெரிந்தது. 

மீன்பாடும் தாய்நாடாம் மட்டக்களப்பில் இளம் தமிழ் இளைஞர்கள் ஆடுமாடுகள் போல் அடைக்கப்பட்ட காலமது. காட்டு மிருகங்களாய் வேட்டை ஆடப்பட்ட காலமது. சிங்கள ராணுவம் மனித வேட்டையாடி யபோது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழர்களில் பெரும்பாலோரை யிழந்தது மட்டக்களப்பு மாவட்டம். 

மாமா லண்டனுக்கு ஓடிவந்து விட்டார். ஓடிவருவது சிரமமாக இருக்கவில்லை. அவர் வசதி படைத்த தமிழ் டாக்டர்.கொழும்புத் தமிழன். 83ம் ஆண்டில் அவர் வேலை செய்த ஆஸ்பத்திரியில் அவருக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்த ஊழியர்கள் அவர் உயிரைக் குடிக்க முனைந்தபோது,இப்படியும் மனித குலம் மிருகவெறி பிடித்தலையுமா என்று பயந்தார். 

மாமா சொன்னார் “ரவி நான் இலங்கைக்குத் திரும்பிப் போக மாட்டேன். சிங்கள இனவாதக் குண்டர்கள் கொலை வெறி பிடித்து கொழும்பின் மூலை முடுக்கெல்லாம் தமிழர்களைக் கொலை செய்த போது நான் ஒரு பெரிய டாக்டர், தமிழன் என்பதற்காக மூன்று நாட்களாக அழுக்கு துணி மூட்டைகள் போடும் அறையில் மறைத்து வைத்துக் காப்பாற்றப் பட்டேன். என் மனைவிக்கும் மகளுக்கும் என்ன நடந்தது, நான் உயிருடன் அந்த அறையிலிருந்து வெளியே போவேனா என்று கூட எனக்குத் தெரியவில்லை. அந்தப் பயங்கர நினைவுகள் இரவும் பகலும் என்னை எப்படிச் சித்திரவதைப் படுத்தியது என்று யாருக்கும் புரியாது” 

மாமாவின் கண்களில் நீர் துளித்ததை ரவி கண்டான். அவன் லண்டனுக்கு வந்த ஆரம்ப காலத்தில் நடந்தது இது. இப்போது அவனும் லண்டனுக்கு வந்துவிட்டான். 

உயிர் தப்பி, அமைதியான வாழ்க்கை தேடி, உழைப்புக்கு வழி தேடி வந்த தமிழ் மக்கள் உலகமெல்லாம் கொட்டிக் கிடக்கிறார்கள். ஒரு தலைமுறைத் தமிழ்க்குடி,நாடோடியாகிவிட்டது. அடுத்த தலைமுறை யின் கதி என்ன? இலங்கையிலிருக்கும் தமிழரில் முப்பது சதவீதத்தினர் மனவியாதிகளால் கஷ்டப்படுகிறார்கள். ரவியின் சிந்தனைகள் எங்கே யோ போய்க் கொண்டிருக்கின்றன. அவன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஆங்கிலப்பெண் மெலனிக்கு இதெல்லாம் புரியாது. புரிந்தால் பரிதாபப் படுவாள் என்று தெரியும். “ரவி, நீங்கள் இன்று பீச்சுக்கு வந்ததையிட்டு நான் மிகவும் சந்தோசமடைகிறேன்.” மெலனி ரவியை நேரே பார்த்துச் சொன்னாள். 

அவள் குரலில் சந்தோசம். கண்களில் அதன் பிரதிபலிப்பு. மனித ஆத்மாவின் ஜன்னல்கள் கண்கள். அவள் நேர்மை யானவள், உண்மை யைப் பேசுகிறாள் என்று தெரிந்தது. 

“உங்கள் சந்தோசத்திற்கு காரணமாக இருப்பதையிட்டு மிகவும் பெருமையடைகிறேன்.” ரவிக்கு இதைவிட வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அத்தனை நெருக்கமுமில்லை அவர்கள். 

“மனிதர்களின் சந்திப்பு ஏதோ காரணத்திற்காக ஏற்படுகிறது என்று நினைக்கிறீர்களா?” மெலனி அவன் கண்களுக்குள் ஏதோ தேடுவது போலக் கேட்டாள். 

“புரியவில்லை” அவனுக்குப் புரிந்தது, அவள் என்ன சொல்கிறாள் என்று. ஆனால் சரியாகப் புரியவில்லை ஏன் சொல்கிறாள் என்று. 

“உங்களைச் சந்தித்த நாட்களிலிருந்து இதுவரைக்கும் எங்கள் உறவு உத்தியோகப் பூர்வமாக இருந்தது.”மெலனியின் குரலில் ஏதோ ஒன்றைத் தொடரப் போகிறாள் என்பதன் பொருள் தெரிந்தது. 

“நான் உங்கள் டிப்பார்ட்மென்டைப் பிரிந்து போகும்வரை அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” அடக்கத் துடன் சொன்னான் அவன். அவள் மெளனம் சாதித்தாள். சொல்ல வந்ததை அடக்கிக் கொண்டாள். பின்னர் காரை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு அவனை நேரே பார்த்தாள். அவள் கண்களில் நீல நிறம் பனித்திருந்தது. சூரிய வெளிச்சத்தில் பனித்த கண்ணீர் முத்தாய்ப் பளபளத்தது. அதைச் சட்டென்று துடைத்துக் கொண்டாள். “ரவி, டிப்பார்ட்மென்டை விட்டு நீங்கள் போக முதல், நான் விலகிப் போகிறேன்”, மெலனியின் குரல் அடைத்தது. 


“அதுசரி உங்கள் அமெரிக்கக் கொன்பிரன்ஸ் பற்றிச் சொல்ல வில்லையே” ராமநாதனிடமிருந்து எல்லாவிடயங்களையும் எதிர்பார்த்துத் தோல்வியடைந்த அனுபவம் திலகவதிக்கு. 

மதியச் சாப்பாட்டைப் பரிமாறியபடி திலகவதிகேட்டாள். டாக்டர் ராமநாதன் சேர்ஜன்ஸ் கொன்பரன்சிற்காக அமெரிக்கா போகவேண்டும். அதுபற்றி எப்போதோ அவளிடம் சொல்லியிருந்தார். மேலெழுந்த வாரியாகச் சொல்லியிருந்தார். 

“அதைப்பற்றி ஏன் இப்போது கேட்கிறாய்” திலகவதிக்கு அவருடைய உத்தியோக ரீதியான விடயங்கள் பற்றிப் பேசுவதில் அதிகம் அக்கறையில்லை. 

கொழும்பில் ஒரு பெரிய தனவந்தரின் மகளாயிருந்தவள்.A லெவல் முடித்து தையற்கலை, சமையல் கலை என்று படித்துக் கொண்டிருந்த போது இருபது வயதிலேயே திருமணம் நிச்சயமாகி விட்டது. அப்போது டாக்டர் ராமநாதன் மேற்படிப்புக்கு லண்டனுக்கு வர ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். மிகவும் கெட்டிக்கார டாக்டர் என்று பெயர் எடுத்தவர். ஸ்காலர்ஷிப் கிடைத்திருந்தது. கல்யாணம் பேசப்பட்டது. கல்யாணமும் நடந்தது. 

68 ம் ஆண்டு அகில உலகெங்கும் மாணவர் புரட்சி வெடித்துக் கொண்டிருந்த காலம். பாரிஸ் மாணவர் கிளர்ச்சிச் சரித்திரத்துடன் இணைந்தபோது டாக்டர் ராமநாதன் லண்டனில் சேர்ஜரி படித்துக் கொண்டிருந்தார். 

ஸ்காலர்ஷிப் கிடைத்ததும் கல்யாணம் நடந்தும் திலகவதி சுகவீன மாக இருந்ததால் லண்டனுக்கு வரத் தாமதமாகி விட்டது. 

அவர்லண்டனுக்குத் தனியாக வந்தார். இளம் மனைவியைப் பிரிந்த துன்பம் வாட்டியது. சீக்கிரமாகப் படித்து முடித்துவிட்டு கொழும்புக்கு ஓடக் காத்திருந்தார். 

அப்போது தன்னைப் பற்றியும் தன் படிப்பு பற்றியும் திலகவதிக்கு எழுதுவார். அவளுக்கு அவரின் மேற்படிப்பு பற்றிய அக்கறை ஒன்றும் இல்லை என்பது புரியத் தொடங்கியது. 

அன்பான மனைவி என்பவள், அறிவான மனைவி என்று எதிர் பார்க்கத் தேவையில்லை என்று உணர்ந்ததும் அவர் தன் உத்தியோக விடயம் பற்றி அவளிடம் பேசுவதில்லை. 

தற்செயலாக ஏதும் சொல்லிவிட்டால் “சும்மா இருங்கோ, நான் வெஜிடேரியன். குடலை வெட்டுவது பற்றியும் இரத்தம் பாய்ச்சுவது பற்றியும் பேசவேண்டாம்”. அவர் சத்திர சிகிச்சை செய்பவர். தசையையும் எலும்புகளையும் வெட்டுபவர். அவர் வாயடைத்துப் போய்விடுவார். இப்போது அவள் அவருடைய அமெரிக்க விடயம் பற்றிப் பேசுகிறாள். அதற்குப் பின்னால் அவள் போடும் திட்டங்களைப் பற்றி அவர் அறியாதவர் அல்ல. 

அவருக்கு அமெரிக்கா போக விருப்பமில்லை என்று சொன்னால் அவள் விடப் போவதில்லை. 

கடந்த தடவை அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது எயார் போர்ட்டில் அவரை அந்த எயார்போர்ட் அதிகாரிகள் நடத்திய விதம் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது. 

ராமநாதன் என்ற பெயரை எத்தனையோ தரம் உச்சரித்துப் பார்த்தார்கள். ரஹ்மான் என்றும் அவர் ஒருமுஸ்லீம் என்றும் அல்லது பின்லேடனின் சினேகிதன் என்றும் நினைத்துக் கொண்டவர்கள்போல் அவரை நடத்தினார்கள். அவருடைய சப்பாத்தைக் கழட்டச் சொன் னார்கள். இடுப்பில் போட்டிருந்த பெல்ட்டைக் கழட்டச் சொன்னார்கள். இவர் வெடிகுண்டு வைத்திருக்கிறாரா என்று சந்தேகித்து ஒவ்வொரு அயிட்டங்களையும் அலசினார்கள். 

அவருக்குப் பின்னால் வந்த இந்தியர் ஒரு சீக்கியன். அவரைப் படுத்திய பாடு மிக மிகப் பரிதாபமாக இருந்தது. தலைப்பாகையையும் அவரையும் பார்த்த விதமும் நடத்திய விதமும் இந்த அமெரிக்கர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என்று யோசிக்கத் தூண்டியது. 

பயந்தவன் கண்களுக்குள் பார்த்ததெல்லாம் பேயா? பழைய அனுபவங்கள் ஞாபகம் வந்ததும் அவர் மனம் குறுகுறுத்தது. ராமநாத னுக்கு அமெரிக்கா செல்ல விருப்பமில்லை. திலகவதிக்கு அமெரிக்கரின் நடத்தைகளையோ செப்டம்பர் பதினொராம் தேதி இரண்டாயிரத்து ஓராம் ஆண்டுக்குப் பின் முஸ்லீம்களுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் அதர்மங்களையோ அவள் அரசியலாகப் பார்க்க மாட்டாள். அப்பாவி மக்களை ஆப்கானிஸ் தானில் அமெரிக்கா கொன்று குவிப்பதைப் பார்த்துவிட்டு, ‘பொங்கும் பால் வழியும்; என்பது பழமொழி’ என்பாள். 

அநியாயமாக அப்பாவி அமெரிக்க மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டது மிக மிகக் கொடுமை. மிகமிகக் கொடுமை. 

அதற்குப் பதிலாக மிக மிக ஏழைகளான ஆப்கானிஸ்தான் மக்கள் அமெரிக்கா குண்டு வீச்சுக்களால் அழித்தபோது திலகவதி அழுது விட்டாள்.சாபம் போட்டாள். 

இலங்கையில் இனக் கொடுமையின்போது அவர்கள் ஏறிவந்த வாகனத்திற்குப் பின்னால் வந்த வாகனத்தை வளைத்துப் பிடித்த சிங்களக் காடையர்கள் அந்த வாகனத்திலிருந்த அத்தனைபேரையும் உயிரோடு கொழுத்தியதை நேரிற் பார்த்தவள். 

83 ம் ஆண்டுக் கலவரத்தில் கொழும்பு பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தப்பிப் பிழைத்த தமிழ்க் குடும்பங்களில் அவர்களுடையதும் ஒன்று. 

அவளுக்கு கொலை, கொள்ளை, பொய் என்பன பிடிக்காது. மத்தியவர்க்கத்து இறுமாப்பு இருக்கிறது. ஆனால் அவள் இதயம் மிகவும் இளகியது. வேகமாகப் பரவி வரும் அமெரிக்க ஆதிக்க வெறியைப் புரியாதவள் அவள். உலகத்தை மிக மிகப் பயங்கரமாகப் பார்த்துப் பயப்படுவாள். 

தன் ‘உலகத்தைத் தன் குடும்ப உறவுகளுக்குள் ஒடுக்கிக் கொண்டவள். அவள் ‘உலகம்’ இப்போது அவளின் ஒரே ஒரு மகள் சித்திரா. அவளுக்குக் கல்யாணம் நடக்காதது திலகவதிக்குப் பெரிய யோசனை. 

அவளின் தங்கை ஒருத்தி அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் மூலம் சித்திராவின் கல்யாணத்தை ஒழுங்கு பண்ண யோசிக்கிறாள். 

சாப்பாட்டைத் தட்டில் போட்டபடி எத்தனையோ விடயங் களையும் அவர் தலையில் போடுவாள். ஏன் மகளுக்கு இன்னும் கல்யாணம் நடக்கவில்லை என்று தன்னை மற்றவர்கள் கேட்பதாகச் சொல்லி முணுமுணுப்பாள். 

பக்கத்து வீட்டுக் கரலைனுக்குத் தன் மகளின் வயது. கரலைன் கல்யாணம் செய்து ஐந்து வருடங்களாகின்றன எனத் திலகவதி கணவனுக்குச் சொன்னாள். 

“கரலைன் இங்கிலிஸ்ப் பெண். சித்திரா தமிழ்ப் பெண். சித்திரா காலைனைப் போல் வெள்ளைக்காரனைப் பார்ப்பதை அனுமதிப் பாயா.”திலகவதி அவர் கேட்ட கேள்வியால் ஸ்தம்பித்து விட்டாள். 


“ஏன்டிப்பார்ட்மென்டை விட்டுப் போகிறாய்” 

ரவி அப்படிக் கேட்டதும் அவள் கலங்கிய கண்களையும், சிவந்த முகத்தையும் அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள். 

“சொந்தப் பிரச்சினைகள் காரணம்” என்று சொன்னாள். 

ஆங்கிலேயர் சொந்த விடயங்கள் பற்றிப் பேசமாட்டார்கள் என்று தெரியும். அதுபற்றிக் கேட்க வேண்டும் என்று அவன்நினைக்கவில்லை. ஆனால் அவள் பிரிந்து போவது அதிர்ச்சியாக இருந்தது. இன்று அவள் அவனைப் பீச்சுக்குக் கூட்டிக்கொண்டு வந்ததையிட்டு நன்றிக்கடன் பட்டிருந்தான். 

சொந்தப் பிரச்சினைகள் காரணமாக டிப்பார்ட்மென்டை விட்டுப் போகிறேன் என்கிறாள். அதற்கும் இன்று என்னை பீச்சுக்குக் கூட்டிக் கொண்டு வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். 

டிப்பார்ட்மெண்டில் இவளின் இந்த முடிவு தெரிந்திருந்தால் அது பலராலும் பேசப்பட்டிருக்கும். நர்ஸ் மார்கரெட் எப்போதும் கலகலப்பாக எல்லோருடனும் பேசுவாள். ரகசியம் என்ற வார்த்தையின் அர்த்தம் மார்க்கரெட்டுக்குப் புரியாது. 

முக்கியமாக ரவியிடம் மிகவும் அன்பாக இருப்பாள்.நடுத்தர வயதுள்ள மனுஷி. மேற்கிந்திய நாடான ஜமேய்க்காவைச் சேர்ந்தவள். தன் குடும்ப விடயங்களைச் சிலவேளை ரவிக்குச் சொல்வாள். 

ரவியின் வயதில் இரு மகன்கள் இருப்பதாகச் சொன்னாள். மெலனி டிப்பார்ட்மென்டைப் பிரிந்து போவது மார்க்ரெட்டுக்குத் தெரிந்திருந்தால் இவனுக்குச் சொல்லாமல் விட்டிருக்க மாட்டாள். மெலனி இந்த விட யத்தை இதுவரைக்கும் யாரிடமும் சொல்லாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். 

“உனது பிரிவு டிப்பார்ட்மென்டில் பலபேரை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தும்’, சம்பிரதாயத்திற்குச் சொல்வதுபோல் சொன்னாலும் சட் டென்று அவள் தனது பிரிவைப் பற்றிச் சொன்னது அவனுக்கு அதிர்ச்சி யாயிருந்ததை அப்பட்டமாகக் காட்டிக் கொள்ளத் தயங்கினான். 

“ஒரு சிலருக்குச் சந்தோசத்தைத் தரலாம்”. அவள் இதழ்களில் ஒரு இளக்காரமான சிரிப்பு நெளிந்தது. 

“அப்படிச் சொல்லாதே… எனக்குத் தெரிந்தவரையில் அங்குள்ள எல்லோரும் உனது சேவையைப் பாராட்டுபவர்களாக இருக்கிறார்கள். உன்னில் அன்புள்ளவர்களாக இருக்கிறார்கள். உனது திறமையை மதிப்பவர்களாக இருக்கிறார்கள்…. ” 

“போதும் ரவி, உங்கள் புகழ் மாலைக்கு நன்றி. எனது மன உணர்வை மதிப்பவர்கள் யாரும் அந்த டிப்பார்ட்மெண்டில் இருப்ப தாகத் தெரியவில்லை.” 

இது இன்னுமொரு அதிர்ச்சி. 

இவளுக்குள் ஏதோ புகைந்து கொண்டிருக்கிறது என்று சாடை யாகப் புரியத் தொடங்கியது. 

தன்னை ஏனோதானோவென்று இன்றைக்குச் சனிக்கிழமை தானே பீச்சுக்கு ஒருதரம் போய் வருவோம் என்ற தோரணையில் அவள் அழைத்து வரவுமில்லை என்று தெரிந்தது. 

கேட்கலாமா? இவளை அப்படி நெருக்கமாகத் தெரியாதே! 

“நீங்கள் ஏன் சைக்ரியாட்ரிஸ்டாக விரும்பினீர்கள்”

மெலனி பேச்சை மாற்றுவதற்காகக் கேட்கிறாளா அல்லது உண்மை யில் இவனைப் பற்றித் தெரியத்தான் கேட்கிறாளா என்று அவனுக்குப் புரியவில்லை. 

என்ன பதில் சொல்வது? இலங்கையில் நடக்கும் அரசியல் கொடு மைகளால் எத்தனையோ மனிதர் மனநோய் பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவப் போகிறேன் என்று சொல்லலாமா? 

“நீ ஏன் சைக்ரியாட்ரிஸ்டாக விரும்பினாய்?’ ரவி திருப்பிக் கேட்டான். 

அப்போது அவர்கள் லண்டன் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பிரைட்டன் பீச்சில் அவள் குழந்தை போல் குதூகலித்தது ஒரு சில மணித்தி யாலங்களுக்கு முன் நடந்த விடயம் என்றாலும், அந்த மெலனியும் இப்போது காணும், இப்போது பேசிக் கொண்டிருக்கும் மெலனியும் வித்தியாசமான மனிதர்களாக இருந்தார்கள். மத்தியானச் சாப்பாட்டு நேரத்திற்கும் தற்போதைக்கும் உள்ள இடைவெளி நேரத்தில் இவள் எத்தனை விடயங்களைப் பேசிவிட்டாள்? ஒரு பெண்ணுக்குள் எத்தனை பெண்கள் மறைந்திருக்கிறார்கள். 

அவள் காரை நிறுத்தினாள். அந்த சுற்றாடல் பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகளால் நிரம்பியிருந்தது. நிர்மலமான நீலவானம். மெல்லிய தென்றல் காற்று,. தெவிட்டாத இன்பச் சூழல். ரவி ஒரு கணம் கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலுள்ள கிராமப் பகுதிகளை நினைத்துக் கொண்டான். 

நீண்ட பச்சை வயல் வெளிகள், அவை நடுவில் நிழல் தரும் ஓரிரு மரங்கள், வயலை அடுத்தோடும் அருவிப் பெருக்குகள், அந்த அருவியில் மீன் பிடிக்கும் அப்பாவிக் கிராம மக்கள்…. 

இலங்கைக்கே பசி தீர்க்கப் போதுமான நில வயல்கள்.இப்போது போராட்ட சூழ்நிலையில் சூனியமாய்ப் போய் விட்டதே. “இந்த இடம் எனது ஊரை ஞாபகப்படுத்தப் பண்ணிவிட்டது”. அவன் இன்னும் அந்த எழில் கொஞ்சும் இயற்கைத்தாயின் மடியில் தவழும் கோதுமை, சோழம் போன்ற வயல் வெளிகளை விழித்துப் பார்த்துச் சொன்னான். 

“பிடித்த மனிதர்களை, பழகிய இடங்களை, பார்த்த உறவுகளை, பாசமுள்ள சொந்தங்களைப் பிரிந்து நாடோடியாய்த் திரிவது ரொம்பவும் மனவேதனையான விடயமென நினைக்கிறேன்.” ரவியின் கண்கள் இன்னும் அந்தப் பச்சை வெளியில் பாய்ந்து தவழ்ந்து கொண்டிருந்தது. 

“மக்கள் அனாதைகள் ஆவது அரசியல் ரீதியாக மட்டுமல்ல ஆதர வான குடும்ப உறவுக்குள்ளேயே சில மனிதர்கள் அனாதையாக இருக் கிறார்கள் ‘மெலனிமெல்லிய குரலில் சொன்னாள். 

சட்டென்று அவனுக்கு அவன் தமக்கை சுமதியின் ஞாபகம் வந்தது. சுமதி இப்படியான வார்த்தைகளை அடிக்கடி சொல்வாள். “எனக்கேன் இந்த வாழ்க்கை? அனாதை மாதிரி அழுகிறேனே.” 

ரவி ஒரு கண இடைவெளியில் உணர்ச்சி வசப்பட்டு விட்டான். சுமதியின் வாழ்க்கை போல் இவளின் வாழ்க்கையிலும் ஏதோ பிரச்சினையா? சுமதிக்கு அவள் கணவன் செந்தில் பிரச்சினை கொடுப்பது போல் மெலனிக்கும் யாரோ துன்பம் தருகிறார்களா? காலையிலிருந்து ‘ஒப்’ பண்ணி வைத்திருந்த மோபைல் டெலிபோனில் எத்தனை மெஸேஜ்ஜஸ் வைத்திருப்பாள் சுமதி? தமக்கையைப் பற்றி யோசிப் பதைத் தவிர்க்க “ஏன் சைக்ரியாட்ரிஸ்டாக வந்தீர்கள் என்ற கேள்விக்கு இன்னும் மறுமொழியில்லையே” என்று மெலனியிடம் கேட்டான். 

“என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என்னை அப்படி மாற்றிவிட்டது” மெலனி ஆறுதலாகச் சொன்னாள். 

மெலனியிருக்கும் நிலையில் அவளிடம் எதைக் கேட்டாலும் துயரான பதில்கள்தான் வரும் என்று தெரிந்தது. வாழ்க்கையின் மாற்ற மென்று அவள் குறிப்பிட்டது மிகவும் துயரமானதாக இருக்கலாம். பாதையோரத்தில் காரை நிறுத்திவிட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். 

எப்போதாவது இருந்துவிட்டு இவர்களைத் தாண்டி ஓடும் கார்களில் உள்ளவர்களில் ஒரு சிலர் இவர்களைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுச் சென்றனர். 

மெலனியிடம் மேலதிகமாக அவன் கேள்வி கேட்க விரும்பவில்லை. காலையில் ஒருவித இன்ப நெருடலுடன் தொடங்கிய பிரயாணம் இப்போது நெஞ்சை நெருடும் துயரப் பிரயாணமாகத் திசை திரும்பும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. 

‘மன்னித்து விடுங்கள். இன்றைக்குச் சந்தோசமாகப் பொழுதைக் கழிக்க வேண்டுமென்றிருந்தேன். எதிர்பாராத விதமாகச் சில விடயங்களைச் சொல்ல வேண்டியிருந்தது. மன்னித்துக் கொள்ளுங்கள்.” மெலனி திருப்பித் திருப்பி மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். 

நீலக் கடலலையில் கால் நனைத்துக் குதித்துச் சிரித்த மெலனிக்கும் இப்போது வயற்கரை ஓரத்தில் விரக்திக் குரலில் பேசும் மெலனிக்கும் எவ்வளவோ வித்தியாசம். 

எத்தனையோ விதத்தில் இவள் ரவியின் இரு சகோதரிகளையும் நினைவுபடுத்தினாள். 

திடமான மனமும், உறுதியான இலட்சியமும் கொண்ட சங்கீதா, அரசியல், பொருளாதார, குடும்ப நிலைகளுக்காக பொருந்தாத திருமணம் செய்த சுமதி ஆகிய இருவரையும் மெலனி ஞாபகப்படுத்தினாள். 


பின்னேரம் மிகவும் மனோரம்மியமான சூழலில் தொடர்ந்தது. ஜேனுடன் பேசியபின் சித்திரா லண்டன் புறப்பட்டாள். சித்திரா கேம்பிரிட்ஜிலிருந்து தன் காரில் லண்டன் போய்க் கொண்டிருந்தாள். சுமதி இரண்டு தடவை போன் பண்ணிவிட்டாள். சுமதி மதியம் போன் பண்ணியபோது தன் கணவரின் கொடுமையைப் பற்றிச் சொல்லி யழுதாள். தன் குடும்பப் பிரச்சினைகளைச் சொல்லியழ யாரும் தேவை யானால் சித்திராவுக்குப் போன் பண்ணுவாள். இப்போது போன் பண்ணியபோது தாயுடன் இலங்கைக்குப் போன் பண்ணியதாகவும் தாய்க்கு உதவியாயிருந்த அவளின் மருமகப் பையனை ‘இயக்கத்தினர்’ வந்து போராட்டத்திற்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டதாகவும், அதனால் தாய் மிகவும் துயரத்தில் இருப்பதாகவும் சுமதி சொன்னாள். 

தன் துயர் சொல்ல தாய்க்குப் போன் பண்ண தாயோ தன் துயர் சொன்னது சுமதியைத் தாக்கியிருக்க வேண்டும். “எனக்கு ஏன் ஒன்றுக்குமேல் ஒன்றாகத் துக்கம் வருகிறது? இவன், ரவி எங்கே போய் விட்டான்? காலையிலிருந்து போன் பண்ணிக் கொண்டிருக்கிறேன்” சுமதி வெடித்தாள். தம்பி ரவி லண்டனில் தங்கும் காலத்தில் தன்னுடன் நிறைய நேரத்தைச் செலவழிக்கவில்லை என்று சுமதி குறைப்படுவாள். “இன்றைக்குச் சனிக்கிழமைதானே, ஹாஸ்பிட்டலில் கிளினிக் ஒன்று மிருந்திருக்காது சினேகிதர்களுடன் வெளியே போயிருப்பான். 

சுமதிக்கு ஆறுதல் சொல்ல ஏதோ சொல்லி வைத்தாள் சித்திரா. 

“ஆமாம், நேற்று நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து வென்றதற்காகப் பெரிய பார்ட்டி வைத்து நித்திரையைக் குழப்புகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து ரவியும் எங்கேயோ போய் விட்டானாக்கும்.” ரவி தன்னிடம் வராத கோபத்தில் சுமதி பொரிந்து தள்ளினாள். 

“ரவிக்கு கிரிக்கட்தானே பிடிக்கும்.” சித்திரா கேட்டாள். 

“என்ன சித்திரா, ரவிக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று தெரிந்து வைத்திருக்கிறாய்.” சுமதியின் குரலில் அவளின் துக்கத்தை மறந்த கிண்டல். சுமதி தன் துன்பம் மறந்து சொன்ன விடயம் சித்திராவுக்குத் தெரியாமலில்லை. 

அதன் உள்ளர்த்தம் சித்திராவுக்கு விளங்கியது. சித்திராவும் ரவியும் உறவு முறையினர். திருமணம் செய்து கொள்வார்கள் என்று உறவினர் களால் எதிர்பார்க்கப் படுபவர்கள். 

சித்திராவுக்கு மேலதிகமாக அந்தப் பேச்சைத் தொடர விருப்ப மில்லை.சுமதியும் குடும்பத்தில் உள்ள பெரும்பாலோர் போல உறவு களை ஒன்றுக்குள் ஒன்று புதைத்துக் கொள்வதால் எதிர்காலத்தில் அந்த உறவின் தொடர்பை நீடிக்கலாம் என்பதில் நம்பிக்கையுள்ளவள். அவளிடம் இவைபற்றித்தர்க்கம் செய்ய சித்திராவுக்குத் தேவையில்லை. சில மனிதர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.சுமதியிடமிருந்து அந்தப் பேச்சைத் திருப்பி னாள். இலங்கையில் அவர்களின் ஊரில் சுமதியின் தாய் பற்றிய அகவிசாரணை நடந்தது. 

“என்னவென்று ஊரில் நிம்மதியாக இருக்க முடியும்? அமைதிப் பேச்சு,தற்காலிக சமாதானம் என்றெல்லாம் ஒரு பக்கமிருக்க அடுத்த பக்கம் போருக்கு ஆள் சேர்ப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கு.” வெளிநாட்டுக்குப் போக வசதியற்ற ஏழைகளை இயக்கம் இழுத்துக் கொண்டு போகிறது. மட்டக்களப்பு ஏழைகள் செய்த பாவம் யாரும் செய்திருக்க மாட்டார்கள்” 

சுமதி பெருமூச்சு விட்டாள். 

“அம்மா ஊரில் தனியாக இருக்கிறாள். நீங்கள் இருவரும் இங்கேயிருக்கிறீர்கள். அம்மாவையும் கூப்பிட்டால் என்ன?” மாமியி லுள்ள அக்கறையில் சித்திரா விசாரித்தாள். 

”நான் மாரடிப்பதை அம்மா நேரடியாகப் பார்க்க வேணுமா?’ சுமதியின் குரல் அடைத்தது. ஒருசில வினாடிகளில் சுமதி திரும்பவும் சோக நிலைக்குத் தள்ளப்பட்டாள். 

“அழாதே சுமதி’ வார்த்தைகளால் தேற்றுவதைத்தவிர அவளால் என்ன செய்ய முடியும்?” 

“கொதிக்கிற உலையிலிருந்து தப்ப, எரியுற நெருப்பில விழுந்த கதைதான் பெரும்பாலான தமிழரின் கதை. வெளிநாட்டுக்கு ஓடிவந்து முழுமையான சந்தோசத்தைக் கண்டவர்கள் யார்? எத்தனைபேர் நிம்மதியாக இருக்கிறோம்? அகதி என்கிற பெயரில் வந்தவர்கள், காசு சேர்க்க, பட்டம், பதவி பெற, மற்றவர்களைப் புடுங்கிப் பிழைக்க என்று எத்தனை ரகமான மனிதர்கள், தமிழர்கள் பெயரைச் சொல்லிப் பிழைப் பவர்கள் எத்தனை பேர்?”

“சுமதி இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குப் பதில் தெரியாது. ஆராய்ச்சிகளினாலும் அறிக்கைகளினாலும் விபரங்களைப் பார்த்தால் இங்கு வந்திருக்கும் ஆசிய நாட்டு மக்கள் படிப்பில் முன் நிற்கிறார்கள். பணம் சேர்ப்பதில் முன் நிற்கிறார்கள்” சித்திரா விளங்கப்படுத்தினாள். 

சுமதிக்குத்தன்னுடைய சூழ்நிலைக்கு அப்பால் உலகத்தைப் பார்க்க முடியாமலிருந்தது. 

பின்னேர சூழ்நிலையில் கேம்பிரிட்ஜிலிருந்து லண்டனுக்குப் போய்க் கொண்டிருப்பது மனத்திற்கு இதமான ஒரு பிரயாணம்தான். ஆனால் அவள் மனம் இதமானதாக இல்லை. இந்த வாரக் கடைசியில் தாய் தகப்பனைக்கூடப் பார்க்கப் போகாமல் வேலைக் கஷ்டங்களில் மூழ்கியிருந்தவளுக்கு சுமதியின் நிலை பரிதாபத்தையுண்டாக்கியது. 


அத்துடன் ஜேனின் அதிர்ச்சியான எதிர்பார்ப்பு அவளை மிகவும் தர்ம சங்கடமான நிலையில் தள்ளி விட்டிருக்கிறது என்று தெரிந்தது. அசாதாரணமான அதிர்ச்சியுடன் ஜேனைக்கண்டதும் சித்திராவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “கர்ப்பம் என்று தெரிந்ததும் ஏன் இவ்வளவு அதிர்ச்சி” 

முகம் வெளுத்துப் போய் நிற்கும் ஜேனைப் பார்த்து சித்திரா ஒருசில மணித்தியாலங்களுக்கு முன் கேட்ட கேள்வி ஞாபகம் வருகிறது. 

ஜேன் உயர்ந்து வளர்ந்த, மெல்லிய உடலுடைய இருபத்தாறு வயதுள்ள ஆங்கிலப் பெண். சோழம் பூவின் நிறத்தில் சுருளான தலைம யிரைக் கட்டையாய் வெட்டியிருப்பாள். அளவிற்கு மீறி எதையும் ‘மேக்அப்’ என்ற பெயரில் பூசித் தொலைக்க மாட்டாள். டேவிட் என்ற அவளுடைய சினேகி தனுடன் வாழ்கிறாள். இப்போது வயிற்றில் கர்ப்பம்! ஏன் அலறிப் புடைக்கிறாள். 

ஜேனின் பார்வை வெறித்திருந்தது. படபடப்பு வார்த்தைகளில் தெரிந்தது. நீலக் கண்கள் கலங்கியிருந்தன. தலை வாரப்படாமல் கலைந் திருந்தது.”நான் இதை எதிர்பார்க்கவில்லை.” ஜேன்முணுமுணுத்தாள். “எதை எதிர்பார்க்கவில்லை?” சித்திராவின்மனத்தில் சாடையான குழப்பம். 

”கர்ப்பத்தைத்தான். எனக்குப் பிள்ளை வரும் என்று எதிர் பார்க்க வில்லை.” சித்திராவுக்குச் சாடையாய்க் கோபம் வந்தது. 

“ஜேன், நீ பெண், டேவிட் ஆண். இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்துகிறீர்கள். ஆணும் பெண்ணும் ஒன்றானால் இன்னொரு உயிர் பிறக்கச் சந்தர்ப்பம் இருக்கும் என்று முட்டாளுக்குக் கூடத் தெரியுமே.” சித்திராவின் கிண்டலை ஜேன் புரிந்து கொண்டாள். 

“ஆமா,ஆனால் டேவிட் எப்போதும் காண்டோம் பாவிப்பான்…. என்ன இழவு நடந்ததோ” ஜேன் இப்போது எரிச்சலை வெளிப்படை யாகக் காட்டினாள். தற்செயலாக, தவறிப்போய், திட்டம் போடாமல் கர்ப்பமாகிவிட்ட குற்ற உணர்வு குரலில் தொனித்தது. 

“குடும்பக் கட்டுப்பாடு சரியாக வராததால் வந்த விபத்தில் உண் டாகிய கர்ப்பமா?” சித்திராவுக்கு இப்போது விஷயம் தெரியத் தொடங்கியிருந்தது.நாகரீகமடைந்த நாடுகளில் இந்த விடயம் எவ்வளவு சாதாரணமாகப் பேசப்படுகிறது? இலங்கையில் இப்படிப் பேசுவார் களா? “டேவிட்டிடம் சொல்வதுதானே,” சித்திரா ஜேனுக்குக் காப்பி கொடுத்தபடி சொன்னாள். டேவிட் மிகவும் பரந்த மனம் உள்ளவன். பிரச்சினைகளை முகம் கொடுக்கத் தயங்காதவன் என்பது சித்திராவின் கணிப்பு. “டேவிட்டுக்குக் குழந்தைகள் பிடிக்காது. அதாவது நாங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா என்று கேள்வி கேட்பான்.” 

“என்ன?” சித்திராவுக்கு இன்னுமொரு அதிர்ச்சி. 

“ஆமாம், உலகமெல்லாம் பட்டினி, பசி, சூழ்நிலை அசுத்தம், யுத்தங்கள் என்று அல்லோல கல்லோலப்படும்போது இன்னொரு உயிரை இந்த உலகத்திற்குள் கொண்டுவர வேண்டுமா என்று விவாதிப் பான் டேவிட். அவனிடம் போய் இதோ பார் எங்களுக்கு ஒரு குழந்தை கிடைத்துவிட்டது என்று சொன்னால் சந்தோஷத்தில் எகிறிக் குதிப்பான் என்று தெரியவில்லை. 

“தத்துவங்களும் இலட்சியங்களும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் சரி. வாழ்க்கையின் நடைமுறைக்கு சரிவருமா?” சித்திராஜேனைத் தேற்று வதற்காக இதைச் சொன்னாள். 

“அதைப் பரீட்சித்துப் பார்க்க எனக்கு விருப்பமில்லை.ஆப்பிரிக் காவில் ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகள் பசியாலும் பட்டினி யாலும் வாடுவதை நேரிற் கண்டவள் நான். உலகத்தில் 60 வீதமான குழந்தைகள் நல்ல தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். இதையெல்லாம் நேரடியிற் பார்த்த நான், டேவிட் எங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று சொன்னபோது அவன் சொல்வது சரி என்று ஒப்புக் கொண்டேன்.” 

“இப்போது நீ கர்ப்பவதி என்று சொன்னால் என்ன சொல்வான்” “குழந்தையை அழித்துவிடு என்று டேவிட் சொல்லலாம்” சித்திராசிலையாகிப் போனாள். டேவிட் அப்படிச் சொல்வானா? 

அத்தியாயம் – 3 

மாலை ஏழுமணியாயிருந்தது. 

லண்டனில் இன்னும் நேற்றைய கால்பந்தாட்டத்தின் பிரதிபலிப்புத் தெரிந்தது.போனவாரம் எலிஸபெத் மகாராணியாரின் ஐம்பதாவதாண்டு முடிசூட்டு விழாவைக் கொண்டாட ஒரு கோடி மக்கள் பக்கிங்காம் மாளிகைச் சுற்றாடலை நிறைத்தார்கள். பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மகாராணியார், 50 வது முடிசூட்டு விழாவை மகத்தாகக் கொண்டாடி னார்கள். இந்த வாரம் உலகக் காற்பந்தாட்டப் போட்டியின் குதூகலத்தில் லண்டன், மக்கள் ஆரவாரத்திலும் அவர்கள் சாப்பிட்டு எறியும் எச்சில் களிலும் நிறைந்திருந்தது. இந்தக் குப்பைகளால் எலிகள் குவிகின்றன என்று பத்திரிகைகள் ஓலமிடுகின்றன. சித்திரா நினைத்துக் கொண்டாள். 

சுமதி இருக்குமிடத்தின்பெயர் ஆர்ஸனல். லண்டன்நடுமையத்தின் விழிம்பிலிருக்கிறது. ஆர்ஸனல் காற்பந்தாட்டக் கிளப் உலகப் பிரசித்தி பெற்றது.எப்போதும் கலகலப்பாக இருக்குமிடம் ஆர்ஸனல். 

சுமதியின் வீட்டுக்கு முன் காரை நிறுத்தியபோது அவளுக்குப் பின்னால் இன்னொரு கார் வந்து நிற்பது தெரிந்தது. திரும்பிப் பார்த்தாள். ஒரு ஆங்கிலப் பெண் காரோட்டிக் கொண்டிருந்தாள். அதிலிருந்து இறங்கியவன்ரவி, 

“காலையிலிருந்து மோபைல் போனில் பேசிக் கொண்டிருக் கிறேன். ரவியைக் காணவில்லை.எங்கே மேயப் போய் விட்டான்” என்று சுமதி எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது. இப்போது சுமதி வீட்டுக்கு சோடியாக வந்திருக்கிறான். 

“மேய்ச்சலா? சித்திரா சிரித்துக் கொண்டாள். 

‘நல்ல தமிழ் வார்த்தைதான். அழகான சோடியுடன் சேர்ந்த மேய்ச்சல்’, சித்திராதனக்குள் சிரித்துக் கொண்டாள். 

கார்ச்சத்தம் கேட்டு வெளியே வந்த சுமதி இரண்டு கார்களிலிருந்து இறங்கிவரும் ரவியையும் சித்திராவையும் மாறி மாறிப் பார்த்தாள். மெலனி காரை விட்டு இறங்கவில்லை. 

“கம் இன் மெலனி, மீட் மை ஸிஸ்டர்” ரவி மெலனியிடம் சொன்னான். காலையில் பீச்சுக்குப் போகும்போது அவள் இருந்த ‘மூட்’ வேறு. இப்போது இது புதிய இடம் என்றபடியால் மெலனி தயக்கத்துடன் இறங்கி வந்தாள். சுமதியின் பார்வை மெலனியை அளவிட்டது. 

“மெலனி, இது என் தமக்கை சுமதி. இது எனது மைத்துனிசித்திரா.” ரவி அறிமுகம் செய்து வைத்தான். 

“சுமதி, மெலனி என்னுடன் வேலை செய்யும் எனது மேலதிகாரி. எங்கள் டிப்பார்ட்மென்டிலிருந்து விலகிப் போகிறாள். லன்ச்சுக்குப் போய் வந்தோம். அதாவது பிரியாவிடை விருந்து” 

பாதி உண்மை, பாதி பொய் என்று தெரிந்து கொண்டும் ரவி தன் தமக்கைக்கு மெலனி பற்றிச் சொன்னான். 

அதைத் தவிர வேறு எதுவும் சொல்லவும் தெரியவில்லை. சுமதி கழுத்தறுக்கும் கேள்விகளெல்லாம் கேட்பாள். சுமதி அவன் தமக்கை. அவனிடம் கேள்வி கேட்க அவளுக்கு உரிமையுண்டு. கேட்கும் கேள்விகள் பெரும்பாலும் உருப்படியாக இருப்பதில்லை. 

சுமதியின் முகத்தில் செயற்கையான மலர்ச்சி, வந்தவர்களை வரவேற்றாள். உள்ளே அழைத்தாள். அமர்க்கைகளைக் காட்டினாள். சம்பிரதாயம் சரியாக நடந்தது. 

ரவியிடம் என்ன கேள்விகள் கேட்பாள் என்று சித்திராவுக்குத் தெரியும். தனக்குள் சிரித்துக் கொண்டாள். நேற்றைய வாழ்க்கையின் தொடராக இன்றைய வாழ்க்கையை நினைப்பவள் சுமதி என்று சித்திரா வுக்குத் தெரியும். அவளது தகப்பன் ராமநாதனுக்கும் அந்த மாதிரியான சிந்தனைகள் உண்டு. உலகத்தை வேறு கோணத்தில் பார்க்கத் தெரியாதவள் சுமதி. 

நேற்றுப் பார்த்த மரம் இன்னும் அதேபோலவா இருக்கிறது? நீல வானத்தின் பின்னணியில் பச்சையிலைகளை தென்றலில் உலர்த்தும் மரம் பனிக் குளிரில் நிர்வாணமாய் நிற்கும்போது இயற்கையின் தீவிரம் மனசிற்படுகிறதே, அதேபோல மனிதரும் தங்கள் சூழ்நிலைகளால், பழகும் மனிதர்களால், கிடைக்கும் பணவசதியால், அல்லது கிடைக்காத பணவசதியால் தங்கள் வாழ்க்கை அமைப்பையும், மனப் போக்கையும் வித்தியாசமான விதத்தில் நடத்த முடியும் என்பதைச் சுமதியால் விளங்க முடியாதா?சித்திராவின் சிந்தனை வழக்கம்போல் சிறகடித்தது. 

சித்திராவிற்குப் போன் பண்ணி அழுததுபோல் ரவிக்கும் போன் பண்ணி அழுதிருப்பாள் என்று தெரியும். அதுதான் ரவியும் இப்போது வந்திறங்கியிருக்கிறான். சுமதியின் கணவர் செந்தில் ஒரு குடிகாரன் என்றும் தன்னைத் துன்புறுத்துவதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறாள். 

ஒரு மனிதன் குடிகாரனாக மாறுவதற்குக் காரணங்கள் என்ன? பிறந்த வீட்டுச் சூழ்நிலையா, வளர்ந்த சுற்றாடலா அல்லது தனி மனிதப் பெலவீனமா? சித்திரா இந்தக் கேள்வியைச் சுமதியிடம் கேட்க நினைத்தாள். 

சித்திராலண்டனுக்கு வருகிறேன் என்று கேம்பிரிட்ஜிலிருந்து போன் பண்ணியவுடனேயே சுமதி சமைக்கத் தொடங்கி யிருந்தாள். சமையலறைக்குள் துயரத்தை மறப்பவர்களில் சுமதியும் ஒருத்தி. உலகத்து உறவுகளைவிட சமையலறைச் சட்டிபானை களுடன் அவள் மிகவும் நெருக்கம். எல்லாத் தமிழ்ப் பெண்கள் அல்லது பெரும்பாலான தமிழ் பெண்கள் போல சுமதிக்கும் சமையல் என்றால் மிக விருப்பம். சமைத்திருந்தாள். சித்திரா வெஜிடேரியன். அவளுக்காக சுமதி நிறையச் சமைத்திருந்தாள். கத்தரிக்காய் பொரித்த குழம்பு, வாழைக்காய்ப் பொறியல், பருப்பு, வடை, பாயாசம் என்று நிறையச் சாப்பாடு. செந்திலில் உள்ள கோபத்தை மறக்கத் தன் நேரத்தைச் சமையலில் செலவழிக்கிறாள் போலும். வந்தவர்களுக்குக் காப்பி கொடுக்க குசினிப் பக்கம் போன சுமதியைத் தொடர்ந்த சித்திரா, சமைத்து வைத்திருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள். சமையல் மணம் மூக்கைத் துளைத்தது. 

“பசிக்குது சுமதி.”அப்பளம் ஒன்றை எடுத்து வாயிற் போட்டபடி சித்திரா முணுமுணுத்தாள். மெலனி பற்றி சுமதி ஏதும் தாறுமாறாகப் பேசாமலிருக்க வேண்டும் என்று மனம் சொல்லிக் கொண்டது. “கொஞ்சம் பொறு. ரவிக்கு ஏதாவது செய்ய வேணும்.அந்த மெலனிப் பெண்ணுக்கு என்ன பிடிக்குமோ தெரியாது”. சுமதி, மெலனிப் பெண் என்று சொன்ன விதத்தில் சுமதிக்கு அவளை அதிகம் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. 

“ஏய் சுமதி,சும்மா கண்ட பாட்டுக்குக் கற்பனையைப் பறக்க விடாதே. வீட்டில் சும்மா குந்தியிருந்து கொண்டு தமிழ் டெவிவிஷன் சீரியல்களைப் பார்த்து நீ மிகவும் உணர்ச்சி வசப்படப் பழகிவிட்டாய். ரவியை ஒரு வெள்ளைக்காரியுடன் பார்த்ததும் உன்ர பிரச்சினை உலகத்தில் இருந்து ஓடிப் போயிற்றோ” சித்திரா கடிந்து கொண்டாள். சுமதி தட்டுகளில் வடைகள் அடுக்கிக் கொண்டிருந்தாள். 

“எனக்கொன்னும் கற்பனையில்ல, நல்ல பையன்களை எப்படியும் கைக்குள்ள போட எத்தனையோ பெண்பிள்ளைகள் இருப்பினம். வெள்ளைக்காரி எண்டா என்ன, எங்கடநாட்டுப் பெண்பிள்ளை எண்டா என்ன, எப்படி என்றாலும் ஒரு டொக்டரைப் பிடிக்க சந்தர்ப்பம் கிடைச்சா சும்மா விடப் போகிறோமா?” காதற் திருமணங்கள் பற்றிய சுமதி வைத்திருக்கும் அபிப்பிராயம் சித்திராவை எரிச்சல் பண்ணத் தூண்டியது. சித்திராவிற்கு சுமதியின் பேச்சு அவளின் இளவயதில் அவர்களுடனிருந்த பாட்டியை ஞாபகப்படுத்தியது. 

சுமதியின் தாயும், சித்திராவின் தகப்பனும் அந்தப் பாட்டியின் வயிற்றிலிருந்து, உணர்விலிருந்து, பரம்பரைப் பழக்க நம்பிக்கைகளிலிருந்து பிறந்தவர்கள். கமலா மாமி சிதம்பரன் என்ற கவிஞனைத் திருமணம் செய்தபின் எவ்வளவோ மாறிவிட்டாள். அவள் வித்தியாசமானவள் என்ற உள்ளுணர்வு இருந்தபடியால்தான் தங்கள் அந்தஸ்துக்கு அப்பாற்பட்ட அல்லது வித்தியாசமான மனிதனான சிதம்பரம் மாமாவைக் காதலித்தாளா? 

“நீ பாட்டி மாதிரி அலட்டத் தொடங்கி விட்டாய். இறந்து போன காலத்தின் நியாயங்களையும் நம்பிக்கைகளையும் நிகழ்காலத்தின் நடைமுறைக்குத் திரும்பி விடுகிறாய்” 

சுமதி சித்திராவை ஏறிட்டுப் பார்த்தாள். ‘இந்தச் சித்திராவும் அப்பா சிதம்பரம் மாதிரி வித்தியாசமாகப் பேசத் தெரிந்தவளோ? அப்பா மற்றவர்கள் மாதிரி சாதாரணமாக இருந்திருந்தால்ஏன் சுடுபட்டுச் செத்திருப்பார்? அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காதவன் அறிவிருந்தும் முட்டாளாக இருப்பவன் என்று அப்பா அடிக்கடி சொல்வார். இந்தச் சித்திராவுக்குக் கோபம் வரும்படி என்ன சொல்லி விட்டேன்?பாட்டி மாதிரி அலட்டாதே என்கிறாளே. 

முன் ஹாலில் மெலனியும் ரவியும் ஏதோ சிரித்துப் பேசுவது கேட்டது. சுமதி சித்திராவை அர்த்தத்துடன் பார்த்தாள், 

“என்ன பார்க்கிறாய்?” சித்திராவின் கேள்வியிது. 

“உனது மச்சானுடன் இப்படிச்சல்லாபம் போடுகிறாளே உ னக்குக் கோபம் வரவில்லையா.” 

“ஏன் கோபம் வரவேண்டும்? அவள் ரவியுடன் வேலை செய்கிறாள். ஒன்றாக வேலை செய்பவர்கள் ஒற்றுமையாக இருப்பது நல்லதில்லையா? நான் வேலை செய்யுமிடத்தில் நான் எத்தனையோ ஆங்கில இளைஞர் களுடன் பழகுகிறேன். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?” 

சுமதி பதில் சொல்லவில்லை. 

சுமதி பின்னேரம் செய்திருந்த வடையையும் கோப்பியையும் கொண்டு வந்தாள். பார்வை மெலனியை எடை போட்டது. சுமதி இப்படி ஒருநாளும் எந்த இளைஞனுடனும் சுற்றவில்லை. ரவி வடையை எடுத்தபடி சொன்னான்

“மாமா வீட்டில் நிறையக் கிடைச்சிருக்கும்.”

“மாமா வீட்ட போகப் பிளான் பண்ணியிருந்தாயா?” சுமதி வழக்கறிஞர் மாதிரிக் கேட்டாள். 

“ஆமாம். ஆனால் மெலனியுடன் போக வேண்டி வந்ததால் மாமாவின் வீட்டுக்குப் போகல்ல.”

அவள் ஏதும் மறுமொழி சொல்ல முதல் சித்திரா குறுக்கிட்டாள். 

“நானும்தான், வீட்ட போகலாமோ இல்லையோ என்று யோசிச்சன். அங்க போகாமல் இஞ்ச வந்ததற்கு அப்பாவும் அம்மாவும் கோவிப்பினம்” 

“ஏன் நீயும் யாருடனும் மத்தியானச்சாப்பாட்டுக்குப் போனாயா?” சுமதியின் கிண்டலிது. 

“இல்லை கர்ப்பத்தை எப்படிக் கலைப்பது என்று பேசிக் கொண்டிருந்தேன்.” 

“அடிப்பாவி நீ….” சுமதி வீட்டில் மற்றவர் இருப்பதையும் மறந்து கூவினாள். எதையும் மிகவும் சீரியஸாக எடுத்தாக் குழம்பிப் போயிடும் என்பதை சுமதி மூலம் கணிக்கக் கூடியதாக இருந்தது. ரவி கடைக் கண்ணால் சித்திராவைப் பார்த்தான். மெலனி வடையிலுள்ள மிளகாய் கடிப்பட்ட உறைப்பில் முகம் சிவக்க இருமிக் கொண்டிருந்தாள். 

சித்திராவுக்கு சுமதி என்ன யோசிக்கிறாள் என்று சட்டென்று புரிந்தது.’ஏன் இவளுக்குக் கோணல் மாணலாகத்தான் யோசனை வருகிறது’ சித்திரா பொறுமையுடன் சுமதியைப் பார்த்தாள். 

“சுமதி நான் என்ன வேலை செய்யிறன் என்று தெரியுமா?” சித்திராவின் குரலில் கிண்டலுக்குப் பதில் கண்டிப்பு. 

“சோசியல் வேர்க்கர்” 

“அதன் கருத்து என்ன?” 

“கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்வது.”

“கெட்டிக்காரி. கண்டு பிடித்துவிட்டாயே”. 

சித்திரா கிண்டலாகச் சிரித்தாள். 

“கர்ப்பத்தைக் கலைக்க யோசிக்கும் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன்.” ரவி சிரிப்பைத் தாங்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். உறைப்பு வடையால் இருமித் தள்ளும் மெலனி நீரை மடமடவென்று குடித்தாள். 

“எனக்கத் தெரிந்த ஒரு பெண்…” சித்திரா வார்த்தைகளை முடிக்க முதல் சுமதி பாய்ந்தாள். 

“பிள்ளையைக் கலைக்கப் போகிறேன் என்கிறாளா? உம் ஒரு விதத்தில் அவள் ஏன் அப்படி நினைக்கிறாள் என்று புரிகிறது. இந்தக் கேடு கெட்ட ஆம்பிள்ளைகளை நம்பிக் குழந்தைகளை இந்த உலகத்திற்குக் கொண்டு வருவதைவிட கருவிலேயே கல்லறை கட்டுவது புண்ணியம்தான்’. 

அந்த அறையில் சட்டென்று மௌனம் குடிகொண்டது. மெலனி அந்த மௌனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாள். 

“மீண்டும் சந்திப்போம். வடைக்கு நன்றி.” அவள் எழுந்தாள். எல்லோரும் வாசற்படி வரைக்கும் வந்தார்கள். மௌனம் சித்திரா வின் பேச்சில் தகர்ந்தது. சந்தர்ப்பம் தெரிந்து நழுவும் மெலனியின் புத்திக் கூர்மையை சித்திராதன் மனத்துள் மெச்சினாள். “உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி”சித்திரா உண்மையாகச் சொன்னாள். என்ன காரணம் என்று தெரியவில்லை மெலனியைச் சித்திராவுக்குப் பிடித்திருந்தது. மெலனி யின் மௌனத்தின் பின்னால் எதையும் கெதியில் அனுமானிக்கும் தன்மை புலப்பட்டது. “நானும்தான் மகிழ்ச்சி யடைகிறேன். எனது பேர்த்டே பார்ட்டி விரைவில் வருகிறது. நீங்கள் ஏன் ரவியுடன் வரக்கூடாது.” மெலனியின் இன்விட்டேஷன் சுமதி எதிர்பார்க்காதது. ஆனால் மனதுக்குப் பிடித்திருந்தது. எதிர்பாராத சந்தோசங்களில் இது ஒன்று.சுமதி அந்த மூவரையும் மாறி மாறிப் பார்த்தாள். தற்செயலான சந்திப்பாகத் தொடங்கியது எப்படி முடியப் போகிறதோ என்று யோசிப்பது அவள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. 

“நிச்சயமாக வருவேன்” சித்திரா சந்தோசத்துடன் சொன்னாள். மெலனி போன்றவர்களின் சிநேகிதம் அருமையானது என்று தனக்குள் முணுமுணுத்தாள். மெலனி காரில் ஏறுவதையும் பார்த்துக் கொண்டிருந்த சுமதி, அவளின் கார் மறைந்ததும் ரவியைப் பார்த்தாள். பார்வையில் கனல் எரிந்துவிடாமல் இருக்க ரவி நகர்ந்து கொண்டான். சுமதியிடமிருந்து எத்தனை திட்டல்கள் வரும் என்று தனக்குள் யோசித்தான். “முழுக்க முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு என்ற பாவனையா உனக்கு?” சுமதி மூக்குக்கும் முழங்காலுக்கும் தொடர்புபடுத்திப் பேசினாள். “செந்திலிலுள்ள ஆத்திரத்தை யாரிடமாவது கொட்டுவதாயிருந்தால் அதற்கு நானா அகப்பட்டேன்.’ 

“யார் நனைந்தார்கள், யார் முக்காட்டை எடுத்தார்கள்” ரவி எரிச்சலுடன் கேட்டான். இவனுடைய மொபைலில் எத்தனையோதரம் மேசேஜ்ஜஸ் வைத்திருந்த சுமதி இப்போது ரவியைக் கண்டபாட்டுக்குப் பேசுவது அநாகரிகமாகப்பட்டது. இவனைக் காணாமல் தவிப்பதாக டெலிபோன் ஆன்ஸர் போனில் செய்தி வைத்திருந்தாள். “என்ன பேசுவதற்குத் தேடினாய் அக்கா, உனக்கு என்னிடம் பேசுவதற்கு ஒரு விடயமும் இல்லை என்றால் இன்னொருதரம் வர்றன்.” சுமதியுடன் வீணாக வாதாடி அவளைப் புண்படுத்த அவன் விரும்பவில்லை. பாசத் துடன் கோபமும் வந்தது. அவனின் கோபம் அவளுக்கு விளங்கியது. சாந்தமாக அவனைப் பார்த்தாள். குரலைத் தணித்தபடி சொன்னாள். 

“சாப்பிட்டிடுப்போ.” குரலில் கனிவு. தம்பியிடம் பரிவு. 

“பசிக்கல்ல.” அவன் எழுந்து கொண்டான். மெலனியுடன் மட்டு மல்ல சித்திரா அல்லாத எந்தப் பெண்ணுடனும் அவனைக் கண்டால் சுமதிக்குப் பிடிக்காது. “நான் லிப்ட் தர்றன்.” சித்திரா தமக்கைக்கும் தம்பிக்குமிடையில் கொஞ்சம் சமாதானத்தை யுண்டாக்க எத்தனித்தாள். 

அவன் இருக்குமிடம் விம்பிள்டன். அவர்கள் இப்போது பேசிக் கொண்டிருக்குமிடம் ஆர்ஸனல். தெற்கும் வடக்குமான பிரதேசங்கள். சித்திராவின் சமயோசிதம் ரவிக்குப் பிடித்தது. சுமதிக்குச் சந்தோசம் தரத் தன்னை ரவியுடன் பிணைக்கிறாளா? “வேண்டாம் சித்திரா,நீங்கள் எனக்காக விம்பிள்டன் வரைக்கும் அலைய வேண்டாம். சுமதிக்காக கேம்பிரிட்ஜிலிருந்து வந்ததே பெரிய விடயம்.” நன்றியுடன் கூறினான். அதே நேரம் சுமதியைத் திருப்திப்படுத்த சித்திராவைப் பயன்படுத்த அவன் விரும்பவில்லை. “எதற்கும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டுப் போங்கள்.”சித்திராவை அவன் அடிக்கடி சந்திப்பது கிடையாது. சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தமுமில்லை. அவள் வேலை செய்வதும் வாழ்வதும் கேம்பிரிட்ஜில்.லண்டனிலிருந்து கிட்டத்தட்ட அறுபது மைல்கள். அவன் இருப்பது லண்டனில். அப்படியிருந்தும் அவனுடைய தமக்கை யை விட அவனைக் கூடப் புரிந்து வைத்திருக்கிறாள் என்று புரிந்தது. 

அமைதியுடன் உட்கார்ந்தான். 

சுமதி சாப்பாடு எடுக்க குசினிப் பக்கம் நகர்ந்ததும் சித்திரா ரவியை ஆதரவுடன் பார்த்தாள்.சுமதிக்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன் என்ற பார்வையது. அதன் மொழியை உள்வாங்கிக் கொண்டான் ரவி. 

“மெலனியை எனக்குப் பிடித்துக் கொண்டது.” சித்திரா இப்படிச் சொன்னது அவளுக்கே விந்தையாக இருந்தது. 

சந்தித்த முதல் நாளே யாரையும் உடனடியாக அறிந்து கொள்ள முடியாது என்பதைத் தெரிந்தவள். ஆனாலும் மெலனியிடமிருந்த ஏதோ ஒரு அற்புத காந்த சக்தி சித்திராவைப் பற்றிக் கொண்டது. மெலனியைத் தனக்குப் பிடித்துக் கொண்டது என்று சொன்னதன் மூலம் ரவியின் செயலைத் தான் பெரிது படுத்தவில்லை என்று காட்டிக் கொண்டாள். ‘நல்ல பெண்மணி. என்னுடைய மேலதிகாரி. இன்றுவரைக்கும் நான் அவளுடன் தனிப்பட்டமுறையில் பேசியதுமில்லை. பழகியதுமில்லை. இன்றைக்கு அவளுடன் ஒரு நாளைச் செலவழிப்பேன் என்று நினைத் திருக்கவில்லை. சீக்கிரம் வேலையை விடப் போகிறாள் என்ற விடயமே இன்றுதான் தெரிந்தது. பெரிய இழப்பு அது”. 

“தற்செயலாக நடக்கும் சந்திப்புகளும் மனிதர்களும் சிலவேளை எங்கள் வாழ்க்கையையே மாற்றி விடுவது தவிர்க்க முடியாதது.” 

சித்திரா சொன்னது சம்மட்டியால் அடிப்பது போல் அவன் மனத்தில் உறைத்தது. அத்தனை திடகாத்திரமாகச் சொன்னாள் அவள். மெலனியின் உறவால் யார் வாழ்க்கை மாறப் போகிறது? அந்த வசனங்களின் உண்மை அவனை மெய்சிலிர்க்கப் பண்ணியது. மறக்க வேண்டிய எத்தனையோ நினைவுகள் சட்டென்று மனதில் வந்து போயின. அவனின் தம்பிகள் அவனின் அருமைச் சகோதரி சங்கீதா எல்லோரும் ஒரே மேடையில் தோன்றி அவன் முன்னே நிற்பது போன்ற பிரமை. அவர்களுடன் அவனின் தந்தை. 

சுமதி சாப்பாட்டுடன் வந்ததும் அவன் நினைவு துண்டித்தது. 

ரவி ஏதோ பாட்டுக்குச் சாப்பிட்டான். சொந்த தமக்கை அன்னிய மாய்த் தெரிந்தாள். அவள் வாழ்க்கையில் அவள் இப்போது பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைக்கு மற்றவர்களிடம் உதவி கேட்கிறாள். 

‘மற்றவர்கள்’ என்று குறிப்பிடும்போது சித்திராவும், ரவியும் அவளுக்கு மற்றவர்கள் அல்ல. தமயனும் மைத்துனியும். 

இன்று மெலனியைச் சந்தித்திருக்காவிட்டால் இன்று சுமதியை அவன் பார்க்க வந்ததற்கு அர்த்தம் வேறுவிதமாக இருந்திருக்கலாம். மெலனியுடன் அவனைப் பார்த்தது ஒரு தர்மசங்கடமான உணர்வை யுண்டாக்கியதை அவள் மறைத்துக் கொள்ளவுமில்லை. ஏதோ ஒரு விதத்தில் தனது சொந்தப் பிரச்சினை காரணமாக மெலனி வேலையை விட்டுப் போகிறாள். சொந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவளின் ‘சுயமை’ உதவி செய்கிறது. 

தனக்குள் அமர்ந்து கிடக்கும் எத்தனையோ அரும்பெரும் உணர்வுகள், உண்மைகள், விடயங்களை நேர்மையாகப் பார்க்கும் தெளிவு என்பன பிரச்சினையான நேரத்தில் தனியே இருந்து சிந்தித்தால் அவை அந்த மனிதனுக்கு உதவி செய்யும் என்பதை மெலனி சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறாள். 

மெலனிக்கு அவள் வேலை செய்யும் டிப்பார்ட்மெண்டை மிக மிகப் பிடிக்கும். அங்கு வேலை செய்பவர்களுக்கும் அவளை மிக மிகப் பிடிக்கும். 

அப்படியான சூழ்நிலையைத் துறந்து அவள் போகிறாள் என்றால், அவள் இந்த முடிவை எடுக்க உந்திய விடயம் மிக மிக ஆழமாக இருக்க வேண்டும். 

ரவியின் சிந்தனை மெலனியின் பின்னால் தொடர்ந்தது. 

“ஏன் வேலையை விட்டுப் போகிறாள். ப்ரமோஷனா அல்லது….” குரலில் மிக மிகத் தயக்கத்துடன் சித்திரா கேட்டாள். 

“தெரியாது” ஒரு வசனத்தில் மறுமொழி சொன்னான். ‘அவளைப் பற்றித் தயவு செய்து தொடராதே’ என்பது அந்த ஒருவசன மறு மொழியின் அர்த்தம் என்று சித்திராவுக்குப் புரிந்தது. ஆங்கிலேயர்கள் தங்களுக்குப் பிடிக்காதவற்றை யாரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந் தால் சட்டென்று முறித்துவிடுவர். ஆஹா, வந்து கொஞ்ச நாட்களில் ரவிக்கும் இந்த ஆங்கில மனப்பான்மை கொஞ்சம் கொஞ்சம் வரத் தொடங்கிவிட்டது என்று தெரிந்தது. 

மௌனமாகச் சாப்பாட்டைப் பரிமாறினாள் சுமதி. தனக்குள்ள துன்பங்களுடன் இவ்வளவு சமையலும் செய்திருந்தது மிகவும் ஆச்சரிய மாக இருந்தது. சுமதியின் குழந்தைகள் இருவரும் அவளது கணவர் செந்திலுடன் வெளியில் போனதாகச் சொல்லிருந்தாள். மருமக்களைப் பார்ப்பதற்காகத்தான் ரவி அடிக்கடி வருவான். துடிப்பான குழந்தைகள். மாமாவில் உயிரையே வைத்திருக்கிறார்கள். “குழந்தைகள் எப்போது வருவார்கள்”? 

ரவி தமக்கையைக் கேட்டான். 

எப்போது உனது கணவர் வீட்டுக்கு வருவார் என்று கேட்டுச் சுமதியின் அழுகையை ஆரம்பித்து வைக்கத் தயாராயில்லை. 

சுமதியும் செந்திலும் அடிக்கடி சண்டை போடுவதும் செந்தில் தன் தமக்கை வீட்டுக்கு லெம்பிளி என்ற இடத்திற்குப் போய்க் கிழமைக் கணக்காகத் தங்குவதும் அடிக்கடி நடக்கும் விடயம் என்று அவனுக்குப் புரியத் தொடங்கிய பின், சுமதி சொல்லாத நேரங்களில் செந்திலைப் பற்றிக் கேட்பதைத் தவிர்த்திருந்தான். 

“எங்களோடு இருந்து சாப்பிடுங்களேன் சுமதி” சித்திரா எவ்வளவோ சொல்லியும் சுமதி சாப்பிடத் தயாரில்லை. குழந்தைகள் வரட்டும் என்று சொல்லிவிட்டாள். குழந்தை களுக்காகக் காத்திருக்கிறாளா அல்லது செந்திலுக்காகக் காத்திருக் கிறாளா என்று சொல்லத் தெரியவில்லை. 

“எங்கள் இருவருக்கும் போன் பண்ணிக் கூப்பிட்டாயே என்ன நடந்தது,”ரவியின் குரலில் ஆதரவு.எப்படியிருந்தாலும் சுமதி அவன் தமக்கை. சொந்தம் என்று கொண்டாட உள்ள நெருக்கமான பிறவி. 

“என்ன சொல்ல… கண்டபாட்டுக்குக் குடிக்கத் தொடங்கி விட்டார்.” 

“செந்தில் எப்போதும் குடிப்பவர்தானே அதென்ன சட்டென்று கண்டபாட்டுக்குக் குடிக்கிறார்?” 

ரவி கேட்க நினைத்ததை சித்திரா கேட்டாள். 

சுமதிக்கு அவமானமும் ஆத்திரமும் ஒன்றாய் வந்தது. கோபத்தைப் பாத்திர பண்டங்களில் காட்டினாள், தேவையற்று மேசையில் உள்ள சாமான்களை அங்குமிங்கும் தூக்கி வைத்தாள். 

ரவியிடமும் சித்திராவிடமும் காலையிலிருந்து சொல்ல நினைத்த தைச் சொல்ல முடியாமல் தவிப்பது அவள் செய்கைகளில் தெரிந்தது. 

ஒரு கொஞ்ச நேரத்திற்கு முன் அநாவசியமாக மெலனியை அலட்சி யப்படுத்திய சுமதி இப்போது எதையோ கண்டு பயந்த குழந்தைபோல விசும்பினாள். 

“இவ்வளவு காலமும் குடித்தார்…. இப்போது அடிக்கத் தொடங்கி விட்டார்.” 

சித்திரா இதை எதிர்பார்த்ததால் அதிகம் உணர்ச்சி வசப்படவில்லை. ரவியால் மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. 

அக்காவின் வாழ்க்கையிற் பிரச்சினையிருக்கிறது என்று தெரிந்து தான் லண்டனுக்கு வந்தான். மாமா, ரவிக்கு உதவி செய்ததற்கு ஒரு காரணமே ரவி லண்டனுக்கு வந்து எப்படியும் இந்த தம்பதிகளை ஒற்றுமையாக்க முடியும் என்ற நம்பிக்கையிற்தான். 

“தன்னிடம் பாதுகாப்பாக வந்த எந்தப் பெண்ணையும் கைநீட்டி அடிப்பவன் மனிதமற்றவன். 

தமக்கைக்காக மட்டுமல்லாமல், உலகத்தில் கணவனிடம் அடி வாங்கும் பெண்களின் வாழ்க்கைக்காகக் குமுறுவது ரவியின் குரலிற் தொனித்தது. 

“எனக்கிந்த மனிசனோட வாழ முடியாது. 

சுமதி உணர்ச்சியின் உச்சத்தில் வார்த்தைகளை வெடித்தாள். வாழ்க்கையை இன்னொரு உயிருடன் பிணைத்துக் கொண்டு அதிலிருந்து விடுபடமுடியாத தவிப்பு அவள் குரலில். திடீரென்று மௌனம். “என்ன செய்யப்போகிறாய்” சித்திரா எழுந்து போய் சுமதியின் தலையைத் தடவி விட்டாள். 

“என்ன செய்ய? அவரை விட்டுப் போட்டிருந்தா உலகம் என்ன சொல்லும்? அதைவிடத் தற்கொலை செய்யுறது நல்லது எண்டு நினைக்கிறன்.” கணவர்களுக்கப்பால் உலகம் தெரியாத பெண்களின் புலம்பல் இது! 

“முட்டாள்த்தனமாகப் பேசாதே. குழந்தைகளின் கெதி என்ன? இப்படி அழுது கொண்டிருந்தால் அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினை வரும் தெரியுமா” சித்திரா தான் இன்னும் பேசிக் கொண்டிருந் தாள். வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

சித்திரா போய்க் கதவைத் திறந்தாள். குழந்தைகள் சந்தோசத்துடன் வந்து மாமாவைக் கட்டிக் கொண்டார்கள். அவர்களுடன் செந்தில் வரவில்லை. அவனின் மாமாதனபாலன் வந்திருந்தார். 

செந்தில் எங்கே என்று ரவி கேட்கவில்லை. செந்தில் வந்திருந்தால் வாய்த்தர்க்கம் வந்திருக்கலாம். 

சுமதியின் பெண் குழந்தைக்கு எட்டு வயது. மற்றொன்றுக்குப் பத்து வயது. எட்டு வயது ரேணுகா மாமா ஏன் அடிக்கடிதங்கள் வீட்டுக்கு வரவில்லை என்று கேட்டாள். 

”நீங்கள் ஊருக்குத் திரும்பிப் போகப் போறதில்லைத்தானே.” நிச்சயமான குரலில் கேட்டான் சிவம். பத்துவயதுதான் ஆனாலும் குரலில் அழுத்தமும் உறுதியும். 

அவனுக்கு மறுமொழி சொல்லாமல் “செந்தில் எங்கே?” தனபால் மாமாவிடம் கேட்டான் ரவி. 

“வழக்கம்போல தமக்கை வீட்ட இருக்கிறார்.” தனபால் குரலில் அவமானம். தனது மருமகனின்நடத்தையால் இந்த மனிதர்கள் முன்னால் குற்றம் புரிந்தவன்போல் தலை குனிந்திருப்பது தாங்க முடியாதிருந்தது என்பது தெரிந்தது. 

ரவி அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். சுமதியைவிட அவர் மிகவும் வருத்தப்படுகிறார் என்று தெரிந்தது. 

குழந்தைகளுக்கு முன்னால் அவருடன் ஒன்றும் பேசவிரும்ப வில்லை. சுமதி குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுப்பதில் கவனமாக இருந்தாள். 

“சரி நான் போகட்டா” தனபால் எழுந்தார். 

”ஏதும் சாப்பிடுங்கள்” சித்திரா சொன்னாள். 

“வேண்டாம்” அவர் எழுந்து கொண்டார். ரவியும் எழுந்து கொண்டான். அந்த இடத்திலிருக்க தர்ம சங்கடப்படுகிறார் என்பது புரிந்தது. 

இரவு ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. 

ரவி தனபால் மாமாவைப் பின்தொடர்ந்தான். தனபால் மாமாவை ரவிக்கு நன்றாகத் தெரியும். தனபால் மாமா ரவியின் தந்தையின் நண்பர். ஒன்றாக யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள், ஒரே மாதிரிக் கொள்கையுடையவர்கள். 

இலங்கையில் நடக்கும் பிரச்சினைகளால் ஊரைவிட்டு ஓடிய மனிதர்களில் அவரும் ஒருத்தர். நாடோடியாய் வாழும் வாழ்க்கையைமிக மிக வெறுப்பவர். அவர் குழந்தைகள், அவரின் மனைவியுடன் சென்னையிலிருக்கிறார்கள். 

குழந்தைகளின் வாழ்க்கைக்காக அவர் மனைவி சென்னையில் வாழ்கிறார்.தனபால் மாமா அடிக்கடி சென்னை போய் வருவார். 

”அவசரமாக வீட்ட போக வேணுமா?” அவருடன் ரவி பேச ஆசைப்படுகிறான் என்று அவனின் கேள்வியில் தொனித்தது. 

ஆனாலும் அவர் சுமதிக்கு முன்னால் ஏதும் பேச விரும்பவில்லை. சுமதியை செந்திலுக்குத் திருமணம் செய்து வைத்ததில் அவருக்கு நிறையப் பொறுப்புண்டு. 

“பக்கத்தில் ஒரு ‘பப்’ இருக்கிறது.” 

ரவி சொன்னதன் அர்த்தம் புரிந்தது. 

இருவரும் ‘பப்’ புக்குள் நுழைந்தார்கள். சனிக்கிழமை என்றபடி யால் குடிக்குமிடம் நிரம்பியிருந்தது. போன கிழமையிலிருந்து லண் டனில் பெரும்பாலோர் மிகவும் ‘சந்தோசமாக இருக்கிறார்கள். 

ஆர்ஜென்டினாவை உதைப்பந்தாட்டப் போட்டியில் தோற்கடித்த தைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருந்தார்கள். 

தனபால் மாமா தனக்கு விஸ்கி ஓர்டர் பண்ணிக் கொண்டார். ரவி பீர் குடித்தான். 

“சுமதி மிகவும் மனமுடைந்து போயிருக்கிறாள்.” 

ரவி நேரடியாக பேச்சுக்கு வந்தான். 

“எதிர்பார்த்ததுதானே. சந்தோசமற்ற குடும்ப சீவியம்,” தனபால் மாமாரவியைப் பார்க்காமல் முணுமுணுத்தார். 

“இலங்கையில் நடக்கிற அநியாயத்தால் எத்தனை பேரின் வாழ்க்கை பாழாகிறது,” பெருமூச்சில் விரக்தி தெறித்தது. தனபால் மாமா சுமதியின் பிரச்சினையை அரசியல் பின்னணியிற் பார்த்தார்.

“இலங்கையில் மட்டுமா உலகத்தில் எந்த மூலையை எடுத்தாலும் பிரச்சினைதானே”. 

ரவி பட்டும் படாமலும் சொன்னான். சுமதிக்குக் கல்யாணம் பேசி வைத்ததற்காக அவர் குற்ற உணர்வுடன் தவிப்பது தேவையில்லை என்று சொல்ல நினைத்தான். 

“இந்த நாசமாப் போகிறவர்கள் உலகத்தில் யாரைத்தான் நிம்மதியாக இருக்கவிடப் போகிறார்கள்”. 

நாசமாகப் போகிறவர்கள் என்று யாரைச் சொல்கிறார்? 

“யாரைச் சொல்கிறீர்கள்?” தனபால் மாமா மிகவும் அரசியல் நாட்டம் கொண்டவர். அவர் இலங்கை அரசாங்கத்தைத் திட்டுகிறாரா அல்லது தமிழ் விடுதலைப் போராளிகளைத் திட்டுகிறாரா அல்லது வேறு யாரையும் திட்டுகிறாரா என்று அவனுக்குப் புரியவில்லை. 

“இன்டைக்குப் பாருங்கோ தம்பி, இந்த அமெரிக்கன் தங்களுக்குப் பிடிக்காத பின் லேடன் பெயரைச் சொல்லிக்கொண்டு தங்களுக்கு வால் பிடிக்காத முஸ்லீம்களையெல்லாம் தொலைத்துக் கட்டுகிறான். இஸ்ரேலி யருக்கு உதவி செய்யற தால அப்பாவி பாலஸ்தீனச் சனம் அழியுது. பாகிஸ்தானுக்கு உதவுறதால் இந்தியாவில் அணுஆயுதப் போர் வரப்போகுது. 

“அமெரிக்கர்தான் உலகப் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணமா?” 

“அவர்கள் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, பிரச்சினைகளை யுண்டாக்கி நாடுகளைக் குழப்புகிறார்கள், மக்களை வதைக்கிறார்கள், தங்களுக்குப் பிடிக்காத அப்பாவி மக்களை அநியாயமாகக் கொன்று குவிக்கிறார்கள். 

“தீவிர வாதத்திற்கு எதிராகப் போராடுவதாக அல்லவோ சொல்கிறார்கள்”. 

தனபால் மாமாவுக்கு கோபம் வந்துவிட்டது. 

“யார் தீவிரவாதிகள்? பின்லேடனை வளர்த்தவர் யார்? சதாம் ஹுசேனை வளர்த்தவர் யார்? இண்டைக்குப் பாகிஸ்தான் முஷாருப் புக்கு உதவுவது யார்? சண்டை க்கு தென் ஆப்பிரிக்கச் சர்வாதிகாரி பினேஷுக்கு உதவியது யார்? அப்போது வியட்நாமியரை மிருகங்கள் மாதிரி வேட்டையாடிச் சுட்டு அழித்தார்கள். இப்போது முஸ்லீம் மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். குடிசை வீட்டில் வாழ்ந்து பட்டினியோடு மாரடித்த ஆப்கானிஸ்தான் ஏழைகளுக்கும், இவர்களின் எதிரி பின்லேடனுக்கும் என்ன சம்பந்தம், ஆபுகானிஸ்தான் மண் குடிசைகளைத் தவிடுபொடியாக்க கோடானுகோடி டாலர்களைச் செலவழித்துவிட்டு எதிரிகளை அழிப்பதாகச் சொல்கிறார்கள். இதுதான் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமா?” 

– தொடரும்…

– நாளைய மனிதர்கள் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 2003, புதுப்புனல், சென்னை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *