கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 27, 2012
பார்வையிட்டோர்: 17,803 
 
 

சுகமான ஒரு பயணத்தின் முடிவு சமீபித்த கணத்தில்தான் அந்தச் செல்லிடப்பேசி செய்தி எனக்குச் சொல்லப்பட்டது. மனதிலிருந்த உற்சாகம் அனைத்தும் வடிந்து போய்விட்டது. சின்னக் குழந்தை கண்கள் விரிய ஊதிக்கொண்டிருக்கும் பலூன் அளவு பெரியதாகி திடீரென வெடித்து விடுகிறபோது ஏற்படுகின்ற வெறுமை உணர்வு என்னிடத்தில் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. மகிழ்வுந்தின் சன்னல் வழியாக குளிராக உள்நுழைந்து எனது தலைமுடியை அலைத்துக் கொண்டிருந்த காற்று ஏற்படுத்திக் கொண்டிருந்த சுகானுபவம் அப்படியே நின்றுபோயிருந்தது. வண்டிக்குள் இருந்த என்னுடைய குடும்பத்தினர் செல்லிடப்பேசியின் செய்தியறிந்து ஆளாளுக்குப் பேசத்தொடங்கியிருந்தனர். பேச்சில் எந்தவிதமான லயிப்பும் இன்றி நான் வண்டியை இயக்கிக் கொண்டிருந்தேன்.

தண்டுக்காரணஹள்ளியில் எனது அப்பாவின் சித்தி – எனது சின்னப்பாட்டி காலமாகிவிட்டார் என்ற சோகமான செய்தி என் மனதிற்குள்ளாக பலநினைவுகளை அசைபோடத் துவங்கியது.

பாட்டி குறித்து எவரிடமும் பகிர்ந்து கொள்ளும்படியான செய்திகள் எதுவும் என்னிடம் இல்லை என்றாலும் அவர் எனது மனதிற்கு மிகவும் சமீபத்தில் இருக்கும் பூமிநாதன் சித்தப்பாவின் அம்மா என்பதாலேயே மனதில் அவரது மரணம் ஒருவித சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

பூமிநாதன் சித்தப்பா பலவகைகளிலும் என்னைக் கவர்ந்தவர். பிறருக்கு உதவிபுரிவது என்பது அவரது தனிக்குணமாக இருந்தது. எனது உறவினர்கள் மத்தியில் மட்டுமின்றி வெளிநபர்களிடமும் அவர் ஏற்படுத்திக்கொண்டிருந்த அன்பான பழக்கம் சிறுவயதில் என்னை ஆச்சர்யப்பட வைத்ததுண்டு. எனக்கும் அவருக்குமான வயது வித்தியாசம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் என்றாலும் அவர் எனக்கு ஒரு சிறந்த நண்பராகவே தெரிவார். குடும்ப உறவுமுறை தாண்டிய ஒரு தோழமை உணர்வு அவருடன் என்னை இணைத்து வைத்திருந்த்து.

30 ஆண்டுகளுக்கு முந்தைய கூட்ட நெரிசல் மிகுந்த – அழகர் ஆற்றில் இறங்கும் ஒரு நாளில் நான் எனது நண்பர்களுடன் மதுரைக்குச் சென்றிருந்தேன். நான் முன்னெப்போதும் அதுபோன்ற கூட்டத்தினைப் பார்த்திருந்ததில்லை. பகலெல்லாம் நடந்து அலைந்து திரிந்து கால்கள் இனி நடக்கச் சம்மதிக்க மாட்டோம் என்று சொன்ன அந்த இரவு நேரத்தில் ஒய்வெடுப்பதற்காக சத்திரத்திற்கு வந்தோம்.

சத்திரம் மக்கள் திரளுக்குள்ளாக அமளிப்பட்டுக் கிடந்தது. வெளியே வருவோர் இருவர் என்றால் சத்திரத்தின் உள்ளே நுழைபவர் எண்ணிக்கை இருபதாக இருந்தது. எப்படியோ திக்கித் திணறி முட்டி மோதிக் கொண்டு சத்திரத்தினுள் நுழைந்தோம். சத்திரத்தின் கீழ்த்தளம் முழுவதும் துரும்பு இடைவெளியின்றி முற்றிலுமாக நிறைந்திருந்த்து. அதனால் மேல்தளத்திற்குச் சென்றோம். அங்கும் அதே நிலை.

நண்பர்கள் அனைவருக்கும் அலைந்த சோர்வு. படுத்துக்கொள்ள ஏதாவது இடைவெளி கிடைக்குமா என்று மங்கலான அழுக்குப்படிந்த ஒரு குழல் விளக்கின் வெளிச்சத்தில் கூர்ந்து கவனமாகத் தேடிக்கொண்டிருந்தோம். மக்கள் மூன்று வரிசையாக படுக்கை விரித்து படுத்துக்கொள்ளும்படியான அமைப்புடன் சத்திரம் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அன்றோ அந்த குறுகலான இடத்தில் ஐந்து வரிசையாக மக்கள் நெருக்கியடித்து துண்டு மற்றும் இதர விரிப்புகளை விரித்தும் சிலர் விரிப்பின்றி வெறும் தரையில் கைகளை தலைக்கு வைத்துக்கொண்டும் படுத்துக்கிடந்தனர். அந்த காலகட்டத்தில் நான் பார்த்திருந்த அரசின் திரைப்படச் செய்திகளில் இயற்கை சீற்றத்தினால் இடர்பாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அரசு அளிக்கும் புகலிடங்களில் மக்கள் நெருக்கியடித்து வரிசையாக படுத்திருப்பது போன்ற காட்சி எனக்கு ஞாபகம் வந்தது.

நண்பர்களில் ஒவ்வொருவராக கிடைத்த சிறுசிறு இடைவெளிகளில் தங்களை நுழைத்துக் கொள்ளத் துவங்கியிருந்தனர். தொடக்கத்திலிருந்து நான் ஒரு சுகவாசி. அதுபோன்ற நெரிசலான இடங்களில் எனக்கு தூக்கம் வருமா? என சந்தேகமாக இருந்தது. ஏதாவது இடம் கிடைக்குமா என கண்களைச் சுருக்கி சற்றுத் தள்ளித் தள்ளி பார்த்துக் கொண்டே சென்றுகொண்டிருந்தேன்.

“வீரய்யா…” என்று என்பெயர் சொல்லி விளிக்கும் சப்தம் கேட்டு சப்தம் வந்த திசையை நோக்கினேன். என்னை அழைத்தது யார்? என்று சட்டென்று எனக்குத் தெரியவில்லை.

“தம்பி… வீரய்யா… நான்தான்யா… இங்கபாரு” என்று மீண்டும் குரல் கேட்டது. கண்களை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி மிகவும் மங்கலான கிட்டத்தட்ட இருள் போன்ற அந்த வெளிச்சத்தில் கண்களால் துழாவினேன். சத்திரத்தின் நீண்ட தாழ்வாரத்தின் ஓரத்திலிருந்து என்னை அழைத்தது பூமிநாதன் சித்தப்பாதான் என்பதனைக் கண்டுகொண்டேன்.

“சித்தப்பா…” என்றபடி கவனமாக கீழே படுத்திருப்பவர்களை மிதித்து விடாதபடி நடந்து அவரை நெருங்கினேன்.

“என்ன தம்பி தனியாவா வந்த…”

“இல்ல சித்தப்பா… ஃப்ரண்ட்ஸ்ங்களோடதான் வந்தேன். அவங்கள்லாம் கெடச்ச எடத்துல விழுந்து தூங்க ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு ஒரு எடமும் கெடைக்கல. அதான் தேடிக்கிட்டிருக்கேன்”

“வா… வா… இங்க என்பக்கத்துல எடமிருக்கு. இங்க வந்து படுத்துக்க” என்று அவருக்கு அருகிலிருந்த ஒரு அடி இடைவெளியைக் காட்டி எனக்கு இடம் கொடுத்தார்.

“சாப்பிட்டியாப்பா” என்று என்னை விசாரித்துக்கொண்டே தான் கொண்டு வந்திருந்த துணிப்பையை எடுத்து உள்ளே கைவிட்டு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்துப் பிரித்து “இந்தா இதச் சாப்பிடு மொதல்ல” என்றார்.

“இல்ல வேண்டாம் சித்தப்பா… நாங்க எல்லாரும் ஹோட்டல்ல நல்லா சாப்டுத்தான் வந்தோம்”

“பரவாயில்ல இதச் சாப்பிடு” என்று என் பக்கமாக நீட்டிய பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து மரியாதைக்காக இரண்டை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினேன்.

கூடுதலாக நான்கு பிஸ்கெட்டுகளை எடுத்து எனது கைகளில் திணித்து நான் சாப்பிடும்வரை மிகவும் பொறுமையாக காத்திருந்து உடன்வைத்திருந்த எவர்சில்வர் தூக்கை கொடுத்து “இந்தா தண்ணி குடிச்சுக்கோ” என்று தண்ணீர் கொடுத்தார். குடித்து முடித்த எனக்கு தனது துணிப்பையைக் கொடுத்து “தலைக்கு வச்சுப் படுத்துக்கோ” என்றார். அதற்குமேல் அவரிடம் பேசுவதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் அவர் கொடுத்த துணிப்பையையை எனது தலைக்குக் கொடுத்து சாய்ந்து தூங்கத் தொடங்கினேன். அலைச்சல் மிகுதியால் நான் எதிர்பார்த்ததை விடவும் விரைவாக உறங்கிப் போனோன்.

“ஏம்பா… எப்ப அடக்கம் பண்ணப் போறாங்கன்னு ஒரு வார்த்த கேளு” என்று என் அம்மா எனது தோளைத் தட்டிக் கேட்டபோது நான் பழைய நினைவுகளிலிருந்து மீண்டுகொண்டேன். வண்டியை இயக்கிக் கொண்டிருந்த நான் “வீட்டுக்குப் போயி கேட்டுக்கலாம். இன்னும் பத்து நிமிசத்துல போயிரலாம்” என்று சொல்லி சரியாக பதினைந்து நிமிடத்திற்குள் வீடு வந்து சேர்ந்தோம்.

வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தும்போதே ஏனைய உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சேரத் தொடங்கியிருந்தனர். அவர்களுக்கும் அடுத்தடுத்து பாட்டியின் மறைவுச் செய்தி சொல்லப்பட்டிருந்தது.

“என்னக்கா… விசயம் கேள்விப்பட்டீங்களா? ராமகிருஷ்ணன் ஃபோன் பண்ணானா?”

“இப்பத்தான் எங்களுக்கும் ஃபோன் வந்தது. என்ன பண்றதுன்னு தெரியல. நீங்க வந்துரட்டும்னுதான் காத்திட்டிருக்கோம்“

“மத்த நம்ம சம்பந்தக்காரவுகளுக்கும் சொல்லிக்கிட்டே இருக்கோம்“ என்றபடி வண்டியிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்த என்னையும் என் அம்மாவையும் சூழ்ந்து கொண்டனர்.

“இப்பத்தான் வண்டியில வரும்போது ராமகிருஷ்ணன் எங்களுக்குச் சொன்னான். வீட்டுக்கு வந்து மத்தத பேசிக்கலாம்ணுட்டு வந்துருக்கோம்“ என்ற அம்மாவிடம் “எப்படிப் போறது“ என ஒருவர் கேட்க “அவ்வளவு தூரம்லாம் என்னால முடியாது“ என அம்மா தன் இயலாமையைச் சொன்னார்.

“யார் வீட்டு விசேசத்துக்கு அவுக உடனே வந்தாக. நாம எல்லாரும் ஒடனே பொறப்டுப் போறதுக்கு“ நெருங்கிய உறவினர் ஒருவர் சொல்ல “யப்பா… இது சாவு காரியம். எப்டியாவது நாம போயித்தான் ஆவணும். எல்லாரும் போக முடியலண்ணாலும் வீட்டுக்கொருத்தராவது கண்டிப்பா போகத்தான் வேணும். தகவல் சொல்ல்லண்ணாலும் பரவால்ல. சொல்லிட்டான்ல. தெரிஞ்சும் போகலன்னா அப்புறம் ஊரல நாலுபேரு தப்பாப் பேசுவாங்கப்பா“ என்று அம்மா அவரை சமாதானப்படுத்தினார்.

“சரிக்கா… சரிக்கா… இப்ப குடும்பத்துல பெரியவங்க எங்களுக்கு நீங்கதான். நீங்க என்ன சொண்ணாலும் கேக்குறோம். யார் யாரு போறதுன்னு முடிவு பண்ணிக்கோங்க“ என்றளவில் பேச்சை முடித்தார் ஒருவர்.

“இப்பவே மணி ஒம்பதாகுது. நாளக்கி எத்தனை மணிக்கு எடுக்கப்போறாங்கன்னு கேட்டுக்கங்க“ என்றார் அம்மா.

“அதெல்லாம் கேட்டாச்சு. நாளக்கி சாயந்தரம் நாலரை ஆனாதான் நல்ல நேரமாம். அப்பத்தான் எடுக்கப் போறாங்களாம்“ என பதில் வந்தது.

“அப்ப காலைல மொதவண்டி மூணரைக்கு இருக்கு. அதுல பொறப்டா எப்படியும் மதியம் ரெண்டு மூணுக்குள்ள போயிரலாம்“ என ஒருவர் சொல்ல மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர்.

வீட்டுக்கு ஒருவர் போவது என்று முடிவானதில் எனது குடும்பத்தைப் பொறுத்து யார் போவது என்று வந்தபோது “நான் போயிட்டு வர்றேன்“ என்று நானாகவே வலிய என்னை முன்னிருத்திக் கொண்டேன்.

“சரி கொஞ்சம் சீக்கிரம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ. இன்னிக்கெல்லாம் நீயேதான் வண்டிய ஓட்டிக்கிட்டு வந்த. அலுப்பா இருக்கும். போய்ப்படு“ என்று அம்மா சொல்ல அதனையே எனது மனைவியும் வழிமொழிய விடியலை எதிர்நோக்கி படுக்கச் சென்றேன்.

“தம்பி எந்திரிப்பா. விடிஞ்சிரிச்சு பாரு“ என்ற குரல்கேட்டு கண் விழித்தேன். என் அருகில் பூமிநான் சித்தப்பா நின்றுகொண்டிருந்தார். அவரது கையில் ஆவிபறக்கும் கண்ணாடி டம்ளரை பிடித்துக் கொண்டிருந்தார்.

“இந்தா இந்த காபிய குடிச்சுட்டு மத்த வேலய பாரு தம்பி“ என்று ஆதரவான குரலில் பேசியபடி எனக்கு காபியை நீட்டினார். அருகிலிருந்த தண்ணீர் தூக்கை எடுத்துக்கொண்டு சுவரோரமாக இருந்த வாய்க்காலுக்குச் சென்று முகம் கழுவி வாய்கொப்பளித்து வந்து அவரிடமிருந்து காபியை வாங்கிக் குடித்தேன். உறக்கத்தின் களைப்பு காபியின் இதமான சூட்டினால் மெல்ல மெல்ல அகன்றது.

“மணி ஆறரை ஆச்சுப்பா. நான் கிளம்புறேன். இப்பவே பொறப்பட்டாத்தான் சரியா ஒம்பது மணிக்குள்ளாற நான் வேலக்கிப் போகணும்ல. நீ இங்க இருந்து பதறாம ஃப்ரண்ஸ்களோட பொறப்பட்டு வா“

“சரி சித்தப்பா நாங்களும் அடுத்தடுத்து பொறப்பட்டு ஊருக்கு வந்துறலாம்னுதான் இருக்கோம்“ என்றபடியே நான் குடித்துவிட்டு நீட்டிய காலி டம்ளரை வாங்கிக் கொண்டு “வரேன் தம்பி… கூட்டம் அதிகமா இருக்கு பாத்து சூதானமா ஊர்வந்து சேருங்க“ என்று எனக்குச் சொல்லி என் பதிலுக்குக் காத்திராமல் விருவிருவென்று வேகமாக சத்திரத்திலிருந்து வெறியேறிப் போனார்.

பூமிநாதன் சித்தப்பா எனக்கு ஒன்றுவிட்ட சித்தப்பா முறைதான் என்றாலும் அவர் என்னிடம் காட்டிய அன்பு மிகவும் பிடித்திருந்தது. எந்தவித பிரதிபலனையும் என்னிடமிருந்து எதிர்பாராத அந்த அன்பு அவர் மீதான ஈர்ப்பை என்னுள் அதிகப்படுத்தியிருந்தது.

ஆண்டாளு பாட்டிக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். முதலில் பெண் அடுத்தது ஆண் என்ற கணக்கில் மூன்று பெண்கள் மூன்று ஆண்கள். எங்களது குடும்பம் சைவ மரபைச் சார்ந்தது. ஆண்டாளு பாட்டி பிறந்த வீடோ அவரது பெயருக்கேற்றபடி தீவிர வைணவ மரபினைச் சார்ந்தது. திருமணம் முடிந்து எங்களது குடும்பத்திற்குள் வந்த ஆண்டாளு பாட்டிக்குப் பிறந்த முதல் பெண்ணுக்கு விசாலாட்சி என்றும் முதல் பையனுக்கு பூமிநாதன் என்றும் பெயர் வைக்கப்பட்டது.

ஆண்டாளு பாட்டியின் கணவரான எனது சின்னத் தாத்தா சொக்கநாதன் பரமசாது. மனைவியையோ குழந்தைகளையோ கடிந்து ஒருவார்த்தை சொன்னதில்லை. அவரிருந்த காலம்வரை நான் ஒருவார்த்தைகூட அவரிடம் பேசியதில்லை. அவரது சாதுவான குணம் பாட்டியை அவர்மீது மேலாதிக்கம் செய்யத் துவங்கியது. பாட்டியின் குணத்திரிபு அடுத்துப் பிறந்த பெண்ணுக்கும் பையனுக்கும சத்யவதி என்றும் பாஸ்கரன் என்றும் சைவமோ வைணவமோ சாராத பெயர்களை வைக்கத் தூண்டியது.

பாட்டியின் ஆதிக்கம் குடும்பத்தில் மேலோங்கித் திகழ்ந்த காலகட்டத்தில் பிறந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் லட்சுமி என்றும் ராமகிருஷ்ணன் என்றும் தனது மரபான வைணவத்தின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன என்பவை பின்னாளில் எனது ஆராய்ச்சியால் நான் கண்டுபிடித்தவை. என்ன காரணமோ ஏனைய எனது உறவினர்களிடமிருந்து ஆண்டாளு பாட்டியின் குடும்பம் விலகி தனித்தே நின்றது. ஏன்? எதற்கு? என்று கேட்கத் தெரியாத வயது எனக்கு. திருமணம் ஏனைய சுக, துக்க நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வந்து கலந்து கொள்வார் ஆண்டாளுபாட்டி. ஆனாலும் அதில் அன்னியோன்யம் என்பது துளிக்கூட இருக்காது.

பாட்டி தீவிர உழைப்பாளி. பெரிய குடும்பமும் சூழ்நிலை தந்த வறுமையும் அவரை தீவிரமான உழைப்பாளியாக மாற்றியது. குழந்தைகளில் கடைசியான ராமகிருஷ்ணனை மட்டும் படிக்கவைத்து பட்டதாரியாக ஆக்க முடிந்திருந்தது. என்னைவிட இளையவனான, என் சித்தப்பா ராமகிருஷ்ணனின் படிப்பிற்காக பாட்டிபட்ட சிரமங்கள் அனைத்தையும் நானறிவேன்.

ஆண்களில் இரண்டாவதான என் வயதேயான, பாஸ்கரன் சித்தப்பா டெல்லிக்கு கூலிவேலை செய்யப் போனதாக பின்னர் ஒருநாளில் எனக்கு தகவலாகச் சொல்லப்பட்டது. அவரது முகம்கூட என் நினைவுக்கு வரமறுக்கும். டெல்லி சென்ற பிறகு நான் அவரை பார்த்ததே இல்லை. பின்னர் ஒருநாளில் அவர் எரிவாயு விநியோகம் செய்யும் வேலையாக இருந்ததாகவும், எரிவாயு விநியோகம் செய்யப்போனபோது சாலைவிபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தாகவும் செய்தி வந்தது.

டெல்லி சென்று அவரது உடலை வாங்கக்கூட இயலாத நிலையில் அவரது டெல்லி நண்பர்கள் மூலமாக அவர் அடக்கம் செய்யப்பட்டோ எரியூட்டப்பட்டோ அவரது வாழ்க்கைப் பயணம் முடிவுக்கு வந்திருந்தது. அவருக்கு செய்யவேண்டிய ஈமக்கிரிகைகள்கூட செய்ய இயலாத நிலை. ஆண்டாளுபாட்டி மற்றவர்களுடன் கொண்டிருந்த ஒட்டுதல் அல்லாத செய்கைகளால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து பாட்டி எந்தவித கவலையும் கொண்டிருந்ததாகவும் எனக்குத் தெரியவில்லை.

இவ்வாறான நான்காம் நபருக்குரிய தொடர்புகளே ஆண்டாளுபாட்டி குடும்பத்திற்கும் எனது குடும்பத்தாருக்கும் இருந்து வந்தாலும் எனக்கு மிகவும் நெருக்கமான பூமிநாதன் சித்தப்பாவின் அம்மா என்பதால் மட்டுமே இப்போது தண்டுகாரணஹள்ளிக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

பூமிநாதன் சித்தப்பாவை மதுரையில் சந்தித்தபிறகு ஆறுமாதங்களுக்கு நான் சந்திக்கவே இல்லை. நான் கல்லூரியிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த தருணத்தில் ஒரு சாதிய வன்முறை ஊரில் நடந்தேறியது.

“நம்மாளுங்களெல்லாம் போட்டு அடிஅடின்னு அடிச்சுட்டாங்கப்பா“ “சொக்கலிங்கபுரத்து பிள்ளையார் கோவில் தெருவுல நம்ம பையன் ஒருத்தன அடிச்சே கொன்னுட்டானுங்கடா“ “தெருவெல்லாம் ஒரே களேபரமா இருக்கு“ என்று ஆளாளுக்கு நடந்த வன்முறை பற்றி கற்பனைகளையும் கலந்து தெருவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில்தான் கோபால் டாக்டர் வீட்டுப் பக்கமாக ஒரு இளைஞனை தோளில் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்தார் பூமிநாதன் சித்தப்பா. கோபால் டாக்டர் வீட்டைச் சுற்றி இளைஞர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர். விசாரித்தபோது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பின்னங்கால் தசையில் குண்டடிபட்ட ஒருவரைத்தான் சித்தப்பா தூக்கி வந்திருப்பது தெரிந்தது. தசைக்குள்ளாக துப்பாக்கித் தோட்டா ஏதும் இல்லை என்றும் தசையில் உரசிச் சென்றதால் ரத்தம் வருவதாகவும் உடன் அவருக்கு சிகிச்சை செய்து கட்டும் போடப்பட்டிருப்பதாகவும் சித்தப்பாவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

அன்றிலிருந்து நான் சார்ந்திருந்த சமூகத்தினர் வசித்த பகுதிகளில் மாற்றுப் பிரிவினர் வந்து ஏதும் அசம்பாவிதம் செய்துவிடக்கூடாது என்று இளைஞர்குழு காவல் காக்கத் தொடங்கியிருந்தது. நானும் அந்தக் குழுவில் இணைந்து இரவுக் காவல் காக்கத் தொடங்கினேன். அந்த இரண்டு மூன்று இரவுகளில் சித்தப்பா மற்றும் அவரது குழுவினருடனே திரிந்தேன். நள்ளிரவில் அனைவரும் மொத்தமாகச் சென்று நகரின் மையத்திலிருந்த இரவுக் கடைகளில் தேநீர் அருந்துவதும், திடீரென ஏதாவது கலவரம் ஏற்பட்டால் என்ன செய்வது என்றும் விவாதித்துக் கொண்டிருந்தோம். அதுவரை எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்றாலும் சித்தப்பா “தம்பி நீயெல்லாம் எதுக்கு ராத்திரி கண்முழிச்சு எங்களோட அலையுற. வேண்டாம்யா. போய்வீட்ல தூங்கு படிக்கிற புள்ளக்கி எதுக்கு இந்த வேல“ என கண்டிப்புடன் அடிக்கடி சொன்னார்.

நான் “சும்மாவாச்சும் ஒங்ககூட இருக்கேன் சித்தப்பா“ என்றதைத் தட்ட இயலாது என்னையும் உடனழைத்துச் சென்று தேநீரும் உப்புமாவும் வாங்கித் தந்தார் இடையிடையே.

“இன்னும் எத்தனை வருஷம் படிக்கணும் தம்பி? நல்லாப் படி. நம்ம குடும்ப வளசல்லயே நீதானப்பா மொதமொத காலேஜ்ல சேந்து படிக்கிற. எங்கண்ணன் கஷ்டப்பட்டு ஒன்னய படிக்க வைக்கிறாரு. நல்லாப்படிச்சு முன்னுக்கு வரணும்யா“ என்று எனது குடும்பச் சூழலையும் அவரது எதிர்பார்ப்பையும் கலந்து ஆதரவாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“தர்மபுரி கேட்டவங்கல்லாம் எறங்குங்க“ என்ற நடத்துநரின் குரல் கேட்டு பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு பேருந்திலிருந்து இறங்கினேன். அங்கிருந்து தண்டுகாரணஹள்ளி பேருந்துபிடித்து பயணித்தேன். இடையில் தர்மபுரி பேருந்து நிலையத்தில் தேநீர் அருந்திவிட்டு பக்கதில் இருந்த பூக்கடையில் ஒரு மாலையும் வாங்கி வைத்திருந்தேன். ராமகிருஷ்ணன் வீட்டில் கூட்டம் அவ்வளவாக இல்லை. எனது ஊரிலிருந்து ஏறக்குறைய நாணூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்ததால் உறவினர்கள் கூட்டமாக வந்து கலந்துகொள்ள இயலவில்லை.

கையில் மாலையுடன் வீட்டினுள் நுழைந்தேன். ஆண்டாளுபாட்டி நான் எப்போதுமே பார்த்த எனக்கு ஞாபகத்திலிருந்த அதே முகத்துடன் குளிரூட்டம் செய்யப்பட்ட பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருந்தார். குளிர்பதனப் பெட்டியின் ஃபைபர் மூடிக்கு மீதாக ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த மாலைகளுக்கு அருகாமையில் நான் கொண்டு சென்றிருந்த மாலையை வைத்தேன். ஒரு நிமிடம் மௌனமாக நின்று பாட்டியை கூர்ந்து பார்த்தேன். பிறகு வெளியே வந்தேன்.

“எத்தனை மணிக்கு பொறப்டீங்க“ என்றான் ராமகிருஷ்ணன்.

“காலைல மொத வண்டிக்குப் பொறப்டேன். தர்மபுரி வரதுக்கு ரெண்டாயிருச்சு. அங்கன மாறி வரதுன்றதால இவ்ளோ நேரமாயிருச்சு. பாட்டி ரொம்ப சிரமப்பட்டாங்களா?“

“அதெல்லாமில்ல. போன ரெண்டு வருசமா கிட்னி ஃபெயிலியர்னு டாக்டர் சொன்னாரு. டயாலிஸிஸ் பண்ணா கொஞ்சம் தள்ளிப் போடலாம்னு போனவாரம்கூட சொல்லிட்டிருந்தாரு. அம்மாதான் வேணாண்டா… எனக்கு ஒடம்பு தாங்கல. இன்னும் ஒடம்ப குத்திப் புண்ணாக்காதேன்னு டயாலிஸிஸ்க்கு ஒத்துக்கவேயில்ல“

“அப்புறம் எப்படி நேத்து திடீர்னு… “

“இந்த ஒருவாரமா நல்லத பொல்லத குடுங்கன்னு டாக்டர் சொன்னதவச்சு கஞ்சித்தண்ணி, ஆப்பிள் ஜூஸ், இளநீர்ன்னு கொடுத்தோம். ஓரளவு குடிச்சாங்க. நேத்து சாயந்தரம் தொண்டையிலர்ந்து கரட்டு கரட்டுன்னு சத்தம் கேட்டது. என்ன ஏதுன்னு கவனிக்கிறதுக்குள்ள கண்ணு சொருக ஆரம்பிச்சுருக்சு. டாக்டரக் கூட்டியார போகமுன்னாடி அக்கா ரெண்டு கரண்டி பால ஊத்திட்டுப்போடா ராமகிருஷ்ணான்னாங்க. சரின்னு ஊத்துனேன். மொதக்கரண்டி பால் உள்ளே போச்சு. அடுத்த கரண்டி வெளியில வழிஞ்சுருச்சு. அப்புறமா ஓடிப்போயி டாக்டர் கூட்டியாந்தேன். வந்து பார்த்தவரு முடிஞ்சு ஒரு பத்துநிமிஷம் ஆயிருச்சுன்னு சொல்லிட்டாரு. அப்புறமாதான் ஊருக்கு ஃபோன் பண்ணேன்“ என்று நெடிய மூச்செடுத்து சொல்லிமுடித்தான் ராமகிருஷ்ணன்.

“நேரமாச்சுப்பா வெளில கொண்டாங்க. ஆகவேண்டியத பாப்போம்“ என பெரியவர் ஒருவர் சொல்ல ஆண்டாளுபாட்டியை வெளியில் கொண்டுவந்து ஈமச்சடங்குகள் மடமடவென நிறைவேற்றப்பட்டன. தயாராக நிறுத்தப்பட்டிருந்த வாகணத்தில் ஆண்டாளுபாட்டி வைக்கப்பட்டு அங்கிருந்து தர்மபுரிக்கு எரியூட்ட கொண்டு செல்லப்பட்டார்.

உறவினர்களும் நண்பர்களுமாக இருபது பேருக்கு மேல் தனியாக ஒரு வாகனத்தில் பாட்டியை எரியூட்டவிருந்த எரிவாயு எரியூட்டகத்திற்கு வந்து சேர்ந்தோம். எரியூட்டும் நிலையத்தின் உள்ளிருந்த அறையின் கருமைநிற சலவைக்கல் மேடையில் ஆண்டாளுபாட்டி வைக்கப்பட்டு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் கவனமாக சரிபார்த்து எடுத்துக் கொள்ளப்பட்டன. ராமகிருஷ்ணன் துண்டு ஒன்றை ஏந்தி அவற்றை முடிந்து வைத்துக் கொண்டான். ஆண்டாளுபாட்டி எரியூட்ட கொண்டு செல்லப்பட்டார். வரிசையாக ஒருஅடி இடைவெளிவிட்டு வைக்கப்பட்டிருந்த ஆறு ரீப்பர் கட்டைகளின் மீதாக கிடத்தப்பட்டார்.

எரியூட்டுபவர் லாவகமாக உருளைகளைத் தள்ளி பாட்டியை உலையினுள் தள்ளினார். தடால் என்ற சப்தத்துடன் ஆண்டாளுபாட்டியின் உடல் உலையில் விழுந்துகொண்டது. எரிவாயுக் குழாய்கள் திறந்துவிடப்பட்டன. வாயு கருமை நிறத்துடன் உள்ளிருந்த ஆறு துளைகளின் வழியாக பாட்டியின் உடலை சூழ்ந்துகொண்டது. நீளமான குச்சி ஒன்றின் ஒளியில் ராமகிருஷ்ணன் தீயைப்பற்ற வைத்து உலைக்கு உள்ளே நீட்டினான்.

‘டுப்‘ என்ற ஒலியுடன் தீ பற்றிக்கொண்டு எரியத்தொடங்கியது. தீ ஜ்வாலைக்குள்ளாக பாட்டியின் உடல் கிடந்தது. பாட்டியின் உடல் மீதிருந்த துணி தீப்பிடித்து கருகி எரியத் துவங்கியது. உலையின் கதவு திருகி அடைக்கப்பட்டது. பக்கத்துச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த தீயின் அளவினை கணக்கிடும் வெப்பமாணியில் அளவு 500, 600, 700 என உயர்ந்துகொண்டே போனது.

“டேய்… தீ வச்சுட்டாங்கடா… தெருவே பத்திக்கிட்டு எரியுது…“

“வீட்டுக்குள்ளாற ஆள் மாட்டிக்கிட்டாங்கடா“

“இரும்பு பீரோவெல்லாம் சூட்டில் உருகிருச்சு“ என இளைஞர்கள் கூக்குரலிட்டபடி தெருக்களில் இருமுனைகளுக்குமாக ஓடிக்கொண்டிருந்தனர். அது அதிகாலை 4.30 மணி இருக்கும். சத்தம் கேட்டு நானும் வீட்டினுள்ளிருந்து வாசலுக்கு வந்தேன். தெருவில் சப்தமிட்டபடி ஓடிக்கொண்டிருந்த ஒரு இளைஞனை நோக்கி “ஏலே… பாண்டி… என்னாச்சி… ஏண்டா ஓடிக்கிட்டிருக்க…“ என்றேன்.

“அந்தத் தே… மகங்க நம்மாளுக வீட்டுக்குத் தீ வைச்சிட்டாங்கடா… நம்மாளுங்கல்லாம் சேந்து தீய அணைச்சுக்கிட்டிருக்காங்களாம். ஒரே கூட்டமா ஓடிக்கிட்டிருக்காங்க“ என்றான் பாண்டி.

சாதிக்கலவரம் தன் உச்சத்தை அடைந்து ஒருசாரார் எதிர்சாராரின் வீட்டில் தீவைத்து விட்டிருந்தனர். தீப்பிடித்த இடம் நோக்கி மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். தீயைவிட வதந்திகள் அதிகமாக எரியத் துவங்கியிருந்தன. நானும் சம்பவ இடத்திற்கு விரைந்தேன்.

சம்பவத்தின் முதல் மூன்று நாட்கள் இரவுக் காவலில் கண்விழித்து வேலை செய்த பூமிநாதன் சித்தப்பா ஒருவழியாக சண்டை ஓய்ந்தது என்ற நிலையில் தான் வேலைபார்த்து வந்த நிறுவன உரிமையாளருக்குச் சொந்தமான மல்லிகைத் தோட்டத்திலிருந்து பூ கொண்டுவர அதிகாலை 3 மணிக்கே எழுந்து சென்றிருந்தார். நகருக்குள் பரவிய வதந்தி பூமிநாதன் சித்தப்பாவையும் எட்டியிருந்தது. அதுவரை சேகரித்த பூக்களை மட்டும் ஒரு கோணியில் பத்திரமாகக்கட்டி சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஊரை நோக்கி விரைவாகத் திரும்பத் தொடங்கியிருந்தார். செய்தியறிந்து தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து எரிந்துகொண்டிருந்த தீயினை விரைவாக அனைத்து விட்டிருந்தனர்.

“தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டது. கதவினைத் திருகித் திறந்தார்கள். ஆண்டாளுபாட்டி சாம்பலாக குவிந்திருந்தார். குதும்பி போன்ற ஒரு கம்பியினை உலையினுள் விட்டு ஒரு அள்ளு அள்ளி பாட்டியின் சாம்பலை வெளியில் எடுத்தார் எரியூட்டிய பணியாளர். சிறுமண் கலயமொன்றில் பாட்டியின் சாம்பலை போட்டு மூடி கொண்டு மூடி, “இந்தாங்க… பெரியம்மா அஸ்தி. ஆத்துலயோ கொளத்துலயோ கடல்லயோ உங்க வழக்கப்படி கரச்சுருங்க“ என எந்தவித உணர்வும் அற்ற குரலில் சொன்னபடி நீட்ட ராமகிருஷ்ணன் லேசாக நடுங்கும் கரங்களுடன் அதனைப் பெற்றுக் கொண்டான்.

எரியூட்டு நிலையத்திலிருந்த நவீன குளியலறை மற்றும் கழிப்பறைகளுக்குச் சென்று அனைவரும் கைகால் முகல் கழுவிக்கொண்டனர். நானும் அப்படியே செய்தேன்.

“குளிக்கிறவங்க குளிச்சுடுங்க. ஏம்பா… ராமகிருஷ்ணா குளிச்சுற வேண்டியதுதானே“ என ஒருவர் சொல்ல “அதெல்லாம் வீட்லபோய் பாத்துக்கலாம். வெளியூர்க்காரங்க வேணா குளிக்கட்டும்“ என ஒருவர் சொன்னார்.

வெளியூர்காரர்கள் ஒருசிலர் மெதுவாக அவ்விடம் விட்டு நகரத் தொடங்கியிருந்தனர். அவர்களுள் நானும் ஒருவன். மணி இரவு ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊருக்கு சென்றுசேர எப்படியும் விடிந்துவிடும்.

எரியூட்டு நிலையத்திலிருந்து பிரதான சாலைக்கு வந்ததும் எதிர்ப்பட்ட சேலம் பேருந்தை கைகாட்டி மறித்து ஏறிக்கொண்டேன். பயணவழிநெடுக பலவிதமான நினைவுகள் வந்து மோதிக்கொண்டிருந்தன. எனது ஊருக்கு வந்து சேர்ந்தபோது அதிகாலை மணி ஐந்தை எட்டியிருந்தது.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக முகம் கழுவி நடைப்பயிற்சிக்குத் தயாரானேன்.

இப்பத்தானே வந்தீங்க… அதுக்குள்ள வாக்கிங் போகாட்டி என்ன? கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்கக்கூடாதா?“ என்ற என் மனைவியிடம் “விடியப் போகுதும்மா… இனி தூக்கம் வராது. வழக்கமா போறதுதானே. போயிட்டு வந்துர்றேன். அப்பதான் பகல்ல ஃப்ரஸ்ஸா இருக்கும்“ எனச் சொல்லி அவளது பதிலுக்குக் காத்திராமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கி நகரைவிட்டு வெளிச்செல்லுகின்ற பிரதான சாலையை அடைந்தேன்.

கிழக்கு வானில் வெளிச்சக் கீற்று மிகவும் மங்கலாகத் தெரியத் தொடங்கியிருந்தது. சரியாக ஐந்து நிமிட நடை. அந்த புளியமரத்தின் அருகில் நின்றேன். மரத்தின் அருகாமையில் சாலையின் ஓரிடத்தில் தார்கெட்டியாக உறைந்துபோயிருந்தது. அதை உற்றுப் பார்த்தபடி நின்றேன். தினமும் என்மனக் கண்முன் விரியும் அதே காட்சி நிழலாடத் தொடங்கியது.

பூமிநாதன் சித்தப்பா சைக்கிளை மிகவேகமாக மிதித்தபடி வந்து கொண்டிருந்தார். காலையின் மங்கலான வெளிச்சத்தில் எதிரில் வந்த பேருந்துக்கு சற்று விலக சைக்கிள் தார்ச்சாலையிலிருந்து விலகி மண்ணிற்கு வரவும் மண் சரியத் துவங்க விநாடி நேரத்தில் நிலைகுலைந்து பேருந்துச் சக்கரத்தின் முன் விழுந்தார். தலையில் சக்கரம் ஏறி இறங்க சிலவிநாடிகளுக்குள் மரணம் அவரை ஆட்கொண்டிருந்தது.

(2011 அக்டோபர் 9 ஆம் நாள் அருப்புக்கோட்டையில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் நடத்திய படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)

– அக்டோபர் 2011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *