தகப்பன் சாமி..!
“நிம்மி…வேலையா இருக்கியாம்மா…?”
“ஆமாம்மா…இன்னிக்கு ஒரு மீட்டிங்னு இவர் கார எடுத்துண்டு போயிட்டார்.நான் சின்னுவ ஸ்கூல்ல விட்டுட்டு ஆட்டோலதான் ஆஃபீஸ் போகணும்.. இன்னும் தட்டு முன்னாடி உக்காந்து சாப்பிடாம அடம் பண்றா.. ரொம்பவே லேட்டு…!
என்னம்மா..? எதாவது முக்கியமா பேசணுமா?”
“முக்கியம்தான்…ஆனா அவசரம் இல்ல..நீ வேணா ஆஃபீஸ் முடிஞ்சு திரும்பி வரச்ச ஒரு எட்டு வந்துட்டு போகமுடியுமா…?”
“கண்டிப்பா வரேன்.சின்னுவையும் பள்ளிக்கூடத்திலேர்ந்து அழச்சுண்டு வரேன்.இவருக்கு இன்னிக்கு வெளில தான் டின்னர்…. அதுனால நான் சாப்பிட்டுட்டே போறேன்…”
நிம்மிக்கு எதையும் நினைத்து குழப்பிக் கொள்ள நேரமில்லை.
ஆனால் ஆனந்திக்கு வேண்டாத விபரீத எண்ணங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வரிசையாய் நின்றுகொண்டு ஆட்டி வைக்க நிறைய நேரம் இருந்ததே….!
நிம்மியை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது….
அம்மாவுக்கு ஒண்ணு என்றால் தலைபோகிற அவசரத்திலும் எட்டிப் பார்க்காமல் போக மாட்டாள்…
வருணும் அப்படித்தானே இருந்தான்…! அம்மா மனம் நோக ஒரு நாளும் நடந்ததில்லையே…
ஆனால் … ஆனால்….!!
ஆனந்திக்கு ஐம்பது வயது ஆகிறது..சராசரிக்கும் கூடுதல் உயரம்.
திருமணத்தின்போது எப்படி இருந்தாளோ அதே மெல்லிய தேகம். சிவந்த நிறம்..தலைமுடி இன்னும் நரைக்கவில்லை… நீண்ட கூந்தல் எப்போதுமே பின்னப்பட்டிருக்கும்.. சாயமில்லாமலே உதடுகள் சிவந்திருக்கும்..
இதெற்கெல்லாம் ஆசைப்பட்டுத்தான் சிவமணி அவளை மனைவியாக்கிக் கொண்டான்..
இல்லை…கல்யாணி மருமகளாக்கிக் கொண்டாள் என்று சொல்வதுதான் பொருத்தமாய் இருக்கும்.
கல்யாணி தங்கள் குடும்பப் பாரம்பரியமே அவர்களது அழகில்தான் இருக்கிறது என்று திடமான சிந்தனை கொண்டவள்.
குடும்பத்துக்குள் வரும் மாப்பிள்ளையும் பெண்ணும் அந்த தகுதியை பெற்றிருந்தாலொழிய உள்ளே சேர்க்கவே மாட்டாள்.
ஆனந்தியைப் பார்த்ததுமே இவள்தான் சிவமணிக்கு என்று தீர்மானம் செய்துவிட்டாள்.
ஆனந்தி ஒருபோதும் தன்னை அழகி என்று நினைத்துக் கொண்டதே இல்லை.
அவள் நிறைய படிக்க ஆசைப்பட்டாள்.திருமணம் அவளது கனவை குழிதோண்டி புதைத்து விட்டது.
சிவமணியின் குடும்பத்துடன் ஆனந்தியால் ஒட்டவே முடியவில்லை.
அவர்களது மேற்கத்திய கலாசாரம் அவளை பயமுறுத்தியது..
கல்யாணியும் எப்போதும் கிளப் , பார்ட்டி என்று அலையும் ரகம்.அவளையும் சிலநாள் வற்பறுத்திக் கூப்பிடுவாள்.
“சரியான பத்தாம்பசலியக் கல்யாணம் பண்ணி வச்சுட்டேனே…”என்று முணுமுணுப்பாளே தவிர அவளை நேரில் ஒன்றும் சொன்னதில்லை…
ஆனந்தியால் தனக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று சிவமணிக்கு புரிந்ததும் அவளை அவ்வப்போது அவமானப் படுத்த ஆரம்பித்தான்.
அடிக்கடி பார்ட்டி.. நடனம். மது…!
பல பெண்களுடன் தன் கணவன் நெருங்கிப் பழகும் போது ஆனந்தி மனதுக்குள் மருகினாளேதவிர அவனைக் கண்டிக்கவோ , தடுக்கவோ முடியாமல் தவித்தாள்.
பலபேருக்கு முன்னால் அவளை அவமானப்படுத்தும் அவன் குணம் அவளை அவனிடமிருந்து விலகி இருக்க வைத்துவிட்டது.
நிம்மியையும் வருணையும் அந்த குடும்பத்தின் ஆடம்பர வாழ்க்கை கறை படியாமல் வளர்ப்பது ஒன்று மட்டுமே குறியாக வளர்த்து , இதோ இன்று பெருமையாக தலைநிமிர்ந்து நிற்கும் வேளையிலதான்.. இவன்.. வருண்..!
நிம்மியிடம் எல்லாவற்றையும் கொட்டித் தீர்க்க காத்திருக்கிறாள் ஆனந்தி.
***
சிவமணி குழந்தைகளை அதிகம் கொஞ்சும் ரகம் இல்லை.
நிம்மி ‘ அப்பா ..அப்பா ‘ என்று அவளாகவே போய் ஒட்டிக் கொள்வாள்.அவளுடன் கொஞ்சம் நெருக்கம் இருந்தது. அப்பாவிடம் சரிக்கு சரி சண்டை போடும் தைரியம் உண்டு.
ஆனால் வருண் அப்பாவிடம் போகவே பயப்படுவான்.கொஞ்சம் குரலை உயர்த்தினாலே நடுக்கம் வந்துவிடும்.அம்மாவின் மென்மையான ஸ்பரிசமே அவனுக்கு பிடித்திருந்தது.
எப்போதாவது அப்பாவுடன் சேர்ந்து கிரிக்கெட் பார்ப்பான்.கையில் விஸ்கியோ , வோட்காவோ இல்லாமல் அப்பாவைப் பார்த்ததேயில்லை.
தன்னுடன் கைகோர்த்துக் கொண்டு கடற்கரையில் நடக்கும் அப்பாவை கற்பனையில் மட்டுமே பார்க்க முடிந்தது.
நிம்மிக்கு திருமணம் ஆனபின் அவன் தனிமையாக உணர்ந்தான்.
கல்லூரி அவனுக்கு புதிய உலகத்தை திறந்து வைத்தது.நிறைய நண்பர்கள்..
எல்லாமே இயந்திரகதியில் போய்க்கொண்டிருந்த நேரம்…
“வருண்..இன்னிக்கு காலேஜ் இல்லியா..? நேரமாச்சே..! கண்ணெல்லாம் செவப்பா இருக்கு..? ரொம்ப நேரம் படிச்சியா…?”
“ஆமாம்மா…எக்ஸாம் வருது…இன்னிக்கு காலேஜ் போலம்மா…!
எனக்கு பசிக்கல.காப்பி மட்டும் போட்டுக் குடு…மேல எடுத்துண்டு போறேன்…!”
ஆனந்தி அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
“ஜுரம் ஒண்ணுமில்ல…ஆனா முகம் வாடியிருக்கே வருண்.. எதாவது பிரச்சனையா…?”
“அதெல்லாம் இல்லம்மா….காப்பி குடு.. நான் மேல போறேன்…”
மேற்கொண்டு பேசுவதை தவிர்ப்பது புரிந்தது.
“இதோ வரேன்…..”
அடுத்தடுத்த நாட்களில் பசியில்லை என்று சரியாக சாப்பிடுவதில்லை.. கண்களில் சதா ஒரு சோர்வு… கலக்கம்..
நிம்மியிடம் சொல்லலாமா…? வேண்டாம்.பாவம் அவளே சின்னுவையும் ஆஃபீஸ் வேலையையும் வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள்…
ஆனந்தி பொறுமையாக இருந்து பார்த்தாள்…
இரண்டு நாளாக அறையை விட்டு வரவில்லை..ஒரு வேளை மட்டும் கீழே வந்து ஏதோ கொறித்து விட்டு போவதோடு சரி..
சிவமணியிடம் சொல்லிப்பார்த்தாள்..
“காலேஜ் பசங்க சில சமயம் இப்படியெல்லாம் நடந்துகிறது சகஜம்.நான் ஒரு மாசம் கூட கட் அடிச்சிருக்கேன்..
டாக்டர் நித்யன் கிட்ட வேணா கூட்டிட்டு போ…
இதெற்குமேல் அவனிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
சாப்பிடாததால் இரத்த சோகை என்று மாத்திரை எழுதிக் கொடுத்தார் டாக்டர் .
ஆனந்திக்கு ஏதோ விபரீதமாகப் பட்டது….
***
ஆனந்திக்கு இருப்பே கொள்ளவில்லை..பத்து நிமிடத்துக்கு ஒரு முறை வாசலில் வந்து பார்த்தாள்.
சரியாக நாலு மணிக்கு வாசலில் காலில் பெல் சத்தத்தையும் மீறி
“பாட்டி.. சீக்கிரம் கதவத் தொற..சின்னு வந்திருக்கேன் பாட்டி.. கமான்..!!”
என்றது பிஞ்சுக் குரல்..
குழந்தை அப்படியே பேக் பேக்கை தூக்கி அம்மா கையில் கொடுத்து விட்டு பாட்டியை இறுக்கி கட்டிக் கொண்டாள் ..!!
“அம்மா..!! உனக்காக பர்மிஷன் போட்டுட்டு சீக்கிரமாகவே கெளம்பிட்டேன்….
“என்னடி நிம்மி.. ?குழந்த இப்படி மெலிஞ்சு போய்ட்டாளே….”
“அம்மா.. இதத் தவிர வேறு எதையாவது கேட்டிருக்கியா…? ஆக்சுவலா அவ வெயிட் போட்டிருக்கா தெரியுமா…?”
குண்டம்மான்னுதான் அவ அப்பா அவள கொஞ்சுவார்…இல்லடா கண்ணா…”
“குழந்தைய அப்படியெல்லாம் சொல்லாத..! வாடா செல்லம்..பாட்டி உனக்கு பிடிச்ச பூரி , கிழங்கு பண்ணி வச்சிருக்கேன்….”
“தாத்தா எங்க பாட்டி….?”
“தாத்தா பாம்பே போய் இரண்டு நாளாச்சு…நாளைக்கு வருவா கண்ணம்மா….”
“வருண் மாமா எங்க….?”
ஆனந்தியின் முகம் ஒரு வினாடி இறுதித் தளர்ந்ததை நிம்மதி கவனிக்கவில்லை..
“மாமா வர நேரமாகும்…நீ போய் சாப்பிட்டுட்டு ஹோம் வொர்க்க முடிச்சு வை..மாமா வந்ததும் விளையாடலாம்…”
“அம்மா..என்ன பிரச்சனை..!! உன் முகமே சரியில்ல…அப்பாவோட ஏதாவது சண்டையா…? உனக்குத்தான் சண்டை போடவே வராதே…!”
“இது வேற நிம்மி…வருணப்பத்தின கவலை..”
“வருணா….? என்னம்மா புதுசா…?”
“ஆமா நிம்மி. !! புதுசு புதுசா என்னன்னவோ நடக்கறது…”
அம்மா இப்படி அழுது நிம்மி பார்த்ததேயில்லை.
***
வருண் தன்னிடம் கூட சரியாகப் பேசாதது , சாப்பாட்டை ஒதுக்குவது , கல்லூரிக்கு சிலநாள் கட் அடிப்பது , அறைக்குள்ளே முடங்கிக் கிடப்பது , டாக்டரிடம் போனது எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் ஆனந்தி….
“ஏம்மா…? இத்தன நடந்திருக்கு..!! எப்படிம்மா எங்கிட்ட மூச்சுகூட விடல ? இது சரியா படலயே ! ஆரம்பத்திலேயே பாக்கணும்மா….! ஒருவேள டிப்ரஷனோ என்னமோ…?
அவன் வர நேரந்தான்..நானே கேக்கறேன்….!”
வருண் அவள் சொல்லி பத்து நிமிடத்தில் வந்து விட்டான்….
எப்போதும் நிம்மியைப் பார்த்தால் ஒடி வந்து ‘ ஹாய் நிம்மி ‘ என்று கட்டிக் கொள்ளும் பழைய வருணைத் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை..
“எங்க சின்னு. ? மை ஸ்வீட் லிட்டில் ஏஞ்சல் ?”
என்று கேட்டுக் கொண்டே வரும் வருண் இது இல்லை…!
“ஏய்.. வருண்..நிம்மி அக்கா வந்திருக்காடா…!”
“பாத்தேனே..! அக்கா…!! எப்போ வந்த..?”
“வருண் …வா…உக்காரு…! உன்னப் பாத்து எத்தன நாள் ஆச்சு…? ஏன் டயர்டா இருக்கா வருண்…?”
“எ லிட்டில் பிட்…!!”
“படிப்பெல்லாம் எப்பிடி போறது..? ரிசல்ட் எல்லாம் வந்திருக்குமே…!”
“அக்கா…நான் அம்மாகிட்ட கூட சொல்லல… இரண்டு எக்ஸாம் க்ளியர் பண்ணல…!!”
“வாட்…?”
வருண் கண்களில் ஒரு கலக்கம்…நிம்மியை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தலைகவிழ்ந்தான்..
“வருண்…என்னாச்சும்மா..? நீயா அரியர்ஸ் வச்சிருக்க..?
உங்கிட்ட ஸ்டேட் ரேங்க். எதிர்பார்க்கிறோம்னு உங்க பிரின்சிபால் அடிக்கடி சொல்வாரே…!
ப்ளீஸ்டா…அக்கா கிட்ட எதையும் மறைக்காத..!
எதுவானாலும் சரி பண்ணிக்கலாம்…சொல்லு வருண்…!”
“அக்கா.. இப்போதைக்கு எதுவும் கேக்காத..எனக்கு பயப்படறா மாதிரி எதுவுமே இல்ல…ஐ ப்ராமிஸ்…
நான் போய் சின்னு குட்டிய பாத்துட்டு வரேன்…
ஐ வில் கம் அவுட் ஆஃப் திஸ் சூன்..!
அம்மாதான் ஓவரா கவலப்படறா….நீ அம்மாவுக்குத்தான் தைரியம் சொல்லணும்…சரியா…?”
பதிலுக்கு காத்திராமல் உள்ளே ஓடிவிட்டான்…
“பாருடி நிம்மி..இப்படியேதான் , ஏதேதோ சொல்லி தப்பிக்கிறானே ஒழிய , உண்மைய சொல்வேனாங்கறான்….”
“ஆமாம்மா.. உன் கவல எனக்கு புரியறது.. இந்த வயசுல அப்பா சினேகமா இருக்கணும்னு தானே பசங்க எதிர்பார்க்கும்..? அவர் இப்படி விட்டேத்தியா இருக்கிறது அவனுக்கு மன அழுத்தமா இருக்கும்னு நெனைக்கிறேன்….
அப்பா வந்ததும் நான் பேசிப் பாக்கறேன்.. இப்போதைக்கு விட்டுப் பிடிப்போம்..
ஆனா எதுவானாலும் என்னக் கூப்பிடணும்..ஓக்கே…?
அடுத்தவாரமே அவளைக் கூப்பிட வேண்டிய கட்டாயம் வரும் என்று ஆனந்தி எதிர்பார்த்திருக்க மாட்டாள்…
***
“அம்மா..இந்த வீக் எண்ட் என் ஃபிரண்ட்ஸோட டூர் போறோம்.அநேகமா திங்கட்கிழமை ராத்திரி வந்துடுவோம்.அப்பா கிட்ட சொல்லிட்டேன்… எனக்கும் ஒரு சேஞ்ச் வேண்டியிருக்கு….!”
வருண் சொன்னது சரிதான்..
நிம்மி வந்துவிட்டு போனதிலிருந்து வருணின் நிலைமை இன்னும் மோசமானது…..ஒழுங்காக உடை உடுத்துவதோ , தலை வாருவதோ கூட மறந்திருந்தான்..
அவனுக்கு மாற்றம் தேவைதான்.
ஆனாலும் அவனை இந்தமாதிரி நிலைமையில் வெளியே அனுப்பலாமா..?
நிம்மியிடம் கேட்டால் என்ன..?
வேண்டாம்.அவள் ஒருவேளை மறுத்துவிட்டால்…?
பாவம்..போய்விட்டு வரட்டுமே…!
ஆனந்தி தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டு அவன் போக சம்மதித்தாள்…
“வருண்.. போனதும் ஃபோன் பண்ணு..என்ன? சரியா சாப்பிடணும்.ஓக்கே….?”
வருணில்லாத வீடு ஆனந்திக்கு வேண்டாத சிந்தனைகளை உள்ளே ஒவ்வொன்றாய் திணித்தது…
சனிக்கிழமை சாப்பிட்டதும் கொஞ்சம் படுக்கும் வழக்கம் உண்டு… மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது படுக்கை கொள்ளுமா….?
சிவமணி ஊரில் இல்லை…
ஆனந்திக்கு கொஞ்ச நாளாகவே வருணின் அறையைத் திறந்து பார்க்க வேண்டும் போல ஒரு உறுத்தல்..
எதையாவது மறைக்கிறானா….?
மாடியில் வருணுக்கு ஒரு அறையும் , சிவமணி வேலை பார்க்க ஒரு ஸ்டடியும் இருந்தது..
வருண் சிறுவனாக இருக்கும்போது அடிக்கடி அவனது அறையில் போய் எல்லாவற்றையும் அடுக்கிக் கொடுத்துவிட்டு வருவாள்..
பத்தாவது வந்தபின் அவனே எல்லாம் பார்த்துக் கொள்வதாக சொன்னபின் அவன் அறைக்குள் அதிகம் நுழைந்ததில்லை..
வருண் அறையை நேர்த்தியாக வைத்திருப்பதில் அவளுக்கு ரொம்பவே பெருமை…!
அறையைத் திறந்தவள் சற்று திகைத்துப்போனாள்…
கட்டில் மேல் துணிகள் இறைந்து கிடந்தன.. புத்தகங்கள் எல்லாம் கலைந்து….!!
வருண்! என்னடா…? என்ன ஆச்சு என் குழந்தைக்கு….?
ஆனந்திக்கு அங்கேயே உட்கார்ந்து ஒருபாட்டம் அழலாம்போல முட்டிக்கொண்டு நின்றது கண்ணீர்..!!
அலமாரியைத் திறந்து பார்த்தால் என்ன…?
உடைகள் எல்லாம் ஒழுங்காகத்தான் மாட்டி வைத்திருந்தான்…
ஓரளவுக்கு சமாதானமானாள்…
டிராயரையும் பார்த்து விடலாம் என்று ஏன்தான் தோன்றியதோ…?
தலையில் யாரோ நாலைந்து பாறாங்கல்லைத் தூக்கி போட்டது போல…!
சில டைரிகள்… பேனாக்கள்.. காகிதங்கள்…
அப்புறம்…….!
ஐந்தாறு பேக்கட்டுகள்…. எல்லாமே கவர்களில் பத்திரப்படுத்தி இருந்தது…
ஒன்றை எடுத்து பிரித்தவள் தடுமாறினாள்…வெள்ளை நிற பவுடர்..!!
சில பழுப்பு நிறத்தில்….!
ஆனந்தி புத்திசாலி.. படித்தவள்….உடனே யூகிக்க முடிந்தது…இது நிச்சயம் போதை பொருள் சம்பந்தப்பட்டது தான்…. சந்தேகமேயில்லை….
கால்கள் துவள அங்கேயே உட்கார்ந்து விட்டாள்….
பிரமை பிடித்தது போல இருந்தது…
வருணா…? என் குழந்தையா இதை உபயோகிக்கிறான்…?
அதனால்தான் அறையிலேயே சதா பூட்டிக் கொண்டு கிடந்தானா..?
கண்களின் சிவப்பும் இதனால் வந்ததுதானா….?
எப்படி தனக்கு தோணாமல் போனது…?
ஆனந்தியால் இதற்குமேல் தனியாகத் தாக்குப் பிடிக்க முடியாது…!!
“நிம்மி.. இன்னிக்கு உனக்கு லீவுதானே…? உடன புறப்பட்டு ஆத்துக்கு வா… சீக்கிரம் வந்தா தேவல…!”
“லீவு தான்..ஆனா சின்னுவுக்கு ஆர்ட் கிளாஸ் இருக்கேம்மா…!! கிளம்பிண்டே இருக்கோம்… ஏன் உடம்பு கிடம்பு சரியில்லையா…?”
“அதெல்லாம் இல்ல…அதவிட முக்கியம்…!! குழந்தைய எறக்கிவிட்டுட்டு சட்னு வா நிம்மி…!!நேர்லதான் எல்லா விவரமும் சொல்லமுடியும்..”
அடுத்த அரைமணியில் நிம்மி அம்மா வீட்டில் இருந்தாள்….
ஆனந்தி இருந்த அதே கோலத்தில்…..
***
திங்கட்கிழமை..
இரவு மணி ஏழு..
வாசலில் அழைப்பு மணி..
தம்பியின் வரவுக்காக காத்திருந்த நிம்மி ஓடிப் போய் கதவு திறந்தாள்..
வந்தது சிவமணி..!
“என்ன நிம்மி..? நீ இங்கே எப்படி..? ஆஃபீஸ் இல்ல…?”
பிள்ளையை எதிர்பார்த்த ஆனந்திக்கு கணவனின் வரவு ஏமாற்றத்தை அளித்தது…
“சும்மாதான்..அம்மா தனியா இருக்காளே அதுனால இங்கேயிருந்தே இரண்டு நாளைக்கு ஆஃபீஸ் போலாம்னு தான்…”
சிவமணி நிம்மியை நேருக்கு நேர் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பது அவளுக்கு புரியாமல் இல்லை….
“ஓக்கே..நைஸ்.. நான் ரொம்ப டயர்டா இருக்கேன்…
இங்கதானே இருப்ப…ஸீ யூ டுமாரோ… சின்னு தூங்கிருப்பா…குட் நைட்…!”
ஆனந்தியைத் திரும்பிக் கூட பார்க்காமல் தனது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டார்…
பத்து நிமிடத்தில் மீண்டும் அழைப்பு மணி..
வருண் தான்…. முகம் மலர்ந்திருந்தது..!
“அக்கா… வாட் எ சர்ப்ரைஸ்… ?உன்ன இங்க எதிர்பார்க்கவேயில்ல..சின்னு தூங்கிட்டாளா .?”
மிக மிக இயல்பாக , அவளைத் தழுவிக் கொண்டு “லவ் யூ நிம்மி “என்று சொன்னது நிம்மிக்கு அவன் மேல் சந்தேகப்பட்டது சரியில்லையோ என்று உறுத்தியது..
“அம்மா.. உனக்கு நிம்மி துணையா இருந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…ஒரே நிமிஷம்..மேல போயி ரெடியாய்ட்டு வரேன்…”
“நிம்மி.. பாருடி..இவன..குழந்த மாதிரி இருக்கானே…இவனால அவ்வளவு பெரிய தப்ப பண்ண முடியாதுடி..”
“அம்மா.. அதுக்குள்ள அவசரப்படாத… பொறுமையா அணுக வேண்டிய விஷயம் இது… நான் பாத்துக்கிறேன்…
***
“அப்புறம்..!! வருண் டூர் எல்லாம் எப்படி இருந்தது..?”
“ரியலி எஞ்சாய்ட்….! நல்ல மாறுதல்..!”
“ஆமா.. யாரோட போன? உன் கிளாஸ்மேட்ஸா…?”
“ஆமாக்கா…”
“அவுங்கெல்லாம் எப்படி…? நல்ல பசங்கதானே…?”
“என்னக்கா நீயே இப்படி கேக்கற.. நண்பர்கள நாம் எட போட்டா பாப்போம்..? அவுங்கவுங்க நிறை குறையோட ஏத்துக்கறதுதானே நட்பு…!! உனக்கு நான் சொல்லித்தரணுமா…?”
“அதுக்கில்ல வருண் !! இந்த காலத்தில வேண்டாத பழக்கத்தெல்லாம் கத்து வச்சிக்கிறாங்களே…பயம்மாவே இருக்கு..!!”
“அக்கா…! என்ன சொல்ல வர? பீ ஸ்ட்ரெய்ட்…!! யூ மீன் ட்ரக்ஸ் அண்ட் ட்ரிங்ஸ்…?”
நிம்மிக்கு பேச்சு வரவில்லை…
ஆனந்திக்கு வயிற்றைக் கலக்கியது..
கொஞ்ச நேரம் யாருமே பேசவில்லை…
திடீரென்று வருண் எழுந்து நின்று நிம்மி கையைப் பிடித்துக் கொண்டு
“அக்கா ! என்ன மன்னிச்சிடு…!! நான் நிறைய விஷயங்கள உங்ககிட்டேயிருந்து மறச்சிட்டேன்…”
ஆனந்திக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது..
“வருண்.வருண்..!! என்று தேம்பினாள்.
கடைசியில் அவர்கள் நினைத்தது சரிதான் என்று சொல்லப் போகிறானா..?
“அக்கா..! நான் என்னோட அறைக்குள் நுழஞ்சதுமே யாரோ வந்து எல்லாத்தையும் குடஞ்சிருக்காங்கன்னு புரிஞ்சு போச்சு…
நான் சொல்லப்போற விஷயம் அதிர்ச்சியானதுதான்…ஆனா நீங்க எதிர்பார்க்கிறது இல்ல…!!”
“என்னடா வருண்..பொறுமைய சோதிக்காத…!! என்னால தாங்கமுடியல கண்ணா…!!”
ஆனந்தி பிழியப் பிழிய அழுதாள்…
“அம்மா.நான் போதை மருந்துக்கு அடிமையாய்ட்டேன்னு நினைக்கிறீங்க இல்லியா….? அது உண்மைன்னு வச்சிண்டா உங்க மனநிலை எப்படி இருக்கும்…? எப்படி இருந்தது…?
துடிச்சு போயிருப்பீங்க இல்ல…?
நமக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர் இந்த மாதிரி பழக்கத்துக்கு அடிமையானா?
இந்த கொடுமையைத் தான் இத்தனநாள் தாங்க முடியாம தவிச்சிண்டிருந்தேன் அம்மா… பயித்தியம் பிடிக்கிற நிலைமைக்கு போய்ட்டேன்…!!
ஆனந்திக்கும் , நிம்மிக்கும் அவனுக்கு நிஜமாகவே மூளை கலங்கிவிட்டதோ என்று தோன்றியது…
***
“அக்கா.. ஒருநாள் என்னோட டீஷர்ட்ட காணம்னு அப்பா அலமாரியில தேடிப் பாக்கலாம்னு அலமாரியத் தொறந்தேன்..
துணிகளுக்கு பின்னாடி ஏதோ பொட்லமா நிறைய இருந்தது…
அதிலேயிருந்து ஒண்ண எடுத்து பாத்ததுமே புரிஞ்சு போச்சு..
நாலஞ்சு பேக்கட்ட ரூமுக்கு எடுத்துண்டு வந்தேன்..
அக்கா..வாழ்க்கையில இந்த மாதிரி அதிர்ச்சிய நான் அடஞ்சதே இல்ல…
கொஞ்ச நேரம் ஒண்ணுமே ஓடல…
அத்தனையும் போதை மருந்து !
அப்பாவா …? நம்ம அப்பாவா இப்படி…?
அப்பா எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாவோ அம்மாவுக்கு பொறுப்பான துணையாவோ இல்லைங்கிறத என் மனசு என்னிக்கோ ஏத்துண்டாச்சு…!!
அதுக்கு ஏத்த மாதிரி என்ன மாத்திண்டு ரொம்ப காலமாச்சு…
ஆனா..சமூகத்தில ஒரு மதிப்பான எடத்தில இருக்கார்னு நினச்சு மனச சமாதானப்படுத்திப்பேன்…
இப்போ அதுவே ஆட்டம் காணத் தொடங்கிடுத்தே…!
அப்பாவோட நண்பர் நாதன் அங்கிள் கிட்ட ஒருநாள் நேர்ல போய் பேசினேன்…
அப்பாவுக்கு இந்த பழக்கம் சமீப காலமாகத் தான் வந்திருக்கு..
ஊருக்கு போறேன்னு சொன்னதெல்லாம் பொய்..இங்கியே ஒரு ரிசார்ட்ல நண்பர்களோட…!
அம்மா ..அப்பா உன்ன நிறையவே ஏமாத்திண்டு வந்திருக்கார்…”
இதற்கு மேல் பேச முடியாமல் வெடித்து சிதறினான் வருண்…
“வருண்.. உன்னப் போய் சந்தேகப்பட்டேனே… என் கண்ணா…நீ தகப்பன் சாமிடா…!”
ஆனந்தி அவனைக் கட்டிக் கொண்டு கதறுகிறாள்…..
“வருண்..தனியாவே சமாளிக்கணும்னு நெனச்சதுதான் நீ செஞ்ச தப்பு…!! அம்மா..அக்காவெல்லாம் எதுக்கு இருக்கோம்…?
“இல்லக்கா.. முதல்ல அந்த அதிர்ச்சியிலேர்ந்து மீளவே முடியல.. என்னால நம்பவே முடியல.. அப்புறம் அப்பா மேல ஆத்திரமா வந்தது…
மனசுல ஒரு பாறாங்கல்லை வச்ச மாதிரி அழுத்தம்… ஒண்ணுமே பேசத் தோணல…அக்கா…நான் கிட்டத்தட்ட ஒரு பயித்தியம் பிடிச்ச மாதிரி ஆய்ட்டேன்…
அப்பா இதிலேர்ந்து மீண்டு வருவாரா…?”
“நாமெல்லாம் சேந்து அவர கண்டிப்பா மீட்டு கொண்டுவரலாம்..
உன்ன மாதிரி ஒரு தம்பி கிடைச்சா என்னவேணாலும் சாதிக்கலாம்..
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..!!இல்லியாம்மா…?”