துணையைத்தேடி..
“அதியமானைத் தேடி ஔவையார் வந்திட்டுருக்காங்க!” என்று குறும்புச்சிரிப்புடன் வாசலை பார்த்தபடி சொன்னாள் என் மனைவி வசுந்தரா.

”யாரு மீனாவா?” என்றேன் முகமெல்லாம் பூரிக்க.
இன்றா நேற்றா இருபதுவருஷத்துக்கும் மேலான சிநேகிதம் அல்லவா? மீனா என்ற பெயரைக் கேட்டதுமே மனசு துள்ளுகிறதை உணர்கிறேன்.
ஒரு ஆணும் பெண்ணும் நீண்ட காலம் நட்பு கொண்டு இருப்பது சாத்தியமா என்று கேட்கிறீர்களா? சாத்தியம் என்பதை நானும், மீனாவும் இருபது வருடங்களாய் நிரூபித்து வருகிறோம். காதலில் தான் காமம் மண்ணாங்கட்டியெல்லாம் . நட்பில் அதெல்லாம் ஒன்றும் வருவதில்லை. நட்புக்கு அடிப்படையாக இருப்பது ஒத்த தொழிலோ அந்தஸ்தோ வயதோ அல்ல. வாழ்க்கை நிலையில் பலவேறு அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இடையிலும் பிரிக்க முடியாத நட்பும் பாசமும் ஏற்படுவதைப் பார்க்கிறோம். இதில் பால்பேதங்களும் இடைப்படுவதில்லை. கொடுப்பதும் பெறுவதும் ஒன்றேயாகின்ற காமம் போன்று ஆன்மாவின் அந்தரங்க ஆழத்தில் ஈருயிர்கள் சங்கமிப்பதே உயர்ந்த நட்பின் அடிப்படை என்று நினைக்கிறேன். மீனாவால் என் தாம்பத்திய வாழ்விலும் ஒரு சிக்கலும் வரவில்லை. என்னால் அவளுக்கும் ஒரு குழப்பமுமில்லை.
குடும்பமுடன் கோடை சுற்றுலா என்று நான்கு மாதம் அமெரிக்கா போனவள் இன்றைக்குத்தான் என்னைப் பார்க்க வந்திருக்கிறாள்.
மீனா வீட்டிற்குள் நுழைகிறபோதே ஜாதிமல்லிகை வாசம் தூக்கி அடிக்கிறது. தினம் ஒரு கிள்ளு ஜாதிமல்லிகை தலையில் இல்லாவிடில் மீனாவிற்கு முகமே களை இழந்துவிடும். அவள் கணவர் அலைந்து திரிந்து வாங்கி வந்து விடுவாராம்! இன்றைக்கு மல்லி கிள்ளலாய்த் தெரியவில்லை. பெரிய பந்தை வைத்த மாதிரி கும் என்று தெரிந்தது. அதில் மீனாவின் மன வாசமும் புரிந்து போக, “வா மீனா! ‘பூ’லோகமே தலைல இருக்கு, என்ன விசேஷம்?” என்று கேட்டேன் சிரித்தபடி.
வசுந்தரா, “நான் சொல்றேன்! நான் சொல்றேன்!” என்றாள் சின்ன குழந்தை மாதிரி.
”சொல்லுங்க வசு,என்னனு சொல்லுங்க பாப்போம்?” மீனா ஓரக்கண்ணால் பார்த்தபடி குறும்பாய் சிரித்தாள்
”உங்க பொண்ணு ப்ளஸ்டூல நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி இருக்கா”
”ம்ஹும் இன்னும் ரிசல்ட்வரலை”
”உங்க வீட்டுக்காரர்ருக்கு ஆபீஸ்ல ப்ரமோஷன்?”
”க்கும்…ஆறு மாசத்துக்கொரு தடவை பதவி உயர்வு கொடுத்தா அந்த ஆபீஸை இழுத்துதான் மூடணும்”
”அப்போ புது கார் வாங்கி இருக்கீங்க!”
”இல்ல இல்ல..பழைய மாருதியே வீரமாருதி, கம்பீரமாருதியா விசுவாசமா உழைக்குது! சரி, நானே சொல்லிடறேன் என்னன்னு.. என் கவிதைக்கு முதல் பரிசு கிடச்சிருக்கு இணையதளத்துல ஒரு குழுமம் நடத்தின போட்டில”
உற்சாக நயாகராவாய் இப்படிச் சொன்ன மீனாவை வியப்புடன் பார்க்கிறேன்.
”வாவ்! கங்கிராட்ஸ்! இந்த மாதிரி ஒரு கவிதை எழுதிட்டு தானே என்னை நீ முதன் முதலில் பார்க்க வந்தே? இருபதுவருஷம் முன்னாடி என் பத்திரிகை ஆபீஸ்க்கு வந்ததும் ஆசிரியர் யார்னு கேட்டு என் ரூமுக்கு வந்து என் பத்திரிகையை அக்குவேறு ஆணிவேறாப்புரட்டி அலசி விமர்சனம் செய்த போதே உன் அறிமுகமும் பிறகு நட்பும் கிடச்சிது மீனா! அப்போ நீ கல்லூரி மாணவி! சரியான வாயாடி. ஆனா புத்திசாலி வாயாடி!” என்று சொல்லி சிரித்தேன்.
“இல்லேன்னா உங்களோட நட்பு எனக்கும் கிடச்சிருக்குமாக்கும்.?”
“போதும் போதும்….நாலு மாசம் என்னைவிட்டுட்டு குடும்பத்தோட ஊர் சுத்தப்போயிட்டியாம்.. கரெக்டா அப்போ பாத்து உடம்புக்கு வந்து வீட்ல ஜெயில் மாதிரி அடைஞ்சி கிடக்க ஆரம்பிச்சிட்டேன்..”
”அடடா எடிட்டருக்கு என்ன ஆச்சு? இதுக்குத்தான் ஈமெயில்ல தொடர்பு வச்சிக்கணும் என்கிறது. கம்ப்யூட்டரைத் தொடவே மாட்டேஙக்றீங்க நீங்க?”
”ஆமா ….அதைக் கட்டிட்டு தான் உலகத்துல பாதிபேர் அழறாங்களே! கம்ப்யூட்டர் ஈஸ் ஒபீடியண்ட் பட் நாட் இண்டெல்லிஜென்ட்!”
”சரி விடுங்க சில விஷயங்களில் அசாத்திய பிடிவாதம்தான் உங்களுக்கு”
”காஃபி கலக்கறேனே மீனா” என்று சமையலறைபோக நடந்தவளை தடுத்தாள் மீனா.
”வேண்டாம் வசு,….அமெரிக்கால் ’ஸ்டார்பக்’ல ஒரு கோப்பர்ச்சினா காஃபி குடிச்சப்றம் நம்மூர் காஃபியே பிடிக்கல… அதிருக்கட்டும் வசு என்னதான் ஆச்சு இந்த மனுஷருக்கு?”
”அதையேன் கேட்கறீங்க மீனா..நல்லாத்தான் இருந்தாரு, சடனா மஞ்சள் காமாலை வந்திட்டது…ஏற்கனவே நாலு வருஷம் முந்தி ஹார்ட் அட்டாக் வந்து பிழைச்சாரில்லையா? நீங்க கூட அப்போ டாக்டர் சொன்னார்னு உங்க நண்பருக்கு தேக்குல நல்ல வேலைப்பாடெல்லாம் செஞ்ச கைத்தடி வாங்கிக் கொடுத்தீங்களே…..?”
“ஆமாமாம் ஐயா அதை முதல்ல யூஸ்பண்ணவே மாட்டேன்னாரே! ’படுகிழவன்னு நினச்சிட்டீங்களா என்னை, ம்?’ அப்படின்னு கேட்டுமுறைச்சாரே? நான் தானே அப்போ ,’ ஸ்டைலா அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே’ன்னு உயர்ந்த மனிதன் படத்துல சிவாஜிகணேசன் கைத்தடியோட பாடிட்டு வர்ர மாதிரி இருக்கீங்க’ன்னு சொன்ன பிறகு தான் ஒத்துக்கிட்டார். அப்புறம் அஞ்சு வருஷமா அதுகூடத்தானே கம்பீரமா வாழ்ந்திட்டு இருக்காராம்! ஆரம்பத்துல தேவையா இருந்தது, இப்போ அலங்காரம் போல ஆகிட்டது! கேட்டா ’ஆமா இது இல்லேன்னா நடை தள்ளாடுது என் அவயங்களில் ஒண்ணாகிட்டதுன்னு’ ஒருதடவை சொன்னாரே!”
“கொஞ்சம் என்னைப்பேச விடறீங்களா பெண்மணிகளா?” என்று குறுக்கிட்டு அனுமதி கேட்டு நான் சொல்ல ஆரம்பிக்கிறேன்.
“மஞ்சக் காமாலை என்கிறது பொதுவா குழந்தைகளுக்குத் தான் வரும். ஏதாவது மந்திரிப்பாங்க சரியாய்டும் இதை தான் நான் பார்த்திருக்கேன். இப்படி ஐம்பது வயசை நெருங்கறவனுக்கும் வரும்னு என் அனுபவத்துலதான் தெரிஞ்சிட்டேன். மஞ்சக் காமாலை வந்ததும் ஆளுக்கொரு யோசனை சொல்ல ஆரம்பிச்சாங்க…பத்தியம் சொன்னாங்க. கீழாநெல்லி விழுதை எலுமிச்சங்கா அளவு ஒவ்வொருவேளையும் விழுங்கினேன் . அச்சுதன் நம்பூதிரிகிட்ட போயி மந்திரிச்சிட்டேன். வீட்டிலேயே ஒருத்தர்வந்து டம்ளர்ல ஊசிகளைப் போட்டு மந்திரிச்சார். அந்த டம்ளர் தண்ணீர், மஞ்சள் நிறமாக் மாற மாற காமாலையும் இறங்கிடும்னு சத்தியம் பண்ணினார். தண்ணீர் ஊசி எல்லாம் அப்படியேதான் இருந்தது. அப்புறம ஹோமியோபதி வைத்தியம் ஆரம்பிச்சி இபோ தேவலை. இதுல ஆகார நியமனம் நாலு மாசமா செய்துட்டு வந்து, இப்போதான் உடம்பு கொஞ்சம் நிலைக்கு வந்திருக்கு …இன்னும் வெளி உலகம் பத்திரிகை ஆபிசெல்லாம் போக ஆரம்பிக்கல.. எல்லாத்தியும் உதவி ஆசிரியர்தான் பாத்துக்கிறார்…ஓஹோன்னு பிரமாத ஜனரஞ்சகப் பத்திரிகையா நடத்தலேனாலும் இருபத்தி அஞ்சி வருஷமா நடத்தும் இலக்கிய மாத இதழை நிக்காம நடத்திட, என் உடம்பு பழையபடி ஆகிடணும்! ஆகிடும்! இன்னும் இரண்டு வாரத்துல ஆபீஸ்போக ஆரம்பிச்சிடுவேன் ..ஆனா இந்த மாதிரி நேரத்துல துணைக்கு ஆதரவா யாராவது பக்கத்துல இருந்து பேசிட்டு இருந்தா போதும்னு இருக்கு மீனா!”
”வாஸ்தவம் தான் ஆனா இப்போ எனக்கு டைமே இல்லயே!…அடுத்த வாரத்துல ஒரு நாள் கண்டிப்பா வந்து கொஞ்ச நேரம் இருக்கேன்…உடம்பை பாத்துக்குங்க…ரெஸ்ட் எடுங்க அதான் முக்கியம் வரட்டுமா? வசு! போய்ட்டு வரேன்”
மீனா ஜாதிமல்லி மணத்தை விட்டு விட்டு கையசைத்தபடி வாசலுக்கு விரைந்தாள். இத்தனை நாள் கழித்து வந்தவள் இன்னும் அரை மணியாவது இருந்திருக்கலாம்.
மீனா போனதும் மறுபடி வெறுமை சூழ்கிறது.
பழைய நண்பர்கள் சிட்டு அனந்தகுமார் பத்ரிஎன்று யாராவ்து பேச வரமாட்டர்களோ ?எல்லாரும் ஆரம்பத்தில் உடம்பு சரி இல்லையென்ற்தும் வந்து பார்த்து பேசினதுடன் சரி. பிறகு பத்து நாளைக்கு ஒரு முறை என்றும் கடைசியில் மாசம் ஒரு தடவை என்றும் வந்தவர்கள் சமீபமாய் வரவே இல்லை. போனில் கடமைக்கு விஜாரிக்கிறார்கள். எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் பிசியாக இருக்கிறார்கள். எனக்குத்தான் பேச்சுத் துணைக்கு யாரும் இல்லை. மீனாவுக்கே என் மீது அக்கறை இல்லை. அப்புறம் இவர்களை யெல்லாம் என்ன சொல்ல?
வீட்டில் படுத்த படுக்கையாய் கிடப்பது என்பது ஓர் அனுபவம். வெளி உலகையும் தொழில் லாப நஷ்டங்களையும் பற்றி ஆரம்பத்தில் சில நாள் கவலைப்பட்டது உண்மை. இப்போது அவையெல்லாம் மனத்தை விட்டு போய் விட்டபடியால் யாருடனாவது வாய் விட்டுப் பேசிக் கொண்டிருக்கலாம் போன்றே தோன்றுகிறது.
பகல்பத்துமணிக்கு மருந்து பதினோருமணிக்கு கஞ்சி, நாள் முழுவதும் சாத்துக்குடி ரசம், இடையிடையே இளநீர் கரும்புச்சாறு என்று ஆகாரநியமனம் இன்னும் சில நாளைக்குத் தொடர வேண்டுமாம்.
சமையற் கட்டிலிருந்து எதையோ மறந்து விட்டு வந்தவள் மாதிரி பரிதவிப்புடன் கூடத்திற்கு வந்தாள் வசுந்தரா. கையில் கஞ்சி பாத்திரத்தின் மூடியை சரியாகப் பொருத்தி மேஜை மீது வைத்தபடி, “கஞ்சி ரெடியா இருக்கு…மணி பத்தேமுக்கால் ஆகுது..பதினோறுமணிக்கு குடிச்சிடுங்க நான் கொஞ்சம் கடைவீதி வரைப் போய்ட்டுவந்துடறேன்” என்றாள்.
வசுந்தரா போனதும் வாரப்பத்திரிகைகளைப் புரட்டினேன். புத்தகம் நல்ல நண்பன். வாசிப்பு சுவாசிப்புதான் ஆனாலும் உயிர்த்துடிப்புள்ள மனித அருகாமையின் முன்பு இதெல்லாம் ஜடப்பொருள்தானே?
ஞாயிற்றுக்கிழமைதானே இன்றைக்கு, பத்ரியாவது வந்து பேசிக்கொண்டு இருக்கலாம் இல்லையா? வந்த மீனாவும் ஓடிவிட்டாள்.
கோபத்தில் கஞ்சிகுடிக்கவும் மறந்துவிட்டது பிடிக்கவும் இல்லை என்றும் சொல்லலாம்.
மணி 11:30.
இந்த வசுந்தரா எங்கே போனாள்?
வேலைவெட்டி இல்லாமல் ஆண்கள் வீட்டில் இருந்தால் பெண்கள் தரும் மரியாதை இதுதான் போலிருக்கு.?
எரிச்சலுடன் வாசலுக்கு மெல்ல நடந்துவந்து வராண்டா சோபாவில் உட்காருகிறேன் கைதடியை கோபத்தில் எடுத்து வரவில்லை. திறந்து கிடந்த வாசல் கதவு வழியே சாலையை வேடிக்கை பார்க்கிறேன். பெரும்பாலும் ஜனங்கள் பேசிக் கொண்டே தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் கையிலிருக்கும் செல்போனிலாவது!
மணி12 இருக்கும்.
படபடக்கும் வெய்யிலில் வசுந்தரா கையில் ஒரு பிளாஸ்டிக்கூடையோடு விட்டிற்குள் வந்தாள்.
வராண்டாவில் என்னை பார்த்தும் ”என்ன இங்க வந்து உக்காந்திட்டிங்களா?” என்று கேட்டாள்
”ஆமாம்” என்றேன் விறைப்பாக.
என்னருகில் கைத்தடி இல்லாதது கண்டு திகைத்தாள்.
“கைத்தடி இல்லாமயா இவ்வளவு தூரம் வந்தீங்க? திடமான உணவு எதுவும் சாப்பிடாம உடம்பு வீக்கா இருக்கிறபோது இப்படி நடந்து வரலாமா நீங்க? ஆமா கஞ்சி குடிச்சீங்களா? உங்களுக்காக வழக்கமா கருப்பஞ்சாறு வாங்க போன இடத்துல கிடைக்கல..கடையை எடுத்திட்டாங்க போல இருக்கு. கரும்பும் இப்போ சீசன் இல்லையாம். எங்கயும் கிடைக்கல..விடுவேனா? அலஞ்சிச்திரிஞ்சி வாங்கிட்டு வர இவ்வளவு நேரமாச்சு..வழில கமலா பிடிச்சிட்டா ’விட்டுடிம்மா வீட்ல அவரு தனியா இருக்காரு பேச்சுத் துணைக்கு யாரும் இல்லாம’ன்னு அவளை உதறிட்டு ஓடி வந்தேன்.. சரி சரி… உள்ள வாங்க கருப்பஞ்சாறு குடிக்கற டைம் இப்போ..அப்புறம் மூணு மணிக்கு சாத்துக்குடிரசம் கொடுத்திடறேன்..சாத்துக்குடிப்பழம் நேத்தே நிறைய வாங்கி வச்சிட்டேன்….” மூச்சு விடாமல் பேசிக் கொண்டே வந்தவள்,
நான் மௌனமாய் அமர்ந்திருக்கவும், “என்னைப் பிடிச்சிட்டு நடந்து வாங்க …கைத்தடி இல்லேன்னா என்ன அதான் நான் இருக்கேனே?” என்றாள் ஆதரவான குரலில்.
வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்த என்னை கைத்தாங்கலாய்ப் பிடித்தபடி உள்ளே அழைத்து வருகிறாள். என் மனைவி வசுந்தரா.
தூரத்துப் பச்சை, தோட்டத்து மல்லி முதலிய வழக்கு மொழி நினைவுக்கு வரது. நம் அருகில் இருப்பதை, நம்முள் இருப்பதை, நமக்கென இருப்பதை, கவனிக்க தவறிவிடுகிறோம். சின்ன கருவை எவ்வளவு அற்புதமாக கையாண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
அருமையான கருத்தை யதார்த்த நடையில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்
யில்
Though Friendship is a beautiful experience in one’s life, Noone can take a Wife’s place.
Friends have to take care of their life and family Shylaja too. Can’t devote his / her life to his / her Friend.
But, the life of a Partner always revolves around his / her Husband / Wife. Shylaja had brought out this point subtly without abusing Frtienfship. Love Shankari
மனைவிதான் நல்ல தோழியும் துணையும் என்று உணர்த்தும் கதை.