நான்கு சுவர்கள்
கதையாசிரியர்: திக்குவல்லை கமால்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2026
பார்வையிட்டோர்: 78
(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அதிகரித்து வரும் வேகம் எனக்கு நன்றாக விளங்கியது. பல வருடங்களுக்கு முன்பென்றால் இவ்வளவு வேகமாகச் சுவர்கள் நெருங்கி வரவில்லை. அந்நாட்களில் சுவர்கள் தொலைவில் இருந்ததால், அவை வேகமாக நெருங்குவது எனக்கு அவ்வளவு விளங்காதிருந்திருக்கலாம்.
இவ்வாறாக சுவர்கள் என்னை நோக்கி நெருங்குவதை நான் அவதானிக்காது இருந்திருந்தால்.. என்று எத்தனை தடவை நான் எண்ணியிருக்கிறேன். இருந்தும் எதிர்பாராத வகையில் சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நோக்கி வருவதைக் கண்டேன். அன்று முதல் எப்போதோ ஒருநாள் அவை பயங்கர மாக மோதி, நான் தகர்ந்து சப்பையாகி விடுவே னென்ற பயம் என்னைத் தொற்றிக் கொண்டது.
நான் இந்தச் சுவர்களுக்கிடையில் எப்படி சிக்கிக் கொண்டேன் என்பது எனக்கு சரியாகப் புரியவில்லை. என்னை இங்கே சிறைப்படுத்தியது கடவுளாக இருக்க வேண்டும் என்றே ஒரு காலத்தில் நான் கருதினேன். பிறிதொரு காலகட்டத்தில் இது எனது தலைவிதிப்படி நடைபெறுவதாக இருக்கலாமென்று எண்ணினேன். யாருக்குத் தெரியும் ஒருவேளை அப்படி இருக்கலாம். சில நேரங்களில் அதிகம் பேர் செய்வது போல் எல்லாவற்றையும் அம்மா அப்பாவின் தலையில் சுமத்திவிட்டுப் பேசாமல் இருந்து விடுவேன்.
என்னை இதற்குள் சிறைப்படுத்திய ஆரம்ப நாட்களில் இது ஒரு பரந்த விசாலமான வெளி. எந்த எல்லையும் தெரியவில்லை. நான்கு பக்கமும் மிக நீண்டே தெரிந்தது.
கிழே நிலம். மேலே ஆகாயம். அந்நாட்களில் நான் இதற்குள்ளே செய்யாதது எதுவுமில்லை. அழுதேன்… சிரித்தேன்… ஊர்ந்தேன்… தவழ்ந்தேன்… இருந்தேன்…நடந்தேன்… ஓடினேன்… பாய்ந்தேன்… விளையாடினேன்… நடனமாடினேன்… இவ்வாறே நினைத்ததெல்லாம் செய்தேன். இதற்குள்ளே இருபது வருடங்கள் கழிந்த பின்பே என்னைச் சுற்றி நான்கு சுவர்கள் இருப்பது எனக்க ஓரளவு தெரியவந்தது.
இன்னும் சிலகாலம் சென்றபோது தான் அந்த நான்கு சுவர்களும் மெல்ல மெல்ல என்னை நோக்கி வருவதை புரிந்து கொண்டேன். அன்று முதல் எனது சாதாரண வாழ்க்கை சிக்கலாகியது. தன்னைத் தகர்த்து தூள்தூளாக்குவதற்காக மெல்ல மெல்ல நெருங்கி வரும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு ஒரு மனிதனால் நினைத்த வாழ்க்கையைக் கொண்டு நடாத்த முடியுமா என்ன?
தகர்ந்து தட்டையாகிப் போவதை உணர்ந்து கொண்ட நாளிலிருந்தே, நான் பைத்தியம் போல் துடித்ததெல்லாம் அந்த மோசமான தலைவிதியிலிருந்து விடுபட ஏதாவதொரு வழியைத் தேடிக் கொள்ளத்தான்.
இப்பொழுது நிலைமை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இதனுள்ளே சிறைப்பட்டு இப்போதைக்கு நாற்பது வருடங்களாகின்றன. கடந்த காலம் முழுவதுமே மெல்ல மெல்ல நெருங்கி வந்த நான்கு சுவர்களும், எந்தவித அனுதாபமும் காட்டாமல் எனக்கு நடமாடவிருந்த கொஞ்ச நிலப் பரப்பையும் பறித்துக் கொண்டு விட்டது.
முன்பு நீண்டு பரந்ததாக நான் நினைத்திருந்த அந்தப் பெருவெளி ஒரு மைதான அளவுக்கு அமுங்கியது. இன்னும் சிறது காலம் செல்கையில் ஒரு மண்டபம் போன்ற பகுதியே எனக்கு எஞ்சியது. இறுதியாக ஒரு சாதாரண அறையளவு இடமே எனது எல்லையாகி விட்டது.
அந்தச் சுவர்கள் வானத்தை நோக்கி உயர்ந்து கிடந்தன. விடுதலைக்கு ஒரே வழி சுவர்களுக்கு மேலால் பாய்ந்து செல்வதுதான். இருந்தும் சுவர் களுக்கு மேலாகப் பாய்ந்து செல்ல எனக்கு ஒரு வழி யும் இருக்கவில்லை. வரவர அதிவேகத்தோடு அச்சுவர்கள் நெருங்கின. போகிறபோக்கைப் பார்த் தால் இன்னும் பத்து வருடமளவில் நான்நிச்சமாக இந்தச் சுவர்களுக்குள் அகப்பட்டு சிதைந்து போவேன். அதிலிருந்து தப்பிக் கொள்ள ஒரு வழிமுறையையும் நினைக்க முடியாத நான் பைத்தியம் பிடித்தது போல் ஆனேன்.
மேலும் இரண்டொரு வருடங்கள் நகர்கை யில் மேலும் சுவர்கள் நெருங்கி எனக்கு எஞ்சியிருந்த அறையளவு இடம் இன்னும் சிறிதாகியது. என்னைச் சுற்றியிருந்த. நான் விரும்பிய… ஆசைப்பட்ட… நான் சம்பாதித்த பொருட்களுடன் இன்னுந்தான் உள்ளே இருப்பது கடும் சிரமம் என்பது எனக்கு விளங்கியது. எனக்கு எஞ்சியுள்ள சின்னஞ்சிறுஇடத்தில் அப்பொருட்களுடன் மென்மேலும் சிரமத்திற்குள்ளாக நேர்ந்தது. தொடர்ந்தும் விடுதலைக்காகப் போராடு வாராயின், அந்தப் பொருட்களை அகற்றிகொஞ்ச காலமாயினும் வாழ்வதற்காக சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென எண்ணினேன்.
எனது தலைமயிரொன்றைப் பிடுங்கிக் கொண்டேன். பரீட்சார்த்தமாக அதனை எப்படி விசாலாமென்று பார்த்தேன். எப்படியென்று தெரிய வில்லை! நான்கு பக்கமும் பிரமாண்டமான சுவர்கள். கீழே கரடுமுரடான நிலம். எனக்குள்ளிருந்து பெருமூச் சொன்று வெளியேறியது. பயம் காரணமாக என்னை அறியாமலேயே மேலே பார்த்தேன். சுவர்களுக்கு மேலே தெரிந்த வெளியே ஒரேயொரு வழி. நான் சும்மாதான் தலை மயிரைச் சுருட்டி மேலே வீசிப் பார்த்தேன்.
என்ன ஆச்சரியம்… அந்தத் தலைமயிர் வேக வேகமாக மேலே ஈர்க்கப்பட்டு சட்டென்று காணாமல் போயிற்று. நான் அவசரஅவசரமாக எனது தலை மயிர்களை எல்லாம் பிடுங்கிப் பிடுங்கி மேலே வீசினேன். கணப்பொழுதில் அவை காணாமல் போய் விட்டன. அதாவது, என்னால் தொடர்ந்து நகர்ந்து நொறுங்குவதற்கு எதிராக போராட முடியும் என்பது உறுதியாகி விட்டது.
அவர்கள் எனக்கிருந்த சொற்ப பரப்பையும் விழுங்கிக் கொண்டிருந்தமையால், என்னைச் சுற்றிக் குவிந்திருந்த எனது பொருட்களை எல்லாம் அகற்றி, கூடிய சிக்கிரம் வெற்றிடத்தை உருவாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம். அதனால் நான் எனது உடைமைகளை எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வீச முடிவு வெய்தேன்.
முதன்முதலில் நான் எனது காரைத்தான் தூக்கினேன். அது புத்தம் புது எலியோன் கார். இன்றும் கடன் கூடக் கட்டி முடியவில்லை. நான் கண்ட பலநூறு கனவுகள் ஒன்று சேர்ந்தே அக்கார் என் கைக்கு எட்டியது. அதனால் அதனை வீசிவிட மனம் இடம்தரவே இல்லை. இந்தக் காரை எப்படியாவது வைத்துக் கொள்ள வேண்டுமென ஒரு கணம் நான் நினைத்தேன். ஆனாலும் என்ன? அப்போதுதான் ை சுவர்கள் மேலும் இரண்டு மூன்றடி முன்னே வந்துள்ளதை அவதானித்தேன்.
எனக்கு இன்னும் அதிக காலமில்லை. இவற்றை எல்லாம் எறிந்து விட்டு, என்னைச் சூழவுள்ள இடத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளாவிட்டால், இன்னும் சில மணித்துளிகளில் கூட நான் தகர்ந்து நொறுங்கிப் போக வாய்ப்புண்டு நான் உடனே எனது எலியான் காரை மேலே எறிந்தேன். அது நொடிப் பொழுதில் மறைந்து போய் விட்டது.
அடுத்ததாக நான் எனது வீட்டைத் தூக்கிய போது அதனுள்ளிருந்த எனது அம்மா, அப்பா, மனைவி, மகன், மகள் எல்லோருமே கீழே விழுந்து விட்டனர். இது மூன்று மாடி வீடு. வீட்டின் சுவர்கள் இவ்வளவு காலமாக நான் உழைத்த ரூபாய் நாணங் களினால் தான் கட்டப்பட்டிருந்தன. யன்னல் பிடவை கள் ஆயிரம் ரூபாய்த் தாள்களால்தான் தைக்கப்பட்டி ருந்தன. நான் பைத்தியம் பிடித்தவனாக வீட்டையும் தூக்கி வீசினேன். அதுவும் காணாமல் போய் விட்டது.
இதற்கிடையில் நான் முக்கியமான விடய மொன்றை அவதானித்தேன். நான் இவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக வீசிக் கொண்டிருந்தபோது நான்கு சுவர்களுக்கிடையிலான சிறிய இடம் வரவர குறுகிக் கொண்டு வந்தது. நான் இருந்த நிலமும் சிறிது சிறிதாக மேலே எழத் தொடங்கியது. அதாவது நான் எனது பொருட்களை வெளியே வீசவீச, நான் கொஞ்சம் கொஞ்சமாக சுவர்களின் உச்சத்தை நோக்கி உயர்ந்தேன். இவ்வாறு தொடர்ச்சியாக மேலே சென்றால், சிலபோது சுவர்களை உச்சத்தை அடைந்துவிடலாம். அதேவேளை தொடர்ந்தும் நான்கு சுவர்களும் வரவர நெருக்கமாவ தால், செய்வதொன்றை சீக்கிரமாகவே செய்து விட வேண்டுமென்ற கட்டம். அதனால் எனக்கென்றிருந்த எல்லாவற்றையுமே கடும் கோபத்தோடு வீசத் தொடங்கினேன்.
மிக முக்கியமென்று கருதி நான் என்னருகிலேயே வைத்திருந்த அந்தப் பையையும் வீசினேன். பையில் காணப்பட்ட கிழிசலினூடாக மாக்ஸிய வாதம், அமைப்பியல் வாதம், பின் நவீன வாதம் மட்டுமன்றி, சின்னி சின்ன வாதங்கள் பலவும் சேர்ந்து கீழே விழுந்துவிட்டன. விடவில்லை அவற்றையெல்லாம் பொறுக்கிப் பொறுக்கி மீண்டும் வீசினேன். கூடவே எனது கவிதை, சிறுகதை, நாவல், சித்திரம் போன்ற வற்றால் நிரம்பிய ஃபைல்களையும் எறிந்தேன். மதுபானப்போத்தல், சிகரட் அடிதுண்டுகள், அண்மை யில் டாக்டர் வழங்கிய மருந்து வகைகளையும் வீசினேன். விருப்பமே இன்றி சைமன் நவகத்தேகமவின் புத்தகங்களையும், சுனிலின்… விக்டர் ரத்நாயக்கவின் பாடல்களையும் கண்களை இறுகி மூடிக் கொண்டு வீசினேன்.
இப்போதைக்கு நான் கவனிக்கத்தக்க மட்டத்திற்கு உயர்த்தப்பட்டிருந்தேன். மிகவும் மகிழ்ச்சி என்னவென்றால், சுவர்களின் உச்சி ஓரளவுக்கு எனக்குத் தெரியக்கூடியதாக இருந்தது. சற்று நின்று நான் கொஞ்சம் களைப்பாறினேன். அப்போதுதான் சுவர்கள் நான்கும் கையெட்டும் தூரத்தில் இருப்பதைக் கவனித்தேன். தகர்த்து நொறுங்கும் கட்டம் மிக அருகாமையில்… இனியென்ன களைப்பாறல்?
இன்னும் எஞ்சியிருந்த சிலவற்றையும் ஒவ்வொன்றாக அருகே இழுத்தேன். பழைய காதலிகள் சிலர் ஒளிந்து கொள்ள முயற்சித்தனர். விடுவேனா? எல்லோரையும் பிடித்து வெளியே தள்ளினேன். அவர்களுக்குள் மறைந்திருந்த அழகிகள் சிலரையும் கூடவே தூக்கி எறிந்தேன்.
அதன் பின்னர் கல்லாகிக் போய் என்னையே பார்த்துக் கொண்டிருந்த நண்பர் கூட்டமொன்றுக்கும் என் கைகளால் பறக்க வேண்டி நேர்ந்தது. தொடர்ந்து…
“அம்மா அப்பாவைக் கூட இப்படி வீசலாமா?” என்று என்னிடம் யாரும் கேட்க வேண்டாம். இப்படிச் சப்பையாகிப் போவதை நீங்கள் பார்த்திருந்தால், என்னிடம் இப்படியொரு கேள்வியை ஒருபோதும் கேட்க மாட்டீர்கள். நான் கடும் சினத்தோடுள்ளேன். எனக்கு இதிலிருந்து விடுபட்டு சுதந்திரமடைவதே அவசியமாக உள்ளது. கொடூரமாகத் தகர்ந்து நொறுங்கிப் போவதிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறான நான் எனக்கென்றிருந்த எல்லாவற்றையுமே வெளியே வீசியபின்னர், நான்கு சுவர்களின் உச்சியிலிருந்தேன். நான்கு சுவர்களின் உள்ளேயும் அதன் வெளியேயும் ஒரு சூன்ய நிலையே காணப்பட்டது. இப்பொழுது நான்கு சுவர்களுக்கும் எனக்குமிடையே ஓர் அங்குல இடைவெளியே எஞ்சியிருந்துது. அதேபோல் நான் இங்கிருந்து வெளியேறிவிட சிறுகால அவகாசமே எஞ்சியிருந்தது. நான் ஒரு கணப்பொழுதாவது தாமதித்தால், நான்கு சுவர்களுக்குள் அகப்பட்டு முட்டை ஓடுபோல் துகள்களாகி விடுவேன். எனக்கென்றிருந்த எல்லாவற்றையுமே வீசியெறிந்துவிட்டேன். சரி, இனி நான் இங்கிருந்து வெளியேறுவது எப்படி?
இப்பொழுது இந்த நான்கு சுவர்களுக்கிடையே எஞ்சியிருப்பது சூன்ய நிலையும் நானும் மாத்திரமே. ஆஹா நான். என்னுடையதென்று சொல்லிக் கொள்ளக் கூடிய மிகப்பெறுமானமுள்ள விடயம், இன்னும் இந்த நான்கு சுவர்களுக்கு மத்தியில் தான் இருக்கிறது. ஆமாம் “நான்”.
இப்படித் தகர்ந்து நொறுங்குவதிலிருந்து தப்பிக் கொள்வதென்றால், இந்த நான்கு சுவர் களிடமிருந்து விடுபடுவதென்றால், நான் செய்ய எஞ்சியிருந்த ஒரேயொரு விடயம் “என்னை” இவ்விடத்தால் அகற்றிவிட வேண்டுமென்பது சட்டென்று எனக்கு விளங்கியது.
“என்னை” அகற்றுவதென்பது அவ்வளவு இலகுவானதல்ல. முன்பு வீசியெறிந்த எல்லாற்றையும் விட “நான்” மிகவும் பாரமானது. இருந்தும் “என்னை” வெளியேற்ற நான் உச்சக்கட்ட முயற்சியில் ஈடு பட்டேன். அந்தக் கணத்திலேயே நான்கு சுவர்களதும் பலத்த நெருக்குவாரம் எனக்கு விளங்கியது. மெல்ல மெல்ல நான் துடிப்பதும் எனக்கு விளங்கியது. சற்று முன் சூன்ய நிலை என்று சொன்னேன் அல்லவா? அது கூட இல்லாமல் போக ஆரம்பித்து விட்டது போல!
எதற்கும் கொஞ்சம் அமைதியாகக் காது கொடுங்கள். சிலவேளை எனது எலும்புகூட நொறுங்கிப் பொடிப் பொடியாகும் சத்தம் உங்களுக்கு கேட்கக்கூடும்.
– சிங்கள மூலம் : பிரியலால் கொக்கலகே தமிழில்: திக்குவல்லை கமால்.
– ஜீவநதி 12 ஆவது ஆண்டு மலர் மாசி 2019.