சித்தி பார்த்த மாப்பிள்ளை
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 1,704
கனமான உடல்வாகு கொண்ட நடுத்தர வயது சதாசிவம் தமது வீட்டின் கூடத்தில் ஒற்றை சோபாவில் அமர்ந்தபடியே பகல் நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். மின்வெட்டால் ஃபேன் ஓடியது நின்றதால் கண்களைத் திறந்தார்.
எதிரே அவருடைய மைத்துனி ஒல்லியான சேலை அணிந்த பெண்மணி ரோஜா நின்று கொண்டிருந்தாள் .
‘போங்க அத்தான்… நல்ல செய்தி சொல்லலாம்னு வந்தா பகல்ல உக்காந்துகிட்டே தூங்கறிங்க’ என்றாள் ரோஜா .
‘என்னவோ அசந்துட்டேன் … வா என்ன நல்ல சேதி..‘ என்றார் சதாசிவம்.
‘நம்ம பொண்ணு அர்ச்சனாவுக்கு ஒரு வரன் பார்த்திருக்கேன்.‘
‘அப்படியா? பொறுப்பான பாசக்கார சித்திதான் நீ… சொல்லு யாரு எங்க இருக்காங்க…’
‘பெரிய குடும்பம்… பணக்காரக் குடும்பம்…எதுவும் எதிர்பார்க்க மாட்டாங்க எங்க தெருவுல தான் இருக்காங்க..’
‘பொண்ணு மட்டும் வந்தா போதுமா’
‘ஆமாம்…’
‘மாப்பிளை என்ன அவங்களோட பிசினஸ் ஏதாவது பார்த்துக்கறாரா?‘
‘அது வந்து… அதெல்லாம் இல்லை அவரு பிசினஸ் பார்க்கணும் உத்யோகம் பார்க்கணும் எல்லாம் அவசியம் இல்ல… வற்றாத செல்வம்னு சொல்வாங்க அதான் அவங்களோடது…’
‘என்னம்மா… கோடி கோடியா வெச்சிருக்கிறவங்களே ஏதாவது தொழில் பண்ணகி்ட்டே தங்களை பிசியா தானே வெச்சிருக்காங்க… இவுரு எதுலயும் ஈடுபடலைன்றே..’
‘இல்ல அத்தான் அதற்கு அவசியம் இல்ல…’
‘இப்படி ஓகோன்னு இருந்தவங்க எல்லாம் சினிமால காட்ற மாதிரி ஒரே நாள்ல மாறிப் போனதெல்லாம் பார்த்து இருக்கேன்… நீயும் தான் பார்த்து இருப்பே குந்தி தின்றால் குன்றும் கரையும்னுவாங்க… அதனால இயக்கம், தொழில் இல்லாம இருக்கிற வரன் வேணாம்…’
ரோஜாவின் முகம் மாறியது.
‘சரி அத்தான் அப்புறம் உங்க இஷ்டம்.. நான் வரேன்…’ ரோஜா வெடுக்கென்று பேசிவிட்டு வீட்டு வாசலை நோக்கி விரைந்து நடந்தாள். சதாசிவம் அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
(தேடாது அழிக்கின் பாடாய் முடியும் – கொன்றை வேந்தன் -44)
– இலக்கிய வரிக் கதைகள் – ஔவைப் பாட்டியின் கொன்றை வேந்தன்….
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
