திரு வேறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2025
பார்வையிட்டோர்: 79 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனக்கு ஏழு வயதிருக்கையில் தங்கச்சி தட்டிக்கட்டு அறை வீட்டில் பிறந்தது. ஒரு மாதத்தில் அம்மா கைப் பிள்ளையோடு திண்ணைப்புற அறைக்கு வந்தது. குழந்தை லேஸாய்ச் சிணுங்கிக் காலை உதைத்ததும் அம்மா குரலெடுத்துப் பாடத்துவங்கும். 

‘என் கண்னே உறங்கு
கானகத்து மானுறங்கு
என் பொன்னே உறங்கு
பூ மரத்து வண்டுறங்கு’ 

அம்மா குரல், வீடு தாண்டி தெருத் தாண்டி கடல் மலையெல்லாம்தாண்டிபூலோகம் முழுதையும் தொட் டுத் தடவிவிட்டு ஆகாயத்திற்கும், பாதாளத்திற்கும் போய்க்கொண்டேயிருப்பது போல் சொக்கி வரும். 

அப்பாவோடு கூடப்பிறந்தவர்கள் ஐந்துபேர் அண்ணன் தம்பிகள். ஒரு சித்தப்பா மட்டும் குடும்பத்துடன் கொழும்பிலிருந்தார். மற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்தாறு பிள்ளைகள். பெரியசுத்துக்கட்டு வீட்டுக்குள் ஒரே அடுப்பு.நேரங் காலமில்லாமல் பெரியம்மாசின்னம் மாக்களின் தாலாட்டுப் பாட்டுகள் பர்மாத் தேக்குகளி லிருந்த உத்தரங்களையும் உருக வைக்கும்.சுற்றியுள்ள வீடுகளில் பெரிய கருப்பன் கன்னம் வைத்துநாலுபவுன் சங்கிலி, அஞ்சு கோழி, ரெண்டு செம்பு என்று திருடிப் போனான். எங்கள் வீட்டிற்குப் பெரிய கருப்பன் வந்த தேயில்லை. 

அதற்கு அப்பாவின் பெருமையும் திடமும்தான் காரணம் என்று அம்மாவும், வீட்டில் எல்லாப் பொம் பிளைகளும் சொன்னார்கள். பெரிய கருப்பன் அகால நேரத்தில் வீடு நுழைந்து கோழிக் கூட்டுக்குள் கை வைக்க, அம்மா தங்கச்சிக்காய் தாலாட்டுப் பாட கோழிக் கூட்டுக்குள் கை விட்டபடியே உறங்கிக் கொள்ள வேண்டா மென்று தான் இந்த வீட்டிற்குள் வரவில்லையென்றுபடும். 

பங்குனி கடைசியில் கம்பளத்து நாய்க்கமார்கள், வண்டி நிறைய சாமான்களோடு சப்பாணி கோயில் பொட்டலில் வந்து இறங்குவார்கள். அப்பாவை வந்து பார்ப்பார்கள். மூன்று நாட்களுக்குப்பின் வண்ணப் படங்கள் திரையில் தெரிய ஆட்டம் நடக்கும். 

கம்பளத்தார்கள் வண்டிகளில் வந்திறங்கிய நேரத்தில், பிரியமான விருந்தாளிகள் உயர்ந்த பட்சணங்களோடு வந்திறங்கியது போல் நினைத்து மனசு துள்ளும். காடு மேடாய் ஒடிச் சிரித்து விளையாடுவோம். கூத்து நடக்கும் நாட்களில், மத்தியானம் சாப்பிட்டதும் தூங்கச் சொல்லும் அம்மா. அப்படியானால்தான் ராத்திரி விடிய விடியக் கூத்துப் பார்க்கலாம். பிடித்து இழுத்துப் படுக்கப் போட்டாலும் சனியன் பிடித்த தூக்கம் வரவே வராது. மனசு குதித்துக் கொண்டே யிருக்கும். 

அம்மா நிலக்கடலை வறுத்து எடுத்துக் கொள்ளும். மொச்சைப்பயறு, தட்டைப்பயறு அவித்து எடுத்துக் கொள்ளும்.பாய்களும், செம்பில் தண்ணீரும் கொண்டு கூத்தில் உட்கார்வோம். ‘மக்காக்கோலி திரையில் வருவான். பாட்டு ஆரம்பிக்கும். 

‘ராம ராஜிப ரோஜிப ராஜிப
காணிக்க வருவான் ஜெய 
வருவான்.’ 

மத்தளம், தம்பூரா, மரக்கட்டைத் தாளம் கூடச் சேரும். கால்வாசித் தமிழும். முக்கால் வாசி புரியாத மொழியும் கலந்து பாட்டுக் கிளம்பும். அர்த்தம் புலப் படாமல் மயக்க வசப்படும் உடம்பு. 

விழித்துப் பார்க்கையில் வெளிச்சம் வந்து வீட்டில்படுத் திருப்பது தெரிய வெட்கமாயிருக்கும். அம்மா சொல்லும். “நாலு பாட்டுக் கேக்கிறதுக்குள்ளெ என்னடா னக்கு இந்தத் தூக்கம் வருது. அடிச்சு அடிச்சுப் பார்த்தும் எந்திரிக்கலை. போன வருசம் மாதிரி இந்த வருசமும் சித்தப்பாதான் ஒன்னைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தாக” 

மறுநாளும் அப்புறம் கூத்து முடிகிற வரையும் இந்தக் கூத்துதான். 

சித்திரை பாதிபில் எருதுகட்டு நடக்கும். அன்று ராத்திரி எருதுகட்டுச் செய்க்குப் பக்கத்தில் பொட்டல் செய்யில் வில்லுப்பாட்டு நடக்கும். மத்தளத்தோடு ஒருவர், திறந்த தாந்தியில் கவிழ்த்த பானையோடு ஒருவர். வில்லைத் தொட்டுக் கண்ணில் ஒற்றி கை கூப்பிக் கும்பிட்டு சண்முகத்தாய் பாட்டுப்பாடும். 

‘வில்லடிக்க குடமடிக்க
குடமடிக்க…’ 
வீரமணி ஓசையிட
ஓசையிட…’

துரௌபதையைத் துகிலுரியும் கட்டத்தில், சண்முகத் தாய் குரல் தழும்பத் தழும்பப் பாடிக் கொண்டிரு க் கையில் திரும்பி அண்ணாந்தால் அம்மா தாரை தாரை யாய்க் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும். மறுபடி பாட்டோடு ஒன்றியிருப்பது போலிருக்கும். மனசு திசைகளை மிதித்துக் கொண்டு பறக்கும். 

“எந்திரிப்பா.பொழுது விடிஞ்சிருச்சு” என்று அம்மா சத்தங்கொடுத்து வீட்டு ஆள்பத்தியில் விழித்து உட்காரையில் வெட்கமாயிருக்கும். எருதுகட்டுப் பொட்டலிலிருந்து யாரோ தூக்கிக் கொண்டு வந்து வீட்டில் தூங்கவிட்டிருப்பார்கள். 

கொழும்பிலிருந்து சித்தப்பா ஒரு கிராமஃபோன் பெட்டி அனுப்பியிருந்தார். ஒரு குழாயும், பூனையும் உள்ள படம்பெட்டிமேல். பூனைகுழாயைவிட்டுநகர்ந்து என்மடியில் உட்கார்வது போல் தலை மேல் உட்கார்வது போல் நெஞ்சுக்குள் சுகமாய் வந்து உட் கார்ந்து கொண்டது போலிருந்தது. அதுவே பாட கராகவும். கேட்பவராகவும் இரண்டுமாய் சேர்ந்து ஒரு தெய்வம் போலவும் தெரிந்தது. 

பெட்டி மேல் கைதடவ சுகமான சிறுசிறு தட்டுக்கள். உள்ளே வட்டமாய் பிளேட் வைக்குமிடத்தைச் சுற்றிக் கைதடவ வெல்வெட் சுகம். இன்னொரு பெட்டியில் இருபதுக்கு மேல் இசைத் தட்டுக்கள். ஒவ் வொன்றும் தனித்தனியாய் அழகான காகித உறைகளில். 

பெட்டி கொண்டு வந்த ஷேக் அப்துல்லா மூன்று நாட் களுக்கு வீட்டில் தங்கி இருந்தார். காலையில் அவர் எழுந்ததிலிருந்து நடந்த உபச்சாரங்களைப் போல் யார் வீட்டிலும் எப்போதும் இருந்திருக்காது. வேறு ஆளாயிருந்தால் மயக்கம் போட்டு விழுந்திருப் பார். வெந்நீர் போட நாலுபேர். குளிக்கக் கூப்பிட அஞ்சுபேர். 

பலகாரம் முடித்துத் திண்ணையில் கிராமஃபோன் பெட்டியை எடுத்து வைத்ததும் ஊரே கூடி விடும். வலது ஓரத்தில் வெள்ளியைப் போலிருக்கும் பகுதியைக் கட்டை விரலால் ஷேக் தள்ள, சின்னக் கிண்ணம் போல் பாதிவெளிவரும். அதிலிருந்து ஊசி எடுத்துப்பாம்பு போல்வளைந்து கிடக்கும் வெள்ளிச் சுருட்டையில் சொருகி சாவிகொடுத்து உறைநடுவில் வட்டமாய் வெட்டிவைத்த பகுதியில் பாட்டுப் பெயர், பாடியவர் பெயர் பார்த்துத் தேர்ந்தெடுத்து ஷேக் இசைத் தட்டைப் பூப்போல் எடுப்பார். வட்டத்தில் வைத்து வெள்ளிப் பாம்பை வளைத்து முள்ளைக்கூர்மையாய்த் தட்டில் ஓட விடுவார்.

ஒரு வினாடி சுற்றலுக்குப்பின் பாட்டு ஆரம்பிக்கும். அந்த ஒரு வினாடியிலும் மனசு பரபரக்கும். பாட்டு ஆரம்பித்ததும் வீடு வயல் வரப்புத் தாண்டிக் கண் மாய்க் கரையில் இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்தது போலிருக்கும். அங்கு வீசும் காற்றுக்கு இணையாக பூலோகத்தில் எங்கும் இதமாய் வீசுவதில்லை. 

ஷேக்போனதும் அப்பா ஒருநாள் விட்டு, இரண்டு நாள் விட்டுத்திண்ணையில் வைத்துப் போடுவார். 

‘ஜெயகிருஷ்ணா முகுந்தா முராரி…’ 

திபாகராஜ பாகவதர் எடுத்து மேலே கொண்டு போவார். இத்தனை கட்டையில் பாடுகிறார் என்பார் அப்பா. குப்பு பிள்ளை மாமா ‘ஆமா’ என்பார். 

அம்மா வந்து எழுப்பும். கண்ணைத் துடைத்துப் பார்த் தால் கிராமஃபோன் பெட்டி உள் அறைக்குப் போயிருக்கும். அப்பா வயலுக்குப் போயிருப்பார். ஊர்ஜனம் வீடுகளிலும் வேலைகளிலும் திரியும். ‘பட்டப் பகல்லெ இப்டியாதூங்குவே’ என்று சொல்லும் அம்மா. 

ராமச்சந்திரம் பிள்ளை வீட்டிற்கு ரேடியோ வந்து இறங்கி விட்டதாகப் பயல்கள் பொம்பிளைகள் மத்தியில் அன்றைக்குப் பெரிய பேச்சாக இருந்தது. கூட்ட நெரிசல் தாங்காமல் பிள்ளை ஆள் வைத்து விரட்டு கிறார் என்றும் சொன்னார்கள். அன்று சாயங்காலம் ராமச்சந்திரம் பிள்ளை, ரேடியோவை வந்து பார்க்க வேண்டுமென்று அப்பாவிடம் கேட்டுவந்தார். 

சாப்பாடு முடித்து ராத்திரி எட்டு மணிக்கு அப்பா ராமச்சந்திரம் பிள்ளை வீட்டிற்கு ஜிப்பா, அங்க வஸ் திரத்தோடு புறப்பட்டார் இரண்டடி பின்னால் நானும் நடந்தேன். பெட்டியை அலமாரியில் வைத்தி ருந்தார்கள். பக்கத்தில் ன்னொரு சின்னப் பெட்டி. 

பெட்டி நடுவில் பளபளவென்று வலைப்பின்னல்; வலது ஓரம் இரண்டு பூக்கள்போல வட்டமாய் மேலும்கீழும். அப்பா வந்து உட்கார்ந்ததும், “பக்கத்திலிருக்கிறது பேட்டரியா?” என்றார். அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது. அப்பாவை நினைத்தால் ஆச்சர்யம் ஆச்சர்யமாயிருக்கும். 

ஒரு ஸ்டூல் மேலேறி நின்று ரேடியோவை பேட்டரி யோடு சேர்த்தார் பிள்ளை. பிறகு வலது பக்கத்து மேல் பூவைத் திருகினார். பாட்டு சிந்தியது., முள்ளைத் திருகு என்றார் அப்பா. திருச்சி ஸ்டே ஷனா அது . மெட்ராஸ் கெடைக்குதா பாரு. அது கொழும்பு ஸ்டேஷன்.” முள்ளைத் திருகத் திருக அப்பா சொல்லிக்கொண்டேயிருந்தார். ராமச்சந்திரம் பிள்ளையை விட அப்பா ரேடியோவை நிறையத் தெரிந்து வைத்திருந்தார். 

கடைசியாய் திருச்சி ஸ்டேஷனில் முள்ளை நிறுத்தி அப்பா பாட்டுக் கேட்க ஆரம்பித்தார். 

பதநி பநி நிதப நிதப…’ என்று சொல்லேயில்லாமல் பாடிக்கொண்டிருந்தது. 

ஈஸிசேரில் சாய்ந்திருந்த அப்பாவைப் பார்த்தேன். விரல்களை எண்ணுவதுபோல் மடக்கி ஆட்டிக் கொண் டிருந்தார். தாளத்தை விரல்வழி வாங்கி விட்டுக் கொண்டிருக்கிறார் என்று பார்க்கப் பார்க்கப் புலப்பட்டது. வலது பாதம் சுதியோடு ஆடிக் கொண்டிருந்தது. அஞ்சு நிமிஷங்களாகியும் சொல் வரவில்லை. 

‘ஸரி ஸரி கம கம…’ தான். 

அப்புறம் சொற்களோடு பாட்டு வந்தபோதும் மொழி புலப்படவில்லை. அர்த்தம் பிடிபடவில்லை. இசை பிடிபட்டது. தாளம் நரம்புகளில் இறங்கியது. நானும் அப்பாவைப் போல விரல்களை மடக்கி விட ஆரம்பித் தேன். தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த வன், நீட்டி அமர்ந்து வலது காலை ஆட்டத் தொடங்கினேன். 

எதிரே பாடுகிறவர் முகம் தெரிவதுபோல் நினைத்து அப்பா பெட்டி வலைக்குள் கூர்ந்தும் நிலைத்தும் பார்த்து நிதானமாய் விரல் மடக்கியும் ஆனந்தமாய்ச் சாய்ந்து அசைந்தும் அனுபவித்துக் கொண்டிருந்தார். 

பிள்ளை வெற்றிலைத் தட்டோடு வந்தார். பின்னால் அந்த அத்தை செம்பில் தண்ணீர் கொண்டு வந்தது. நான் அப்பாவைப் போல் விரலை மடக்கியதை, காலை ஆட்டுவதைப் பிள்ளை பார்த்து விட்டுச் சொன்னார்.,, சங்கீதந் தெரிஞ்சஆள் இந்த சுத்து வட்டாரத்தில் நீங்கமட்டுந்தான்னு நெனைச்சுக்கிட்டி ருந்தேன். இப்போ இன்னோராளும் வந்திருச்சு. அப்பாவுக்குப் புன் சிரிப்பு. 

அப்புறம் விடியற்காலையில் அம்மா வைது கொண்டே எழுப்பியது. “அந்த அண்ணன் காலையிலெ பூரா ரேடியோப் பெட்டியைத் தூக்கிக்கிட்டுத் திரிஞ்சாக, ராத்திரி ஒண்ணை தூக்கிட்டு வர்ராக.” 

திருவுத்திர கோச மங்கையில் ஆருத்ரா தரிசனம். இந் தப் பகுதி முழுதும் விசேஷம்: தாத்தா சொல்வார். தரிசனம் கண்டவர்க்கு மறுஜனனமில்லை.” அன்று ராத்திரி கோவில் வாசலில் கச்சேரி நடக்கும். 

அப்பா வண்டி கட்டிப் போயிறங்குவார். கூட நான். கோட்டேந்தல் முதலாளி வீட்டில் பகல் தங்கல். முதலாளியும், அவர் சம்சாரமும் அப்பாவைத் தாங்குவார்கள். 

கச்சேரிக்குப் போகுமுன் சாப்பிடும் சாப்பாடு குறைவா யிருக்க வேண்டும். மோர் விட்டுக் கொள்ளக் கூடாது. ஒரு மடக்குக்கு மேல் தண்ணீர் குடிக்கக் கூடாது.இதை யெல்லாம் கடைப்பிடிக்காவிட்டால் கச்சேரி நடுவில் எழுந்து போக வேண்டியிருக்கும். கச்சேரி மனதில் லயிக் காது. இதையெல்லாம் அப்பா முதலாளிக்குச் சொல் வார். அப்பா என்ன சொன்னாலும் முதலாளிக்கு அது வேதம். அநேகமாய் அது புரியாது அவருக்கு. 

கோவில் வாசலுக்குப் போய் அப்பாவுக்குப் பக்கத்தில் உள்ள நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து மேடையை பார்க்கப் பரவசமாயிருக்கும். பாடுகிறவரின் பட்டு வேட்டியும் சட்டையும் கியாஸ் விளக்கில் மின்னி மின்னிச் சுற்றும். மிருதங்கம், வயலின், தம்பூரா, மோர்சிங், பானை என்று ஒவ்வொருவரும் வித்தை காட்டுவார்கள். ரெண்டு பாட்டுப் பாடி முடியுமுன் மயங்கிக் கண் சொருகும்.நாதம் அழகான குதிரையாய் மாறும். குதிரைக்கு இறக்கைகள் முளைக்கும். மேலே றிப் பறந்து ஆகாயத்தில் சஞ்சரிப்பது போலிருக்கும். விடியற்காலையில் முதலாளி சம்சாரம் எழுப்பும். விடிய நாலுமணி வரை முழிச்சுக் கச்சேரி கேட்ட அலுப்பு தம்பிக்கு. தூங்கட்டும்னு விடலாம்னா அப்பா’ வண்டியைப் பூட்டு இப்பவே ஊருக்குப் போகணும்’ங்கிறாக. கால் நகக்கண் வரை வெட்கம் பாயும். அப்பாவுக்குப் புன்சிரிப்பு. 

பரமக்குடியிலிருந்து ஒன்றுவிட்ட மாமா பக்கத்து வீட்டிற்கு வந்திருந்தார். அவரும், அப்பாவும் ஒரு காலத்தில் பர்மாவில் ஒன்றாயிருந்தவர்கள். 

அன்றைக்கு ராத்திரி மாமாவுக்கு எங்கள் வீட்டில் சாப்பாடு. பழைய கதைகளைப் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடிய ஒரு மணி நேரமானது. வெற்றிலை போட்டு முடிந்ததும் அப்பா கேட்டார்: ‘அத்தான் அந்தக் காலத்திலெ எப்பிடி பாடுவீக. கடையைப் பூட்ட ராத்திரி எத்தனை மணியானாலும் சாப் பிட்டதும் நீங்க ஒரு பாட்டாவது பாடாம இருந்த தில்லை. அதிலெயும் இந்தியாவிலெருந்து காயிதம் வர்ர அன்னிக்கி நாலஞ்சு பாட்டுனு போய்க்கிட்டே யிருக்கும். ஒங்கப் பாட்டைக் கேட்டாத் தான் அப்ப எனக்குத் தூக்கம் வரும்னு ஒரு பழக்கமே வந்திருச்சு. இன்னைக்குப் பாடுங்க.கேக்கிறப்பவே நான் ரெங் கோனுக்குப் போய் வந்துறேன். 

மாமா பாடினார். பெரிய மடை வாய்க்காலில் கறந்த பால் கரை தொட்டு ஓடுவது போலிருந்தது. வாசலி லிருந்த வேப்ப மரத்து இலைகளும், கிளைகளும் இறக்கைகளாய் மாறின. நான் வேப்ப மர உச்சியில். மரம் தேசம் தேசமாய்ப் பறந்தது. 

மறுநாள் விடிய மாமா ஊருணிக்குக் குளிக்கப் போகையில் திண்ணையில் அப்பாவுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அப்பா கண் கலங்கிச்சென்னார்: “அத்தான் ராத்திரி நீங்க பாடி வரும்போது கவனிச்சி யளா, பழைய ஞாபகத்தில் ரெண்டு தடவை தூங்கி முழிச்சுட்டேன்”. 

பணிவாசலில் சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணம். விடியுமுன் எழுந்து வண்டி கட்டிப் போயிருந்தோம். பந்தலில் கல்யாணம். வலது பக்கத்துத் திண்ணையில் வாத்தியக்காரர்கள் உட்கார்ந்து வாசித்தும், கொட்டி யும் மனசுகளில் கிடந்த கவலைகளை ஆசைகளை குரோதங்களை மறக்கடித்து தலைகளை ஆட்டவைத் துக் கொண்டிருந்தார்கள். 

இடது பக்கத்துத் திண்ணையில் அப்பா சாய்ந்து கொள்ள இரண்டுபட்டுத் தலையணைகள் போட்டிருந்தார்கள். திருப்பூட்டு சமயத்தில் எழுந்துபோய் அட்சதை தூவிவிட்டு மறுபடி சாய்ந்து வாசிப்புக் கேட்டார். 

அப்பா ஒவ்வொருராகமாய்ப் பாடச் சொல்லச்சொல்ல நாயனக்காரருக்கு ஏக சந்தோஷம். அப்பா கண் மூடி யும் எதிர்த் தூணில் பார்வையை நிறுத்தியும் லயித்துக் கிடந்தார். சாப்பாடு முடிந்து வண்டிக்குப் போகையில் மொய் பத்து ரூபாய் செய்து விட்டு நாயனக்காரர் கையில் இருபது ரூபாயைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். 

அப்பா இறந்த அன்று பதினெட்டு கிராம ஜனம் கூடி நின்றது. உறுமியும், தப்பும், வாங்கும் செட் செட்டாய் ஏழெட்டு இடங்களில் வட்டமாய் நின்று அடித்துப் புழுதி கிளப்பினார்கள். அழுகையும், உறுமி யும் சேர்ந்து பீதியைக் கிளப்பியது. அப்பா விரல்கள் அப்போது தான் தாளத்திற்கு மடங்கி எழவில்லை. ஒரு நாதஸ்வரக் கச்சேரியோ, பாட்டுக் கச்சேரியோ வைத்திருந்தால் அப்பா விரல்கள் ஒருவேளை மடங்கி எழும் என்று தோன்றியது. 

தனக்காள் வீட்டுக் கல்யாணத்திற்கு கீழக்கரையி லிருந்து ஸ்பீக்கர்ஸெட்வந்திறங்கியது. காலையிலிருந்து ரண்டு நாளைக்குப் பாட்டுக் கேட்கலாம். காளா செய் வயலில் காய்ந்து கிடக்கிறதென்று சொல்லித் தண்ணீர் பாய்ச்சப் போகச் சொன்னது அம்மா. மம்பட்டி உசரத்திலெ மம்பட்டி தூக்க வேண்டியா யிருச்சே” என்று அழுது காண்டே போகச் சொன்னது. 

மம்பட்டியைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு தனக்காள் விட்டுக்கு வந்தேன். பந்தல் கால் மேலேறி ரெண்டு குழாய்களைத் தெற்குப் பார்த்தும் மேற்கு பார்த்துமாய்க் கட்டிக் கொண்டிருந்தான் ஒரு ஆள். இந்த இரண்டு திசைகளுக்குக் குழாய்களைக் கட்டி விட்டால் ஊர் முழுதும் பாட்டுக் கேட்கும். காளாஞ் செய் வயல் வடக்கெ கிடக்கிறது. 

மம்பட்டியை இறக்கி வைத்து விட்டு மேலே பார்த்து. “அண்ணே, ஒரு குழாயை வடக்கெ பாக்கக் கட்டுங்கண்ணே” என்றேன். மேலே நின்றவன் அதிசயமாய் என்னைப் பார்த்தான்; அப்புறம் வடக க பார்த் தான். நாலு வீடு தள்ளி வயல்கள் ஆரம்பித்து காடு கரையாய்த் தெரிந்திருக்கும். ஆனாலும் அடக் கிக் கொண்டு “ஏம்ப்பா வடக்கெ பார்த்துக்கட் டச் சொல்றே,” என்றான்.“நான் இன்னைக்குப் பூரா வும் வடக்கெ போய் வயல்ல நின்னுதண்ணிபாச்சனும் ணே’ என்றேன். திரும்பி கயிற்றைக் கட்டிக் கொண்டே “போடா பேப்பயலே” என்றான். 

அப்பா இருந்திருந்தால் வடக்கெ பார்த்து நாலு குழாய்கள் கட்டியிருப்பார்கள், கல்யாண வீட்டுக் காரர்கள். மனசு வெந்து வந்தது. ஒற்றைப் பக்கத்துக் கண் ரொம்பத் துடித்தது. அன்றைக்கிலிருந்துதான் வயற்காடுகளிலும். மரங்களடர்ந்த சோலைகளிலும் ஆளில்லா இடங்களிலும், அர்த்த ராத்திரிகளிலும் நின்று நானே பாட ஆரம்பித்தேன்.

சைக்கிள் எடுத்து ராமநாதபுரத்துக்குப் பதினைந்து மைல் மிதித்துப் போய் முதல் ஆட்டம், இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்டு வரும் போது சினிமாப் பாட்டுப் புத்தகங்களை வாங்கி வந்தேன். 

பாடப் பாடக் கும்மாளமாயிருந்தது. தொண்டைக் குள் நிறுத்தி எந்தப் பாட்டையும் மனசோடு பாடுகை யில் சினிமாவில் பாடியவரையும் விட சுருதி சுத்த மாக இருந்தது. தொண்டையை விட்டு வெளியே வரும் போது ராகம் அந்த அளவு சுத்தமாயில்லை என்பதுபோல் தோன்றியது. 

ஒரு நாள் சாயங்காலம் நடராசனோடு ஊருணிக்கரை வழியாய் நடக்கையில் பாடிக் காட்டத் தோன்றியது. 

நடராசன் எனக்குச் சித்தப்பா மகன். ஒரே வயது. எதையும் நேருக்கு நேர் பேசிவிடுவான். “நடராசா நான் இப்ப நல்லாப் பாடுறேண்டா. ஒங்கிட்ட பாடிக் காட்டணும்னு ஆசையாயிருக்கு” என்றேன். எதையோ யோசித்துக்கொண்டே வந்த நடராசன், திரும்பி முகம் நிறையச் சிரித்து, “சரி இன்னைக்குப் பாடிரு” என்றான். 

ரெண்டு நிமிடம் எந்தப் பாட்டென்று யோசித்துக் கொண்டே நடந்தேன். ‘ஹும்’ என்றேன். அவன் சம்மதந்தர அஞ்சு நிமிஷத்துக்கு மேல் மலை ஏறி இறங்கினேன். 

பாடி முடித்து வெகு நேரம் பேசாமல் நடந்து கொண்டிருந்தான் நடராசன். வெடுக்கென்று கேட்டேன், 

“பாட்டு எப்பிடி இருந்துச்சு?” 

“தப்பா எடுத்துக்க மாட்டியே” 

“இல்ல சொல்லு” 

“பாட்டு ஒனக்கு வராது. இனிமே யாரு முன்னாலெயும் பாடாதே”. 

அன்று ராத்திரி தூக்கமில்லை. புரண்டு புரண்டு படுத்து நடு ராத்திரியில் ஒரு ஞாபகம். “அப்பா பாடிப் பார்த்ததேயில்லை; கேட்டதேயில்லை”. 

அப்புறம் திருவுத்தரகோசமங்கைக் கச்சேரிகள், எருது கட்டு வில்லுப்பாட்டுகள், அப்பாவின் மடங்கிஎழும் விரல்கள் ஞாபகம் வர அடித்துப் போட்டாற்போல் தூங்கியிருக்க வேண்டும். விடிந்ததும்தான் தெரிந்தது. 

– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *