தொல்லை இனி இல்லை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2026
பார்வையிட்டோர்: 5,294 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சீ…. இதென்ன தொல்லை… தொல்லைக்கு மேலை தொல்லை. தொல்லைக்கு இனி எல்லை இல்லையா?”

எத்தனை தொல்லைகளை அவன் சந்திப்பது ஒன்றா இரண்டா…. அவன் மனம் சலித்துவிட்டது. …

அவன் வாழ்வில் விரக்தி ஏற்பட்டு விட்டது.

அவன் எதிர்பார்த்தது போல் எதுவும் நடைபெறவில்லை. அவன் எண்ணம் போல் மனம் போல் எதுவும் நடந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும். இதனைத்தான் அவனும் விரும்பினான். இயற்கைதானே. ஆனால் நினைத்தபடி எதுவும் நடைபெறுகிறாதா? இல்லையே. இதுதான் வாழ்க்கையா? எண்ணங்கள் யாவும் நிறைவேறுவதில்லைப் போலும்….. இல்லையேல் மனிதன் நிறைவேறும் எண்ணங்களை நினைப்பதில்லை போலும்.

நிறைவேறாது என்பதற்காக எதையும் நினையாது ‘இருக்க முடிகின்றதா? இல்லை போலும். இது அவனுக்கும் விதிவிலக்கல்ல. அவனும் எத்தனையோ நினைக்கின்றான். அது நிறைவேறுமா? இதுவரை நிறைவேறியதா? அதற்காக நினைக்காமல் இருக்க முடிகின்றதா?….. அது மனித மனம்……

இதுவரை இல்லை. நினைத்தவை நிறைவேறவில்லை. போகட்டும்… தொல்லை தொந்தரவு குறையட்டுமே அது தொடர்கிறது….. அவன் பணத்தை விரும்பவில்லை. நல்ல மனத்தையே விரும்புகின்றான். ஆடம்பரத்தை விரும்பவில்லை. ஆடல் பாடலை விரும்புகின்றான். இத்தனைக்கும் மேலாக மன நிம்மதியையே விரும்புகின்றான். அது அவனுக்குக் கிடைக்கிறதா? இல்லை…. ஆனால் ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியது நிம்மதிதான்…… நிம்மதியற்ற வாழ்வு. தேன் சுவைக்க விரும்பிக் கையை விட்டால் குழவி குத்திவிட்ட கதை…….. தேனைச் சுவைத்ததும் இல்லை. கைவலியைத் தாங்கவும் முடியவில்லை.

அவனுக்கு யார் இருக்கிறார்கள்?’ உறவு என்று சொல்ல யாரும் இல்லை. வீட்டை விட்டுப் புறப்படும் போது மனதில் ஓரளவு மகிழ்ச்சி ஓடிவரும்….. வீட்டிற்குத் திரும்பிவரும் போது அவன் மனதைவிட்டு மகிழ்ச்சி ஓடிவிடும்! காலையில் புறப்படுவான். மாலையில் வருவான். ஒரு பொழுது கவலையை மறக்க முயற்சிக்கிறான்…. அவன் மனம் மறக்க முயன்றாலும் அது அவனால் முடிவதில்லை. அவன் மனதில் எண்ண இயலாத எண்ணக் குவியல்கள். துன்பச் சுமைகள்……. வேதனைக் குரல்கள்……. காலையில் மலரும் மலர். மாலையில் வாடிவிடும். இன்ப இரவு பலருக்கு; இம்மலர்கள் ஒரு வேளைப் பொழுதை மலர்ந்த முகத்துடனும் நறுமணத்துடனும் அழகுடனும் கழிக்கின்றன. மறுவேளை வாடிவிடுகின்றன. மலரும் போதுதான் வாசம் பிறக்கின்றது…. மலர்ந்த மலரைத்தான் தெய்வத்துக்கும் பூசைக்கும் பயன்படுத்துகின்றனர். உயர்ந்த மலர்….. அதுவும் வாடிய மலரை யார் தான் பாடுவர்? தெய்வம் ஏற்குமா? ஒரு பொழுதையாவது கவலையில்லாமல் கழிக்க முயன்றாலும் அவனால் முழுக்க முழுக்க வெற்றியடைய முடிகின்றதா? ஒரு பொழுதை மனமகிழ்வுடன் கழித்தாலே அவனுக்குப் போதும். வாழ்க்கையில் இதைத் தவிர வேறு என்ன வேண்டும். காலை மலரும் மலருக்கு அல்லிக்குத் துணையிருக்கும் வான்மதி சந்திரன் ஒரு வேளை…. அவனுக்கும் மகிழ்ச்சி தர…… யாராவது வேண்டுமா? மனித வாழ்க்கையே பாசக் கயிற்றினால் கட்டுப்பட்டு, பின்னிப் பிணைக்கப்பட்டுத்தானே இருக்கிறது. அத்தகைய பாசப்பிணைப்புக்கு ஏங்குது மனித மனத்தின் இயல்புதானே.

அவன் ஒரு தனி மரம்…

தனிமரம் என்றும் தோப்பாகாது வீட்டில் நுழையும் போது அதை உணரமுடிந்தது. அவனால் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது ‘அம்மா’ என்ற படிதான் வருவான்…. இன்றும் அப்படி அழைத்துப் பார்த்தான்…. ஆனால் பதில் இல்லை. ஒரே நிசப்தம்….. வீடு பூரண அமைதிகொண்டிருந்தது…. கலகலப்பாக இருந்த வீடு… கலகலப்பாக இருக்க விரும்புபவன் கதிகலங்கிப் போய் இருக்கின்றான். தாய்தான் அவனை விட்டுப் பிரிந்து போய் ஒரு மாதமாயிற்றே…… அவன் ஒரு தனி மரந்தானே.

 

ஓலை வீடுதான் ஒழுகும் கூரைதான். ஒடிந்த சுவர்தான். இடிந்த நிலைதான்… தனிமரத்து வீடுதான்…. வீட்டைப்போல் அவன் அவனைப் போல் வீடு… அவனுக்கென்று இருக்கும் ஒரே இடம் அதுதான்…. தாய் விட்ட சொத்து தாய் வீட்டுச் சொத்து. அங்கு யாரும் இல்லை. இப்போது…. அவனைத் தவிர, என்றாலும் தாய் இருந்தால்…… “வா…. மகனே…” என்று ஆசையுடன் அணைத்துக் கஞ்சியாவது வார்ப்பாள்…. இன்று ஒன்றும் இல்லை. இன்று அவனது பிறந்த நாளும் கூட…… பிறந்து தான் என்ன பயன்… வறுமையா?… உழைக்கிறான் வறமை எனலாமா? ஏன் பசி இருக்க வேணும்? “ச…ச…. பிச்சைக்காரன் கூட நிம்மதியாக இருக்கிறான். அவனுக்குப் பிச்சை போட நாலு பேர் இருக்கிறார்கள்… எனக்குப் பசிக்கு…. தர யாரும் இல்லை. ஏன் அன்புக்கு… அன்பைச் செலுத்த யாரும் இல்லை…”

இதை எண்ண எண்ண அவன் கண்கள் குளமாயின. இதயம் துன்பத்துயரால் வெடித்தது…… வாழ்வா?…..சாவா? அவன் தன்னைத் தானே கேட்காமல் இருக்க முடியவில்லை. வாழ்வு…… என்ன வாழ்வு. இதுவரை வாழ்ந்து என்ன பலன் கண்டது. தொல்லைதான் மிச்சம்.

சா……

ஒரு கணப்பொழுதில் வரவழைத்துவிடலாம்.

ஆனால்…… கோழையின் செயல்…

சாவது கோழையின் செயலா? அப்படியானால் வாழ்வது வீரனின் செயலா? எந்த வீரனாவது சாகமுன் வருவானா? சாகப்பயந்தவனுக்கு வீரன் என்று பட்டம். சாவது அனைவராலும் முடியாத ஒன்றுதான்….. தோல்விக்கு அது மருந்தாகின்றது…… ஆனால், சாவது கோழையின் செயல் என்பதை மனம் ஒப்புக் கொள்ளவே செய்தது. ஆனால் அழுவது அதுவும் கொழையின் செயல்தானே | அதைத் தடுக்க அவனால் முடியவில்லை. தன் சுமையைச் சொல்லி ஆறுதல் பெற…… அதை இறக்கிவைக்க…. தேற்ற யார் இருக்கிறார்கள். நம்பிக்கையானவர்களிடம் தானே துன்பச் சுமையைச் சொல்லி ஆறுதல் பெறலாம். நம்பிக்கை என்று இருந்தவர்களே விலகிவிட்டால்……

அவனுக்கென்ற ஒரு துணை மரம் இருந்தாலாவது… ஆறுதல் பெறலாம். வாழ்க்கை ஒளிமயமானதாகலாம். துணைமரம் இருந்தால் தனிமரத்துடன் துணைமரமும் இணைந்து தோப்பாகலாம்தானே…….! தன் தனி வாழ்க்கையை எண்ணாமல் அவனால் இருக்கமுடியவில்லை. அவன் அதை எண்ணாமல் வாழ விரும்பினாலும் பாழும் மனம் ஒரு முறை எண்ணாமல் விடுகிறதா? இதுதான் மனிதன் வாழும் முறையா?

வீட்டில் நுழைந்தவன் பேசாமல் ஒரு கதிரையில் அமர்ந்தான். யாருக்காக வாழ வேண்டுமென்ற விரக்தி மனதில் இழையோடியது. வீடு முழுவதும் தூசியும் மணலும்… உடுப்புக்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன… அநாதைகளாக… இல்லத்தைச் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை ஏற்றிருந்தான். இன்று எத்தனையோ பொறுப்புக்கள்……. கடமைகள் அவன் கையில் யாருக்காக….!

கண்ணை மூடினான். கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் துள்ளி ஓடின. அவன் எப்படியோ வாழவேண்டியவன்…

இன்று இப்படி? ஆறுகள் என்றும் பின்னோக்கிப் பாய்வதில்லைதான்……… ஆனால் அவன் வாழ்க்கை பின்னோக்கிப் பாய்ந்துகொண்டிருக்கிறது.

படிகள் என்பது மேலே ஏறிப் போவதற்கு மட்டுமல்ல. அது இறங்கி வருவதற்கும் இல்லை இறக்கி விடுவதற்கும் உதவுகின்றன. ஏணி என்பது ஏற்றிவிடுவதற்கும் மட்டுமல்ல இறக்கிவிடுவதற்கும் அதே ஏணிதான்… அவனைப் பொறுத்தவரை எத்தனையோ உண்மை இதில் பொதிந்துள்ளது.

“ஆனந் …” ஒரு குரல். பழக்கமான குரல். கண்களை விழித்தான். தலையெல்லாம் பூச்சுமை….. அவன் மனதிலும் ஏதோ ஒரு சுமை…. மனச்சமை…. அன்றலர்ந்த முகந்தான். வான் மதியும் தோற்கும் இம்முகம் கண்டு பூவா? பூவையா…..? மலர்தான் அவன் முன்னால் நின்றாள். அவளுந்தான் ஆனந்தனின் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று எண்ணுகின்றாள். நினைக்கிற அத்தனை பேருக்கும் மனதில் இடம் கொடுக்க அவன் இதயம் என்ன தங்குமடமா? இல்லை அன்ன சத்திரமா?

மலர் தொடுக்கும் அன்புத் தொல்லை அவனை வாட்டவே செய்தது…. ஏற்கமுடியவில்லை. தாய் செத்த பின்…. அவள் கதறி அழுதாளே…. அது அவன் மனதில் நிலைத்து நின்றது…. ஆனால் அவளை நினைத்து வாழவில்லை. அவனுக்குத் தன்னிடத்தில் ஒரு நிரந்தர இடம் உண்டு என்பதை சொல்லாமல் சொல்லிக்காட்டி வந்திருக்கிறாள். ஆனால் அவள் நினைக்கும் அன்பை அவனால் வழங்கமுடியவில்லை.

“பால் வேண்டுமா? பருகுங்கள், பழம் வேண்டுமா? சுவையுங்கள். பக்கத்தில் வரவேண்டுமா? இதோ சித்தமாக இருக்கிறேன். பாலைப் பருக்கிவிட வேண்டுமா? இதோ என் கரம் இருக்கின்றது. பழத்தை ஊட்டி விடவா? உரித்துத்தரவா? நான் வேண்டுமா? இங்கேதான் இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்……. செய்கிறேன்.

அவளின் கண்களின் பார்வை இத்தனையும் பேசும்……

அவளின் கண்களைச் சந்திக்கும் சக்தி அவனுக்கில்லை. அந்தக் கண்கள் பார்வைபேசும் கதைக்கு அவனால் பதில் சொல்ல முடியாது……

சில வேளை அவன் கோபிப்பதும் உண்டு.

“பேசியது நானல்ல கண்கள் தானே. நினைப்பது நானனல்ல. நெஞ்சம் தானே” என்று கூறி மழுப்பிவிடுவாள். அதைச் சொல்லும் போதே அவளின் மனதின் எண்ண அலைகள் சொல்லின் அலங்காரமாக வருவதை உணராத உணர முடியாத முட்டாள்களல்ல அவன்.

ஆனந்தனைப் பொறுத்தவரை அவன் வாழ்வில் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். இப்படி ஒரு பெண்ணைக் காணவில்லை. என் வாழ்வில் கண்ட குணம், சிரித்த முகம், சாந்தமான பார்வை. அமைதியான போக்கு கள்ளம் கபடமில்லாத வெள்ளையுள்ளம் குழுதமலரைப் போன்ற மென்மையான தன்மை உள்ளத்தில் பட்டதைப் பட்டென்று சொல்லும் பாங்கு பூவிலும் மென்மையான இதயம். ஆயிரத்தில் ஒருத்தி பார்வையில் குமரிதான் பழக்கத்தில் குழந்தை அவளை வர்ணிப்பதென்றால்……

நத்தையிலிருக்கும் முத்து…. முட்களின் நடுவே றோசா…… வானில் நீந்தும் வெண்ணிலா… தெய்வ மகள் வையத்தில் வந்ததோ?

ஒரேவார்த்தை… குணமணி அவன் மனம் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்…….. சொல்லும்

“என்ன ஆன…… மௌன விரதமோ?” இது மலர், ஒரு கனவுலகிலிருந்து மீண்டவன்… “என்ன…..” என்றான்.

“நீங்கள் உங்கள் வாயால் ஒன்று சொல்ல வேணும்…..” இதே வார்த்தையை வேறு எங்கேயோ கேட்டிருக்கின்றான். அவன் இதயத்தில் இடம் பிடித்த ஒருத்தி கேட்ட கேள்விதான் இது. இதே கேள்வியைத் தான் கேட்டாள்…. அதே கேள்வியைத்தான் மலரும் கேட்கிறாள்.

“பாலுக்குள் வெண்ணை இருக்கும்” என்றான் அங்கு… அன்று…”என்ன சொல்ல வேணும்” என்றான் இங்கு இன்று மலரின் முகத்தைப் பார்த்தபடி கேட்டான். “நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொல்ல வேணும்….” அவனது காதில் அச் சொற்கள் ரீங்காரமிட்டன.

தனக்கொரு தங்கை வேண்டுமென்று எதிர்பார்த்தான். தங்கை கிடைத்துவிட்டாள். கூடிப்பிறந்தால் தான் தங்கையா?

ஆனால் இப்படியான துணைவி வரவேண்டுமென்று அவன் விரும்பவில்லை.

துணையாக நான் வருகிறேன். ஏற்க வேண்டுமென்றாள். இவள். பெண்களில் எத்தனை விதம்.

ஒருத்தியின் பாசம் உடன் பிறப்பில் இதயத்தோடு வளரத் துடித்தாள்… ஒருத்தியின் நேசம் உடல் லயிப்பில் உடலோடு இணையத் துடிக்கிறாள் ஆனால்….

உடன் பிறப்பாக இருக்க வேண்டுமென்றவள் இனிமே பாசம் இல்லையென்று போய் விட்டாளே……. அண்ணன் தேவையில்லையென்று எண்ணி விட்டாளோ? அண்ணன் துடித்தால் தங்கை கண்ணில் நீர் வடியும், தங்கையின் கண்ணில் நீர்வடிந்தால் அண்ணன் நெஞ்சில் உதிரம் கொட்டும் என்று வளர்த்த பாசம்.

அண்ணன் மீது என்ன தவறைக் கண்டாளோ தங்கை பாசக் கயிற்றை அறுத்து விட்டாள் போலும். தங்கையின் தொல்லையை வேண்டி நின்றான் ஆனால் இல்லையென்று விட்டாள்.

எங்கே அவள்? எங்கிருக்கிறாள் என்பதே தெரியாது….. அவனுக்கு… எங்கிருந்தாலும் வாழட்டுமே…… அவன் மனம் வாழ்த்தத் தவற்வில்லை…. இங்கே இவள் தொல்லையைத் தாங்க முடியவில்லை என்று சொல்லியும் தொடர்வேன் என்று நிற்கின்றாள்.

அறுக்க முனைகின்றான் அவன்.

அணைக்க முயல்கின்றாள் மலர்.

“என்னிடம் பேச மாட்டீர்களா………?” மலர்

“பேச என்ன இருக்கு……..”

“எத்தனையோ இருக்கு மனம் வைத்தால்….”

“என்னிடம் ஒண்டுமில்லை. ஒரு மனம் தான் இருக்கு… அது எனக்குத் தேவை…….”

இருவரும் மௌனமாக இருந்தார்கள்.

மலரின் முகம் வாடிவிட்டது. மகிழ்ச்சி குன்றிவிட்டது.

நீண்ட நேரத்தின் பின்

“ஏன் மலர் முகம் வாடிவிட்டது?”

“சூரியன் ஒளியில்லாமல் தாமரை மலரமுடியுமா?”

“மன்னிக்க வேணும்…” என்று விட்டு இருந்தான்.

“ஆனந்…… பொன்னைக் கண்டால் நகை செய்து போட நினைப்பது தவறா…. பிழையா?” மலர் அவன் முகத்தைப் பார்த்தபடி கேட்டாள்.

“இல்லை…. அதில் என்ன பிழை இருக்கு” எதையும் யோசியாது எங்கோ பார்த்தபடி பதில் சொன்னான்.

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்….” என்று விட்டு பெருமூச்சொன்றை விட்டாள். மலரின் நிலமைக்காக மனம் வருந்தினான்.

“சரி என்ன சாப்பிட்டீங்க….?” மலர்தான் கேட்டாள்.

‘பசிக்கவில்லை….”

“ஏன் பசிக்கவில்லை…?”

“தெரியாது….”

“தெரியாத ஒரு பசியா……. சரி வீட்டை வாருங்க சாப்பிட”

“வேண்டாம்…….?’

“நான் தந்தால் சாப்பிடமாட்டீங்களா?”

“என் கொள்கையே வேறு”

“பசி இருக்குறதுதான் உங்கள் கொள்கையா?”

மௌனம்…

“சரி கோயிலுக்காவது போய் வாங்க மன நிம்மதி வரும்…….”

“மனத்தூய்மையும் உடல் தூய்மையும் இருக்கும் போது கோயில் ஏன்?”

“தூய்மையில்லாதவங்களுக்கு மட்டுமா கோயில்….”

“அவங்கதான் போக வேணும்?”

“அவங்க போகமாட்டாங்க……”

“அப்ப யார் போவாங்க……..”

:தூய்மையானவங்க மட்டும் தான் போவாங்க. அவங்களைத்தான் கடவுள் ஏற்பார்……”

“அங்கை அவனுக்கு என்ன வேலை…”

“அவனோடைதான் கடவுள் கதைப்பார்……”

“அவரிட்டை எனக்கென்ன கதை…..”

“நிம்மதி அவரிட்டை இருக்கு….”

“அதை வேண்டவா??……

“ஓம்….. கேட்டால் தருவார்……. உங்களைப் போல அல்ல….”

“என்னோடை கதைக்க விரும்பினால் இங்கை வரலாமே.”

“வந்தவங்களோட கதைக்கிறீங்களா மனம் விட்டு….”

“நான் கடவுளைத் தேடு என்கிறன்….”

“நான் நல்ல மனிதனைத் தேடுறன்….”

“ஏன்….?”

“அப்போதுதான் நிம்மதி வரும்….”

இருவரும் நீண்ட மௌனம். ஆனந்தனின் மனதை மாற்ற எடுத்த முயற்சி அத்தனையும் தோல்விதான். கண்டது.

மௌனத்தை இருவரும் கலைக்கவில்லை…..

மாலை நேரம்…… மங்கிய பொழுது

“ஆனந்தா…”

ஒரு குரலைக் கேட்டு எழும்பினான். குரலில் கடுமை இருந்தது. எழும்பி வந்தான் இன்று முழுக்கப்பட்டினி. தளர்ந்த உடல் மனமும் கூட வந்தவர்களைக் கண்டதும் அவன் மனம் துவண்டது என்று கூறமுடியாது…. முகத்தை, நெஞ்சை சுண்டியது….

பட்டுப்போன வாழ்வு… விட்டுப்போன உறவு….

இவை ஆனந்தனின் மனதில் ஒரு நிலைத்தளம் இதுவரை எத்தனையோ செய்தும் பார்த்து விட்டார்கள். தோற்றுவிட்டார்கள். அடுத்து ஆறாவது எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்கும் எண்ணமா?….. இதனால் தான் அடுத்தடுத்து தொல்லைகளைத் தந்து கொண்டிருக்கிறார்களா? முன்பு தனித்துத் தந்தார்கள் இன்று சட்டத்தரணி, விதானையோடு தரும் தொல்லை…. எதற்கும் ஓர் எல்லை வேண்டாம். ஆனந்தன் மனதில் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நினைவலைகள் தாம் இவைகள். எதற்கும் எல்லை இருந்தால் பிரச்சினைகள் இல்லாத உலகமாகி விடும். அதனால் தான் எல்லை இல்லாத தொல்லை தர எல்லையற்ற கும்பல்கள் உருவானார்களோ?….. அவர் பெரியவர்தான் ஒரு காலத்தில் அவரும் ஏழை இதை மறக்கலாமா?

நான் படித்து முன்னேற அவர் காரணமாக இருந்தார் என்பதற்காக என் வாழ்க்கை அவருக்குச் சொந்தமல்ல……. என் உணர்ச்சிகள் அவருக்கு அடிமையல்ல……. அவர் பணம் உதவியது. உண்மைதான். நான் மறுக்கவில்லை. அதற்காக அவர் இட்ட வட்டத்தில் நின்று ஆட வேண்டுமென்பது சட்டமா?” என்று ஆனந்தனின் மனம் தனக்குள்ளேயே பேசிக்கொண்டது. அதை யார் அறிவர்?

“என்ன எனக்கு அடங்கின பிள்ளையாக இருக்கப்போறியோ இல்லையோ, இல்லை அடம்பிடிக்கப்போறியோ?” பெரியவர் சத்தம் போட்டுக் கேட்டார்.

ஆனந்தன் எதையோ சொல்லத்தான் வாயெடுத்தான். ஆனால் பெரியவருக்கு ஆனந்தன் தன்னை எதிர்த்துப் பேசப்போகிறான் என்பது தெரிந்துவிட்டது. அவனைக் கதைக்க விட்டால் ஆபத்து என்பது தெரியாதவரல்ல பெரியவர். குதிரையை தட்டிவிட்டால் வேகமாகப் பாயும் பசுவைத் தடவிக் கொடுத்தால் பாலைத் தரும் என்பது அவருக்குத் தெரியாததல்ல. எங்கே தடவ வேண்டும் என்பதும் தெரிந்தவர். ஆனந்தனோடை எப்படிக் கதைக்க வேண்டுமென்று தெரியாமலா போகும்.

“கனக்கக் கதைக்காதை நான் சொன்னபடி செய்யப் போறியோ இல்லையோ?”

பெட்டிப் பாம்பைத் தட்டி விட்டால் என்ன செய்யும்….

“முடியாது…….” வேகமாக ஆனந்தன் சொன்னான்.

“……நாயே என்ரை காசிலை படிச்சுப் போட்டு என் தலைக்கு மேலை ஏறி நிற்கிறாய்”. சீறினார் பெரியவர்.

ஆனந்தன் மௌனம் சாதித்தான்.

“உன்னைக் காற்சட்டை போடவைச்சது நான்…… இதை மறந்திட்டாய்…… இல்லை…. நான் எண்டது என்ரை பணம்… இதை மறந்திடாதை…..”

உண்மைதானே… ஆனந்தனால் கதைக்கமுடியவில்லை. “ஏன் தம்பி ஆனந்தா இதென்ன சின்னப்பிள்ளை மாதிரி பெரியவர் உனக்கு நல்லதைத்தானே செய்து வைப்பார்….” விதானையார் கற்பூரம் கொளுத்தினார்.

“இல்லை, உனக்கு விருப்பமில்லையெண்டால். … பெரியவர் உனக்குச் செலவழிச்ச காசை திருப்பிக் குடுத்துப்போடு…. ஒருத்தற்றை காசை நீ வச்சிருக்கிறது நல்லாயில்லைதானே…..” சட்டத்தரணி ஆராத்தி எடுத்தார்.

“கடன்பட்டால் குடுக்கத்தானே வேணும்…” ஆனந்தன் மெதுவாகச் சொன்னான்.

“எப்ப குடுக்கப் போகிறாய்”

விதானையார் சட்டெனக் கேட்டார்.

“எப்பிடி குடுக்கப் போகிறாய்?” சட்டத் தரணி வெடுக்கெனக் கேட்டார்.

“அதைத்தான் யோசிக்கிறேன்”.

மனம்கொதித்துத்தான் என்ன செய்யமுடியும். பணம் பெரியவருடையது. அவரிடம் அதிகாரம் இருந்தது. ஆனந்தனிடம் இல்லாமை, வறுமை அதிலும் இயலாமை குடிகொண்டது. அவன் வார்த்தையை நம்பி வேறு யார் கடன் கொடுப்பார்.

இருக்குமட்டும் தாய் இருந்துவிட்டாள் தானே. அது போதும் தானே. இந்தத் தனிமரம் எங்கே நின்றால் தான் என்ன? தனிமரம் தனிமரந்தானே. அவன் மனம் துணிவு கொண்டது. ஆனால் அவன் மனம் அறிந்தும் அறியாமல் அழுதது.

வந்தவர்கள் வென்று விட்டார்கள்.

மறு நாட்காலை வீட்டை விட்டு புறப்பட வேண்டும்.

இரவு….

வாழ்க்கையில் அவன் கண்ட மிச்சம் என்ன? ஒன்றும் இல்லை.

நல்லவன் என்ற பெயரும் எத்தனை நாளைக்கு நிலைத்து நிற்கும் பொல்லாத உலகம் இது.

நேற்றுவரை நல்லவர்கள் என்று சொல்வார்கள். இன்று கெட்டவர்கள் என்ற சொல்வதைக் கண்டு கொண்டு தானே இருக்கிறோம். ஏன் நேரத்துக்கு நேரம் தங்கள் முடிவை மாற்றிக் கொள்கிறார்கள். அதை தங்களுக்குச் சாதகமாகவே பயன்படுத்திக் கொண்டு பழக்கப்பட்டு விட்டார்கள்.

வாழ்க்கையில் நல்லவன் என்று போற்றியும்…. உன்னைப் போல் ஒருவன் கண்டதில்லை என்பர். சிலர் கெட்டவன் என்று துாற்றுவதும் அவர்களே. ஆளுக்கொரு கொள்கை நேரே ஒரு வேஷம் இது மனித சமுதாயத்தின் தொற்று நோய்… ஒரு வியாதி….

குடிக்காமல், கும்மாளம் போடாமல் கண்ட கண்ட பெண்களுடன் சுற்றி கூடித்திரியாமல் இருந்த அவனுக்கு என்ன கிடைத்துவிட்டது? இதைத்தான் எண்ணிப் பார்த்தான்.

வாழ்ந்தால் நல்லவன்.

பழைய பாடம்….” படிக்க வேண்டியது புதிய பாடங்கள்

ம்….

காலைவரை கவலையை மறக்கக் குடித்தான்….

குடித்தான்

வெறி… படுத்தான்….

படுக்கையில் தன் மனக் குமையலை குமுறலை…. அத்தனையும் கொட்டினான். இதனைக் கேட்க பக்கத்தில் யாருமே இல்லை…….

ஆனால், இதை மலர் கண்காணிக்கத் தவறவில்லை…

விடிந்தது…… காலை….

அவனால் எழும்ப முடியவில்லை.

மலர்தான் எழுப்பினாள்.

அவள் உள்ளத்தில் எழுந்த எண்ணங்கள் பல.

அதை அவளால் சொல்ல முடியவில்லை…. அவ்வளவு தான்….

இதனால்தான் எழுப்பினாளோ?….

ஆடவனை எழுப்புவதென்றால்….

ஆனால், அவள் தான் எழுப்பினாள்.

எழும்பியவள் உள்ளத்தில் உணர்ச்சிகள் பல….

எழும்பியவன் உள்ளத்தில் கொப்பளித்த துயரங்கள் பல….

எழுப்பியவள் கன்னம் கதம்பி சிவந்திருந்தது. அது நாணத்தின் அறிகுறி.

எழும்பியவன் உள்ளம் வெதும்பி இருந்தது. அது வேதனையின் அறிகுறி.

இன்றுடன் அந்த வீட்டிற்கு பிரியாவிடை வைக்கின்றான்.

அதைப் பிரிய மனம் இல்லை.

ஆனால் பிரிந்துதான் ஆக வேண்டும். இது மாற்ற முடியாத நிபந்தனையாகின்றது. இதைத் தவிர வேறு பாதை அவனுக்கு இல்லை.

அதை மட்டுமா பிரிகின்றான்.

உற்றார், உறவினர், அன்புக்குரியவர், மதிப்பக்குரியவர்கள், இவர்களையும் பிரிகின்றான்….

பிரிந்துதானாக வேண்டும்.

அவன் பட்ட தொல்லைகள் அந்த முடிவைத் தந்தது.

இங்கிருந்து வாழ்வதை விட எங்கேயோ தனித்து வாழ்வதை விரும்ப முனைந்தான்….

தனிமரமானால் தொல்லைகள் வராமலா இருக்கும்!

மலர்….

பாவம்…

ஆனந்தன் புறப்பட ஆயத்தமானான்.

“எங்கை… ஆனந்தா?….”

என்றபடி பண்டிதர் வந்தார். கண்டதும் கட்டிப்பிடித்து அமுதான். அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். துயர நேரத்தில் யாரைக் கண்டாலும் அழுது தீர்ப்பதுதானே மனிதனுடைய தன்மை அழுது விட்டால் துன்பம் அகன்று விடுமென்ற ஒரு அசட்டு நம்பிக்கை அவ்வளவுதான்.

“எதற்கும் தாய் என்று ஒருத்தி இருக்க வேணும்”….

அழுதபடி சொன்னான் ஆனந்தன்.

பெத்த தாயைத் தவிர வேறு யார் அன்பு செலுத்துவார். அப்படிச் செலுத்தினாலும் அது போலிப்பாசமாகவே இருக்க வேண்டும்.

“தாய்க்குப் பின் தாரமும் ஒண்டு இருக்க வேண்டும்”.

பண்டிதர் பொருளோடு சொன்னார்.

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்….”

“நீ ஒமெண்டால் சொல்லு. மலரை….”

“அந்த மலருக்கு உகந்தவன் நானல்ல……”

“சரி… யாரையாவது பிடித்து இருந்தால் சொல்லு…”

“பிடித்தவர்கள் எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள்…”

“என்ன சொல்லுகிறாய் ஆனந்தா”

“பிடித்தவள் வரும்போது சொல்லுகிறன்….”

“அப்போ… இப்போ…”

“தொல்லைகள் இல்லையெண்டால் போதும்…”

ஆனந்தனின் மன நோயை பண்டிதர் நாடி பிடித்துப் பார்த்துவிட்டார்.

“ஆனந்தா எதிர்பார்ப்பவை எதிர்பார்த்தபடி எதிர்பார்க்கும் நேரத்தில் நடந்தால் மனித வாழ்வில் துயரம் இருக்காதுதான். ஆனால் அதில் சுவையும் இருக்காது. எதிர் பார்ப்பவை எல்லாம் எதிர்பாராமல் நடந்தால் அதில் சுவை இருக்கும். தொல்லை இல்லாத வாழ்க்கை யாருக்கு இருக்கு. எதையும் எதிர்பார்த்துப் போராட வேண்டும். போராடத் தெரிந்தவனுக்குத்தான் வாழ்க்கை வாழ்வதற்கே. போராடத் தெரியாதவர்களுக்கு வாழ்க்கை சாவதற்கே. துணிந்து நில், தொடர்ந்து செல். தோல்வி கிடையாது….”

“மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். மாற்றுக் குறையாத பொன்னென்று உன்னை போற்றிப் புகழ வேண்டும்.”

“நீ என்ரை மாணவன் என்றபடியால் சொல்லுறன்…… சென்றுவா… வெற்றி கிட்டட்டும்….” என்று பண்டிதர் உணர்ச்சி வசப்பட்டு சொன்னார்.

ஆனந்தனின் துயரக்கண்ணீர் கட்டுப்பட்டது….புது மலர்ச்சி ஏற்பட்டது…. துணிவு பிறந்தது….

“தொல்லை இனி இல்லை” என்று கத்தினான்.

“ஆனால் ஆனந்தா ஒரு தொல்லை கெதியாக வரவேணும்” பண்டிதர் பீடிகையுடன் கதைத்தார்.

“என்ன தொல்லை…”

“அன்புத் தொல்லை இனிமையான தொல்லை….”

“அப்படி ஒரு தொல்லையா”

“உனக்கு வரப்போகும் ஒருத்தி தரும் தொல்லை”

ஆனந்தனுக்கு சிரிப்பு வந்துவிட்டது….

“இந்த ஆனந்தனுக்கு ஒருத்தி வரத்தானே வேண்டும்…”

“ஓம்……. அதற்கு ஓர் ஆனந்தி தான் வரவேணும்….”

சிரிக்க முயல்கிறான்… சிரிக்க முடிகின்றது….

அவனுக்குத்தான் தொல்லை இனி இல்லையே……

கீழ்கரவை பொன்னையன்

ஈழத்தின் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். தொல்லை இனிஇல்லை போன்ற நல்ல படைப்புகள் சிலவற்றை எழுதியுள்ளார் சிறந்த நடிகர்.

– 27-08-1978, ஈழநாடு.

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

இலக்கியத்துறையில் இளைய தலைமுறை-15 - ஈழநாடு வாரமலர், 24-06-1979 காலத்தைவென்று நிலைப்பவையே நல்இலக்கியங்கள் 'இலக்கியங்கள் சமகாலப் பிரச்னைகளையே கருவாகக் கொண்டுள்ளன. அதுவே வரவேற்கத்தக்கதும் கூட. இக்காலப் பிரச்னை நாளையும் தொடரும் என்பதற்கில்லை. அவ்வாறு பிரசனை அற்றுப் போன ஒரு காலத்தில் அப்பிரச்னை கூறும் இலக்கியத்தை மக்கல் ரசிப்பார்களா? புறக்கணித்து விடுவார்களல்லவா? அப்படி புறக்கணிக்கப்படுமாயின் அது நல்ல ஒரு இலக்கியமாகாது. ஒரு 'பிரச்னை' அது உள்ள காலத்து மக்களால் மட்டுமன்றி எக்காலத்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *