தலை முறைகள்





(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வேலி ஓரத்தில் முள்ளி முருக்கை பூத்திருந்தது. வைகாசியில் இது ஒரு கண்கொள்ளாக் காட்சி. இரத்தச் சிவப்பில் பூக்கள் சரம் சரமாக தொங்கிக் குலுங்கும். பூக்கள் மூலையில் மடிந்து கிளிச் சொண்டுபோல வளைந்து…. மைனாக் கூட்டம் கதைகள் பேசிக்கொண்டு மூக்கு நுனியால் கோதி விளையாடும்.
பக்கத்திலேயே பால் முருங்கை. நீளம் நீளமாக காய்கள் நூலிழுத்து, நூற்றுக் கணக்கில் இலைகளை மறைத்துக் கொண்டு…. குச்சவெளியில் இருந்து வாப்பா கொண்டுவந்த முருங்கைத் தடியின் வாரிசுகள்.
இரண்டு முருங்கைகளுக்கும் நடுவில் வாப்பா பாவித்த அந்தக் காலத்து, அடி கெரியல் பூட்டிய சிகப்புச் சைக்கிள் சாத்தியிருக்கிறது. வாப்பா மௌத்தாகிய பின் தன்னோடும் முப்பது வருடங்களாக கூடவே சினேகிதனைப் போல வயல் வரம்பென்று பார்க்காமல் உழைத்து வருகிறது.
காலையில் இருந்து இரண்டு மரங்களிலும் குந்திக்கொண்டு, காகங்கள் கரைந்து கொண்டிருக்கின்றன. வேற்று நாட்களென்றால், விரசித்துரத்துகின்ற மனைவியும் இன்றைக்கு அந்தக் குரலை ரசித்துக்கொண்டு வாசலில் நிற்கிறாள்.
“என்னங்க மகன் லோஞ்சிலேயே வருதா….. இல்லாட்டி, அல்லை, கந்தளாய் றோட்டில் காரால வருதா?”
அவளை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் காக்கைகளை விரட்டத் தொடங்கினார். அவை பிரியவில்லை. முருங்கையிலும் முள்ளி முருக்கையிலும் மாறி மாறி குந்தத் தொடங்கிவிட்டன.
அவருக்கு எரிச்சல்தான்…ஆனால் பொறுத்துக் கொண்டார். டெலிபோன் செய்திக்கு அவை அடையாளம் காட்டிக் கொண்டல்லவா இருக்கின்றன.
முள்ளி முருக்கை மரத்தில் பச்சைப்பசேல் என்ற இலைகளை மறைத்துக் கொண்டு செங்கட்டிச் சிவப்பில் பூக்களைத் தாங்கி நிற்கும் அந்த அழகுக் காட்சியிலேயே மனம் லயிக்கின்றது……
மனைவியின் கேள்வியில் மனம் ஒப்பவில்லை. அடுத்த கிழமை மகன், மதில் கட்டச் சொல்வான். இரண்டு மரங்களும் தறிக்கப்பட்டு விடும்.
இன்றைக்கு றியாட்டில் இருந்துவரும் மகன் தான் வந்ததும் முதல் வேலையாக, வேலியை உடைத்து கருங்கல் மதில் கட்டி, தண்ணீர்த் தாங்கி கட்டி, குசினிக்கு மாபிள் பதித்து…. எல்லாவற்றையும் டெலிபோனிலேயே சொல்லி விட்டான்.
“நல்லாக் கேட்டனீங்களா? மகன் மலைக்கு வந்து லோஞ்சால வரு தெண்டு? நேற்று டெலிபோனில நல்லாக் கேட்டனீங்களா?”
அவளுக்குத் தாய்மைத் தவிப்பு, இரண்டு வருடங்களுக்குப் பிறகு-ஒரே மகனைப் பார்க்கும் பரிதவிப்பு….
“நல்லாக் கேட்டாச்சு. மலைக்குத்தான் வாறான். சின்னத்தம்பியின் மகனும் வாறான். ரெண்டு பேரும் வேனில் வாறாங்க. அவரை மலையில் விட்டு விட்டு மகன் லோஞ்சில்தான் வருவான். மதியத்துக்குப் பிறகுதான் இங்க வந்திறங்கு வான். நீ, சோத்தக் கறிய ஆக்கன்”
அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. விராலிக் கீரையை மசித்து. முருங்கைக் காய்ச் சொதியும் வெச்சு, முட்டைக் கோழியொன்றையும் அறுத்து உறைச்ச கறியும் ஆக்கி வெச்சிருக்கிறாள்.
“சின்னத்தம்பியின் மகனும் இங்கே வாறானாமா?…. குஞ்சா கொழந் தையா கண்டது…..”
சின்னத்தம்பி அந்தக் காலத்துச் சினேகிதம். பக்கத்துப் பக்கத்து வயல். வடிச்சல் சேனையில… ஆளுக்கு அஞ்சு ஏக்கர். இருபோகமும் செய்யக்கூடிய காணி….வடி தண்ணியாலதான் கஸ்டம்….. எப்பவும் வயலுக்க தண்ணி வந்த சீர்தான். பயிரைமட்டும் ஏத்திட்டா அப்புறமென்ன?….அவணக் கணக்கில் வெளயும்.
தான் போகாட்டாலும் பரவாயில்ல.இரவோட இரவா வாய்க்கால் கட்டுலேயே படுத்துக்கெடந்து ஆனை வெள்ளாப்புக்கு முந்தி ரெண்டு வயலுக்கும் தண்ணி கட்டிப் போடுவான்…. சின்னத்தம்பிய நெனச்சா இப்பவும் நெஞ்சில விக்கல் எடுத்து, கண்ணீர் கசியும்.
பூச்சி கடிச்சுப் போட்டுது என்டு ஒருநாள் நடுச்சாமத்தில் வண்டி கட்டிக் கொண்டு, இவர் வீட்டுக்குத்தான் வந்தார்கள். வெசக்கல், கறுப்பு வைத்தியம், ஆசுப்பத்திரி எண்டு வைத்தியம் பார்த்தும் ஒரு நள்ளிரவில் இவர் வீட்டிலேயே சின்னத்தம்பி இறந்து போனான். குஞ்சும் குளுவானுமாக ஓர் ஆணும் ஒரு பெண்ணுமாக இரண்டையும் கட்டிக்கொண்டு தாய் அழுதாள். அவளது சொந்தச் சகோதரன்போல சின்னத்தம்பியின் குடும்பத்திற்கு வேண்டிய சகல வசதிகளை யும் செய்து கொடுத்தார்.
87 கலவரங்களால் அந்தக் குடும்பம் இடம்பெயர்ந்து வாழும் நிலைக்குள்ளானது. ஆண் துணையின்றி அவதிப்பட்ட அந்தக் குடும்பத்தை திருகோணமலையில் குடியேற்றி வைத்தார். இரண்டு ஏக்கர் தென்னங் காணியையும் அதோடு ஒட்டிய செங்கல் வீட்டையும் விற்று கிடைத்த பணத்தில் மலையில் பத்து பேர்ச்சஸ் காணியும் வாங்கி சிறிய அளவில் மனையொன்றும் அமைத்துக் கொடுத்தார்.
அதெல்லாம் பழைய கதை….ஆரம்பத்தில் திருகோணமலையில் வாழச் சங்கடப்பட்ட அவர்கள் நாளாவட்டத்தில் அந்தச் சூழலுக்கே பழகி, வசதிகளை பாவித்து படிப்பில் கவனம் செலுத்தி மூத்தவன் எலெக்டிரீசியனாக றியாட்டுக்குப் பயணமாகி, தங்கச்சிக்கு பிரிட்டனில் கல்யாணம் என்று இப்போது பேச்சுக்கால்….. அதற்குத்தான் இப்போது ஊருக்கு வருகிறான்.
“மூதூர் ஜெற்றிக்கு யாருக்காவது டெலிபோன் பண்ணிக் கேளுங்களன் லோஞ்ச் ஜெற்றிக்கு வந்துட்டா என்டு”
மனைவியின் அவசரம். அவருக்கு எரிச்சல் ஊட்டினாலும் அவளது பேதமையை எண்ணி முறுவலித்தார்.
அவள் ஒரு கட்டுப்பெட்டி, மகன் வெளிநாடு போய், வீடு திருத்தி, குசினி கட்டி, எல்லா மின்சாதனங்களும் வீட்டில வந்து புகுந்து கொண்டாலும் இன்று வரை அவள் தொலைபேசியைத் தொட்டதில்லை. பயம்…. கரண்ட பிடித்துக் கொள்ளும் என்று பயம். மகனுடன் ஒரு முறையாவது ‘ பேசு பேசு’ என்று கூறினாலும் பேசமாட்டாள். பக்கத்தில் நின்று பேசுவதைக் கேட்டுக்கொள்வ தோடு சரி. தான் இல்லாத போதும் பகல் முழுக்க டெலிபொன் அடித்தாலும் எடுத்து என்னென்று கேட்க மாட்டாள். இதற்காக அவள்மீது அவர் ஆத்திரம் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.
அவள் கேட்டதிலும் ஒரு கருத்து இருக்கிறது. சின்னத்தம்பியினுடைய பெண்சாதியும் போன கிழமை இங்கு வந்துதான் போனவ. மகளின் கல்யாணப் பேச்சுப்பற்றி சொல்லிட்டுத்தான் போனா. நல்ல இடமாம். தூரத்துச் சொந்தமாம். அவங்களாகத்தான் கேட்டவங்களாம். இந்தியாவில் ரெஜிஸ்டராம். ஆறு மாசத்தில பிரிட்டனுக்கு எடுத்துடுவாங்களாம். அவள் ஒவ்வொன்றாகச் சொல்லச்சொல்ல, சின்னத் தம்பியின் நினைவுகள் வந்து கண்களில் நீர் முட்டியது. வீடும் வளவும். வயலும் என்று ஒரு வட்டத்துக்குள் ஒரு பசுமையாக வாழ்ந்து விட்டுப்போன சின்னத்தம்பியின் மகளுக்கு இந்தியாவில் கல்யாணம். பிரிட்டனில் வாழ்க்கை.
“நீங்களும் இந்தியா வரணும்”
அவருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. மூதூரையும் திருகோணமலையையும் விட்டால் அவருக்கு வேறு எந்த ஊரும் தெரியாது. ‘நான் இந்தியாவுக்கு போவதா?…..பாஸ்போட் எடுத்து, பிளேனில் ஏறி….’
“ஒண்டும் யோசிக்காதீங்க. தம்பி வந்ததும் பாஸ்போட் விசா வேலை யெல்லாம் அவனே முடித்துத் தருவான்.”
“பார்க்கலாம்” என்றார் முடிவெடுக்க முடியாமல்!
“அதோட, வயலையும் விக்கலாமென்டு” சொல்லி முடிக்கு முன்னர் கேவிக்கேவி அழத் தொடங்கிவிட்டாள். பூர்வீகச் சொத்தை விற்பதா? ஏற்கனவே தென்னங் காணியையும் விற்றாச்சு. வயலைப் பார்க்கும் போதெல்லாம் சின்னத்தம்பியைப் பார்ப்பது போல – அந்த நிலையும் கைமாறப் போகிறதா? நெஞ்சில் நெருஞ்சி உரசுவதுபோல…
முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு மேலும் பேச முயன்றாள். குரல் உடைந்திருந்தது.
“மகளுக்கு சீதனமாக குடுக்கத்தான் நெனச்சி இருந்தேன். அவர் இருக்கும் போதெல்லாம் பிஞ்சு மகளின் அஞ்சு விரலையும் எண்ணி, எண்ணி அஞ்சு ஏக்கர் வயல் எண்டு சொல்லி சிரிப்பார். எனக்கு அது கைமாறுவது விருப்பமில்லை.”
இவள் என்ன சொல்ல வருகிறாள்?
“உங்கட மகனும் வெளி நாட்டில இருந்து வாறதெண்டு தம்பி டெலிபோன்ல சொன்னவன். வந்தா திரும்பி போறதில்லையாம்.”
“ஆமா….ஆமா……”
கொண்டுவாற காசில வயல நீங்களே வாங்கிக் கொள்ளுங்க. நீங்களாகப் பாத்து என்ன வெல தந்தாலும் சரிதான். சொத்து நமக்குள்ளேயே கைமாறினதாகப் போகும்.”
அவருக்கு விருப்பமில்லை…. சின்னத்தம்பியும் தானும் சீனட்டியும். பனங்கழியும், பச்சைப் பெருமாளுமா வெதச்சி…. சில்லுத்தாரா காவல் பாத்து கங்களவு தண்ணிகட்டி, குடலை பிரிந்து கதிர்களாகி சிரித்து மலரும்போது கை கோர்த்துக் கொண்டு கதைகள் பேசி….. தங்களுடைய பிள்ளைகளும் தொடர்ந்து கமம் செய்வார்கள் என்ற கனவுகளெல்லாம் சிதைந்து…. இன்று வெளிநாடுகளில் தொழிலுக்காக அலைந்து… அவர்களுடைய புதிய தலைமுறை என்ன செய்வார்கள்?
“மகன் வரட்டும் பேசிப் பார்ப்போம்”
அவரால் முடிவெடுக்க முடியவில்லை. சின்னத்தம்பியின் வயலை தான் விலைக்கு வாங்கிக் கொள்வது என்னவோ போல் இருந்தது. சின்னத்தம்பி உயிருடன் இருந்தால் இதை விரும்புவானா?…. முள்ளி முருங்கையிலிருந்து மைனாக்கள் பறப்பதையே பார்த்தார்.
அதேநேரம் வேறு யாரும் வயலை, விலை கொடுத்து வாங்குவதையும் அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சின்னத்தம்பி இறந்த பிறகும் தானே வயலைச் செய்து வருகிறார். இலாப நட்டம் எல்லாம் பார்ப்பதில்லை. சூடடித்து நெல்லை விற்றதும், வெளியில வழங்கும் ஆயத்தையும், சாப்பாட்டுக்கென்று ஐந்து மூடை நெல்லையும் கொடுத்துவிட்டு வந்து விடுவார்.
‘மகனும் வந்தவுடன் பேசி முடிவெடுப்போம்’ என்று அப்போதைக்கு அந்தச் சிந்தனையை ஒத்தி வைத்தார்.
ஆனாலும் அடுத்த வாரமே சின்னத்தம்பியின் மகன் டெலிபோனில் பிடித்துக் கொண்டான்.
“நீங்கதான் மாமா வயலை எடுங்கோ. இதில யோசிக்க ஒன்றுமில்ல. எங்கட வயல் உங்களுக்கிட்ட இருந்தால் அது எங்களுக்கிட்ட இருக்கிற மாதிரி தான். தங்கச்சியின் ‘வெடிங்’கை முடிச்சிட்டா எனக்கு நிம்மதி ”
அவர் முடிவு ஒன்றும் சொல்லவில்லை.
பின்னர் யோசித்துப் பார்த்ததில் அது சரியென்றுதான் பட்டுது. சின்னத்தம்பியின் வயல் வேறு யாரிடமும் இருப்பதைவிட தங்களிடம் இருப்பதுதான். தான் அந்தக் குடும்பத்திற்கு செய்கின்ற மரியாதையாக இருக்கும் என்று படுகிறது.
மகன் வரட்டும்…. கொண்டு வார காசில வாங்குவம். இனி மகன் வெளிநாடு போறதில்லைதானே…… அஞ்சும் அஞ்சும் பத்து ஏக்கர். மகன் பத்து ஏக்கரையும் இரு போகமும் சீராசெய்து வெட்டினாலே, அவர்ர சீவியம் முழுக்க செல்லாவாத்தியாக் காணும்……
டெலிபோன் அடிக்கத் தொடங்கியது.
“மகன் போலத்தான், என்னென்டு கேளுங்களன்”
மகன்தான்!
“வாப்பா…. நான்தான் திருகோணமலை ஜெற்றியில நிண்டு பேசுறன். சுகமா வந்து சேர்ந்திட்டன். நீங்க, கடைசி லோஞ்சில வெளிக்கிட்டு, மலைக்கு வாறீங்களா?”
“ஏன் ஏன்….வெளிநாட்டில இருந்து வாற நீ நேரா வீட்டுக்கு வந்து இறங்காம, அங்க நிண்டு கொண்டு என்னெக் கூப்பிடுறாய். இங்க உம்மா சோத்தையும் ஆக்கி வெச்சுக்கொண்டு றோட்டைப் பார்த்துக்கொண்டு நிக்கிறா…… சொல்லன். அப்படி என்ன அவசரம்?”
“இங்க மெயின் றோட்ல கடையொன்று விற்பனைக்கு வருது. என்னோட வெளிநாட்டில வேலை செய்தவரோட மாமாட கடை. புடவைக் கடை. பத்து லட்சம் சொல்லுறாங்க. நீங்க மலைக்கு வந்தா இன்டைக்கே உறுதியை எழுதிட்டு வந்திடலாம்”
“அவ்வளவு காசி கொண்டு வந்திருக்கியா?”
“ஆமா, இல்ல வாப்பா ஏழு லட்சம் கொண்டு வந்திருக்கிறன். அதைக் குடுத்து உறுதி எழுதிப் போடலாம். மிச்சக்காசு ஆறு மாதத்தில குடுத்தாப் போதும்”
“ஆறு மாசத்துல மிச்சம் மூன்று லச்சத்தைப் புரட்ட ஏலுமா?….. எங்கால காசு வாறது?”
“ஏன் வாப்பா, நம்மட வயல் அஞ்சு ஏக்கரையும் வித்தா மூணு லட்சம் தேறாதா? வாப்பா….. வாப்பா…..”
அவர் விக்கித்துப் போனார். தொலைபேசி கை நழுவியது. முதுகுத் தண்டில் வியர்வை பெருகி சில்லிட சாய்மானக் கதிரையில் விழுந்தார்.
பார்வை மாத்திரம், முள்ளி முருக்கை மரத்தில் சாத்தியிருந்த அடிகெரியல் பொருத்திய சிகப்பு நிறச் சைக்கிளில் பதிந்திருந்தது.
– மூதூர் பிரதேச செயலகம் சார்பாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது – 2000.
– வரால் மீன்கள் (பரிசு பெற்ற சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2013, வானவில் வெளியீட்டகம், திருக்கோணமலை.
![]() |
பெயர்: எம்.எஸ்.அமானுல்லா பிறப்பிடம்: மூதூர் பிறப்பு: மே 27 1962 படைப்பாற்றல்: இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஆளுர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பிறப்பிடாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு கட்டுரையாளராவார். திறனாய்வு, நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்க இவர் சென்னை புதுக்கல்லூரி நூலகராகவும், பல்வேறு அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். படைப்புகள்: சிறுகதைகள்: வரால்மீன்கள்இருதுளிக் கண்ணீர்கருவேலங்காடுகள் தாண்டி – என்பனஇவரது குறிப்பிடத்தக்க சில சிறுகதைகள். சிறுகதைத் தொகுப்பு: வரால்மீன்கள் -…மேலும் படிக்க... |