திருமணம்
கதையாசிரியர்: சு.குருசாமி
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 3,358
(1947ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
முதலாவது அத்தியாயம்
கந்தசாமிபுரம் ஒரு குக்கிராமம். சுமார் ஐநூறு அறுநூறு வீடுகள் தாம் அதிலிருக்கலாம். செட்டிகள் தெரு என்று சொல்வதற்கில்லாவிட்டாலும், நாலைந்து செட்டிகள் வீடு சேர்ந்தாற்போல் அவ்வூரில் ஒரு பக்க மிருந்தன. அவைகளில் கிழக்கு நோக்கிய வீடுதான் முருகன் செட்டியாருடையது. அவ்வீட்டில் ஓர் அறையில் உடல் மெலிந்த பெண்ணுருவம் படுத்திருந்தது. மத்திய வயதைத் தாண்டிய பெண்ணொருத்தி அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்தாள்.
”அது யார் ?” என்று கேட்டாள் அறையில் படுத்திருந்த பெண்.
“ஏன்? நான் தானம்மா, சீதை.”
“இவ்வளவு நேராமா எங்கே போயிருந்தாய்? ஐயாவும் போய்விட்டார், நீயும் எங்கே போய்விட்டாய்?”
இதற்குப் பதிலில்லை. சீதை பதிலை எதிர் பார்க்கவு மில்லை. தாயாரை வெகு நேரமாய்க் காணாமே என்று தான் அவளுக்குக் கவலை. அவள் எங்கு போயிருந்தாள் என்பதைப் பற்றி அவளுக் கென்ன கவலை? மேலும் அவள் பேசலுற்றாள்.
“அம்மா, அந்தப்பயலை வெகு நேராமாய்க் காணோமே, எங்கே யிருக்கிறான் என்று கொஞ்சம் பாரேன்.”
தாயார் ஆவுடையம்மாளின் பதிலில் துக்கமும், சிறிது எரிச்சலும் தொனித்தது. “அவனைப் பற்றி நீ ஏனம்மா கவலைப் படுகிறாய்? அந்தச் சனியன் எந்த நேரம் பிறந்ததோ, அதிலிருந்து தானே உன்னை இப்படிப்படுத்த படுக்கயைாய்க் கிடத்திவிட்டது!”
“எப்பப் பார்த்தாலும் என்னை ‘செத்துப்போ செத்துப்போ!’ என்று சொல்லுகிறானே, அம்மா. நான் செத்துப்போனேன் என்றால், இவனை யாரம்மா பார்த்துக் கொள்வார்கள் ?”
“அது நாசமாய்ப் போக, அது, வாயிலே ஏன் அப்படி வருது?”
இந்தச் சமயம் சுமார் நான்கு வயதுள்ள சிறுவன் ஒருவன் வீட்டிற்குள் ஓடி வந்தான்.
“இங்கே வாடா, கண்ணு, பாலு” என்று குழந்தையைச் சீதை தன்னருகில் கூப்பிட்டாள்.மண்
குழந்தை பிறந்ததிலிருந்தே சீதை நோய் வாய்ப் பட்டுப்படுத்த படுக்கையாய்ப் படுத்து விட்டாள். ஒரு நோய் போனால், ஒரு நோய் வந்து கொண்டே இருந்தது. இப்பொழுது வயிற்றுக் கடுப்பினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாள். குழந்தையுடன் கொஞ்சிக் குலாவுவதற்குக் கூட அவளால் முடியவில்லை. உடல் நலமிழந்து, மெலிந்த உருவத்தில் இருந்த தன் தாயைக் குழந்தை ஆதி முதலே வெறுத்தது. அவளை அணுகவும் அஞ்சியது.
“நான் வரமாட்டேன். நீ செத்துப் போ. உனக்கு நானே கொள்ளி வைக்கிறேன்!” என்றான் சிறுவன். அவன் பெயர் பாலகிருஷ்ணன்.
குழந்தையின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், நோயுற்றிருந்த அன்னை வெகு சீக்கிரத்தில் பொறுமை இழந்தாள்.
“கொள்ளி வைக்கத்தாண்டா பிறந்திருக்கே! கொள்ளி வைக்காமல் இருப்பாயா?” என்று எரிச்சலுடன் கூறினாள் சீதை.
“இந்த வயதிலே இவனுக்கு யார் இப்படிச் சொல்லிக் கொடுத்தது? இனிமேல் அப்படிச் சொன்னால், நாக்கிலே சூடு போட்டிருவேன் பார்த்துக்கொ” என்று ஆவுடையம்மாள் பாலகிருஷ்ணனைப் பயமுறுத்தினாள். அவளுக்கு மகளைப் பற்றிய கவலை!
சிறுவன் மீண்டும் வெளியில் ஓடி விட்டான்.
“நான் சொன்னதை ஐயாவிடம் சொன்னாயா, அம்மா?” என்று சீதை கேட்டாள்.
“சொல்ல மறந்து விட்டேன். இப்ப வருவாரல்லவா, வந்ததும் சொல்றேன்” என்றாள் ஆவுடையம்மாள்.
அதிகாலையில் எழுந்து பருத்திக் காட்டிற்குச் சென்ற முருகஞ் செட்டியார் அப்போதுதான் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். பங்குனி மாதம். உச்சி வெய்யில் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தது. அதைத் தாங்குவதற்குச் செட்டியாரின் தலையில் பருத்திச் சாக்கொன்றிருந்தது. அது பருத்தி வெடிப்புக் காலம். இருண்ட வானில் நக்ஷத்திரங்கள் பிரகாசிப்பது போல், அவருடைய காட்டில் அங்கங்கே செடிகளில் பருத்தி வெடித்திருந்தது. அதைச் சேகரிப்பதற்காக ஏழெட்டுப் பெண்களைக் கூலிக்கு விட்டிருந்தார். அவர்கள் சேகரித்த பருத்தி தான் அவருடைய தலையின் மீதிருந்த சாக்கிலிருந்தது. அகோரமான வெய்யில்! கீழே அடிஎடுத்து வைக்க முடியாதபடி பூமாதேவி கொதித்துக் கொண்டிருந்தாள். ஆகையினால் அங்கங்கே இருந்த நிழலுக்கு நிழல் தாவிச் செல்வது போல், அவ்வளவு வேகமாய் சென்று கொண்டிருந்தார் செட்டியார். அவருடைய வேகத்திற்கு அது மட்டுமா காரணம்?
வீட்டிற்குள் நுழைந்ததுமே செட்டியார், “சீதை எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டார்.
“இருக்கிறாள். எப்பவும் போலத்தானிருக்கிறாள்” என்று உற்சாகமற்ற குரலில் அவருடைய மனைவி ஆவுடையம்மாள் பதிலளித்தாள்.
“இதுவரை எத்தனை தடவை போயிருக்குது?”
“ஏழெட்டுத் தடவைக்கு மேலாச்சு. ரத்த ரத்த மாய்த்தான் போகுது!”
“சின்னப்பயலை எங்கே காணோம்?”
“அது எங்கே தொலைந்ததோ. கழுதை?”
செட்டியார் பல் விளக்கி விட்டுப் பழைய சாதம் சாப்பிட உட்கார்ந்தார். பருத்தி வெடிப்புக் காலத்தில் தினந்தோறும் மத்தியானத்திற்கு மேல் தான் அவர் பழையது சாப்பிடுவது வழக்கம்.
“புருஷன் வீட்டிற்குப் போக வேண்டும் என்று சீதை பிடிவாதம் செய்கிறாளே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று ஆவுடையம்மாள் கேட்டாள்.
“இப்படிப் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறாளே, எப்படிப் போக முடியும்?”
“நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். கட்டாயம் போகத்தான் வேண்டும்” என்கிறாள்
“உங்களுக்குப் பருத்திக் காட்டோடு மாரடிக்கத் தானே சரியாய்ப் போகுது, ஐயா. எனக்கு ஒரு மருந்தா மாயமா ஒன்றும் கிடையாது. காலையில் எழுந்திருந்து காட்டுக்குப் போனவர் இப்பத்தானே வந்திருக்கிறீர்கள்? அங்கே கொண்டு போய் விட்டுவிட்டால், அவர் பாடு, என் பாடு” என்று சிறிது ஆத்திரத்துடன் கூறினாள் சீதை.
“நான் என்னம்மா செய்வேன்? பட்டிக் காட்டிலே என்ன செய்ய முடிகிறது? பணங்கொடுத்துப் பத்து நாளைக்கு மேலாகிறது. மருந்து செய்து கொண்டு வருவதாகச் சொன்ன வைத்தியனை இன்னுங் காணோம்” என்றார் முருகஞ்செட்டியார்.
“உங்கள் மேல் நான் குற்றமா சொல்கிறேன், ஐயா? கொண்டவரிடம் என்னைச் சேர்த்து விட்டால், அப்புறம் ஆண்டவன் விட்டபடி விடட்டும் என்று தானே சொல்கிறேன்?”
முருகஞ்செட்டியார் யோசித்துப் பார்த்தார். மகள் சொல்லியது சரி என்றே தோன்றியது. அவளுடைய கணவனின் ஊரில் ஆஸ்பத்திரி, டாக்டர், மருந்து எல்லாச் சௌகரியங்களும் இருப்பதனால், அங்கே கொண்டு போய்ச் சேர்த்து விடுவதே நலம் என்று நினைத்தார்.
அன்றிரவு சாப்பாட்டிற்குப் பின்பு, முருகன்செட்டியார் வண்டி ஒன்று ஏற்பாடு செய்வதற்காக வெளியில் சென்றார். செட்டியாரிடம் மாடுகளிருந்தன. ஆனால் நோயாளிகளைக் கொண்டு செல்வதற்குத் தகுதியான வில் வண்டி கிடையாது. அவ்வூரிலேயே மேல வீட்டு நாயக்கர் ஒருவரிடந்தான் வில் வண்டி உண்டு. ஆகையினால் அவரிடம் கேட்பதற்காகச் செட்டியார் சென்றிருந்தார்.
கணவனுடைய வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்று சீதை விரும்பியது வாஸ்தவம்தான். ஆனால் அப்புறம் யோசித்துப் பார்த்த பொழுது, அவளுக்கு அங்கே செல்லப் பயமாயிருந்தது. புருஷன் வீட்டில் தன்னை நன்றாய்க் கவனிப்பார்களா, அங்கே தனக்குச் சேவை, சிஸ்ரூஷை எல்லாம் யார் செய்வார்கள் என்று பல விதமாக யோசிக்க வாரம்பித்தாள். ஆகையினால் தன் தாயாரைப் பக்கத்தில் அழைத்து, “எனக்கு அங்கே போகப் பயமாயிருக்கிறதே, அம்மா” என்றாள்.
“உன்னை யார் இப்பொழுது அங்கே போகச் சொல்கிறார்கள்? நீயாகத்தானே போக வேண்டும் என்கிறாய்?”
சீதைக்குத் திடீரென்று ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. கண்களில் கண்ணீர் மல்க, “என்னைக் கல்யாணம் பண்ணின வருஷம் திருவிழாச் செலவுக்கு என் கணவரிடம் பணங்கேட்டேன். செல்லாக் காசுகளாக பனிரண்டு காசுகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து என்னிடங் கொடுத்தார். அப்பேர்ப்பட்டவர்கள், என்னை எப்படி அம்மா கவனிப்பார்கள்?” என்றாள்.
“அப்படியானால் ஏன் அங்கு போகவேண்டும் என்கிறாய்?”
“என்ன வானாலும் சரி. இங்கேயே இருந்து விடட்டுமா, அம்மா?”
“இருக்கத்தானே சொல்கிறேன்.” சீதை சிறிது நேரம் மௌனமாயிருந்தாள். அவளுடைய மகனைப் பற்றிய கவலை அவள் மனதில் தோன்ற வாரம்பித்தது. ஆண் பிள்ளை, படிக்க வேண்டிய பையன், கந்தசாமிபுரம் பள்ளிக்கூடம் இல்லாத குக்கிராமம் என்பதெல்லாம் ஞாபகத்துக்கு வரவே, தான் கணவன் வீட்டிற்குச் செல்வதே உசிதம் என நினைத்தாள். மேலும் அங்கே அவளுடைய மாமியார் இருப்பதும் அவளுக்குத் தைரியம் அளித்தது.
”அம்மா, நான் போகத்தான் வேண்டும்” என்று இறுதியாகத் தாயாரிடம் சீதை சொன்னாள்.
பின்பு சிறிது நேரம் கழித்து என்ன நினைத்தாளோ தெரியவில்லை, “இந்தப்பயல் தலையில் ஆண்டவன் எப்படி எழுதி இருக்கிறானோ, தெரியவில்லையே, அம்மா” என்றாள்.
“ஒன்றுக்கும் நீ பயப்படாதே அம்மா” என்றாள் ஆவுடையம்மாள்.
வெளியில் சென்ற முருகஞ்செட்டியார் தற்செயலாய் இரண்டு பெண்கள் தெருவில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது.
“அவளைப் போன கணக்கோடு சேர்க்க வேண்டியது தான். இனி பிழைக்கவா போகிறாள்?” என்றாள் ஒருத்தி.
“நானும் இன்று சாயந்திரந்தான் போய்ப் பார்த்தேன். எப்படி இருந்தவள் எப்படி இளைத்து விட்டாள்!” என்றாள் இன்னொருத்தி.
அவர்கள் சீதையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறர் வாயின் மூலம் கேட்ட போதுதான் முருகஞ் செட்டியாருக்குத் தன் மகளின் உண்மையான நிலைமை நன்கு தெரியவந்தது. அது இத்தனை நாட்களும் அவருக்கு ஏன் தெரியாமற் போய்விட்டது?
அவர்கள் சொன்னது உண்மைதானா? சீதை இனிப் பிழைக்க மாட்டாளா?
அப்படியானால் சிறுவன் பாலகிருஷ்ணனின் கதி என்னாவது?
இரண்டாவது அத்தியாயம்
சீதை வெற்றிபுரத்திலுள்ள தன் கணவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அங்கு அவள் கண்ட காட்சி அவளைக் கதி கலங்கச் செய்தது. கணவன் வீட்டிற்குப் போகலாமா வேண்டாமா என்று பலவாறாக அவள் மனோ வியாகூலப் பட்டுக் கொண்டிருந்த பொழுது அவளுடைய மாமியார் நினைவுதான் அவளுக்குத் தைரியம் அளித்தது. அதன் பிறகுதான் வெற்றிபுரத்துக்குப் போவதென்று அவள் உறுதியாகத் தீர்மானித்தாள். மாமியார் தனக்கு உதவியாயிருப்பாள், தன் குழந்தையின் மீதும் பிரியமாயிருப்பாள் என்ற நம்பிக்கையுடன் தான், அவள் வந்தாள். ஆனால் அவளுடைய மாமியார் இருந்த நிலைமையைப் பார்த்த போது, அவளுடைய ஆசைகளெல்லாம் பாழாயின. ஒன்றை நினைத்தால், அது ஒழிந்திட்டொன்றாகும் இந்த உலகத்தில் எதைத்தான் நம்புவது?
சீதையின் மாமியார் லக்ஷ்மியம்மாள் அவளுக்கு உருவத்திலும் மாமியாரில்லை; உண்மையிலும் மாமியாரா யில்லை. லக்ஷ்மியம்மாள் சீதையின் மாமனாருக்கு இரண்டாந் தாரமாக வாழ்க்கைப் பட்டவள். அவளைக் கலியாணம் பண்ணிக் கொண்ட போது, சுந்தரஞ்செட்டியாருக்கு இரண்டு புத்திரிகளும், ஒரு புத்திரனும் இருந்தனர். பெண்களுக்கு நல்ல வேளையாகக் கல்யாணமாகிவிட்டது. பெண்களுக்குக் கலியாணம் செய்து பார்த்து விட்டாவது செத்தாளே புண்ணியவதி, இல்லையானால் இளையாள் வருபவளிடம் அப்பெண்கள் என்ன கஷ்டப்பட நேர்ந்திருக்குமோ என்று ஊரில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள். ஆனால் பின்பு லக்ஷ்மியின் குணத்தைக் கண்டவர்கள் அத்தகைய பயத்திற்கே இடமில்லை என்பதை அறிந்தார்கள்.
மனைவி இழந்தவர்கள் எத்தனையோ பேர்கள் இரண்டாந்தாரம் கலியாணம் செய்து கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆயினும் சுந்தரஞ்செட்டியாருக்கு வாய்த்தது போல் யாருக்கு வாய்க்கிறது என்று ஜனங்கள் பேசினார்கள். லக்ஷ்மி அவ்வளவு அடக்கமும், ஒடுக்கமும், குணமும், அழகும் பொருந்தியிருந்தாள். கணவன் இட்ட கட்டளைக்கு எதிர் பேசாமல் நடந்து வந்தாள் அவள். பெயருக்கேற்றபடி லக்ஷ்மீகரம் பொருந்தி யிருந்த அவளுடைய முகத்தில் எப்பொழுதும் திருப்தியும், சந்தோஷமுங் குடி கொண்டிருந்தன.
கிராமத்துப் பெண்தான். கணவன் வீட்டிற்கு வந்த போது, வீட்டு வேலைகளைப் பார்ப்பதற்குக் கூட அவளுக்கு நன்றாய்த் தெரியாது. கணவன் தான் எல்லா வேலைகளையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார்.
புதுமண மோகத்தில் ஈடுபடும் இளவயதில் இல்லை சுந்தரஞ்செட்டியார். ஆகையினால் வீட்டுக் காரியங்களில் தன் இள மனைவிக்கு ஓத்தாசை செய்வதில் அவர் ஆனந்தத்தைக் கண்டார். லக்ஷ்மியும் வெகு சூட்டிக்கையாக வேலைகளைக் கற்றுக் கொண்டாள். எழுத்து வாசனையே அறியாமலிருந்த தன் மனைவிக்குச் செட்டியார் கல்வியுங் கற்றுக் கொடுத்து விட் டார். எல்லோரும் லக்ஷ்மியின் அறிவையும், குணத்தை யும் மெச்ச வாரம்பித்தார்கள்.
மூத்தாளுக்கு வயது வந்த மக்கள் மூவர் இருக்கும் வீட்டில், இளையாளாக வாழ்க்கைப் பட்டு நல்ல பெயரும் வாங்குவதென்றால் இலேசான காரியமில்லை. இயற்கையில் நல்லவளா யிருப்பவளைக் கூட மூத்தாளின் உறவுனர்கள் குத்தலாகப் பேசியும், கோள் மூட்டி விட்டும், இல்லாததை உண்டென்று சிருஷ்டித்தும் கெடுத்து விடுவார்கள். ஆனால் தன்னுடைய சக்களத்தியின் உறவினர்கள் கூடக் கொண்டாடும்படி அவள் நடந்து கொண்டது எல்லோருக்கும் ஆச்சரியமாகவே தோன்றியது.
“என்ன வசிய மருந்து தூவி இப்படி எல்லாரையும் மயக்கி விட்டாய் லக்ஷ்மி?” என்று சுந்தரஞ் செட்டியார் கூடச் சிற்சில சமயங்களில் கேட்பதுண்டு.
கணவனுடைய வீட்டிற்கு வந்த கொஞ்ச காலத்திலேயே, லக்ஷ்மி தன் பொறுப்பு முழுவதையும் உணர்ந்து கொண்டள்.வீட்டிற்கு எஜமானிஎன்ற கர்வத்துடனல்லாமல் கௌரவத்துடன் நடக்கலானாள். சுந்தரஞ்செட்டியாருடைய மூத்த தாரத்தின் மகன் அவளுக்கு இரண்டொரு வயது தான் இளையவன். அவள் வந்ததிலிருந்து அவனைத் தன் மகனைப் போலவே நடத்தி வந்தாள். அவனும் அவளிடம் மரியாதையுடனும் அன்புடனும் நடந்து கொண்டான். அப்பொழுது அவனுக்குக் கலியாணம் ஆகவில்லை. அதற்கப்புறம் ஐந்தாறு வருடங்களுக்குப் பின்பு அவனுக்கு விவாகம் நிறைவேறியது. லக்ஷ்மிதான் பெரிய மனுஷி மாதிரி அவனுக்குப் பெண் பார்த்து வந்தாள்!
கணவன் வீட்டிற்குச் செல்லத்தான் வேண்டுமென்று சீதை தீர்மானித்த பொழுது, லக்ஷ்மியின் நினைவுதான் அவளுக்குத் தைரிய மூட்டியது. லக்ஷ்மிக்கும் அவளுக்கும் சுமார் பத்துப் பன்னிரண்டு வயது வித்தியாசமிருக்கும். ஆயினும் சீதையை லக்ஷ்மி தன் தோழி போல் நடத்தி வந்தாளே ஒழிய மருமகள் போல் கருதவில்லை. கணவனுடைய அசிரத்தையையும், அலக்ஷியத்தையும், தான் நோய் வாய்ப்பட்டிருப்பதால் தன் மீது பிரியமில்லாம லிருப்பதையும் நினைத்துப் பார்த்த பொழுது சீதைக்குப் பயமாகவே இருந்தது. திருவிழாச் செலவிற்காகப் பன்னிரெண்டு செல்லாக்காசுகளைப் பொறுக்கிக் கொண்டு வந்து கொடுத்த கணவனின் வன்கண்மையைப் பற்றிச் சீதை தன் தாயாரிடம் குறைப்பட்டுக் கொண்ட பொழுது தன் மாமியார் அச்சமயத்தில் எப்படி நடந்து கொண்டாள் என்பதைச் சொல்லவில்லை. இவ்விஷயத்தை அறிந்ததும், லக்ஷ்மி ஒரு பையனைக் கடைக்கு அனுப்பித் தனக்கும் சீதைக்கும் திருவிழாச் செலவுக்கு ஐந்து ரூபாய் வேண்டு மென்று வாங்கி வரச் சொன்னாள். சுந்தரஞ் செட்டியாரும் உடனே கொடுத்தனுப்பினார். அவளுடைய வார்த்தைக்கு எப்போதுமே அவர் மறுவார்த்தை சொல்வதில்லை. வீட்டில் அவள் அடி எடுத்து வைத்த பிறகு தான் லாபத்திற்கு மேல் லாபங் கிடைத்துத் தனக்குக் கூடிவந்ததென்பது அவருடைய நம்பிக்கை.
சீதையின் கணவன் அன்று சாப்பிட வந்த பொழுது லக்ஷ்மி அவனைப்பார்த்து, “ஊரிலுல்ல பயல்களெல்லாம் மனைவிகளை எப்படிக் கொஞ்சிக் குலாவுகிறான்கள், என்னென்ன வாங்கிக் கொடுக்கிறான்கள் ! திருவிழாச் செலவுக்குப் பணங் கேட்ட பெண்ணுக்கு நீ பனிரெண்டு காசுகளைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறாயே, இது உனக்கு நன்றாயிருக்கிறதா?” என்று கண்டிக்கவும். செய்தாள்.
அத்தகைய லக்ஷ்மியம்மாளுக்கு இப்பொழுது என்ன நேர்ந்திருந்தது?
இரண்டாந்தாரமாக வாழ்க்கைப் பட்ட லக்ஷ்மி கவலைப்படுவதற்கு ஒரு காரணமு மில்லாமல் தான் முதலி லிருந்தது. அவளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. இரண்டு பெண்கள், ஒரு ஆண். குழந்தைகளை அவள் வெகு பிரியமாக வளர்த்தாள், சுந்தரஞ் செட்டியாரும் அவர்களின் மீது வெகு வாஞ்சையாக இருந்தார். மூத்தாள் பிள்ளைகளின் பொறாமையைத் தூண்டாமலும் லக்ஷ்மியின் மனங் கோணாமலும் வெகு திறமையுடன் நடந்து கொண்டார்.
ஆனால் லக்ஷ்மி கொடுத்து வைத்தது அவ்வளவு தானோ என்னவோ, அவளுடைய இரண்டு பெண்களும் எட்டு வயது வரைக்கும் வளர்ந்து, வளர்ந்து, ஒருத்தி பின் ஒருத்தியாய் இறந்தனர். அப்புறம் ரங்கசாமி என்ற ஒரே மகன் மட்டுந்தான் இருந்தான்.
அவன் மீது உயிராயிருந்தாள் லக்ஷ்மி. அவனுடைய கண் கலங்கினால், அவளுடைய மதியே கலங்கி விடும். அவனுக்கு ஜலதோஷம் பிடித்தால் கூட, லக்ஷ்மி சகிக்க மாட்டாள். ரங்கசாமியும் வெகு நன்றாய் வளர்ந்து வந்தான். குழந்தையின் பருவத்திற்கேற்ற விளையாட்டுக் களையும், வேடிக்கைகளையும் கண்டு அவள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஒரே குழந்தையல்லவா?
இரண்டு கைகளாலும், கால்களாலும், தவழ்ந்து கொண்டிருந்த குழந்தை, கைகளிரண்டையும் தூக்கி எழுந்து நின்று, நடக்க வாரம்பித்த பொழுது, லக்ஷ்மி ஏன் அத்தனை ஆனந்தம் அடைந்தாள்? இரண்டு கால் களால் நடக்கும் அந்தப் பிரம்மாத வித்தையை இந்த வுலகில் தன் குழந்தை ஒன்று மட்டுந்தான் செய்கிறது என்ற நினைத்தாளோ!
பின்பு குழந்தையின் குதலை மொழிகளைக் கேட்டு அதனுடன் கொஞ்சிக் குலாவினாள். ஐந்து வயதில் ரங்கசாமி பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தான். பையன் மிகுந்த புத்தி நுட்பமுள்ளவனாகவே தோன்றியது. பெற்ற தாய் அடைந்த பெருமையைச் சொல்ல வேண் டுமா ? தன் மகனைப் போல் அறிவுள்ளவன் இந்த உலகத்திலேயே எங்கும் கிடையாதென்று எண்ணி இறுமாந்திருந்தாள்.
தினந்தோறும் பையன் பள்ளிக்கூடத்திலிருந்து ஏதாவது புதிதாகக் கற்றுக் கொண்டு வருவான். தான் கற்ற கதைகளையும் பாட்டுக்களையும் தாயாரிடத்தில் சொல்லிக் களிப்பூட்டுவான். ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும், “மாமி தந்த லட்டு. மடியில் வாங்கிக் கட்டு. அதைக் கொஞ்சம் பிட்டு, எனக்குக் கொஞ்சம் ஊட்டு ” என்று பாடவாரம்பித்தான். அவனுக்குப் பள்ளிக்கூடத்தில் அன்று கற்றுக் கொடுக்கப் பட்ட பாட்டு அது. சமையல் அறையில் ஏதோ வேலையாய் இருந்த லக்ஷ்மி இதைக் கேட்டவுடன் குதித்துக் கொண்டு ஓடி வந்தாள் “மாமி தந்த லட்டா? எந்த மாமியடா கொடுத்தாள்? அடராசா! உனக்கு லட்டுக் கொடுப்பதற்கு எந்த மாமியடா இருக்கிறாள்? நான் கொடுக்கிறேனடா, கண்ணே!” என்று, அப்பொழுதே கடைக்கு ஆள் அனுப்பி லட்டு வாங்கி வந்து பிள்ளைக்குக் கொடுத்தாள்!
இன்னொரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும், ரங்கசாமி லக்ஷ்மியைப் பார்த்து, “அம்மா! உனக்கொரு கதை சொல்லட்டுமா?” என்றான்.
“சொல்லடா, தங்கம்!” என்றாள் தாய். பையன் சொல்லவாரம்பித்தான்.
‘ஒரு ஊரில் ஒரு கணேசன் இருந்தான். அவன் பெயர் கணேசன்! அவன் காலையில் எழுந்திருப்பான். சுத்தமாய்ப் பல் தேய்ப்பான். சுத்தமாய்க் குளிப்பான். சுத்தமாய்ச் சொக்காய் போட்டுக்கிவான். சுத்தமாய்ப் படிப்பான். சுத்தமாய்ப் பள்ளிக் கூடம் போவான்” என்று நிறுத்தினான்.
“அப்புறம்”? என்றாள் லக்ஷ்மி. “அவ்வளவுதான்!”- என்று குதலை மொழியில் கொஞ்சினான் குழந்தை.
“சுத்தம் சுத்தம் என்று எத்தனை தடவையடா சொல்லுகிறாய்? அத்தனை சுத்தமாய் இருப்பாயாக்கும்,. நீ ஏண்டா கண்ணே! இந்தச் சட்டையைப் பார். அழுக்காயிருக்கிறது. வெளுத்தசட்டை போடுவோம், வா!” என்று குழந்தையை அணைத்துக் கொண்டு சென்றாள்.
ஒரு நாள் ரங்கசாமிக்கு லக்ஷ்மி சாதம் போட்டு வைத்தாள். திடீரென்று சிறுவன் தாயைப் பார்த்து, “நீ இன்று காலையில் என்ன சாப்பிட்டாய்?” என்று இலக்கணமாய்க் கேட்டான்.
தன்னை அம்மாதிரி கேட்க வேண்டுமென்று அவள் விரும்புகிறானோ என்று நினைத்துக் கொண்டு, லக்ஷ்மி அவனைப் பார்த்து, “நீ இன்று காலையில் என்ன சாப்பிட்டாய்?” என்று கேட்டாள்.
அவன் விரும்பியது அதுவல்ல “ஊஹும், நீ சொல்லு” என்றான்.
உடனே லக்ஷ்மி, “நான் இன்று காலையில் இட்டிலி சாப்பிட்டேன் ” என்று பதில் சொன்னாள்.
“அப்புறம் என்னா சாப்பிட்டாய்?”
“காப்பி சாப்பிட்டேன்”
“ஐயோ ! காப்பி சாப்பிடப்படாது. கெடுதி! பால் சாப்பிட்டேன்னு சொல்லு” என்றான் ரங்கசாமி.
“பால் சாப்பிட்டேன் ”
“அப்புறம் என்னா செய்தாய்?”
“வீட்டு வேலைகளைக் கவனித்தேன்”
“ஐயோ! பள்ளிக்கூடம் போனேன்ண்ணு சொல்லு”
“நான் பள்ளிக்கூடம் போகலடா, ராசா. நீ தாண்டா போனே, கண்ணு” என்று பிள்ளையை வாரி முத்தமிட்டாள் லக்ஷ்மி.
இதை எல்லாம் தானுங் கண்டு களித்த சீதை, அன்று வீட்டிற்குள் நுழைந்ததும், லக்ஷ்மியைக் கண்ணீரும் கம்பலையுமாய்க் கண்டால், ஏன் அவளுக்குக் கதி கலங்காது? மூன்றே நாள் காய்ச்சலில் தன் ஒரே மகனையும் இரண்டு நாட்களுக்கு முன்பு இழந்து விட்டுப் பரிதவித்துக் கொண்டிருந்தாள் லக்ஷ்மி!
“இங்கே இத்தனை நடந்திருக்கிறது. அங்கே ஒன்றுந் தெரியாமல் கிடந்தேனே! எனக்கு ஒரு வார்த்தை சொல்லி விடப்படாதா, அத்தை?” என்று சீதை கேட்டாள்.
“நீ சீக்காய்க் கிடக்கிறாயே என்று ஆள் விடவில்லை. காகிதந்தான் போடச் சொன்னேன்” என்றாள் லக்ஷ்மி.
குழந்தை ரங்கசாமி இறந்த துக்கந் தாளாமல் அழுத தனாலும், எல்லோரும் துக்கமாயிருந்ததனால், அவளை ஒருவரும் அதிகமாய்க் கவனிக்காததாலும், சீதையின் நோய் மேலும் அதிகரித்தது. தனக்கு ஏதாவது நேர்ந்தாலும், அவளுடைய மாமியார், ரங்கசாமியுடன் பாலகிருஷ்ணனையும் குழைந்தையோடு குழந்தையாய் வளர்ப்பாள், நன்றாய்ப் படிக்கவைப்பாள் என்ற எண்ணத்துடன்தான் மாமனார் வீட்டுக்குச் சீதை வந்தாள். ஆனால் அவளோ பாலனை இழந்து, அழுது தவித்துக் கொண்டிருந்தாள்! ஆகையினால் தன் மகன் கதி என்னவாகுமோ என்று எண்ணாததெல்லாம் எண்ணி, ஒரு நாள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது, பாலகிருஷ்ணன் அவள் படுத்திருந்த அறைக்குள் ஓடி வந்தான்.
“உன் தலையில் எப்படி எப்படி எழுதிருக்கிறதோடா கண்ணு” என்று அவனைப் பக்கத்தில் அழைத்தாள் சீதை.
”நான் வரமாட்டேன். நீ செத்துப்போ! நான் உனக்கு கொள்ளி வைக்கிறேன்!” என்று சொல்லிவிட்டுச் சிறுவன் ஓடிவிட்டான்!
மூன்றாவது அத்தியாயம்
சுந்தரஞ் செட்டியாருக்குப் பலசரக்கு வியாபாரம். செட்டியார் முறுக்கா, சரக்கு முறுக்கா என்று ஜனங்கள் கேட்பது வழக்கம். சுந்தரஞ் செட்டியார் சம்மந்தப்பட்ட மட்டில் செட்டியாரும், சரக்கும் இரண்டுமே முறுக்குத் தான்! அவர் ஆதியில் தன் முதல் மனைவியின் நகைகளை விற்று அதனால் கிடைத்த சுமார் முன்னூறு ரூபாயை முதலாகப்போட்டு வியாபாரத்தை ஆரம்பித்தவர். அவருடைய புத்தி நுட்பத்தினாலும். ஓயாத உழைப்பினாலும் வியாபாரம் சிறிது சிறிதாக வளர்ந்து ஓங்க ஆரம்பித்தது.அவர் தனது பேச்சு நயத்தாலும், சரக்கின் நயத்தாலும் ஜனங்களைத் தன் கடைக்கு இழுக்க ஆரம்பித்தார். செட்டியார்- கடைச் சரக்கென்றால், விலையும் கேட்க வேண்டியதில்லை,. பொருளையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று யாவரும் அவர் கடையிலேயே சாமான்கள் வாங்கிச் சென்றனர். சுற்றுப்புறமுள்ள கிராமங்களிலுள்ள சில்லறை வியாபாரிகளும் அவருடைய கடைக்கே வந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். சமீபகாலத்தில் அவருடைய வியாபாரம் பன்மடங்கு பெருகி விட்டது. சிறிய சில்லறைப் பலசரக்குக் கடையாக ஆரம்பித்தது, வெகு சீக்கிரத்தில் பெரிய கடையாகி வியாபாரம் அதிகரிக்கவே, சுந்தரஞ் செட்டியார் பக்கத்திலிருந்த கடையையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டு இரண்டு கடைகளாக்கினார். அதன் பிறகு கொஞ்ச காலத்திலேயே ஒரு ஜவுளிக்கடையையும் ஆரம்பித்தார்.
முதல் மனைவியின் நகைகளை விற்றுத்தான் அவர் வியாபாரம் தொடங்கிய போதிலும், இரண்டாம் மனைவி வந்ததின் பின்பே அது செழிக்கலாயிற்று. ஆகையினால் செட்டியாருக்கு லக்ஷ்மியம்மாளின் மீது மிகுந்த வாஞ்சை உண்டு.
லக்ஷ்மியம்மாளுக்குத் தன் மகன் இறந்த துக்கம் சிறிதேனும் ஆறினபாடில்லை. குழந்தை ரங்கசாமி பேசின பேச்சுக்களையும், செய்த செய்கைகளையும் ஒவ்வொன்றாக நினைத்து, நினைத்து அவள் அழுது புலம்பினாள். சிதம்பரத்திற்குச் சென்று நடராஜரின் திவ்ய நடனத்தை அவள் கண்டு களித்ததில்லை. ஆனால் அவளுடைய மகன் ரங்கசாமி “ஆனந்த நடமாடினார், அம்பலந்தன்னில் நடேசர் ஆனந்த நடனமாடினார்” என்று ஆடிய போதும், ஆட்டத்திற்கேற்றபடி பாடியபோதும் பொன்னம்பலத்தில் நடேசருடைய களிக்கூத்தையே காண்பது போல் அவள் பரவசம் அடைவாள்.
“இதுகூடக் கடவுளுக்குப் பிடிக்கவில்லையா? என் ரங்கசாமியை ஏன் என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்?” என்று அவள் ஏங்கினாள். ‘நடவு நட்டுப் பயிர்கள் செய்து’ என்று அவன் பாடும் போது, நடவு நட்டுவது போலவும், பயிர் செய்வது போலவும் தன் அழகிய கைகளினால் நடித்துக் காண்பிப்பானே! அதை இனி என்று பார்ப்பேன்’ என்று அவள் இதயம் நொந்தாள்.
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று ரங்கசாமி தன் மழலை மொழிகளில் பாடிய போதெல்லாம் லக்ஷ்மியின் காதுகளில் தேனல்ல, தேவாமிர்தமே வந்து பாய்வது போல் தோன்றியது. ‘அச்சொற்களை எல்லாம் இனிமேல் நான் என்று கேட்பேன்!’ என்று அடிக்கடி புலம்பினாள்.
சீதையின் நிலைமை இன்னும் அப்படியே தானிருந்தது. ஆயினும் அவள் தன் கஷ்டத்தைப் பொருட்படுத்தாது. மாமியாரைத் தேற்ற யத்தனித்தாள். ஒரு சமயம் அவள் ‘பறித்த கடவுள் கொடுக்கவும் செய்வார், அத்தை. மனதை அதிகமாய்ப் புண்படுத்திக் கொள்ளாதீர்கள்’ என்று சொன்னபோது, அது விபரீதமாய் முடியும் என்று அவள் நினைக்கவே இல்லை.
“இனிமேலா கடவுள் கொடுக்கப் போகிறார்? அப்படி என்ன நான் பிள்ளை பெறும் வயதிலா இருக்கிறேன் கடவுள் கொடுப்பார் என்று நினைப்பதற்கு?” என்று சொல்லி லக்ஷ்மி ஏங்கி, ஏங்கி அழவாரம்பித்தாள்.
தான் அதைச் சொல்லியிருக்கக் கூடாதென்று சீதைக்கு அப்புறந்தான் தெரிந்தது. லக்ஷ்மி அப்படி ஒன்றும் பிள்ளை பெறும் வயதைத் தாண்டி விடவில்லை. அவளுடைய கணவனின் பருவத்தையே அங்ஙனம் குறிப்பாக உணர்த்தினாள் அவ்வுத்தமி!
சுந்தரஞ் செட்டியார் தன்னாலான மட்டுந் தன் மனைவியைத் தேற்றுவதற்கு முயற்சித்தார். வியாபாரத்திலேயே தன் கவனத்தைச் செட்டியார் அதிகமாய்ச் செலுத்திய போதிலும், அவருக்கு ஆழ்ந்த தமிழறிவும், தமிழ் நூற் பயிற்சியும் உண்டு. வயது ஆக, ஆக அவர் வேதாந்த விசாரத்தில் இறங்கினார். அவருக்கு அநேக சிஷ்யர்களும் இருந்தனர். அவர்கள் அவரிடம் வந்து ஞானவாசிட்டம் பகவத்கீதை, கைவல்ய நவநீதம், திருக்குறள் முதலிய நூல்களில் பாடங் கேட்டுப் போவது வழக்கம். இப்பொழுது அந்நூல்களில் உள்ள விஷயங்களைத் தன் மனைவிக்கும் போதித்து, அவளுடைய ஆறாத் துயரத்தை ஆற்றுவதற் குப் பிரயத்தனப் பட்டார். மைந்தன் இறந்ததிலிருந்து செட்டியார் கடைக்குப் போவதையும் நிறுத்தி விட்டார்.
ஒரு நாள் திடீரென்று லக்ஷ்மி, “இதோ, என் மகன் வந்து விட்டான்!” என்று கூச்சலிட்டாள்.
சுந்தரஞ் செட்டியார் பதற்றத்துடன் வந்து, “என்ன லக்ஷ்மி?” என்று கேட்டார்.
இதோ, “என் ரங்கசாமி!” என்றாள்.
“எங்கே?” என்று கேட்டார் செட்டியார்.
லக்ஷ்மி திரும்பிப் பார்த்து “இதோ!” என்று கூறியவள் அங்கே தன் மகனைக் காணாதவளாய்த் திடுக்கிட்டு, “இப்பொழுதுதான் என் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தான். அதற்குள் எங்கே போய் விட்டான்?” என்று விம்மி விம்மி அழவாரம்பித்தாள்.
மனிதர்கள் அளவு கடந்த துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது எந்த விதமான போதனையும் பிரயோஜனப்படுவ தில்லை. மென்மேலும் அவர்களுடைய துக்கம் அதனால் அதிகரிக்கவே செய்யும். துக்கம் நாளடைவில் சற்று ஆறி போதனைகளை மனது ஏற்றுக்கொள்ளும் தறுவாயில் தான் அவை பயன்படுகின்றன. சுந்தரஞ் செட்டியாருடைய போதனைகளும் விபரீத பலனையே அளித்தன.
“ஒருவன் பிறக்கிறான் என்று நினைப்பதும். இறக்கிறான் என்று நினைப்பதும் தவறு. ஆத்மா பிறப்பிறப் பற்றது. அப்படி இருக்க உன் மகன் இறந்து விட்டான் என்று ஏன் தவறாக நினைத்துக் கொள்கிறாய்?” என்று செட்டியார் கேட்டார்.
“அவன் இறந்து விட்டான் என்று நான் நினைக்க வில்லையே. அவன்தான் அடிக்கடி வந்து என் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிரிக்கிறானே! அவனைப் பார்க்க முடிய வில்லையே என்று தானே நான் வருந்துகிறேன்” என்றாள் லக்ஷ்மி.
“மண்ணும் நான், விண்ணும் நான் என்று பகவான் சொல்லுகிறார்” என்பதாகச் சுந்தரஞ் செட்டியார் போதித்த போது, “அவர் எனக்கு விண்ணாய்க் காட்சி அளிக்காமல், மண்ணாகவா காட்சி அளிக்க வேண்டும்? என் ஆசையில் எல்லாம் மண்ணைப் போட்டு விட்டாரே!” என்று லக்ஷ்மி வயிற்றெரிச்சலுற்றாள்.
“நீரும் அவரே, நெருப்பும் அவரே” என்ற வாசகங்களைக் கேட்டபோது, அதனால் தான் தன்னுடைய அடி வயிற்றில் அவர் நெருப்பைக் கொட்டி விட்டாரோ என்று லக்ஷ்மி நினைத்தாள்.
“வஞ்சகரின் சூது நான்” என்ற கீதா வாசகத்தைப் பார்த்த போது, “அதனால் தானே பாவி ஈசன் என் மகனை மூன்றே நாள் காய்ச்சலில் வஞ்சகமாய்க் கொண்டு போய் விட்டான்!” என்று தேம்பித் தேம்பி அவள் அழுதாள்.
”நீ வேறு, உன் மகன் வேறு என்று நினைப்பதனால் தானே உனக்கு இப்படித் துக்கமும் அழுகையும் உண்டாகிறது. நீயும் உன் மகனும் ஒன்றென்பதை மறந்து விட்டு ஏன் துக்கப் படுகிறாய், லக்ஷ்மி?” என்று சுந்தரஞ் செட்டியார் கேட்பார்.
“அப்படியானால் நான் என்னுடைய மகனுடன் சென்று சேர்ந்து விடுகிறேனே! இனி நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?” என்று லக்ஷ்மி சொல்வாள்.
தன்னுடைய போதனைகளினால் ஒரு வித பலனும் ஏற் படாமல் போகவே, சுந்தரஞ்செட்டியார் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டு, முன்போல் கடைக்குச் செல்லவாரம்பித்தார்.
ஒரு நாள் மத்தியானம் அவர் கடையில் உட்கார்ந்திருந்த பொழுது, ஒரு சிறுவன் வந்து, அவரையும் அவர் மகனையும் அவசரமாக வீட்டிற்குக் கூட்டிவரச் சொன்னதாகக் கூறினான். அவன் அடுத்த வீட்டுச் சிறுவன். க்ஷண நேரத்தில் சுந்தரஞ் செட்டியாருடைய உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் தோன்றிவிட்டன. அவர் எப் பொழுதும் போல் கடைக்கு வந்து கொண்டிருந்த போதிலும், லக்ஷ்மியின் மீது அவர் கவனம் செலுத்தாமல் இல்லை. துக்கந் தாளாமல் தற்கொலை செய்து கொள்வாளோ என்ற பயம் அவருக்கிருந்தது. சிறுவன் வந்து அவசரமாக அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்த போது, அவருக்கு இந்த, எண்ணந்தான் முதலில் உதித்தது.
அப்படி ஏதாவது செய்து விட்டாளோ என்று நினைத்தபோது அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகளும் அவருக்கு திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது.
எதற்காகக் கூட்டி வரச் சொன்னார்கள் என்று சிறுவனைக் கேட்டபோது, அவனுக்கு ஒன்றும் பதில் சொல்லத் தெரியவில்லை.
“யார் கூட்டி வரச் சொன்னது?” என்று சுந்தரஞ் செட்டியார் கேட்டார்,
“அம்மா!” என்றான் சிறுவன்.
“சின்னம்மாளா, பெரியம்மாளா?”
“எங்கம்மா!” என்றான் சிறுவன்
உடனே சுந்தரஞ் செட்டியார் வெகு வேகமாய் வீட்டிற்கு ஓடினார். அவருடைய மகன் ராமனாதனும் கூடவே சென்றான். வீட்டிற்குச் சென்ற போது, நல்ல வேளையாக லக்ஷ்மிக்கு ஒன்றுமில்லை என்று அவர் ஆறுதலடைந்தார். ஏனென்றால் லக்ஷ்மி வாசலிலேயே இவர்கள் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவ்வாறுதல் கணநேரந்தானிருந்தது. காரணம் என்னவெனில் சீதை மிகவும் அபாயகரமான நிலைமையிலிருந்தாள்!
வைத்தியர் உடனே அழைத்துக் கொண்டு வரப்பட்டார். அவர் மருந்து கொடுத்து விட்டுச் சென்ற இரண்டு, மணிநேரத்திற்குள்ளேயே, சீதை இவ்வுலக வாழ்வை நீத்தாள்!
பாலகிருஷ்ணன் தன்னுடைய தாயாருக்குக் கொள்ளி வைத்தான்!
யாவரும் அழுதனர். சீதையின் கணவன் ராமநாதன் அத்தனை அழுகை அழுத்துதான் யாவருக்கும் ஆச்சரியமாய்த் தோன்றியது. இதுவரைக்கும் அவன் மனைவி யிடத்தில் காட்டிய மனப்பான்மைக்கு, அவன் அன்று அப்படி அழுதது முற்றிலும் விரோதமாயிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, வைத்தியரைக் கூட்டி வரும்படி சுந்தரஞ் செட்டியார் அவனிடம் சொன்ன போது, “சனியன் தனக்குந் தொல்லையாய், பிறருக்கும் தொல்லையாய் ஏன் இழுத்துக் கொண்டே கிடக்கிறது? சீக்கிரம் தொலைந்தாலும் சுகமாயிருக்கலாமே” என்று சொன்னான்.
அப்பொழுதெல்லாம் தன் மகன் பாலகிருஷ்ணன் கதி என்னவாகும் என்பதை அவன் சிறிதும் சிந்திக்கவில்லை. சீதை இறந்த பின்புதான் அவ்வெண்ணம் அவனுக்குத் தோன்றியது. அவனை எப்படி வளர்ப்பது, அந்தப் பாரத்தை யார் சுமப்பது என்று நினைக்கும்போதெல்லாம் ராமநாதனுக்குப் பொங்கிப் பொங்கி அழுகை வந்தது.
அவனை யார் வளர்ப்பது? சிறுவன் கதி என்னாவது?
லக்ஷ்மியம்மாள் தன் மகன் இறந்த துக்கத்தை இன்னும் மறக்கவில்லை. அவள் பாலகிருஷ்ணனைச் சீண்டுவாளா? தன் அருமையான மகனே மடிந்து விட்டபோது, பிறர் குழந்தையை வளர்க்க வேண்டுமென்று அவளுக்கு என்ன ஆத்திரம் வந்தது? குழந்தை பாலகிருஷ்ணனுக்கு லக்ஷ்மியம்மாளை மிகவும் பிடித்திருந்தது. அவனுக்குப் பிடித்திருந்ததனால் ஆவதென்ன? அவளுக்கல்லவா அவனைப் பிடித்திருக்க வேண்டும். அவளுக்கல்லவா அவன் மீது இரக்கமும் பாசமும் ஏற்பட வேண்டும் ? குழந்தை லக்ஷ்மியை நோக்கி ஓடி ஓடிச்செல்லும். ஆனால் அவள் அதைக் கவனிக்காதது போல் அப்பால் போய்விடுவாள்.
ஒரு நாள் லக்ஷ்மியம்மாள் தன் மகனை நினைத்து அழுது கொண்டிருந்த போது, அறைக்குள் திடீரென்று சுந்தரஞ்செட்டியார் நுழைந்தார். “நான் சொன்னால் வீண் பிரமை என்று சொல்கிறீர்களே. இதோ பாருங்கள் என் மகன் கழுத்தைக் கட்டிக் கொண்டிருப்பதை!” என்று லக்ஷ்மி சொன்னாள்.
“யாரென்று திரும்பிப் பார்” என்று புன்சிரிப்புடன் சுந்தரஞ் செட்டியார் சொன்னார்.
லக்ஷ்மி திரும்பிப் பார்த்தாள். பாலகிருஷ்ணன் அவளுடைய கழுத்தைக் கட்டிச் சிரித்துக் கொண்டே “பாட்டி!” என்றான்.
– தொடரும்…
– திருமணம் (நாவல்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1947, அருணோதய நிலையம், வேலூர்.
![]() |
சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க... |

