கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 1, 2026
பார்வையிட்டோர்: 460 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று இரவு
நாங்கள் பயணம்.
எங்கடைதாயகத்துக்கு
நாங்கள் பயணம்.
நாங்கள் பிறந்த மண்ணுக்கு
நாங்கள் போறம்.
அவள் பிறந்து வளர்ந்த
கிராமத்து எழில்
காட்சிகள்
அவளது மனக் கண் முன்
நிழலாட்டம்.
கிராமத்தின் கிழக்குப் பக்கமாய்
பச்சைப் பசேலென்ற
நெல் வயல்கள்.
நெல் வயல்களை அண்டி
விரிந்து பரந்த புல்வெளி.
புல்வெளியின்
அடிவயிற்றில்
நீலக் கோடாய்
அமைதியாய் தூங்கும்
உப்பாறு.
ஊரின் மேற்குப் புறமாய்
செழிப்பான
வாழைத் தோட்டங்கள்.
காய்கறித் தோட்டங்கள்.
புகையிலை, வெங்காயம்,
உருளைக்கிழங்கு
காசுப் பயிர்த் தோட்டங்கள்.
ஊரின் மார்பில்
அவளது வீடு.
வீட்டின் முற்றத்தில்
சடைத்து வளர்ந்த
வேப்பமரம்.
வேப்பம் கொப்பில்
அயல் வீடுகளிலுள்ள
அவளையொத்த
சிறுவர் சிறுமிகளுடன்
உல்லாசமாய்
ஊஞ்சல் ஆடியது
எல்லாக் காட்சிகளும்
அவளது கண்முன்
விரிந்து படர்ந்து
நிழலாட்டம்.
அவளது இதயத்தில்
நினைவுகள் சுமை.
கண்களில் கண்ணீர்.
‘எங்கடை ஊருக்கு
எப்போ நாங்கள்
போய்ச் சேரப்போறம்
என்ற தவிப்பு
அவளுக்கு.
போதும் இந்த
புலம் பெயர் வாழ்வு.
வாழ்வா?
இது அர்த்தமற்ற வாழ்வு.
நரக வாழ்வு.
இந்த நாட்டைப் பற்றி
நான் கூறவில்லை.
இந்த நாட்டின்
மக்களைப் பற்றி
நான் கூறவில்லை.
எல்லாம் எங்கடை
மக்களைப் பற்றித்தான்.
இல்லையில்லை.
எங்கடை மக்களைப் பற்றி
அல்ல.
நான் கூறுவதெல்லாம்
உன்னைப் பற்றி
உன்ரை குடும்பத்தைப்
பற்றித்தான்.
நான் இப்போ
கூறப்போறதெல்லாம்
தெட்டத்தெளிவாய்
கூறுகின்றேன்.
வெட்ட வெளிச்சமாய்
கூறுகின்றேன்.
எதுவித தயக்கமுமின்றி
நான் கூறுகின்றேன்.
அற நனைஞ்சவளுக்கு
குளிரென்ன கூதலென்ன?
அவளது நெற்றிச்சுழிப்பு.
அவள்
தீக்கண் பார்வை
அவனது நெஞ்சை
ஊடுருவிப் பாய்ச்சல்.
அவளது விழிகளில்
அசாதாரண ஒளிப் பிரவாகம்.
அவனுக்கு ஒரே குழப்பம்
அவள் மௌனித்திருப்பு
ஆறு வரியங்களாய்
நான்
உன்னோடை
வாழ்ந்த வாழ்க்கை பற்றித்தான்
நான் இப்ப சொல்லிறன்.
வாழ்வா?
அது நரக வாழ்க்கை
நீ?
சீ!
நீ ஒரு மனிசனா?
நீ மனிசனுமில்லை
நீ மிருகமுமில்லை.
நீ
அசிங்கமான
அருவருக்கத்தக்க
ஒரு மண் புழு.
அவன் ஏதோ சொல்ல முனைப்பு.
நீ வாய் திறவாதை.
அவள் உறுதியாய் தடுப்பு.
நான்தான் பேசுவன்.
நீ கேட்டுக் கொண்டிரு.
இண்டைக்கு நீ கேட்காவிட்டால்
இனி நீ ஒரு நாளும்
என்ரை பேச்சைக்
கேட்கமுடியாது.
ஆறு வரியங்களாய்
நீ அட்டகாசமாய்
அகங்காரத்தோடை பேசினாய்.
நான் பேசாமல்
வாய் பொத்திக் கொண்டிருந்தன்.
இப்போ
நான் பேசுகின்றேன்.
நீ பேசாமல் கேட்டுக் கொண்டிரு.
நீ கேட்கத்தான் வேண்டும்.
ஆறு வரியங்களுக்கு முன் உன்னோடை
நான் இஞ்சை வந்தன்.
நீ என்ன செய்தாய்?
நான் சும்மாவா வந்தன்?
நான் வெறுங்கையோடையா
உன்னட்டை வந்தன்?
நாலு வரியங்களாய்
நான் லண்டனிலை
உழைச்சு சேமிச்ச
பணத்தோடை வந்தன்.
அதுமட்டுமா?
என்ரை அம்மாவும் அப்பாவும்
எனக்குத் தந்த
வீடு வளவு நல்லூரில்.
அதோடை
நாப்பது லட்சம் காசு.
ஏனென்றால்
நீ கனடாமாப்பிளையல்லே.
அதுதான் உன்ரை
அம்மாவும் அப்பாவும்
கேட்டு வாங்கின சீதனம்.
எங்கடை பணத்திலைதான்
நீ கனடாவிலை
வீடு வாங்கினாய்.
அதுவும் உன்ரை பேரிலைதான்
வாங்கினாய் நீ. அம்மாவும் அப்பாவும்
ஆசிரியர்கள்.
அவை கடுமையாய் உழைச்சு
சிக்கனமாய் வாழ்ந்து
பணத்தைச் சேமிச்சு
அக்காமார் இரண்டு பேருக்கும்
இரண்டு வீடுகள்
கட்டிக் குடுத்தினை.
நல்லூரிலையுள்ள வீட்டை
எனக்குத் தந்தினை.
என்ரை அண்ணன்மார்
இரண்டுபேரும்
கனடாவிலைதான்.
இரண்டு அண்ணன் மாருக்கும்
கனடாவிலை சொந்த வீடுகள்.
அவளுக்கு பெருமிதம்.
உன்ரை ஆக்களுக்கு?
உன்ரை மூண்டு அக்காமாரும்
இரண்டு அண்ணாமாரும்
ஏழெட்டு வரியங்களாய்
கனடாவிலை தான்.
ஆனால்
ஒருவருக்குத்தானும்
கனடாவிலை
சொந்தமாய் வீடில்லை.
அவர்கள் கனடாவுக்கு
வந்த நாளையிலையிருந்து
இண்டு வரையும்
வாடகை வீடுகளிலைதான்
இருந்த வைனை.
ஏன் உங்கடை
அப்பாவும் அம்மாவும்
நாப்பது வரியங்களாய்
கொழும்பிலை
வாடகை வீடுகளிலைதான்
வாழ்ந்து வருகினை.
ஏன், உங்கடை
சொந்த ஊரிலைகூட
உங்களுக்கு
சொந்த வீடில்லை.
குறவர்கூட
தாங்கள் தற்காலிகமாய்
அமைத்த
சொந்தக் குடிசைகளிலை தான்
வாழ்ந்து வருகின்றார்கள்.
அவர்கள் அதிலை
பெருமைப்படுகிறார்கள்.
ஆனால் நீங்கள்
எங்கு வாழ்ந்தாலும்
உங்களுக்கு அந்த
மண்ணோடை
ஒட்டாத வாழ்க்கை.
அது மாத்திரமே?
உங்களுக்கு
சொந்த ஊரிலோ
கொழும்பிலோ அல்லது
கனடாவிலோ
எவருடனுமே
ஒட்டுமில்லை,
உறவுமில்லை.
நண்பர்கள் கூட
எவருமில்லை.
உங்களுக்கு
பட்டம்,பதவி
பணமிருந்தால் போதும்
அதுதான் உங்கடை
வாழ்க்கையின்லட்சியம்
உன்ரை
அக்காமாரதும் அண்ணன்மாரதும்
குடும்பங்களாவது
பற்றுப் பாசத்தோடை
ஒட்டுறவாய் வாழ்கின்றனவா?
ஆனால்
உங்கடை
‘பேர்த்டே பார்ட்டியளிலை ‘தான்
நீங்கள் எல்லாரும்
ஒண்டு கூடுவியள்.
அதன் பிறகு?
நீ ஆரோ நான் ஆரோ
எண்ட வாழ்க்கை.
உங்கடை வாழ்க்கை
ஆங்கிலம் மட்டும் தான்
நீங்கள் எல்லாரும்
பேசிற மொழி.
ஆங்கிலம் தான்
உங்கள் மூச்சு.
நீங்கள் எல்லாரும்
வெள்ளைக்காரர்
எண்ட நினைப்பு உங்களுக்கு.
உங்கடை
அம்மாவும் அப்பாவும்
உங்களோடை ஒண்டாய்
சேர்ந்து வாழ
இஞ்சை வந்தினை.
நடந்தது என்ன?
உங்கடை அம்மா
உன்ரை பெரியண்ணன் வீட்டிலை.
உங்கடை அப்பா
உன்ரை சின்னண்ணன் வீட்டிலை.
அக்காமார் அவையளை
திரும்பிக்கூட பார்க்கேல்லை.
வெள்ளிக்கிழமைகளிலை
மாத்திரம்தான்
மாலை வேளைகளிலை
கனடா ஸ்காபரோவிலுள்ள
கனடா கந்தசாமி கோயிலில்
உங்கடை அம்மாவும்
அப்பாவும் சந்திப்பு.
என்ன உறவு?
என்ன வாழ்க்கை?
இரண்டு மாதங்கள் தான் அவர்களுக்கு
கனடாவாழ்க்கை.
விரக்தியுடனும்
வெறுப்புடனும் தான்
அவர்கள் இருவரும்
இலங்கைக்கு
திரும்பியாச்சு.
சரி,
அதுதான் போகட்டும்
ஆறு வரியங்களாய்
நீ என்னோடை வாழ்ந்தாய்.
அது ஒரு வாழ்க்கையா?
உன்ரை தேவைகள்
எல்லாத்தையும் நான்
ஒன்றும் விடாமல்
நிறைவேற்றி வைச்சன்.
ஆனால் நீ?
என்ரை ஆசைகளை
என்ரை ஆசாபாசங்களை
நீ எப்பவாவது புரிந்தியா?
நீ எதையாவது
நிறைவேற்றி வைச்சியா?
என்ரை உணர்வுகளை
எப்பவாவது நீ புரிந்து
நடந்தியா?
எப்பவாவது ஒரு தரமாவது
ஒரு உடுப்பாவது
எனக்கு நீ
வாங்கித்தந்திருக்கிறாயா?
ஆனால் உனக்கு
ஒவ்வொரு பேர்த் டேக்கும்
நான் உடுப்பு வாங்கித் தந்தன்.
அதுதான் போகட்டும்
எங்கடை ஒரே ஒரு குஞ்சு
செல்லக் குமரனுக்கு எப்பவாவது
ஒரு உடுப்பாவது
தகப்பன் எண்ட முறையிலை
நீ வாங்கிக் குடுத்திருக்கிறாயா?
நல்ல நாள் பெருநாள் எண்டு
சித்திரை வரியப்பிறப்பு
தீபாவளி நாட்களில்
ஒரு நாளாவது ஒரு உடுப்பாவது
எங்கடை குழந்தைக்கு நீ
வாங்கிக் குடுத்திருக்கிறியா?
நான் தான் எல்லா
கொண்டாட்ட நாட்களிலும்
எவ்வளவு கஷ்டப்பட்டும்
உடுப்புகள் வாங்கிக்
குடுத்திருக்கிறன்.
எங்கடை குமரன்
பிறந்து மூண்டு வரியங்களில்
எங்கடை குமரனோடை
ஒரு நாளாவது
ஒருதரமாவது
நீ
அன்பாய் கதைத்திருக்கிறாயா?
ஆனா
உன்ரை அக்காமாற்றை
அண்ணன்மாற்றை
பிள்ளைகள் எல்லாத்தையும்
நீ தலைக்கு மேலை
தூக்கிவைச்சு
செல்லம் கொண்டாடுறாய்.
ஏனெண்டால்
உன்ரை அக்காமாற்றை
அண்ணன்மாற்றை
பிள்ளையள் எல்லாம்
வெள்ளை
உன்ரை அப்பா, அம்மா
அண்ணன்மார், அக்காமார்
அவையின்ரை பிள்ளையள் எல்லாரும்
வெள்ளை நிறமாம்.
சங்கு வெள்ளையாம்.
நானும் எங்கடை குமரனும்
வெள்ளையில்லை.
கறுப்பு.
என்ரை அப்பா, அம்மா
அண்ணன்மார்,அக்காமார்
எல்லாரும்
எங்கள் குடும்பமே வெள்ளையில்லை.
கறுப்புத்தான்.
ஆனால் நாங்கள் எல்லாரும்
மனிசர்கள்,
மனிசத்தன்மையுள்ளவர்கள்.
என்னை நீ
கல்யாணம் கட்டும்போது நான்
வெள்ளையாயிருந்தேனா?
கல்யாணத்துக்கு முன்னம்
உன்ரை அம்மாவும் அப்பாவும்
நீயும்
என்னை
பெண்பார்க்க வந்தியள்.
அப்ப நான் வெள்ளையாய்
இருந்தேனா?
நான்கறுப்பாய்தானே
இருந்தன்.
நல்லெண்ணைக் கறுப்பு
அப்ப இது உங்கடை
கண்ணுக்குத் தெரி யேல்லையா?
அந்த நேரத்திலை
எங்களிடம் இருந்த
சொத்தும் பணமும் தான்
உங்னகடை கண்ணுக்கு
பெரிசாய்த் தெரிஞ்சுது.
அப்ப என்ரை
கறுப்பு நிறம்
உங்களுக்கு
பெரிசாய்த் தெரியேல்லை.
அப்படித்தானே?
எங்கடை கல்யாணம்
திடீர் கல்யாணம்
கல்யானம் முடிஞ்சு
மூண்டாம் நாளே
நாங்கள் இரண்டு பேரும்
கனடாபயணம்
இதுக்கான ஏற்பாடு எல்லாம்
ஏற்கனவே
நீங்கள் செய்து வைத்தாச்சு.
இது எங்களுக்கு அப்போ
புரியாப்புதிர்.
எங்கடை மகனுக்கு,
லீவெல்லாம் முடியப்போகுது
பிந்திப் போனால்
பறிபோயிடும் வேலை.
அதுதான் இந்த அவசரம்’
உன்ரை அம்மா
என்ரை மாமி
அண்டு சொன்னா.
நாங்களும் அவ சொன்னதை
அப்பிடியே நம்பீட்டம்.
நீண்ட நாட்கள்
நாங்கள் கொழும்பிலை
நிண்டால்
உன்னைப் பற்றிய
உன் குடும்பத்தைப் பற்றிய
எல்லாப் பொட்டுக் கேடுகளும்
எங்களுக்கு தெரிய வந்திடும்
எண்ட பயத்திலைதான்
என்னையும் உன்னையும்
அவசர அவசரமாய்
கனடாவுக்கு
அனுப்பி வைச்சினை.
இது வெறும் நாடகம்
எண்டு பிறகுதான்
எங்களுக்குத் தெரியவந்துது.
எல்லாம் முடிஞ்சுபோச்சு
இதை நானோ,
என்ரை பெற்றாரோ
பெரிசுபடுத்தேல்லை.
நடந்தது நடந்து
முடிஞ்சு போச்சு.
நடக்கவிருப்பதை
சரியாய்ப் பாப்பம்
எண்டுதான் நாங்கள்
எல்லாரும்
அமைதியாயிருந்தம்.
எனக்கு
குழந்தை பிறந்தபோது
என்னைப் பராமரிக்க
என்ரை அம்மா
இஞ்சை வந்தா.
என்ரை சேமிப்பு
பணத்திலைதான்
என்ரை அம்மாவின்
கனடா பயணச் செலவும்.
குழந்தை பிறந்து
ஒரு மாதம்கூட முடியேல்லை.
ஒரு ஞாயிற்றுக்கிழமை
வேலை எல்லாம்
செய்து முடிஞ்சு
ஓய்வாய் இருந்த வேளை
‘ரி.வி ‘பார்த்துக் கொண்டிருந்தா
என்ரை அம்மா.
‘மூக்கு முட்ட திண்டிட்டு
‘ரி.வி ‘பார்க்கத்தானோடி
நீ இஞ்சை வந்தனியடி?
என்ரை அம்மாவை
என்னைப் பெத்த அம்மாவை
நீ அடாவடித்தனமாய்
ஏசித்திட்டினாய்.
எனக்கு திகைப்பு
என்ரை அம்மாவுக்கு அதிர்ச்சி.
நாங்கள் இடிஞ்சுபோனம்.
இதுக்குப் பிறகு
இரண்டு நாள்தான்
இஞ்சை நிண்டா
என்ரை அம்மா.
இஞ்சை நிண்ட
இரண்டு நாட்களும்
என்ரை அம்மாவின்ரை
பல்லிலை
ஒருசொட்டுத்தண்ணிகூட
படவேயில்லை.
படுத்த படுக்கையாய்
கிடந்தா என் அம்மா.
நானும் அப்படித்தான்
கிடந்தன்.
ஒரு சொட்டுத் தண்ணிகூட
என்ரை தொண்டேக்கை போகல்லை.
மூண்டாம் நாளே
என்ரை அம்மா
எங்கடை ஊருக்கு
பயணமானாள்.
எனக்கு குழந்தை
பிறக்கும்வரை
ஒரு பெரிய கம்பெனியில்
வேலை செய்தேன்.
குழந்தை பிறந்ததோடை
என்ரை வேலை போச்சு.
ஆறு மாதங்களுக்குப் பிறகு
நான் வேலை தேடினன்.
அரசாங்க வேலைகளுக்கான
பத்திரிகை விளம்பரங்களை
பார்த்து என் தகமைக்கேற்ற
வேலைகளுக்கு,
நான் ஆறு மாதங்களாய்
தொடர்ந்து
விண்ணப்பங்கள்
நூற்றுக்கணக்கில்
அனுப்பிக் கொண்டிருந்தன்.
தனியார்கம்பனிகளிலும்
வேலைக்கு முயற்சித்தன்.
போன கிழமை வரை
எனக்கு வேலை கிடைக்கவில்லை.
ஐஞ்சு வரியமாய்
நான் உழைச்சு கொட்டிறன்.
நீ சும்மாயிருந்து கொண்டு
வெக்கமில்லாமல் என்ரை சோத்தை
திண்டுகொண்டிருக்கிறாய் எண்டு
அடிக்கடி சொல்லி என்னைத்
திட்டி அவமானப்படுத்தினாய்.
உனக்கு எங்கை
வேலை கிடைக்கப்போகுதடி
உந்த வீண்முயற்சியை
விட்டிடு இண்டைக்கே.
சுப்பமாக்கற்றிலை
நீர்வை பொன்னையன்
பில் போடிற வேலையாவது
தேடி எடு.
அதுவும் கிடைக்காட்டி,
வீட்டுக்கு வீடு
‘பேப்பர் ‘போடுற
வேலையாவது செய்யடி ‘
மனம் கூசாமல் நீ
அடிக்கடி நச்சரிச்சு
திட்டித்தீர்க்கிறாய்.
இதிலும் பார்க்க
வேறு என்ன அவமானம்
எனக்கு ஏற்படப்போகுது?
எல்லாத்துக்கும் மேலாய்
நீ
என்னைச் சந்தேகப்படுகிறாய்.
சரி அதைத்தானும் நீ
என்னை
நெற்றிக்கு நேராய்
கேட்டிருக்கலாமே.
கேட்கிறதுக்கு உனக்கு
துணிவில்லை.
ஏனென்றால்
உனக்கு முதுகெலும்பில்லை.
நீ ஒரு கோழை.
இல்லையில்லை.
நீ மனிசனுமில்லை.
நீ மிருகமுமில்லை
நீ அசிங்கம் பிடித்த
அருவருக்கத்தக்க
மண்புழு.
என்ன?
எனக்கு வேலை
கிடைக்காதா?
காலையிலை நான்
வீடு வீடாய் போய்
‘பேப்பர்’போடவேணுமா?
நான் அப்படிப்பட்ட
தகுதியற்றவளா?
எனக்கு நல்ல வேலைக்கு
தகமையில்லையா?
நான் இப்ப சொல்லிறன்
எனக்கு வேலை
கிடைச்சிட்டுது.
“என்ன, உனக்கு
வேலை கிடைச்சிட்டுதா?’
அவனுக்கு ஆச்சரியம்
‘என்ன வேலை?
எங்கை வேலை?
எப்ப போறாய் வேலைக்கு? ‘
அவனுக்கு அறிய ஆவல்.
எனக்கு என்ரை
தகமைக்கேற்ற வேலை.
ஓன்ராறியோ மாகாண
அரசாங்க
வீடமைப்புச் சபையில்
கணக்காளர் வேலை.
‘அப்பிடியா?’
அதிசயித்தவனாய்
அதிர்ந்து போனான்
போன கிழமையே
எனக்கு
கணக்காளர் நியமனக்
கடிதம் வந்திட்டுது.
‘அப்ப நீ எனக்கேன்
சொல்லேல்லை?”
எங்கடை
சொந்த நாட்டுக்கு
நாங்கள் போக
விமானப் பயணச் சீட்டுக்கள்
எடுக்கவேணுமே.
அதோடை
பிரயாண ஒழுங்குகள்
எல்லாம் செய்யவேணுமே.
அதுதான்
எனக்கு
வேலை கிடைச்ச விசயத்தை
நான்
உனக்கு சொல்லேல்லை.
நான் உனக்கு
ஏன் சொல்லவேணும்?
சொல்லித்தான்
என்ன பயன்?
‘அப்ப நீ வேலைக்கு
போகேல்லையா?
அதுவும் அரசாங்க வேலை.
ஊருக்கு நீ
போகத்தான் போறியா?
நீ பொய் சொல்லிறாய்.
உனக்கெங்கை
வேலை கிடைக்கப்போகுது?
என்னை நீ
ஏமாத்தப்பாக்கிறியா?’
சந்தேகத்துடன் அவன்.
‘என்ன?
உங்களைப்போல
நாங்கள்
ஏமாத்துப் பேர்வளியளா?
‘இந்தா.
இதோபார்
நியமனக் கடிதத்தை
அவனது மூஞ்சியில்
அவள் வீசி எறிகிறாள்.
அவனுக்கு என்ன
செய்வதென்றே தெரியவில்லை.
அவனுக்கு
திகைப்பு
திணறல்
‘நீ ஊருக்குப் போகத்தான்
போகிறாயா?
நீ வேலைக்கு
போகேல்லையா?
திக்கித் திணறி
அவன் கேட்கிறான்.
அவளை
‘நான் வேலைக்கு
போவன் எண்டு
நீ நினைக்கிறியா?
நான் இஞ்சை நிண்டால்தானே
வேலைக்கு போக.
அது மாத்திரமில்லை
இனிமேல் நான்
உன்னோடை
சேர்ந்து வாழ்வன்
எண்டு
நீ
நினைக்கிறியா?
அது நடக்கிற காரியமா?
அதை விட்டிட்டு
வேறை ஏதாவது சொல்லு.
அவனுக்கு பேரதிர்ச்சி.
‘நாங்கள்
ஊருக்குப் போறது
நிச்சயம்
நானும் என்ரை
செல்லக் குழந்தை
குமரனும்
இண்டைக்கு இரவே
நாங்கள் பிறந்த
மண்ணுக்கு
நிச்சயமாய் போறம்
நீ ராமனெண்டால்
இருந்திட்டு போ.
ஆனால் நான்
தீக்குளிக்க
சீதையில்லை.

– காலவெள்ளம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: செப்டம்பர் 2010, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.

நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *