தாலாட்டு





(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மத்திய மலைகளின் அடிவாரத்திலிருந்து ஊவா மேட்டு நிலங்கள் வரை தேயிலைத் தேசம் நீண்டு படர்ந்து தொடர்கின்றது…… அதன் பச்சை படர்ந்த பசுமையின் சித்திரங்கள்தான் பல இலட்சப் பெருந்தோட்ட மக்களின் வீடும் உலகமுமாகப் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன…

அவர்கள் லயன்களில் வசிக்கின்றார்கள். லயத்து வீடுகள் கிராம நகர வீடுகளை விட மிக மிக வேறுபட்டவைகளாகும்.
இலைகள் படர்ந்த பச்சைக்காடுகளில் ‘கவ்வாத்தும் கொழுந்தும்’ என்ற போர்வையிலேயே தங்களை மூடிக்கொண்டு வெளி உலகத்தை இழந்து அவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
நகரங்களில் கிராமங்களில் வாழுகின்ற அண்டை அயலவர்கள் கூட இவர்கள் வீடுகளோடு நெருங்காமல் இருந்தார்கள்.
இந்த வரம்புக்குள் வாழப் பழகிக் கொண்டாலும் அவர்களது ஏழ்மை வாழ்க்கையில் இன்பமும் இனிமையும் மணம் வீசத் தொடங்கின. அவர்களது மனதின் எழுச்சிகளும் மகிழ்ச்சிகளும் சுகமும் துக்கமும் வெளிச்சமும் இருட்டும் அவர்களது சமூக, கலாசார சமய நடவடிக்கைகளோடு பின்னிக்கிடந்தன.
அந்த ஏழைக் கூட்டங்களில் சமூகச் சம்பிரதாயப் பண்பாட்டு வழக்கங்கள் இந்து மதத்தை தழுவி இருந்தாலும் மட்டகளப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணக் கிராமங்களில் வாழும் இந்துக்களின் வழமைகளோடு மாறுபட்டவைகளாக இருந்தன. இருந்தாலும் இவர்களுக்குள்ளேயும் வேறுபாடுகள் இருந்தன. இந்தியாவில் இவர்கள் வாழ்ந்த கிராமங்களுக்கும் சாதிகளுக்கும் ஒப்பவே தோட்டங்களிலும் சம்பிரதாயங்கள் மாறுபட்டிருந்தன.
பிறந்தாலும்…….இறந்தாலும்……. காதுகுத்தினாலும்……கலியாணம் செய்தாலும், வயசுக்கு வந்தாலும் வழிபாட்டு பூசைகள் நடந்தாலும் எல்லாவற்றுக்கும் அந்தந்தச் சடங்குகளைப் பாதுகாத்து வந்தார்கள்.
பத்துக்கு பன்னிரண்டு அடி அகலமான ஓர் அறையில் அம்மா……..அப்பா… இரண்டு சின்னஞ் சிறுசுகளோடு வயசுக்கு வந்த மகள் என்று முழு குடும்பமுமே முடங்கிக் கிடந்தன. அந்த பெறுமதியான பரப்புக்குள்ளேதான் எல்லாமே நடக்கும். சாவும்……. சடங்கும்…….கொண்டாட்டமும்……. குமுறலும் …… அந்தப் பத்தடிக் குச்சிக்குள்ளேதான் பரவிக்கிடந்தன. ஆமாம்…….! அந்த பத்தடிக் குச்சிக்குள்ளே முடங்கிக்கிடந்து கொண்டுதான் ‘எட்டடிக் குச்சிக்குள்ளே கந்தையா எப்படி நீ இருந்தே ?….’ என்று இறைவனை இவர்கள் கேட்டார்கள்…..! இவர்கள் கடவுள் மேல்……. கவலைக் கொண்ட மக்கள்!!
‘ஏய் முத்தம்மா! என்னாடி பாஞ்சாலி முழுகாம இருக்கான்னு கேள்விப்பட்டேன் நெசமா?… என்று மீனா கேட்டாள். கர்பம் தரிப்பதைக் குழந்தை பிறப்பதை ஒரு புனித நிகழ்வாக அவர்கள் பூஜித்தார்கள். தாயின் கருவறையில் கர்பம் கட்டிவிட்டால்போதும், ஊர் முழுவதும் காட்டுத் தீ போல் செய்தி பரவிவிடும்’
பீலிக்கரையில், பைப்படியில் பெண்கள் கூடும் இடமெல்லாம் வாயில் அவல் கிடைத்த வம்பு வளரும்.
அர்ச்சுனன் சம்சாரம் பாஞ்சாலி, முழுகாமல் இருக்கிறாள்….. பாவம்……. இதுதான் இவளுக்கு தலைச்சன்……. நல்லபடியாகட்டும்’ என்று ஊர் வாழ்த்தியது. பாஞ்சாலியின் புருஷன் அர்ச்சுனன் தாடி வளர்க்கத் தொடங்கினான்.
இது ஒரு நேர்த்திக்கடன். தோட்டத்து இந்துக்கள் மனைவி கர்ப்பவதியாகிவிட்டால் கணவன் தாடி வளர்ப்பதும் பயபக்தியாக விரதம் இருப்பதிலும் கவனமாக இருப்பார்கள். கதிர்காமம் போன்று கோயில் குளங்களுக்குப் போயும் இந்த சம்பிரதாயத்தை கடைபிடிப்பார்கள்.
ஆண்கள் அர்ச்சுனனுக்கு வாழ்த்து கூறினார்கள்…….. நையாண்டி செய்தார்கள்…….!
‘ஓய் …… மச்சி! நல்ல சேதி கேள்விபட்டோம்! தங்கச்சி எப்பயிலயிருந்து முழுகாம இருக்கு?
‘ஐப்பசியிலிருந்து……. இப்ப ரெண்டு மாசம்!’
பாஞ்சாலி வயதான பெண்களிடமிருந்து நிறைய புத்திமதி கேட்டுக்கொண்டாள்.
‘வெள்ளரிக்கா, பாவக்கா வெட்டக்கூடாது..! துணி தைக்கக்கூடாது!’
இப்படியெல்லாம் செய்தால் குழந்தைக்கு உதடு ‘முயல் உதடுகளாக கிழிந்து பிறக்கலாம் காது முறுக்கியவாறு ஒட்டிப் பிறக்கலாம் என்ற ஐதீகம் அதில் உண்மையும் இருக்கலாம்…….
மூன்றாவது மாதத்திலிருந்து பாஞ்சாலி தோட்டத்து மருத்துவச்சியோடு தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
இருந்தாலும்…… பாஞ்சாலி மாரியம்மன் கோவிலுக்குப் போய் வருவதை விரும்பினாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அந்தியானதும் குளித்துவிட்டு ஈர உடையோடு விளக்குப் பொருத்திவிட்டு வருவாள்.
பிரசவத்துக்கு ஆஸ்பத்திரியில் தங்க வேண்டும் என்று தோட்ட நிர்வாகத்தின் சட்டம் இருந்தும் பாஞ்சாலியின் சொந்தக்காரர்கள் வீட்டில்தான் பிரசவம் நடக்க வேண்டும் என தீர்மானித்தனர்.
பாஞ்சாலிக்கு வலி வந்துவிட்டது. பிரசவ அறிகுறி தென்பட்டது. அர்ச்சுனன் ஆஸ்பத்திரியிலிருந்து மருதுவச்சியை வீட்டுக்கு அழைத்து வந்தான். வீடு நிறைய பிள்ளை பெற்ற தாய்மார்கள்.. சொந்தக்காரர்கள்……. குழுமியிருந்தார்கள். சின்னஞ்சிறுசுகளும் மொய்த்துக் கொண்டிருந்தனர்.
மருத்துவச்சி எல்லோரையும் அப்புறப்படுத்தி நிலைமையைத் தன்னோடு கட்டுப்படுத்திக் கொண்டாள்.
…ஓர் இயற்கைப் போராட்டம்…
அந்தப் பத்துக்குப் பன்னிரண்டு அடி என்ற பரப்பில் ஓர் ஐந்துக்குப் பன்னிரண்டு அடி என்ற மறைவிடத்தில் ஒரு புதிய உயிர் இந்த பூமியில் பிறந்தது.
டிஸ்பென்சரும் மருத்துவச்சியும் என்னதான் மருந்து கிருந்து என்று இங்கிலிஸ் முறையில் கொடுத்தாலும் அந்த விசேஷ குடி வகை பழைய சாராயமும்…… கைமருந்து என்னும் (காயம்) காய உருண்டைகளையும் கொடுத்து பிள்ளைக்காரியை ‘தேத்து’வார்கள்……. பிரசவத்திற்கு பிறகு ‘பச்சை உடம்புக்காரிக்கு’ அவைதான் அருமருந்து!
பாஞ்சாலியும் சிசுவும் ஓர் மூலையில் கம்பளியால் சுற்றிய நிலையில் அலங்கோலமாகக் கிடந்தன. அந்தக் குளிரை கட்டுப்படுத்துவற்கு ஒரு சட்டியில் நெருப்பு கணத்துக் கொண்டிருந்தது. இடைக்கிடையே சாம்பிராணியைத் தூவி நறுமணம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்……..
ஒரு பழைய கத்தி… கிழிந்த செருப்பு……. ஒரு இரும்புத்துண்டும் பாஞ்சாலியின் ‘தலைமாட்டில்’ வைக்கப்பட்டிருந்தன…….!
பிரசவமும் ஒரு வகைத் தீட்டு…. பேய் பிசாசு அங்கே ‘அண்ட’ கூடாதென்பதற்காக அவைகள் அங்கே முக்கிய பொருட்களாக வைக்கப்பட்டிருந்தன.
குழந்தை பிறந்தவுடனே தகப்பன் வழி மாமன் முறையான ஒருவர் நுழைவாசலில் விளை மாங்கொத்துக் கட்ட வேண்டும். நடேசன் ஒரு பெரிய மாங்கொத்தை வாசல் கூரையில் செருகினான்.
மாங்குழை வாசலில் செருகுவது ‘இது கொழந்த பொறந்த ஊடு என்ற தகவலை காட்டுவதற்காகவே வாசல் கூரையில் மாங்குழை செருகுவார்கள்.
மாவிலை மங்களகரமான நிகழ்ச்சிகளின் சின்னமாகும்.
அர்ச்சுனன் அறிவுபூர்வமான விசயங்கள் தெரிந்தவன்.
சுகப் பிரசவ நிகழ்ச்சியை கொண்டாட விரும்பினான். நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்திருந்தான். குடும்பங்களில் நிகழும் நல்லது கெட்டது என்ற காரியங்களுக்குப் பொது மனிதராகச் சம்பந்தப்படுபவர் ‘பழனி மாமன்’ என்பவரே ஆகும். இவர் ஒரு நடுத்தர மனிதர். மிகமிக நெருக்கமாகவும் சொந்தமாகவும் எல்லாக் காரியங்களிலும் ஈடுபடுகின்றவர். அந்தச் சமூகத்தின் சடங்கு சாஸ்திரம் சம்பிரதாயம் போன்ற சகல நிகழ்ச்சிகளுக்கும் அவரே அதிபதி.
பழனி மாமன் வழி காட்டலில்…….அர்ச்சுனன் வந்திருந்தவர்களுக்குக் கற்கண்டும் சர்க்கரையும் வழங்கினான்
இந்த வழமையை இனிப்பு வழங்கும் வைபவமாக கருதினார்கள்……
அக்கம் பக்கத்தவர்கள் கடந்த ஏழு நாட்கள் வரை அந்த வீட்டுப் பக்கம் நடமாடவில்லை. ‘கொழந்த பொறந்த தீட்டு’ என்று அவர்கள் ஒதுங்கியிருந்தார்கள்.
சொந்தக்காரர்கள் மட்டுமே அந்த வீட்டில் புழங்கினார்கள். மற்றவர்கள் அந்த வீட்டில் தண்ணீர் குடிக்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள்.
ஏழாம் நாள்……. மாவிலை மறைப்பு கட்டியிருந்தார்கள். பாஞ்சாலி குளியாட்டப்பட்டாள். பிரசவத்திற்குப் பிறகு முதற்குளியல்! ஆடாதோடை…… அஞ்சலை நொச்சி……. பவத்தக்குலை என்று மூலிகை இலைகளை அவித்து நீரில் ஸ்நானம் செய்தாள்.
ஏழாம் நாள் முடிய மாவிலை மறைப்புகள் அகற்றப்பட்டன.
குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. குடும்பத்தில் உடனடியாகப் பெயர் வைக்க மாட்டார்கள். ஆனால் டிஸ்பென்சர் பிறப்பைப் பதிவு செய்வதற்காக அவர் விரும்பிய எந்தப் பெயரையும் வைத்துவிடுவார். தகப்பனார் ஏழாவது நாளில்தான் பெயர் கொடுப்பார்.
டிஸ்பென்சர் வைத்த பெயரும் தகப்பன் வைத்த பெயரும் இரண்டாகச் சேர்ந்து சட்ட நிர்வாக வேலைகளை சீர்குலைத்தன. ‘இரு பெயர் கொண்டான்’ இலங்கை பிரஜா உரிமைச் சட்டத்தில் பெரும் பிரச்சனைக்குள்ளாகின்றான்.
முப்பது நாள் முடிந்தது.
முப்பது கும்பிட ஏற்பாடு நடந்தது.
வீட்டிலுள்ள சட்டி பானைகள் தலையணை, பாய்கள் சாக்குகள் யாவும் அப்புறப்படுத்தப்பட்டன. தீட்டுச் சாமான்கள் என அவைகள் கழிக்கப்பட்டுப் புதிய சாமான்களை அர்ச்சுனன் வாங்கி வந்தான். வீட்டுக்கு வெள்ளையடித்தனர். சாணத்தால் வீட்டை மெழுகினார்கள்.
உறவினர்களும் நண்பர்களும் ஒன்று கூடினார்கள். ஒரு கொண்டாட்டம் நடந்தது.
இந்த இனிய நிகழ்ச்சிக்குப் பிறகு பழனி மாமன் புறப்பட ஆயத்தமானார்.
எல்லோருடைய நன்மைக்காகவும் அவர் பேசத் தொடங்கினார். ‘இன்னயிலயிருந்து அக்கம்பக்கத்துக்காரவங்க ஒங்க ஊட்டுல வந்து உப்பு கேப்பாங்க……. அவங்கள வரவேற்க ரெடியா இருக்கனும்’ என்றார்.
பாஞ்சாலியின் -அண்ணண் நடேசன் அட்டல் மரத்தில் கயிற்றை செறுகி உறுதியான சேலையில் தொட்டில் கட்டிக் கொடுத்தான்.
யாருமே எதிர்ப்பார்க்காத வேளையில்…….. அந்தச் சின்ன… வாண்டு குரல் கொடுத்தது.
‘குவா……குவா குவா!’ பாஞ்சாலி இதயம் படபடக்க……. மிக பவ்வியமாக குழந்தையை தூக்கி….. தொட்டிலில் இட்டாள்……. மெதுவாக ஆட்டினாள்.
வெட்கம் மேலிட நடுங்கும் குரலில் சுப முகூர்த்தத்தில் கட்டிய தொட்டில் பாடலை பாடினாள்.
ஆரி ரர ரர ரா ரா ரோ!
ராரி ரர ரர ரா ரா ரோ!
தொட்டிலை நானும் ஆட்டிய போது
தூணெல்லாம் ராகம் பாடுதையா……..
எங்க நல்லதம்பி ஒங்க கண்ணு ரெண்டும்
தூக்கக்கெரக்கத்திலேதொவலுதையா….
அவர்களின் வாழ்க்கை வறுமையில் கிடந்தாலும் அந்தத்தாலாட்டுக் கோடி இன்பத்தைக் கொண்டேயிருந்தது…
– ஆங்கில தொகுதி: A child is born, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.
– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.