கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 13, 2023
பார்வையிட்டோர்: 2,285 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1 – 2 | அத்தியாயம் 3 – 4 | அத்தியாயம் 5 – 6

அத்தியாயம் 3

பெரும் பாவகாரியத்தில் சிக்கிக் கொள்வோமோ, குருத் துரோகியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் மூர்த்தியின் உடம்பெல்லாம் விதிர்த்து வியர்த்துக் கொட்ட, மார்பு படபட வென்று அடித்துக்கொள்ள,

“ஸமிதமாதாயாக்னே ஸர்வவ்ரதோ பூயாஸுஸ்வாஹா!”

“அக்கினி பகவானே! தினம் தினம் நான் செய்து வரும் சமிதாதானத்தால் எல்லா விரதங்களையும் நன்கு அனுஷ்டித்தவனாக ஆகும்படி அருள்வாயாக” என்ற மந்திரத்தை மனதுக்குள்ளாகவே சொல்லி வேண்டிக் கொண்டான்.

“ஏண்டா, உன் உடம்பெல்லாம் இப்படி ஜூரம் வந்த மாதிரி நடுங்கறது? கண்ணெல்லாம் சிவந்திருக்கே! தலைவலிக்கிறதா? சூடா காப்பி போட்டுக்கொண்டு வரட்டுமா? இப்பத்தான் பசும்பால் கறந்து வந்திருக்குடா! குடிச்சுட்டு நாடாக் கட்டிலை இழுத்துப் போட்டுண்டு ஒரு ‘ஆவர்த்தம்’ தூக்கம் போடு. சரியாப் போயிடும். காலையிலே ரெண்டு தரம் பச்சைத் தண்ணீல ஸ்நானம் பண்ணயோல்லியோ, அதான் இப்படி” என்றாள் பாகீரதி.

“இல்லை; நான் காப்பி சாப்பிடற வழக்கமில்லேன்னு உனக்கே தெரியுமே. தெருக் கோடி அரசமரம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். சமித்தெல்லாம் தீர்ந்து போச்சு. இப்படி கொஞ்ச தூரம் காத்தாட நடந்துட்டு வந்தாலே எல்லாம் சரியாப் போயிடும்” என்று வெளியே கிளம்ப அவசரப்பட்டான்.

“எதுக்கு இப்படித் துடிக்கிறே? இங்கே இருக்கப் பிடிக்கலையா? என்னோடு பேசப் பிடிக்கலையா? உனக்கு இஷ்டமில்லேன்னா நீ பல்லாங்குழி ஆட வேணாம். தோட்டப் பக்கம் வாயேன். வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து சந்தோஷமாப் பேசிண்டிருக்கலாம்.”

“இல்லை பாகீ! நீ கொஞ்ச நேரம் தூங்கு, பாவம்! உனக்குத்தான் நாளெல்லாம் வேலை. நான் போயிட்டு இதோ வந்துடுறேன்” என்று புறப்பட்டு விட்டான்.

போகிற வழியில்தான் சரபோஜி சத்திரம் இருந்தது.

‘கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு, அங்கதானே தங்கியிருப்பதாகச் சொன்னாள்? அவளைப் பார்க்க வேண்டும்போல் உள்ளுக்குள் ஒரு ஆசை பொங்கியது. தன்னைக் காப்பாற்றியவளுக்கு நன்றி கூடச் சரியாகச் சொல்லவில்லையே’ என்று எண்ணியபடியே சத்திரத்தை நோக்கி நடந்தான். அங்கே வாசலில் உட்கார்ந்திருந்த சத்திரத்துக் காவலாளியிடம் “அந்த கழைக் கூத்தாடிங்க இங்கதானே தங்கியிருக்காங்க?” என்று கேட்டான். “அவங்களா! இப்பத்தானே புறப்பட்டுப் போனாங்க!” என்றான் காவல்காரன்.

“எங்க போனாங்கன்னு தெரியுமா?”

“திருவையாறு போறதாச் சொன்னாங்க”.

“அடாடா, கொஞ்சம் முன்னாடி வராமல் போனோமே!” என்ற ஏமாற்றத்தோடு திரும்பினான்.

***

தெருவிளக்குகள் ஏற்றப்பட்ட பிறகே மூர்த்தி பாட சாலைக்குத் திரும்பினான். வித்தியார்த்திகள் இனிய சங்கீதமாய்ப் புருஷ ஸூக்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மூர்த்தி நேராக கிணற்றடிக்குப் போய் கைகால், முகம் கழுவி, விபூதி பூசி, சந்தியாவந்தனம் முடித்து புருஷ ஸூக்தத்தில் கலந்துகொண்டான்.

சத்திரத்து மணி ஒன்பது அடித்து ஓய்ந்தது.

“மூர்த்தி! அப்பாகூட ஊரில் இல்லை. பின் கட்டில் நான் மட்டும் தனியாகப் படுத்துத் தூங்க பயமாயிருக்குடா. முனியம்மா வர முடியாதுன்னுட்டா! நீதான் எனக்குத் துணையா பின் கட்டிலே வந்து படுத்துக்கணும். தலைவலி இப்ப எப்படி இருக்கு? சுடச்சுட மிளகு ரசம் வெச்சிருக்கேன். உனக்குப் பிடிக்குமேன்னு தோட்டத்திலிருந்து பிஞ்சு அவரைக்காயாகப் பறிச்சிண்டு வந்து கறி பண்ணியிருக்கேன். இலை போடறேன். சாப்பிடறயா?” என்று கேட்டாள் பாகீரதி.

“இப்ப பசி இல்லை. பசங்களோட பந்தியிலயே சேர்ந்து சாப்பிடறேன்” என்றான்.

பந்தி முடிய மணி பத்தாகிவிட்டது. பாகீரதி அடுப்படியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள். மூர்த்தி இஷ்டமில்லாமல் பாயைக் கொண்டு போய் பின்கட்டுத் தாழ்வாரத்தில் போட்டுக் கொண்டான். கார்த்திகை மாதத்துக் குளிர் நிலவு முற்றமெங்கும் வெள்ளி முலாம் பூசியிருந்தது. தோட்டத்துக் கொட்டிலில் மாட்டுச் சலங்கைகளின் கிண்கிணி ஓசை காதுக்கு இனிமையாக ஒலித்தது. தூரத்தில், எங்கோ கோயில் உற்சவம் நடப்பதை அறிவிக்கும் அதிர்வேட்டுச் சத்தங்கள்!

மூர்த்தி பத்மாசனமாக உட்கார்ந்து தியானம் செய்து முடித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டபோது பல்லி ஒன்று அவன் இடது புஜத்தின் மீது விழுந்து ஓடியது. ‘ஐயோ! பல்லி தோள் மீது விழுந்தால் நல்லதா, கெட்டதா, தெரியலயே’ என்று கவலைப்பட்டான்.

பாகீரதி பாத்திரங்களை அலம்பி, பாலுக்கு உறை ஊற்றி, கதவுகளைத் தாளிட்டுவிட்டு மூர்த்தி அருகில் வந்து நின்று, தூங்கி விட்டானா என்று பார்த்தாள். போர்வையால் குளிருக்கு அடக்கமாகத் தன்னைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான் அவன். பாகீரதி அமிர்தாஞ்சனக் குப்பியை எடுத்துவந்து சற்றும் கூச்சமின்றி அவன் அருகில் சுவாதீனமாக நெருங்கி உட்கார்ந்து “தூங்கிட்டயா மூர்த்தி?” என்று கொஞ்சலாகக் கேட்டுக் கொண்டே அவன் நெற்றியில் தேய்த்து விட்டாள்.

பாகீரதி உடம்பில் சூடு தெரிந்தது. மல்லிகைப்பூ வாசனை வீசியது. அவன் நெளிந்து விலகினான்.

“மல்லிப்பூ வாசனை அடிக்கிறதே!”

“ஆமாம்; என் தலையைப் பாரு” என்றாள்.

“நீ பூ வச்சுக்கலாமா, பாகீ!”

“ஏன்? நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?”

“நீ…நீ… வந்து…” அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

“பூ வைத்துக்கொள்ளக் கூடாதுன்னு சொல்றயா? சின்ன வயசிலயே எங்கப்பா எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டார். கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளேயே எனக்குத் தாலி கட்டினவன் வைசூரி கண்டு செத்துப் போயிட்டான். அப்ப எனக்கு பத்து வயசுகூட ஆகல்லே. என் புருஷனை நான் சரியாக்கூடப் பார்த்ததில்லை. இப்ப நான் வயசுக்கு வந்து விவரம் தெரிந்தவளாகிவிட்டேன். எல்லாம் புரிய ஆரம்பிச்சிருக்கு. மத்த பெண்களைப் போல் பொட்டு வைத்துக் கொள்ளணும். பூ வைத்துக் கொள்ளணும். வாழ்க்கையின் சுகங்களையெல்லாம் அனுபவிக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா!”

“தப்பு, பாகீரதி தப்பு|வைதிகக் குடும்பத்திலே பிறந்தவள் நீ. அதுவும் இரண்டு யாகம் பண்ணினவர் உங்கப்பா. வேணாம். இந்த விபரீத ஆசைகளுக்கெல்லாம் உன் மனசிலே இடம் தராதே. பாபம், பாபம்!” என்றான்.

“என்னடா பாபத்தைக் கண்டுட்டே? என்னமோ சாஸ்திரம் பேசறயே! இதெல்லாம் நம்மைச் சுற்றி நாமாகப் போட்டுக் கொள்கிற கட்டுப்பாடுதானே? இப்படிப் பார்!” என்று அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, சற்றும் எதிர்பாராத நிலையில் அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.

அவன் விலக முயன்றான். “நெருங்கி வாடா! ஏண்டா, பயப்படறே? என்னைப் பாருடா! நான் அழகாயில்லையா?” என்று அவனையே வெறிக்கப் பார்த்தாள்.

“வேண்டாம் பாகீ! எனக்கு பயமாயிருக்கு!”

***

மறுநாள் காலை. மூர்த்தி படுக்கையைவிட்டு எழுந்தது தான் தாமதம். ஓடிப்போய் கூடத்து ஆணியில் மாட்டியிருந்த பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்துப் புரட்டி பல்லி விழுந்த பலன் என்னவென்று பார்த்தான். இடது புஜம் – ஸ்த்ரீ சம்போகம் என்ற வரிகளைக் கண்டபோது அவனை வெட்கம் பிடுங்கித் தின்றது. உடனே கனபாடிகள் நினைவு வர உடம்பெல்லாம் பதறியது.

“ஏன் மூர்த்தி, ஏன் ஒரு மாதிரி இருக்கே? கழுத்துச் சங்கிலி காணாமப் போயிட்டுதேன்னா? அதான் கிடைச்சுட்டுதே. அப்புறம் என்ன கவலை?” என்று கேட்டாள் பாகீரதி.

“கெட்டுப்போன கழுத்துச் சங்கிலி திரும்பக் கிடைச்சுட்டுது. உண்மைதான். ஆனா கெட்டுப்போன என் பிரம்மசரியம் இனி திரும்பாதே!” என்றான் மூர்த்தி.

அத்தியாயம் 4

துணி மணிகளை எடுத்து மான் தோல் பைக்குள் அடைத்துக்கொண்ட மூர்த்தி “நான் ஸ்நானத்துக்குப் போயிட்டு வந்துடறேன்” என்று பாகீரதியிடம் சொல்லிக் கொண்டான். குரலில் சுரத்து இல்லை.

“ஏண்டா, என்னை நேராப் பார்த்து பேசக் கூடாதா? மூஞ்சியைத் திருப்பிண்டே பேசறயே, என்ன கோபம் உனக்கு?”

“என்னவோ?…”

“ஏதாவது சாப்பிட்டுட்டு போ…”

“ஹ்ம். இந்தத் தீட்டோடயா?…”

“தீட்டா!…இதுக்கு பேர் தீட்டா? ஒரு தடவை ஸ்நானம் பண்ணினாப் போறது… நான் குளிச்சுட்டேன்.”

“ஸ்நானம் பண்ணிக் கழுவிவிடுகிற பாபமா இது? மகாபாபம்! ஆயுசு பூராவும் குளிச்சாலும் தீராத பாபம்! சித்திர குப்தன் கணக்கிலே ஏறிவிட்ட பாபம்! இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. குருத் துரோகம். விரதபங்கம். இன்னும் என்னென்னவோ?… சொல்லவே நாக் கூசறது.”

“ஏண்டா மனசைப் போட்டு அலட்டிக்கிறே? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!”

“பலியானது நான்தானே! துக்கம் எனக்குத்தானே!”

“நீ ஆண்பிள்ளை. நானே கவலைப்படாதபோது இதில் உனக்கென்ன துக்கம்?”

“பரம வைதிகமான குடும்பத்தில் பிறந்தவள் நீ! தர்க்க சாஸ்திரம் படிச்சவர் உங்கப்பா. இரண்டு யாகம் பண்ணவர். டபிள் சிரோமணி! ஊருக்கு உபதேசம் பண்றவர். அந்த உத்தமருக்குப் பெண்ணாய்ப் பிறந்த நீ இப்படி நடந்துக்கலாமா? இந்த ரகசியம் கனபாடிகளுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டுண்டு பிராணனை விட்டுடுவார். அதை நினைக்கவே பயமாயிருக்கு. உடம்பெல்லாம் நடுங்கறது!”

“அசட்டுப்பிசட்டுன்னு பேசாதே! யாரிடமாவது போய் உளறி வச்சுடாதே! இந்த ரகசியம் நம்ம ரெண்டு பேரோடு செத்துப் போகட்டும். சத்தியம் பண்ணிக்கொடு…”

“சத்தியமும் வேணாம்; ஒண்ணும் வேணாம்…” விரக்தி யோடு புறப்பட்டான் மூர்த்தி.

“சீக்கிரம் வந்துடு மூர்த்தி! எதுக்கு இவ்வளவு பெரிய பையைத் தூக்கிண்டு போறே?”

“எல்லாம் துவைக்க வேண்டிய பாவ மூட்டை!”

“ஜாக்கிரதை! வழுக்கி விழுந்துடப் போறே!”

“அதான் ஏற்கனவே வழுக்கி விழுந்தாச்சே!”

“மூர்த்தி! நீ குத்தலாப் பேசறே! ரெட்டை அர்த்தம் வெச்சுப் பேசறே! என்னை உனக்குப் பிடிக்கலேன்னா சொல்லிடு. நான் இந்த நிமிஷமே தீயிலே விழுந்து செத்துப் போறேன். எனக்கு நீதான் சகலமும். என் கழுத்திலே யார் தாலி கட்டினா? எப்ப அதை எடுத்தான்னு எனக்கு எதுவுமே தெரியாதுடா! பிராம்மண குலத்தில் பிறந்தது தப்பா? அதுக்கு இப்படி ஒரு தண்டனையா? நீயே என்னை வெறுத்தால் அப்புறம் சாவைத் தவிர எனக்கு வேற வழியில்லே.”

“நீ ஏற்கனவே கல்யாணம் ஆன பெண். கணவனை இழந்தவள். என்னைவிட வயதில் பெரியவள். நம் உறவு பொருந்தாத உறவு. வயசாலும் பொருந்தாது. சாஸ்திரத்துக்கும் பொருந்தாது. என்னை மறந்துடு பாகீ! இந்தத் தகாத உறவு வேணவே வேணாம்!”

“அப்பாவிடம் சொல்லிடமாட்டயே. எனக்கு பயமாயிருக்குடா! சொல்லமாட்டேன்னு நீ சத்தியம் பண்ணிக்கொடுத்தாத்தான் நான் நிம்மதியாயிருப்பேன்.” துக்கம் தொண்டைக் குழியில் சிக்கி, வார்த்தைகள் தடுமாறி வெளிவந்தன. அழுகையை அடக்க முடியாமல் தவித்தாள்.

“அழாதே பாகீ! பசங்கள் யாராவது பார்க்கப் போறா! உள்ளே போய் சமையல் வேலையை கவனி. நேரமாச்சு.” படி இறங்கினான்.

“சீக்கிரம் வந்துடறயா?”

“…ம்…”

அழுது அழுது பாகீரதியின் முகம் விகாரமாய் வீங்கிப் போயிருந்தது. கண்கள் சிவந்து இரப்பைகள் உப்பலாகியிருந்தன. மணி பத்துக்கு மேல் ஆகியும் சமையல் வேலையில் நாட்டமின்றி – ‘மூர்த்தி வந்து விட்டானா?’ என்று அடிக்கொருமுறை வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

காகங்கள் விடாமல் கத்திக் கொண்டிருந்தன. ‘காக்கா கத்தினா யாராவது விருந்தாளி வருவான்னு சொல்வாளே! யார் வரப் போறா?…’ பாகீரதி யோசித்தாள்.

எதிர்பாராத விதமாய் வாசலில் குதிரை வண்டி ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து கைக்குழந்தை அம்புலுவோடு அக்கா கமலா இறங்குவதைக் கண்டதும் ‘இவள் எதற்கு இப்போது இங்கே வந்து நிற்கிறாள்?’ என்று ஆச்சரியப்பட்டாள்.

பலாப்பழம், புளிமூட்டை, பரங்கிக்காய், வாழைத்தார் எல்லாவற்றையும் வண்டிக்காரன் இறக்க, பாடசாலைப் பிள்ளைகள் அவற்றை ஏந்திக்கொண்டு போய் உக்கிராண அறையில் வைத்தார்கள்.

“வா, கமலா! என்ன இப்படி திடீர்னு? காஞ்சீபுரத்திலிருந்தா வறே? அப்பா வரலையா?” என்று கேட்டாள் பாகீரதி.

“அப்பா வரத்துக்கு இன்னும் நாலு நாள் ஆகும். பெரியவா இருக்கச் சொல்லிட்டாளாம். அப்பாதான் சொல்லி அனுப்பினார். ‘பாகீரதியைத் தனியா விட்டுட்டு வந்துட்டேன். நீ போய் நான் வர வரைக்கும் அவளுக்குத் துணையா இருந்து கவனிச்சுக்கோ. முனியம்மாவை வந்து துணைக்குப் படுத்துக்கச் சொன்னேன். வராளோ, இல்லையோ – கவலையாயிருக்கு’ என்று.

“உன் ஆத்துக்காரர் வரலையா?”

“கோர்ட்ல கேஸ் இருக்காம். நீ மட்டும் போயிட்டு வான்னுட்டார். என்ன வக்கீல் வேலை வேண்டியிருக்கு?”

“உன் மாமியார் காஞ்சீபுரத்தில்தானே இருக்கா?”

“ஆமாம்; வேலூரிலேருந்து என் நாத்தனார் வேற வந்திருக்கா. எனக்கும் உன்னைப் பார்க்கணும்போல இருந்தது. ஓடி வந்துட்டேன்.”

“அப்பா வர இன்னும் நாலு நாள் ஆகுமா?” என்று பாகீரதி கவலைப்படுவதுபோல் பாசாங்காய்க் கேட்டபோதிலும் உள் மனம் நிம்மதியாக ‘அம்மாடி!’ என்றது.

குழந்தை அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது.

“அம்புலுவைக் கொடு இப்படி. பசி போல இருக்கு, பாவம், குழந்தைக்கு.(அம்புலுக்கண்ணு! ஓடியா!) பசும்பால் காய்ச்சி வச்சிருக்கேன். கிண்டிகூட இங்கதான் இருக்கு. போன தடவை நீ இங்க வந்திருந்தப்போ மறந்துட்டுப் போயிட்டயோ!”

“என்னடி உன் கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு?”

“உரலில் மிளகாய்ப்பொடி இடிச்சேன். கண்ணிலே பட்டுட்டுது. எரிச்சல் தாங்கலை…”

“அவன் எங்கடி?” கமலாவின் கண்கள் வீட்டைத் துருவின.

“எவன்? யாரைக் கேட்கிறே?”

“மூர்த்தியைத்தான்…”

“கார்த்தாலே போனவன் தான். இதோ குளிச்சுட்டு வந்துடறேன்னு போனான். மணி பத்தாகப் போறது. இன்னும் காணல்லே. அப்பா இல்லையோன்னோ? பூஜையும் இல்லே. இஷ்டம்போல வருவான்.”

“ஆத்தங்கரைக்கு யாரையாவது அனுப்பி தேடிப் பாக்கறது தானே?”

“அனுப்பாம இருப்பனா? குண்டு பட்டாபி போய்ப் பார்த்தானாம். அங்கே வரவேயில்லைன்னு அர்ச்சகர் சொல்லிட்டாராம். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கமலா!…”

“வந்துருவான். கவலைப்படாதே. பசங்க சாப்டாச்சா?”

“சமையலே இனிமேத்தான் ஆரம்பிக்கணும். காலம்பற பழையது சாப்பிட்டா…”

கமலா வீடு முழுதும் ஒரு முறை சுற்றி வந்து கண்ணோட்டமிட்டாள். தோட்டப் பக்கம் போய் பசுமாடுகளைத் தடவிக் கொடுத்துவிட்டு வந்தாள். முற்றத்தில் மஞ்சள் மஞ்சளாய் வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிடந்தன.

“ஏண்டி இதெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்தக் கூடாதோ? முனியம்மா வரலையா?” என்று கேட்டுக்கொண்டே தாழ்வாரத்தில், – ராத்திரி மூர்த்தி படுத்திருந்த இடத்துக்கு வந்தாள். சுவர் ஓரமாக அவன் படுத்திருந்த பாயும் தலையணையும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.

படுக்கைக்கு அருகில் வாடி வதங்கிய மல்லிகைப்பூக்கள் பழுப்பு நிறத்தில் சிதறிக் கிடந்தன.

“பூவெல்லாம் இங்கே ஏன் விழுந்து கிடக்கிறது?” என்று கேட்டாள் கமலா.

“கூடத்துலே லட்சுமி படத்துக்கு வச்சிருந்தேன். இந்தக் குருவிகள் அடிக்கிற லூட்டி சகிக்கலே. அதுகள் கொண்டு வந்து போட்டதோ என்னவோ? வீடு பூரா குப்பை பண்ணிண்டு…” என்று சமாளித்தாள் பாகீரதி.

“இன்னும் நீ குளிக்கலையா?”

“காலம்பறவே குளிச்சுட்டேன்…”

“பின்னே ஏன் இப்படி அழுது வடிஞ்சுண்டு இருக்கே? தலையை விரிச்சுப் போட்டுண்டு! முதல்லே இப்படி வந்து உட்கார். தலைவாரிப் பின்னிடறேன். சீப்பைக் கொண்டா” என்றாள் கமலா.

பாகீரதி வந்து உட்கார்ந்ததும், நீளமான அவளுடைய கூந்தலை இரண்டாகப் பகுத்து வாரிய கமலா, ‘எத்தனை நீளம்!’ என்று மனதுக்குள் வியந்தவள். அடுத்தகணம் “பாவம். இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகணுமா!” என்று விசாரப்பட்டாள்.

“என்னடி மல்லிப்பூ வாசனை வீசறது உன் தலையில்?…”

“என் தலையிலா! அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்கலையே அக்கா! சோப்பு போட்டு குளிச்சேன். ஒரு வேளை அந்த வாசனையாயிருக்கும்” என்றாள் பாகீரதி.

“அதென்ன சோப்பு? இத்தனை வாசனையாயிருக்கே?”

“வினோலியா ஒய்ட் ரோஸ்!”

“ரோஸ்னா ரோஜாவாச்சே. இது மல்லி வாசனை அடிக்கிறதே!”

கமலாவுக்கு ஏதோ சந்தேகமாயிருந்தது. பாகீரதி சொன்ன பதில்களில் உண்மை இல்லை போல் தோன்றியது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தீட்சண்யமான பார்வையை அங்கும் இங்கும் செலுத்தியபடி, ‘மூர்த்தி இப்ப வந்துடுவானோல் லயோ?’ என்று கேட்டாள்.

“தெரியலையே, மணி பன்னிரண்டாகப் போறதே! இன்னும் வரக் காணோமே?” பாகீரதி கலங்கினாள். அவள் கண்களில் தவிப்பு தெரிந்தது. குரலில் சோகம் ஒலித்தது.

மூர்த்தி வரவே இல்லை.

– தொடரும்…

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வேத வித்து

  1. எத்தனை முறை படித்தாலும் அலுக்காத பத்திரிகை உலகப் பிதாமகர் திரு சாவி அவர்களின் இந்த நாவலை இப்போது மீண்டும் படிக்க வாய்ப்பு தந்த சிறுகதைகள் டாட் காமுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    டாட் காம் ன் சேவை தொடரட்டும்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *