தமிழினி





மார்ச் 24ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் திரு.குரு அரவிந்தன் அவர்கள் சிறுகதைகள் தளத்தில் பதிப்பித்த 100வது கதை. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.

அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவரும், தமிழ் இலக்கிய உலகில் புகழ் பெற்றவருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் சாருடைய 100 வது சிறுகதை, சிறுகதைகள். கொம் இணையத்தில் வருவதையிட்டு குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினராகிய நாங்கள் மகிழ்ச்சியுடன் மிகவும் பெருமைப்படுகின்றோம்.
இந்த நாள் (மார்ச் 24) புலம்பெயர்ந்த நாடான கனடாவில் அவரால் எழுதப்பட்ட 100 கதைகளின் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல, அவரது பிறந்த நாளுமாகும் என்பதில் பெரு மகிழ்ச்சி. தமிழகப் பிரபல இதழ்கள் இவரது ஆக்கங்களை வெளியிட்டுக் கௌரவிப்பது போல, சிறுகதைகள்.கொம் இதழும் 100 வது சிறுகதையை வெளியிட்டுக் கௌரவித்ததில் நன்றியுடன் பெருமைப்படுகின்றோம்.
இவர் தான் மட்டும் எழுதவில்லை, கனடாவில் புதிய தலைமுறையைச் சேர்ந்த 40 தமிழ்ப் பெண் எழுத்தாளர்களையும் சிறுகதைப் பயிறிசிப்பட்டறைகள் மூலம் உருவாக்கி அவர்களின் சிறுகதைகளையும் ‘நீங்காத நினைவுகள்’ மற்றும் ‘ஆறாம் நிலத்திணைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கின்றார். வாழ்த்துக்கள்.
சுலோச்சனா அருண், செயலாளர்,
குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.
சீஹல் பறவைகள் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஒன்ராறியோ ஏரிக்கரையில் உட்கார்ந்து, சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு ஏரியில் மிதந்து சென்ற உல்லாசப் பயணிகளின் ஆடம்பர ஓடங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். இந்தப் படகுகள் எல்லாம் சாதாரண படகுகள் அல்ல, ஒவ்வொன்றும் விலையுயர்ந்த ஒரு வீட்டைவிடப் பெறுமதி வாய்ந்தவையாக இருந்தன.
பல்கலாச்சார நாடென்பதால் பல இனமக்களும் குடும்பமாக ஏரிக்கரையில் உலா வந்த வண்ணம் இருந்தார்கள். சிலர் ஏரியில் கால் நனைத்தும், சிலர் குளித்தும் கொண்டிருந்தனர். பிள்ளைகள் இன, மொழி, மத வேறுபாடற்று ஏரிக்கரை மணலில் ஓடி விளையபடிக் கொண்டிருந்தனர். பிறந்த நாட்டிற்கும், புகுந்த நாட்டிற்குமான இடைவெளியை இப்படியான பொது இடங்களில் தெளிவாகவே காணமுடிந்தது.
இந்தப் படகுகளைப் பார்த்த போது மாணவப்பருவத்தில் இலங்கையின் அதிவடக்கே உள்ள காங்கேசந்துறைக் கடற்கரையில் நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடியதும், கம்பீரமாக நிமிர்ந்து நின்று, திசை தெரியாது தடுமாறிய கட்டுமரங்களுக்கு வழிகாட்டிய அந்தக் கலங்கரை விளக்கமும் நினைவில் வந்து போனது.
இலங்கையில் இன, மொழி, மத துவேசம் பேசி அரசியல் செய்ததால், சிறுபான்மை இனத்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள். தொடர்ந்து யுத்தம் என்ற போர்வையில் எங்கள் இனம் அழிக்கப்பட்டதால், இலங்கையில் இருந்து தமிழர்கள் பலர் புலம் பெயர்ந்தார்கள். பாதிக்கப்பட்ட நாங்களும் கனடாவுக்குப் புலம்பெயர வேண்டி வந்தது.
முப்பத்தைந்து வருடங்கள் விரைவாக ஓடிவிட்ட நிலையில் இப்போது, இந்த மண்ணிலும் எங்கள் இனத்தின் வளர்ச்சிக்கு இதுவரை காலமும் முன்னின்று வழிகாட்டியவர்களை ஒவ்வொருவராகக் காலன் அழைக்கத் தொடங்கிவிட்டதன் பாதிப்பைக் கண்முன்னால் காணநேர்ந்த போது மனசு வேதனையில் மூழ்கிப்போனது.
இந்த மண்ணில் எல்லா நாட்களும் இப்படி இருப்பதில்லை. செப்டெம்பர் வந்து விட்டால் குளிர் தொடங்கிவிடும். மார்கழியில் நத்தார் தினத்தோடு பனி கொட்டத் தொடங்கிவிடும். பனிக்கால விளையாட்டுக்கள் என்று அவை தனித்தனியே இருக்கும். சிலருக்குப் பனிக்காலம் பிடிப்பதில்லை, ஆனாலும் நாட்டுக்குத் தேவையான நன்னீரை இந்தப் பனிக்காலம்தான் தீர்த்து வைக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
சித்திரை மாதம் மட்டும் இந்தப் பனிக்குளிர் காலம் தொடரும். வைகாசியில் இலை துளிர்த்து, மரங்கள் செடிகள் கொடிகள் எல்லாம் பூத்துக் குலுங்கும். உறங்குநிலையில் இருந்த பறவைகள் மிருகங்கள் வெளியே வந்து மீண்டும் இந்த உலகத்தைப் பார்க்கும். இந்த மண்ணில் இயற்கை எல்லாவற்றையும் அளந்தளந்து வைத்திருப்பதால் மனித இனமும் இதையெல்லாம் தாங்கிக் கொண்டு மெல்ல மெல்ல அதற்கேற்ப வாழப் பழகிக் கொண்டுவிட்டது.
நான் ஒரு எழுத்தாளன் என்பதால், நாங்கள் புலம்பெயர்ந்த இந்தப் பனிசூழ்ந்த நிலத்தைப் ‘பனிப்புலம்’ என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஏற்கனவே சங்ககாலத்தில் தமிழர் வாழ்ந்த ஐவகை நிலங்களை நெய்தல், மருதம், முல்லை குறிஞ்சி, பாலை என்றும் பாகுபடுத்தி இருந்ததால், இந்தப் புதிய நிலத்தைப் பனியும் பனிசூழ்ந்த நிலமாக ‘ஆறாம் நிலத்திணை’ என்று விவரமாகக் கட்டுரை எழுதியிருந்தபோது பல இலக்கிய ஆர்வலர்கள் பாராட்டியிருந்தார்கள்.
‘குவாக், குவாக்’ சத்தம் கேட்டு வானத்தைப் பார்த்தேன். ஈட்டி முனை வடிவில் அழகாக ஒன்றின் பின் ஒன்றாகப் பறந்து வந்த வாத்துக் கூட்மொன்று ஏரிக்கரையில் தரை இறங்கியது. எனக்கருகே வந்து இறங்கிய அந்த வாத்துக்கள் தங்கள் மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டு கரையிலே இரை தேடத் தொடங்கின.
இதுபோலப் புரியாத மொழிகள் பல இங்கே உண்டு என்றாலும் யாரும் மொழியைச் சொல்லிப் பாரபட்சம் காட்டுவதில்லை. நாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணிலே இரண்டு மொழிகள் மட்டும்தான் பேசப்பட்டன. பாரபட்சமின்றி மொழியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்திருந்தால் நாங்கள் இத்தனை அனர்த்தங்களையும் எதிர் கொள்ள வேண்டி வந்திருக்காது. காலம் காத்திருந்து சதி செய்துவிட, விதி எங்கள் வாழ்க்கையோடு விளையாடிவிட்டது. அதன் பலனாக இன்று புலம் பெயர்ந்தவர்களாக, சொந்த மண்ணை மட்டுமல்ல, இனசனங்களையும் பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றோம்.
நாங்கள் புலம்பெயர்ந்த புதிய மண்ணை மட்டுமல்ல, இங்குள்ள காலநிலை மாற்றங்களையும் அனுசரித்துச் செல்ல வேண்டியிருந்தது. பிரிவுத் துயர் ஒருபக்கம் இருந்தாலும், அந்த இழப்பிலும் சில நன்மைகளும் எங்களுக்குக் கிடைக்காமல் இல்லை.
சுமார் 35 வருடங்களுக்கு முன், இந்த மண்ணில் காலடி வைத்த புதிதில் இதே இடத்தில் சிறுமியாக இருந்த எனது மகள் நிலானி வானத்தில் பறந்த ஹெலியின் சத்தத்தைக் கேட்டுப் பயந்து ஓடி ஒளிந்தது ஞாபகத்தில் வந்தது. நானும் அவளுக்குப் பின்னால் ஓடினேன்.
‘இது நீ பிறந்த மண்ணல்ல, புகுந்த மண். இந்த மண்ணில் ஹெலியைக் கண்டு பயந்து ஒளியவேண்டிய அவசியமும் இல்லை’ என்று சொல்லி அவளை ஆசுவாசப் படுத்திய ஞாபகம் மீண்டும் வந்தது.
இலங்கையில் நடந்த யுத்தம் எங்கள் இளமைக் கனவுகளைத் தின்றுவிட்டதை ஒவ்வொரு செய்கையிலும் காணமுடிந்தது. காலம் எவ்வளவு விரைவாக ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் மறந்து போனாலும், பிள்ளைகளின் வளர்ச்சியைப் பார்க்கும் போதுதான் காலவோட்டம் அடிக்கடி நினைவிற்கு வந்து விடுகின்றது.
இந்த மண்ணில் காலூன்ற வேண்டும் என்ற பரபரப்பில் நிலானியின் படிப்பில் அதிக கவனம் செலுத்தினோம். பணம்தான் எதையும் முடிவெடுத்ததால், இரவுபகல் பாராது நானும் மனைவியும் வேலைக்குச் சென்றோம். வேலை, வீடு, படிப்பு என்று காலம் ஓடியது. ஊரிலே எல்லாவற்றிற்கும் தகப்பனின் பெயரைத்தான் பாரத்தில் நிரப்ப வேண்டும். இங்கே சில முக்கியமான தேவைகளுக்குத் தாயின் பெயரை முதன்மைப்படுத்தி நிரப்ப வேண்டியிருந்தது. பல்கலாச்சார நாட்டில் இதற்கும் வெளியே சொல்ல முடியாத ஒரு காரணம் இருந்தது.
கல்வி ஒன்றுதான் தமிழருக்குக் கிடைத்த அரிய செல்வம் என்பதால், நிலானி இந்த மண்ணின் சூழலுக்கு ஏற்ப தன்னைப் பழக்கிக் கொண்டு நன்றாகப் படித்து வைத்திய கலாநிதியானாள். தனக்குப் பிடித்தமான வைத்தியகலாநிதி ஒருவரையே எங்களின் விருப்பத்துடன் திருமணமும் செய்து கொண்டாள். எங்கள் லட்சியம் நிறைவேறியதில் மகிழ்ந்த போதுதான், எதையோ தொலைத்து விட்ட உண்மை தெரியவந்தது. எந்த மொழியைக் காப்பதற்காகப் போராடினோமோ, எதற்காகப் புலம் பெயர்ந்து இந்த மண்ணுக்கு வந்தோமோ, அந்த தாய்மொழியை நிலானி மறந்து போயிருந்தாள்.
தாய் மொழியா அல்லது எதிர்காலமா முக்கியம் என்று பார்த்தபோது, எதிர்காலம்தான் கண்ணுக்குள் நின்றது. இந்த நாட்டில் நன்றாக நிலைத்து இருக்க வேண்டுமானால், எதிர்காலம் முக்கியமாகப் பட்டது. பொருளாதார ரீதியாக எங்களைப் பலப்படுத்திக் கொண்டால்தான் நினைத்ததைச் செய்து முடிக்க முடியும். அதனால் நிலானியின் படிப்பில் அதிக கவனம் செலுத்தியதால், தாய் மொழியைப் புறக்கணிக்க வேண்டி வந்தது. அதற்கான குற்ற உணர்வு என்னையும் என் மனைவியையும் தினமும் வாட்டி வதைத்தது. ஆனாலும் நீண்டகால நன்மை கருதி இதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம்.
சில வருடங்களுக்கு முன் தைப்பொங்கல் தினத்தன்று ஊரிலே இருந்த அப்பம்மாவுடன் கதைக்க வேண்டும் என்று என் மகள் ஆசைப்பட்டாள். ஸ்கைப்பில் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். ‘அப்பம்மா எப்படி இருக்கிறீங்க, தைப்பொங்கல் வாழ்த்துக்கள்’ என்றாள் ஆங்கிலத்தில் நிலானி. நிலானிக்கு ஓரளவு தமிழ் விளங்கினாலும், அவளது சிநேகிதிகள் ஆங்கிலம் கதைத்ததால், தமிழில் கதைப்பதற்கு வெட்கப்பட்டாள். அதனால் அவளது உரையாடல் ஆங்கிலத்திலேயே இடம் பெற்றது.
‘நல்லாயிருக்கிறேன். தைப்பொங்கல் கொண்டாடினீங்களா? பொங்கினீங்களா, சாப்பிட்டீங்களா’ என்ற எனது அம்மாவின் குரல் மறுபக்கம் தமிழில் கேட்டது.
‘கோயிலுக்குப் போய் வந்து பொங்கல் சாப்பிட்டேன்’ என்றாள் ஆங்கிலத்தில் நிலானி.
‘யார் கோலம் போட்டது, நீயும் அம்மாவிற்கு உதவி செய்தாயா?’
‘கோலமா?’ ஒருகணம் தயங்கி என்னைப் பார்த்தாள். நான் சைகையால் விளக்கம் தந்தேன்.
‘இல்லை அப்பம்மா, இங்கே பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. ஊரிலே பொங்குவது போல இங்கே முற்றத்தில் எல்லாம் பொங்க முடியாது.’
‘ஏனம்மா, உங்க வீட்டிற்கு முற்றம் இல்லையா?’
‘நிலமெல்லாம் பனியாய் இருக்கு, குளிர் காற்று வேறு வீசிக் கொண்டிருக்கு எப்படி வெளியே பொங்குவது?’
‘அதுவும் சரிதான், உன்னோட செல்லக் குரலைக் கேட்கவே எனக்கு ஆசையாய் இருக்கு, தமிழில் நீயும் பேசினால் எனக்கு எவ்வளவு பெருமையாய் இருக்கும்?’
‘இல்லை அப்பம்மா, இவ்வளவு நாளும் படிப்பிலே கவனம் செலுத்தியதாலே தமிழைப் புறக்கணித்துவிட்டேன், இது என்னுடைய தப்புத்தான்.’
‘என்னமோ எங்களை மட்டுமல்ல, எங்கே போனாலும் உன்னுடைய தாய் மொழியாம் தமிழையும் மறந்திடாதயம்மா’
இப்படித்தான் அப்பம்மாவிற்கும் நிலானிக்குமான உறவு ஸ்கைப் மூலம் ஆரம்பமானது. நிலானியின் வளர்ச்சியில் அவ்வப்போது தாயகத்தில் இருந்த அப்பம்மாவின் ஆளுமை தெரிந்தது.
எங்க அம்மா ஒரு தமிழ் ஆசிரியையாக இருந்ததால் மொழி மீதும், மண்மீதும் பற்று இருந்தது. நாங்கள் புலம் பெயர்ந்து வந்ததால், அம்மா ஊரிலே தனித்துப் போயிருந்தாள். யுத்தத்தின் உச்சக்கட்ட நேரத்தில் ஒருநாள் அம்மா இறந்து போய்விட்டாள். பிறந்த மண்ணைவிட்டு வரமாட்டேன் என்ற அம்மாவின் பிடிவாதம் காரணமாக அநாதைப் பிணமாய் அம்மாவின் கடைசி யாத்திரை அமைந்தது.
புலம் பெயர்ந்த தமிழர்களின் விடா முயற்சியால், தை மாதத்தை தமிழர்களின் மரபுத் திங்கள் மாதமாக கனடிய அரசு அறிவித்திருந்தது தமிழ் இனத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது. கனடிய அரசியலில் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் பெற்றதால் இது சாத்தியமாயிற்று. ஒற்றுமையாக எம்மினம் இந்த மண்ணில் வாழப் பழகிக் கொண்டால் புகுந்த மண்ணில் எங்கள் தமிழ் மொழி நிலைத்து நீடித்து நிற்க்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்பது போல அடுத்த தலைமுறையினரின் தமிழ் ஆர்வம் இருந்தது.
மொழி அழிந்தால் நம் இனமும் அழிந்துவிடும் என்பதைப் பலர் தற்போது உணர்ந்து செயற்படுவது மகிழ்ச்சியாக இருந்தது. புலம் பெயர்ந்த இந்த மண்ணில் இன்று தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதைக் காணும்போது பெருமையாகவும் இருக்கிறது. எல்லா இனங்களிலும் இருப்பது போல இங்கேயும் ஒருசிலர் சுயநலம் கருதிக் குறுக்குவழியில் செல்லத்தான் நினைக்கிறார்கள். காலம்தான் இவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
காலவோட்டத்தில் திருமணமாகிய நிலானிக்கு இன்று ஆறு வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். தமிழினி என்று அழகான பெயர் வைத்திருக்கிறாள். வார இறுதிநாட்களில் நேரம் இருக்கும் போதெல்லாம் தமிழினி எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுடன் பொழுது போக்குவாள்.
அன்று சனிக்கிழமை மகளின் வீட்டிற்குக் காலையில் எழுந்து சென்றிருந்தோம். ‘வாங்கோ அப்பா’ என்று மகள் வரவேற்றாள். தமிழினி ஓடி வந்து ‘வணக்கம் தாத்தா’ என்று அணைத்துக் கொண்டவள், ‘சாப்பிட்டீங்களா தாத்தா?’ என்று தமிழில் கேட்டாள்.
மழலைத் தமிழ் பேசும் அவளை நான் ஆச்சரியமாய் பார்த்தேன்
‘அம்மா சாப்பாடு செய்து வைத்திருக்கிறேன், அப்பாவிற்கும் போட்டுச் சாப்பிடுங்கோ, நான் வெளியே போயிட்டு வாறேன்’ என்று சொன்னவள் உள்ளே திரும்பி ‘தமிழினி போயிட்டு வருவோமா?’ என்றாள்.
‘எங்கேயம்மா காலையில இரண்டுபேரும் போறீங்க?’
‘பள்ளிக்கூடத்திற்கு அப்பா!’
‘போயிட்டு வாறேன் தாத்தா’ என்றாள் தமிழினி.
‘பள்ளிகூடமா, இன்று சனிக்கிழமையல்லவா?’
‘ஆமாப்பா, சனிக்கிழமைகளில் தமிழினிக்கு தமிழ் வகுப்பு இருக்கு, அதற்குத்தான் கூட்டிச் செல்கிறேன்’ என்றாள்.
என் கண்கள் நிலானியைப் பார்த்து ஆச்சரியமாய் விரிந்தன. நான் விட்ட தவற்றை நிலானி நிவர்த்தி செய்கிறாளா? நிலானி போன்ற தாய்மார்கள் இருக்கும்வரை நிச்சயமாய் இந்த மண்ணில் தமிழ் மொழி உயிர்ப்புடன் இருக்கும் என்றே தோன்றியது.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழாய் இந்த மண்ணில் தொடரும் என்பதற்கான வெளிச்சம் ஒவ்வொரு தமிழரின் வீட்டிலும் விரைவில் தெரியும் என்ற நம்பிக்கை மனதில் துளிர்த்தது. எங்கள் தமிழ் இனம் புலம்பெயர்ந்த இந்த மண்ணில் தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
புதிய தலைமுறையைத் தமிழ் தெரியாமல் வளர்த்து விட்டோமோ என்ற மனச்சுமை நீங்கியதில் பெரியதொரு ஆறுதலாக இருந்தது. மொழி வாழ்ந்தால் இனம் வாழும்!