சீடராகச் சேர்ந்த வீர சிவாஜி!




மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாசர். ராம தாசரின் இயற்பெயர் நாராயணன். சூர்யாஜிபந்த்& ரேணுபாய் தம்பதிக்கு இரண்டாவது மகனாக கி.பி.1608&ஆம் ஆண்டு ஸ்ரீராம நவமியன்று இவர் பிறந் தார். இவருக்கு ஆறு வயதிலேயே ஆஞ்ச நேயர் அருளால் ஸ்ரீராமபிரானின் தரிசனம் கிடைத்தது.
ஒரு முறை ஆஞ்சநேயர் சந்நிதியில் ராமபிரான் தோன்றி, ‘‘செல்வனே! கிருஷ்ணா நதிக்கரையில் தோன்றும் அரசனுக்குத் துணையாக இருந்து, நாட்டில் நல்லாட்சி, நல்லறம் சிறக்க உதவுவாயாக!’’ என்று கட்டளையிட்டார். ஸ்ரீராமபிரானின் அருள் பெற்ற நாராயணன், தன் தலைமேல் கை கூப்பி, ‘‘ஸ்ரீராம், ஜெயராம், ஜயஜய ராம்!’’ என்று பக்திப் பெருக்கோடு வணங்கி நின்றார்.
ஸ்ரீராமர், நாராயணனுக்கு தரிசனம் அளிப்பதற்கு முன்பே நாராயணனின் தந்தை மரணம் அடைந்தார். ராம தரிசனத்துக்குப் பிறகு, ராமதாசர் தமது பன்னிரண்டு வயதுக்குள் பல மொழிகள் கற்றுத் தேர்ச்சி பெற்றார். கீதை, உபநிடதம், ராமாயணம் ஆகியவற்றில் புலமை பெற்றார். ஸ்ரீராமபிரானுக்கு தொண்டு செய்வதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார். இதைக் கண்டு அவரின் தாயும் சகோதரனும் கவலை கொண்டனர். ‘‘அம்மா! இவனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால், உலக வாழ்க்கையில் நாட்டம் ஏற்படும்’’ என்றார் நாராயணனின் சகோதரர். தாயாரும் இதற்கு உடன் பட்டார். இந்த இருவரின் திட்டப்படியே திருமணம் நிச்சயமானது.
திருமண நாள்… மணமக்களிடையே திரையைப் போட்டு, புரோகிதர் மந்திரம் ஓதினார். அப்போது ராமதாசரின் மனதில் ஏதோ தோன்ற… ‘எனது வாழ்க்கையை ராமபிரானுக்கு அர்ப்பணிப்பதா அல்லது மனைவி& மக்கள் என்று இல்லற சுகத்தில் உழல்வதா?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டார். சில விநாடிகளுக்குப் பின் சட்டென ஒரு முடிவுக்கு வந்த நாராயணன், ஓசையின்றி மணமேடையிலிருந்து வெளியேறினார். எவருக்கும் எதுவும் தெரிவிக்காமல் கால் போன போக்கில் நடந்து கோதாவரி தீரத்தில் இருந்த பஞ்சவடியை அடைந்தார். அங்கு தாங்ளி என்ற இடத்தில் உள்ள மலைக் குகையில் வாசம் செய்யலானார். தினமும் தியானம், ஜபம், பிரார்த்தனை என்று கடுந்தவம் செய்யத் தொடங்கினார்.
இடுப்பளவு நீரில் நின்று மணிக்கணக்கில் ஜபம் செய்தார். பிற்பகலில் ஊருக்குள் சென்று, ராம நாமம் சொல்லி பிட்சை ஏற்று வந்தார். கடுமையான தவத்தின் காரணமாக அவருக்கு பல ஸித்திகள் ஏற்பட்டன. ஆனால், அவர் அவற்றை பயன்படுத்தவே இல்லை. நாராயணனுக்கு மீண்டும் ஒரு முறை ராம தரிசனம் கிடைத்தது. இந்தச் சூழ்நிலையில் உத்தவர் என்ற இளைஞன், நாராயணனிடம் வந்தான். ‘‘சுவாமி! என்னை தங்களின் சீடனாக ஏற்க வேண்டும்!’’ என்று வேண்டினான். அவனை, ஆசீர்வதித்து ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கையை மேற்கொண்டார் நாராயணன். ஒரு நாள், ‘‘உத்தவா! எனக்கு அருள் புரிந்த ஆஞ்சநேயப் பிரபுவுக்கு ஆலயம் ஒன்றை அமைக்க விரும்புகிறேன். அது உனது பொறுப்பு. நான் புனித யாத்திரை செல்கிறேன்!’’ என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயணம் செய்து, பலருக்கும் ஞான உபதேசம் செய்தார் நாராயணன். இந்தக் காலகட்டத்தில்தான் நாராயணன், பக்த ராமதாசராக அறியப்பட்டார். தமது புனிதப் பயணத்தின்போது ஆங்காங்கே ராமர் கோயில்களைக் கட்டி, அவற்றைத் தன் சீடர்களிடம் ஒப்படைத்தார்.
தமது முப்பத்தாறாவது வயதில் சொந்த ஊர் திரும்பினார் ராமதாசர். ஒரு நாள் தமது வீட்டு வாசலில் பிட்சை கேட்டு, நின்றார். ராமதாசரின் அண்ணி பிட்சையோடு வந்தார். ராமதாசரை அடையாளம் கண்டுகொண்ட அவர், ‘‘அம்மா! இங்கே வாருங்களேன்! உங்கள் இரண்டாவது பிள்ளை வந்திருக்கிறார்’’ என்றாள். அதைக் கேட்டு கண் பார்வை இழந்த தாயார் வெளியே வந்தார்.
‘‘மகனே நாராயணா! என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லையே’’ என்று தவித்தார். ‘‘இருக்கட்டும்… நான் முதலில் உங்களை நமஸ்கரிக்கிறேன்!’’ என்று தாயின் பாதங்களை ராமதாசர் தொட்ட மறுநொடியே தாயாருக்குப் பார்வை திரும்பியது.
அதன் பின் சில காலம் கிருஷ்ணா நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கினார். அவரைக் கண்டு வணங்க தினமும் பக்தர்கள் வந்து சென்றனர். அந்த நாளில் மகாராஷ்டிரத்தில் இந்துக்களின் சமய வாழ்வு, அந்நியத் தாக்குதலினால் மிகவும் கவலைக்கு உரிய நிலையில் இருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான் துக்கராம் சுவாமிகள் ஆன்மிகத்தைப் பரப்பி வந்தார்.
ஒரு முறை வீர இளைஞன் ஒருவன், துக்காராம் முன் வந்து வணங்கி நின்று, ‘‘சுவாமி! என் பெயர் சிவாஜி. மகாராஷ்டிரம் இன்று சீர்குலைந்து கிடக்கிறது. அது வீறு கொண்டு எழுந்து சுதந்திரம் பெற, தாங்கள் அருள் புரிந்து, வழிகாட்ட வேண்டும்!’’ என்றான் துடிப்புடன்.
‘‘வீர இளைஞனே! ஸ்ரீராமபிரானது அருளால், நாட்டுச் சேவையே ராமசேவை என்று கிருஷ்ணா நதிக் கரையில் ஒரு துறவி செயல்படுகிறார். அவர் சிறந்த தேசபக்தரும்கூட. அவரிடம் போ! உதவுவார்!’’ என்று கூறினார்.
இவ்வாறு தன் ஞான குருவைத் தேடி வந்தார் சிவாஜி. குகை ஒன்றில் காட்டு மிருகங்கள் சூழ்ந்திருக்க ராமதாசர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். ‘‘குருவே! சரணம்! இன்று நல்ல நாள்!’’ என்று கூறியபடி அவர் பாதம் பணிந்தார் சிவாஜி. கண்களைத் திறந்து மாவீரன் சிவாஜியை ஏற இறங்கப் பார்த்தார் ராமதாசர். ‘‘வா, இளைஞனே, வா! நாட்டில் அறம் தழைக்க, உன்னை எதிர்பார்த்தே நான் தவமிருக்கிறேன்’’ என்றார்.
‘‘சுவாமி! எனக்கு உபதேசம் செய்து அருள் புரியுங்கள்’’ என்று வேண்டினார் சிவாஜி.
‘‘நீ எப்படி என்னைத் தேடி இங்கு வந்து வந்தாய்?’’
‘‘அன்னை பவானி கனவில் தோன்றி தங்களை எனக்கு அடையாளம் காட்டி அருளினாள்’’ என்றார் சிவாஜி.
‘‘ராம்! ராம்!’ என்று மகிழ்ந்த ராம தாசர் வீரசிவாஜியை ஆசீர்வதித்தார். போர்கள் நடந்தன. அவற்றில் வெற்றி பெற்றார் சிவாஜி. கடைசியில் தனது மொத்த நாட்டையும் குரு காணிக்கையாக ராமதாசரின் காலடியில் வைத்தார் சிவாஜி.
சிவாஜியின் மனநிலை குரு ராமதாசருக்கு விளங்கியது. நாட்டை சீடனிடமே திருப்பித் தந்த குரு அவரை ஆசீர்வதித்தார். சிவாஜி, தம் குருவுக்காக ‘ஸஜ்ஜன்கட்’ என்ற இடத்தில மிகச் சிறந்த ஆசிரமம் ஒன்றை அமைத்துக் கொடுத்தார்.
– ராணி மணாளன், கிருஷ்ணகிரி-1 (மே 2007)