தாலிக்குள் இல்லை தங்கம்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2026
பார்வையிட்டோர்: 5,777 
 
 

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

பிரவீணா வீட்டிற்கு வந்தும் இறுக்கமாக இருந்தாள். கணவனுடன் சரியாக பேசவில்லை. உடல் என்னவோ செத்தை மாதிரி இருந்து, பஞ்சு போல பறந்த அந்த கட்டில் கனவு கலையவில்லை.

என்ன ஆத்ம திருப்தி இது?! தாம்பத்தியத்தில் இத்தனை நாளாய் இல்லாத சொர்க்கத்தில் இருப்பது மாதிரியான உணர்வு! மனம் நினைத்து நினைத்து மலைத்தது. திருமணம் முடித்து பிள்ளையும் பெற்று பத்தாண்டுகளாய் இல்லாத சுகம் எங்கிருந்து முளைத்தது. போதை செய்த மாயமா? ஒத்தாசை செய்ததா. இல்லை அந்த சுகம் என்பது இதுதானா. உறவிற்குள் இப்படியொரு உணர்வு ஏன் இத்தனை நாளாய் வரவில்லை. மென்மையான உறவு. மேன்மையான சுகம் ஆத்மாவின் திருப்தி. ராசேந்திரனும் தானும் படுக்கையிலேயே இல்லாமல் இருவரும் பூ பல்லக்கில் ஏறி வானவெளியில் சஞ்சரிக்கும் சுகம். இவள் மிதந்தாள்.

இதை வெறுத்துத்தானா முனிவர்கள் ஓடுகிறார்கள். புருச சுகம் இருக்கே?!… என்று பெண்கள் புல்லரிப்புது இதுதானா. எத்தனை நாள் இந்த சூ ட்சமமே தெரியாமல் வெற்று உடல்களாய் உராய்ந்திருக்கிறோம். உழன்றிருக்கிறோம். அடித்துப் போட்ட சுகம். ஆளை அசத்தும் சுகம். இறக்கை கட்டி பறந்தாள்.

சுரேந்தர் நூலகத்திற்குச் சென்றாலும் செக்ஸ் சம்பந்தமான புத்தகங்களைத்தான் எடுத்து வருவான். அது அவனாக எடுப்பானோ தேடிப் பிடிப்பானோ தெரியாது. அதையும் இவளிடம் படிக்கக் கொடுப்பான். படிப்பாள். எந்த வெளிநாட்டுக்காரரோ எழுதியிருந்த செக்ஸ் மேனுவல். தாம்பத்திய சுகத்தைப் பற்றி அதில் பல தரப்பட்ட நிறைய பெண்களைப் பேட்டி எடுத்து எழுதியிருந்தார்.

“தாம்பத்தியத்துல மேன்மை சுகம் இருக்குன்னு சொல்றாங்களே! நீங்க அனுபவிச்சிருக்கீங்களா?”

“அனுபவிச்சிருக்கேன். தினமும் அந்த இன்பம் இருக்காது. என்னைக்கோ அத்திப் பூத்தாற் போல் என்னைக்காவது ஒருநாள்.” ஒருத்தி பதில்.

“அது எப்புடின்னு சொல்ல முடியுமா?”

“அதை எப்புடி சொல்றதுன்னு தெரியலை. ஆனா.. கனவுல மிதக்கிற மாதிரி. கற்பனையில பறக்கிறது போல. சொர்க்கத்துல படுத்திருக்கிறது மாதிரி. அதை வார்த்தையால சொல்ல முடியாது. அதுக்கு வார்த்தை இல்லை.

பருந்து ஆகாயத்துல இறக்கை அசைக்காம பறக்குதே அதை எப்புடி சொல்வீங்க. எவரெஸ்டில் ஏறியவனை எப்படி இருந்தது என்னு கேட்டால் என்ன சொல்வான்?”

“அப்புடின்னா கஷ்டமா சுகமா?”

“இல்லீங்க ஏதோ ஒன்னு.”

“ஆமாம். ஏதோ ஒன்றுதான் வேட்கை தணிந்த விவரிக்க முடியாத இன்பம்.”

ஏன் சுரேந்தர் இத்தனை நாளாய் எனக்கு இந்த இன்பம் உன்னிடமிருந்து கிட்டவில்லை. நீ கொடுக்கவில்லை. உனக்கு இந்த அனுபவம் நேர்ந்திருக்கிறதா. நீ ஏன் சொல்லவில்லை. என்னையும் ஏன் கூட்டிப்போகவில்லை. இதனால்தான் நித்தம் நித்தம் சிவராத்திரி என்னிடம் கொண்டாடினாயா…?

சுரோ! இந்த வித்தை ராசேந்திரனிடம் இருக்கிறது. உன்னிடமில்லை ஒளித்து வைத்திருக்கிறாயா. பிள்ளை பெறுவதே பெண்ணுக்குப் பேரின்பம் பெற்றாச்சு. இந்த இன்பம் இல்லையே. ஏதோ கடமைக்காக முடித்த மோகம் முடிவுதான் உன்னிடமிருந்ததே தவிர அங்கத்தின் அணு மொத்தமும் அமைதி அடைந்துவிட்ட ஆனந்தம் இல்லையே. உடல் பாரமில்லாமல் உயிரும் உயிரும் உருகி ஓடும் பரவச நிலை. இல்லையே….!?

சுரோ! எனக்கு அந்த இன்பம் வேண்டும். சுகம் தேவை. பெண்ணே! இதென்ன பிதற்றல்? – பிரவீணாவிற்குள் மனசு அதட்டியது.

நானென்ன செய்வேன். கணவன் கொடுப்பதே புருச சுகம். இதைத்தவிர இதில் வேறொன்றுமில்லை என்றிருந்தேன். இதில் இது இல்லை. ஆத்மாவின் பாகம் இருக்கிறது என்று அவனல்லவா காட்டினான்.

“என்னங்க! அவுங்களை இன்னொரு முறை அழைக்கலாமா?” பிரவீணாவிற்குள் கேட்க மனம் துடித்தது. கேட்டால்…?

“ஏ..ஏ.. !” – விநோதமாகப் பார்ப்பான். வாடி எம் பொண்டாட்டி அவளை அனுபவிக்க உற்சாகமாக கூட்டிச் செல்வானா. ஆண் சபலக்காரன். கிளி போல மனைவி இருந்தாலும் அவனுக்கு குரங்கு மாதிரி வைப்பாட்டி இருந்தாலும் கவலைப்படமாட்டான். உற்சாகமடைவான். ஆனால் செலவு? வங்கியில் எடுத்த பணம் முழுதும் செலவு! – இது கட்டுப்படியாகாது.

வீடிருக்க வெளியிடம் ஏன்? மனசு சொன்னது. ச்சே! கேடு கெட்ட நடத்தைக்கு வீட்டில் இடம்! வெறுப்பு அதை ஓட்டியது.

எந்த வீட்டில் கணவன் மனைவிக்குள் இந்த தீபாவளி இல்லை. இந்த வீட்டில் ரொம்ப மோகம் மோசம்! வீடியோவில் படம் கிடம் என்று கண்றாவி..

இது கொண்டவன் அது கண்டவன்!

எல்லாம் ஆண் பெண் தாம்பத்தியம்தான். மனைவி பிரசவத்திற்குச் சென்றால் கணவன் எவளையோ கூட்டி வருகிறான். இல்லை வேலைக்காரியைத் தொடுகிறான். புருசன் அந்தண்டை போனால் பொண்டாட்டி கள்ளப் புருசனை அழைக்கிறாள். அதெல்லாம் வீட்டிற்குள்தான் நடக்கிறது. அதெல்லாம் கண்றாவி இல்லை என்கிற போது இது மட்டும் எப்படி கண்றாவி? வீடு விளங்காதென்ற நினைப்பு! – அவளே மனசை அடைத்தாள்.

ரோசி எப்புடி சுரோ? மனசு பூ போல பறந்ததா பஞ்சு போல மிதந்ததா? மனசுக்குள் கணவனிடம் கேள்வி கேட்டாள்.

“பிரவீணா! “- சுரேந்தர் குரல் அவளைக் கலைக்க திடுக்கிட்டாள்.

‘என்ன?’ என்பது போல் ஏறிட்டாள்.

“நடந்ததுக்கு வருத்தப்படறே! உன்னை விட்டுப் போயிருக்கனும். இல்லே வேற ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கனும். உன்னை வற்புறுத்தி அழைச்சிப் போனது தப்பு. மன்னிச்சுக்கோ. நடந்ததைக் கனவா நெனைச்சி மறந்துடு”, – சுரேந்தர் இவள் மனம் அறியாமல் கெஞ்சினான்.

வழி பிடித்துக் கொள்ள இவளுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.

“அ… அது இல்லீங்க. அ… அந்த ஆள் உங்க வீட்டுக்கு நாங்க எப்போ வரனும்ன்னு கேட்டார். எனக்குப் பதில் சொல்லத் தெரியலை…” விசயத்திற்கு வந்தாள்.

“நிசமா?!” – சுரேந்தருக்கு அதிர்ச்சியாகவுமிருந்தது ஆச்சரியமாக இருந்தது. உடனே ரோசி மனசுக்குள் வந்து மத்தாப்பாக சிரித்தாள். சிலிர்த்தான்.

“நீ என்ன சொன்னே?” – அவள் சொன்னதையே மறந்து கேட்டான்.

“நான் ஒன்னும் சொல்லலை.”

“உ… னக்கு விருப்பமா?”

மனம் விரும்புவதைக் காட்டிக் கொள்ள கூடாது! “ரோசிகூட உங்களைப் பத்தி நிறைய சொன்னாள். மறுபடியும் நாம சந்திப்போமான்னு ஏக்கமா கேட்டாள்.” தன் முகம் காட்டாமல் அவன் ஆசையை உசுப்பினாள்.

சுரேந்தர் மனைவியைப் பற்றி அறியாமல் அந்த உலகத்திற்குப் போனான்.

“ஓட்டல் செலவு வேணாம். வீட்டிலேயே இருக்கலாம்ன்னு சொன்னாள். நீங்க அழைக்க கூச்சப்பட்டாலும் நாங்க உங்களை அழைக்கிறோம்ன்னாள்”. தனக்கு இப்படியெல்லாம் பொய் சொல்லத் தெரியுமா? பிரவீணாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. மனம் விருப்பப்பட்டால் வழியையும் எடுத்துக் கொடுக்கிறது! நினைத்தாள்.

கணவன் சம்மதித்து விட்டால் போதும். அடுத்த விநாடி இவளே ராசேந்திரனுக்கு உற்சாகமாக தொலை பேசி செய்து வரவழைத்து விடுவாள்.

ஓட்டல் அறையில் இரண்டு நாட்களாக இவர்கள் பிரியவே இல்லை. மனதில் உள்ளதெல்லாம் கொட்டி, தொலைபேசி எண் பரிமாறி, சின்ன குடித்தனமே நடத்தி விட்டார்கள். இதே போல் சுரேந்தரும் ரோசியும் குடும்பம் நடத்தினார்கள். பிரிவின் போது நால்வருக்கும் ஏக ஏக்கம், துக்கம்.

சுரேந்தர் மௌனமாக இருந்தான். தீவிர சிந்தனையில் இறங்கினான். ரோசியின் மனமும் ஏக்கமும் மனதில் ஆடியது.

“என்னங்க?“

“சொல்லுங்க?“

“இப்போ நாம ஏறக்குறைய கணவன் மனைவி. ஏன் தாலி கட்டாத உறவு. எனக்கு மரியாதை தேவை இல்லே. உங்க மனைவியாய் நினைச்சே பேசலாம். ரோசின்னு அழைக்கலாம்.”

“சொல்லு ரோசி?”

“எனக்குப் புள்ளை குடுப்பீங்களா?”

சுரேந்தர் அவளிடம் அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை. அறை பட்டவனாய் அரண்டான்.

“பெண்ணுக்கு புள்ள இல்லாதது இல்லாதது எவ்வளவு குறை கொடுமை தெரியுமா? மனுசின்னே எவரும் மதிக்கிறதில்லே. ஆம்பளைங்களைப் பத்தி கவலையே கெடையாது. ஆனா பொம்பளைங்களுக்குப் பொம்பளைங்கதான் எதிரி! குழந்தை பெத்தவள்ல்லாம் கிரீடம் வைச்சவள் போல மலடி மலடின்னு நேரடியாய் மறைமுகமாய்ப் பேச்சு. புள்ள இல்லாதது பெரிய குத்தமான்னு கொஞ்ச நாள் தாங்கினேன். அப்புறம் அதுவே பேராப் போராய்ப் போக தாங்க முடியலை. கொடுக்கிறதும் எடுக்கிறதும் நம்ப கையில இல்லே ஆண்டவன் கையில இருக்கு. நாம எப்படி பொறுப்பாக முடியும்? ஆனாலும் தாங்க முடியாம எங்களுக்குள்ளே எவ்வளவோ முயற்சிகள். எல்லாம் தோல்விகள். அப்புறம் எனக்குள்ளே பெத்தே ஆகனும்ன்னு ஒரு வெறி வந்துச்சி. மாறிட்டேன். இது சுகத்துக்குச் சுகம் பலனுக்குப் பலன்.”

வந்து பார்த்தபோது ஆசைப்பட்ட சுரேந்தர் இப்போது அவள் மேல் அனுதாபப்பட்டான்.

“இந்த உறவு தப்புன்னு நெனைக்கிறீங்களா?”

“தப்புன்னு நெனைச்சா தப்பு சரின்னு நெனைச்சா சரி. வாய்ப்பு கெடைக்காதவரை எல்லாரும் ராமர் சீதைகள்தான். என்ன நமக்கு வசதி இருக்கு வாய்ப்புகளைத் தேடிப் போறோம் அவ்வளவுதான். ஒருத்தனுக்கு ஒருத்தி தேவைதான். ஆனா யாரும் அப்புடி இருக்கிறதில்லே. அப்புடி இருந்தா விபச்சாரம் என்னைக்கோ ஒழிஞ்சிருக்கும். ஒழியாததுக்குக் காரணம் உள்ளே கண்ணுக்குத் தெரியாத தெரிஞ்ச குளறுபடி. வாழ்க்கை என்னத்துக்கு இருக்கு? அனுபவிக்கனும்!” இவன் நிலைமையை உத்தேசித்து தனக்குச் சாதகமாக சொன்னான்.

“ஆமா” – ரோசி இவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

“என்னங்க நான் தப்பா ஏதாவது சொல்லிட்டேனா ?”- கணவன் தன் மனநிலையை அறிந்து விட்டானோ என்கிற தவிப்பில் கலக்கமாக கேட்டு சுரேந்தர் நினைவைக் கலைத்தாள் பிரவீணா.

“இல்லே! இல்லே!” இவனுக்குள் ரோசியை மறுபடியும் தொட்டுக் கொள்ள ஆவல். வேகமாக மறுத்தான். அப்பாடா! இவளுக்குப் பெரிய திருப்தி.

“ஆனா உன்னை நினைச்சாதான் வருத்தமா இருக்கு.”

“உங்களுக்காக என்னை மாத்திக்கிட்டேன். ஒரு தப்பை ஒரு தடவை செய்ஞ்சாலும் தப்புதான். ஒன்பது தடவை செய்ஞ்சாலும் தப்புதான். ரோசி உங்க மேல ஏதோ நம்பிக்கை வைச்சிருக்கா. அடுத்து நம்மை மதிக்கிறவங்களை மதிக்கனும்.” பிரவீணா கணவனைக் கவிழ்க்க அடிக்கடி ரோசி பெயரைச் சொல்லி அவனுக்குள் பிரம்மாஸ்தரம் விட்டாள்.

“வீடே வசதி. செலவு கம்மி. அக்கம் பக்கமும் விருந்தாளிகள் வந்துவிட்டு சென்றதாய் நினைப்பார்கள். சந்தேகத்திற்கு வழி இல்லை. இன்றைக்கு நாம் அழைக்க நாளைக்கு அவர்கள் அழைப்பாங்க.” என்று வேறு எடுத்து விட்டாள்.

சுரேந்தருக்கு உச்சந்தலையில் இனிப்பு ஏறியது. பிரவீணா வேறு சம்மதித்தது பழம் நழுவி பாலில் விழுந்தது போலிருந்தது.. “என் பிரவீணா!” என்று கட்டிப்பிடித்துத் தட்டாமாலை சுற்றினான்.

“போன் பண்ணலாமா?” – ஆர்வமாய்க் கேட்டான்.

“உங்க விருப்பம்.”

“பண்றேன்!” – சொல்லி அவனே எண்களைச் சுழற்றினான். எதிர் முனையில் மணி அடித்தது. ஒலிவாங்கியின் வாயைப் பொத்திக் கொண்டு “என்னைக்கு வரச்சொல்லலாம்?” என்று இவளைக் கேட்டான்.

“உங்களுக்கு என்னைக்குச் சவுகரியமோ அன்னைக்கு” கணவன் தன் மீது சந்தேகப்பட்டுவிடாமலிருக்க பட்டும்படாதவள் போல சொன்னாள்.

“ஞாயிறு வைச்சுக்கலாம்.” அவனே பதில் சொன்னான்.

“எனக்கும் அன்னைக்கு விடுப்பு. இதுக்குன்னு அனாவசியமா விடுப்பு எடுக்க அவசியமில்லே. சாப்பாட்டுல சிறப்பு ஐயிட்டம் ஏதாவது செய்யுறீயா பிரவீணா?” – என்றவன் “மணி அடிக்குது யாரும் எடுக்கலை. வீட்டுல ஆளில்லே போலிருக்கு” போனைக் கீழே வைத்தான்.

பிரவீணாவிற்குச் சொரக்கென்றது. ‘எங்கே போயிருப்பார்கள்?’ மனசுக்குள் ஓடியது,

“ஒன்னும் பண்ணலை” – சுரேந்தர் கேள்விக்குப் பதில் சொன்னாள்.

“விருந்தாளிங்களைச் சிறப்பா வரவேற்கனும்ன்னா ஏதாவது பண்ணனும் பிரவீணா!” – வக்காலத்து வாங்கினான்.

சுரேந்தர் மீண்டும் தொலைபேசியைத் தொட்டு எண்களைச் சுழற்றினான். ரோசி எடுக்க வேண்டும் மனம் எண்ணியது. தன் குரலைக் கேட்டதும் சந்தோசப்படுவாள்! மனம் குதித்தது. அடுத்தமுறையும் சந்திப்பென்றால் அவளுக்கு ஆனந்தம்தான் நினைக்கவே ஒரு மாதிரியாக இருந்தது.

இந்த முறையும் மணி அடிக்க… ‘வீட்டில்லையா வெளியூர் சென்றுவிட்டார்களா இது போல வேறு இடமா?’ கலங்கினான்.

அத்தியாயம் – 11

பிரவீணா இந்த முறையும் ராசேந்திரனிடம் அசந்து போனாள். ‘இந்த சுகம் இவனிடம் மட்டும்தான் ஒளிந்திருக்கின்றதா வேறு ஆண்களிடம் உள்ளதா?’ இவளுக்குள் கேள்வி எழுந்தது. இந்த லயிப்பில்தான் எவனோ ஒரு ஆணைப் பெண் நாயாய்ச் சுற்றுகின்றாளா?!

தேவகி பக்கத்து வீட்டுப் பெண். பணக்கார வீட்டுப் பெண். தினமும் கல்லுாரிக்கு ரிக்ஷாவில் செல்வாள். ரிக்ஷாகாரனிடம் இதைத்தான் கண்டாள் போல. வீட்டில் கட்டிக்கிட்டா அவனைத்தான் கட்டிப்பேன். இல்லைன்னா தற்கொலை மிரட்டினாள்.

“நீ அவனைக் கட்டிக்கிட்டா ரொம்ப கஷ்டப்படுவே” – பெற்றவர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்கள். அவள் பிடிவாதம் தளரவில்லை.

“அப்படின்னா எங்க முடிவையும் கேட்டுக்கோம்மா. உன் விருப்பப்படி நடக்கலாம். ஆனா நடந்த முடிந்த அடுத்த நிமிசம் நீ எங்க பெண்ணில்லே. சொத்துல பைசா கெடையாது. எந்த கஷ்டம் வந்தாலும் இங்கே திரும்பக் கூடாது.” – கறாராய்க் கண்டித்தார்கள். அவள் மிரளவில்லை.

சகிக்க முடியாத பட்சத்திற்கு வீட்டில் பூட்டி சிறை வைத்தார்கள். ஓடிவிட்டாள்.

அவ்வளவு பெரிய பணக்காரி இன்று ஐந்தாறு பிள்ளைக்குட்டிகளுடன் பிளாட்பாரத்தில் மேலே வானம் கீழே தரையாக வாழ்கிறாள். தாம்பத்தியத்திற்குக்கூட சாக்குப் படுதா மறைப்பு. இல்லை புடவை துணி மறைப்பு.

“உனக்குத் தலையெழுத்தாடீ!” – பிரவீணா ஒருநாள் அவளைப் பார்த்து அழுதே விட்டாள்.

“இல்லே நான் சந்தோசமா இருக்கேன்.” அவள் பதில் இவளை அசத்தியது.

‘அந்த சந்தோசம் இதுதானா…?! அப்படிதானிருக்க வேண்டும்! ஒரு பணக்காரி அன்றாடங்காய்ச்சியாய் குந்தியிருக்கக்கூட குச்சி இல்லாமல் ஒருவனுடன் வாழ்கிறாளென்றால் இதைத் தவிர வேறு என்ன ஆதாரமாக இருக்க முடியும்!?’

அரசாங்க பணியில் டாக்டர். ஆயிரமாயிரம் சம்பளம். காலை மாலை கிளினிக். கைராசி என்று ஊரே குவியும் தினம் பண மழை. பங்களா கார் என்று ஏகப்பட்ட வசதி. இரண்டு பிள்ளைகள் ஊட்டி கான்வெண்டில் படிக்கிறார்கள். மனைவி ?……டிரைவரிடம் பழியாகக் கிடக்கிறாள். டாக்டர் கண்டிக்க….பைசா எடுத்துச் செல்லாமல் அவனுடன் சென்றுவிட்டாள். இப்படி இன்னும் நிறைய..

காரணம்? இது. வாட்டசாட்டமாக ஆணிருந்தாலும் பெண் ஒடுக்கு விழுந்த நோஞ்சானிடம் அடிமைப்பட்டு கிடப்பதெல்லாம் இதனால்தான். பிரவீணாவிற்குள் உண்மை தெளிவாகத் தெரிந்தது,

ராசேந்திரனிடம்தான் இந்த வித்தை இருக்கிறதா இன்னும் வேறு யாரிடமாவது இந்த வித்தை இருக்கிறதா? – பரீட்சித்துப் பார்க்கலாமா தோன்றியது. வெட்கம் விட்டு கணவனிடம் எப்படி சொல்வது? இதற்கும் சுரேந்தர்தான் வழி வகுத்தான்.

நாலைந்து நாட்களில் “பிரவீணா! அடுத்த ஜோடி ரெடி!” அலுவலகம் விட்டு வீட்டில் நுழைந்தவன் உற்சாகமாக சொன்னான்.

“என்னங்க இது?!” – அடுத்த வினாடி இவள் உள்ளுக்குள் ஆனந்தப்பட்டு திடுக்கிட்டவள் போல் கேட்டாள்.

“அந்த குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து வேற ஒரு விலாசத்துக்கு எழுதினேன் பிரவீணா. பதில் வந்திருக்கு” காட்டினான்.

இவள் விருப்பப்படாதவள் போல் பேசவில்லை.

“போவலாமா?”

அரைகுறையாய் தலையை மட்டும் அசைத்தாள்.

ஆள் அலங்காரமாக இருந்தான். ஆரவாரமிருந்ததேயொழிய திருப்தி இல்லை.

தொலைபேசி மணி அடித்தது. எடுத்தாள்.

எதிர் முனையில் “ஹலோ! நான் ராசேந்திரன்!” இவளுக்குள் குப்பென்று சந்தோசம் காதை அடைத்தது.

“என்ன விசயம் சொல்லுங்க?”

“நான் உன்னைப் பார்க்கனும்”

“எ….எதுக்கு?” சந்தோசம் காதை அடைக்க தடுமாறினாள்.

“வீட்டுக்கு வரனும் உன்னைச் சந்திக்கனும்..”

“வாங்க. அவர் இப்போ வீட்டுல இல்லே. உடனே வரலாம்.”

அவன் மட்டுமே வந்தான். அப்புறம் இவள் போன் போட்டாள்.

மீண்டும் மீண்டும்…

***

பன்னிரண்டு மணிக்கு அலுவலகம் ரொம்ப ஆரவாரமில்லாமலிருந்தது. தனி அறையில் சுரேந்தர் தன் வேலையில் கவனமாய் இருந்தான். வாசலில் உட்கார்ந்திருந்த பியூன் காளியப்பன் இதற்காகவே காத்திருந்தவர் போல் உள்ளே நுழைந்தார்.

“ச….சார்…..” பவ்வியமாய் எதிரில் நின்று அழைத்தார்.

சுரேந்தருக்கு இவர் மேல் மதிப்பு மரியாதை. தன்னைவிட இருபது வயது மூப்பு மட்டும் காரணமில்லை. தானுண்டு தன் வேலையுண்டென்று இருப்பார். அநாவசியமாக அடுத்த வேலையில் மூக்கை நுழைக்க மாட்டார். மேலும் உண்மையைத்தான் பேசுவார் பொய் பேசமாட்டார். சேதி வேலையில்லாமல் உள்ளே நுழையவும் மாட்டார்.

“சொல்லுங்க ?” கம்ப்யூட்டரிலிருந்து பார்வையை எடுத்தான்.

“அ…ம்மாவை வெளியில பார்த்தேன்.”

“யார் என் மனைவியையா?”

“ஆமா…”

“எங்கே?”

“நேத்திக்கு அம்பிகா தியேட்டர்ல சினிமா பார்த்தாங்க.”

“தனியாவா?”

‘இல்லே…கூட ஒரு ஆள் இருந்தார். சுருட்ட முடி நல்ல உயரம் உங்களை மாதிரி அழகு. நான் விடுப்புல இருந்த ஒரு வாரமா என் கண்ணுல படுறாங்க. ஆள் யார் உங்க மச்சான்களா? வண்டியில அம்மா அவரோட ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து போறாங்க.”

‘வீட்டில் யாரும் அப்படி விருந்தாளி வரவில்லையே!’ – சுரேந்தருக்குள் இடி விழுந்தது. ‘யார்?’ கேள்வி எழுந்தது. வில்லங்கம் மனதில் எழுந்தது.

“ஆமாம் விருந்தாளி”

சமாளித்து அனுப்பினான். அதன் பிறகு கொஞ்ச நேரம்கூட அவனால் வேலை செய்ய முடியவில்லை. விடுப்பெழுதி வைத்துவிட்டு வண்டியை மனம் போன போக்கிற்கு விட்டான். கடங்கரையோரம் வந்தான். ஹீரோ ஹோண்டாவை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு தனியிடம் பார்த்து அமர்ந்தான். மனம் பின்னோக்கி சென்றது.

***

அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் போன் தலைமாட்டிலிருந்த கட்டிலிலிருந்தபடியே எழுந்து போனை பிரவீணாதான் “ஹலோ!” எடுத்தாள்.

“நான் ராசேந்திரன்!” எதிர் குரல்.

“ஹாய்! எப்புடி இருக்கீங்க?” – உற்சாகமாய் கூவி பின் சுதாரித்து ஒலி வாங்கியில் பேசும் பகுதியை ஒரு கையால் பொத்தி திரும்பி கணவன் துாங்குகிறானா என்று கவனித்தாள்.

“நல்லா இருக்கேன்.”

“போன் வரும்ன்னு நெனைச்சேன் பண்ணிட்டீங்க. ரோசி இல்லியா?” – மெதுவாக பேசினாள்.

சுரேந்தர் விழித்துதான் இருந்தான். ஆனால் கண் விழிக்கவில்லை.

“வெளியில போயிருக்கா”

“எங்கே?”

“இப்போல்லாம் அவ தனியா கிளம்பிடுறா?”

“நீங்க வீட்டுக்குக் காவலா?”

“இல்லே பிரவீணா எனக்குப் பிடிக்கலை.”

“ஆச்சரியமா இருக்கு?!”

“ஆச்சரியம் ஒன்னுமில்லே. ஒரு உண்மை. எனக்கு உன்னைத் தவிர வேற யாரையும் பிடிக்கலை.”

“பொய்!”

“நிசம்.”

“நான் வராம நீ ஏன் போறேன்னு நீங்க கண்டிக்கலையா?”

“கண்டிப்பைத் தாண்டியாச்சு. நீங்க வந்துதான் நான் போகனுமா. எனக்குன்னு தனியான மன சுதந்திரம் கெடையாதா. அப்புடி இப்புடின்னு கேட்டாள். கேட்கிறாள். எனக்கு வருத்தமா இருக்கு. நில்லுடின்னு நிறுத்தி கண்டிக்க முடியாத நிலையில நான் இருக்கேன். கண்டிச்சா நீங்க வந்தாதான் நானும் வரலாம்ங்குறது என்ன கட்டாயம்…? அது அநாகரீகம். அப்படின்னு கேள்வி வரும் குடும்பம் உடையும். நான் தவிப்பாய் இருக்கேன் பிரவீணா. ரெண்டு பேரும் சேர்ந்து தப்பு செய்ததால கண்டிக்க முடியாத நிலை.”

“அமெரிக்கா பிரான்சு….நாகரீகத்துல வளர்ந்த மேலை நாடுகள்ல தம்பதிங்க தலைமாட்டு போனிருக்குமாம். யாருக்குத் தேவைப்பட்டாலும் விருப்பப்பட்டவங்களுக்குப் போன் பண்ணி வரச் சொல்லிட்டு கிளம்பிடுவாங்களாம். போன இடத்துல போன் பண்ணிகூட நான் இன்னைக்கு வீட்டுக்கு வரமுடியாது. நீங்க சமைச்சு சாப்பிட்டுட்டு பிள்ளைங்களைக் கவனிச்சு அலுவலகம் கிளம்புங்க நான் காலையில வர்றேன்னு சொல்ற கொடுமை நடக்குமாம்!“

“அநியாயமால்லே இருக்கு? இதுக்கு புருசன் பொண்டாட்டி உறவு தேவையே இல்லியே!”

“இதுதான் அந்தநாட்டு கலாச்சாரம். பிடிக்கலைன்னா விலகு விவாகரத்துங்குறதுதான் அங்கே கலாச்சாரம்!“

“உங்களுக்கு வருத்தமா இருக்கா?”

“வருத்தம் எப்படி வராம இருக்கும். ஏதோ ஒரு ஆசை, சபலத்துல நாம தப்பு செய்ஞ்சிட்டோமேயொழிய மனைவியை வெளியில விடுற அளவுக்கு மனசு இன்னும் பக்குவம் வரலை.”

“இப்போ நீங்களும் நானும் பழகுறது எதுல சேர்த்தி?”

“கள்ளத்தனம்ன்னு நெனைக்கிறேன். நாளைக்கே உன் கணவருக்குத் தெரிஞ்சு கூடாதுன்னா நிறுத்திடறதுதான் நல்லத்தனம்.”

“அப்படி ஒன்னு நடக்குமா?!”

‘ஏன் பிரவீணா! வருத்தப்பறீயா?”

“உயிரே போறாப்போல இருக்கும். எனக்கு உங்ககூடயே இருக்கனும்ன்னு தோணுது.”

“புருசன் பொண்டாட்டியாவா?”

“தேவை இல்லே. இப்படியே இருக்கலாம்!”

“அப்போ நாம எனக்கு நீயும் உனக்கு நானும் சின்ன வீடாய் இருக்கலாம்ங்குறீயா?”

“சொல்லத் தெரியலை. எனக்கு நீங்களும் வேணும். சுரேந்தரும் வேணும்.”

“ஆசைக்கு நான். ஆஸ்திக்கு அவரா?”

“ரொம்ப நேரமா பேசறேமே. சுரேந்தர் வீட்டுல இல்லியா?”

“பக்கத்துல துாங்கறார்.”

“நல்லத் துாக்கமா?”

“எதுக்கு?”

“இச்! இதுக்குத்தான்.”

இந்த இச்! – சுரேந்தர் பொட்டில் பொளேரென்று அறைந்தது. ஏன்டி நாயே என்ன கொடுமை என்று பிரவீணாவை இழுத்து வைத்து அறைய முடியாமல் தவித்தான்.

“ஏன் படுக்கலாம் பேசக்கூடாதா?” கேள்வி வரும்.

“அவன் கூட படுக்கக் கூப்பிட்டே பேசினதுல என்ன தப்பு?” தாக்குதல் வரும்.. வம்பு வேண்டாம்.. தப்பில்லை. விட்டான்.

அது இன்று?..புருசனுக்குத் தெரியாமல் அவனுடன் இருக்கும் அளவிற்கு வந்துவிட்டது நாளைக்கு?…

அலங்காரம் செய்து கொண்டு துணிந்து கிளம்பி செல்வாள்.

“நான் ராத்திரி வரமாட்டேன் காலையில வர்றேன்!” சொல்லுவாள். தண்ணி அடித்துவிட்டு அலங்கோலமாய் இரவில் வந்து கதவைத் தட்டினாலும் தட்டலாம். இல்லை எவனாவது கொண்டுவந்து விட்டும் செல்லலாம்.

ஆசைப் பட்டு தொட்டால் ?…

“மன்னிச்சுக்கோங்க. கசங்கி வர்றேன் தள்ளிப் படுங்க சொல்லலாம். இல்லே நான் வேற ஒரு இடத்துல வர்றேன்னு வாக்கு குடுத்துட்டேன். கிணத்துத் தண்ணியை ஆத்துவெள்ளம் அடிச்சிப் போவாது. நாளைப் பார்க்கலாம். கிளம்பளாம்.” – நினைக்க நினைக்க அவமானமாக இருந்தது. இதெல்லாம் இவனால் வந்த வினை? நினைக்க துக்கமாய் இருந்தது. நொந்தான். இருந்தாலும் கோபம் வந்தது.

“என்னடி நினைச்சிக்கிட்டிருக்கே?!” – போய் அறைவிட்டால் என்ன நடக்கும்….? கற்பனைக்கு வந்தான்.

“நிறுத்தைய்யா !” – தடுக்கலாம்.

முறைத்தால்……?

“நான் ஒழுங்காத்தானிருந்தேன். நீதான் கூட்டிக்கிட்டுப் போய் கெடுத்தே. இன்னைக்கு உனக்கு வேணாம்ன்னு ஒதுங்கிட்டே. எனக்கு வேணும் நானென்ன செய்ய..? நீ என்னை விட்டு வேற எவளையும் தேடலையா. நீ செய்ஞ்சா தப்பில்லே. நான் செய்ஞ்சா தப்பா…? உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம் எப்படி? நீ அனுபவிக்கலாம் நான் அனுபவிக்கக்கூடாதா? நீ சந்தோசமா இருக்க என்னைக் கெடுக்கலாம். நான் சந்தோசமா இருக்க நீ பொறுக்கக்கூடாதா. உன் மனம் உணர்வுகளை மதிச்ச மாதிரி நீ என் மனம் உணர்ச்சிகளை மதி” சரமாதிரியாக சுடலாம்.

”உனக்குப் படுத்து பெத்து குடும்பப்பெண்ணாத்தான் இருந்தேன். நீதான் தேவடியாத்தனம் பண்ணச் சொன்னே. என்னைக் கண்டிக்கிறது என்ன நியாயம்? இன்னைக்கு எனக்கு தினம் ஒரு ஆள் வேணும். நீ புள்ளை வேணாம், ஒதுங்கு!” சொன்னால்?!…

‘கடவுளே!’ – சுரேந்தர் நெற்றிப் பொட்டில் கை வைத்துக் கொண்டான். சபலம் சந்தோசம் ஜாலிக்காக போய் வாழ்க்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டதை நினைக்க இதயத்தில் வலி கிளம்பியது.

மாற்ற முடியாதா? – நினைத்தான். இப்படி ஒரு சிக்கல் வருமென்று யோசிக்கவில்லையே! திகைத்தான்.

ராசேந்திரன் தானாக வருகிறானா இல்லை இவளாக அவனை அழைக்கிறாளா? யார் யாரைச் சுற்றுகிறார்கள்? – தலையைச் சுற்றியது.

ஏதோ ஆசை ஆவல் பண்டம் மாற்றிக் கொண்டோம். அதோடு சரி. தினம் வருவது எப்படி முறை…?ருசிக்கின்றதென்பதற்காக பண்டத்தையே அபகரிக்க நினைப்பது துரோகம்.. நான் வரவில்லை. நீ ஏன் வருகிறாய்..?. அவளே வந்தாலும் தவறென்று நீ ஏன் ஒதுங்கவில்லை? ஒதுக்கவில்லை ?. பெண் தானாக வந்தால் இந்த விசயத்தில் விலகிப் போவதென்பது ஆண்மைக்கே அவமானம். எவன் விலகிப் போவான்?! – ‘கடவுளே!’ சுரேந்தர் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

தப்பு! எல்லாமே தவறு. ஆசையில் அறிவு இழந்துவிட்டேன். ஆசை அறிவிழக்குமா? அது எல்லாம் இழக்கும். மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, பொருளாசை… எல்லாவற்றிற்கும் ஆசையே அடிப்படைக் காரணம். இந்த ஆசையின் அடித்தளத்தால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் மண்ணைக் கவ்வி இருக்கின்றன.

கண்டித்தாலும் கஷ்டம் கண்டிக்காமல் விட்டாலும் மானம் மரியாதையெல்லாம் போய் குடும்பம் குட்டிச் சுவர். பெண்ணிற்குச் காவல் இருக்க முடியாது. சோற்றைப் போட்டு கணவனை உட்கார வைத்துவிட்டு அவள் போய் சுகம் கண்டுவிட்டு வந்து விடுவாள்.

“இன்னைக்கு அலுவலகத்துக்கு நீங்களும் நானும் விடுப்பு போட்டுடலாம். எங்கேயாவது போய் ஜாலியா இருந்துட்டு அலுவலகம் விட்டுப் போறாப் போல நல்ல பிள்ளையா நாம அஞ்சு மணிக்கு வீட்டுக்குப் போயிடலாம். அதிகப்படி நேரம் ஆனாக் கூட அலுவலகத்துல அதிக வேலைன்னு சமாளிக்கலாம்.” மாலா என்….எத்தனையோ பெண்கள் இவனிடம் வழிந்திருக்கின்றார்கள்.

சுரேந்தர் இந்த நிமிடம்வரை எவளையும் வாடி என்று சொன்னதில்லை ஏறெடுத்துப் பார்த்ததில்லை.

யாரும் யாருக்கும் காவலிருக்க முடியாது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!’ என்பது சத்தியபூர்வமான உண்மை.

முள்ளின் மேல் சேலை மெதுவாக எடுக்க வேண்டும்.! எப்படி ?…

அத்தியாயம் – 12

சுரேந்தர் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் வீட்டிற்குள் நுழைந்தான். பிரவீணா குளித்து முடித்து எப்போதும் போல் பொலியுடன் இருந்தாள். கொஞ்சம்கூட அயல் வாடை அடிக்கவில்லை. முகத்தில் குற்ற உணர்ச்சி இல்லை. நல்ல மனைவிக்கடையாளமாய் கணவனைக் கண்டதும் எப்போதும் போல் காபி டிபன் எடுத்து வந்து கொடுத்தாள்.

ஆத்திரம் அவசரம் ஆவேசம் கூடாது என்று மனதை எப்போதே அடக்கி வைத்திருந்ததால் இவன் மௌனமாக சோபாவில் அமர்ந்தான். தட்டிலிருந்த பகோடாவைக் கொரித்தான். வாய் மென்றதே தவிர தின்ன மனமல்லை. ஏதோ ஒன்றாய் மென்றான் விழுங்கினான்.

மெல்ல “பிரவீணா!” அழைத்தான்.

“எஸ்!” – அவள் திரும்பினாள். எதிரில் அமர்ந்தாள்.

பிரவீணாவிற்கு இப்போது பேச்சு மாறி விட்டது. நுனி நாக்கில் ஆங்கிலம் வந்து விட்டது. பி.எஸ். படித்தவள்தானென்றாலும் தாலி ஏறி குடும்பம் குடித்தனமான பிறகும். “பிரவீணா!” என்று அழைத்தால் “என்னங்க?” என்று தான் வருவாள். இப்போது ஆளே மாறிப்போனதால் ஆங்கிலம்.

டிபன் முடித்து காபி குடித்தான்.

“என்ன கூப்பிட்டுப் பேசாம இருக்கீங்க?”

எப்படி ஆரம்பிப்பது என்று ஒருகணம் யோசித்து..

“இன்னைக்கு ராசேந்திரனைப் பார்த்தேன்.” என்றான்.

‘எங்கே எப்படி‘ – என்று அவள் முகத்தில் ஆவல் இல்லை. ஆளே தெரியாத பாப்பா போல எதுவும் பேசாமல் அழுத்தமாக பார்த்தாள்.

“தினைக்கும் அவர் இங்கே வர்றதா கேள்விப் பட்டேன்.”

“யார் சொன்னா?” சாதாரணமாக கேட்டாள்.

“யாரோ சொன்னாங்க”

“வர்றது தப்பா?”

“தப்பில்லையா?”

“தப்புலேயே தப்பா?”

“பிரவீணன்…!” – கத்திக்குத்து பட்டவன்போல் கத்தினான்.

“ஆத்திரப்படாதீங்க. கொஞ்சம் மனம்விட்டுப் பேசலாம்.” – நிமிர்ந்து அமர்ந்தாள்.

சுரேந்தரும் துணிந்தான். மனதை இரும்பாக்கினான்.

“அவனா வர்றானா நீயாய் அழைக்கிறீயா?” – கேள்வி கேட்டான்.

“ரெண்டும் நடக்கும்!” – பிரவீணா எந்தவித பயமுமில்லாமல் அழுத்தாமாகச் சொன்னாள்.

“நீ குடும்பப் பெண்ணா பேசலை.“

“நீங்க என்னைக் குடும்பப்பெண்ணா நடத்தலை.”

“ஏன் வர்றான்?”

“உண்மையைச் சொல்றேன். உங்ககிட்ட எனக்கு சுகம் இல்லே.”

சுரேந்தருக்கு ஆயிரம் ஈட்டிகள் நெஞ்சில் பாய்ந்தது போலிருந்தது. அதிர்ச்சியாகப் பார்த்தான்.

பிரவீணா ராசேந்திரனிடம் அனுபவித்ததை விலாவாரியாக சொன்னாள்.

“தேவடியா நாயே!”

இவனுக்குத் தாங்க முடியவில்லை. சீறி எழுந்தான். எந்த புருசன்தான் தாங்குவான்?!

“உட்காருங்க. இதைப் பண்ணச் சொன்னது நீங்க. இந்த உண்மையை நீங்க ஏத்துத்தானாகனும் என் சந்தோசத்துக்காக வர்ற அவரை நீங்க பொறுத்துத்தானாகனும்…”

“தப்பு பிரவீணா!” – சுரேந்தருக்குத் தழைவதைத் தவிர வேறு வழி இல்லை.

“அவன் இன்னொரு பெண்ணுக்குப் புருசன்!”

“நான் அபகரிக்கலை.”

“என்கிட்டேயிருந்து அவன் உன்னை அபகரிச்சிட்டா?”

“அது ஒருக்காலும் நடக்காது!”

“ஏன்?“

“எனக்கு சுகம் தேவையே ஒழிய ஆள் தேவை இல்லே.”

“இதே மோகமா நீ நாளைக்கு அவனே அடைக்கலமாய் மாறமாட்டேன்னு என்ன நிச்சயம்?”

“நான் மாற மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”

“புருசன் இருக்கும்போது இன்னொருத்தன்கூட கொஞ்சிக் குலாவறதுதான் தாலிக்கு நீ வைச்சிருக்கிற மரியாதையா?”

“நான் வைச்சிருந்தது அதிகம். கெடுத்தது நீங்க.”

பேச்சுக்குப் பேச்சு வார்த்தைகள்! – சுரேந்தர் அசந்தான்.

“வீண் விவாதம் வேணாம். நடந்ததை மறந்துடுவோம். ராசேந்திரன் இனி இங்கே வரவேணாம்” – சுரேந்தர் கறாராய் ஒரு முடிவிற்கு வந்தவனாய் சொன்னான்.

“இதுக்கு நான் யோசிச்சு பதில் சொல்லனும் !“ – பிரவீணா பதில் தெளிவாய் திடமாய் இருந்தது.

“ஏன்?“

“இது நாங்க முடிவெடுக்க வேண்டிய விசயம்”.

“அப்படின்னா நீங்க காதலிக்கிறீங்களா?”

“இல்லே”

“என்கிட்ட சுகம் கண்டதாய் அவன் மனைவி ரோசி என்கூட சுத்தினா சகிப்பியா?”

“தாராளமா”

“கவலை வருத்தப்படமாட்டியா?”

“நீங்க என்னைவிட்டுப் போகாதவரை”

பதிலுக்குப் பதில். யார் கொடுத்த தைரியம். சுரேந்தருக்குத் திகைப்பாய் இருந்தது. கோபமும் வந்தது. இப்படி பதில் கொடுப்பவள் எதிர்க்கவும் மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? அது நடந்து களேபரமானால்?..தன் கௌரவம்…?! இவனுக்குள் அடி மனதில் பயம் வந்தது.

“பிரவீணா! முடிவு ?” – கொஞ்சம் கலக்கமாய்ப் பார்த்தான்.

“ப்ளீஸ்! உங்க ஆசைக்கு நான் என்னையேத் தந்தேன். இப்போ நான் என் வசமில்லே பொறுத்துக்கோங்க” – கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சிவளாய் அறைக்குள் சென்றாள்.

இந்த பேச்சுக்காகவாவது நிமிடத்தில் அடித்து நொறுக்கி சக்கையாக்கி வெளியில் தள்ளுவது சுலபம். ஆனால் விசயம் வெளியில் வந்தால் முகத்தில் கண்டிப்பாய்க் கரி.

“ஏன்டா! உன் ஆசைக்கு ஒரு பொம்பளையைக் கெடுத்துட்டு இன்னைக்கு அவ கெட்டுப் போயிட்டாள்னு மீசையை முறுக்கறே?!” – முகத்தில் குத்துவார்கள்.

“ஆயிரம்தான் ஆசை இருந்தாலும் இன்னொருத்தன்கிட்ட படுன்னு சொன்னே பார்த்தியா…அப்பவே நீ புருசனில்லே. அந்த இடத்தைவிட்டு இறங்கிட்டே!“ – சொல்வார்கள்.

‘இது முள்ளில் நாம் போட்ட சேலை. கிழிந்தால் நாட்டுப் பண்பாடு கலாச்சாரத்திற்கே வேட்டு. கிழியாமல் எடுக்க வேண்டும்’. – மெல்ல எழுந்து அறைக்குள் சென்றான்.

‘குதிரையை அடக்கினாத்தான் சவாரி செய்ய முடியும். முடியலைன்னா குப்புறத் தள்ளிடும்!’ – சத்தியமான உண்மை. ஆசை குதிரையை அடக்காமல் போனது தப்பு. நினைக்க துக்கமாய் இருந்தது. கட்டிலில் படுத்தான்.

‘கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம். இப்போ வருத்தப்பட்டுப் பிரயோசனமில்லே. திருத்த வழி பார்!’ – மனம் சொன்னது.

‘எப்படி?’ – இவன் திருப்பிக் கேட்டான்.

‘இவள் மோகமா இருக்கா. அவனைப் புடி அவன் கால்ல விழு’

‘எப்படிய்யா?’

‘என் மனைவி உன்கிட்ட மயங்கிட்டா விட்டுடுன்னு கெஞ்சு.’

‘ரொம்ப நல்ல யோசனை. ஆனா சின்ன ஓட்டை. நானா வர்றேன்…? அவளா வர்றா! நீ அடக்கிக்கோ. பூட்டிக்கோ’ – பதில் சொன்னால்?!

பெண்ணைப் பூட்டி வைக்க முடியுமா. பிரவீணாவை அப்படி அடைத்து வைத்தால் ?

“ஐயோ! நாங்க இப்புடி என் புருசன் அப்படி என்னை அவர்கிட்ட விடச்சொல்லுங்க விட்டுடுங்க” – அவள் கத்தி களேபரம் செய்தால் ஊர் நாறும்.

“விட்டகுறை தொட்ட குறை நாங்க ஒன்னு கூடிட்டோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழறதா முடிவு. நீ தடை விலகு” என்று சம்பத்தப்பட்டவன் பட்டவர்கள் சொன்னால் ?!!

“நீங்க சொல்றது சரி சுரேந்தர். ஆசை சபலம் நானும் தப்புப் பண்ணிட்டேன். உங்க குடும்பம் பிரிய நான் காரணமா இருக்க மாட்டேன். உங்க மனைவி என் மேல மோகமா இருக்கிறது தப்பு. அவுங்க முகத்துல முழிக்க மாட்டேன் வந்தாலும் போன்னு துரத்தறேன் கண்டிக்கிறேன் என்று முன்னால் ஒப்புக்குச் சொல்லி பின்னால் சேர்ந்தால்..!? இல்லை…. இவளே வேகப்பட்டு உன்னால ஒரு ராசேந்திரனைத்தான் கட்டுப்படுத்த முடியும். என்னால ஓராயிரம் ராசேந்திரனைத் தேட முடியும். சென்றால்? – நினைக்கவே குலை நடுங்கியது. திருடனுக்குத் தேள் கொட்டிய கதி. தன்னை நினைக்க அவனுக்கே வெட்கமாய் இருந்தது. எப்படி சிக்கலைப் பிரிக்க ? – யோசனையில் இறங்கினான்.

– தொடரும்…

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *