கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2025
பார்வையிட்டோர்: 6,724 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மொட்டை மாடியில் பளிச்சென்று காயும் வெயிலில் படபடத்துக்கொண்டிருக்கும் கடும் சிவப்புப் புடவைகள். ஈர ரவிக்கைகளைப் பிழிந்த கொடியில் விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் அடிப் பாவாடை, ப்ரா மட்டும் தரித்திருக்கும் இளம் நங்கை. 

கீழே பக்கவாட்டு ஜன்னலுக்குள் தெரிந்து மறையும் தேகங்கள். வெளியில் நிம்மதியாய் அசை போட்டுக்கொண்டு கிடக்கும் நாலைந்து பசுக்கள்… 

முன் பக்க வாசலில் உள்ளே நெடு நீளத்தில் குகையாய்த் தெரியும் இருண்ட காரிடார். 

தெரு நடையில் மீன் கூடைகளை இறக்கிக் குத்த வைத்து உட்கார்ந்தவாறு சளசளவென்று பேசும் மீன்காரிகளின் வெள்ளை உதட்டு நுனிகள். கூடைக்குள் இடம் போதாமல் வெளியில் நீண்டு கிடக்கும் நெய் மீன்களின் கோபப் பார்வையைப் பாராட்டாது கையில் எடுத்து வாயிலிருந்து வெற்றிலைச் சாறு வழிய பேரம் பேசிக் கொண்டிருக்கும் பருத்த உடம்பு கொண்ட அரைக் கிழவி. 

அந்த வீட்டு நடையில் ஒரு புத்தம் புதிய கார் வந்து நின்றது. காரின் கதவு அனாயாசமாகத் திறந்துகொண்டு இறங்கி வீட்டுக்குள் ஏறிச் செல்கிறவளின் விழிகளின் சிகப்பு… 

நரசிம்மன் ஒரு இருபது அடி வைத்திருக்க மாட்டான், இவனைத் தாண்டி விரையும் ஒரு டாக்ஸி… திரும்பிப் பார்த்த போது, அது அந்த வீட்டு நடையில் நிற்பது தெரிகிறது… ஒருத்தி ஓடிவந்து காருக்குள் ஏறிக்கொண்டதும் அது விரைகிறது. 

மேலே மொட்டை மாடியில் விழிகள் மறுபடியும் இவன் அறியாமல் சென்றபோது… 

அங்கே அவள்… 

தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல்… 

இவனுக்கு வியர்த்துக் கொட்டியது. வேகமாய் நடந்தான். தன்னைப் பொறுத்த வரையில் இங்கும் தனக்குக் கிடைத்த பலன் ஏமாற்றம்தானே… 

‘சார்… சங்கதி எல்லாம் சரி… இங்கே வச்சு நமக்கு பிஸினஸ் கிடையாது. எனக்குத் தர வேண்டியதை முன் கூறாய்த் தந்து விட்டு எங்கே வேணுமானாலும் கூட்டிக்கிட்டு போ…’ என்று விட்டாளே இந்த அரைக் கிழவி. 

நெஞ்சில் இன்னதென்று தெரியாத நினைவு மூட்டங்கள்… வெயில் பளிச்சென்று பிடரியில் விழுகிறது. இப்போது கிழக்கில் இருந்து மேற்கே நடந்து கொண்டிருப்பது மாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நடப்பதற்குத்தானே என்ற ஒரு வெற்றுத் தன்மை… 

வலப் பக்கமாய்த் திரும்பிக்கொண்டிருக்கும் ரோட்டின் முனையில் தென்னை ஓலையால் உருவாக்கப்பட்டிருந்த கசாப்புக் கடையைச் சுற்றி ஒரே கூட்டம்… போலீஸாரின் செந்தலைகள்… 

கூட்டத்தின் இடை வழி எட்டிப் பார்த்தபோது தோல் உரித்துப் போட்டிருக்கும் ஒரு சினையான பசு மாடு… ஒரு எருமை… பச்சை மாமிசத்தின், ரத்தத்தின் கனத்தை வாடை. 

‘திருடிக்கிட்டு வந்து வயிறும் புள்ளையுமான இந்தப் பசு மாட்டையும், நோய் பிடிச்சுச் செத்த எருமையையும் ராவாடு ராவா வெட்டி இப்படித் தோலை உரிச்சுப் போட்டுவிட்டு, அப்புறம் கூறு போட்டு ஆட்டிறைச்சிண்ணு அநியாய விலைக்கு நம்மை எல்லாம் எத்தனை நாளா இந்தப் பாவி ஏமாற்று கிறானோ…! உம்… நேத்தைக்குக்கூட இந்தப் படுபாவிகிட்டே யிருந்து ஒரு கிலோ வாங்கிட்டுப் போனேன்…’ 

பக்கத்தில் நிற்கிறவர் பிரலாபித்துக் கொண்டிருக்கிறார். மேலும், அங்கே நிற்க முடியாமல் இவன் நடந்து கொண்டிருந்தான். இருந்தும், அங்கே உறைந்து கிடந்த பச்சை ரத்தத்தின் நெடி கூடவே வந்து விட்டதைப்போல் ஒரு பிரமை; அதோடு பளிச்சென்று காயும் வெயிலில் படபடக்கும் செக்கச் சிவந்த புடவையின் இடையில் தென்பட்ட அந்த உடம்பு… 

எதிரில் வந்து கொண்டிருந்த கணேசன் தன்னை நோக்கிச் சிரித்ததாய் ஒரு தோற்றம்… இவனால் சிரிக்க முடியவில்லை. நரைத்த கணேசனின் தலை மயிர் இவன் விழிகளைக் குத்தியது. இந்தக் கணேசனுக்கு மட்டும் இந்த நரை இல்லாதிருந்தால், தன் அக்காள் அவனைக் கல்யாணம் செஞ்சுக்கத் தாராளமாய் சம்மதித்திருப்பாள். தனக்கும் கணேசனின் தங்கை ரமாவைக் கல்யாணம் செய்திருக்க முடியும்…! இதனால் நஷ்டமடைந்தது யார்? தன் அக்காளுக்கும் வேறு இடத்தில் கல்யாணம் நடந்து விட்டது. தான் மட்டும்… 

காரியாலய மாடிப்படிகளில் அவன் ஏறிக் கொண்டிருக்கும்போது முன்னால் என்னமோ பேசிச் சிரித்தவாறு நிதானமாய் நீங்கிக் கொண்டிருக்கும் கமலா நாகநாதன் தம்பதிகள் பன்னீரின் ஒரு வாசனை… 

மனசில் மறுபடியும் அந்த ஆவேசம்… விறுவிறுவென்று படியேறி, நாகநாதனின் பக்கத்தில் சென்று, ‘நாகநாதன் சார்… ஆனாலும் நீங்க எங்கிட்டே இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது…’ என்றான் அவன். கமலாவின் முகம் சிறுத்தது; மூக்கு விகசித்தது… பரஸ்பரம் மோதிக்கொண்ட தம்பதிகளின் இரு ஜோடி வழிகளும் ஒரு சேர கேள்விக் குறியாய் இவன்மீது விழுந்தன. 

‘காத்திருந்தவன் நான், நேற்று வந்தவன் நீ…’ என்று விட்டு அவர்களைக் கடந்து வேகமாய் நடந்து தன் இடத்திற்கு வந்தான். 

இருக்கையில் உட்காரும்போதும் மனசில் அந்தச் சலனங்கள்… தலைக்குள் ஒரு உளைச்சல். கண்கள்கூட லேசாய் மங்குவது போலத் தோன்றியபோது, சில நாட்களுக்கு முன் மூளையில் புற்று நோய் என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்ட தன் மாமாவை அவனுக்கு ஞாபகம் வந்தது. அவருக்கும் முதலில் எல்லாம் இப்படித்தான். அடிக்கடி தலை சுற்றல், கண் பார்வை மங்கல் என்றுதான் ஆரம்பித்தது. 

எழுந்துபோய் மின் விசிறி ஸ்விட்சை முழு வேகத்திற்குத் திருகினான். 

‘என்ன நரசிம்மா… இன்னைக்கும் உங்க அப்பாவைக் கூட்டிக் கிட்டு வரல்லையா?’ என்று கேட்டான் நல்லமுத்து. 

‘அப்பா வர மாட்டேண்ணு விட்டார்…’ என்று இருக்கையில் வந்து உட்கார்ந்தான் இவன். 

‘அவர் வராட்டி உன் மேஜை மீதிருக்கும் இந்த ஃபைலையெல்லாம் எப்படி முடிக்கப் போறே? உனக்கானால் எல்லாமே டவுட். அதனால்தான் பென்ஷனராகி வீட்டில் சும்மா மோட்டைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கும் உன் அப்பாவைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னேன்…’ 

நல்லமுத்துவின் முகத்தில் சிரிப்பில்லை. சீரியஸாகவே இருப்பதாய் இவனுக்குத் தோன்றியது. இவனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. 

ஃபைலைப் புரட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது மீண்டும் மீண்டும் அந்தச் சந்தேகங்கள். சின்னச் சின்ன சாதாரண வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கில்கூட சந்தேகங்கள்… ரெஃபரன் ஸுக்கு இரண்டு ஆர் வேண்டுமா? ஃபர்தர்க்கு ‘யூ’ வா, ‘ஏ’ யா? இப்படி வெளியில் சொல்லக்கூட வெட்கமான சந்தேகங்கள்… 

மதிய உணவு இடைவேளையின்போது அடுத்த அறையிலிருந்து ராமகிருஷ்ணன் ஒரு படத்துடன் வந்தான். அதைப் பார்த்தபோது உடம்பு இவனுக்குப் புல்லரித்தது. 

நரசிம்மா, ‘எப்படி? உனக்கு வருகிறவளுக்கு வேய்ஸ்ட் இந்த சைஸாவாது வேண்டாமா?’ 

மேலும் ராமகிருஷ்ணன் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்கக் கேட்க இவனுக்கு நெஞ்சுக்குள் ஒரே கிளுகிளுப்பு… அதோடு 

அதோடு ஒரு சில சந்தேகங்கள்… 

‘சேஃப் பீரியடைப் பற்றியெல்லாம் நீ இப்போ அலட்டிக்க வேண்டியதில்லை… இதெல்லாம் ஒண்ணு ரெண்டு ஆன பிறகு பார்த்துக்கொண்டால் போதும்…’ என்று ஒரே போடாய்ப் போட்டான் ராமகிருஷ்ணன். 

நல்லமுத்துவுக்கும் குஷி கிளம்பியது. ‘டேய் ராமகிருஷ்ணா, நீ போட்டோவையும் புஸ்தகத்தையும் எல்லாம் காட்டிக் காட்டி அவன் ஆசையைக் கிளப்பிக்கிட்டே இரு. இதுக்கெல்லாம் நரசிம்மனின் அப்பா சம்மதிக்க வேண்டாமா? அவரானால் மகனைப் பணம் காய்க்கும் மரமா நினைச்சுக்கிட்டிருக்கார்… வாஸ்தவம். சொல்லப் போனால் இப்போப் பிடிச்சு உள்ளே தள்ளி சிகிச்சை செய்ய வேண்டியது சாட்சாத் இவன் அப்பாவுக்குத்தான்… ’ 

‘ஏய் நல்லமுத்து, நீ சும்மா இருடா… நரசிம்மா அவன் உன்னைக் கேலி செய்கிறாண்டா. நான் சொல்வதைக் கேளு…’ உனக்குப் படிச்ச பெண் வேண்டுமா? படிக்காதவள் வேணுமா?’ 

‘படிச்ச பெண்.’ 

‘வேலை உள்ளவளா, ஹௌஸ் வொய்ஃபா?’ 

‘வேலை உள்ளவள்.’ 

‘டாக்டரா, இஞ்சினீயரா, அட்வகேட்டா, ஐ.ஏ.எஸ். ஆபீஸரா?’ 

‘டாக்டர்.’ 

‘ஸைக்யாட்ரிஸ்ட் இல்லையா?’ என்று இடைமறித்துச் சொன்னான் நல்லமுத்து சிரிக்காமல். 

ராமகிருஷ்ணன், நல்லமுத்து சொன்னதைக் கேட்காதவனைப் போல் ‘அப்போ முதலில் உனக்காக நான் போய்ப் பார்த்துப் பேசி, உனக்குச் சரிப்படுமாண்ணு அறிஞ்சுகிட்டு வர்றேன். அப்புறமா நீ அவள்கிட்டே போனால் போதும்’ என்றான். 

மணி இரண்டாகி விட்டது. ராமகிருஷ்ணன் அவன் இடத்திற்குப் போய் விட்டான். நல்லமுத்து என்னமோ எழுதிக் கொண்டிருக்கிறான். இவன் மனத்தில், ராமகிருஷ்ணன் காட்டிய படம்… அவன் சுவாரஸ்யமாய் ஆழ்ந்து அனுபவித்து வர்ணித்த வார்த்தைகள்… காலையில் மொட்டை மாடியில் சிவப்புப் பின்புலத்தில் பார்த்த வாட்டசாட்டமான அங்கங்கள்… கசாப்புக் கடையின் பின்புறத்தில் தோல் உரித்து செக்கச் செவேரென்று கிடந்த சினை பசுமாடு, எருமை… பச்சை மாமிசத்தின் உறைந்த ரத்தத்தின் கனத்த நெடி… 

எதிர் அறையில் டைப்ரைட்டிங் யந்திரத்தின் தட் தட் என்ற ஒலி… அதோடு முல்லை மலரின் மணம்… 

இவனால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. எழுந்து டைப்பிஸ்டின் முன் போய் நின்று கொண்டு, ‘ஐ வான்ட்டு ட்ரான்ஸ்பியூஸ் மை ப்ளட் இன்ட் யுவர் ப்ளட்’ என்று சொல்லி முடிக்கும் முன் அவன் முகத்தில் படபடவென்று முரட்டுத் தனமாய் ஸ்லிப்பர் விழத் தொடங்கியது. நல்லமுத்துவும், ராமகிருஷ்ணனும் ஓடி வந்து அவனைப் பிடித்திழுத்து வெளியில் கொண்டுவந்தார்கள். 

‘உங்களுக்கெல்லாம் என்ன வந்து விட்டதடா…’ என்று ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தான் நரசிம்மன். 

‘இவனைப் பார்த்துக்கோ ஆம்புலன்சுக்குச் சொல்லிவிட்டு வந்து விடுகிறேன்’ என்று நல்லமுத்துவிடம் சொல்லி விட்டு டெலிபோன் இருந்த அறையை நோக்கி விரைந்தான் ராமகிருஷ்ணன். 

– 06.10.1975 – குமுதம் 30.10.1975.

– நாகம்மாவா? (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2014, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *