கதையாசிரியர்:
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 1,588 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிட்டக்கிட்ட நெருங்கிவந்து பயம் காட்டுறதைப் பொங்கல். 

மரங்களை விலை பேசி, விறகாக்கி, செங்கற் சூளையில் எடை போட்டுத் துட்டாக்கித்தான் வயித்து ஜீவனம். விறகுக்குப் பணம் வருவதில் இந்தத் தடவைதான். இந்த இடைஞ்சல். 

ராவும் பகலுமா யோசனை, மனசைப் போட்டுப் புரட்டிப் புண்ணாக்குகிற யோசனை, கண்ணுலே ஒறக்கத்தை ஒண்டவிடாம நச்சரிக்கிற யோசனைகள்… 

எம்புட்டுக் கொறைச்சு எடுத்தாலும் நானூறு ரூவா ஆகுமே! யாருகிட்ட கேக்க? எப்படிக் கேக்க? கேட்டா என்ன நெனைப்பாக… 

மனசுக்குள்ளேயே மருகி மருகி யோசித்தபிறகு- 

கடைசியிலே பக்கத்தூர்லே ஜவுளிக்கடை வைச்சிருக்கிற ராமச்சந்திரன்கிட்டே போனான். தனிப்பட்ட அந்தரங்கமா பேசினான். நிலைமையைச் சொன்னான். 

“அண்ணாச்சி, நம்ம கடை ரொம்பச் சின்னக்கடை. அம்புட்டுத் தொகைக்கெல்லாம் கடன் குடுக்க முடியாதே.” 

“இல்லே தம்பி, இந்த ஒரு தடவை நீங்க கட்டாயமா குடுத்து உதவணும். வேற பெரிய கடைகள்லே போய்க் கேக்க கூச்சமா இருக்கு. நீங்க குடுங்க தம்பி; தை பத்தாந் தேதிக்குள்ளே எப்படியும் கணக்கை முடிச்சிருவேன் தம்பி.” 

“நீங்க மூடிச்சிருவீக. இம்புட்டு கடன் தர்ரளவுக்கு எங்கிட்டே சக்தி இல்லியேன்னு யோசிக்கேன் அண்ணாச்சி.” 

“நீங்க என்னை நம்பினா…. உதவணும்.” 

“ஐயய்யோ, உங்களை நம்பாம வேற யாரை நம்பப் போறேன்? வாங்குன கடனை நெனைச்சுப் பாக்காம, வல்லங்கம் பேசற இந்தக் காலத்துலே… சொன்னா சொன்னபடி நடக்குற உங்களை நம்பாம இருப்பேனா?” 

“நம்பிக்கை இருந்தா…குடுங்க. தை பத்தாந் தேதிக்குள்ளே தலையை அடகு வைச்சாச்சும் உங்க கையிலே ரூவாயைக் குடுத்துருவேன் தம்பி” 

தலை மேலே சுமையாக வந்து ஏறிக்கிட்ட தைப் பொங்கலை நகர்த்தி விட்டாகணும்ங்கிற வெறியிலே – வேகத்துலே – வார்த்தைகள் அவசரமாய் ஓடிவந்தன. 

‘தை அஞ்சாந்தேதி வந்து ரூவாயை மொத்தமா வந்து வாங்கிட்டுப் போ’ என்ற சூளைக்காரரின் வாக்குறுதி, இவனது வார்த்தைகளுக்கு வலுவான பக்கபலமாக நின்றது. 

கடைக்காரன் ராமச்சந்திரன் தவித்தான். சித்தெறும்புக்குச் சோத்துப் பருக்கைகூட பெருஞ்சுமைதானே! சின்னச்சாமி கடன் கேட்கிற தொகையை நினைத்தால், மலைப்பாக இருந்தது. நாணயஸ்தன் சின்னச்சாமி வார்த்தையைத் தட்டவும் முடியவில்லை. அரிச்சந்திரன் வாக்கை சந்தேகிக்க முடியுமா? சந்தேகிக்கவே முடியாத ஒரு விஷயத்தை நிராகரிச்சிட முடியுமா? 

அரை மனசோடு உள்ளுக்குள் திணறிக்கொண்டே துணிமணிகளை எடுத்துப் போட்டான். 

ரொம்பப் பயம் காட்டிய தைப் பொங்கல் சிரமமில்லாமல் நகர்ந்தது. புதுத்துணிகளை உடுத்திக்கிட்டு உல்லாசமா – சந்தோஷமா சிரிச்சு மகிழ்ந்த புள்ளைகளைப் பார்த்துப் பார்த்துப் பெருமைப்பட்டான். புதுச் சட்டையையும், புதுப் பாவாடையையும், புள்ளைக காட்டிக் காட்டி பெருமையிலே பூரிச்சு நின்னதுக. பார்வதி புதுச் சேலையில் அஞ்சு வயசு குறைஞ்சு, புது அழகுலே நின்றாள். சிறகு விரிச்சு வண்ணத்துப் பூச்சியாய் ஓடியாடித் திரிஞ்ச கடைக்குட்டி முருகேசன். 

இவனுள் ததும்பி வழிஞ்ச தைப்பொங்கல் சந்தோஷம்.. 

சைக்கிளைத் துடைத்து, எண்ணெய் போட்டு, ஹாண்டில் பாரில் ‘கண்ணுப்பிள்ளை’ச் செடியைக் கட்டி, பெருமிதமாய் ஊரைச் சுத்தி கொண்டாடி முடிச்ச மறுநாளில்தான், அரிச்சந்திர சின்னச்சாமிக்குக் குரூர முகம் காட்டிச் சிரிச்சது சோதனை. 

தைத்திருநாளன்னிக்கு, ‘வலிக்குது’ன்னு நெஞ்சைப் பிடிச்ச சூளைக்காரர், மூடிமுழிக்கும்முன்னே கண்ணை மூடிட்டாராம். வாங்குன கடன், குடுத்த கடன் எதைப் பத்தியும் சொல்ல மதியில்லாம, போய்ச் சேர்ந்துட்டாராம். 

சேதி கேட்ட சின்னச்சாமி, கதிலங்கிப் போனான். காண்யஸ்தன்ங்கிற பேரே ரிப்பேராகி விடுமோன்னு பதறிப் பதைச்சான். 

கருமாதி முடியவே தை இருபதாகிப் போச்சு.கருமாதி முடிஞ்ச கையோடு, புள்ளைகளுக்குள்ளே சொத்துச்சண்டை தூள் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. விறகுப் பாக்கி பணம் கேட்டு போய் நின்ற இவனை, ‘ஏனென்று’ கேக்க ஒரு நாதியில்லை. இவனுக்கும் யாரிடம் கேக்கிறதுன்னு புரியலே. தொகை பெரியதாச்சே! 

கை வந்து சேருமாங்கிற கேள்வி திகிலாய் எழுந்தது. 

மரத்துக்காரனுக்குப் பணம் எப்படிக் கட்டறது? ராமச்சந்திரனுக்கு எப்படி நல்ல புள்ளையாகிறது? தை பத்துக்குள்ளே தலையை அடகு வைச்சாச்சும் தீர்ப்பதாகச் சொன்ன கணக்கு, இவனை உறங்கவிடாமல் தவிக்க வைத்தது. 

தை முப்பது முடியப்போகுது. என்ன செய்றது? 

‘பெரிய யோக்கியன் மாதிரி பேசி கடன் வாங்கிக்கிட்டுப் போனாரய்யா…இன்னும் ஆளையே கண்ணுலே காணலே. தலையை யாரும் அடகு வாங்க மாட்டேங்குறாகளோ.’ என்று ராமச்சந்திரன் ஊர்ஊரா கிண்டலாகச் சொல்லி அங்கலாய்ப்பதாக ஒரு பிரமை. மனசின் நிம்மதியை மென்று திங்கிற விதம்விதமான கற்பனைகள்… 

ரவ்விலும் இமைகள் ஒட்ட மறுத்தன. 

சூளையில் வரவேண்டிய ரெண்டாயிரத்துச் சொச்ச பணத்தை, வாங்காமல் விட்டுட முடியுமா? பெரிய பெரிய மனிதர்களிடம் வழக்கைச் சொல்லி, பஞ்சாயத்து வைச்சு, சாட்சிகளைக் கொண்ணாந்து நிறுத்தி, நாட்கணக்கில் விவகாரம் நடந்து, ‘பங்குனி கடைசியில் பணம் தருவது’ என்று ஒப்பந்தமாச்சு. 

மரத்துக்காரனைப் பாத்து விபரத்தைச் சொல்லி, சித்திரை அஞ்சுலே பணம் தர்றதாகத் தவணை வாங்கியாச்சு, ராமச்சந்திரனை எப்படிப் போய்ப் பார்ப்பது? எந்த மூஞ்சியோட போய்ப் பேசுறது? 

நினைச்சாலே மனசு கூசிக் குறுகுது. 

‘நீயும் ஒரு மனுசந்தானா? சோத்தைத்தான் திங்கிறீயா?’ன்னு கேட்டுட்டா… என்ன செய்றது? நாக்கைப் பிடுங்கிக்கிட்டுச்சாகவாமுடியும்? 

பாவம், அவனும் சின்னக் கடைக்காரன். அலமாரியிலே தனித்தனியா அடுக்கி வைச்சிருக்கிற துணிகளையெல்லாம் அள்ளிப் போட்டா… ஒரு பொட்டலத்துக்குள்ளே அடங்கிப்போகும். 

‘அம்புட்டுத் தொகைக்குக் கடன்விட ஏங்கிட்டே சக்தியில்லியே’ன்னு அவனும் மருகித் தவிச்சானே. இவன்தானே வற்புறுத்தி வாங்கிக்கிட்டு வந்தான்… 

சரி, சோதனை இத்தோட முடிஞ்சதுன்னு போச்சா? அதுதான் இல்லே. மாறி மாறிச் சோதனைகள். பட்டகாலிலேயே பட்டு, கெட்டகுடியே கெட்டு… தொட்ட காரியமெல்லாம் பித்தளையாகி..ச்சே! 

பார்வதிகிட்டே கெஞ்சிக் கூத்தாடி, காதுலே கிடந்த கம்மலை வாங்கிக்கிட்டு அடகு வைக்கப் புறப்பட்டான். ராமச்சந்திரனுக்காச்சும் நல்ல புள்ளையாகணும்ங்கிற தவிப்பு; பதைப்பு; பரபரப்பு. 

கல் பதிச்ச கம்மலை எந்தப் பேங்குலே அடகு வாங்கறான்? ஊர் ஊரா அலைஞ்சு ஒரு வட்டி கொடுக்கல் வாங்கல்காரனிடம் மூணு பைசா வட்டி பேசி, கம்மலுக்குப் பணம் வாங்கி ஊருக்குள்ளே நுழைஞ்சா… 

விதியைப்போல வாயைப் பிளந்துக்கிட்டு நின்னது இழவுச் சேதி. 

பார்வதியோட அய்யா போய்ட்டாராம்! தள்ளிவைக்கக்கூடிய சாதாரண துஷ்டியா…? பெரிய சாவு! அதிலும் பெண் குடுத்த மாமனார் சாவு! 

கம்மல் பணம், காரு, பஸ்ஸு, டிக்கெட் என்று கரைஞ்சு முடிஞ்சது. 

உள்ளுக்குள் இவன் உடைஞ்சு கலங்கிக் கரைஞ்சான். 

சின்னச்சாமி மனசுக்குள்ளே, நெருஞ்சிமுள்ளா ராமச்சந்திரன். எந்நேரமும் உறுத்துகிற நெருஞ்சிமுள்ளு. சுருக்சுருக்கென்று குத்தித் தன்மானத்தைக் கதற வைக்கிற நெருஞ்சிமுள்ளு. 

பகலோட கையைப் பிடிச்சுக்கிட்டு ராவும், இருட்டின் வாலைப் பிடிச்சுக்கிட்டுப் பகலுமாய் நாட்கள் அரவமில்லாமல் நகர்கின்றன. 

சும்மா இருந்தா முள்ளை எடுக்க முடியுமா? 

வீட்லே கட்டிக்கிடந்த வெள்ளாட்டை விலை பேசி முடிச்சாச்சு. ஏவாரி ரூவாயைக் குடுத்துட்டு, ஆட்டைப் பிடிக்க வந்திருந்தான். 

‘ரெண்டு ரோமத்தைப் பிடுங்கிக்கோ.’ 

சிரத்தை இல்லாமல் ரெண்டு விரலுக்குள் அகப்பட்ட ரோமங்களைப் பிடுங்கிக் கூரையில் சொருகிக் கொண்டான். சாஸ்திரம், ஆட்டை வித்தாலும், இந்த வீட்லே கால்நடை யோகம் தொடர்ந்து இருக்கணுமாம். அந்த யோக வித்துதான் இந்த ரோமங்கள். 

ஆடு போயிருச்சு. அது நின்ன இடம், சாண வீச்சமும் – மூத்திர நாற்றமுமாய் – சூன்யமாய் – மனசை உறுத்துகிற சூன்யமாய். 

பெருமூச்சோடு புறப்பட்டான். சைக்கிளை எடுத்தான். ‘ராமச்சந்திரனைத் தேடி ரூபாயைக் குடுத்துரணும்!’ சைக்கிளை நகர்த்தி, பெடலில் காலை வைச்சபோது… 

வீட்டுக்குள் பார்வதி பயத்தோட கதறிக் கூப்பாடு போட்டாள்.

“ஐயய்யோ… இங்க வாங்களேன்… எம் புள்ளையைப் பாருங்க… ஐயய்யோ, எம் மவனுக்கு என்னமோ செய்யுதே.”

மனசின் உள் நரம்புகளை அதிரச் செய்கிற கதறல்! 

சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் ஓடினான். பார்வதியின் மடியில் முருகேசன். பறவையாடாமல் நிலைச்ச முழி. கோணிக்கொண்டு போகிற வாய். வெட்டி உதறுகிற கைகால்கள். கடைக்குட்டியாய், பூங்கொத்தாய் பொறந்த ஒரேயோர் ஆம்பளைப் புள்ளை. சாவோட மல்லுக்கட்ட முடியாமல், காலும் கையும் தனித்தனியா துடிச்சிக்கிட்டிருக்கான். 

கிராமமே அந்த வீட்டுக்கள்ளே. அலையக்குலைய ஓடித்திரிகிற பெண்கள். ஆளுக்கொரு கைப்பக்குவம் செய்கிற பரபரப்பான கிழவிகள். 

“வேப்பெண்ணை வாங்கிட்டு வா, வடபூடு கொண்டா.”

“குருதைலம் எடுத்துட்டு வாடி.” 

“அரப்பு,நா எடுத்துட்டு வாரேன்.” 

“கிண்ணத்துலே மூத்திரம் பிடிச்சிட்டு வாரேன்.” 

“உள்ளங்கால்லே தேய்.” 

“வெங்காயத்தை மென்னு காதுலே ஊது.” 

ஆளுக்கொரு உத்தரவுகள். யாரையும் எதிர்பாராமல் புயலாய்ச் சீறுகிற மனிதர்கள். சிறகு கட்டிக்கொண்டு பறக்கிற வேலைகள். ஒரே மனிதமாய் உறைந்து, பதைத்துச் செயல்படுகிற மனிதர்கள்! 

ம்ஹும்! எதற்கும் மசியாத ஜன்னி. வீட்டின் மூலை முடுக்குகளில் நின்று மிரட்டுகிற சாவின் கொடிய நெடி. எட்டு வயசுச் சிறுவனிடம் மல்லுக்கு நிற்கிற மரணம்! 

‘புள்ளையை உசுரோட பாக்க முடியாதோ’ என்கிற திகில்! ஒற்றைப் புள்ளை. மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறந்த ஆண்பிள்ளை. திருச்செந்தூர் முருகனுக்கு நேர்த்திக்கடன் போட்டு, தவம் இருந்து பெற்றெடுத்த முருகேசன். 

ராஜபாளையம் ஆஸ்பத்திரியில், வெள்ளாடு வித்த பணம், ஊசியும் மருந்தும், பீசுமாய் கரைஞ்சு முடியவும், முழுசாக முருகேசன் வீடு வரவும் சரியாப் போச்சு. 

மாசி பொறந்து, தேதி பதினைஞ்சு ஆச்சு. சின்னச்சாமி மனசுக்குள்ளே திகில். ஒரு நிமிடம்கூட விடாமல் உறுத்திக் கிட்டேயிருக்கிற நெருஞ்சி முள்ளு; ராமச்சந்திர முள்ளு. 

இதுலே ராமச்சந்திரன் போக்கே வேறு, இவனை ரொம்ப அவஸ்தைப்படுத்தது. உள் மனசுக்குள்ளே செருப்பால் அடிபடுகிற அவமானம். 

எதிர்ப்படுகிற நேரங்களில் “என்னண்ணாச்சி ‘தை பத்து’ன்னு தவணை சொன்னீகளே, நாளாச்சே. அந்த ரூவாயைத் தரக் கூடாதா”ன்னு வாயைத் திறந்து ஒரு வார்த்தையாச்சும் கேக்கக் கூடாது? பாவி! 

அப்படிக் கேட்டால்… ஏதாச்சும் பதிலை நடந்த சமாச்சாரங்களை – சொல்லிவிடலாமே! சொன்னால், இவன் மனசின் ஆற்றாமையாச்சும் குறையுமே! மனப்பாரம் கொஞ்சம் இறங்குமே! 

பாவிப்பயல்… அதற்கும் ஒரு வாய்ப்பு தரமாட்டேங்குறானே. 

அவனது ஊரில் பார்த்தால், ‘வாங்கண்ணாச்சி” என்பான். அத்தோட சரி. மறுவார்த்தை பேசமாட்டான். வேறு இடங்களில் எதிர்ப்பட்டால்… முகத்தில் ஒரு சிரிப்பு. பரிச்சயமானவர் என்பதற்கு அடையாளமான அந்த அறிமுகச் சிரிப்பு. அம்புட்டுதான்! 

ஊமையாக மௌனம் சாதிச்சு, உசுரைக் குத்திப் பிடுங்குகிறானே! 

சிரிக்கிற சிரிப்பிலே.. ‘ஒன்னோட யோக்கியதை இம்புட்டுத்தானா?’ என்று மனசைக் கிழிக்கிறானே! ‘நீதான் அரிச்சந்திரனாக்கும்’ என்று ஊரதிர அவன் இளக்காரமாய்ச் சிரிக்கிற மாதிரி ஒரு பிரமை. 

இவனுள் கலக்கம். அவனது மௌனத்தை நெனைக்க நெனைக்கச் சின்னச்சாமிக்குள் மயான காண்டம்! 

தைப்பொங்கல் சந்தோஷத்துக்கு விலையாக இம்புட்டுப் பெரிய காயம் ஏற்படுமின்னு இவன் கனவுலேகூட நெனக்கலியே. இத்தனை காலமா சிரமப்பட்டு சம்பாதிச்ச ‘விறகு வெட்டி அரிச்சந்திரங்’கிற பேரையே… தைப்பொங்கல் முழுங்கி மூளியாக்கிடும்னு நெனைக்கலியே… 

சின்னச்சாமிக்குள் வாட்டி வதைக்கிற பயம். கடனை அடைக்க எடுத்துக்கிட்ட முயற்சிகளெல்லாம் சறுக்கி, சறுக்கி… இவனையும், நாணயஸ்தன்கிற பேரையும் அதள பாதாளத்தில் அமுக்கப்பாக்குதே வாழ்க்கை. 

சகல பாதைகளும் அடைபட்டுப் போனபிறகு, வேற வழியேயில்லைங்கிற விளிம்புலே… உசுருக்கு உசுரான சைக்கிளை வித்துட வேண்டியதுதான்னு முடிவுக்கு வந்துட்டான். 

சைக்கிள் எல்லாருக்கும் ஓர் இரும்புக் கழுதை. மிதிச்சா நகர்கிற வாகனம். இவனுக்கு அப்படியல்ல. அது இவனது உயிர்.மானம். அதுக்கும் மேலே. 

இவனைப் பொறுத்தவரை சைக்கிள்ங்கிறது, குடும்பத்துலே விளக்கேத்தி வைச்ச குலதெய்வம். இவனது உள் ஆற்றல்களையே இவனுக்கு அறிமுகப்படுத்தி வைச்ச அபூர்வ சமாச்சாரம். 

நாதியத்தவனா – வேரறுந்த கொடியா – அலைஞ்சு திரிஞ்சவன், டீக்கடைகளிலும் பலசரக்குக் கடைகளிலும் உடம்பு வளையாத வேலைகளாகப் பார்த்துப் பழகிவிட்டு, கிராமத்துக்கு வந்த இவனுக்குப் பார்வதியை ‘மூய்த்து’ வைத்தார்கள். 

இவனுக்கேத்த தொழில் எதுவும் இந்தப் பட்டிக்காட்டிலே அமையலே.காட்டுவேலை செய்றதுக்கு உடம்பு வளைய மறுத்தது. நாளும் பொழுதும், அவலமும் கேவலமுமாய் நகர்ந்தது. பார்வதி உழைப்பிலே இவனது வயிறும் நிறைய மனசு குமைந்தது. நமைச்சலெடுத்தது. 

கொய்யாப் பழம் ஏவாரமாச்சும் செய்யலாம்னு ஒரு சைக்கிள் வாங்குறதுக்கு அலைஞ்சான். சைக்கிள் விலைக்குக் குடுத்த புண்ணியாளனே தொழிலுக்கும் ஒரு வழியைக் காட்டினாரு. 

“நம்ம கருசக்காடு ஏழு குறுக்கம். பூராவும் வேலிக் கருவேலிதான். அதை வெட்டிக் காலி பண்ணித் தாரீயா?” 

“அம்புட்டுக்கு ரூவாயில்லியே.” 

“விறகைக் காசாக்கிட்டு வந்து பணத்தைக் குடு.”

“அப்பச் சரி.” 

இந்த சைக்கிளைத் தொட்ட பிறகுதான் கைக்கு வந்து சேர்ந்தது தொழில். தொட்டதெல்லாம் பொன்னாகத் துலங்கிச்சு. அட்ரஸ் இல்லாமல் கிடந்த இவனுக்கு ஒரு பேர். மரியாதை. கையில் நாலு காசு. விறகு வெட்டி அரிச்சந்திரன்கிற பேரு எல்லாம் வந்துச்சு. 

இவனுக்குள் கிடந்த இன்னொரு சின்னச்சாமி, வீர்யமா வெளிப்பட… இவனே அசந்துபோய்ட்டான். 

சைக்கிள் சீட் மேலே எவரையும் முழங்கை போட விட மாட்டான். சண்டைக்கே போய்விடுவான். ஒரு துளி மழைகூட அதன் மேல் விழச் சம்மதிக்க மாட்டான். மேலும் புதுசு புதுசா சாமான்கள் வாங்கிப் போட்டு, அழகு பார்ப்பான்; அழகுபடுத்துவான். 

சைக்கிளாலே, இவனுக்கும் பார்வதிக்கும் இடையிலே வந்த சண்டைகள் கொஞ்சமில்லே. 

“கட்டின பொண்டாட்டியைவிட இந்த இரும்புக் கழுதை ஒமக்கு ஒசத்தியாப்போச்சா?”ன்னு ஆங்காரமாய்ப் பார்வதி கேட்டால்… அலட்சியமாய்ப் பதில் சொல்வான். 

“அதுலே என்ன சந்தேகம்? ஒன்னைவிட, என்னைவிட, என் சைக்கிள்தான் எனக்கு ஒசத்தி.” 

அவனுக்கு, சைக்கிள் துருப் பிடிக்கிற இரும்பல்ல. குல தெய்வம். அவனது உயிர், மானம். அதுக்கும் மேலே …! 

ராமச்சந்திரனுக்கு நல்ல பிள்ளையாகணுமேங்கிற நிர்ப்பந்தத்துலே … அதையே விலை பேசத் துணிஞ்சிட்டான். மனசுக்குள்ளே அவஸ்தை, உயிரைப் பிரிகிற அவஸ்தை. 

நானூறுக்கும் நானூற்றைம்பதுக்குமாய் ரொம்ப நேரமாய் இழுத்துக்கிட்டுக் கிடந்தது பேரம். தீருகிறதாய்த் தெரியலே. கடைசியில் ஒரு தரகர் தலையிட்டு, தென்காசி வழக்காகப் பேசி, 425ன்னு முடிச்சு வைச்சாரு. 25 ரூபாய் அட்வான்ஸ் கைமாறியது. நாளை மறுநாள் முழுப்பணத்தையும் தந்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொள்ளப் பேச்சு. 

இவனுக்குள் வந்து உட்கார்ந்துகொண்ட சூன்யம், ஆற்றல், பண்பு, தன்னம்பிக்கை சகலமும் பறிபோகப் போவதாக மனசுக்குள் திகில்… பீதி.. 

அவனையும் மீறிக்கிட்டுக் கண்ணுக்குள் உறுத்தல். இமை ரோமங்களில் ஈரச்சுமை. மட்டியைக் கடிச்சு, தன்னைக் கட்டுப்படுத்திக்கிட்டான். 

முழுத்த ஆம்பளை அழக்கூடாது…அது கேவலம்! 

ரூவா வந்தவுடனே, ராமச்சந்திரனைத் தேடிப்போய்.. கணக்கை முடிச்சுட்டு வரணும். 

மானம், மரியாதையைக் காப்பாத்துன அவனோட நல்ல மனசுக்கு, வாய் மணக்க, நெஞ்சு இனிக்க நல்ல வார்த்தை சொல்லிட்டு வரணும். 

நாக்கைப் பிடுங்கிக்கிடுற மாதிரி, நாலு வார்த்தை பேசிடாம பார்த்தும் பாராம, மௌனமா, கண்ணியமா இருந்தீயே… ராமச்சந்திரா! நீ நல்லா இருக்கணும். ஒம்புள்ளை குட்டிக நல்லா இருக்கணும். ஒன்னோட வம்சமே தழைச்சு துலங்கணும்! 

மறுநாள். 

மதியமிருக்கும். வேப்பமர நிழலில் ஒத்தையாளா உட்கார்ந்திருந்தான் சின்னச்சாமி. வெத்தலை போட்டுக்கிட்டுருந்தான். சைக்கிள் ‘ஸ்டாண்ட்’ போட்டு கம்பீரமாய் நின்றது. 

‘நாளையிலேயிருந்து இந்தக் குலதெய்வம் இன்னொருத்தன் கையிலே.’ 

நெனைச்சா… மனசுக்குள் ‘பகீர், பகீர்’ என்கிறது. பலதுகளையும் நெனைச்சு மனசுக்குள்ளேயே மருகிக்கிட்டு இருக்கிற போது- 

ராமச்சந்திரன் சைக்கிள்லே வந்து இறங்கினான். நேராக வந்தான். 

“வாங்க தம்பி…” 

மரியாதைக்குக்கூட “ஆமண்ணாச்சி’ன்னு சொல்லலை. தலையைக்கூட ஆட்டலை. எங்கோ அடிபட்டுத் திரும்பிய பந்தாக ராமச்சந்திரன் முகத்தில் ஒரு விறைப்பு; கடுப்பு.கால்படி கடுகைப் பொறிச்சிடலாம். அம்புட்டு கடுகடுப்பு. 

சின்னச்சாமிக்கு முகம் கறுத்துப்போச்சு. மதிச்சு மாலை போடப் போனவன்,மூஞ்சியிலே காறித்துப்புன மாதிரி இருந்துச்சு. 

இத்தனை நாளா பார்த்தும் பாராம்… மௌனமா இருந்த இவனுக்கு, இன்னைக்கு என்ன நேந்துச்சு? ஏனிப்படி எடுத்தெறிஞ்சு பார்க்கிறான்? எங்க அடிபட்டுட்டு, இந்தப் பந்து இம்புட்டு வேகமா வருது? 

ரொம்பக் காலம் ஊமையாயிருந்த ராஜா மகன், ‘ஏம்மா,நீ எப்போ அத்தையைப்போல தாலியறுப்பே?’ன்னு அபசகுனமா வாயைத் துறந்த கதைதான் மனசுக்குள்ளே ஞாபகத்துலே உரசுச்சு. 

ராமச்சந்திரன் பார்வையில் வெறுப்பு, இகழ்ச்சி. வெடுக்குன்னு வெட்டியெறிஞ்ச மாதிரி கேட்டான்: 

“என்ன, வாங்குன கடனை குடுக்குறதாக நெனைப்பிருக்கா? இல்லே, அமுக்கிக்கிட்டு நாமம் போடத் திட்டமா?” 

வசமிழக்காமல் சின்னச்சாமி உள்ளுக்குள் ஒடுங்கினான். 

“என்ன தம்பி, இப்படிப் பேசுறீக? உங்களைப் பத்தி எம்புட்டுப் பெருமையா நெனைச்சுக்கிட்டிருக்கேன், தெரியுமா? உங்க முதலை ஒத்தடியிலே நாளைக் கொணாந்து தாரேன் தம்பி. உங்க முதலுக்கு நா பொறக்கலே. 

இவனது குழைவை நடிப்பாகப் புரிந்து கொண்டு, எரிச்சலாகப் பார்த்தான் ராமச்சந்திரன். ஏளனமாய்ச் சீறினான். 

“யாரு முதலுக்கு யாரு பொறந்ததுன்னு, யாருக்குத் தெரியும்?” 

சின்னச்சாமிக்குள்ளே சுரீரென்று சுட்டது. இவனது பிறப்பையே – முகம் தெரியாத அம்மாவின் கற்பையே -சந்தேகிக்கிற நெருப்பு வார்த்தைகள். இவன் உள் மனசைச் சுற்றி வளைத்து சுளீரிடுகிற அக்கினிச் சாட்டையடிகள். 

“வார்த்தையெ அளந்து பேசுப்பா. சிந்துனா அள்ள முடியாது. சின்ன வயசுக்காரங்கிட்டே கடன்பட்டேன் பாரு. எம்புத்தியைச் செருப்பால அடிக்கணும்.” 

“பெரிய சத்தியவான் போலப் பேசிக் கடனை வாங்கிட்டு ஏமாத்துனதுமில்லாம என்னையா சின்னப் பையன்னு 

சொல்லணும்? சுத்த அயோக்கியத்தனம்! த்தூ!”’ 

தரையில் காறித் துப்பினான் ராமச்சந்திரன். 

இது அத்துமீறல், அக்ரமமான எல்லைமீறல். மனுசனை மனுசனாக இருக்கவிடாத – மிருகமா மாத்துகிற – விபரீதமான அத்துமீறல் – குரூரமான உசுப்பல். 

சின்னச்சாமியும் வெகுண்டுவிட்டான். 

“மரியாதையாய் வீடு போய்ச் சேரு. வார்த்தையாலே சீரழிஞ்சு போகாதே. நாளை ஒந்துட்டு வீடு வந்து சேரும்.’ 

“மரியாதையாப் போகலேன்னா… அடிச்சிருவீயோ? எங்கே அதையும்தான் பாத்துருவோம்..ஒங்கிட்டேயெல்லாம் வாலைச் சுருட்டிக்கிட்டுப் போனா என்னாலே ஏவாரம் பண்ண முடியுமா? இப்பவே ரூவா வேணும், ஒத்தடியிலே ரூவாயை வைச்சுட்டு நகரு.” 

“நாளை ரூவா வரும்.” 

“இப்ப வேணும். வாங்காம இந்த எடத்தைவிட்டு நா நகரப் போறதுல்லே. 

“இப்ப கொடுக்கலேன்னா…” 

“சீரு கெட்டுப் போகும். நாறிப் போகும். ஊரு சிரிக்க வைச்சிருவேன்.” 

வார்த்தைகளின் உரசல்களில் அனலாய்ப் பறந்த தீப்பொறிகள். வாய்ச் சண்டைச் சத்தம் கேட்டுக் கூடிய ஜனங்கள், செய்வதறியாமல் திகைத்தனர். கசாகசாவென்று முணுமுணுத்தனர். ஓரிரண்டு பெரியவர்கள் துணிஞ்சி, தலையிட்டு, குறுக்கே விழுந்து, மல்லுக்கு நின்ற இருவரையும் விலக்கிவிட்டு, சமனப்படுத்தி… சத்தம் போட்டுச் சத்தத்தைக் குறைத்தனர். 

ராமச்சந்திரன் சண்டைச் சேவலாய் தலையைச் சிலுப்பி விட்டுப் போய்விட்டான். சுத்தியிருந்தவர்கள் எதை எதையோ பேசிக்கிட்டு, இளக்காரமா சிரிச்சிட்டு நழுவிக் கலைந்தனர். 

“ரெண்டு பேர் மேலேயும் தப்பு இல்லே.ஆனா சண்டை நடக்குது. நல்ல கூத்தாயிருக்கு நம்ம பொழைப்பு, நாய்ப் பொழைப்பு’ என்று சலிப்போடு முணுமுணுத்துவிட்டு, பெரியவர்களும் தாமதமாகக் கலைந்தனர். 

மீண்டும் தனிமையாய் – ஒத்தையாளாய் சின்னச்சாமி. உடைஞ்சு சிதைஞ்சு போன சின்னச்சாமி. மூளிப்பட்டு இழிவாகிப்போன அரிச்சந்திரன். 

நாணயத்தைக் காப்பாத்துற யோக்கியனாக நடந்துக் கிடறதுக்காக எடுத்துக்கிட்ட முயற்சிகள்… நிமிடந்தோறும் துடிச்ச துடிப்புகள்… இழக்கக்கூடாததையெல்லாம் இழக்கத் துணிஞ்ச தீவிரம்…ராமச்சந்திரன் வம்சமே தழைக்க வாழ்த்துன மனசு…. 

எல்லா உண்மைகளும் பொய்யாகிப் போச்சே. வீணாகிப் போச்சே.. ஊர் சிரிக்கற மையப் பொருளா நிக்க வேண்டியதாகிடுச்சே…. 

ஏமாத்துற அயோக்கியன்னு ஊரு நெனைக்க ஆரம்பிச்சிருச்சே… 

கட்டுப்படுத்தலையும் மீறி விம்முகிற மனசு. விடைத்து நடுங்குகிற உதடுகள். உறுத்தலெடுக்கிற கண்கள். அழக்கூடாது. முழுத்த ஆம்பளை வாய்விட்டு ஊமையழுகையாய் அழுவதைப் பார்ப்பதற்கு- 

அங்கே யாருமில்லை. 

வாழ்க்கை மட்டுமே மிச்சமாக இருந்துச்சு. 

– செம்மலர், 1988.

– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு:  2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *