ஜீவன்





மொத்த உயிரையும் பிடுங்கினாற் போன்ற வலியில் இருந்தார் சிவனேசன்.
அது மனைவி அகிலத்தின் மறைவு தான். பணி முடிந்து ரிடையர்டு ஆனபோதுகூட வருத்தம் துளியுமில்லை. அகிலாவோடு இனி எஞ்சிய வாழ்நாள் முழுவதும் வசந்தம் ஆகும் என மிதமிஞ்சிய களிப்பே அவரிடமிருந்தது.
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் அதற்கு அகிலாவின் தீர்வு காணும் முறையே அலாதி யானது.
அலுவலகப் பணியின் போது ஏற்படும் பிரச்சனைகளை அவளிடமே விவாதிப்பார்.
மண்டைக்குடைச்சலாக்கும் பிரச்சனையைக்கூட நேர்த்தியாய் களைந்து தீர்வு சொல்லும் அகிலாவின் மனத்திண்மையை கண்டு அவர் வியக்காத நாட்களில்லை என்று தான் சொல்லவேண்டும். அத்துணை மதிநுட்பம் வாய்த்த தன் மனைவி யின் இழப்பு தாங்க இயலா மனவலியாகவே உணர்ந்தார்.
ஆயிற்று அவளுக்கான கிரியை, சம்பிரதாயம் எல்லாம் முடித்தாயிற்று.
இரு மகன்களும் தம் கடமையை முடித்துவிட்டு தத்தம் பணிகளுக்கு திரும்ப வேண்டிய சூழல்.
இந்நிலையில் அவர்களின் எதிர் நிற்கும் பிரச்சனை தந்தையை இனி எப்படி பார்த்துக் கொள்வது என்பது தானாக இருக்கும்.
இரண்டு நாட்களாக இருவரும் கூடிக்கூடி பேசுவதும், விவாதிப்பதுமாக இருப்பதைக் கண்ணுற்ற சிவனேசன் இப்படி த்தான் எண்ணினார்.
அநேகமாக இருவரில் ஒருவரிடம் தான் இருக்கப் போவதாக இருக்கலாம், அல்லவெனில் மாறி மாறி இருவரிடமும் தான் இனி பந்தாட்டப்படலாம் என நினைத்தார்.
இதுதான் மகன்களின் முடிவு எனில் தன்னிலை என்ன?
யோசித்தார்.
கூடாது. அகிலம் தன்னோடு வாழ்ந்த இந்த வீட்டை விட்டு பிரிந்து செல்லக் கூடாது. அகிலாவின் நினைவுகளோடு இங்கேயே இருந்து விடுவதுதான் தன் முடிவு என தீர்மானம் கொண்டார்.
அப்பா,
பெரிய மகனின் அழைப்பு கேட்டது.
சிவனேசன் யோசனை யினின்று மீண்டார்.
என்னப்பா
அப்பா, தம்பியும் நானும் நல்லா யோசித்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். அது என்னன்னா…
சிவனேசன் சுதாகரித்து நிமிர்ந்தார். தன்னுடைய முடிவை சொல்ல வேண்டிய தருணம் இது. இந்த வீட்டைப் பிரிந்து வர தன்னால் இயலாது என்று சொல்லிவிட எத்தனித்தார்,
ஒரு நிமிஷம். நவின், நான்… என்று ஆரம்பிக்கு முன்னே நவின் குறுக்கிட்டான்
அப்பா நான் சொல்லிமுடிச்சிடறேன்பா, தம்பி, பெங்களூர்ல இருக்கறதுன்னால இங்க தங்கறது கஷ்டம், ஆனா நான் சென்னையில இருக்கறதால நாங்க இங்க வந்து இருக்க முடியும். கார்த்திகாவையும், குழந்தைகளையும் இங்க அழைச்சிட்டு வந்திடறேன். வாரத்துல சனி, ஞாயிறு மட்டும் நான் வந்திடறேன், மாசத்துல 10நாள் நான் வீட்ல இருந்தே வேலை பாக்குற வசதி என் கம்பெனியில் இருக்கு, அதனால் பிரச்சனை இல்ல. நாங்களும் உங்களோட அம்மா வாழ்ந்த இந்த வீட்லயே இருந்திடறோம்பா.
நவின் பேசப்பேச மனதில் ஏதோ ஒன்று உடைந்தது போல் உணர்ந்தார் சிவநேசன். அம்மாவைப் போல் எப்படி தீர்க்கமாக முடிவு எடுக்கிறார்கள்.
இவர்களை சற்று குறைவாக எடை போட்டுவிட்ட தன்னை மிகவும் நொந்துகொண்டார்.
தழுதழுத்தபடி மகனின் கைகளைப் பற்றிக் கொண்டார்
நவின், நான் வாழ்ந்து முடிச்சவன்ப்பா, நீங்க வாழவேண்டியவங்க.
என் ஒருத்தனுக்காக நீங்க அலையறத நான் விரும்பல. நான் உங்க கூடவே வந்திடறேன். அம்மா இந்த வீட்ல இல்ல, நம்ம மனசு பூரா நிறைஞ்சி கிடக்கா, நான் எங்க இருந்தாலும் அவளோட ஜீவன் எனக்குள்ளே இருக்கும். இனி உங்க நலன்தான் எனக்கு முக்கியம். நான் உங்க கூட வந்து இருக்கறதுதான் சரி.
உறுதியான குரலில் சொல்லி முடித்தவர், தன் எதிரே மாட்டியிருந்த அகிலத்தின் போட்டோவைப் பார்த்து மனதிற்குள் வினவினார்.
நான் எடுத்த முடிவு சரிதானா அகிலா?
போட்டோவில் இருந்த மனைவியின் புன்னகை சற்று விரிந்தது போல் உணர்ந்தார் சிவனேசன்.