சிறுவீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 92 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எனது பயணங்கள் என்னைப் புரிந்துகொள்ள, வாழ்க்கையைப் புரிந்து கொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தன.

ஆனால் வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ? என்னைச் சரியாகப் புரிந்துகொண்டேனோ?

ஆம் என்று சொன்னால் என் எழுத்துப் பயணம் முடிந்து போயிற்று என்று பொருள். இன்னும் அது தொடங்கவே இல்லை என்றுதான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது.


பெட்டியினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தான். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ஒரு சின்னப் படையெடுப்பு நடத்துவதுபோல அந்தக் குடும்பம் ஏறியது.

வெள்ளைச் சீலையுடுத்த, ரவிக்கை போடாத கிராமத்து வடிவம் ஒன்று. ஐம்பது வயதிருக்கும். அவள் பின்னால் இன்னொரு முப்பத் தெட்டு வயதுப் பெண். வாட்டமில்லாத உடம்பு. அவள் கணவனே போன்று ஒரு ஆள்.

”நாப்பத்தெட்டு, நாப்பத்தொம்பது, அம்பது, அம்பத்தொண்ணு, அம்பத்திரெண்டு, இன்னா இருக்கு… சார், நாப்பத்தேளா? சரி, இரிங்கோ…”

அவர் பின்னால் கைப்பிள்ளையோடு ஒரு சின்னப் பெண். பதினெட்டு வயசுக்குள் பிரசவம் ஆகிவிட்டிருந்தது. அவள் பின்னால் ஒரு முப்பது வயது வாலிபன். நிறையச் சாமான்கள். பெட்டி படுக்கைகள், இரண்டு சாப்பாட்டு தூக்குவாளிகள், காப்பிச் செம்பு, இரண்டு குட்டிச் சாக்குகள். மூன்று அட்டைப் பெட்டிகள். பனையோலைக் கடவம் ஒன்று. நார்ப் பெட்டிகள் இரண்டு. நார்ப்பெட்டிகள் இருக்கையின் அடியில் புக மறுத்ததைத் தள்ளுதள்ளென்று தள்ளியும் முடியாமல் பெர்த்தின் மேல் வைத்தார்கள். பனையோலைக் கடவம் புகுந்துவிட்டது. குட்டிச் சாக்கு களைத் தூக்கி மேலே போட்டார்கள்.

‘ஐயா, அது என் பெர்த்!”

“கொஞ்சம் பொறுத்துக்கிடுங்க… எல்லாம் சரியாக்கிரலாம்.”

எப்படிச் சரியாக்குவார்கள் என்று தெரியவில்லை. எல்லாம் அடைசலாகிவிட்டது. எல்லாச் சாமான்களும் வந்துவிட்டதா என்று எண்ணிப் பார்த்தனர். கைப்பிள்ளை அடக்கம், காப்பிச் செம்பும் சேர்த்து பத்தொன்பது எண்ணம். பெண்கள் மூவரும் எதிர் இருக்கையிலும் ஆண்கள் இருவரும் அவள் பக்கத்திலும் அமர்ந்தனர். தொட்டில் கட்டுவதற்கான ஆலோசனைகள் நடந்தன. மூத்த ஆள் ராமசாமி, ‘மொதல்ல சாப்பிட்ரலாம்” என்றார்.

சற்று மிதமாக மட்ட ரகப் பிராந்தி வாடை வந்தது. புதுக் கருப்பட்டியின் நிறைந்த மணம். விதவைத் தாயார் ஒரு வாளியைத் திறந்ததும் புளிச்சாறும் நல்லெண்ணெயும் கலந்த துடிப்பான வாசம்.

”சார், சாப்பிட வாரேளா?”

‘இல்ல…சாப்பிடுங்கோ… நான் சாப்பிட்டாச்சு…”

வண்டி நகர ஆரம்பித்ததால், புதிய காற்று பழைய காற்றைத் தள்ளிக் கொண்டு போயிற்று. வாளியை மூடியதும் புளித் தண்ணி வாடையின் தீவிரம் குறைந்தது.

யார் எங்கு படுப்பது என்று தர்க்கமானது. பிள்ளைத்தாச்சி கீழ் பெர்த்தில்தான் படுக்க முடியும். தாயாருக்கும் மேலே ஏறிப் படுத்த சர்வீஸ் கிடையாது. முத்தம்மை நடு பெர்த் போதுமானது என்றாள் கணவன் ராமசாமியிடம். மேல் பெர்த்துக்களில் ஒன்று தன்னுடையது; ஆனால் இரண்டிலும் சாமான்களை அடைத்தாயிற்று. கேஸ் கடைசியில் தன்னிடம் அப்பீலுக்கு வரும் என்று அவனுக்குப் புரிந்தது.

உச்சி பெர்த்தில் ஒருவசதியுண்டு. பகலிலும் நிம்மதியாகப் படுக்க லாம். சற்றுப்பிந்தியும் தூங்கலாம். ஆனால் சாமான்கள் போக மீதி இடத் தில் சுருண்டு கொள்ளத் தன்னால் ஆகாது. வேறு எங்கு சாமான்கள் ஒதுங் கல் செய்வார்கள்? ஒரே பெர்த்துக்கு அவற்றை மாற்றினால் ஓராள் உட்கார வும் முடியாது.எப்படியும் ஒரு நடு பெர்த்தனக்கு வாய்க்கும் என்று மனக் கணக்குப் போட்டுப் பார்த்து வரட்டும் பார்க்கலாம் என்று நினைத்தான்.


விற்பனைப் பிரதிநிதியாக, தனியாகப் பயணம் செய்கையில் பல முறையும் பெர்த் மாற்றல், போகி மாற்றல் கோரிக்கைகள் வரும். சர்வ நிச்சயமாக அவனிடம் கேட்பார்கள். மறுத்துச் சொல்ல முடியாத ஒரு முக அமைப்பு தனக்கு இருக்கிறதா என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்படுவ துண்டு.

ஒரு பெப்ரவரி மாதக் குளிரில் பஸ்ச்சிம் எக்ஸ்பிரசில் பம்பாயில் இருந்து டெல்லி போனபோது உல்லாசமானதோர் பஞ்சாபிக் குடும்பம், ஒரு சிந்தி, ஒரு மார்வாடி. குளிர் தாங்கக் கையோடு கொண்டுபோன மெக்டௌவல்ஸ் பிரிமியம் முதல் சுற்றிலேயே முடிந்துவிட்டது. கூச்சம் ஏதும் இன்றி பெகன்ஜி கையில் கிளாசோடு இடது கையால் காலி ஃப்ளவர் பஜ்ஜிகளை பிளேட்டோடு நீட்டினாள். அவன் கொண்டு போன ஆறு இட்லியும் தேங்காய்ச் சட்டினியும் ஆளுக்கொன்றாய் கேக் போல எடுத்துக் கடிக்க… காலி. மூன்றாவது சுற்றில் மார்வாடிக்காரர்கார ரொட்டி களைக் கிட்டத்தட்ட அவனுக்கு ஊட்டிவிட்டார்.

அப்போது போகி மாற்றக் கோரிக்கை ஒன்று வந்தது. கதவுகள் கொண்ட தொடர் வண்டியானதால் மாறச் சிரமம் இருக்கவில்லை. பொருட்களை இடம் மாற்றி வைத்துவிட்டு பாத்ரூம் போனவன்

நெடுநேரம் கண்ணாடி பார்த்துச் சிரித்தான். பிறகு தன்னையே இந்தியில் கன்னாபின்னா என்று திட்ட ஆரம்பித்தான். பெர்த்தில் போய்ப் படுத்தது கூட நினைவில் வரவில்லை.

தாதர் சென்னை எக்ஸ்பிரசில் ஒரு அவசர வேலையாக வந்தபோது, பேச்சுத் துணைக்குத் தோதான ஆள். முதலில் அவர் வண்டியில் ஏறிய போதே வித்தியாசம் தெரிந்தது. அங்க அசைவுகளில் ஒரு நளினம். அலி ஆணுடையில் வந்தது போல. புருவம் செதுக்கப் பட்டிருந்தது. மீசை இல்லாத முகத்தில் நல்ல சாந்தம், நிதானம்.

கூத்துக் கட்டுகிறவரல்ல; கதகளிக்காரரும் அல்ல; பரதம் பயின்றவர் என்பது தெரிந்தது. பூனா வரும்போது பேச்சு நல்ல சுவராஸ்யத்தில் இருந்தது. பந்தநல்லூர் பாணியை விளக்கிக்கொண்டிருந்தார்.

பூனாவில் இருபது நிமிடங்கள் வண்டி நின்றபோது, நவீன பயணச் சாதனங்களுடன், ஜீன்ஸ், பேகி ஷர்ட், நார்த் ஸ்டார் சகிதம் வெள்ளைத் தோலும் வெளிநாட்டு மணமுமாக ஒரு வாலிபன். பிரச்சினை, இந்த போகியில் மனைவிக்கு பெர்த்; மூன்று போகி தாண்டி அவனுக்கு பெர்த். கைக்குழந்தை அழுவான். சார்… ப்ளீஸ்…

பெட்டி படுக்கைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டபோது நாட்டியக்கலைஞர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. என்றாலும் உலகத்துச் சிலுவைகளைத் தானே சுமக்கும் கம்பீரம் அவனுக்கு.

பெட்டியை அடைந்ததும் முதல் ஏமாற்றம். பலகை இருக்கைகள் கொண்ட, ஓட்டை உடைசல் சன்னல்கள் கொண்ட, உ.வே.சாமிநாதய்யர் பயணம் செய்திருக்கக் கூடிய கோச். பெர்த் மேலே ஒதுக்கப்பட்டிருந்தது. என்றாலும் கீழே முழுவதும் ஆர்.ஏ.சி. இருக்கைகளில் பத்துப் பேர். அடுத்திருந்த இரண்டு லெட்ரின்களின் நீக்கமில்லாத வாசம். அந்த மொத்தப் பயணமும் வானத்தில் சஞ்சரித்தவாறே நடந்தது. இனி யாருக்கும் பயணத்தில் அனுசரிப்பு செய்வதில்லை என்ற திருத்த மசோதா மனத்தில்.


களக்காட்டுக்காரர்கள் இன்னும் ஐந்து பெர்த்களையும் பங்கீடு செய்து தீரவில்லை. கடைசியில் நடு பெர்த்தில் அவன்படுத்துக் கொள்வ தாகத் தீர்மானம் ஆயிற்று.

ராமசாமி, குட்டிச் சாக்குகளை ஓரமாக அடுக்கி, அதன் மீது பண்டாரங்கள்சமாதி கொள்ளும் நிலையில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தார். பரமசிவம் சாமான்களை அடுக்கி மீந்த இடத்தில் கருப்பைச் சுருளாகச் சுருண்டு கொண்டான். தொட்டில் குழந்தை தூங்க ஆரம்பித்த நிம்மதியில் தாயும் துயின்றாள். ஆச்சிக்காரி முந்தானையைப் போர்த்திக்கொண்டு மரத் தடுப்பைப் பார்த்துக் கண்ணை மூடினாள். அவன் பாத்ரூம் போய்வந்தபோது முத்தம்மை வலது கையை மடித்துத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தாள்.

காற்றுத் தலையணையை ஊதி, சன்னலை இறக்கி, பெட்ஷீட்டை நான்காக மடித்து விரித்து, தலையணை மேல் துவர்த்தை விரித்து ஏறிப் படுத்தான். முத்தம்மை பார்ப்பதும் பார்வையை பெயர்ப்பதுமாக இருந் தாள். நல்ல முறுக்கம் கொண்ட உடம்பு. மனதில் சிறு கள்ளத்தனம் கனல ஆரம்பித்தது.

எழுபத்திரண்டு பெர்த் கொண்ட பெட்டியில் நான்கு டாய்லெட்டு கள். அதில் வெஸ்டர்ன் மாடலைக் கழித்துவிட்டால், காலை ஆறரை மணி முதல் எட்டு மணி வரை நெரிபிரியாக இருக்கும். தாராவி பொங்கல் வீட்டுக் கழிப்பறைகள் போலச் சில சமயம் வரிசைகள் இருக்கும். ஏழு மணிக்கு மேல் தண்ணீர் தீர்ந்து போகும் அபாயம் உண்டு. எனவே ரயில் பயணங்களில் ஐந்து மணிக்கே எழுந்து, காலைக் கடன்களை முடித்துக் கொள்வது; வேண்டுமானால் மறுபடியும் படுத்து எட்டு மணி வரை தூங்கலாம். அல்லது வெறுமனே படுத்துக் கிடக்கலாம்.

வண்டி விழித்துக்கொள்ளும் முன்பே வெளியுலகம் விழித்துக் கொள்வதை வேடிக்கை பார்க்கும் தோதான இருக்கை இல்லை. அடுத்து நிறுத்தத்தில் சாய் பருகலாம். எல்லாஸ்டேஷன்களிலும் சாய் ஒரே மாதிரி யாகவே இருந்தது.

எல்லோரும் எழுந்தாகிவிட்டது. நடுப்பலகையைத் தூக்கிக் கீழே சாய்த்தாகிவிட்டது. எல்லா முகங்களிலும் அவசரமின்மை. நேற்றைய புறப்பாட்டின் அலுப்புகள் அகன்று, நாளை அதிகாலை வரை செய்ய வேறொன்றும் இல்லாத விச்ராந்தி. இட்லிப் பாத்திரங்கள் காலியாகிக் கொண்டிருந்தன. ஒரு பொட்டலக் கனம் மேலும் அகன்றது.

கைப்பிள்ளைக்கு நிறையப் பாலிருந்தது. பால் தேடி அலையும் பரபரப்பு இல்லை. குடித்தபால் கடை வாயில் வழிந்தபோது, மார்பை மூடிய பிள்ளைத்தாச்சியிடம் இதில் நாண என்ன உண்டு என்ற இயல்பு தெறித்தது.

பரமசிவமும் அவன் சித்தி முறையுள்ள முத்தம்மையும் அவள் மாப்பிள்ளை ராமசாமியும் ஊர்க்கொடைக்கு வந்து திரும்பிக் கொண்டி ருந்தனர். திரும்புபவர் துணையுடன் பிள்ளைத் தாச்சி தன் அம்மாவுடன் கணவன் வீடு போகிறாள். பரமசிவம் குடும்பம் இன்னும் ஊரில்தான் போலும். ஒரே சாதிக்காரர்கள்; எட்டிய உறவுமாகலாம்.

பரமசிவம் தீவிரமான எம்.ஜி.ஆர். பக்தன்; பம்பாய் வந்த புதிதில் முதல் ஷோடிக்கெட்டில் அரோராவில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பார்த் ததாகச் சொன்னான்.

“நீங்க நம்பமாட்டீங்கண்ணு தெரியும் சார்… அதுக்குத்தான் நான் புரூஃப் வச்சிருக்கேன்.’

பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு பர்ஸ் எடுத்து அதனுள் சாமி படம் போலப் பத்திரப்படுத்தி இருந்த டிக்கெட்டை எடுத்துக் காட்டினான். ஆண்டு, மாதம், தேதி, அரோராதியேட்டர் எல்லாம் துல்லியமாக இருந் தன. அது முதல் காட்சிக்கானதும், ‘உலகம் சுற்றும் வாலிபனு’க்கானது மான டிக்கெட்டா என்று கேட்டுப் பரமசிவத்தைச் சீண்ட ஆர்வம் எழுந்தது.

அதற்குள் ராமசாமி முந்திக்கொண்டார்.

“எவ்வளவு வெவரமுள்ள காரியம் பாத்தேளா?”

பரமசிவத்துக்குக் கோபம் வந்துவிட்டது.

“நீ சும்மா இரிப்பா. உனக்கு என்ன எளவாம் தெரியுமா? சார் படிச்சவரு… அறிவாளி… அவரே ஒண்ணும் சொல்லல்லே…”

முத்தம்மைக்கு குறுஞ்சிரிப்பு எழுந்தது. அதைக் கவனித்தபோது முந்தானையை மற்றொரு முறை இழுத்து விட்டுக்கொண்டாள்.

”அவுரு மனசுக்குள்ள ‘பைத்தியாரப் பய’ன்னு நெனச்சு சிரிக்காரு,’ என்றார் ராமசாமி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே…” என்றான் தற்காப்பில்.

இருவருக்கும் நாற்பது நிமிடங்கள் சர்ச்சை மிக ஆரோக்கியத்து டனும் அர்த்தபூர்வமாகவும் அரசியல் பற்றி நடந்தது. இடையில் பெரிய ஸ்டேஷன் ஒன்று வந்ததால் பரமசிவம் சிகரெட் பிடிக்க இறங்கிப் போனான்.

“நீங்க அவன்கூட என்னத்துக்கு வம்புக்குப் போறையோ? அவன் சுபாவத்தான் தெரிஞ்சிருக்கே!” என்றாள் முத்தம்மை.

”நீ சும்ம கெடட்டி… இல்லாட்டாலும் எப்பவும் நீ அவனுக்குத் தான் சப்போட்டு…”

“சப்போட்டு என்ன சப்போட்டு… நீங்க என்னமாம் ஒளறி சண்டையை உண்டாக்குவையோ…?”

“இப்பம் உங்களுக்குள்ள சண்டை என்னத்துக்கு?” என்று பிள்ளைத் தாய்ச்சியின் தாயார் குறுக்கே புகுந்தபோது பரமசிவம் வந்தான்.

“சித்தப்பா! இங்க வா…”

பரமசிவமும் ராமசாமியும் குசுகுசுவென்று ஏதோ சற்று நேரம் பேசலாயினர்.

பரமசிவம் மறுபடியும் வெளியே போனான். ராமசாமி திரும்பி வந்து உட்காருவதற்குள் பரமசிவம் வந்து பாக்கெட்டில் இருந்து அரை பாட்டில் பிராந்தியை எடுத்தான்.

“சார்… நல்ல கம்பெனி சரக்குத்தானா?” – பரமசிவம். அவன் அங்கீ காரத்தை எதிர்பார்க்காமலேயே… “வாங்க… கொஞ்சம் போலப் போட்டுக்கிட்டு சாப்பிடலாம்…”

“வேண்டாம்பா… எனக்குப் பழக்கமில்லே…”

முத்தம்மை அவனையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

ராமசாமியும் பரமசிவமும் மேல் பெர்த்தில் எறி அமர்ந்து கொண் டனர். ஸ்டேஷனில் வாங்கிய காரப் பலகாரம் ஒரு பொட்டலம் கீழேயும் வந்தது.தீவிரமான சாராய வாடை. முகம் சுளிக்க, வியர்வை துளிர்க்க, இரண்டு பேரும் கீழே இறங்கி வந்தனர்.

மறுபடியும் புளிச் சோற்றின் வீச்சம் தாங்க முடியாது என்று வாசல் பக்கம் அரை மணி நேரம் நின்றுவிட்டு வந்தான். நல்லவேளையாகப் பாத்திரங்கள் காலியாகிவிட்டன.

நல்ல வெயில் முறுகிக்கொண்டிருந்தது. சற்றுப் படுத்து ஆந்திரப் பிரதேசம் தீரும்வரை தூங்கலாம். மற்றவர்கள் பெயருவதாக இல்லை. கைப்பிள்ளை உறங்கிக் கொண்டிருந்தது.

உட்கார்ந்து கண்ணயர்ந்த போது, அவர்கள் ஐவரும் குடும்பக் கதை ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பேச்சுவாக்கில் குரலுயர்ந்தபோது விழிப்பு வந்தது. ராமசாமி கேட்டுக்கொண்டிருந்தது கேட்டது.

“நீ எப்பிடிலே எந் தங்கச்சிக்கிட்டே போயி ஒந் தம்பிக்கப் பொண்ணு கேப்பே?”

”கேட்டேன். அதுக்கென்ன இப்போ?”- பரமசிவம்.

“எப்பிடிடா கேப்பே? எங்கிட்டே கேட்டியாடா நீ? தாய்மாமனைக் கேக்காம, பொட்டச்சிக்கிட்டே என்னடா கேள்வி?”

“அவகிட்டே கேட்ட பொறவு ஒங்கிட்டே சொல்லலாம்ணு இருந்தம்பா…”

”ஏன்? மொதல்லே எங்கிட்டே கேட்டா மாட்டேம்ணு சொல்லி ருவம்ணா? என்ன யோக்யதைடா இருக்கு எம் மருமவளைப் பொண்ணு கேக்கதுக்கு?”

”ஏன்? எங்க யோக்யதை என்ன கொறஞ்சு போச்சு? வீடு குடி இல்லியா? காடுகரை இல்லியா? ஒங்க யோக்யதைக்கு எங்க யோக்கி யதை என்ன கொறஞ்சு போச்சுங்கேன்?”

”சொத்து சொகம் மட்டும் இருந்தா போருமாடா? கொலகாரன் குடும்பத்திலே பொண்ணு குடுப்பமாடா?”

“சித்தப்பா…’

“நீங்க பேசாம இருக்க மாட்டேளா? விருப்பமில்லேண்ணா விட வேண்டியதுதானே”- முத்தம்மை.

“நீ வாயை மூடுட்டீ… உனக்கு என்ன எளவாம் தெரியுமா? என்னைக் கேக்காம எந் தங்கச்சி சம்மதிப்பாளாலே… கொலைகாரப் பாவிகள்ளாடா நீங்க. பொண்ணு கேக்கப் போனானாம் பொண்ணு கேக்க…”

“இன்னா பாரு சித்தப்பா… இஸ்டமில்லேண்ணா விடு… ஏலே ஒலேண்ணு பேச வேண்டிய தேவையில்லே.. பொறவு மரியாதை கெட்டுப் போயிரும்…’

“என்னலே செய்வே நீ?… மயிரைப்புடுங்கீருவியா?”

“நீ என்னலே மயிரைபுடுங்கீருவே மலட்டுத் தாயளி…உன்னைக் கூட்டீட்டுப் போயிப் பொளப்புக்கு ஏற்பாடு செய்தது நாமில்லாலே பெரிசா பேச வந்திட்டான். அப்பம் கொலைகாரன் குடும்பந்தாலா உனக்கு உதவி செய்தது?”

“நீங்க கொஞ்சம் சும்மா வருவேளா? எங்க வச்சு என்ன பேசணும்ணு தெரியாது… என்ன எளவாம் ஔறிக்கிட்டு வாங்கிப் புடிக்கது” முத்தம்மை.

”நீ என்னட்டீ எனக்கு சட்டம் கெட்டுகது? எங்குடும்பத்திலே பொண்ணு கட்ட ஒரு யோக்யதை வேணும்ட்டீ…”

“ஆமா… பெரிய யோக்யதை. பாத்திரப்பிடாது.”

“நீ என்னட்டீ அவுனுக்கு சப்போட்டு… அவன் ஒனக்கு சின்ன ஆமக்கனா?”

“வாயை மூடீட்டுக் கெடயும்… குடிச்சா வயத்திலே கெடக்கணும். கண்ணு மண்ணு தெரியாமப் பேசப்பிடாது. இனிமேதான் எனக்கு மாப்பிள்ளை பாக்கணும். அதான் உம்ம குடும்ப யோக்கியதை…”

“மூளி! எனக்குத் தெரியாதுண்ணு நெனைச்சிக்கிட்டு இரிக்கியா. ஒனக்கக் கொணட்டலும் குன்னாளியும்…?”

“அடப்பாவி சண்டாளா… உன் நாக்கு புளுத்துப் போகும்…. ராவெளுக்க ஒந் தீனத்துக்குப் பண்டுவம் பாக்கம்லா… நீ சொல்லாம என்ன செய்வே?”

எழுந்து பாய்ந்து ராமசாமி முத்தம்மையின் கொண்டையைப் பிடித்துக் குனியவைத்து இடதுகை முட்டியால் முதுகில் ஒரு இருத்து இருத்தினான். முத்தம்மை ஒரு நீளமான ஒப்பாரியுடன் குரலெடுத்தாள்.

தாயார் விலக்க முற்பட, பரமசிவம் பாய்ந்து ராமசாமியின் சட்டையைப் பற்றி உலுக்கினான்.

“எப்பிடிலே என் சித்தியை நீ அடிப்பே கள்ளத் தேவ்டியா மவனே?”

யாரும் எதிர்பாராத விதமாய் ராமசாமி இருக்கையில் அமர்ந்து முகத்தைக் கையால் மூடிக்கொண்டு குனிந்து தெவங்கித் தெவங்கி அழ ஆரம்பித்தான்.

பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பது ஆபாசமாக இருந்தது. ராமசாமியின் முதுகில் கைவைத்து, அவன் சொன்னான்.

”என்னய்யா இது? சின்னப் பிள்ளைபோல… வெக்கமா இல்ல.. விடுங்க அந்தால்… கொஞ்சம் மேலே போய் படுத்து எந்திரிச்சு வாரும்.. தெளிஞ்சா சரியாப் போகும்…”

ராமசாமியின் விசும்பல் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பரமசிவம், உள்ளிருப்பவர் பார்வையைத் தவிர்க்க வெளியே பார்த்தான். முத்தம்மை ஒரு ஒத்து தீர்ப்புக்குத் தயாரான முகத்தைப் பொருத்திக் கொண்டாள்.

விசும்பல் ஓயட்டும் என்று அவசரமில்லாத தொரு மௌனம். மணி மூன்றரை நெருங்கிக்கொண்டிருந்தது. பகல் பூரா அனப்பு ஏறிய பெட்டி வெப்பம் உமிழ்ந்து வந்தது.

குல்பர்காஸ்டேஷனில் பருப்பு வடை நன்றாக இருக்கும். இறங்கிப் போய் ஒரு சாய் குடித்து வரலாம் என்று எழுந்தபோது பரமசிவம் கூடவே வந்தான்.

”அண்ணாச்சி,சொல்லுங்கோ… நீங்க பொது ஆளு.. எம் பேர்லே எந்தத் தப்பும் உண்டுமா? அந்த ஆளு என்ன பேச்சுப் பேசுகான்? இதெல் லாம் நல்லாவா இருக்கு? நானாக்கும் ஊர்லே வெறுமனே பல்லுக் குத்திக்கிட்டு இருக்கானேண்ணு சொல்லி பம்பாய்க்குக் கூட்டிக்கிட்டு வந்து,பேப்பர் போடச் சொல்லி,பொறவு என் கிராக்கியிலே கொஞ்சம் பிரிச்சுக் குடுத்து, தாராவியிலே வீடு பாத்து, சித்தியையும் கூட்டியாரச் சொல்லி…

“இவுனுக்க தங்கச்சிகிட்டே போயி எந் தம்பிக்குப் பொண்ணு கேட்டது தப்பா? எங்க அப்பா செஞ்சாரு… நான் இல்லேங்கல்லே… நாங்க இப்பம் எவ்வளவு அந்தசா இருக்கோம்? செறுக்கி மவன் இன்னும் எனக்கு ரெண்டாயிரம் தரணும் பாத்துக்கிடுங்கோ… அந்த சித்திக்கு மொகத்துக்காகப் பாத்தேன்… இல்லேண்ணா செறுக்கி விள்ளைக்கு சாணியைக் களத்தீருப்பேன் பாத்துக்கிடுங்கோ.”

திரும்பியபோது வண்டியினுள் எல்லோரும் சாய் பருகிக் கொண்டி ருந்தனர். ராமசாமி சன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். முத்தம்மை ஒரு கையில் தனக்கான டீயை வைத்துக் கொண்டு வலது கையில் இன்னொரு டீயை ராமசாமியிடம் நீட்டிக் கொண்டிருந்தாள்.

”வேண்டாம்ணு சொன்னம்லா… எனக்கு வேண்டாம்… நான் குடிக்க மாட்டேன்.”

“சும்மா வாங்கிக் குடிங்க ஐயா.”

“சார், சும்மாரிங்கோ… உங்களுக்குத் தெரியாது….” வண்டி நகர ஆரம்பித்தது.

ஸ்டேஷன் தாண்டியதும் ராமசாமி லுங்கியை மாற்றி பேன்ட் அணிந்தார். சட்டையைப் போட்டுக்கொண்டார். சோர்பாக்கெட்டில் இருந்த டிக்கெட்டுகளில் தனதை மட்டும் தேடிஎடுத்து மற்ற டிக்கெட்டு களை முத்தம்மையின் மடிமீது எறிந்தார். முத்தம்மை பதைத்துப் பார்த்தாள்.

“நான் சோலாப்பூர்லே எறங்கப் போறேன்…”

“சும்ம இருக்க மாட்டேளா நீங்க.”

”நான் உங்ககூட வரல்லே… எங்கயாம் போய்த் தொலையப் போறேன்…”

“பேசாம இரிங்கோ… ரொம்பத்தான்…”

ராமசாமி ஒரு முடிவுக்கு வந்துவிட்ட மாதிரி தெரிந்தது.

விளக்கு வைக்கும் நேரத்தில் சோலாப்பூர் வந்தது. காலி பாட்டில், கேன்களில் தண்ணீர் பிடிக்கப் போகிறவர்; இரவுச் சாப்பாட்டுக்கு வழி தேடுகிறவர்; சூடு பஜ்ஜியா, சாய் தேடி நடப்பவர்; பழங்கள் வாங்க முனைபவர்; பக்கத்துப் பெட்டிகளில் இருக்கும் தெரிந்தவர்களிடம் விசாரிக்கப் போகிறவர்…

ஆரவாரமான ஸ்டேஷன் அது.

வண்டி நின்றதும் நிதானமாக எழுந்து ராமசாமி வெளியே போனார். ராமசாமி இறங்கிப் போய்விடுவார் என்ற நிச்சயம் எல்லோர் மனதிலும் உறைத்தது.

“இன்னாருங்கோ… இங்க வாருங்கோ… போகாதீங்கோ…’ என்ற முத்தம்மையின் குரலை அவர்சட்டை செய்யவில்லை.

சாரியால் வாயை மூடிக்கொண்டு முத்தம்மை அழ ஆரம்பித்தாள்.

“நீ பேசாம இரு சித்தி… தானா வருவான் சவத்துப்பய!’ பரமசிவம் தேறுதல் சொன்னான்.

வண்டி அங்கு இருபது நிமிடங்கள் நிற்கும். பத்து நிமிடங்கள் ஆகியும் ராமசாமி திரும்பவில்லை. அவன் பரமசிவத்திடம் சொன்னான். “வாங்க, போயிப் பாத்துக்கிட்டு வரலாம்…”

“நான் கூப்பிட்டா வீஞ்சிகிட்டு நிப்பான்… நீங்க கவலைப்படாம இரிங்கோ அண்ணாச்சி… எல்லாம் வருவான்”

“நீங்க வாங்க. பாத்துக்கிட்டு வரலாம்…”

சோலாப்பூர் பெட்ஷீட்டுகள் விற்கும் கடையருகே பீடி குடித்துக் கொண்டு நின்றிருந்தார் ராமசாமி.

“வாங்க, சாயா குடிக்கலாம்.”

“எனக்கு வேண்டாம்…”

“சும்மா வாருங்கோ…”

பரமசிவம் கூடவே வந்தான்.

சாயா குடித்துக் கொண்டிருக்கும்போது நிதானமாக ஒரு சிற்றுரை நிகழ்த்தினான் அவன்.

வண்டி புறப்பட முதல் மணி அடித்தது.

பச்சை விளக்கை கார்டு அசைப்பது தெரிந்தது. ராமசாமி வரத் தயாராக இல்லை.

வண்டி நகர ஆரம்பித்ததும் ஓடிச் சென்று தாவி ஏறிக்கொண்டனர். ராமசாமி இன்னும் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது.

உள்ளே வந்து உட்கார்ந்தான்.

முத்தம்மை இன்னும் விசும்பிக் கொண்டிருந்தாள்.

“அழாம இரி சித்தி… பொறத்தால ஜெயந்தி ஜனதா வரும்…அதுலே ஏறி வருவான்” என்றான் பரமசிவம்.

சாமான்கள் இறக்கி வீடு கொண்டு வந்து சேர்க்க ஒரு கை குறைந்ததே என்ற கவலை மட்டும் தெரிந்தது பரமசிவம் முகத்தில்.

– புதியபார்வை, மார்ச் 1993.

நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *