தனிமைத்தாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2025
பார்வையிட்டோர்: 364 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்வத்திற்கு தன் பிள்ளைகள் மீது அளவுகடந்த விருப்பம். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தால் உலகையே மறந்துவிடுவான். அதில் அத்தனை ஈடுபாடு அவனுக்கு. 

அச்சப்பாப்பாதான் செல்வத்தின் செல்ல மகள். “அச்சாப்புள்ள தானே என்று கூறிக்கூறியே அவளை வழிநடத்தியதன் விளைவு அவளது பெயரே அச்சப்பாப்பாவாகிப்போனது. அச்சப்பாப்பாவிற்கு அப்பாவின் தொடையில் அமர்ந்து ஆடிக்கொண்டிருப்பதில் அலாதி விருப்பம். செல்வமும், மகள் விரும்பும் போதெல்லாம் தன் தொடையில் அமர்த்திக்கொண்டு வாயில் டியூன் போட்டபடி அவளை ஆடவைப்பான். அப்படி ஆடிக்கொண்டே செல்வத்தின் மார்பில் கருகருவென படர்ந்திருக்கும் முடியைப்பிடித்திழுப்பதில் அவளுக்கு அப்படியொரு ஆர்வம். மகன் துரைராசுவுக்கு இந்த விளையாட்டுப் பிடிக்காது. அவன் எப்பொழுதும் உப்பு ஏறி விளையாடவே துடித்துக்கொண்டிருப்பான். லீவு நாட்களில் செல்வத்தை ஒரு வழி பண்ணிவிடுவான். சில நேரம் செல்வத்திற்கு முட்டியில் இரத்தம் கூட வந்துவிடும். ஆனாலும் துரைராசு பிடிவாதக்காரன். தன் ஆசை தீருமட்டும் உப்பு ஏறி விளையாடுவான். 

பிள்ளைகள் இருவரும் எப்போதாவதுதான் சண்டை பிடித்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் சண்டையை விலக்குவதை விட அதை பார்த்து ரசிப்பதில்தான் செல்வத்திற்கு சுவை அதிகமாயிருக்கும். 

“நான்தான் அப்பாகிட்ட படுப்பேன்” 

அச்சப்பாப்பா செல்வத்தை இறுக்க கட்டிக்கொள்வாள். 

“என் பக்கம்தான் அப்பா” 

துரைராசு பலம்கொண்ட மட்டும் செல்வத்தை தன்பக்கம் இழுப்பான். 

“போடா லூசு” 

“நீதாண்டி லூசு” 

‘வாய மூடு” 

”நீ வாய மூடு” 

சண்டை தொடர்ந்துகொண்டே போகும். இறுதியில் செல்வம் மல்லாக்கப்படுத்து, இருவரையும் அணைத்துக்கொள்வான். 

ஒருநாள் அச்சப்பாப்பா அழுதுகொண்டே கேட்டாள். 

“அப்பா நான்தான் அம்மாவ முழுங்கிட்டேனா…?” 

அவள் கேட்டதில் உண்மை இல்லாமலில்லை. அச்சப்பாப்பவது ஜாதக பலன்தான் தாயை எடுத்துக் கொண்டதாய் ஜோசியர் கூறியிருந்தார். இது எப்படியோ பக்கத்து வீட்டு சாரதாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். அவள்தான் சின்னப்பிள்ளையென்றும் பாராமல் வெடுக்கென்று பேசிவிடுவாள். 

“அப்படி இல்லடா கண்ணு… அம்மா சாமிக்கிட்ட போயிட்டாங்க.” என்று செல்வம் மகளை சமாதானப்படுத்தி விடுவான். 

தன்னை மறுமணம் செய்யும்படி எத்தனையோபேர் வலியுறுத்தியும் செல்வம் பிடிவாதமாக மறுத்துவிட்டான். ஒருவேளை அதற்கு இணங்கியிருந்தால் தற்போதைய இந்த தனிமையை தவிர்த்திருக்கலாமோ என்றுகூட செல்வத்திற்கு தோன்றியது. 

எண்ணி இருபத்தைந்து வருடங்கள் தான் ஆகிறது. அதற்குள் எத்தனையெத்தனை மாற்றங்கள்… செல்வத்திற்கு மலைப்பாய் கூட இருந்தது. மெதுவாய் எழுந்து தன் மூக்குக் கண்ணாடியை போட்டுக்கொண்டான்.

அன்பின் அப்பா, 

உடம்பை பார்த்துக் கொள்ளவும். முடியும்போது வந்து பார்க்கிறேன். 

இப்படிக்கு, அச்சப்பாப்பா. 

என்று இரண்டே வரியில் முடிந்திருந்த கடிதத்தை எட்டாவது முறையாகவும் படித்துப் பார்த்தான். 

அப்பாவா…? தொழிலா…? என்ற பிரச்சினை வந்தபோது தொழில்தான் என்று முடிவெடுத்து, தூரதேசம்போன துரைராசுவிலும் தப்பிருப்பதாய் செல்வத்திற்குத் தோன்றவில்லை. மகளையாவது பக்கத்திலேயே கட்டிக்கொடுத்திருக்கலாமென்றால், எங்கே! இந்தக்காலத்து பிள்ளைகள் ரொம்பவும் முன்னேறிட்டாங்க. துணையை தானே தெரிவுசெய்திட்டு கடைசியாதான் அறிவிக்கிறாங்க. 

அச்சப்பாப்பாவும் அப்படித்தான் செய்தாள். அவளுக்கு கெட்டித்தனம் கொஞ்சம் அதிகம்தான். நாசூக்கா தன் காதலை தெரிவித்து ஜெயித்தும் விட்டாள். 

“அப்பா நான் சொல்றதை கேட்டு கோபப்படக் கூடாது…” என்று மெதுவாய் ஆரம்பித்தாள். 

“என்ன பீடிகை பலமாயிருக்கு..” என்றபடியே செல்வம் அவள் தலையை தடவிக்கொடுக்கவும், அச்சப்பாப்பாவிற்கு ஒரே உற்சாகம். 

செல்வம் சந்தோசமாய் இருக்கும் போதுதான் தலையை தடவிக்கொடுப்பான். அதுதான் சரியான சமயமென்று அவளுக்கு தோன்றியிருக்க வேண்டும். 

“நான் ஒருத்தரை லவ் பண்ணுறேன்’ 

படாரென விசயத்தைக் கொட்டிவிட்டாள். 

“உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி நான் கட்டாயப்படுத்த மாட்டன். பட் தேடிப்பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். என் செல்ல அப்பாதானே!” 

செல்வம் திணறிப்போனான். எனக்கு இந்த சாமர்த்தியம் இருக்கவில்லையே. இருந்திருந்தால்… தன்னை மறைமுகமாகக் காதலித்த யோகவதியை ஒரு கணம் நினைத்துக் கொண்டான். 

ஆசைமகளாயிற்றே. மறுக்க முடியவில்லை. விசாரித்துப் பார்த்ததில் பையன் நல்லவன் தானாம். கைநிறைய சம்பாதிக்கிறானாம். ஆனால் என்ன… கூடிய சீக்கிரம் வெளிநாடு போவதற்கு ஐடியாவாம். அதுதான் கொஞ்சம் உறுத்தியது. இருந்தாலும் மகளின் விருப்பமே தனக்கும் சந்தோசம் என்பதால், தடபுடலாய் ஏற்பாடாகி எல்லாம் முடிந்து ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்டாள். ஒரு குழந்தைக்கே குழந்தையா என செல்வம் அடிக்கடி பிரமிப்பதுண்டு. செல்வத்தை பொறுத்தவரை அச்சப்பாப்பா இன்னுமே குழந்தைதான். ஆனால் இப்பொழுதெல்லாம் தன் தொடையில் ஏறியமர்ந்து ஆடுவதற்கு அவள் விருப்பப்படுவதில்லை. 

தனிமை செல்வத்தை கொஞ்சம் கொஞ்சமாய் தின்றுகொண்டிருந்தது. பூக் கன்றுகள் வளர்க்கலாமென்றால், தண்ணீர் கொண்டுவர ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். நாய் வளர்ப்பதில் செல்வத்திற்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. 

தனியே ஏதேதோ பிதற்றத் தொடங்கினான். மகளின் வரவு நாளாக ஆக நம்பிக்கையற்றுப் போனது. துரைராசுவிடமிருந்து மாதாமதம் பணம் மட்டும் வந்துகொண்டிருந்தது. செல்வத்திற்கு ஒவ்வொரு நாளையும் கடத்துவதே பெரும் பாடாகி போயிற்று. பசி, தூக்கம் எல்லாம் மறந்து கடந்த காலத்திற்குள்ளேயே மூழ்கிக்கிடப்பதால் ஒரு இன்பம் இருப்பதாய் அவனுக்கு தோன்றியது. 

திண்ணை முக்கில் சாய்ந்தபடி வாசலையே பார்த்துக்கொண்டிப்பான். அக்கம்பக்கத்து சிறுசுகள் “கிறுக்குத்தாத்தா… கிறுக்குத்தாத்தா…” என கூப்பிட்டுவிட்டு ஒளிந்துகொள்ளுவார்கள். 

கிறுக்கு தாத்தா என்றால் செல்வத்திற்கு கோபம் வரும். கையில் உள்ள தடியை திருப்பிக்கொண்டு அடிப்பதற்காய் பின்னாலேயே ஓடுவான். அது அந்த குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டாய் போய்விடும். இறுதியில் செல்வம் களைத்துப்போய் வீட்டைப்பூட்டிக்கொண்டு உள்ளே போய்விடுவான். ஆனால் இப்பொழுதெல்லாம் எத்தனை முறை கிறுக்குத்தாத்தா என்றாலும் செல்வத்திற்கு கோபமே வருவதில்லை. அவன் கனவிலேயே வாழப் பழகியிருந்தான். தனியாக யாரையோ திட்டுவான். அடிக்கடி சிரிப்பான். தனக்குத்தானே பேசிப்கொள்வான். 

ஒரு நாள் முட்டி தேயத்தேய நான்கு முறை உப்பு விளையாடுவதற்காய் வீட்டை சுற்றிவிட்டான். 

“கழுத்தை இறுக்காதடா…அப்பாவுக்கு வலிக்குது.” 

”ஐயய்யோ கிறுக்குத்தாத்தா தனியா பேசிட்டு வெளையாடுது. கிறுக்கு முத்திப் போச்சி… கிறுக்கு முத்திப் போச்சி…” 

யாரோ ஒரு வாண்டு கத்திக்கொண்டே ஓடுவது செல்வத்திற்கு நன்றாக கேட்டது. அந்த வாண்டுப்பையனை துரத்தி ரெண்டு அடி கொடுத் திருக்கலாம்தான். விளையாட்டை நிறுத்தினால் துரைராசுவிற்கு கோபம் வருமாகையால், பேசாது இருந்துவிட்டான். 

லேசாய் இருட்டத் தொடங்கியது. அச்சப்பாப்பாவிற்கு தூக்கம் வந்துவிடுமென்பதால் சீக்கிரமே படுக்கைக்கு போனான் செல்வம். இருபக்கமும் இரு தலையணைகளை எடுத்து அணைத்துக்கொண்டான். 

“நான் தான் அப்பாகிட்ட” 

“ம்ஹும்… அப்பாவ நான் விடமாட்டன். என்கூடத்தான் அப்பா.” 

“போடா லூசு” 

“போடி மக்கு” 

“ஒதைப்பேன்” 

“ஒதைச்சர் கடிப்பேன்” 

எங்கோ தூரத்தில் பிள்ளைகளின் சண்டை சத்தம்… காற்றோடு காற்றாய் குறைந்துக்கொண்டே போகிறது. சண்டையை விலக்க விருப்பமற்றவனாய், கேட்டுக்கொண்டே தலையணைகளை அணைத்துக்கொள்கிறான் செல்வம். 

– பீலிக்கரை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 2007, ஞானம் பதிப்பகம்,கொழும்பு.

பிரமிளா பிரதீபன் பிரமிளா பிரதீபன் (எ) பிரமிளா செல்வராஜா (26 மார்ச் 1984) இலங்கையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். தென்னிலங்கையில் ஆங்கில ஆசிரியராகவும், பட்டப்பின் கல்வி (பட்டயம்) கற்கைநெறியின் நிலைய இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். பிரமிளா பிரதீபன் (எ) பிரேமிளா செல்வராஜா (1984.03.26) பதுளை, ஊவாகட்டவளை ஹாலிஎலயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராஜா; தாய் சிவகாமி. ஆரம்ப கல்வியை ஊவாகட்டவளைத் தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலை கல்வியை பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *