நம்பிக்கை
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“காதல் புனிதமானது என்று கதைப்பதெல்லாம்
கவிகளின் கற்பனையில்தான்; அல்லது உணர்ச்சியின்
உத்வேகம் தணிந்த பின்பு வாழ்க்கையின்
அஸ்தமன காலத்தில் ஒரு வேளை ஏற்படலாம்…”
“அம்மா! இதோ எங்க புது டீச்சர்!” – என்று எக்களிப்புடன் ஓடிவந்தாள், என் ஏழுவயதுப் பெண் மல்லிகா. அவள் மலர்ந்த முகத்தில் மனம் நிறைந்த மகிழ்ச்சி பிரதிபலித்தது. அன்பில் ஊறிய ஆர்வம் அவள் கண்களில் தெறித்தது. என் செல்வியின் உள்ளத்தைக் கவர்ந்ததோடு இவ்வின்பக் காட்சிக்கும் வித்தான அவ்வுத் தமியைக் காணும் உவகையோடு விரைந்து சென்று, ”வாருங்கள், வணக்கம்” என்றேன்.
மறுமொழி யொன்றுங் கூறாமல், பரவசத்துடன் என்னை இறுகத் தழுவிக் கொண்டாள் என் மகளின் டீச்சர்! திகைப்பினால் என் வாய் அடைத்துவிட்டது. அவள் அணைப்பிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டு ஏற இறங்கப் பார்த்தேன்.
“யார் – என் ரூபியா?”
பதில் சொல்லாமலே கலகலவென்று நகைத்த வண்ணம் மீண்டும் என்னைத் தழுவிக்கொண்டாள். ஆமாம்! ரூபிதான்! ஆனால், அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு அரை உடம்பாக மெலிந்து…
உணர்ச்சி மேலிட இருவர் கண்களிலும் கண்ணீர் ததும்பியது. சற்று நேரம் மெளனமாகவே உட்கார்ந்திருந்தோம்.
என் மனம் கடந்த காலத்திற்குத் தாவியது.
அவள் ஒரு கிருஸ்தவப் பெண். அவளைக் கடைசி யாகப் பார்த்தது என் திருமணத்தின் போது. அதுவரையில் அவளே என் உயிர்த்தோழி குழந்தைப் பருவம் முதல் ஒன்றாகப் படித்தோம் ஒன்றாக விளையாடினோம். வயது வந்த பின்னும் ஒன்றாகவே எங்கள் கனவுக் குதிரையைத் தட்டிவிட்டு, எட்டிய வரையில் பறந்தோம். என் திருமணம் எங்களைப் பிரித்தது. மக்கள் வாழ்க்கையைக் கல்யாணம் எவ்வளவு பாதித்து விடுகிறது! அதுவும் மகளிர் வாழ்வில்…!
மீண்டும் அவளைக் கவனித்தேன். நானறிந்த ரூபி…! அவள் வாளிப்பான உடலா இப்படி வதங்கிய புடலம் பிஞ்சுபோல … அவள் மின்வெட்டும் விழிகள் பகற்காலச் சந்திரனைப்போல ஒளியிழந்து கிடப்பானேன்! அவள் குழிவிழுந்த கன்னமும், உலர்ந்த உதடுகளும், பொலி விழந்த முகமும், அவளுடைய கண்ணாடிக் கன்னத்தையோ எழில் வதனத்தையோ எவ்விதத்திலும் நினைவூட்டாது. காரணம்? இந்த வயசிலேயே ஒரு சோக நாடகத்தை நடித்து முடித்துவிட்டாளா? அதை அறிந்துகொள்ள ஆவல் கட்டுக்கடங்காமல் துள்ளியது. ஆனால் அது அவள் வேதனையைக் கிளறுவதாக இருந்தால்…? இதற்குள் இருவருக்கும் சிற்றுண்டி வந்தது. சாப்பிட்டுக் கொண்டே, “நான் இங்கே வந்து ஒருமாதமாகிறது.நீயும் இந்த ஊரில் இருப்பது எனக்குத் தெரியாது. குழந்தை மல்லிகா உன்னைப்போலவே இருப்பதால் அவளைப் பார்த்தது முதல் உன் நினைவாகவே இருந்தது. ஒருசமயம் உன் மகளாயிருந்தால் உன்னைப் பார்க்கலாம் என்ற சபலத்துடன் தான் இங்கே வந்தேன்…அம்மா… மீண்டும் எவ்வளவு நாளாகிவிட்டது… அந்தக் காலம் வருமா?” என்று பெருமூச்சு விட்டாள்.
“நீ ஏன் இப்படி…?” என்று எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று தெரியாமல் மழுமாறினேன்.
” …? …”
“உடல் வாடி… மெலிந்து… இன்னும் கல்யாணம்…?”
“பெண்ணாய்ப் பிறந்தால் கல்யாணம் செய்து கொண்டால் தான்…”
“வாழ்க்கை பூரணமாகும். பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் அப்படியே! நானறிந்தரூபி பௌத்த பிக்ஷணி யல்லவே!” என்று மெல்ல சிரித்தேன்.
“நீ சொல்லும் வாழ்க்கை வெறும் கானல் நீராக இருந்தால்…?”
”கானல் நீரா? அது கற்பகக் கா. அமுத ஊற்று…”
“…கசந்துவிட்டதே என் அனுபவத்தில்.”
“கசந்தது வாழ்க்கையல்ல! உன் மனசின் மருட்சி உடலோ மனமோ பேதலித்தால் பாலும் கசப்பது இயல்பு தானே! வாய் கசத்தால் அது பாலின் குற்றமா?”
“அழகிய பிணத்தை மலர்க்குவை கொண்டு மூடி வைத்தாலும் மறைத்துவிட முடியாது. மனித இயல்பும் அப்படித்தான்!”
“அப்படியானால்…நீ…?”
“ம்… உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்?” என்று நீண்ட பெருமூச்சுவிட்டாள். பிறகு,
“உன் கல்யாணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு நமது பள்ளிக் கூடத்தில் ஒரு புது வாத்தியார் வந்தாரே- நினைவிருக்கிறதா?”
“யார்? விக்டரா?’
”ஆமாம்! விக்டர் ஜெயராஜ்தான்!”
என் நினைவுத் திரையில் ஒரு ஆணழகனின் கம்பீர உருவம் காட்சியளித்தது.
“…அவரைக் கண்டது முதல்… என் மனம் அவரையே நாடியது. நாளடைவில் பரஸ்பரக் காதலாக அரும்பியது. கதையை வளர்த்துவானேன். பெரியோர்களிடையே பேச்சு வார்த்தை நடந்து கல்யாணமும் நிச்சயமாயிற்று. அப்பா மலேயாவிலிருந்து அடுத்த மாதம் வந்ததும் கல்யாணத்தை நடத்துவதாய் ஏற்பாடாயிருந்தது. இதற்கிடையில் கோடை விடுமுறை வரவும் அவர் குடும்பத்தினர் சொந்த ஊருக்குப் புறப்பட்டனர் அவரை மட்டும் எங்களுடன் தங்கும்படி வேண்டினேன். அம்மாவும் வற்புறுத்தவே அவரும் இணங்கினார்.
“நாலைந்து நாள் குஷாலாகக் கழிந்தது என்றாலும் என் வரையில் எனக்கு ஒரு குறைதான். எப்பொழுதும் அம்மாவும் எங்களுடனேயே இருப்பார்கள். பீச்சுக்குப் போனாலும் அப்படியே, எனக்குச் சங்கடமாகவும் ஆத்திரமாகவும் வரும்.- எனினும் இன்னும் எத்தனை நாளைக்கு? – கல்யாணம் ஆகும் வரையில் தானே? அதன் பிறகு..? – என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். அதோடு நாள் முழுவதும் அவருடனேயே ஒரே வீட்டில் இருந்து கூட ஒரு நிமிஷமாவது தனிமையில் சந்திக்க முடிய வில்லையே என்று எண்ணி ஏங்குவேன். அவர் எப்பொழுதாவது ஒரு வார்த்தை பேசிவிட்டால்…அதையே நினைந்து நினைந்து இதயம் கிளுகிளுப்பேன்…”
சற்று ஆயாசத்துடன் பெருமூச்சு விட்டாள் ரூபி. பிறகு மீண்டும் தொடர்ந்து, “ஒருநாள் இரவு அவர் என்னை நெருங்கினார். நான் சற்று பிகு பண்ணினேன்… பிறகு என்னைத் தழுவி… முத்தமிட்டார். கனவில்தான்! திடுக்கிட்டு விழித்தேன். இன்ப உணர்வில் திளைத்த நினைவு மட்டும் அகலவில்லை. கேவலம் என் தலையணை தான் என் அணைப்பின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. வெட்கமும், சிரிப்பும் ஏமாற்றமும் என்னைப் பற்றி உலுக்கின. தலையணையை வீசி யெறிந்துவிட்டு, என்னை யறியாமல் கலகலவென்று சிரித்தேன். பிறகுதான் ….யாராவது விழித்துக் கொண்டிருந்தால்… என்று எண்ணியவளாய். தலைமாட்டிலிருந்த ‘டார்ச்சை’ எடுத்து மெதுவாகக் கவனித்தேன். என் தங்கையும் தம்பியும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தனர். அடுத்த படுக்கை… காலியாகயிருந்தது. அம்மா…? ஒரு சமயம் வெளியே போயிருக்கலாம்… நல்ல வேளை? ஆனால்… அவர் விழித்திருந்தால் விடிந்ததும் கிண்டல் செய்து என் மானத்தை வாங்கி விடுவாரே… என்று அவர் இருந்த அறைப்புறமாக லேசாக டார்ச்சைத் திருப்பினேன். என் இதயம் படபடத்தது… கைகால் வெலவெலத்தது உலகமே நழுவி எங்கேயோ உருளுவது போல இருந்தது. ஏதோ ஒருவிதமான பீதி ஏற்பட்டது. மனசில் வெறி ஏற்பட்டது… இன்னது செய்வதென்று தெரியாமல்… அலறி விட்டேன்”.
இப்பொழுதும் அவள் கன்னங்களில் கண்ணீர் பொல பொல வென்று வழிந்தது. தொண்டை அடைத்துக் கொண்டது. மார்பு விம்மியது. எனக்கும் ஒன்றும் தோன்றாமல் அவளை இறுகத் தழுவிக்கொண்டு அவள் முகத்தையே ஆதரவோடு பார்த்தேன்.
“நீ இன்னும் புரிந்து கொள்ளவில்லையா? என் அருமை அம்மா. அவருடன்…” என்று விக்கி விக்கி அழுதாள்.
விஷயம் புரிந்துவிட்டது, ஆனால் அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகைதான் புரியவில்லை. சற்று நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தோம்.
அவள் வாழ்க்கை கசந்து வெறுப்புற்றதில் வியப் பொன்றுமில்லை. அவள் அம்மாவை எனக்குத் தெரியும், நல்ல அழகி. கட்டு விடாத தேக வனப்பு, தாயும் மகளும் வெளியே புறப்பட்டால் அக்கா தங்கை என்றுதான் யாரும் நினைப்பார்கள். ரூபியின் தந்தையும் சில வருஷங்களாக மலேயாவில் தங்கிவிட்டார். ஆகவே – ! என்ன தான் இருந்தாலும்…
“இனி உன் வருங்கால வாழ்க்கை?” என்று ஆரம்பித்தேன்.
”வாழ்க்கை! அழகான வார்த்தை! லட்சியவாதிகள் கனவு காண்பதற்குத் தகுந்த பதம்தான். ஆனால், நெருங்கிப் பார்த்தால்…”
“உன் கடந்த கால கசந்த அனுபவத்தை நினைவிற் கொண்டு பிடிவாதமாக உன் இளம் பிராயத்து இன்ப அனுபவங்களை இழப்பது இயற்கைக்கே மாறானது. மேலும் இறுதியில் அதற்காக உன்னையே நொந்து கொள்ளவும் நேரிடும்…”
“இன்பம் கனவில்தான். நனவில் அது நிதர்சனமாக நழுவிக் கொண்டிருப்பதைத்தான் நிதர்சனமாகக் காண்கிறேன். நீங்கள் ‘;இன்பத்தில் வெடித்த அரும்புகள்’ என்று குலவிவிட்டு பிறகு, சனியன் தொலையட்டும். பள்ளிக்கூடத்திற்கு. சற்று நேரமாவது அக்கடா வென்று இருப்போம்” என்று கருதுகிறீர்கள். உங்கள் ‘தொல்லையை’ நான் முழு மனசுடன் வரவேற்று அவர்களிடையே வாழ்ந்து இன்பங் காண்கிறேன், அவர்களுடைய பிஞ்சு உள்ளத்தில் சூது வாது இல்லை. பொய்மையில்லை. ஒளிவு மறைவு முகஸ்துதி ஏமாற்று எதுவுமே யில்லை. அவர்கள் மெல்லிய இதய மலர் விரிந்து மலர்ந்து, அங்கே மெய்யன்பு கனிவதைக் கண்டு களிக்கிறேன். மலர்களைப் போலவே…”
“வாஸ்தவந்தான்! இருந்தாலும்…அது இரவல் சுகந்தானே! அவை உன் குழந்தைகளாகவேயிருந்தால்…?”
“என் குழந்தைகள்!” என்று நீண்ட பெருமூச்சு விட்டாள்.
“ஆனால், உடலின்பம் மிருக உணர்ச்சிதானே! ஆகவே மனிதர்களும் உணர்ச்சியின் உத்வேகத்தில் மிருகமாகத் தான் நடந்து கொள்ளுகிறார்கள். அங்கே கேவலமான போட்டியே நிரந்தரமாக நிலவுகிறது. தாயின் பாசம், தந்தையின் பரிவு, கணவரின் காதல். மக்களின் கடமை, நட்பின் நலம் – எல்லாம் உணர்ச்சித் தீயில் பட்டு வெந்து சாம்பலாகி விடுகிறது. எஞ்சி நிற்பது சுய நலமும், ஆண் நலமும், ஆண் – பெண் என்ற இன உணர்வும் தான். அன்பு, ஈவு, இரக்கம்; கடமை என்பது போன்ற மனித உணர்ச்சிகள் அங்கே ஊற்றெடுப்பதில்லை. காதல் புனிதமானது என்று ‘கதைப்பதெல்லாம் கவிகளின் கற்பனையில் தான். அல்லது உணர்ச்சியின் உத்வேகம் தணிந்த பின்பு, – வாழ்க்கையின் அஸ்தமன காலத்தில் ஒருவேளை ஏற்படலாம். இதுவே என் அனுபவம் சொல்லிக் கொடுத்த. பச்சை உண்மை. நிர்வாணமான உடலைப் பார்க்கக் கண் கூசுவது போல உண்மையையும் நிர்வாணமாகப் பார்க்க உள்ளம் கூசத்தான் செய்யும். அதற்காக ஆழகான வார்த்தைகளினால் மூடி அலங்கரித்து நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளத் தான் வேண்டுமா? இந்நிலையில் நான் யாரை நம்பி ஆற்றில் இறங்குவது?”.
“மற்றவர்களை நம்பவேண்டாம், ஆனால் உன்னிடமே தளராத தன்னம்பிக்கை வேண்டும். வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும். மலரைக் கொய்து விடுவார்களே என்பதற்காக அது மலராமலே இருக்க முடியுமா? காய்க்காமல், கனியாமல் இருப்பது தான் சாத்தியமா? நரியும் புலியும் மலிந்து கிடந்தாலும், மானும் மயிலும் தத்தம் வாழ்க்கையை வாழத்தானே வேண்டும். அலை ஓய்ந்தபின் கடல் ஸ்நானம் செய்வதென்றால் முடியுமா?”
“அப்படியானால்…?”
“வாழ்வில் விருப்பம் வேண்டும். தீவிர பசி வேண்டும். தளராத தன்னம்பிக்கை வேண்டும்”.
– முல்லை கதைகள், 1945ல் முல்லை இதழில் வெளிவந்த கதைகள், தொகுத்தவர்: முல்லை பி.எல்.முத்தையா, முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, முல்லை பதிப்பகம், சென்னை.