நான் எழுதும் கடைசி கதை!





நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் எண்ணிக்கை எட்டு. ஆம்! எட்டுதான். அதற்குமேல் நான் எழுதவில்லை. இனி எழுதவே கூடாது என்ற முடிவோடுதான் இருக்கிறேன். பட்டதெல்லாம் போதுமடா சாமி! இப்போது நினைத்தாலும் மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

நான் எழுதிய கடைசி கதையின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் இதை வேறு யாரிடமும் இதைச் சொல்லமாட்டீர்கள் என்று நம்பி உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்.
என் முதல் நான்கு சிறுகதைகள் சில இதழ்களுக்கு அனுப்பிவைத்துவிட்டு இதுவரை எந்தத் தகவலும் இல்லாமல்தான் இருக்கிறேன். ஆனால் என்னுடைய ஐந்தாவது கதை மக்கள் ஓசையில் முதல்முதலாகப் பிரசுரமானது. அதற்குப் பிறகுதான் நான் எழுதுவதில் மேலும் தீவிரமானேன்.
அந்தக் கதையின் தலைப்புகூட எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. ‘பள்ளி எனும் சிறை’ என்றுதான் நான் பெயர் வைத்தேன். ஆனால் ‘பள்ளி’ என்று மட்டும் பிரசுரமாகியிருந்தது. தமிழ்ப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் எவ்வளவு முரட்டுத்தனமாக ஆசிரியர்களிடம் நடந்துகொள்கிறார் என்பதுதான் கதையின் மையம். ஆர்வக் கோளாரில் நான் வேலை செய்யும் பள்ளியின் பெயரையே போட்டுவிட்டேன். அதற்காகத் தலைமையாசிரியரிடம் ஒன்றரை மணிநேரம் மூச்சுவிடாமல் கொடுத்தத் திட்டுகளை வாங்கியதுதான் மிச்சம்! அன்றிலிருந்து அவருடைய கடுப்புக்கு உடனடி பலிகடா நான்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்… ஹ்ம்ம்… சரி. அதை ஒரு பக்கம் விடுவோம்.
ஆறாவது சிறுகதை எதைப் பற்றியது தெரியுமா? பேரணி ஒன்றில் கலந்துகொள்ளப் போயிருந்த முதியவர் ஒருவர் தனது கருத்தினைச் சொல்லவிடாமல் அதிகார வர்க்கம் எவ்வாறு நடந்துகொண்டது என்பதைப் பற்றி… இதில் நிறைய வர்ணனைகளைப் போட்டுத் தாக்கியிருந்தேன். இந்தக் கதை நாளிதழ்கள் பிரசுரிக்கவில்லை. ஒரு சிற்றிதழுக்கு அனுப்பியிருந்தேன். அவர்கள்தான் போட்டார்கள். சில நாட்கள் போனது. கல்வி இலாகாவிலிருந்து அழைப்பு. அரசாங்கத்துக்கு எதிராக எழுதியதாக புகார். எல்லாம் என் தப்புதான். வெறும் பேரணி என்று எழுதியிருக்கலாம். ஒரு ஒரிஜினாலிட்டி காட்டவேண்டும் என்பதற்காக சட்டவிரோதப் பேரணி ஒன்றின் பெயரைப் போட்டிருந்தேன். அதில் வந்த வினைதான் அது. இனி அந்தப் பேரணியின் பெயரைச் சொல்லவே மாட்டேன்; எங்காவது அந்தப் பெயரைக் கேட்டால் உடனே காதை மூடிக்கொள்கிறேன் என்று சத்தியமடித்துச் சொல்லி வேலையைக் காப்பாற்றிக்கொண்டு வந்தேன்.
அதற்குப் பிறகு வேலைக்கு ஆப்பு வைக்கிற எதையும் எழுதுவதில்லை என்று முடிவோடிருந்தேன். சமுதாயச் சிக்கலைப் பற்றி எழுதலாமே? என்னுடைய ஏழாவது சிறுகதை சமுதாயச் சிக்கலைப் பற்றியதுதான். அது ஒரு உண்மைச் சம்பவமும் கூட… தலைப்பு என்ன தெரியுமா? ‘பொண்டாட்டி, வைப்பாட்டி, நடுவில் முனியாண்டி’. தலைப்பே வித்தியாசமா இல்ல? ஆனால் அதில் ஒரு சிக்கல் பாருங்க… ஒரு மோனை ஒலிநயத்துக்காகத்தான் முனியாண்டி என்று பெயரைப் போட்டிருந்தேன். அதை எங்கிருந்தோ வந்த ஒரு முனியாண்டி வெட்டுக்கத்தி ஏந்தியபடி வீட்டு வாசல் முன் வந்து கத்திவிட்டு போனான். எல்லாம் கெட்டக் கெட்ட வார்த்தைகள்தான். மனுஷன் போறதே போனான்… சும்மா போயிருந்திருக்கலாம். கல்லை எடுத்து கார் மேலே வீசிவிட்டுப் போனதில் கல் பட்ட இடம் லேசாக நசுங்கிவிட்டிருந்தது. போலீசுக்கெல்லாம் போகவேண்டாம் என்று மனைவி சொல்லிவிட்டாள். பிறகு விசாரித்ததில்தான் தெரிந்தது, அவன் இதே தாமானில் கடைசிக்கு இரண்டாவது புளோக்கில் இருக்கிறவன் என்று. அதற்கப்புறம் அவனாச்சு அவன் பொண்டாட்டியாச்சு; வப்பாட்டியாச்சு… விட்டுவிட்டேன்.
இப்படி என்னுடைய ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னாலும் ஒரு பயங்கர வரலாறு உண்டு. இவ்வளவு கசப்புகளுக்கும் இடையே ஒரு சந்தோஷமான செய்தி என்ன தெரியுங்களா? என் கதையை நாலு பேர் படிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?
சரி… என்னுடைய கடைசிக் கதையைப் பற்றி கேட்கிறீர்களா? என்னடா இது, எதை எழுதினாலும் வம்பாய்ப் போகுதே என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. ‘போலீஸ் அதிரடி சோதனை: விபச்சாரத்தில் ஈடுபட்ட சீன நாட்டு அழகிகள் கைது’. கிட்டத்தட்ட இப்படித்தான் அந்தத் தலைப்பு இருந்தது. அட! இவர்களைப் பற்றி எழுதலாமே? வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் இவர்களைப் போலீஸ் பிடிக்கிறது. பிறகு இவர்கள் என்ன ஆகிறார்கள்? இவைதான் நான் எழுதவேண்டியவை. ஒருவேளை இசக்கு பிசக்காக ஏதாவது எழுதிவிட்டாலும்கூட தப்பித்துக்கொள்ளலாம். சீன நாட்டுக்காரிகளுக்குத்தான் தமிழ் தெரியாதே… ஹிஹிஹி…
ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. விபச்சார விடுதி எப்படி இருக்கும்? அங்குள்ள பெண்கள் எப்படி இருப்பார்கள்? எப்படி உள்ளே போவது? எப்படி வெளியேறுவது? இது எதுவுமே எனக்குத் தெரியாது. இது எதுவும் தெரியாமல் மேம்போக்காகக் கதையை எழுதினால் அதில் ஒரிஜினாலிட்டி இருக்காது. நான் எழுதினால் உண்மையையும் அனுபவத்தையும்தான் எழுதுவேன். இரண்டாவதுதான் கற்பனை.
கோத்தா டாமான்சாராவில் இந்த மாதிரி கேசுகள் அடிக்கடி வருவது எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்படி இந்த மாதிரி இடத்தைச் சரியாகக் கண்டுபிடிப்பது என்று புரியாமல் இருந்த சமயத்தில்தான் என் கூட்டாளியின் கூட்டாளி ஒருவனின் நினைவு வந்தது. அவன் மூலமாக எப்படியோ வழி கிட்டியது. அது ஒரு உடம்பு மசாஜ் செய்யும் இடம் என்று போர்டு போட்ட விடுதி.
உள்ளே போகாமல் காருக்குள்ளேயே உட்கார்ந்துகொண்டிருந்தேன். தயக்கமாக இருந்தது. என் தகுதிக்கு இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் வரலாமா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். யாராவது பார்த்துவிட்டால்? வெளியில் யாருக்கும் தெரிந்துவிட்டால்? சும்மா கதை எழுதத்தான் வந்தேன் என்று சொன்னால் ஸ்கூல் பையன் கூட விழுந்து விழுந்து சிரிப்பான். மணி ராத்திரி பத்தைத் தாண்டியிருந்தது. இன்னும் நேரமாக்கினால் வீட்டிற்குப் பதில் சொல்லவேண்டி வரும். இப்போது உள்ளே போகவேண்டும் அல்லது கிளம்பி வீட்டுக்கு போகவேண்டும் என்கிற சூழல். அப்போது நான் எடுத்த முடிவு என்ன தெரியுமா? உள்ளே செல்வதுதான்! சொல்லுங்கள்! நான் தைரியசாளி தானே?
வண்டியின் கதவைத் திறந்து குடுகுடுவென ஓடிப்போய் அந்த மசாஜ் செண்டரின் படிகட்டுகளில் ஏறி உள்ளே தாவினேன். சுவர் முழுக்க மசாஜ் படங்களாக இருந்தன. நிறைய சீன எழுத்துக்கள். முன் நாற்காலியில் உட்கார்ந்திருந்த சீனத்தி என்ன வேண்டும் என்று கேட்டாள். நான் தலையைச் சொறிந்துகொண்டிருந்தேன். ஒரு அட்டையைக் காட்டினாள். அது என்னென்ன வகை மசாஜ் உண்டென்பதையும் அதற்கேற்ற விலையையும் காட்டிக்கொண்டிருந்தது. அந்த அட்டையை எடுத்து கொஞ்ச நேரம் இங்கும் அங்கும் உலாத்திக்கொண்டிருந்தேன். மணி பத்து முப்பதுக்கும் மேல். மனதில் தைரியத்தை வரவழைத்து அவளிடம் “மாவ் அம்மோய்…” என்றேன். அவள் ஒன்றுமே தெரியாதமாதிரி நடித்துக்கொண்டிருந்தாள். என் கூட்டாளியின் கூட்டாளிப் பெயரைச் சொல்லி ஒருவழியாக அவளை வழிக்குக் கொண்டுவந்தேன்.
யாரையோ போன் பன்னிக் கூப்பிட்டாள். கட்டையாக உருண்டையாக ஒரு சீனன் வந்தான். அவன் முகத்தில் ஏதோ இறுக்கம். மேலும் கீழும் பார்த்தான். ஏதேதோ கேட்டான். தட்டுத் தடுமாறி பதில்சொல்லிக்கொண்டிருக்க “மரி” என்று அழைத்து பின்புறம் சென்றான். இரண்டு மூன்று சந்துகள் நான்கைந்து படிகட்டுகள் என்று இழுத்துக்கொண்டு போனவன் சின்ன ஹால் ஒன்றில் போய் நின்றான். அறையில் மங்கிய வெளிச்சத்தை மட்டுமே இரண்டு டியூப் லைட்டுகள் பரப்பிக்கொண்டிருந்தன. சுவர் முழுக்க மெல்லிய சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது.
எனக்கு கைக்கால்கள் அப்போதிலிருந்தே நடுக்கத்தில்தான் இருந்தன. கை நடுக்கத்தை மறைப்பதற்காகக் கைகளைப் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டேன். உள்ளே இன்னொருத்தன் இருந்தான். அவனும் இவனைப் போலவே இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு என்னை மேலும் கீழும் பார்த்தான். எனக்குச் சங்கடமாக இருந்தது. உண்மையிலேயே இந்தக் கதையை எழுதத்தான் வேண்டுமா என்று இன்னொருமுறை யோசித்துக்கொண்டிருந்தேன்.
எந்த மாதிரி வேண்டும் என்று என்னைக் கூட்டிவந்தவன் கேட்டான். தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். அவனே சில பதில்களைச் சொல்லி என்னைத் தேர்ந்தெடுக்கச் சொன்னான். சீனா, பிலிபைன்ஸ், மியன்மார், கம்போடியா என்று நான்கைக் கொடுத்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கச் சொன்னான்; எனக்குப் பள்ளியில் நான் தரும் தமிழ்மொழி கேளிவித்தாள் ஒன்று இப்படித்தான் வரும் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டேன். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவேண்டும்…
சீனாவைத் தேர்ந்தெடுத்தேன்.
அவன் ஏதோ சொல்ல ஏற்கனவே உள்ளே நின்றுகொண்டிருந்தவன் உள்ளே போய் நான்கு பேரைக் கொண்டுவந்து நிப்பாட்டினான். அதில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டுமாம். முதலில் நின்றுகொண்டிருந்தவளைக் காட்டினேன். அவளுக்கு என்பது வெள்ளியாம். அதைக் கொடுத்துவிட்டு கையைப் பிசைந்துகொண்டிருந்தேன். இந்தக் கதை பத்திரிகையில் வந்தாலும் பத்துவெள்ளி கூட கிடைக்காதே என்ற யோசனை வேறு.
அவள் எல்லாம் தெரிந்தவள் போல உள்ளே நடந்து சென்றாள். நான் அவள் கூடவே போகவேண்டும் என்று தெரிந்தது. பின்தொடர்ந்து போனேன். உள்ளே செல்லச் செல்ல ஏதோ கெட்ட வாடை குடலைப் பிரட்டிப்போட்டது. மங்கிய வெளிச்சம் பார்வையை மறைத்தது.
ஒரு அறைக்குள் நுழைந்தாள். நானும் உள்ளே நுழைந்து அடுத்தது என்ன என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த அறை முழுக்க நோட்டமிட்டேன். இரண்டு பேர் படுக்கக்கூடிய அளவில் ஒரு கட்டில் அறையில் பிரதானமாக இருந்தது. பலகையால் ஆன பழைய கட்டில். மலிவு விலையில் வாங்கிய மெத்தையும் தலையணைகள் இரண்டும் இருந்தன. லேசாகக் கலைந்தபடி இருந்தது கத்தரிப்பு நிறத்திலான மெத்தை விரிப்பு. எல்லாவற்றையும் சுற்றி நோட்டமிட்டேன். இதற்காகத்தானே வந்தேன்?
அவள் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. நான் இன்னமும் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தேன். அறையின் இடதுபுறத்தில் பாத்ரூம். உள்ளே போய் எட்டிப்பார்த்தேன். கருமம்! பயங்கர கவிச்சி நாத்தம்! முகத்தைச் சுளித்தபடி மீண்டும் வெளியே வந்தேன். வெளியே பார்த்த மசாஜ் போர்டு முதல் இந்த அறையின் பாத்ரூம் வரை எல்லாவற்றையும் மனதில் பதிந்துகொண்டிருந்தேன்.
அடுத்து அவளிடமிருந்து ஏதாவது தகவல் வந்தால் தேவலை என்று தோன்றியது. எப்படி வந்திருப்பாள்? எப்படி இந்த கும்பலுடன் சேர்ந்தாள்? இவளுக்கு என்ன கொடுப்பார்கள்? எங்கே தங்குவாள்? இன்னும் எத்தனை நாட்கள் இந்தத் தொழிலில் இருப்பாள்? மாட்டிக்கொண்டாள் அவள் நிலமை என்ன? பல கேள்விகள் என்னிடம் இருந்தன.
மலாயில் பேசினேன். அவளுக்குப் புரியவில்லை. “சே! சீனா நாட்டுக்காரியாச்சே… மலாய் புரியாதே”. சீனத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் சொன்னாள். அது எனக்குப் புரியவில்லை.
இருந்தாலும் சைகையில் முடிந்தவரை பேசினேன். என்னை ஏதோ கிறுக்கனைப் பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தாள். வந்ததைச் செய்யாமல் கையையும் காலையும் உதரிக்கொண்டிருந்தால் அப்புறம் வேறென்ன நினைப்பாள்?
அவளாகவே கிட்டத்தில் வந்து கண்ணத்திலும் உதட்டிலும் முத்தம் கொடுத்தாள். தூ! பயங்கரமான சிகரெட் நாத்தம்! தூ! அவள் முன்னே துப்பமுடியாமல் தவித்தது எனக்குத்தான் தெரியும். நெளிந்துகொண்டிருந்தேன். அடுத்து என்ன செய்ய?
திடீரென எவனோ ஒருத்தன் தடதடவென கதவைத் தட்டி என்னத்தையோ கத்திவிட்டு ஓடினான். அடுத்தக் கதவைத் தடதடவென தட்டும் ஓசையும் கேட்டது. சீனாக்காரியைத் திரும்பிப் பார்த்தேன். அவள் முகத்தில் பயங்கர கலவரம் தெரிந்தது. சுவற்று ஆணியில் மாட்டிவைத்திருந்த அவளுடைய மேல் சட்டையை அவசரமாக எடுத்து உடம்பில் மாட்டிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய நடவடிக்கை எனக்குப் புதிராக இருந்தது. என்னவென்று சைகையால் கேட்டேன். சீனத்தின் கய்யமுய்ய என்று கத்திக்கொண்டிருந்தாள். அவள் பேசியது என்னவோ “கொய்தியாவ் கொய்தியாவ்” என்றுதான் எனக்கு விளங்கியது. பதிலுக்கு நான் என் சுட்டுவிரலால் என்னைக் காட்டி “வெஜிடேரியன், வெஜிடேரியன்” என்றேன். அவளுக்கு ஏதோ அவசரம் இருந்தது. கதவைத் திறந்து வெளியே ஓட முயன்றாள். அவள் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டேன். என் கைகளை உதற முயன்றபடி என்னவோ கத்திக்கொண்டிருந்தாள். முகத்தில் பயமும் இறுக்கமும் தெரிந்தது. திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கூர்ந்து கவனித்தால் ஏதோ பழக்கமான வார்த்தை மாதிரியே… என்னது போலீசா?
ஒரு கனம் புலியை நேரில் பார்த்தது போன்ற பயம்! அதிர்ச்சியில் உடல் உதறல் எடுத்தது. சீனத்தி என் கையை உதறிவிட்டு ஓடிவிட்டாள். நானும் ஓடியாக வேண்டும். மாட்டினால் நாளை பேப்பரில் கலர் போட்டோவோடு செய்தி வரும். கதை எழுதத்தான் இங்கே வந்தேன் என்று சொன்னால்…
எங்கே ஓடுவது? எப்படி ஓடுவது? எல்லாமே சூனியமானது. சுற்றும் முற்றும் பார்த்தேன். எதுவும் உதவுகிற மாதிரி தெரியவில்லை. கட்டிலுக்கடியில் ஒளிந்துகொள்ளலாமா? சே! அது ரொம்ப பழைய டெக்னிக்! வேலைக்காகாது. கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தேன். ஒரே கய்யமுய்யவாக இருந்தது. அந்தப்பக்கம் ஓடினால் கண்டிப்பாக மாட்டிக்கொள்வேன். எல்லாரும் எங்கெங்கே ஓடிப் போனார்கள், ஒளிந்துகொண்டார்கள்? ஒன்றும் பிடிபடவில்லை.
அந்த அறையையே சுற்றிச் சுற்றிப் பார்த்தேன். ஒரே ஒரு சன்னல் மட்டும் வழிகாட்டுவது போன்று இருந்தது. எக்கிப் பார்த்தேன். நான் இரண்டாவது மாடியில் இருக்கிறேன் என்று அப்போதுதான் தெரிந்தது. எகிரி குதித்தால் எலும்பு உடைவது நிச்சயம்! என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், யோசிப்பதற்கான நேரம் அதிகமில்லை. ஆட்கள் அங்கும் இங்கும் ஓடும் ஓசை கொஞ்ச கொஞ்சமாய் நெருக்கத்திற்கு வந்தது.
உயிரை விட மானம்தான் பெரியது என்று சன்னலின் விளிம்பில் ஏறினேன். இன்னொரு சிந்தனை. எகிறி குதித்துத் தப்பித்துவிட்டால் பரவாயில்லை. கை கால் முறிந்து தப்பிக்கமுடியாமல் மாட்டிக்கொண்டால்? இருதயத் துடிப்பு சிக்கிரம் சீக்கிரம் என்று அலாரம் அடித்துக்கொண்டிருந்தது. அடக் கடவுளே! ஒரு கதை எழுத இத்தனையும் நான் படனுமா? இது எனக்குத் தேவையா என்று நெற்றியில் அடித்துக்கொண்டேன்.
கீழே ஏதாவது இருந்தால் அதன் மேல் குதிக்கலாம் என்று நினைத்து கவனித்தேன். ஒன்றும் இல்லை. புளோக்கின் பின் பகுதி என்பதால் அங்கு ஒரே நிசப்தமும் இருளும்தான் நிறம்பியிருந்தது. அம்மா தாயே காப்பாத்து என்று சத்தம் போடாமல் சொல்லிக் கீழே குதித்தேன். தரையைத் தொட்டதும் பெரிய அதிர்வு உடலுக்குள் ஓடியதைச் சில கனங்கள் உணரமுடிந்தது. எம்பி எம்பி குதித்து இன்னும் இருளான இடத்துக்கு ஓடினேன்.
இருளில் ரொம்ப நேரம் ஒளிந்திருக்க முடியாது. புளோக்கின் பின்னாலேயும் போலீஸ் வரலாம். ஓடிப்போய் பண்டாராயா குப்பைத் தோம்பில் எகிறி குதித்தேன். உள்ளே இருந்த பூனை அதனுடைய பாஷையில் கெட்ட வார்த்தையில் என்னைத் திட்டிவிட்டு எகிறி குதித்து வெளியே ஓடியது. இப்போது எனக்கு உள்ளே பாதுகாப்பாக இருப்பதாக ஓர் உணர்வு.
கைகால் நடுக்கம் குறைந்தபாடில்லை. உடல் முழுக்க பயங்கர ரணமாகியிருந்தது. குளிரில் பற்கள் டைப்படித்துக்கொண்டிருந்தன. இரு கைகளையும் பிணைத்துக்கொண்டு வாயிலிருந்து சூடான காற்றை ஊதி வெப்பமேற்றிக்கொண்டிருந்தேன். மூச்சை இழுக்கும்போதெல்லாம் எல்லா குப்பையின் நாற்றமும் என் நுரையீரலுக்குச் சென்று வெளியேறியது. நாற்றத்தைப் பொருட்படுத்தவில்லை. வலது கால் எதிலோ குத்திக்கொண்டிருந்தது. அதைத்தான் தாங்கமுடியவில்லை.
முதலில் போனை எடுத்து அடைத்துவைத்தேன். சத்தமோ அசைவோ எதுவும் இல்லாமல் குப்பையோடு குப்பையாக ஐக்கியமானேன். ஹ்ம்ம்… என் நிலமையப் பாத்தியா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். மனதுக்குள்தான்!
நான்கு மணிநேரம் கழித்துத்தான் வெளியே வந்தேன். எல்லாம் ஒரு கூடுதல் பாதுகாப்புக்காகத்தான். எங்கே என்னென்ன அடிபட்டது என்று எதுவும் தெரியவில்லை. மெதுவாக நொண்டி நொண்டி வண்டிக்குப் போனேன். வண்டியில் ஏறியதும்தான் ஒரு நிம்மதி.
வண்டியில் ஏறியபின்னர்தான் என்னுடைய கோலத்தைப் பார்த்தேன். அசல் பிச்சைக்காரன் மாதிரி இருந்தது. என்னுடைய புதுச்சட்டை நாசமாயப் போனது. சப்பாத்து கிழிந்துவிட்டிருந்தது. சீட்டில் சாயாமல் வண்டியை எடுத்தேன். நான் வீடுபோய் சேர மணி விடியக்காலை மூன்றரை!
அவ்வளவுதான்; இனி எல்லாம் சுகம் என்று நினைக்கிறீர்களா? அதுதான் இல்லை. இன்னும் கதையைக் கேளுங்கள்.
நான் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்திருந்தபோது என் மனைவி வீட்டில் இல்லை. பிள்ளைகள்தான் இருந்தனர். வண்டி சத்தம் கேட்டதும் ஓடிவந்து வெளியில் நின்று அதிசயமாய் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் சொல்லித்தான் என்னைக் காணவில்லை என்று என் மனைவி ஊரே தேடியிருக்கிறாள் என்று தெரிந்தது.
போனை எடுத்தேன். அடைத்து வைத்திருந்ததை மீண்டும் உயிர்ப்பித்தேன். ஐம்பத்து எட்டு மிஸ்ட் கால்ஸ்! போலீசிடம் இருந்து தப்பித்துவிட்டேன். இவளிடமிருந்து எப்படித் தப்பிக்கப்போகிறேன் என்றுதான் மிரட்சியாக இருந்தது. நல்லவேளை. எங்களுக்குள் எந்த சண்டை வந்தாலும் பத்திரிகைக்குப் போகாது என்று சின்ன அசட்டு நிம்மதி.
உடனடியாக அவளுக்கு போனைப் போட்டேன். போனை எடுத்ததும் அழும் ஓசை தான் முதலில் கேட்டது. அப்புறம் சிலப்பல வார்த்தைகள் சொல்லித் திட்டினாள். அதெல்லாம் இப்போது எதற்கு? அடுத்ததாக நடந்தது என்ன என்று கேளுங்கள்!
அவள் வீட்டுக்கு உடனே வருவதாகச் சொல்லித்தான் போனை வைத்தாள். கூடவே அவளுடைய தடிப்பயல் அண்ணன்களும் வருகிறார்களாம். அவர்கள் வந்து சேர்வதற்குள் உடுப்பைக் கழற்றிக் குப்பையில் போட்டுவிட்டு அவசர அவசரமாகக் குளித்துமுடித்து வெளியே வந்தேன்.
சில நிமிடங்கழித்து அவர்கள் வந்து சேர்ந்தார்கள். என் மனைவி என்னைக் கட்டிப்பிடித்துக்கொள்வதுபோல ஓடி வந்தாள். கிட்ட வந்ததும் “ஹ்ம்ம் கருமம்! என்ன இது மேல ஒரே குப்பத்தொட்டி நாத்தம்?” என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று ஒன்றுமே தோன்றவில்லை. நல்லாத்தானே குளித்தேன்?
“சரி! முதல்ல போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க” என்றாள். மறுபடியும் போலீசா? “எதுக்கு?” என்றேன். கைகள் நடுக்கத்தை மறைக்க பின்னால் கட்டிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டேன்.
“எங்கியோ போய் தொலைஞ்சிட்டீங்கன்னு போய் கம்ப்லைண்ட் குடுத்துட்டு வந்தேன். அதான் வந்துட்டீங்களே. போய் நீங்க கிடைச்சிட்டீங்கன்னு சொல்லவேணாமா?” என்றாள்.
எனக்கு போலீஸ் மீதான அரட்சி இன்னும் தீரவில்லை. அவர்களையே போகச்சொல்லி கட்டாயமாகச் சொல்லிவிட்டு எழுந்துபோய் கட்டிலில் விழுந்ததுதான்! மறுநாள் பயங்கர காய்ச்சல்.
அப்போது எடுத்த முடிவுதான். கடைசியாக அந்தக் கதையை மட்டும் எழுதிவிட்டு முழுக்கு போட்டுவிட்டேன். அந்தக் கதை அருமையாக மிகத் தத்ரூபமாகத்தான் எழுதியிருந்தேன். பல இதழ்களுக்கு அனுப்பியாகிவிட்டது. இதுவரை யாரும் இன்னும் பிரசுரிக்கவில்லை.
ஹ்ம்ம்… இதெல்லாம் நடந்து இரண்டு வருஷமிருக்கும். இன்னும் என்னால் அவற்றையெல்லாம் மறக்கமுடியவில்லை. அட… நான் கதை எழுதிய கதைகளைத் திரட்டியே ஒரு கதை எழுதிவிடலாம் போல இருக்கே?
– மலேசிய தேசிய பல்கலைக்கழகம் நடத்திய 2013ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் தேர்வு பெற்ற கதை