சிம்மாசனப் பதுமைகள் சிரித்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 15, 2025
பார்வையிட்டோர்: 309 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முதற்பகுதி: பூர்வ கதை | இரண்டாம் பகுதி: 32 பதுமைகள் சொல்லிய கதைகள்

கதை – 2 | கதை – 3

3. சிம்மாசனப் பதுமைகள் சிரித்த கதை

பஹுசுருதன் கதையைச் சொல்லி முடித்த நீதி வாக்கிய மந்திரிக்கு போஜ மஹாராஜன் அனேக வெகுமானங்களும், ஆபரணங்களும் கொடுத்து உபசரித்தான். பிறகு நவரத்தின சிங்காதனத்தை நகரத்துக்குக் கொண்டு சென்று ஆயிரக்கால் மண்டபம் ஒன்றைக் கட்டுவித்து அதன் நடுவில் சிங்காரமாகச் சிங்காதனத்தை வைத்தான். புனித க்ஷேத்திரங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை தெய்வீக சக்திவாய்ந்த மூலி கைகளால், வேத பாராயணத்துடன் அந்த அதிசய சிங்காதனத்திற்கு அபிஷேகம் செய்வித்து, பூஜை புனஸ்காரங்களைச் செய்தான். அவன் அந்தப்புர மாதர்கள் தீப ஆராதனை செய்தார்கள். அனேக அறநெறியாளர்கள் அரசனுக்கு ஆசீர்வாதம் செய்தார்கள். கவிஞர்கள் அரசனுடைய குணாதிசயங்களைப் புகழ்ந்து பாடினார்கள். அதன் பிறகு போஜ மன்னன் நான்கு வருணத்தாருக்கும், ஏழை, குருடு, செவிடு, நொண்டி, அவலக்ஷணம் ஆகியோர்களுக்கும் தகுந்த வெகுமானங்களும் பரிசுகளும் அளித்தான். சாமரம் குடை முதலானவற்றுடன் நல்ல முகூர்த்தத்தில் போஜமன்னன் சிங்காதனத்தில் ஏறப்போகும்போது அதன் படிகளிலுள்ள முப்பத்திரண்டு பதுமைகளும் கலகலவென்று கைகொட்டிப் பரிகாசமாகச் சிரித்தன.

“ஓ பதுமைகளே! நான் சிங்காதனம் ஏறப்போகையில் சிரித்ததேன்?” என்று போஜராஜன் கேட்டான்.

அப்போது முப்பத்திரண்டு படிகளில் முதற்படிக்குக் காவலாக இருந்த சுகேசி என்ற வினோதரஞ்சிதப் பதுமையானது, மனிதக் குரலில் பின்வருமாறு சொல்லியது.

“போஜ மஹாராஜனே! வீரம், மாட்சிமை, தைரியம், உயர் குலப்பிறப்பு மற்றும் எங்கள் மஹாராஜாவுக்குள்ள குணங்கள் உனக்கிருக்கும் பட்சத்தில் இந்தச் சிங்காதனத்தில் ஏறலாம்.”

திடுக்கிட்டுப் பின் வாங்கிய போஜராஜன். ‘பதுமையே! நீ குறிப்பிடும் குணங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கின்றன. வேறு எது குறைந்து விட்டது? காலத்திற்கேற்றவாறு நானும் இருந்து கேட்பவர்களுக்கு இல்லையென்று சொல்லாது கொடுத்து வருகிறேன்!” என்றான்.

அவன் வார்த்தைகளைக் கேட்டு வினோதரஞ்சிதப் பதுமை “கலகலவென்று சிரித்தது.

“ஏ ராஜன்! கேளும். இந்த ஒரு வார்த்தையே உனக்குத் தகாதென்பதை எடுத்துக் காட்டுகிறது. என்னவெல்லாம் கொடுத்திருக்கிறாயோ, அவற்றை நீ உன் வாயாலேயே கூறுகிறாய்! எவனொருவன் தான் செய்தவற்றையும் மற்றவர்களுடைய தவறுகளையும் பேசுகிறானோ அவன் இழிவான மனிதனே. நல்ல குணம் படைத்தவன் இவ்விதம் பேசமாட்டான். மற்றவர்களின் தவறுகளை அவை தன்னிடம் உள்ள நற்குணங்களே போல் நினைத்து எடுத்துச் சொல்லுபவன் இவ்வுலகில் இழிவானவனே! தன்னுடைய குணங்களையும் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும் நல்ல குணம் வாய்ந்த ஒருவன் ஒருபோதும் சொல்லமாட்டான். வயது. செல்வம், வீட்டுச் சுவரிலுள்ள பிளவு, சக்தி, மருந்து, பெண்களுடன் சகவாசம், கொடை, கௌரவம், இழிவு ஆகிய இந்த ஒன்பதையும் ஒருபோதும் வெளியிடக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, ஒருவன் தன்னுடைய குணங்களைப் பற்றிப் பேசக்கூடாது அவ்விதமே மற்றவர்களிடமுள்ள குறைகளைப் பற்றியும் பேசக் கூடாது.”

பதுமையின் வார்த்தைகளைக் கேட்ட போஜராஜன் வியப்புடன்,” நீ உண்மையை எடுத்துச் சொன்னாய்! தன்னுடைய குணங்களைப் பற்றிப் பேசுபவன் முட்டாளே அன்றி வேறல்ல. நான் செய்தவற்றைப் பற்றிப் பெரிதாக எடுத்துச் சொன்னது அவிவேகமான செய்கையே!” என்றான்.

“சகல கலா விற்பன்னராக ஐம்பத்தாறு தேசத்திலுள்ள அரசர்களெல்லாம் பணிந்து கப்பம் கட்டும்படி பாராண்ட மன்னராக பட்டி என்கிற மதி மந்திரியுடன் பூலோகத் தேவேந்திரனைப் போல இராஜ்ஜிய பரிபாலனம் செய்தார் எங்கள் விக்கிரமாதித்த மஹாராஜர். அவரைப் போல வல்லவரன்றோ இந்த வினோதச் சிங்காதனம் ஏறவேண்டும்? என்றது தங்கப் பதுமை.

“இந்தச் சிங்காதனத்துக்கு உரியவனான அந்த மஹாராஜனின் வரலாற்றைச் சொல்!” என்றான் போஜராஜன்.

– தொடரும்…

– விக்கிரமாதித்தன் கதைகள், வடமொழி மூலங்களைப் பரிசோதித்து எழுதியவர்: ராசு, தமிழ்ப் பாடங்களைப் பரிசோதித்து எழுதிவர்: அரு.ராமநாதன், முதற்பதிப்பு: ஜனவரி 1958, பிரேமா பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *