‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்….அகிலன்
1. கதையைப் படித்தபின், எழுதி முடித்த கதைக்குப் பின்னேயும் முன்னேயும் உள்ள எழுதப்படாத கதைகள் படிப்போர் உள்ளத்தில் விரிய வேண்டும். இதில் வெற்றி பெற்றுவிட்டால் அது அருமையான சிறுகதைச் சித்திரம் என்பதில் ஐயமில்லை.
2. வாழ்க்கையின் ஒரே ஒரு கோணம், வாழ்க்கை வெள்ளத்தின் ஒரே ஒரு சுழிப்பு,
உணர்ச்சிப் பெருக்கின் ஒரே ஒரு திருப்பம் இவற்றில் ஒன்று போதும் சிறுகதைக்கு.
3. கற்பனை வித்துக்கள் தாமாகவே வரும் என்று காத்திருக்காமல், எப்போதும் அவற்றை வரவேற்பதற்காகப் புலன்களைக் கூர்மையாக வைத்துக் கொண்டிருப்பது எழுத்தாளர்களுக்குத் தேவையான ஒரு மனப்பழக்கமாகும். கதைக் கலைஞன் என்ற சுய உணர்வோடு நாம் இருந்தால் போதும். விழிப்போடிருக்கும் கலைஞனைத் தேடி கற்பனை ரகசியங்கள் தாமே வரத் தொடங்கி விடுகின்றன.கற்பனை உணர்ச்சி இல்லாதவர்களுக்குச் சுவையற்றதாகத் தோன்றும் காட்சி, பேச்சு, அனுபவம் இவற்றிலெல்லாம் நாம் ஏதாயினும் ஒரு புதுமையைக் கண்டுவிட முடியும்.
4. ஒருவர் கதை எழுதத் தொடங்கும் ஆரம்ப காலத்தில் உணர்ச்சி மின்னல்கள் தாமாக ஏற்படத் தொடங்குவதுண்டு. கதாசிரியரின் சுய உணர்வு இன்றியே சிலகாட்சிகளோ, அனுபவங்களோ அவருடைய கற்பனையை வேகமாக இயக்குவதுண்டு. இவற்றை அவர் புரிந்து கொண்டாரானால் அவர் அந்த வித்துக்களைச் சேகரித்து வைத்துக் கொள்ள முடியும்.
5. கண்களால் காணும் காட்சிகளால் மட்டும் கதை பிறப்பதில்லை. செவி வழியே வரும் சொற்களாலும், பிற புலன்களின் அனுபவங்களாலும், அவ்வனுபவங்கள் எழுப்பும் உணர்ச்சிகளாலும் கதைகள் பிறக்கின்றன. உணர்ச்சியைத் தூண்டும் நிகழ்ச்சிகளிலிருந்து கதைக் கருக்கள் வெளிப்படுகிறன. காற்றில் மிதப்பது போன்ற அந்த நுண்பொருளைத் தேடிப் பெற முடியும்; சேகரிக்க முடியும். பிறகு அவசியம் வரும்போது உபயோகப்படுத்திக் கொள்ள முடியும்.
6. உலகில் ஒவ்வொரு நாளும் ஆயிரமாயிரம் கதைக் கரு நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதை எழுத விரும்பும் கலைஞர்கள் கருப்பொருளைத் தேடி அதிகமாகக் கஷ்டப்பட வேண்டுமென்பதில்லை. அவற்றை உணர்ந்து ஏற்றுக் கொள்வற்கு அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அந்தப் பழக்கம் வந்து விட்டால் பிறகு கற்பனைகளுக்குப் பஞ்சமில்லை.
7. கதைக் கலைக்கு வேண்டிய முதல் தகுதி ரசிகத்தன்மை. அதாவது கலையைப் படைப்பவன் சிறந்த ரசிகனாக இருக்க வேண்டும். வாழ்க்கையைச் சுவைத்து அனுபவிக்கத் தெரியாதவனிடமிருந்து சுவையான கலைப்படைப்புகள் தோன்றமாட்டா.
8. பிறவகை இலக்கியப் படைப்பைப் போலவே சிறுகதையும் உயிர்த்துடிப்புள்ளது. எந்த உணர்ச்சியை அல்லது கருத்தை அது தன்னகத்தே கொண்டிருக்கிறதோ அதைப் படிப்பவரின் நெஞ்சில் மின்வெட்டைப் போல் பாய்ச்சும் ஆற்றல் சிறுகதைக்கு வேண்டும். கதைக்குப் பின்னே உள்ள கதாசிரியரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாக் கூறும் செய்தி, இவ்வளவும் இலக்கண வரம்புகளைவிடவும் மிகமிக முக்கியமானவை.
9. உள்ளடக்கம், உருவம், உத்தி போன்ற பொதுப்படையான இலக்கணங்கநளைத் தெரிந்து கொண்டு, பிறகு அவசியமானால் அவற்றை மீறலாம். சிறந்த எழுத்தாளர்களின் கதைத் தொகுதிகளைப் படித்தால், அவர்கள் எவ்வாறு இந்த வரம்புகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் -அல்லது மீறி இருக்கிறார்கள் – என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
10. கதைக்கலையை எந்தக் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற முடியும் என்று நான் நம்பவில்லை. சைக்கிள் விட விரும்புவோர்கூடப் பலமுறை விழுந்த பிறகுதான் அதைச் சரியாக விடுவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். பத்திரிகை அலுவலகங்களி லிருந்து திரும்பி வரும் கதைகளை சைக்கிள் பயிற்சியாளர்கள் கீழே விழும் அனுபவங்களுக்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம். பத்திரிகை ஆசிரியர்கள் காரணம் கூற மாட்டார்கள். நாமே சொந்த அனுபவத்திலு இடைவிடாப் பயிற்சியிலும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான். திரும்பி வரும் கதைகளை சில நாட்கள் சென்று படித்துப் பார்த்தால் நமக்கே சில குறைகள் தென்படும்.
தொகுத்தவர்: வே.சபாநாயகம்.
நன்றி: http://ninaivu.blogspot.com