கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 3,785 
 
 

(1948ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

7. செந்தாமரை

சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள்; சிலர் காத்திருந்து பெறுகிறார்கள்; சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள். 

மருதப்பரும் அவருடைய மனைவியும் நன்றாகத் தான் வாழ்கிறார்கள். ஆனால் ஒத்த அறிவோ காணோம். அவர் உலகத்தை நன்றாகக் கற்றிருக்கிறார். அவருடைய மனைவியோ குடும்ப வாழ்க்கையை நன்றாகக் கற்றிருக்கிறாள். எப்படியோ காதல் வாழ்வு தான் வாழ்கிறார்கள். படிப்படியாக முன்னேறியிருக்கிறார்கள். 

அண்ணனைச் சிறுவயதில் ஊமை என்று அக்காவும் நானும் பேசிவந்தோம். இப்போதும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறான். தின்பண்டமோ, புதிய ஆடையோ புத்தகங்களோ எவற்றைப் பற்றியும் அவன் அந்த நாளிலும் அலைந்ததில்லை; இந்த நாளிலும் அலைவதில்லை. பொறுமையாக இருந்து கிடைத்த போது மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்வான். ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்ற பாட்டைப் படிக்கும்போதும் கேட்கும் போதும் அண்ணனை நினைத்துக்கொள்வது உண்டு. இப்போது அவனுடைய காதல்வாழ்க்கையும அப்படித்தான் வீடு தேடி வந்தது. அண்ணி அவனுக்கு ஏற்றவள். அசையாமல் அதிராமல் ஊமை போல் இருந்து அண்ணனுடைய உள்ளத்தை உரிமையாக்கிக்கொண்டாள். 

நான் அந்த இள வயதிலும் நினைத்ததற் கெல்லாம் அலைந்தேன், வீட்டிற்குள்ளே ஓமப்பொடிப்பொட்டலம் வந்தாலும் ஓடிப்போய் அதைப்பெற்றுக்கொள்ள அலைவேன். புதிய நிறத்தில் துணி வந்தால் உடனே பரபரப்பாகத் தேடிப் பார்த்துப் பொறுக்குவேன். அண்ணியைப் போல் வெள்ளைப் புடைவையைக்கட்டிக் கொண்டு உள்ளம் பூரிக்க என்னால் முடியாது; என் காதல் வாழ்க்கையும் அப்படித்தான் முடிந்தது. 

அந்த ஓவியம் எழுதினேனே, அதிலாவது மருதப்பர் ஒருவரை மட்டும் எழுதியிருக்கக் கூடாதா? அதிலும் தேடியலையும் புத்தியைக் காட்டினேன். உருவம் இரண்டு எழுதிப் பெயரை எழுதி ஒரு கேள்விக்குறியும் இட்டேன். கேள்விக்குறி ஏன்? இவரா அவரா என்று கேட்கும் மனத்தை அப்படி என்னை அறியாமல் ஓவியத்தில் குறித்துவிட்டேன். அதை அண்ணி எப்படியோ நுட்பமாகத் தெரிந்து கொண்டாள். தனிப்படம் எழுதிக் காட்டியபோது “ஆராய்ச்சி முடிந்துவிட்டதா? ஐயநிலை போய் வியப்பு நிலை வந்ததே!” என்று இலக்கணமாகப் பேசினாள். 

இந்த அண்ணியால்தான் என் வாழ்க்கை சீர்ப்பட்டது என்று சொல்ல வேண்டும். யார் மகளோ, என் வாழ்க்கையைச் சீர்ப்படுத்த என்னோடு வந்து சேர்ந்தாள். அவளுடைய அண்ணன் என்றுதான் அவரை விரும்பினேன். அவருடைய நண்பர் என்றுதான் மருதப்பரைக் கண்டு மயங்கினேன். இப்படி அண்ணிக்கு வேண்டியவர்களாக இல்லாமல் புதியவர்களாக இருந்திருந்தால், நான் கண் எடுத்துப் பார்த்திருக்க மாட்டேன். படம் எழுதியும் பார்த்திருக்கமாட்டேன். ஏன்? நான் சூடுண்ட பூனை அல்லவா ? பட்டபிறகும் புத்தி வராமல் போகுமா? 

அனுபவம் இல்லாமலே சிலர் அறிவோடு நன்றாக வாழ்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுடைய அனுபவத்தை அறிந்து பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால், எனக்கு அவ்வளவு பொறுமையும் இல்லை; அந்தத் திறமையும் இல்லை. அனுபவம் எனக்கே ஏற்பட்ட பிறகுதான் விழிப்பாக நடக்கக் கற்றுக் கொண்டேன். அந்தப் பாவிப் பயல்-! 

நான் இன்றைக்குத் தூய்மையானவள் என்று தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை அல்லவா? அது என் வாழ்க்கையில் பெரிய குறை அல்லவா? அதனால் தான் செருக்கெல்லாம் அடங்கிக் கிடக்கின்றேன். கல்லூரியிலும் முன் போல் எல்லாருடனும் பழகு வதில்லை. நாகரிகம் என்று சொல்லி மனம் போன போக்காய்த் திரியாமல், மனப் பண்பாடு வேண்டும் என்று உணர்ந்துகொண்டேன். அந்தக் குறை என்னிடம் இருப்பதால், ஒத்த அன்பு ஒத்த அறிவு என்ற வாய்பாடுகளையும் பொருட்படுத்தவில்லை. எனக்கு ஒரு துணை வேண்டும்; அவர் தன்னலம் அற்றவராக இருந்தால் போதும்; அறிவு முதலானவை குறைந்தவராக இருந்தாலும் போதும் என்ற எண்ணம் வந்ததும் அதனால் தான். அப்படிப்பட்ட நல்லவர் கிடைப்பாரானால், அவருக்கு அடிமையாக வாழவும் என் மனம் நாடியது. கிடைக்கவில்லையானால், அண்ணியின் கால்மாட்டில் விழுந்து ஆடிப்பாடிக் காலம் கழிக்கலாம் என்றும் மனம் துணிந்தது. 

இந்த உலகத்தில் எல்லாரும் அரிச்சந்திரர் என்று எண்ணியதால் கெட்டேன். அழகு இருந்தது, திறமை இருந்தது, அறிவு இருந்தது, இனிமையான பேச்சும் இருந்தது; ஆனால் அவனுக்கு அன்பு என்ற ஒன்று இல்லை என்று தெரியாமல் போயிற்று. மூளை இருந்தாலும் இதயம் இல்லாத ஆட்கள் இருப்பதைத் தெரிந்துகொள்ளாமல் கெட்டேன். 

இந்த உயிர் இளங்கோவின் உயிர். இந்த மனம் இனி அவருக்கே அடிமை. இந்த உடல் அவருடையதே. ஆனால் ஒரு குறை; அவருக்குத் தூய்மையான உடலை ஒப்படைக்க முடியாத பாவியாக இருக்கிறேன். இன்று கண்ணீர் விட்டுப் பயன் இல்லை. அன்று தவறினேன். 

கண்ணீர், கழுவாத மாசையும் கழுவிவிடும் என்று சொல்கின்றார்கள். இதை வேறு யாருக்கும் சொல்ல வில்லை. அவருக்கும் சொல்லக் கூடாது. இது வஞ்சம் அல்ல; ஆனால் என் கண்ணீரை அவர் கண்டு உருகச் செய்ய முடியாதல்லவா? அண்ணிக்கும் அப்படியே சொல்லக் கூடாது. ஆனால் கண்ணீர் விட்டு விட்டு நான் என் அன்பைப் பெருக்கி அவருக்கு முழு அடிமை. ஆன பிறகு வேண்டுமானால் சொல்லலாம். 

இண்டர்மீடியட் பாடப்புத்தகங்கள் இரண்டையும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். கூடத்தில் இருந்த அவர், இரண்டு கைகளையும் நீட்டி ஏந்திக் கொண்டிருந்தார். அவர் முன்னேற்பாடாக அவ்வாறு கை ஏந்தியிருந்தார். எனக்கும் அந்த நிலை இருந்திருந்தால், அந்த இரண்டு கைகளில் என்னையே ஒப்படைத்திருப்பேன். சூடுண்ட பூனை அல்லவா? சந்தேகமும் பயமும் என்னை விடவில்லை. அந்தப் புத்தகங்களை மட்டும் அவருடைய கையில் வைத்து விட்டு அப்படியே சமையலறைக்குள் சென்றேன். 

ஆங்கிலப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் சி.செந்தாமரை என்று என் பெயரையும் என் தந்தை சிவகுரு என்ற பெயரின் முதலெழுத்தையும் எழுதியிருந்தேன். அவரும் அண்ணியும் போன பிறகு, அந்தப் புத்தகத்தைப் பிரித்தால், அதன் கீழே அவருடைய விண்ணப்பம் இருந்தது. இளங்கோவின் செந்தாமரையாக என்னை வரவேற்றார். இ.செந்தாமரை என்று எழுதியிருந்தார். முழுப்பெயரும் இளங்கோ என்று எந்தப் பக்கத்தின் மூலையிலாவது எழுதியிருப்பாரோ என்று அந்தப் புத்தகத்தை ஏடுவிடாமல் பார்த்தேன். தமிழ் புத்தகத்தையும் பக்கம் பக்கமாகப் பார்த்தேன். “என்ன அம்மா, புத்தகத்தில் படம் பார்க்கிற நினைவு வந்துவிட்டதா?” என்று அண்ணன் கேட்டபிறகு தான் புத்தகத்தை மூடினேன். போதும்; அந்த ஓர் எழுத்தே போதும். ‘இ’ என்று என் பெயருக்கு முன் தலைப்பெழுத்தாக எழுதினாரே, அந்த ஓர் எழுத்துக்கே என் உயிரையும் உள்ளத்தையும் உடம்பையும் அவருக்கு விற்றுவிட்டேன். எது வந்தாலும் வரட்டும். அண்ணியின் நம்பிக்கைக்கு உரிய அவர் என்னைக் கைவிடமாட்டார் என்று துணிவு கொண்டேன். 

மருதப்பரைப் பற்றி அப்படி ஒருவகைத் துணி வும் நான் கொண்டதே இல்லை. ஆனால் என்னை அறி யாமல் ஒருவகைக் கவர்ச்சி இருந்தது. என் மனம் அவரை நாடியது. அவர் பார்த்த பார்வையும் கவர்ச்சியான பார்வை. அது என் கண்களை விட்டு நீங்காமல் நின்றது.எப்படியோ மேசைப் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்; காகிதம் எடுத்தேன். பென்சில் எடுத்தேன்; ஓவியம் எழுதினேன். அவருடைய உருவம் என் உள்ளத்தில் பதிந்திருந்தபடியே எழுதினேன். பக்கத்தில் அமர்ந்திருந்த அவருடைய உருவத்தையும் என்னவோ நினைத்துக்கொண்டே எழுதி முடித்தேன். அதுவரையில் நான் செய்த தவறு தெரியவில்லை. 

என் பெயரை வழக்கம் போல் கீழே எழுதினேன். ஒரு கேள்விக்குறி இட்டேன். அதற்குள் அண்ணி வந்தாள். அவளுக்குக் காட்டினேன். அவள் தன் அண்ணனுடைய படம் இருப்பதால் தனக்கு வேண்டும் என்று கேட்டாள். அதில் இளங்கோ நன்றாக இல்லை என்றும், அவருடைய முகம் நன்றாக அமைந்த படம் தனியே எழுதித் தருவதாகவும் சொன்னேன். 

சிறிது நேரம் கழித்துத் தனிப்படம் எழுத உட் கார்ந்தேன். என் கண் எதிரே மருதப்பரின் உருவம் வந்ததே ஒழிய இளங்கோவின் உருவம் நிற்கவில்லை. அகக்கண்ணில் பதியாத உருவம் கலைஞன்கையில் ஓவியமாக எப்படி நன்றாக உருப்பெற முடியும் ? என்னுடைய கையோ மருதப்பருடைய உருவத்தையே எழுதத் துடித்தது. 

“முன்னே இளங்கோவின் உருவம் எழுதவந்ததே இப்போது ஏன் வரவில்லை” என்று எண்ணினேன். காரணம் விளங்கியது. ஒரு பசுவின் உருவத்தை உள்ளத்தில் பதித்த ஓவியக்காரன் அந்தப் பசுவை எழுதும்போது அதன் சூழ்நிலையை இயல்பாக எழுதிவிடுவான். ஆனால் பசு இல்லாமல் சூழ்நிலைமட்டும் நன்றாக எழுத முடியாதல்லவா? எனக்கும் அப்படியே. மருதப்பரே என் மனத்தில் பதிந்திருந்தவர். அவரை விட்டு அவருடைய சூழ்நிலையை மட்டும் சிறப்பாகத் தனியே எழுத முடியாமல் திகைத்தேன். காகிதத்தையும் பென்சிலையும் எடுத்து மேசையறையில் வைத்துவிட்டு நாற்காலியில் சாய்ந்தேன். 

அந்த மருதப்பருடைய உருவம் வந்து நின்றது; அந்தக் கவர்ச்சியான பார்வை வந்து நின்றது. அவர் அண்ணிக்குச் செய்த உதவி நினைவுக்கு வந்தது. சைக்கிலில் அடிபட்டபோது மருந்துகொண்டு வந்தது, கட்டுக் கட்டியது, வழிகாட்டி அழைத்துக்கொண்டு வந்தது இந்தக் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக என் முன் வந்து நின்றன. ஒவ்வொன்றாய் என் நெஞ்சத்தை உருக்கிக்கொண்டே வந்தன. 

“அவர் யாரோ? அவரை நான் ஏன் இப்படி வேலை கெட்டு நினைக்க வேண்டும்? கவர்ச்சியான பார்வையாக இருந்தால் அவர் வரைக்கும் இருக்கட்டும், நமக்கென்ன?” என்று வந்த எண்ணங்களைத் தடுத்திட முயன்றேன், முடியவில்லை. சிறந்த அறிஞர் என்றும், ‘தென்றல்’ பத்திரிகையின் துணையாசிரியர் என்றும் இளங்கோ சொன்னதை நினைத்தேன். நான் முந்திரிக் கொட்டை போல் “தென்றல்” பத்திரிகை படிப்பதாக விளம்பரப்படுத்திக்கொண்டேன்: ‘ஊர்வம்பும்’ ‘மன்’ என்ற புனைபெயருடன் வரும் கதைகளும் எழுதுவதாக அவர் சொன்னார். இவையெல்லாம் தொடர்ந்து நினைவுக்கு வந்தன. அவர் அந்தப் பதில் சொன்ன போது என்னைப் பார்த்துத்தான் சொன்னார். அப்போது பார்த்த பார்வைதான் என்னைக் கவர்ந்த பார்வை. அவருடைய பதில் நினைவுக்கு வந்த அதே நேரத்தில் அந்தப் பார்வையும் என்முன் வந்துநின்றது. அப்போது என் நெஞ்சம் என்னை அறியாமல் நீராய் உருகியது. ஏன்? அந்தப் பார்வை அமைந்த உருவம் தான் என் ஓவியத்தில் இருப்பது. நேரில் பார்த்தது ஒருமுறை; எழுதிப் பார்த்தது பலமுறை; நினைத்துப் பார்த்தது பலமுறை; கடைசியாக இப்போதுதான் நான் துன்பம் மிக்கவள் ஆனேன். பெருமூச்சு விட்டேன். எழுந்தேன். இங்கும் அங்கும் திரிந்தேன். மறுபடியும் நாற்காலியில் வந்து சாய்ந்தேன். 

அண்ணி சொன்ன உதவி நினைவுக்கு வரத் தொடங்கியது. சைக்கிலில் அடிபட்டபோது அவர் மருந்து கொண்டு வந்த காட்சி வந்தது. அண்ணி வழி தவறியதற்குப் பதில் நான் வழி தவறிப் போய்ச் சைக்கிலில் அடிபட்டிருந்தால்—, அவர் எனக்கு மருந்து கொண்டுவந்து இட்டு உதவி செய்திருந்தால் -, துணியால் கட்டுக் கட்டியிருந்தால் – என்று புதிய புதிய எண்ணங்கள் எழுந்து என்னை அல்லல்படுத்தின. நான் திரும்பி வீட்டுக்கு வராமல் அந்த மருதப்பருடன் அங்கேயே தங்கி வாழ்ந்திருந்தால் — என்று இந்தக் கற்பனை வந்ததும் என் நெஞ்சின் வேகம் அளவு கடந்து போயிற்று. அந்த மேசையறையைத் திறந்து ஓவியத்தை எடுத்துமருதப்பரை என் கண்களில் ஒத்திக்கொண்டு கண்ணாரப் பார்த்தேன். 

நுங்கம்பாக்கம் போய் அந்தத் தெரு வழியாக நடந்தால் அவரைப் பார்க்க முடியாதா என்று ஏங்கினேன். ஆனால் அவருடைய முகவரி கேட்டு வாங்கவில்லை. அண்ணியைக் கேட்டுப் பார்க்கலாம் என்று எழுந்தேன். அவளை நெருங்கினபோது, “பூங்கொடியை நினைத்துக்கொண்டிருக்கிறாயா, அண்ணி?” என்று கேட்டுவிட்டுத் திரும்பினேன். 

எத்தனையோ ஆண்மக்களைப் பார்த்திருக்கிறேன்.. ஆனால் மருதப்பர் மட்டும் ஏன் என் மனம் கவர்ந்தார் என்று எண்ணினேன். அவர் தோற்றம் ஒரு தனித் தோற்றம்; அதுவும் அல்ல, முகத்தில் ஒரு தனி அழகு; அதுவும் அல்ல, கண்ணில் ஒரு தனிப்பார்வை; அதிலும் ஒரு தனிக் கவர்ச்சி என்று எண்ணிக்கொண்டே என் மனத்தைக் கவர்ந்த பொருள் தெரியாமல் தேடினேன். 

அன்று இரவு உணவு உண்ணவும் மனம் இல்லை. “உடம்பு எப்படியோ இருக்கிறது” என்று அண்ணி’ யிடம் பொய் சொல்லி உறங்கப் போனேன். 

மறுநாள் மாலை கல்லூரியிலிருந்து பழைய சோர்வோடு திரும்பியபோதுதான் கை ஏந்தி உட்கார்ந்திருந்த கடவுளைக் கூடத்தில் கண்டேன். புத்தகத்தை அவருடைய கையில் வைத்துவிட்டுச் சமையலறையில் நுழைந்தேன். கொஞ்சமும் பொறுத்திராமல், “இன்னொருவர் எங்கே?” என்று அண்ணியைக் கேட்டேன். பாலுக்குச் சர்க்கரை இட்டுக் கலக்கும்போது, கரண்டி.. தடுக்கிப் பால் கவிழ்ந்தது போல் ஆயிற்று என் நிலைமை. 

மருதப்பர் மனைவியோடு வரப்போவதாக ‘அண்ணி’ சொன்னாள். என்னை நொந்துகொண்டேன். என் ஓவியத்தை நொந்தேன். எழுதிய கையையும் நொந்தேன். என் கண்ணையும் நொந்தேன். 

உள்ளொன்று புறமொன்று இல்லாத கரவற்ற அந்த அம்மா மருதப்பருக்கு மனைவியாக இருக்க, என் மனம் அவரை நாடியது குற்றம்தானே! அந்த அம்மா யாராக இருந்தால் என்ன? திருமணமான ஒருவரை நான் விரும்பலாமா? அவருடைய பார்வை எவ்வளவு கவர்ச்சியாக இருந்தால் என்ன? என்னைப் போன்ற ஒரு பெண்ணின் வாழ்வுக்கு நஞ்சு அல்லவா அது? இரண்டே நாள் இருந்த அந்தப் பாழும் உறவிலே முன்னே நான் பட்ட பாடு – என் மனம் உடைந்து வருந்திய வருத்தம் – அப்படியிருந்தால், சில ஆண்டுகள் வாழ்க்கை நடத்தின பெண்ணின் மனம் முறிந்தால் எவ்வளவு துயரம் நேரும்? வாழ்க்கை என்ன ஆகும்? இவ்வாறு கலங்கிச் சமையலறையில் உட் கார்ந்தவாறு சோர்ந்துவிட்டேன். அண்ணி என்ன என்னவோ சொன்னாள், கேட்டாள். எல்லாவற்றிற்கும் செவிடாக இருந்தேன். 

குற்றம் செய்தேன் என்று ஒரு பக்கம் வருந்தினேன். இரண்டு நாளாகக் கண்டும் நினைத்தும் ஓவியம் எழுதியும் அதைப் பார்த்தும் கட்டிய காதல்கோட்டை இடிந்த ஏமாற்றம் ஒருபக்கம் வருத்தியது. 

“திருமணமான ஆண்மகன் ஒருவன் மற்றொரு பெண்ணை ஏன் அப்படிப் பார்க்கவேண்டும்? மருதப்பர் தம் மனைவியை மறந்து இப்படிப் பிறர் மனத்தைக் கவரலாமா?” என்றும் எண்ணினேன். ஆண்கள் தவறு செய்வதும், பெண்கள் ஏமாற்றம் அடைவதும் உலக அமைப்போ என்று பெமூச்சு விட்டேன். 

சமையலறையில் இருந்தபடியே அந்த ஓவியத்தை நினைத்தேன். அன்று மருதப்பரும் இளங்கோவும் வந்து போனபிறகு மனத்தில் அவர்களின் உருவம் இயற்கையாகப் பதிந்துவிட்டது. மருதப்பரின் உருவமோ கவர்ச்சியாகிய உயிரும் பெற்று மனத்தில் உலாவியது. என்னை ஆட்டி வைத்தது அதுதான். என் வசம் இழந்து ஓவியம் எழுதி முடித்தேன். அந்த ஓவியம் எழுதாமல் இருந்திருந்தால் இவ்வளவு வருத்தமான ஏமாற்றம் ஏற்பட்டிருக்காது என்று எண்ணி, கற்ற ஓவியக் கலையை நொந்தேன். ஓவியம் ஏன் கற்றேன், ஏன் கற்றேன் என்று வருந்தினேன். ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்னும் பாட்டு என் செவியில் ஒலித்துக்கொண்டிருந்தது. 

அறியாமையே பேரின்பம் என்னும் ஆங்கிலப் பழமொழியை நினைத்துக்கொண்டேன். இண்டர்மீடியட் படித்த பெண் இன்னல்பட வேண்டியதாக உள்ளது. வெறுங் கல்லூரிப் படிப்போடு நின்றுவிடாமல் பொழுதுபோக்காய்க் கற்ற ஓவியக்கலை, இன்னலைப் பெருக்கி அணுவை மலையாக்கியது. படிப்பாலும் கலையாலும் உணர்வு நுட்பம் ஆக ஆக, சிறிய நிகழ்ச்சியும் பெரிதாகத் தோன்றிப் பெருந்துன்பம் தருகின்றது: பேரின்பமும் தருகின்றது. ஆனால் படிப்பு இல்லாமல் கலையுணர்வு இல்லாமல், ஆடு மாடு போல் வாழும் பெண்ணாக இருந்திருந்தால், இவ்வளவு துன்பமும் இல்லை; இன்பமும் இல்லை. 

கலைகளிலே ஓவியக் கலை பொல்லாதது, மிகப் பொல்லாதது என்னும் முடிவுக்கு வந்தேன். ஒரு நொடிப்பொழுது கண்ட ஒரு தோற்றம் விரைவில் மறைந்துபோயிருக்கும்; அறிவற்ற உணர்வற்ற பெண்ணாக இருந்திருந்தால் உடனே மறந்துபோயிருக்கும். அறிவும் உணர்வும் பெற்ற பெண்ணுக்கு ஒரு நாழிகை நேரம் மறக்காமல் நிற்கும். ஓவியக்கலை வல்ல நானோ, அதை அழியாமல் நிலைபெறச் செய்தேன்; உள்ளக்கிழியில் பதித்து அழியா வாழ்வைத் தந்தேன். அதனால்தான் இப்படிப்பட்ட வருத்தமும் ஏமாற்றமும் அடைந்தேன். கலையறியா நெஞ்சம் கல் நெஞ்சம், மண் நெஞ்சம், மர நெஞ்சம். காதல் என்னும் கதிரவனுக்கு எதிரே இந்தக் கல்லும் மண்ணும் மரமும் உருகுவதில்லை. மெழுகுதான் உருகும். ஓவியக் கலையால் என் கல் நெஞ்சம் மெழுகாய் இளகியுள்ளது. அந்தக் கலையைத்தான் நொந்தேன். 

என் உள்ளக்கிழியில் மருதப்பர் மெல்ல மெல்ல நீங்கினார். உடனே, இளங்கோ வந்து சேர்ந்தார். அவருடைய ஏந்திய கைகள், ஆவலோடு நோக்கிய கண்கள் இவைகளுக்கு அழியா வாழ்வைத் தருமாறு என் அறிவு தூண்டிற்று. சமையலறையை விட்டு மெல்ல எழுந்து வெளிவந்தேன். கலைத் தொழில் ஒரு படைப்பு வேலை. அதைக் கற்றுக்கொண்ட கலைஞர்கள் எந்தத் துன்பத்தையும் துரத்தலாம் என்று ஓர் அறிஞர் எழுதியிருக்கிறார். பாடும் புலவன் புதிய கற்பனை ஒன்றைப் படைத்து அதற்கு வாழ்வு தரப் பாட்டெழுதத் தொடங்கிவிட்டால், உலகம் புரண்டாலும் அவனுக்குப் பெரிதாய்த் தோன்றாதாம். பாடும் புலவன் ஓவியக் கலைஞனைவிடப் பெரியவன். ஏனென்றால் அந்தப் புலவன் தன் துன்பத்தையே திரும்பி நோக்கி அதைப் பாட்டாக வடிக்கலாம். உலகம் அதைச் சிறந்த காவியம் எனப் பாராட்டும். புலவனும் பாட்டு முடிந்தவுடனே கவலையைக் கலையாக்கிய பெருமையோடு இறுமாந்து திரிவான். ஆனால், நானோ என் துன்பத்தை எவ்வாறு எழுதுவேன் ? மருதப்பரை எழுதவோ கைவரவில்லை; என் மனநிலையை எழுதவோ எனக்கே தெரியவில்லை. இது ஓவியக் கலையின் குறையோ, நான் கற்ற கலையளவின் குறையோ, தெரியவில்லை. 

ஆனால் நானும் என் உள்ளத்தை ஓவியமாக்க எண்ணினேன் – பழைய துயரை அல்ல, புதிய விருந்தை. கை ஏந்திக் கூடத்து நாற்காலியில் இருந்த இளங்கோவை எழுதத் துணிந்தேன். இந்தப் படைப்பு வேலை இல்லாதிருந்தால் அன்று மாலை நான் அரைப்பைத்தியம் ஆகியிருப்பேன். 

8. திருநாதன் 

இந்த மார்ச்சு மாதத்தோடு தேர்வு முடியப் போகிறது.அப்புறம்தான் வாழ்க்கைப்போர் தொடங்கும் என்று இருந்தேன். ஆனால் நாம் எதிர் பார்க்கும் நாளில் அது வருவதில்லை. முன்னே வருவதும் உண்டு. பின்னே வருவதும் உண்டு.பின்னே வந்திருந்தால் நல்லது; தேர்வுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும். ஆனால் முன்னே வந்துவிட்டது. “ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்.” 

திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்க்கையை நடத்திவிடலாம் என்று பலமுறை முடிவு செய்தது உண்டு.அது பொருத்தமான முடிவுதான். என்னைப் போல் அமைதியை விரும்புகிறவர்களுக்கு இந்தக் காலத்து ஆரவாரப் பழக்கம் இல்லாமல் போகிறது. ஆனால் உலகமோ ஆரவாரம் நிறைந்தது. ஆதலால் உலகத்திற்குத் தகுந்தவாறு ஆரவாரம் இல்லாதவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்த முடியாது. வருகிற மனைவி எந்தப் போக்கில் பழகியிருப்பாளோ? நல்லவளாக இருந்தாலும் சுற்றுப்புறம் கெடுத்துவிடுவது இயற்கை. ஆகையால் திருமணம் செய்துகொள்ளாத தனி வாழ்க்கை நல்லது என்றே பலநாளாக எண்ணித் துணிந்திருந்தேன். 

பேராசிரியர் மகாதேவனிடம் படித்ததால் பல உண்மைகளைக் கற்றுக்கொள்ள முடிந்தது. தத்துவத்தைப் பாடமாக எடுத்துக்கொண்டு எம்.ஏ. படிப்பவர்கள் அவற்றைத் தெரிந்துகொள்ளாவிட்டால் பயன் இல்லை. அவற்றை உண்மை என்று நம் நாட்டுப் பெரியவர்கள் எத்தனையோ நூற்றாண்டுகளாக எடுத்துக் கூறிவருகிறார்கள். ஆனால் கற்றவர்களாவது அந்த நெறியில் நிற்க வேண்டாவா? எம்.ஏ.படித்து விட்டேன். தத்துவ நூலில் வல்லவன் என்று மேடையில் விளம்பரப்படுத்திக்கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை. கற்றநெறியில் நிற்க வேண்டும். அதற்காகத்தான் தனிவாழ்க்கையைத் துணிந்திருந்தேன். 

நல்ல காலமாக என் துணிவு என்னோடு நின்றது. அதை யாருக்கும் சொல்லவில்லை. தன் உள்ளத்திற்கே உறுதியாகும் துணிவுகளைப் பிறருக்கு எடுத்துச்சொல்வது உள்ளத்தின் உறுதியைக் குறைக்கும். உளநூல் வல்லவர்களின் கருத்து இதுதான். அதனால் வெளியிடாமல் இருந்தேன்.கோவில் சொற்பொழிவு செய்கிறவர்கள் எல்லா உண்மைகளையும் வாயாரச் சொல்லிச் சொல்லித் தங்கள் வாழ்க்கையில் ஒன்றையும் கடைப்பிடிக்காமல் அழிகிறார்கள். அப்படி ஆவதில் பயன் என்ன? 

என் தமக்கைக்கும் அத்தானுக்கும் கூடச் சொல்லாமலிருந்தது நல்லதுதான். சொல்லியிருந்தால் இப்போது என் மனமாற்றத்தைக் கண்டு சிரிப்பார்கள். அவர்கள் சிரிப்பதால் எதுவும் கேடு இல்லை.ஆனாலும் அதற்கு ஏன் இடம் தர வேண்டும்? 

தமக்கைக்கும் அத்தானுக்கும் நுட்பமாகத் தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான், தங்கையை என்னோடு படிக்கவைத்தார்கள். அவள் வழியாகப் பல பெண்கள் என்னோடு பழக நேரும் என்றுதான் எண்ணியிருப்பார்கள். இப்போது கடிதம் எழுதி என்னை வருவித்து, என்னோடு திலகத்தை அனுப்பியதிலும் இந்தக் கருத்து இருக்க வேண்டும். 

அப்படியானால் அவர்கள் செய்த முயற்சி வெற்றி பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். அவள் எனக்குப்பொருத்தமானவள் தான். என்னைப்போலவே அமைதியானவள். படபடப்பும் பரபரப்பும் இல்லாதவள். செந்தாமரையை நான் வெறுப்பதற்கு இது தானே காரணம்? தங்கையாக இருந்தாலும் என்ன? கல்லூரியில் படித்தால் தலைகால் தெரியாமல் போய் விடுவதா? கல்லூரியில் படிக்காத திலகம் அவளை விட ஆயிர மடங்கு மேலானவள். 

தங்கை கெட்டவள் அல்ல; செல்வமாக வளர்ந்தவள்; கவலை தெரியாதவள்; வாழ்க்கையைப் பற்றிய பயம் இல்லாதவள்; இளங் கன்று; துள்ளுகின்றாள். திலகத்தோடு சிலநாள் பழகின அளவில் எவ்வளவோ திருந்திவிட்டாள் என்று சொல்லலாம். அதிலும் ஒரு வாரமாகப் பார்த்தால் மிக ஒழுங்காக இருக்கிறாள. அவளுக்கும் ஒரு திருமணம் கூடிவிட்டால் குடும்பம் அமைதியாகும். திலகமும் நானும் வாழத் தடை இருக்காது. 

திலகத்திற்கு என்மேல் அன்பு உண்டோ, இல்லையோ என்று ஐயம் இருந்தது. “ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள” என்று திருவள்ளுவர் சொன்னார். இருந்தாலும், அப்படிப் பொதுநோக்கைக் கண்டு காதல் ஆராய்ச்சி செய்வது அருமையானது. அதுவும் தவிர, அவள் என்னைப் பார்க்கும்போது, எதிர்நோக்காகப் பார்க்க என்னால் முடியவில்லை. அவளுக்கு இருக்கும் நாணத்தைவிட எனக்கு மிகுதியாக இருக்கும் போல் தோன்றுகிறது. 

நாணம் குறைந்த பெண்களிடம் பேசும்போது நாணம் இல்லாமல் நான் பேச முடிகின்றது. ஆனால் நாணம் நிறைந்த பெண்களின் முன்னிலையில் நானும் அவர்களைப் போல் ஒரு பெண்ணாகிவிடுகின்றேன். இதை இனிமேல் என்னால்மாற்றிக்கொள்ள முடியாது; திலகம் நாணம் நிறைந்தவள். அவளைப் பார்க்க எனக்கு நாணமாய் இருந்தது. “அவளுக்கு என்மேல் அன்பு இல்லையானால், நான் பார்த்தால் அவள் வெறுப்பு அடைவாள் அல்லவா?” என்று பலவாறு எண்ணிக்கொண்டு அமைதியாய் இருந்தேன். ஆனாலும், என்னை அறியாமல் ஒருவகை உணர்வு என் உள்ளத்தில் இருந்தது. தமக்கை தங்கை முதலிய மற்றவர்களிடம் செலுத்தும் அன்பு வேறுதான்; திலகத்தைப் பற்றி என் உள்ளத்தில் உள்ள அன்பு வேறுதான். 

வழி தவறி நுங்கம்பாக்கம் போய்விட்டாளே, அன்றைக்கு என் வருத்தம் செந்தாமரைக்கும் தெரிந்து விட்டது. “வருவாள் அண்ணா, அதைப் பற்றிக் கவலை வேண்டா” என்று எனக்கு அவள் தேறுதல் கூற வந்துவிட்டாள் அல்லவா? எம்.ஏ. படிக்கின்ற அண்ணனுக்கு இண்டர்மீடியட் படிக்கின்ற தங்கை ஆறுதல் கூறினாள். அவ்வளவு வருத்தம் என் முகத்தில் இருந்திருக்கும். உண்மைதான். அவளைத் தேடிக் கொண்டு சாலையில் போனபோது எதிரில் வந்ததைப் பார்த்ததும் புதையல் கண்டவனைப்போல் மகிழ்ந்தேன் அல்லவா? 

இந்த ஒன்றை எண்ணினால் இப்போதும் என் உள்ளம் குளிர்கின்றது. அவள் யாரோ ? எந்தக் குடும்பத்துப் பெண்ணோ? பெற்றோரும் யாரோ ? நான் யார்? எந்தக்குடும்பத்தான்? என் உறவும் நிலைமையும் என்ன? மருதப்பன் முன்னே வழி காட்டிக்கொண்டு வந்தான். பின்னே அவள் வந்தாள். என்னைப் பார்த்ததும் நின்றாள. மருதப்பனை விட்டுவிட்டு என் பின்னே வந்தாள். அவனும் அயலான்தான்; நானும் அயலான் தான். அவனை விட்டுவிட்டு என் பின்னே வந்தாள். சில நாள் பழக்கம்தான் என்று என்னைப் புறக்கணிக்காமல் உண்மையான அன்போடு வந்தாள் அல்லவா? 

மருதப்பனைப் பற்றி எல்லோரும் சிறப்பாகவே பேசுகிறார்கள். நான் வழக்கம் போல் அவனிடமும் மிகுதியாகப் பேசவில்லை. பழக்கமில்லாமல் எப்படித்தான் மணிக் கணக்காகப் பேசிக்கொண்டிருப்பது? அவன் பி.ஏ. படித்தவன். அவனுடைய மனைவியோ உயர்நிலைப்பள்ளியை எட்டிப் பார்க்காதவளாம். அன்றைக்கு வந்தார்கள்; அமைதியாக இருந்து பழகினார்கள். நல்ல குடும்பம் என்று தான் தெரிகிறது. போதாதா அவ்வளவு வாழ்க்கை? மருத்தப்பனைவிட அவள் அறிவிலும் படிப்பிலும் குறைந்தவளாக இருந்தாலும் தூய்மையான சிறந்த வாழ்க்கை வாழ முடிகிறது. திலகம் பத்தாவது படித்திருக்கிறாள். அதுவே போதும். தாய்மொழியில் அவள் தாயுமானவர் படிப்பாள், நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள பாடல்களைப் படிப்பேன். இதுதானே வேற்றுமை? 

இளங்கோவைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் கற்றவன், கலையுணர்வு உடையவன் என்று சொல்லலாம். இந்தக் காலத்து நாகரிகத்துக்கு அடிமை என்று சொல்லலாம். அது ஒரு குறை அல்ல. அப்படி இருப்பவர்கள் பலர் மிக நல்ல வழியில் திருந்திவிடுகிறார்கள். சுவாமி இராமதீர்த்தர், விவேகாநந்தர் முதலானவர்கள் நாகரிகமான இளமை வாழ்வைக் கண்டவர்கள் அல்லவா? இளங்கோவின் மனம் நல்ல மனமாகத்தான் இருக்கும். என நம்புகிறேன். திலகத்தை உயிராக மதிக்கிறான்; உண்மையான அன்பு காட்டுகிறான். நான் பார்த்ததே இரண்டு முறைதானே? நன்றாகப் பழகவில்லை; பழகினால் தெரியும். 

அவன் செந்தாமரையைக் காதலிப்பதாகத் தெரிகிறது. அந்த மடப்பெண் எளிதில் நம்பிவிடுவாள். அதன் பிறகு ஏமாற்றம் அடைந்தால் ஏங்குவாள் சென்ற ஆண்டில் நடந்தது அதுபோல்தான் என்று தோன்றிற்று. அப்புறம் அந்தப் பேச்சோ நடையோ இல்லை. இளங்கோ அவளுக்கு நல்ல துணைதான். ஆனால் அவசரப்படாமல் பொறுத்தார்களானால் இருவருக்கும் நன்மை உண்டு. மருதப்பனுடைய நண்பன், திலகத்தின் அண்ணன் – இந்த இருவகையிலும் பார்க்கும்போது அவன் நல்லவனாக, உ.ண்மையுள்ளவனாகத்தான் இருக்க வேண்டும். அவளும் விரும்புகிறாள் என்று தெரிகிறது. போதுமே! 

மேசையின்மேல் நேற்றுச் சாக்குத் துண்டால் ‘இளங்கோ’ என்று எழுதியிருந்தது. அவளுடைய கையெழுத்துத்தான். திலகம் அப்படி எழுதமாட்டாள்; அந்தத் துடுக்கான பழக்கம் திலகத்துக்கு இல்லை. கீழே செந்தாமரை என்ற பெயரும் எழுதி அடித்திருந்தது. 

அடித்திருந்தபடியால் அது யாருடைய கையெழுத்து என்று கண்டுபிடிக்க முடியவில்லை. 

மருதப்பன் வீட்டுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை விருந்துக்குப்போகப்போகிறோம். அப்போது அவனைக் கேட்டால் என்ன? அவனைக் கேட்பதென்றால் எப்படித் தொடங்குவது? நாமாகப் பெண் கொடுப்பது போல் ஆகுமே! அது நாகரிகமாகத் தெரியவில்லையே. 

தமக்கையார் இங்கே இருந்தால் அந்தப் பொறுப்பு அவர்களைச் சாரும். இப்போது நான் பெரியவன், ஆனதால் தங்கையைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டிய தாகத் தெரிகிறது. தங்கைக்கு விருப்பம் என்று நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான் அவள் ஐந்தாறு நாளாக மிகவும் அடக்கமாக மாறிவிட்டாள். உள்ளத்தில் காதல் போராட்டம் வந்துவிட்டது. பழையபடி இளங்கன்றாய்த் துள்ள முடியவில்லை. இளங்கோவுக்கும் அவள் மேல் விருப்பம் இருப்பது நன்றாகத் தெரிகிறது. 

நம்முடைய குடும்பமோ பழிப்புக்கு இடமான குடும்பம்.நாம் எவ்வளவு தூய்மையாக நடந்தாலும் நான்கு தலைமுறைக்கு முன்னே செய்த தவறு முன் வந்து நிற்கும். உலகம் அவ்வளவு முற்போக்கான உலகம் அல்ல. ஒரு வேளை எல்லா ஏற்பாடும் முடிந்த பிறகு இளங்கோவின் தாய்க்குப் பிடிக்கவில்லை என்றால் செந்தாமரையின் வாழ்க்கைக்குப் பழிதானே? தவிர, உறவினரின் வீட்டில் பெண் இருக்கலாம். அம்மான் பெண், அத்தை பெண் என்று பழங்கால முறைப்படி இருக்கலாம். முன்னே அவர்கள் கொடுக்க மறுத்திருக்கலாம். இப்போது வேறு ஏற்பாடு என்று கேள்விப்பட்டால் நான் நீ என்று வலிய வந்து வற்புறுத்தலாம். உறவினர்கள் கண்ணீர் விட்டு வற்புறுத்தினால் இணங்கக் கூடிய மென்மை இளங்கோவுக்கு இருக்கலாம். எவ்வளவு இடர்? யாரைக் கேட்பது? 

திலகத்தையும் வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்துவிட ஏற்பாடு நடத்தலாம். ஆனால் அது நடக்காது. அவள் என்னைப் போல அமைதியானவள். ஆகையால் அமைதிக்குத் தகுந்த உறுதியும் இருக்கும். உறுதி தளராது. இளங்கோ போன்ற பரபரப்பு உடையவர்களுக்குத்தான் உறுதி இருப்பது அருமை. இன்றைக்கு ஒன்றைப் பற்றுவார்கள். நாளைக்கு வேறொன்றைப் பற்றுவார்கள். திலகம் மாறவே மாட்டாள். ஆனால் இளங்கோ? 

இதைத் தெரிந்துகொள்வது யார்? அவனுடைய தாயின் மனம் எப்படி இருக்குமோ? திலகம் அன்று வேப்பேரிக்குப் போய்ப் பெரியம்மாவைப் பார்த்தாள். அங்கே ஏதாவது திருமணப் பேச்சு நடந்திருக்கும். உண்மைகள் விளங்கியிருக்கும். ஆகையால் திலகத்தையே கேட்டுவிட்டால் – அதுதான் நல்லது. இளங்கோவின் குணத்தைப் பற்றியும் அவளைவிட நன்றாக அறிந்தவர் யார்? அறிந்திருந்தாலும் அவளைப் போல உண்மையை ஒளிக்காமல் சொல்லக் கூடியவர் யார்? ஆகையால் அவளையே கேட்பேன். 

திருமணத்தைப் பற்றி அவளை எப்படிக் கேட்பது? அதற்குத் தகுந்த வாய்ப்பு வேண்டும். நானோ கூச்சக்காரன். அது இப்போது கெடுதியாகத் தெரிந்தாலும் என் வாழ்க்கையில் அது எவ்வளவோ நன்மை செய்திருக்கிறது. இதுவரையில் காமுகனாகி நான் கெடாமலிருந்தேன் என்றால் என் நாணம்தான் முக்கியமான காரணம் என்று சொல்வேன். மனத்தில் எண்ணித் துணியாவிட்டால் வாயில் வராது. மனத் தில் எண்ணுவதென்றால் தகாததை எண்ணுவதற்குள் பெரிய போராட்டம் நடந்து தடுத்துவிடும். அப் படி எண்ணினாலும் வாய்ச்சொல் வராது. இது நன்மை செய்தது போய்த் தீமையும் செய்திருக்கிறது. ஒரு கூட்டத்தில் சொற்பொழிவாளருக்கு ஒரு பாட்டு நினைவுக்கு வராமல் தடுமாறும்போது, எல்லாரும் திகைத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு நினைவு வரும். ஆனால் சொல்லத்தயங்குவேன். யாராவது சொல்லிப் புகழ் பெற்றுக்கொள்வார்கள். இப்படி எத்தனையோ முறை நல்ல வாய்ப்புகளை நெகிழவிட்டேன். ஆனால் நன்மையும் சிலமுறை பெற்றிருக்கிறேன். தவறான ஒன்றைச் சொல்லவோ, பொருந்தாத கேள்வியைக் கேட்கவோ மனம் எண்ணியிருக்கும். ஆனால் வாயில் சொற்களை வெளிவிடாமல் தடுத்துவிடுவேன். அந்தச் சமயம் போனதும் என் தவறுகள் விளங்கும். சொல்லியிருந்தால் கெட்ட பெயர் வந்திருக்கும். சொல் லாமல் தப்பினேன் என்று எண்ணி மகிழ்வது உண்டு. 

இனிமேலும் அந்தப் பழக்கம் விடாது. அது இயற்கையாகிவிட்டது. ஆனால் இந்தக் கடமையைப் பொறுப்போடு நிறைவேற்ற வேண்டும். இதற்கு வேறு யாரைக் கேட்டும் பயன் இல்லை. திலகத்தைத்தால் கேட்க வேண்டும். 

திலகத்தைக் கேட்க வேண்டியதும் இல்லை. திலக மும் செந்தாமரையும் போன வாரத்தில் ஒருவரை ஒருவர் பெயரிட்டுத்தான் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு அண்ணி என்று செந்தாமரை அவளை அழைக்கத் தொடங்கினாள். ஒருநாள் என் எதிரிலேயே அப்படி அழைத்துவிட்டு நான் இருப்பதைப் பார்த்ததும் கையால் வாயை மூடிக்கொண்டு வெட்கமுற்று ஓடிவிட்டாள். அதற்கப்புறம் மெல்ல மெல்ல வெட்கம் போய் வெளிப்படையாகவே அண்ணிப் பட்டம் வழங்குகிறது. முந்தாநேற்று முதல் திலகமும் செந்தாமரையை அண்ணி என்று அழைப்பது கேட்டேன். திலகத்தின் வாயில் ‘அண்ணி’ என்று வருமானால் அதில் எவ்வளவு பொருள் இருக்க வேண்டும்? அதில் எவ்வளவு துணிவு இருக்க வேண்டும்? அவள் அதைப் பற்றி எவ்வளவு ஆராய்ந்து முடிவுக்கு வந்திருக்க வேண்டும்? இளங்கோவின் குணம், செந்தாமரையின் குணம், பெற்றோரின் நிலைமை, எதிர்கால வாழ்வு இவ்வளவையும் அவள் எண்ணிப் பார்த்துத்தான் அப்படி முடிவான கருத்துக் கொண்டிருக்க வேண்டும்? ஆகையால் இதுவே போதுமே? அவள் மற்றவர்களைப் போல் வேடிக்கைக்காகச் சொற்களை எடுத்துச் சொல்கின்றவளா? அல்லவே! அவள் வாயினால் அண்ணி என்று அழைத்தால் அது என் வாயினால் அத்தான் என்று அழைத்தது போல் அவ்வளவு ஆழமும் உறுதியும் உடையது அல்லவா? 

எதற்கும் கேட்டுப் பார்ப்பதுதான் நல்லது. இன்று இரவே ஏன் கேட்கக் கூடாது? ஞாயிற்றுக் கிழமை முழுநாளும் நேரம் இருக்காது. விருந்தாளியாக மருதப்பன் வீட்டில் இருக்கும்போது பேச முடியாது. இரவே கேட்கலாம். 

இன்று இரவு செந்தாமரை தூங்கிய பிறகு திலகத்தை எழுப்ப வேண்டும். எழுப்பினால் தூக்கக் கண்ணில் அவள் என்னைப் பார்த்து என்ன எண்ணுவாளோ? ஆழ்ந்த அன்பு இருக்குமானால் உடனே என் அன்பை உணர்வாள். எப்படியும் உடனே பேச மாட்டாள். சிறிதுநேரம் அமைதியாயிருந்தால், மன வேகம் அடங்கும். அவளும் குழப்பம் தீர்ந்து அமைதியாக இருப்பாள். அப்போது இளங்கோவைப் பற்றிக் கேட்பேன்.. 

இன்று மாலை நான் வாங்கிக்கொண்டு வந்த இரண்டு வெள்ளைப் புடைவைகளில் ஒன்றை அவள் எடுத்துக் கட்டிக்கொண்டாள். அதை உடுத்துக் கொண்டு உலாவும்போது என் உள்ளம் உவந்தது. செந்தாமரையின் புடைவைகளைக் கேட்டு வாங்கித் தானே உடுத்த வேண்டும்? நான் இரண்டு வாரத்திற்கு முன்னமே வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். உடனே எண்ணிச் செய்யும் திறமை எனக்கு இல்லை. எண்ண ஆறுமாதம்; எண்ணியதைச் செய்ய அதற்கு மேல் ஆறுமாதம் இது என் வழக்கம். ஞாயிற்றுக் கிழமை விருந்தாகப் போவதற்குமுன் அழகான புது நிறப் புடைவைகள் இரண்டு அல்லது மூன்று அவளுக்கென்றே எடுத்துவர வேண்டும். “எனக்கு இல்லையே” என்று செந்தாமரை எண்ணுவாள். எத்தனை இருந்தாலும் புதிய பொருள்மேல் ஆசைப்படுவது மனத்தின் இயற்கைதானே! நான்காக எடுத்துக்கொண்டு வந்தால் அவர்களே இரண்டு இரண்டு எடுத்துக்கொள்வார்கள். 

திடீரென்று நேற்று அத்தான் இருநூறு ரூபாய் அனுப்பினார். நான் கேட்கவில்லை; கடிதம் எழுதவில்லை; பணம் இன்ஷ்யூர் செய்த காரணம் என்னவோ தெரியவில்லை. தமக்கையின் ஏற்பாடாக இருக்கலாம். தம்பி இந்தப் பணத்தை என்ன செய்கிறான், பார்க்கலாம் என்று சோதிக்க எண்ணியிருக்கலாம். திலகத்திற்காகச் செலவு இருக்கும், அவள்மேல் அன்பு இருந்தால் அவனாகச் செலவு செய்கிறானா பார்க்கலாம் என்று அனுப்பியிருக்கலாம். இவ்வளவு நுட்பமாக அத்தானும் தமக்கையும் என்னை வழிப்படுத்த எண்ணியிருக்கிறார்கள். தம்பி திருமணம் செய்து கொள்வானா, சாமியாராக இருப்பானா என்று தமக்கைக்கும் கவலை இருந்திருக்கலாம். இரண்டு வாரத்திற்கு முன் அந்தக் கவலைக்கு இடம் இருந்தது. திலகத்தின் நெற்றியை, அங்கே விளங்கிய திலகத்தைக் கண்ட பிறகு அந்தக் கவலைக்கு இடம் இல்லை. 

இன்று மாலை அந்த வெள்ளைப் புடைவை உடுத்துக்கொண்டு உலாவியபோது, வெள்ளைக்கலை உடுத்த கலைமகளாகிவிட்டாள். நான் எத்தனையோ ஏடுகளைப் படித்தேன்; புரட்டினேன்; புரண்டேன். அவை எல்லாம் நான் செய்த தவம். தவம் நிறைவேறிவிட்டது. வரம் கொடுத்து வாழ்விக்கும் தெய்வம் – கலைமகள் தெய்வம் – வந்துவிட்டது. 

இந்த எளிமையான வெள்ளைப் புடைவை உடுத்துக்கொள்வதில் அவள் ஆனந்தம் அடைந்திருக்கிறாள். பி.ஏ. வகுப்பில் படித்தபோது கற்ற அந்தக் குறுந்தொகைப் பாட்டு நினைவுக்கு வருகிறது. பாட்டு நினைவில் இல்லை. கருத்துத்தான் தெரிகிறது. பிராட்லே எழுதிய புத்தகமும் பிளாட்டோ எழுதிய நூலும் மனத்தில் வரிவரியாகப் பக்கம் பக்கமாகப் பதிந்திருக்கின்றன. ஆனால் ஒரு குறுந்தொகைப் பாட்டு நினைவில் இல்லை. ஒரு தலைவி தான் சொல்கிறாள் ; தோழிக்குச் சொல்கிறாள். தன் தாய் வீட்டுத் தோட்டத்துத் தேன் கலந்த பால் அவளுக்கு இனிக்க – வில்லையாம்; கணவனுடைய நாட்டுக் கலங்கல் நீர்தான் இனிக்கிறதாம். அந்தப் பாட்டு, வாழ்க்கையை எவ்வளவு நன்றாக எடுத்துக்காட்டுகின்றது! எட்டு ரூபாய்ப் புடைவை – எளிய வெள்ளைப் புடைவை அவளுக்கு ஆனந்தமா யிருக்கிறது. அவளுடைய மகிழ்ச்சி, முகத்தில் ஒளி வீசுகிறது. 

எனக்கும் அப்படித்தான் ஆய்விட்டது. பகல் உணவில் ரசத்தில் உப்பில்லாமல் இருந்தது.செந்தாமரையைக் கடிந்தாற் போல் கேட்டேன். விடுமுறையானதால் அவள்தான் சமைத்திருப்பாள் என்று. கடிந்தாற் போல் கேட்டேன். அப்படிக் கேட்கிற வழக்கமே இல்லை. மனம் எங்கெங்கோ இருந்தபடியால் கடிந்தாற் போல் கேட்டுவிட்டேன். “அண்ணி மறந்து விட்டிருப்பாள்” என்று செந்தாமரை சொன்னதும், ஏன் கேட்டேன் என்று வருந்தினேன். உடனே அதே ரசம் என் நாவிற்குச் சுவை மிகுந்ததாகிவிட்டது; இன்னும் கொஞ்சம் எடுத்துக் கையில் விட்டுக் குடித்தும் இன்புற்றேன். குறுந்தொகைக் காலத்தில் நான் இருந்திருந்தால், “மிளகு நீரில் உப்பு இடாமல் போனால் என்ன? சமைத்தவளின் அன்பைவிட வேறு சுவை ஏன்?” என்று பாடியிருப்பேன். 

குறுந்தொகைப் பாட்டை அந்தக் காலத்தில் ஆசிரியர் பாடம் சொன்னபோது வேப்பங்காயாக இருந்தது. இப்போது விண்ணோர் அமிழ்தமாக இருக்கிறது. இந்தச் சங்கப் பாட்டெல்லாம் காமம் தவிர வேறு இல்லையா என்று வெறுத்தேன். நாடி நரம்புகளை இந்த வகையான பாட்டுக்கள் கெடுத்துவிடும் என்று பக்கத்திலிருந்த மாணவர்களுக்குச் சொல்லலாம் என்று வாயெடுத்தேன். ஆனால் சொல்லவில்லை. ஒன்றும் சொல்லாமலேயே, கன்பர்ம்ட் பாச்சலெர் (confirmed bachelor) என்றும், மருத்துவர் சோதனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் என்னை எள்ளி இகழ்ந்தார்கள். 

அப்போது இருந்த நிலையை எண்ணிப் பார்த்தால், நாடி நரம்புகளின் அதிர்ச்சி தவிர வேறு ஒன்றும் நான் உணர்ந்ததாகத் தெரியவில்லை. உடம்பில் ஏற்படும் மாறுதல், இரத்தக் கொதிப்பு, நரம்பு அதிர்ச்சி இவையே காதல் என்று எண்ணிவிட்டிருந்தேன். காதல் என்பதும் காமம் என்பதும் ஒன்றே என்று இருந்தேன். பழைய பாட்டிலும் ஆசிரியர் பொருள் சொல்லும்போது அப்படித் தான் உணர்ந்தேன். ஆனால் இப்போது என் தவறு உணர்கிறேன். நாவல்களை நான் படிப்பதே இல்லை. படித்தவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது கேட்கும் பழக்கமே மிகுதி. பிறகு நானும் இரண்டொரு நாவல் படித்தேன். அவற்றில் காதலர்கள் படும் துன்பம் எல்லாம் உடம்பைப் பொறுத்தே இருக்கும். என் கருத்தே உறுதியாயிற்று. வாழ்க்கையில் இந்த எண்ணம் வந்தபோது அனுபவம் அதை உறுதிப்படுத்தியது. ஆனால் எல்லாம் பொய்; எல்லாம் தவறு. காமுகரின் வாழ்க்கையில்தான் மண்டை இடி; காதலர் வாழ்க்கையில் மன இடிதான் மிகுதி என்று தெரிந்து கொண்டேன். 

உண்மையும் ஓரளவு உண்டு. உடம்பில் நிகழும் மாறுதலைவிட உள்ளத்துக் குழப்பம், கலக்கம், வேகம் இவையே மிகுதி என்பதை இப்போது உணர்கின் றேன். வெள்ளைக் கலையுடுத்த என் கலைமகளைக் கண்ட போது என் நரம்புகள் அதிர்ச்சி பெறவில்லையே.என் உள்ளம்தான் உருகிற்று; குளிர்ந்தது. ஒவ்வொரு வேளையில் அவளும் நானும் வீட்டில் தனியே இருக்கும் போது, நான் இருக்கும் பக்கமாக அவள் நடந்தால் அப்போது உடம்பும் ஒரு வகையாக உணர்ச்சிபெறும்: உடனே மாறும். அது சிறிது நேரமே. ஆனால் உள்ளத்து உணர்வு நெடுநேரம் நிலைத்திருக்கிறத. கதையாசிரியர்கள் அதை ஏன் அவ்வளவாக விளக் காமல், காமுகர்களாகிக் கெடுத்திருக்கின்றார்கள்? ? என் கைகள் அவளைப் பெற விரும்புகின்றன; உண் மையே. ஆனால் அவளிடம் சென்று ஒன்றுபட்டுக் குழைந்து உருகுவது என் உள்ளம்தானே? இது தானே காமுகர் காணாதது? 

அன்று அவள் வேப்பேரிக்குப் போயிருந்தாள். எனக்கு வீடு, வீடாக இல்லை : சிறையாகப் போயிற்று. என் கைகளின் ஏக்கம் என்று சொல்ல முடியாது; கண்களின் ஏக்கம் என்று சொல்லலாம். கண்களும் அவளை எந்த நேரமும் பார்த்துக்கொண்டிருப்பதில்லையே. ஆகையால் உள்ளத்தின் ஏக்கம் என்றே உறுதியாகச் சொல்ல வேண்டும். கண்கள் அந்த உள்ளத்தின் சன்னல்கள்; அவ்வளவே. 

தாயுமானவரின் பைங்கிளிக் கண்ணியை எடுத்துச் சிந்தாதிரிப்பேட்டைத் தமிழ்ச் சங்கத்தில் ஒருவர் பேசினார். இந்தத் தாயுமானவரும் இப்படிக் காதலைப் பாடிவிட்டாரா என்று அந்தக் காலத்தில் வெறுத்தேன். பாட்டின் அழகு, அவருடைய கடவுளன்பு ஆகியவற்றை நான் விரும்பினாலும் இந்தக் கிளிக் கண்ணி இப்படிக் காதல் பாட்டாக இருக்கிறதே என்று வெறுத்தேன். நம்மாழ்வாரின் நாயகி பாவத்தை ஆசிரியர் சொன்ன போதும் எனக்குக் கசப்பாக இருந்தது. என் அருமைத் திருக்குறளிலும் காமத்துப் பாலைத் தனியே கத்தரித்து எறிந்துவிட்டு என் விருப்பம் போல் பைண்டு செய்து வைத்துக்கொண்டிருக்கிறேனே. எதை வெறுத்து ஏட்டில் இல்லாமல் செய்தேனோ, அது வாழ்க்கையில் வந்து வாய்த்தது! 

என் திருமணத்தில் அந்தக் காமத்துப்பாலையும் மந்திரமாக ஓதவைக்க வேண்டும். திருமணம் எளிய முறையில் நடக்க வேண்டும். வேறு யாரும் வேண்டா. மருதப்பனும் அவன் மனைவியும் போதும். மந்திரக்காரனும் தந்திரக்காரனும் வேண்டா. ஆடம்பரமும் ஆரவாரமும் வேண்டா. மருதப்பன் போதும்; மனைவி திருக்குறள் ஓதுவான். அவனுடைய போதும்; ஆரத்தி சுற்றி வாழ்த்துவாள். இதற்குமேல் செய்தால் என் மனம் என்னைச் சுடும். எம்.ஏ. படித்தும் கோழை என்று சுடும். தத்துவம் கற்றும் மூடநம்பிக்கை போகவில்லை என்று சுடும். எல்லாம் தெரிந்தும் ஆரவார வெறி போகவில்லை என்று சுடும். 

இந்த ஞாயிற்றுக்கிழமை – நாளை மறுநாள் மரு தப்பன் வீட்டுக்கு விருந்தினராகப் போகப் போகிறோம். மணமக்களாகவே போனால் என்ன? அது பொது இடம். எனக்கு, அவளுக்கு, செந்தாமரைக்கு, இளங்கோவுக்கு…எல்லாருக்கும் பொது இடம். ஆகையால் அங்கேயே திருமணம் செய்வது ஒழுங்குதான்; ஆனால்- 

இரவு எப்படியாவது அவளைக் கேட்டுவிட வேண்டும். இளங்கோவைப் பற்றி இரவே தெரிந்துகொண்டால் ஏற்பாடுகள் முடிந்தாற் போல் ஆகும். எதற்கும், தமக்கையும் அத்தானும் வர வேண்டும். காலையில் எழுந்ததும் தபாலாபீசுக்கு நேரே போய்ச் சித்தூருக்கு அவசரத் தந்தி கொடுத்துவிடுவேன். “நாளை…ஞாயிறு…திருமணம் இரண்டு – ஏற்பாடு முடிந்தது – மாலைக்குள் வருக” என்று தந்தி கொடுத்துவிட்டால் எல்லாம் தெரிந்து கொண்டு வந்துவிடுவார்கள். அவர்கள் எதிர்பார்த்துச் செய்த ஏற்பாடுதானே ! 

அதற்குமுன் மருதப்பனுக்குத் தெரிவிக்க வேண்டும். 

இது என்ன, கனவா? 

9. திலகம் 

விழித்தேன்; வாழ்ந்தேன். என் விழிப்புக்குக் காரணம் மருதப்பர். வாழ்வுக்குத் துணை திருநாதன். மருதப்பருடைய கண்ணும், கையும், பேச்சும் என்னைப் புதுப் பெண்ணாக மாற்றிவிட்டன. இல்லையானால் திருநாதனுடைய பார்வையின் பொருளை நான் தெரிந்து கொண்டிருக்க முடியாது; அவருடைய அமைதியைக் கண்டு மேற்போக்காக இருந்து ஏமாந்துபோயிருப்பேன். அவருக்கு என்மேல் அன்பு இல்லை என்று சித்தூரில் எண்ணியது போலவே இன்னும் எண்ணிக் கொண்டிருந்திருப்பேன். 

ரயிலில் வந்தபோது வாய் திறக்காமல் தலை நிமிராமல் வந்தவருடைய கை, நேற்று இரவு என் கால்களை வருடியது. விழித்ததும் அஞ்சினேன்; அந்த அழகனைக் கண்டதும் அடங்கினேன்; காலை வருடிய கை, என் கையைப் பற்றியது. அந்தக் கையை என் கண்ணோடு சேர்த்துக்கொண்டேன். 

ஒரு நாளாவது என்னைப் பெயரிட்டுக் கூப்பிடு வாரா என்று ஏங்கினேன். எந்தக் காரணத்தாலாவது என்னோடு பேசுவாரா என்று உருகித் தவம் கிடந்தேன். என் தவம் பலித்தது. என்னைப் பார்த்த பார்வைக்கும் என்மேல் வைத்துள்ள மெய்யன்புக்கும் எவ்வளவு வேற்றுமை! குன்றிமணியைக் காட்டிக் குன்று போல் செல்வத்தை, வற்றாத பேரன்பை வழங்கும் வள்ளல் அவர்! 

இந்தத் தோளிலும் காலிலும் பட்ட காயத்தை ஆற்றுவதற்கு மருந்து இட்டார் மருதப்பர். இவராக இருந்திருந்தால் மருந்து இட வேண்டியதே இல்லை; இவருடைய கை பட்ட அளவிலேயே அந்தக் காயங்கள் ஆறிவிட்டிருக்கும். என் மனப்புண்கள் நூறு நூறாக இருந்தன; புற்றுப் புற்றாகப் புரை வைத்திருந்த அந்த மனப் புண்கள் நேற்று இரவே ஆறிவிட்டன. அந்தக் காயங்களை இவர் ஆற்றுவதற்கு, மருந்தும் வேண்டுமா? 

இப்போதுதான் தெரிகிறது இவருடைய அன்பு, இவருடைய பெருமை எல்லாம். ஆனால் அன்று சைக்கிலில் அடிபட்டபோது மருதப்பரே என் மனத்தில் குடிகொண்டார். அவருக்கு என் வாழ்வை அடைக்கலம் கொடுத்து விட்டாற் போல் இருந்தேன். 

மருதப்பர் அப்போது செய்த உதவியை ஒரு நாளும் மறக்க முடியாது; மறக்கவே மாட்டேன். அதைவிட நினைக்கவும் வெட்கமாக இருக்கிறது அவர் என் மனத்தில் எழுப்பின உணர்ச்சி என் உயிருள்ள வரையில், என் நினைவை விட்டு நீங்காது. 

மருந்து விடுவதற்கு என்னைக் கேட்டார்; மருந்து கொண்டு வந்து என்னை அணுகினார். நாணமும் பயமும் கலந்து என்னைத் தடுத்தன. தோளில் பட்ட காயத்தில் மருந்து விட்டுத் துணி கொண்டு கட்டினார். அவர் கை என் தோளில் பட்டதோ இல்லையோ, என் உடம்பு சிலிர்த்தது. நான் அன்போடு அவர்முகத்தை ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தேன்.என் உடம்பு முழுவதும் புதிய உணர்ச்சி பரவுதலைக் கண்டேன். அன்புடன் அவர் செய்த உதவியை நினைந்து உருகினேன். கட்டுக் கட்டிக்கொண்டே அவர் என்னைப் பார்த்தார். ஆ! அப்போது அந்தக் கண்ணில் கண்டதுதான் தனி ஒளி; காதல் ஒளி. இதற்குமுன் எத்தனையோ ஆண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் என்னைப் பார்க்கும்போது நானும் அவர்களைப்பார்த்திருக்கிறேன்.ஆனால், புறக்கணித்த பார்வை, அந்தச் சாமியார் போல் வஞ்சகமான பார்வை, தொப்பையன் போல் கொலைகாரப் பார்வை, சின்ன மாமன் போல் தன்னலப் பார்வை, சித்தூரார் போல் குற்றமற்ற பார்வை, சைக்கிலில் தள்ளினவன் போல் தடுமாற்றப் பார்வை, கல்லூரிப் பெண்களைப் போல் பொறாமைப் பார்வை அவற்றையே கண்டு அறிந்திருக்கிறேன். அவை என் உள்ளத்தைத் தொடு வதே இல்லை. ஆனால் மருதப்பர் அப்போது பார்த்த அந்தப் பார்வை என்னைப் புதிய பிறவியாக்கிவிட்டது. 

எனக்கு வழி காட்டிக்கொண்டு முன்னே நடந்து சென்றாரே, அப்போது அவர் திரும்பித் திரும்பி என்னைப் பார்த்துக்கொண்டு போனார். அந்த ஒவ்வொரு பார்வையும் என் ஆவியை உருக்கிக்கொண்டே போயிற்று. ஆண்மகன் ஒருவனை அன்றுதான் நான் கண்டேன். 

தெருத்திண்ணையில் என்னை விட்டுவிட்டு மருந்துப் புட்டியுடன் உள்ளே சென்றாரே, அப்போதே என் மனமும் அவருடன் சென்றது. ‘வா’ என ஒரு சொல் அவர் வாயிலிருந்து வந்திருந்தால் என் வாழ்க்கையே மாறிவிட்டிருக்கும் அல்லவா? உள்ளே சென்றவர் ஏன் இன்னும் வரவில்லை என்று என் மனம் திடுக்கிட்ட நிலையில் இருந்தது. கால்கள்தான் அசையவில்லை; நகரவில்லை. என் மனம் வீட்டினுள்ளே ஓடிக்கொண்டிருந்தது. 

நான் உள்ளே சென்றிருந்தால் வாழ்க்கையில் பெருந்தவறு செய்துவிட்டிருப்பேன். அவர் திருமணமானவர் என்று எனக்கு அப்போது தெரியாதல்லவா? தெரிந்திருந்தால் அப்படி என் மனத்தை ஒருகாலும் பறிகொடுத்திருக்கவே மாட்டேன். அந்த அமைதித் தெய்வம் மருதப்பரின் மனைவி – ஊருக்குப் போயிருந்தது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அண்ணா என்று அப்போதே அவரை அழைத்திருப்பேன்; அவரும் பார்வையை மாற்றிக்கொண்டிருப்பார். 

இளங்கோ அண்ணன் வந்துபோன பிறகுதான் நான் மருதப்பரை அண்ணனாக மதித்தேன். அது வரையில் என் மனக்கோயிலில் அவருடைய உருவத்தைக் காதல் தெய்வமாகத்தான் வழிபட்டுக்கொண்டிருந்தேன். முதல்நாள் அண்ணனும் அவருமாக வந்தார்கள். வந்து உட்கார்ந்தார்கள். ஆனால் மருதப்பர் என்னைப் பார்க்கக் கண் எடுக்கவே இல்லை. தலை குனிந்துகொண்டும், எதிரே இருந்த படங்களைப் பார்த்துக்கொண்டும் இருந்தார். நான் எதிர்நோக்குப் பெறாமல் தவித்தேன். விட்டு விட்டு அவர்கண்களை நோக்கினேன். அந்தக் கண்கள் என்னைப் பொருட் படுத்தவே இல்லை. மருந்து விட்டுக் கட்டியபோது என்னைப் பார்த்த ஒரு பார்வையை ஏன் தடுத்தார் என்று அன்றெல்லாம் எனக்கு விளங்கவில்லை.வழி யெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்து ஏங்கவைத்தவர் வீட்டிற்குள் வந்து கூடத்தில் இருந்தபோது ஒரு முறை என்னைப் பார்க்கவும் மனம் கொள்ளவில்லை. காரணம் தெரிந்துகொள்ளாமல் தவித்தேன். மறுநாள் எல்லாம் தெளிவாய்ப் போயிற்று. 

அவர் கண்பட்டபோது உண்டான உணர்வுதான் என்னை முதன்முதலில் பெண் ஆக்கியது என்று சொல்ல வெண்டும். அதுவரையில் நான் குழந்தையாக இருந்தேன் என்றுதான் சொல்லலாம். சில பெண்கள் குழந்தையாக இருந்துவிட்டுத் திடீரென விலங்கு நிலைமை அடைந்து கெடுகின்றார்கள். காதல் ஒளி அவர்கள்மேல் வீசாததே காரணம். ஆனால் நான் குழந்தையாயிருந்து பெண் ஆனேன். இது பெரிய இரசவாத வித்தைதான். மருதப்பரின் கண்ணுக்கு அந்த வித்தை தெரிந்திருந்தது. கட்டுக் கட்டிய துணியே அந்த வித்தைக்கு வேண்டிய மூலிகையாக இருந்தது. அந்தத் துணியை மடித்து இன்னும் காப்பாற்றி வைத்திருக்கிறேன். இனிமேலும் வைத்திருப்பேன். 

என்னை ஒரு முறையும் பார்க்காமல் அவர் கூடத்தில் இருந்தது துன்பமாகவும் இருந்தது ; உண்மையாகவே, அழாத குறையாகத்தான் இருந்தது. கையை மூடி வைத்துக்கொண்டே நெடுநேரம் வைத்திருந்து அழும்படியாகச் செய்து, பிறகு திடீரெனக் கையை விரித்துக் காட்டி மறுபடியும் அழும்படியாகப் பூங்கொடியை நான் ஆட்டம் காட்டியது உண்டு. அந்த வெறுங்கை காட்டும் ஆட்டமே மருதப்பர் ஆடியது போல் தோன்றியது. காதலிலும் இந்த ஆட்டமா என்று நெஞ்சு புண்பட்டவளாய் இளங்கோ அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் உணவு உண்டபிறகு விடைபெற்றுப் பிரிந்தபோது, “இரண்டு பேருக்கும் வணக்கம் அம்மா” என்ற அந்தக் குரலில் ஆண்மையும் அன்பும் குறைந்திருந்தன. அப்போது பார்த்த பார்வை முற்றிலும் வேறானது. அண்ணன் இளங்கோவின் பார்வைக்கும் அவருடைய பார்வைக்கும் வேற்றுமையே தெரியவில்லை. நுங்கம்பாக்கத்தில் மருந்திட்டு வழிகாட்டிய மருதப்பர் வேறோ, இங்கே வந்த ஆள் வேறோ என மயங்கினேன். ஒருவர் கண்ணிலேயே ஒரு நாள் காதல் பார்வையும், மறுநாள் உடன் பிறந்தாரின் அன்புப் பார்வையுமாக மாறி நிற்கக் காரணம் என்னவோ என்று வருந்தினேன். 

அவர்கள் வந்துபோன அன்று இரவு நானும் செந்தாமரையும் உணவு உண்ண உட்கார்ந்தபோது செந்தாமரையின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. அவளுடைய துள்ளல் குன்றியது. பேச்சில் நகைச்சுவை. இல்லை. அடிக்கடி கோபித்துக்கொண்டு அடுத்த நொடியிலேயே ஆடல்பாடல் தொடங்குகிற வழக்கம் உடையவள் ஆதலால் “ஏதாவது வருத்தமா செந்தாமரை?” என்று கேட்டேன். “உடம்பு எப்படியோ இருக்கிறது. உணவின்மேலும் மனம் போகவில்லை” என்றாள். நான் அப்போதே சொன்னேன். “நானே சமையல் செய்வேன். நீ வேண்டா வேண்டா என்று தடுத்தேனே” என்று அவள் முகத்தைப் பார்த்தேன். “அது காரணம் அல்ல. நீ சாப்பிடு” என்று சொல்லி விட்டு ஒரே ஒரு சிறு புன்னகை பூத்தாள். 

அன்று மாலை செந்தாமரை மேசை எதிரே உட்கார்ந்து பென்சிலும் காகிதமும் எடுத்து எதையோ எழுதிக்கொண்டிருந்தாள். நான் பாத்திரங்களை ஒழுங்குபடுத்திவிட்டுத் தெருச் சன்னல் பக்கம் போய் நின்று திரும்பினேன்; செந்தாமரையைப் பார்த்தேன். அவளுடைய கை இரண்டு உருவங்களைத் தீட்டிக்கொண்டிருந்தது. ஒன்று இளங்கோவின் உருவம்; அது வழக்கம் போல் இருந்தது. மற்றொன்று மருதப்பரின் உருவம்; அவருடைய படத்திலிருந்த அந்தக் கண் என்னையே நோக்குவதாக இருந்தது. ஏதோ ஒருவகை ஆறுதல் என் மனத்திற்கு உண்டாயிற்று. சைக்கிலில் அடிபட்ட அன்று பார்த்த பார்வை அந்தப் படத்தில் ஒருவாறு இருந்தது. அது நான் விரும்பும் பார்வை. என் மருதப்பர் அங்கே இருக்கிறார் என்றுதான் மகிழ்ந்தேன். அந்தப் பார்வையின் எழில் தீட்டிய படத்தையாவது காப்பாற்றலாம். அவர் என்னை மறந்தாலும் இந்தப் படமாவது என்னிடம் இருக்கட்டும் என்று அதைக் கொடுக்குமாறு செந்தாமரையைக் கேட்டேன். “என் அண்ணன் இளங்கோவின் படம் அழகாக இருக்கிறது; என்னிடம் கொடுத்துவிடு; இருக்கட்டும்” எனக் கேட்டேன். “வேண்டுமானால் தனியே அவருடைய ஓவியம் எழுதிக் கொடுக்கிறேன். இது வேண்டா. இதில் உன் அண்ணன் நன்றாக இல்லை” என்றாள் செந்தாமரை. அவளுடைய விருப்பம் போல் விட்டு விட்டேன். 

செந்தாமரை வெளியே சென்றதும், அந்த மேசை அறையை இழுத்துப் பார்த்தேன். படம் இருந்தது. ஒரே காகிதம் இரண்டு உருவம் என் உள்ளத்தைக் கவர்ந்தவர் மருதப்பர் – அதை விடாமல் பார்த்தேன். படத்தின் கீழே இரண்டு உருவத்திற்கும் நடுக் கீழே செந்தாமரை என்ற எழுத்துக்களைக் கண்டேன். பல பத்திரிகைகளில் வரும் ஓவியங்களிலும் இப்படி ஓவியக்காரரின் பெயர் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நிழற் படங்களிலும் கம்பெனிக்காரர் தம்முடைய பெயரை அச்சிட்டு ஒட்டிக் கொடுக்கிறார். அவ்வளவு ஏன்? தையல்காரரும் தைத்த துணியின் உட்புறத்தில் தன்னுடைய பெயரைச் சேர்த்திடுகிறார். அப்படிப்பட்ட பைத்தியம் இயந்திரத் தொழிலையே விடாதபோது, இயற்கையான கலையில் வல்லவளாகிய இந்தச் செந்தாமரையை விடுமா என்று எண்ணிவிட்டேன். 

மறுபடியும் அந்தக் கண்ணையே உற்றுப் பார்த்தேன். சைக்கிலில் அடிபட்டபோது இந்தக் காதல் பார்வையைக் கண்டேன். கண்டவள் நானே. செந்தாமரை அன்று என்னுடன் இல்லை. அவளுக்கு அந்தப் பார்வை எப்படித் தெரிந்தது? அவள் எப்போது பார்த்தாள்? பார்க்காதிருந்தால் இவ்வளவு இயற்கையாகத் தீட்டியிருக்க முடியுமா? பார்த்தே இருப்பாள். எங்கே? கூடத்தில்தான் பார்த்திருக்க வேண்டும். நான் பார்க்கவில்லையே. அவளை மட்டும் அந்தப்பார்வையோடு பார்த்திருப்பாரோ? இருக்கக்கூடும். இவ்வாறு எண்ணியவுடனே என் மனம் முறியத் தொடங்கியது. 

அவளைமட்டும் மருதப்பர் அந்தக் காதல்நோக்குடன் கண்டிருப்பார் என்று எண்ண எண்ண என் நெஞ்சு பிளந்தது போல் வருந்தலானேன். ‘செந்தாமரை’ என்ற அந்த எழுத்துக்களை மறுபடியும் பார்த்தேன். என் மனம் முறிந்தே போயிற்று; இடி விழுந்த மரம் போல முறிந்தே போயிற்று. 

அந்தப் பெயருக்குப் பக்கத்தே புள்ளி இல்லை. கோடு இல்லை. ஆனால் கேள்விக் குறி இருந்தது. அப்போதுதான் எனக்கு உண்மை விளங்கிற்று. அந்தக் கேள்விக் குறிக்குப் பொருள் செந்தாமரையின் மனத் தாவுதல்தான் என்று உணர்ந்ததும் அப்படியே நாற்காலியில் சாய்ந்தேன். வாழ்க்கையில் இதற்கு முன் உணர்ந்திராத இடி அது. என் உள்ளம் சாய்ந்தது. 

எனக்குப் பல வகையால் உதவி செய்து நிழல் தந்த குடும்பம் – சித்தூரில் என்னைக் காப்பாற்றிய அம்மையாரின் தங்கை என் அருமை அண்ணன் இளங்கோவைக் காணும்படி செய்த குடும்பம் – முன் பின் அறியாத என்னோடு கரவில்லாமல் பழகும் கலைமணி செந்தாமரை என்ற எண்ணங்கள் வளர்ந்தன; சிறிது சோர்வு நீங்கியது. வாழட்டும் செந்தாமரை என்று நிமிர்ந்தேன். 

மருதப்பர் என்னைப் பார்க்கவும் மனம் கொள்ளாமல் கூடத்தில் இருந்ததன் பொருள் என் மனத்திற்கு விளங்கியது. அவருடைய மனம் என்னைவிட்டுச் செந்தாமரையிடம் சென்றது என எண்ணினேன். சைக்கிலில் அடிபட்ட அன்று நான் என்ன மனக்குழப்பத்தை அடைந்தேனோ, அதே நிலையைச் செந்தாமரை அப்போது அடைந்ததாக எண்ணினேன். அதனால் தான் “உடம்பு எப்படியோ இருக்கிறது. உணவின் மேல் மனம் செல்லவில்லை” என்று என்னிடம் பொய் சொன்னதாகவும் தெளிந்தேன். 

இனி மருதப்பர் காதலர் அல்ல; அவர் நண்பர். இளங்கோவைப் போல் ஒரு சகோதரர் என்று மாற்றிக் கொண்டேன். “அவர் செந்தாமரையை விரும்புகிறார்; அவள் அவரை விரும்புகிறாள்; படத்திலுள்ள பார்வையும் கேள்விக்குறியும் இதைத்தெரிவிக்கின்றன” எனத் தெளிந்தேன். மருதப்பர் – செந்தாமரை; இவர்கள் வாழ்க எனத் துணிந்தேன். 

அப்போதும் மனம் என்னைச் சும்மா விடவில்லை. நான் செந்தாமரைக்காகப் பரிவது போல், அவள் எனக்காகப் பரிவு காட்டாதது ஏன் என்று ஒரு கேள்வி கேட்டது. பொருத்தமான கேள்விதான். “மருதப்பரை முதலில் கண்டவள் நான்; அவர் கையால் உதவி பெற்றவள் நான்; ஆகையால் உரிமை எனக்குத்தானே? இதை அந்தச் செந்தாமரை ஏன் எண்ணவில்லை?” என்று மனம் கேட்டது. அது என் தவறாகவே எனக்குத் தோன்றியது. நான் அவரை விரும்புவதை அவளுக்குச் சொன்னதே இல்லை. அடிபட்டது, மருந்திட்டது, வழிகாட்டியது இவற்றைத் தான் சொன்னேன். பார்வையைப் பற்றியோ, மன நெகிழ்ச்சியைப் பற்றியோ ஒன்றும் சொல்லவில்லை. காதல் என்று வாய் திறந்து ஒரு சொல் சொல்லவே யில்லை. நான் எப்படிச் சொல்ல முடியும்? சொல்லத் தவறினேன். 

கல்லூரியில் படித்து, நாகரிகம் பெற்று ஒரு கரவும் அற்றுத் துள்ளும் கன்றுபோல் வாழும் இவளே வாயால் சொல்லாமல் கேள்விக்குறி போட்டுவிட்டுப் படம் வரைந்தாள்; கேட்டாலும், “உடம்பு எப்படியோ இருக்கிறது” என்று பொய் சொன்னாள். கல்லூரிப் படிப்பும் துள்ளலும் இல்லாத நான் எப்படிச் சொல்ல முடியும்? காதல் என்று ஒரு சொல் சொல்லியிருந்தாலும், அவள் மருதப்பரின் பார்வையை மாற்றி விட்டிருப்பாள். அவ்வளவு உண்மையானவள் என்பது எனக்குத் தெரியும். சொல்லியிருந்தால், மருதப்பரை என் கணவர் என்றே மதித்து நடந்திருப்பாள். 

தவிர, இன்னொன்று முக்கியமானது. கரவற்ற செந்தாமரை கூர்மையான அறிவு உடையவள். திருநாதனுடைய பழைய வாழ்க்கை அவளுக்குத் தெரியும். நான் இந்த வீட்டிற்கு வந்தபிறகு அவருடைய படிப்பிலும் பேச்சிலும் நடையிலும் ஏற்பட்ட மாறுதலும் அவளுக்குத் தெரியும். இரண்டையும் நன்றாகக் கவனித்த பிறகு கூரிய அறிவு கொண்டு ஆராய்ந்துதான், அவர் என்னை விரும்புவதைத் தெளிந்திருப்பாள். அதனால் தான், நான் எவ்வளவோ தடுத்தும் விடாமல், “அண்ணி, அண்ணி” என்று அழைக்கலானாள். 

என்னைத் தன் அண்ணனுடைய மனைவி என்று வஞ்சகம் இல்லாமல் எண்ணிவிட்ட ஒருத்தி, மருதப்பரை என்னுடன் எண்ணுவாளா? மருதப்பர் தன்னுடைய அன்புக்கு இடம் தருவாரா என விரும்பிப் பார்த்திருக்கிறாள். 

மருதப்பரைப் பற்றி நான் ஏமாந்தது போலவே அவளும் ஏமாற நேர்ந்தது. அய்யோ! ஆனால் என்னுடைய ஏமாற்றம் வேறு; அவள் ஏமாந்தது வேறு. நான் அவரையே துணிந்தேன். அவளோ கேள்விக் குறிதானே போட்டிருந்தாள்? மருதப்பரா அல்லது இளங்கோவா என்று தாவியிருந்தாள். ஆனால் அங்கும் ஒரு வேறுபாடு கண்டேன்.அவளுடைய உள்ளம் காதலித்தது மருதப்பரையே. அதனால்தான் மருதப்பரிடமிருந்து காதல் பார்வை பெற முடிந்தது; படத்திலும் எழுதிவிட்டாள். இளங்கோவை அப்படிப்பட்ட மனத்தோடு பார்க்கவில்லை. அதனால் நன்றாக எழுதவில்லை என்று எண்ணினேன். 

அவள் ஏமாந்ததும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. மறுநாள் அண்ணன் தனியாக வந்தபோது, “மருதப்பர் குடும்பத்தோடு வருவார்” என்று சொன்னார். அப்போது என் மனம் முறியவில்லை. அதற்குள் அந்தக் கதை எனக்குப் பழைய கதையாகிவிட் டது. மருதப்பருக்கும் எனக்கும் இருந்த அந்தப் புது உணர்வை அழித்துவிட்டேன் அல்லவா? ஆதலால் அவர் திருமணமானவர், குடும்பத்தோடு வாழ்கிறவர் என்ற செய்தி ஏதோ பிழை திருத்தம் போல்தான் எனக்குத்தோன்றியது. புத்தகத்தின் பக்க எண்ணைத் தவறாக அச்சிட்டிருந்ததைத் திருத்துவது போல் இருந்தது. அவ்வளவுதான். 

ஆனால், கல்லூரியிலிருந்து அன்று மாலை வந்த செந்தாமரை நேராகச் சமையலறையுள் நுழைந்தாள்; “உன் அண்ணன் மட்டும் வந்திருக்கிறார். அவர் எங்கே இன்னொருவர்?” என்று கேட்டாள். நான் பொறுத்துச் சொல்லியிருக்கக் கூடாதா? “புதன் கிழமை மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு நம் வீட்டுக்கு வரப்போகிறாராம்” என்று சொல்லி முடிப்பதற்குமுன் சமையலறையில் அப்படியே உட்கார்ந்து விட்டாள். என்ன மறைத்தாலும் அவளுடைய மனச்சோர்வு வெளிப்பட்டுவிட்டது. நான் அங்கே இல்லையானால் அங்கேயே அழுதுவிட்டிருப்பாள். சமையலறையை விட்டு அவளைக் கிளப்பவே முடியவில்லை. தன் அண்ணன் வந்தது தெரிந்த பிறகுதான் மெல்ல எழுந்தாள். ஏதோ ஒரு தொத்து நோய் என்னை முதலில் பற்றியபிறகு அவளையும் பற்றி வருத்துவது போல் இருந்தது அன்றைய நிலைமை. 

அண்ணன் இளங்கோவுடன் பெரியம்மாவையும் பூங்கொடியையும் பார்க்கப்போனபோது, அவனுடைய மனம் செந்தாமரை மேல் இருப்பது தெரிந்துவிட்டது. செந்தாமரையின் கேள்விக்குறி இனி வேண்டியதில்லை என்று எண்ணி, “நீ முன் சொன்னபடி அண்ணனுடைய தனிப் படம் எழுதியாகிவிட்டதா?” என்று அவளைக் கேட்கத் துணிந்தேன். திரும்பி வருவதற்குள் அவள் அந்தப் படத்தை எழுதிக் கீழே செந்தாமரை என்று பெயரும் எழுதி வியப்புக்குறி போட்டிருந்தாள். வந்ததும் அதைக் காட்டி என்னை மகிழ்வித்தாள். 

அண்ணன் அவளைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டான். “நல்ல பெண்; என்னைவிட நல்லவள்” என்று சொன்னபோது அவன் முகத்தின் மலர்ச்சியைக் கண்டேன். ஆனால் அதைவிட வியப்பு, பெரியம்மா அவளைப் பற்றிக் கேட்டதுதான். அண்ணன் தன் விருப்பத்தைத் தாயிடம் மறைக்காமல் சொல்லிவிட்டிருக்கிறான். 

ஆர்க்காட்டில் உள்ள மாமன்பெண்ணை அவன் தான் மணம் செய்துகொள்வான் என்று அவர்களும் நம்பியிருந்தார்கள்; நானும் நம்பினேன். அதைப் பற்றிக் கேட்டால், “என்ன திலகம்! மாட்டுக்கு இருக்கும் மதிப்புக் கூட மனிதனுக்கு இல்லையா?” என்று சரியான பதில் கொடுத்தான். வண்டி ஓட்ட மாடு பார்க்கிறவர்கள் சுடி பார்த்துச் சுழி பார்த்துப் பல் பார்த்துப் பாங்கு பார்த்துச் சிறிது தூரம் ஓட்டியும் பார்த்து வாங்குகிறார்களாம். ஆணும் பெண்ணுமாக மக்களுக்குத் திருமணம் செய்யும்போது ஒன்றும் பார்க்காமல் அத்தை மகன், அம்மான் மகள் என்று கட்டிவிடுகிறார்களாம். உண்மையைப் பளிங்கு போல் எடுத்துச் சொல்லிவிட்டான். எனக்கும் அதைப் பற்றி மனம் இல்லை தான். மாமன் மகளுடைய அறிவும் பழக்கமும் கீழ்த்தரமானவை; இவனோ நாகரிகமும் முற்போக்கும் உடையவன். இவர்கள் ஒருவர் மற்றவர்க்கு ஒத்துப் போவது முடியவே முடியாது. அவள் அறியாத குழந்தையா? இவனுக்கு அடங்கிப்போக முடியுமா? இவனோ உலகத்திற்கே அஞ்சாதவன். இவன் கல்லூரியில் படித்ததற்கு ஏறக்குறையப் படிப்பாவது அவளுக்கு இருக்கவேண்டுமே, அதுவும் இல்லை. ஏழாவது படித்து முடிப்பதற்குள் வயதடைந்துவிட்டாள் என்று நிறுத்தி விட்டார்கள். மூன்று ஆண்டுகளாய் மூலைகளில் உட் கார்ந்துகொண்டும் சன்னல் ஓரமாக நின்றுகொண்டும் சோம்பேறி வாழ்வு வாழ்ந்துவருகிறாள். செந்தாமரை எங்கே? அந்தச் சோம்பேறி எங்கே? செந்தாமரை கிடைப்பதானால் பெரிய பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். நேராக வேசியின் வயிற்றிலேயே பிறந்தவளாக இருந்தாலும் அவள்தான் பெண் என்று சொல்வேன். அவளைத்தான் அண்ணி என்று அழைக்க எனக்கு மனம் வரும். வியப்புக்குறி இட்ட அந்தப் படத்தைப் பார்த்தவுடனே, அண்ணி என்று நானும் அவளை அழைத்தேன். அவளும் அதை வெறுக்காமல் ஏற்றுக்கொண்டு, “போ, அண்ணி” என்றாள். 

பெரியம்மா தன் பிள்ளைக்கு இணங்கி நடப்பது தான் வியப்பாக இருக்கிறது. நான் எதிர்பார்க்க வில்லை. உயர்ந்த இல்வாழ்க்கை வாழ்ந்த என் தாய் அரைப் பைத்தியமாய் ஆர்க்காட்டில் அடங்கிக் கிடக்கிறாள்; வாழ்க்கை தெரியாத பேதையாய்க் கிடக்கிறாள்; கணவனை இழந்ததும் அவளுக்கு உலகமே இருண்டு விட்டது; வயிற்றில் பிறந்த பெண் குழந்தைகளையும் மறந்து பித்தியானாள். ஆனால், அதே நிலைமையை முன்னமே அடைந்துவிட்ட பெரியம்மா அஞ்சாமல் குடும்பத்தைத் தலைமேல் தாங்கிக்கொண்டு தன் ஒரு மகனை வளர்த்துப் படிக்கவைத்து என் தங்கையையும் காப்பாற்றிவருகிறாள். 

என்ன காரணம் என்பது? பெரியம்மாவின் கால் தான் காரணம் என்று சொல்ல வேண்டும். வாழ்க்கையில் ஏதாவது ஒருகுறை இருப்பதும் நல்லதாகவே இருக்கிறது. பிறர்க்குத் தெரியும்படியான குறை இருந்தால், நாம் குறை உடையவர்கள் என்ற எண்ணம் பிறந்து செருக்கு அடங்கிவிடுகிறது; தன்னைப் பற்றி எண்ணிப் பார்க்க வழி ஏற்படுகிறது; சொல்வதை எண்ணிச் சொல்லவும், செய்வதை எண்ணிச் செய்யவும் கட்டாயம் ஏற்படுகிறது. அதனால் அப்படிப்பட்டவர்கள் அறிவை வளர்த்துத் திறமை பெற்றுப் பிறர்க்குப் பயன்படுமாறு வாழ்கிறார்கள். தங்கள் குறையை உணராதவர்கள், எண்ணி வாழும் வகையே அற்று மனம் போன போக்காய்க் காலம் கழித்து மடிகிறார்கள். 

பெரியம்மாவின் காலில் குறை; சிறிது நொண்டி; அதனால் வாழ்க்கையில் எச்சரிக்கையாக இருக்கிறாள். மகனுடைய மனம் இப்படி என்று தெரிந்துகொண்டு “அவன் விரும்பும் பெண்ணே மருமகள்” என்று துணிந்துவிட்டாற் போல் தெரிகிறது. வாழ்க்கைக்கு இடையூறு செய்யாமல் துணைசெய்து அவனை முன்னேற்றி வருகிறாள். ஒரு குறை நல்லதுதான். 

சித்தூர் அம்மையார் வாழ்க்கை சீராக நடக்கின்றதே, அதன் காரணம் என்ன? ஆம்? அதற்குக் காரணம் உண்டு. குடும்பத்தில் ஒரு குறை – பிறர் பழி கூறும்படியான ஒரு குறை — நான்காம் பாட்டி வேசியாய் வாழ்ந்த குறை உண்டு. அது புகழில் உள்ள குறை. அந்தக் குறையே அவருக்கு ஆற்றலைப் பெருக்கிவிட்டது; முன்னேற்றுகின்றது; குறை நல்லதுதான். 

என் வாழ்விலும் ஒரு குறை உள்ளது. உற்றார் உறவினரை விட்டு ஓடிவந்து பழி சுமந்தேன். அது ஒரு குறைதான். அதனாலும் நன்மையே விளையும். இனிமேல் வீண்புகழுக்கு வீம்பு செய்ய மாட்டேன் ; ஆர்க்காட்டில் உள்ள மாமி போல் ஆரவாரத்தைப் போற்ற மாட்டேன்; அவளைப் போல், பயனற்ற பண்டிகைகளையும் பணச் செலவையும் பெருக்கிக் கணவனை மனம் நோகவைத்துப் பிறர் மெச்சுவதற்கு ஏங்க மாட்டேன். கணவனுக்கு ஏற்ற மனைவியாய், உலகத்தை மதிக்காமல், உள்ளத்தை மதித்து வாழ்வேன். எனக்கு ஏற்பட்ட குறையும் பரம்பரைச் செருக்கைப் பாழாக்கி என் கண்ணைத் திறக்கச் செய்தது. 

ஆனால் அந்த வஞ்சகச் சாமியார்க்குத் தன்னுடைய குறை தெரியவில்லையே! சித்தூர்த் தொப்பையனுக்கும் தன்னுடைய குறை புலப்படவில்லையே! இவர்களெல்லாம் தங்கள் குறையை உணராதவர்கள். குறையைக் குறை என்று மற்றவர்களுக்கும் தெரியாதபடி மறைத்து வாழ்கின்றார்கள். ஒருவன் வெளித்தோற்றத்தால் மறைத்து ஏமாற்றுகின்றான். இன்னொருவன் தனக்கு உள்ள செல்வாக்கால் மறைத்து மயக்குகின்றான். தங்கள் முன்னேற்றத்துக்குத் தாங்களே முள் போட்டுக்கொண்டார்கள், “குற்றம் உணர்வான் குணவான்” என்று அந்த நமச்சிவாய முதலியார் புத்தகத்திலிருக்கும் பாடம் இவர்கள் படிப்பதில்லையோ? 

இந்தப் பெரியம்மா எழுத்தறியாதவள். எப்படியோ அந்தப் பாட்டு வாழ்க்கையில் படிந்திருக்கின்றது. காரணம் இதுதான். இவள் நொண்டியாக இருக்கும் குறையை மறைத்துக்கொள்ள முடியாது. மற்றவர்கள் கண்ணுக்குப் பட்டே தீரும். ஆகையால் அவர்கள் பழிக்காதபடி, அவர்கள் மனம் நோகாதபடி, அவர்கள் விரும்பிப் புகழும்படி அறிவாக எண்ணி வாழ்கின்றாள். அதனால் தான் இளங்கோ அஞ்சாமல் செந்தாமரை யைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். பெரியம்மா இருந்த அரியாசனத்தில் செந்தாமரை விளங்கப் போகிறாள். நினைத்தாலும் என் மனம் குளிர்கின்றது. 

தவிர, பெரியம்மா இளகிய மனம் உடையவள். மகன் அழுதால் பார்த்துக்கொண்டிருக்க மாட்டாள். அதனால் தான் என்னைக் கண்டவுடன் கதறிக் கதறி அழுதாள். கண்ணீர் ஆறாய்ப் பெருக்கினாள். ஆனால், பூங்கொடிக்கு ஒன்றும் தெரியவில்லை. அம்மா அம்மா என்று அவளுடைய முன்தானையைப் பற்றிச் சுற்றிக் கொண்டு முகம் சுருக்கினாள். 

என் தங்கை-என் பூங்கொடி -நன்றாகப் படிக்க வேண்டும்.படித்துச் சிறந்த அறிவாளி ஆகவேண்டும். அவள் இந்த நாட்டுக்கே வழிகாட்டக் கூடிய தலைவி ஆக வேண்டும். நமக்கு என்ன குறை? பத்திரிகை ஆசிரியர் ஒருவர், கலெக்டர் ஆபீஸ் கிளர்க் ஒருவர், பெரிய தத்துவநூல் அறிஞர் ஒருவர்,ஓவியக் கலை மகள் ஒருத்தி, குடும்பக் கலைமகள் ஒருத்தி, எல்லோ ரையும் விளையாடவைக்கும் குழந்தை அருள் ஒருவன் – இத்தனை பேரும் உற்றாராக வாழும் வாழ்க்கை கிடைத்துள்ளபோது பூங்கொடிக்கு என்ன குறை? அவளை உயர்ந்தவளாக்க வேண்டும். அவளுக்கு நானே தாய், தந்தை, தோழி எல்லாம். 

பெரியம்மா என்னைப் பூங்கொடியோடு வீட்டி லேயே இருக்கச் சொல்கிறாள். அப்படி ஏன் இருக்க வேண்டும்? அவளுக்குப் பதில் சொல்ல வழி இல்லாமல் விழித்தேன். இருந்தாலும் என் மனம் விரும்ப வில்லை.குளிர்ந்த பொய்கையை விட்டுவிட்டு நீரற்ற பாலைவனத்தை யார் விரும்புவார்கள்? பெற்றோரின் வீடு, வளர்ந்த மக்களுக்குப் பாலைவனம்தான். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பெற்றோரின் வீடு பாலைவனம்தான். பெற்றோர் எவ்வளவோ அன்பு காட்டலாம். எத்தனை நெல்லி மரங்கள் இருந்தாலும் என்ன? பாலைவனத்தில் உயிர் போகாமல் காப்பாற்றலாம், அவ்வளவுதான். வாழ்க்கையை வளம்படுத்த முடியாது. 

“நல்ல இடத்தில் கலியாணம் செய்து கண்ணாரப் பார்க்கலாம் என்று இருந்தேனே! பெண் இல்லாத பாவி, நான் கொடுத்துவைக்கவில்லையே” என்று ஒரு  குறை அழுதாள். அய்யோ ! அவளுக்கு உலகம் தெரியாது. அவள், பழைய பழக்க வழக்கங்களுக்குக் கண்மூடிக் கட்டுப்பட்டவள். ஆனாலும் நல்லவள்; நல்லெண்ணம் நிறைந்தவள். 

இதைவிட நல்ல இடமா ? எம். ஏ. படித்து அமை தியும் அன்பும் நிறைந்த ஒருவர் எனக்குக் கணவராக வாய்ப்பார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்க வில்லையே! கலியாணம் செய்து கண்ணாரப் பார்க்க வேண்டுமாம். யார் தடுத்தார்கள்? இன்னொரு நாள், நானும் அவருமாக அங்கே போனால், அப்போது எங்களைப் பெரியம்மா கண்ணாரப் பார்க்கலாமே அல்லது, அவளே எங்கள் வீட்டுக்கு வந்தாலும் பார்க்கலாமே! ஓ, ஓ! இதற்கு மற்றவர்கள் சாட்சி, அதற்காகப் பெரிய பெரிய மேளதாளச் சண்டை சச்சரவுகள் எல்லாம் வேண்டும் என்ற எண்ணமோ? சாட்சிகள் தேடும் நிலையில் எங்கள் வாழ்க்கை கிடக்கவில்லையே? நாங்கள் என்ன, ஒருவரை ஒருவர் ஏமாற்றுவோமா? பித்தலாட்டக்காரரா? பாண்டும் பத்திரமும் எழுதி முத்திரையும் தேதியும் பொறித்து, இரண்டு மூன்று பேர் சாட்சி வாங்குவது உண்டு; வாங்கின பணத்தைச் சாப்பிட்டுவிடுவார்களோ என்ற சந்தேகத்தால், அப்படி நடக்கிறது. எங்கள் வாழ்க்கை பொய்யல்ல, நடிப்பல்ல வேடிக்கையல்ல; பணத்தாலும் பட்டாலும் அமைந்ததல்ல. உயிராலே உணர்வாலே ஆன வாழ்க்கை எங்கள் வாழ்க்கை. ஒருவர் மற்றவரை ஏமாற்றும் நிலைமை வந்தாலும் அப்படிக் குணம் கெட்டுப் பிறழ்ந்து போகும் காலம் வந்தாலும் அந்த ஏமாற்றத்தாலே அழிந்து எக்களிக்கவே விரும்புகிறோம். (பணத்தின் எல்லை, சட்டம் செய்வதும் சாட்சி தேடுவதும் – காதலின் எல்லை, சேர்ந்து வாழ்வதும் பிரிந்து சாவதும்- தவிர வேறு உண்டோ?) 

(முற்றும்)

– செந்தாமரை, முதற் பதிப்பு: 1948, பாரி நிலையம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *