சுகந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2026
பார்வையிட்டோர்: 97 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

பைராகிக்கு எழிலனைத் துளியும் சந்தேகிக்க முடியவில்லை, ஆரம்பத்திலிருந்தே தன் அண்ணாவின் குடும்பத்துக்கோ, அக்காவின் குடும்பத்துக்கோ, எதை எவ்வளவைத்தான் அவள் அள்ளிக்கொடுத்தாலும் ஒரு முனகலோ முணுமுணுப்போவின்றி அனுமதிப்பவன். எழிலனும் தானுண்டு தன்பாடுண்டு என்றுதான் இருப்பான், கனடிய தமிழ்க்குமுகாயத்திலும் அவனுக்கு சோலிசுரட்டில்லாத மனிதன் என்கிற நல்லபெயருண்டு. தினமும் ஜிம்முக்குப் போவான், கூடவே யோகாவும் செய்வான். கட்டாகத்தன் உடலைப்பேணி வைத்திருக்கும் அவனுக்கு முப்பத்தெட்டு வயசாகிறதென்றால் நம்புவது  கஷ்டம். அத்தனை இளமைப் பொலிவோடு இருந்தான். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாததை ஈடு செய்யும் விதமாக பைராகியின்  அண்ணா  சேந்தன் பெற்ற ஐவரில் மூன்றாவது  பெண்ணான சவீதாவைக் கனடாவுக்கு எடுப்பித்துத் தங்களுடன்  வைத்துக் கொள்ளவும் அனுமதித்திருந்தான். தானே பெற்ற பிள்ளையைப்போல  அவளுக்கு ஒவ்வொன்றையும்  அவள் கேளாமலே பார்த்துப்பார்த்துச் செய்து கொண்டு மிருக்கின்றான். 

பைராகியின் அண்ணன் சேந்தன் அரைச்சோம்பேறி. உழவுயந்திரம் ஒன்றை வைத்துக் கொண்டு செட்டிகுளத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறான். அவனை  ஊரில்  யாராவது  ஒரேசமயத்தில் ”உன்னைச் சூடடிக்க யாரோ தேடினார்களாமடா” என்றும் “ரம்மியாட்டத்துக்கு ஒரு கை குறையுதென்று தேடினார்கள்” என்றும் சொன்னால் அவன் சீட்டாட்டத்துக்குதான் போவான், அவ்வளவுக்கு உடலுழத்தியும், உழைத்துத்தன் குடும்பத்தைப் பேண வேணுமேயெனும் பொறுப்புமற்ற நாதாரி. கொஞ்சம் அவன் குடும்பத்தின்குடலை அவ்வப்போ காயவிட்டிருந்தால் எல்லாம் வழிக்கு வந்திருக்கும். எடுத்த சின்னக்காரியங்களுக்கெல்லாம் உண்டியல்மூலம் காசை அனுப்பியனுப்பி  அண்ணாவையும் குடும்பத்தினரையும் சோம்பேறிகளாக்கியதில் பைராகிக்கும் செமைபங்குண்டு. பாவம் பைராகி தூக்கிச்சீராட்டிய அவன் பிள்ளைகள் பசியால் துடிக்குமே என்று மனதுருகிப் பணத்தை அனுப்பிவிடுவாள்.  

சவீதா ருதுவானபோதுகூட  அவளே நேரில் வந்து நின்று அவர்கள் செய்ய விரும்பிய அத்தனை வெட்டிச் சடங்குகளுக்குமான  செலவுகளையும்  ஏற்றுக்கொண்டாள். போதாததுக்கு ஆறு சவரனில் ஒரு காசுமாலை, இன்னொரு ஆறு சவரனில்  மூன்றுசோடி காப்புகளெனச் செய்வித்தும் போட்டாள்.  

சவீதாவைக் கனடாவுக்கு எடுப்பதற்காக அவளுக்கு செவிலியர் கல்லூரியில் BScN (Accelerated)  என்றொரு கோர்ஸில் சேர்ந்துபடிக்கப் பதிவு செய்தும் மீதமுள்ள அத்தனை ஆயத்தங்களையும் செய்து முடித்துவிட்டு ’சவீதாம்மா… உனக்குத் தேவையான நகைகள் எல்லாம் அங்கேயும் வாங்கலாம் உன் மோதிரத்தை வைத்துக் கொண்டு, மற்றதெல்லாவற்றையும் தங்கச்சி தீபிகாட்ட கொடுத்து விட்டுவாம்மா’ என்றதற்கு அவள் அடியோடு மறுத்துவிட்டாள்.  

’அது  நான் முதன்முதலாக ஆசையாகக் கட்டின காசுமாலை  அத்தே… அந்த டிசைன் எனக்குக் கொள்ளை விருப்பம்,  அதைத் தீபிகாவிட்டக்கொடுத்திட்டு வந்தால் அப்பாபிடுங்கி வித்துப்போடுவார்’ என்று  தங்கையிடம் கொடுக்காததுக்குப் பல காரணங்களை அடுக்கினவள், பின் ரொறொன்டோவுக்கு விமானம் ஏறும்போதும் காப்புக்கள் காசுமாலை எதுவும் விடாமல் கவனமாக எடுத்துக் கொண்டே வந்தாள். அத்தையின் வார்த்தையை மதிக்காதது பைராகிக்கு உள்ளே கனன்றாலும், அதை அவள் ஒரு போதும்  காட்டிக் கொண்டதில்லை.  

அண்ணா சேந்தனுக்கு இவர்களைத்தவிர இன்னும் இரண்டு பையன்கள், வவுனியா மகாவித்தியாலயத்தில் மூத்தவன் ஆரன் பத்தாவதும் இளையவன் திமிலன் எட்டாவதும் வாசித்தார்கள். திமிலன் சராசரி மாணவர்களைவிட பலபடிகள் படிப்பில் மேலேவந்து  சுட்டியாக எல்லா ஸ்கொலர்ஷிப் சோதனைகளிலும்   சித்தியடைந்துகொண்டு வந்தான். மூத்தவனோ  சராசரியைவிடக்கீழே இருந்தான்.  சேந்தனைப் போலவே இவனும் ‘சக்கட்டை’யாக இருக்கிறானே என்று பைராகி விசனப்பட்டாள். இவர்களை எல்லாரையும் பெற்ற வரலக்ஷ்மி குழைக்காட்டுக்காரி,  ஒருவிதத்தில் அவளொரு வெள்ளந்தி.  அவளின் சொற்கள் குடும்பத்தில் பெரிதாக  ஏறவோ, ஆட்சிசெய்யவோ, மாற்றங்களையோ செய்துவிடாது.  வீட்டில் முடங்கி முடங்கி இருக்கும் அண்ணனை வெளியில் விரட்டி  ஒழுங்காக உழைக்கவைத்தாலே அக்குடும்பத்துக்கு வேறு எவரதும் ஆதரவு வேண்டியிருக்காது.  

இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் ‘நீங்கள் எனக்கொரு  ட்றெயிலர் வாங்கித்தந்தால் வன்னியின் குளங்களின் தூர் எடுப்புகளில், வீதித்திருத்தங்கள் கட்டுமானப்பணிகளில்  மண்ணைக் கல்லை கிரவலை  லோடு இழுத்துப் பிழைத்துக்கொள்வேன்’ என்றொரு விண்ணப்பத்தை விட்டதில் அவனுக்கு  இருபது இலட்சத்தில் ஒரு  ட்றெயிலர்  வாங்கிக் கொடுத்தார்கள். அதற்குப்பிறகும் அவ்வப்போ  ஓட்டங்கள்  கிடைத்தபோது  மாதத்தில்  பத்து  லோடுகளாவது மண்ணேற்றி ஓடினான், சிலவேளைகளில் பொதுவேலைத்திணைக்களத்தின் நல்லபொறியாளர்கள் ஒப்பந்த ரீதியிலும் அவனுக்கு மண்லோடுகளை  வழங்கினர். ஆனாலும் குடும்பநிலை பொருண்மியத்தில்  ஓச்சமென்று சொல்லமுடியாது. அண்ணிக்காரிக்குப் பெயர்தான் லக்ஷ்மி, ஆனால் எக்காலமும் அவளின் கழுத்தும் கைகளும் மூளியாகவே இருக்கப் பார்த்துக்கொண்டான்.  அவன் எதுசெய்தாலும்  கோவில்மாடு மாதிரி ‘ஆமாஞ்சாமி’ என்று தலையை  ஆட்டிக்கொண்டிருப்பாளே தவிர அவனுடன் இன்னகெடுவுக்குள் என் நகைகளை எல்லாம் மீட்டுத்தந்திடவேண்டுமென்றோ, இன்ன புடவைதான் வாங்கவேண்டுமென்றோ  கணவனோடு நிபந்தனைகள் போடவோ   கம்புசுழற்றிச் சண்டை வலிக்கவோ மாட்டாள்.   

’ஏன் அண்ணே இப்பிடி’ என்றால் ’போனவருஷம் பெட்டி ஓட்டத்தில் நல்ல உழைப்பு மெஷினுக்கு வந்ததுதான், ஆனால் இரண்டு டயர்களும் ஒரே சமயத்தில் காலை வாரிவிட்டுது, அதுக்குப் புதுடயர்கள் வாங்குவதற்கே என் சம்பாத்தியம் எல்லாம் கரைஞ்சுபோச்சு’ என்பான் சமர்த்தாக, எவ்வளவுதான் டொலர்ஸ் அனுப்பிவைத்தாலும் வகைவகையாக அவர்களுக்குச் செலவுசெய்யத் தெரிந்திருந்தது. சலிக்காமல் தொடர்ந்து டொலர்ஸ் அனுப்பிக்கொண்டே இருந்தாள் பைராகி. அண்ணாவுக்கு அடிக்கடி கனடாவிலிருந்து பணம்வருவதைக் கண்டு அவளது  மூத்தஅக்கா  ஆனந்தவல்லியும் அவ்வப்போது வயல்விதைக்கணும், விதைநெல்லு வாங்கணும், பலகை அடிக்கணும் என்று விண்ணப்பங்கள் போடத்தொடங்கியிருந்தாள். ஆனந்தவல்லிக்கு  ஒரே பெண்  அவளுக்கும் திருமணமாகி வசதியாக இருந்தாள்.  பையன்  குவைத்தில் கணிய அளவையியலாளராகப் பணிசெய்துகொண்டிருந்தான். குடும்பத்தில் வறுமையெல்லாம் இல்லை.   ஏன் சேந்தன் அண்ணா குடும்பத்துக்கு பாய்ச்சப்படும் நீர் எமக்கும் கொஞ்சம் பொசியட்டுமே என்கிற அபேதவாத சிந்தையின் வெளிப்பாடாகவு மிருக்கலாம். சவீதாவுக்குத் தோட்டத்தைப் பராமரிக்கும்   கலை கைவந்தது. பைராகி வீட்டின் முன்னாலிருந்த சிறிய இடத்தில்  வெளியே போகும்போதெல்லாம்  விதவிதமான  பூக்கன்றுகளை வாங்கிவந்து நடவும் நாளடைவில் அச்சிறிய இடம் அழகிய தோட்டமாக   மாறியது.  

சவீதாவுக்கு 18வது பேர்த்டே  வந்தது. இத்தாலியன் உணவகம் ஒன்றுக்குப்போய்  இரவு உணவு அருந்திக் கொண்டாடினார்கள். இரண்டு நாட்கள் கழித்து நல்ல அழகான சுருள் ஸ்பிறிங்போல  விரலைச்சுற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் பாம்பு வடிவமோதிரம் ஒன்றை அவள் போட்டிருந்தாள். அதன் கண்ணின் சிவப்புக்கல்லு ஒளிரவும் அது இமிடேசன் மோதிரம்,  ஃபாஷன் ஷொப் எதிலோ  வாங்கியிருக்கிறாள் என்றே நினைத்த பைராகி ’எங்கேடி இதை வாங்கினே’ என்று கேட்கவும் ’மாமாதான் வாங்கித்தந்தார்… ஏன் அவர் சொல்லலையா’ எனவும் பைராகிக்கு உள்ளுக்கு ‘திக்’கென்றது.‘ ’மறந்திட்டார்போல……….  நான் இமிடேசன் என்றல்லோ நினைச்சேன்’  என்று அப்போதைக்குச் சடைந்து சமாளித்தாள். 

அப்படி எதையும் இரகசியமாகச் செய்வது அவனது இயல்பல்லவே……… சம்திங்  கோஸ் றோங்,  சவீதாவும்  கொஞ்சம்  தங்கம்/காசில் வாஞ்சை கொண்டவள், என்பதை நினைக்க அவளுக்கு உள்ளுக்கு என்னவோ செய்தது. ‘  அடி மாமாதான் சொல்லவில்லை நீயாவது எனக்குச் சொல்லியிருக்கலாமே’ என்று கேட்கநினைத்தாள். ‘அப்போ அத்தைக்கு மாமா மோதிரம் வாங்கித்தந்தது பிடிக்கவில்லைப்போல’ என அவள் நினைத்துவிடலாகாது, சரி பிறகு பார்க்கலாம்  என்று அதை அப்போதைக்கு விட்டுவிட்டாள். சபீதாவுக்கு 18 வயதாகிவிட்டது என்பதை நம்பமுடியவில்லை. அந்த வயதில் எழிலனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தாலே ஆச்சரியமில்லை.  

தமிழக சினிமாக்களைப் பார்த்துப்பார்த்து இப்போது இலங்கைத்தமிழர்களும் தம் பிள்ளைகளுக்கு திருமணத்துக்குமுன் மெகந்தி, பெண் கர்ப்பமானால் சீமந்தம் போன்ற சடங்குகளை வலிந்து செய்கின்றனர். சந்தான விருத்தியில்லாததால் தாங்கள் இந்த மெகந்தி, சீமந்தம்,  புதுமனைபுகுதலில் கோவிலிலிருந்து சாமிப் படந்தூக்கி வருதல், ருது சாந்திச் சடங்குகளில் பாலறுகுவைத்தல் போன்ற சம்பிரதாயச் சடங்குகளிலிருந்து  தாங்கள் விலக்கிவைத்து ஓரங்கட்டப்படுதலை உணர்ந்ததால் இப்போதெல்லாம் சொந்தபந்துக்களில் சுப/அசுப நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதைத்   தவிர்த்துக்கொள்ளலாயினர்.   

சவீதாவுக்கு  ஒடிசி  நடனக்காரிகளைப்போல இஞ்சிய இடுப்பு, அதனால் அவள் மார்புகள்  மிதமாக விம்மித் தெரியும். அந்த அக்கறைகள் எதுவுமின்றித் துப்பட்டாவை வீசியெறிந்து விட்டு சின்னப்பிள்ளைகள்போலக் வீடெங்கும் குதித்துக் கொண்டு திரிவாள். 

‘இங்கபார் சவீதா நீயொன்றும் சூட்டி பபா இல்லை, இளமை ஆம்பிளயள இலகுவில் சபலப்படுத்திப்போடும், மாமா என்றாலும் வேறு எவரென்றாலும் ஆம்பிளையள் இருக்கிற சமூகத்தில   நீ இப்படிக்குதிக்கப்படாது’ என்று ஒருநாள் அவளை லேசாகக் கண்டித்து வைத்தாள். ‘உதை எனக்குத்தான் சொல்றியா’ என்கிற தோரணையில்  இருந்தது சபீதா  பைராகியைத் திருப்பிப்  பார்த்தவிதம். பைராகி தன்வீட்டை அழகான தளபாடங்கள் வைத்து நவீனமான தோரணையில் வைத்திருப்பாள். சவீதாவுக்கும் வீட்டின் உள்ளக அலங்காரங்கள், எந்தச்சாளரத்துக்கு எந்த எழினி வைக்கவேண்டும், எந்தப்படத்தை எங்கே மாட்டவேண்டும்    என்பதில் தெளிந்த ரசனையுண்டு.   

சனி, ஞாயிறு மற்றும் விடுமுறைநாட்களில்  எழிலனது ரீ- ஷேர்ட்டையையோ / ஷேர்ட்டையோ எடுத்து அணிந்துகொண்டு முழுவீட்டையும் குளியலறையையும் மின்னல் வேகத்தில் அவளாகவே ’மொப்’ பண்ணிச் சுத்தம் செய்துவிடுவாள். பைராகியுக்குச் சமையலறையிலும் செய்வதற்குப் பெரிதாக  எதுவுமிருக்காது.  முழுச்சமையல் வேலைகளையும்  சவீதாவே பொறுப்பு எடுத்துக்கொண்டுவிடுவாள். 

ஸ்காபொறோவின்  பேரங்காடிகளில்   விளை,  விரால்,  வஞ்சிரம் அல்லது  சீலா மீன்கிடைக்கும்   நாட்களில்  ஆணம் குறைச்சலாக /  வதக்கலாக   சபீதா வைக்கும் மீன்கறி எழிலனுக்கு   கொள்ளையாகப்   பிடித்துப்போய்விட வீட்டில் அடிக்கடி  மீன்குழம்பின்  வாசம் கமழலாயிற்று. எழிலன் அவளைப்பாராட்டும் போதெல்லாம் ஓடிப்போய் பின்பக்கமாக அவனது  கழுத்தைக் கட்டித்தொங்குவாள், அல்லது சுருண்ட அவன் கிராப்புத்தலைக்குள்    விரல்களைப்புகுத்தித்  தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதெல்லாம்   பைராகிக்குத் `துணுக்’கென்றிருக்கும்.  அப்படியே அந்த அன்பு அபரிமிதமாகி, கே. பாலச்சந்தரின்  ‘நூல்வேலி’யில் ஆகுவதைப்போல ஏதாவது ஏடாகூடமாக  ஆகிவிட்டாலும் என்று     பைராகிக்கு உள்ளூரப்   பயமாக இருந்தது.  ’மாமான்னாலும் ஆம்பிளயள அளவுக்குமிஞ்சித் தொட்டெல்லாம் அளையக்கூடாதம்மா,  விபரீதமாயிடும்’ என்று அவளை    எச்சரித்துவைக்கத்தான் ஒவ்வொரு சமயத்திலும்   நினைத்தாள், ஆனால்  முடியவில்லை.  

இவர்கள் குடியிருப்புத் தொகுதிக்கு கிழக்காக நாலுவீடுகள் தள்ளிப்போனால் ஒரு தோப்புவரும், அத்தோப்பின் எல்லையில் இவர்களுக்கான ஒரு பொதுப்  பூம்பந்தாட்ட  ஆடுகளம் உள்ளது.  மழையோ, பனித்தூற்றலோ இல்லாத நல்ல காலநிலையுள்ள மாலைவேளைகளில்   எழிலன் அலுவலகத்தால் வந்ததும், சபீதாவுடன்  அங்கேபோய்   பாட்மின்டன்ட் விளையாடுவார்கள்.  அவர்கள் ஒரே மிதியுந்தில் விளையாடப்போவதும், மாலையில் இருண்டபின்    கைகள்பிணையாத குறையாக உரசிக்கொண்டு   வீடுதிரும்புவதும் பைராகிக்கு  வயிற்றினுள் மேலும் மேலும்  புளியைக்  கரைத்துக்கொண்டிருந்தாலும்  எழிலனிடம்  ’அப்படி  சவீதாவைக்கூட்டிப்போய்  விளையாடவேஎண்டாம்’ என்று கண்டிக்க முடியாதபடி  இருந்தாள். அப்படித்தான் கண்டித்தாலும் ‘பின்னே எதுக்கு அந்த ஆடுகளத்தை அமைத்து வைத்திருக்காங்க’ என்றோ ‘அவள்  உனக்கு மருமகள்போல், எனக்கும் மருமகள் இல்லையா’ என்றோ  சொல்லி அவள் வாயை அடைக்கப்பார்ப்பான்.  

அவனுக்கு  எல்லாவற்றிலும் அவசரம்.  இப்போது `சவீதாவை விரைவாக மோட்டோர் டிறைவிங் கோர்ஸிலும் சேர்த்து அவளுக்கு  ட்றைவிங் லைசென்ஸ் எடுத்துக்கொடுத்து விடவேண்டுமென்றும்’ சொல்லிக் கொண்டிருக்கிறான்.  `இப்போ டிறைவிங்குக்கெல்லாம் என்ன அவசரம்,  அவள் முதல்ல   தனது படிப்பை நல்லபடி  முடிக்கட்டும்’  என்பாள் பைராகி. 

அடுத்த ஜூனில் அவளுக்குப்பிறந்தநாள் வருகிறது, இளசுகள் அகலமான ஒற்றைக்காப்பு அணிவது அப்போது  நடப்பாயிருந்தது. அதற்குக்குறைந்தது தங்கம்  ஐந்து சவரன்களாவது வேண்டும். அவளுக்கும் அப்படியொரு  தனிக்காப்பொன்று வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று பிரியப்பட்டான் எழிலன். அப்படிக்காப்பு வாங்குவதற்கான எண்ணப்பொறி யார்பக்கமிருந்து கிளம்பியதென்பது மர்மமாயிருந்ததோடு அவள்மீதான இவனது அவசரமும் அக்கறைகளும் கொஞ்சம் அபரிமிதமானதாகப்பட்டது பைராகிக்கு. ’அவளின்  ஆசைகளுக்கு இவன் இரையாகிறானா, அல்லது இவனது  ஆசைகளுக்கு  அவள்  இரையாகிறாளா’ புரியாமல் அலமலங்கினாள் பைராகி.   

அநேகமான பெண்கள் பயன்படுத்துவதைப்போல அவளும்   நிவியா கிறீம்தான்  முகத்துக்குப் பூசுவாள்.   எழிலன் தோரணையாகச் சிறியதாடி வைத்திருப்பதனால்  ஒபீஸுக்கோ வெளியிலோ போகும்போது  அதுக்குத்தடவ தேன்மெழுகு கலந்ததாம்  தட்டையான  டப்பிஒன்றில் வரும்  ஒருவகையான நிறமற்ற  ஸ்பெஷல் பால்ம்  தனியாக வைத்துப் பூசிக்கொள்வான். நிவியா கிறீம் எல்லாம் அவனுக்குத் தேவைப்படாது.     சவீதாவும்    நேர்சிங் பயில்பவளல்லவா,  குளிர் தேசத்தில் சருமம் விரைவில்  உலர்ந்துவிடும், அதைத்தடுக்க    இன்னமும் பேபி கிறீம்களைத்தான்  முழு உடலுக்கும்   பாவிக்கிறாள். இப்போ கொஞ்சநாட்களாக  பைராகியின்  நிவியா கிறீமை அவளைத்தவிர வீட்டில் யாரும் பாவிப்பதில்லை, ஆனாலும்  அவளது அலங்கரிப்பு மேசையிலிருக்கும்   நிவியா கிறீம் வேகவேகமாகத் தீர்ந்துகொண்டிருப்பது விந்தையாக இருந்தது. என்னதான் நடக்கிறது என்பதை அறிந்தால்தான் அவள் மனது சமாதானமாகும். தங்களுக்குத் திருமணமான காலத்தில் ’மேட்டிங்’கின்போதேற்படும் உராய்வையும் எரிச்சலையும் தவிர்க்கத் தாம் நிவியாவைப் பயன்படுத்திக்கொண்டது அவளுக்கு   லேசாக   ஞாபகத்துக்கு வந்தது. இனி யாரைத்தான் நம்புவதென எண்ணியபோது அவள் உடல் லேசாக    நடுங்கத்தொடங்கியது.  மனம்  விச்ராந்தியாக இருக்க நாட்கள் நகர மறுத்தன.  இது யாரிடமும் கலந்து ஆலோசனை  பெறமுடியாத  அந்தரங்கம்,  தொடர்ந்து யோசித்தாள். 

நிவியா கிறீம் டப்பியைக் குப்பைக்குள் வீசிவிட்டு, ஐம்பது டொலர்கள் வரையில் செலவுசெய்து Sol De Janeiro எனும் உயர்ரகத்திலான ஃப்றெஞ் கிறீமை வாங்கினாள். அதை லேசாகப் பூசிக்கொண்டால் போதும், அன்று முழுவதும் மேனி மென்மையாகவும் வழுவழு வென்றிருப்பதுடன் அதன் தனித்துவமான சுகந்தமும் நின்றுவாழும். 

‘அதொரு  அழகான மரங்களும்  நீரோடைகளும்   செறிந்த சோலை,  தரையெங்கும் திரள்பனி கொட்டிக்கிடக்கிறது,  முடிவிலித்தொலைவில்  வானத்தின் வெண்முகில்களோடு  பனியும் வளர்ந்துயர்ந்து கலந்து வெண்பர்வதங்களெனத் தோற்றந்தருகிறது. முகில்களிடையே தானும்  வெள்ளைத் துகிலுடுத்தியொரு    தேவதையைப்போல் பறந்துவந்த சவீதா கையில் ஃபிளானல் துணியில்  பைராகியின் மாதர்நல மருத்துவமனையின் படங்களில்  இருப்பதைப்போலக் கன்னங்கள் சிவந்திருக்கும் ஒரு அழகான குழந்தையைப் பொதிந்துகொண்டுவந்து   அவளுக்குக்  காட்டுகிறாள்.’  

திடுக்கிட்டு விழித்தெழுந்தவளுக்கு அந்தக்கனவை எப்படிப் பொருள் கோடல் செய்வதென்று தெரியவில்லை, அலமலங்க விளித்தாள்.  

<Trusting is good, but verification is better.>  நம்புவது  நல்லது, ஆனால் எதையும் பரிசோதித்துவிடுவதே சிறந்தது. 

ரஷ்யப்புரட்சியின் தந்தையும், தத்துவார்த்தியுமான விளாடிமிர் லெனின்தான் நவின்றயதாகவும் அதையே பயின்றதாகவும்  அவர்பற்றிய நூலொன்றில் வாசித்தது  நினைவுக்கு வந்தது.  

மறுநாள் சவீதா நர்ஸிங் கல்லூரிக்குச்சென்றதும், அவள் அணிந்த உடுப்புக்களை வாஷ்மெஷினில் போடுவதற்காகப் போட்டு வைத்திருக்கும் லோன்ட்றிக்கூடைக்குள் இருந்த அவளின்  நிக்கர்களை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அவற்றில்  இரண்டு  நிக்கர்களில் Sol De Janeiro கிறீமின் திவ்விய சுகந்தம் கமழ்ந்தது. 

– அம்ருதா 215, அக்டோபர் 2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *