தாய்மையின் விலை
(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பிறக்கின்ற குழந்தையே விற்றுவிட வேண்டும்” பொன்னம்மாவின் வயிற்றில் அந்தக் குழந்தை கருவுற்ற அன்றே இப்படியொரு எண்ணமும் அவள் மனதில் உருவாகிவிட்டது.
வலுவிழந்து போன தனது உடலில் கருத்தரித்திருக்கும் அந்தக் குழந்தை உயிரோடு பிறக்காது அப்படி உயிரோடு பிறந்தாலும் – நீண்ட நேரம் இருக்காது என்ற எண்ணமும் அவளது மனதில் இலேசாக முளைவிட்டிருந்தது. ஆனால் அவளது எண்ணத்துக்கு மாறாகக் குழந்தையைச் சுகமாகப் பிரசவித்து விட்டாள்.
அப்படியென்றால், அடுத்த முடிவு …?
குழந்தையை விற்பது…!
அவளது வயிற்றுத் தோற்புரையில் ஒட்டுண்ணி வாழ்க்கையை நடாத்திய அந்தக் குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன.
அந்தக் குழந்தையை வாங்க இருப்பவர்கள் இன்னும் சிலமணி நேரத்தில் வந்து விடுவார்கள். தாய் – சேய் உறவு இன்னும் சில மணி நேரம் வரை தான்!
உயிருள்ள வரை நீடிக்க வேண்டிய உறவு, மணிக்கணக்கில் நீண்டிருக்கின்ற கொடுமை …!
பெரியாஸ்பத்திரி.
பிரசவ வார்ட்.
கட்டிலில் குழந்தையுடன் படுத்திருக்கின்றாள் பொன்னம்மா, அந்த அறையில் உலகம் புரியாத சில “சிறிசு”களின் முனகல் சத்தத்தைவிட வேறெந்தச் சத்தமும் இல்லை. அனைவரும் அமைதியாகவே படுத்திருக்கின்றனர்.
அந்த அமைதி பொன்னம்மாவின் இதய வேதனையை நெருட, அவளையறியாமல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிகின்றது.
அந்த அமைதியைக் குலைப்பது போல்.
ஒரு நாயின் அவலக்குரல்.
யன்னல் அருகே பொன்னம்மாவின் கட்டில் இருந்ததால், பொன்னம்மா தலையை நிமிர்த்தி யன்னலூடாக, நாயின் குரல் வந்த திசையைப் பார்க்கின்றாள்.
அங்கே
அந்த ஆஸ்பத்திரியின் உயர் அதிகாரியின் பங்களாவில் வளர்க்கப்படுகின்ற “அல்சேஷன்” நாய், ஆஸ்பத்திரியில் எச்சிலிலை நக்கிச் சீவியம் நடத்துகின்ற ஒரு தெரு நாயைக் கடித்துக் கொண்டிருக்கிறது.
கடுந்தரையில் விழுந்து மாங்காய் பிளப்பது போல் அவளது உதடுகள் பிரிய அவள் சிரிக்கின்றாள்.
அர்த்தபுஷ்டியான சிரிப்பு.
அவள் திரும்பவும் தலையைத் தாழ்த்திக் கொள்கிறாள். இப்பகுதிக்குரிய பஸ் நிலையத்தில் “தெரு நாய்” என்று கூறினால் சகலருக்கும் தெரியும்.
பொன்னம்மாவுக்கு இப்படி ஒரு பட்டப் பெயண்டு!
பட்டப் பெயர்கள் பிறரால் சூட்டப்படுவது தான் வழக்கம். ஆனால் “தெரு நாய்” என்ற பட்டப் பெயரைப் பொன்னம்மா தானே தனக்குச் சூட்டிக் கொண்டாள்.
“பொன்னம்மா! இண்டைக்கு என்ன சாப்பிட்டாய்?” என்று யாராவது கேட்டால், என்ரை பிறப்பு நாய்ப் பிறப்பு. அதிலையும் தெரு நாய். கிடைக்கிற எச்சில் இலைகளை நக்க வேண்டியதுதான்…” இப்படித்தான் அவள் கூறிக்கொள்வாள்.
அவள் தன்னை “தெருநாய்” என்று கூறிக் கொண்டதால் அவளது பெயர் தெரு நாய் பொன்னம்மா என்றாகி நாளடைவில் “தெரு நாய்” ஆகிவிட்டது.
இப்போது பொன்னம்மா என்றால் யாருக்கும் தெரியாது. தலையைத் தாழ்ந்தியிருந்த பொன்னம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருக்கின்றது.
இரைப்பையின் கொடுமையால், கருப்பைக்குச் செய்கின்ற துரோகம்… கருப்பையின் மரண ஓலம்… கண்ணீராய் வடிகின்றது.
பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையை உயிரோடு இழக்கின்ற ஒரு தாயின் அவல நிலை! ஒட்டியுலர்ந்த அவளது மார்பிலிருந்து எப்படியோ சில துளி பால் கசிந்து, சட்டையில் ஒரு ரூபா குத்தியளவில் ஊறுகின்றது.
பாசத்தின் உச்ச நிலை!
பொன்னம்மா குழந்தையை விற்கப் போகின்ற செய்தி, அதே அறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அனைவரும் பொன்னம்மாவைத்தான் பார்த்தபடி படுத்திருக்கின்றனர். அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் பொன்னம்மா உணராமல் இல்லை. இருந்தும் அவள் மௌனமாகவே இருக்கின்றாள்.
பொன்னம்மா இலேசுப்பட்டவள் அல்ல!
சாதாரண நிலையில் எல்லோரிடமும் சகஜமாகப் பேசிக் கொள்வாள். நெருக்கடிகள், வேதனைகள் ஏற்பட்டுவிட்டால் அவள் பேசமாட்டாள். அப்படியில்லை என்று அவள் பேசினால், அந்தப் பேச்சில் “நீர் மட்டம்” வைத்த நிதானமிருக்கும்.
“ஏன் பொன்னம்மா, இந்தப் புள்ளையின்ரை தகப்பன் எந்த ஊரிலை?” சகலதும் தெரிந்த ஒருத்தி வேண்டுமென்று பொன்னம்மாவைக் கேட்கின்றாள்.
“இந்த ஊரிலை தான்.”
“அப்ப ஏன் அவர் வரயில்லை?’
பொன்னம்மா மெளனமாக இருக்கிறாள். அவளுக்கே தெரியாத அந்தத் “தகப்பன்” அவன் வராத காரணத்தை அவளால் எப்படிக் கூறமுடியும்?
“என்ன பொன்னம்மா பேசாமல் இருக்கிறாய்? இந்தப் புள்ளையின்ரை தகப்பன் ஏன் வரயில்லை?’
பொன்னம்மா தலையை நிமிர்த்திக் கேள்வி கேட்ட அந்தப் பெண்ணைப் பாக்கின்றாள். சில வினாடிகள் அந்தப் பார்வை அந்தப் பெண் மீது படிகின்றது. மறுகணம் தனது வலது கரத்தைப் பூரணமாக விரித்து தனது மடியில் கிடந்த குழந்தையைப் பாதாதி கேசம் வரை தடவுகிறாள்.
அவளது காய்ந்த மார்பு விம்மித் தணிய, மீண்டும் சில சொட்டுப் பால் துளிகள் கசிந்து பாசத்தின் எல்லைக்கோடு உடைகிறது. அவள் திரும்பவும் தலையைக் தாழ்த்திக் கொள்கிறாள். மீண்டும் அமைதி.
வெளியே.
நாயின் அவலக்குரல்.
அந்த “அல்சேஷன்” நாய், அந்தத் தெரு நாயை இன்னும் கடித்துக் கொண்டிருக்கிறது.
சிப்பி பொறுக்கி, அதை விற்றுச் சீவியம் நடத்துகின்ற ஒரு குடுப்பத்தில் பிறந்தவள் தான் பொன்னம்மா. பெற்றோரை இழந்த அவள் ஒரு அனாதை.
பொன்னம்மா என்ன செய்வாள்? வாழவேண்டுமே! அரிசி வியாபாரம் செய்யத் தொடங்கினாள். சிலரோடு சேர்ந்து வந்தவர்களையும் இழந்து அனாதையாகி விட்டாள்.
புதிய இடம், புதிய அனுபவம், உடலோடு ஒட்டிய கன்னிச்சுமை…
அந்த பஸ் நிலையத்தைச் சுற்றித் திரிந்தாள். இரவு வந்தது பகலில் அவளை அவதானித்த சில கண்கள் அவளைச் சுற்றி வட்டமிட்டன.
அவளது கைக்குள் சில “சில்லறைகள் …? சின்னத்தன மானவர்களின் காணிக்கை…
இப்போது அவள் இரவை எதிர்பார்க்கின்றாள்.
பசி மயக்கத்தில் தன்னையும், இந்த உலகத்தையும் முற்றாக மறந்து பூட்டப்பட்டிருக்கம் கடை விறாந்தைகளின் மங்கலமான ஒளியில்… தேலால் மூடப்பட்டிருக்கும் வெறும் தசைக் குவியலை அவள் மலிவுப் பொருளாக்கி…
உணவுள்ள பல ஆண்மைகள் கையில் சில்லறைகளுடன் சந்தித்து… சங்கமித்து…
தினசரி அவளுக்கு மறுபிறப்பு. இப்போது ஒரு தேசியக் குழந்தைக்குத் தாயாகி அந்த நகரிலுள்ள பெரியாஸ்பத்திரி பிரசவ வார்ட்டில் இருக்கின்றாள்.
சொற்ப நிமிஷங்களில் அந்தக் குழந்தை விற்பனை யாகிவிடும்!
“என்ன பொன்னம்மா, குழந்தையை விக்கச் சம்மததந்தானே?” அங்கு வந்த தாதி கேட்கிறாள்.
“ஓமம்மா”…
அந்தத் தாதி குழந்தையை எடுத்துச் சென்று பவுடர் போட்டு, பொட்டு வைத்து புதியதொரு கம்பளித் துணியால் போர்த்திக் கொண்டு வந்து கட்டிலில் கிடத்துகின்றாள்.
“பொன்னம்மா… பிள்ளையை வாங்கிறவை இப்ப வாறதாய் ரெலிபோன் செய்திருக்கினம்… இனி நீ பிள்ளையைத் தூக்காதே…”
தாய்க்கும் பிள்ளைக்கும் ஏற்படப்போகும் பிரிவினையின் முன்னுரை!
பொன்னம்மா எட்டித் தன் குழந்தையைப் பார்க்கின்றாள்… தன் குழந்தைதானா என்றொரு சந்தேகம் அவளுக்கு.
“வாருங்கோ, உங்களைத்தான் பாத்துக்கொண்டு நிக்கிறன். இதுதான் உங்கடை மகன்…” பிள்ளை வாங்க வந்தவர்களை வரவேற்றுக் குழந்தையை அறிமுகம் செய்கிறாள் அந்தத் தாதி.
“என்ன பேர் வைக்கப் போறீங்க..?” வந்தவர்களிடம் கேட்கிறாள் தாதி.
“கோமேதகன்” பிள்ளையைப் பெறாமலே அந்தப்பெண் கூறுகின்றாள்.
“நல்ல பெயர்…” குழந்தையின் கையைப் பிடித்துக் கொஞ்சுகிறாள் தாதி.
பக்கத்து கட்டில்களில் உள்ள பெண்கள் எழுந்து வந்து குழந்தைக்குச் செல்லங் காட்டுகின்றனர்…
பெரிய இடத்துப் பிள்ளைக்கு உரிய “சலாம்” வரிசைகள்…
பிள்ளையைப் பெற்று புண்ணுடம்பு மாறாத அந்தத் தாய்… “தெருநாய்…செல்லாக்காசு”
“அப்ப எவ்வளவு தாறது ?” குழந்தையை வாங்க வந்தவர் கேட்கின்றார்.
“ஏதோ விரும்பியதைக் கொடுங்கோ…” தாதி நடுநிலைமை வகிக்கின்றாள்.
“இதிலை நான் கையெழுத்துப் போட்டிருக்கிறன். எவ்வளவு தொகையெண்டு போடயில்லை… தேவையானதைப் போடு…” அவர் காசோலையை பொன்னம்மா இருந்த கட்டிலில் வைக்கிறார்.
எங்கும் மைதி.
இந்த உலகத்தையே ஆட்டுகின்ற அந்தப் பணத்தின் பிரதியான காசோலை காற்றில் இலேசாக ஆடுகின்றது.
பொன்னம்மா அந்தச் செக்கையும், அந்தப் பெரிய மனிதனையும் மாறி மாறிப் பார்க்கின்றாள்.
“என்ன பொன்னம்மா பார்க்கிறாய்?… உனக்கு வேண்டிய தொகையைப் போட்டுக்கொள்” அந்தப் பெரிய மனிதன் கூறுகிறான்.
“இந்தப் பிள்ளையின்ரை விலையை உங்களாலை சிலவேளை மதிப்பிட முடியும்… ஆனால் என்னாலை மதிப்பிட ஏலாது. அப்பிடி நான் மதிப்பிட்டால், அந்தத் தொகையைக் கட்ட இந்த உலகத்திலை ஆராலையும் முடியாது!…
“குழந்தையை வாங்கிற ஆசை பலருக்கு இருக்கலாம்… பெற்ற குழந்தையை விக்கிற ஆசை எந்தப் பெண்ணுக்கும் வராது.
“நான் பெத்த குழந்தைக்கு ஒரு நல்ல காரியம் செய்யவேணு மெண்டால் இதைவிட வேறை ஒண்டும் என்னால் செய்ய முடியாது…” பொன்னம்மாவின் பேச்சில் நீர்மட்டம் வைத்த நிதானம்!
அவள் இறுதியாகத் தன் குழந்தையைப் பார்க்கிறாள். அவள் கண்களில் கண்ணீர் முட்டி வடிகின்றது.
அந்தச் செக்…
அந்தக் காசோலை…
இன்னமும் மின்சார விசிறியின் காற்றில் அனாதையாக அசைந்து கொண்டிருக்கின்றது.
பொன்னம்மா வெளியேறுகின்றாள்.
வெளியே.
“அல்சேஷன்” நாயால் கடிக்கப்பட்ட எச்சிலியை நக்குகின்ற அந்தத் தெரு நாய் இரத்தம் தோய்ந்து உயிர் ஊசலாடக் கிடக்கின்றது.
இந்த தெருநாய் பொன்னம்மா புண்ணுடம்புக்காரி… அடிமேல் அடிவைத்து நடக்கின்றாள்.
அவளுக்காக அந்த பஸ் நிலையம் காத்துக் கிடக்கின்றது.
– சிந்தாமணி 11.06.1978
– பாடுகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: செப்டெம்பர் 2012, கு.வி. அச்சக வெளியீடு, கொழும்பு.