சிட்டுக் குருவியுடன் உரையாடிய தங்கப் பதுமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 3, 2026
பார்வையிட்டோர்: 1,329 
 
 

மிகப்பெரிய மாநகரம் அது. பரந்து விரிந்த மாநகரத்தின் மையப் பகுதியில் மிகவும் உயரமான ஒரு பீடத்தில் அமைக்கப்பட்டிருந்தது அந்த சிலை. அது தங்க சிலை கண்களில் நவரத்தினம் பதிக்கப்பட்டிருந்தது. அந்த சிலையின் கையில் உள்ள நீண்ட வாளிலும் இரத்தினக் கல் பதிக்கப்பட்டிருந்தது. அது ஓர் இளவரசனின் சிலை .

ஊர் உறங்கும் இரவு நேரம் . அங்கே இங்கே சுற்றி அலைந்த சிட்டுக்குருவி ஒன்று அந்த சிலையின் பாதத்தில் வந்து அமர்ந்தது. இளைப்பாற சரியான இடம் இதுதான் என்று நினைத்த சிட்டுக்குருவி மீது நீர்த்துளி விழுந்தது.

இது ஒன்றும் மழைக்காலம் இல்லையே எங்கிருந்து இந்த துளி என்று அந்த அழகிய சிட்டுக்குருவி எண்ணமிட்ட போது மீண்டும் ஒரு நீர்த்துளி விழுந்தது . அண்ணாந்து பார்த்த சிட்டுக் குருவி , தங்கச் சிலையின் தோளின் அருகே சென்றது …

“கண்ணீர் உகுத்தது நீங்கள் தானா ? யார் நீங்கள் ? கண்களில் ஏன் இந்த நீரோட்டம் ?“

தங்கச் சிலை பேசியது –

“நான் துன்பம் என்ன என்று அறியாமல் வளர்ந்து வாழ்ந்த இளைஞன் இளவரசன் . எங்கள் அரண்மனையில் உள்ளவர்கள் எல்லாம் மகிழ்ச்சி இளவரசன் என்றே அழைப்பார்கள். என் விதி முடிந்த பிறகு , நவரத்தினங்களுடன் தங்கப் பதுமையாக என்னை உருவாக்கி இந்த மாநகரத்தைக் காண வைத்திருக்கிறார்கள் .. “

“அது சரி.. மகிழ்ச்சி இளவரசரே … கண்களில் நீர் எதற்கு உமக்கு?“

“இங்கிருந்து நகரத்து மக்களின் துன்பங்களைப் பார்க்கிறேன். கண்ணீர் உகுக்கிறேன்.“

“அது சரி மக்களின் துயரத்தைத் துடைக்க உங்களால் என்ன செய்ய முடியும்?“

“சிட்டுக் குருவியே எனதருமை சிட்டுக் குருவியே … எனக்காக நீ உதவி செய்ய வேண்டும்?“

“மகிழ்ச்சி இளவரசே … நாளை இந்தப் பகுதியில் குளிர் மேலும் அதிகமாக வாட்டத் தொடங்கி விடும் …ஏன் இப்போதே குளிராக இருக்கிறது. நானும் எங்கள் கூட்டத்தாரும் கதகதப்பான எகிப்து நோக்கிப் போக உள்ளோம் …என் நண்பர்கள் பாதுகாப்பான இடத்தில் . என்னைக் காணோம் என்று நினைப்பார்கள் ”

“சிட்டுக் குருவியே எனதருமை சிட்டுக் குருவியே இன்று ஓர் இரவு மட்டும் என்னுடன்இரு.. என்னுடைய தூதாகச் செல்லு…”

“உங்களை எனக்கு ஏனோ பிடித்து விட்டது. என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் மகிழ்ச்சி இளவரசே…”

“இங்கிருந்து பார்.. அதோ அந்த தையல் பெண்மணி , ஏதோ தைத்துக் கொண்டிருக்கிறாள்… அவளுடைய மகனோ காய்ச்சலில் அவஸ்தைப்படுகிறான். ஆரஞ்சுப் பழம் வேண்டும் என்கிறான். இதோ என்னுடைய வாளில் உள்ள இரத்தினத்தை எடுத்து அந்த வீட்டில் வைத்து விட்டு வா”

மகிழ்ச்சி இளவரசனின் சொல்லுக்கு கட்டுப்பட்ட அந்தக் குருவி , இரத்தினக் கல்லை வாளிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு அந்த சிறுவனின் வீட்டில் வைத்து விட்டது. களைப்பு மிகுதியால் அந்தப் பெண்மணி உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த சிறுவன் , இந்த இரத்தினக் கல்லைப் பார்த்து மகிழ்ந்தான்.

சிட்டுக் குருவி திரும்பி வந்தது.

“ஏனோ எனக்கு இத்தனை குளிரிலும் கதகதப்பாக இருக்கிறது இளவரசரே”

“நல்லது செய்தாய் அல்லவா அதனால்தான்…”

“நான் விடை பெற வேண்டும் இளவரசரே…”

“சிட்டுக் குருவியே எனதருமை சிட்டுக் குருவியே … அங்கே ஓர் ஏழை எழுத்தாளன் , நாடகத்தை எழுதி முடிக்க வேண்டியவன்… உண்ண உணவும் இல்லாமல் , குளிர்காய விறகும் இல்லாமல் தவிக்கிறான். என்னுடைய ஒரு கண்ணில் உள்ள இரத்தினக் கல்லை எடுத்து அவனிடம் கொடுத்து விட்டு வா..“

“தங்கப் பதுமையான பின்னும் தங்கமான உள்ளமா? ஆனால் நான் இதைச் செய்ய மாட்டேன்.. நீங்கள் பார்வையற்றவராக அல்லவா ஆகி விடுவீர்கள்..“

“சிட்டுக் குருவி நான் கட்டளையாக சொல்கிறேன் கேளப்பா”

சிட்டுக் குருவி ஒரு கண்ணின் இரத்தினத்தை அலகால் எடுத்துக் கொண்டு போய் எழுத்தாளனின் அறையில் சேர்த்தது . அவன் அதனைப் பார்த்து ஆனந்தம் அடைந்தான். திரும்பி வந்த சிட்டுக் குருவியிடம் , மகிழ்ச்சி இளவரசன் , ” அங்கே ஒரு சிறுமி வாங்கி வந்த தீக்குச்சிகளை ஈரத்தில் போட்டு விட்டாள். அவளுடைய தந்தை அவளை அடிப்பான். என்னுடைய இரண்டாவது கண்ணின் இரத்தினக் கல்லை அவளிடம் தந்து விட்டு வா”

சிட்டுக் குருவி அந்தப் பணியையும் செய்து முடித்து வந்தது. சிட்டுக் குருவி சும்மா இ்ல்லாமல் இந்த மாநகரத்தில் வறுமையால் வாடும் மக்களும் குழந்தைகளும் அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன் என்று கூறியது.

மகிழ்ச்சி இளவரசன் , “ இந்த தங்க சிலையில் இலை இலை போல் தங்கத் தகடுகள் உள்ளனவே நீ அவற்றை பெயர்த்து எடுத்து அவர்கள் குடியிருப்பில் போட்டு விட்டு வா… தயவு செய்து என் சொல்லை நிறைவேற்று..” என்றான்.

சிட்டுக் குருவி ஓடோடி அந்தப் பணியையும் முடித்து ஏழைகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து விட்டு திரும்பியது. தங்க சிலையின் தோள்களில் அமர்ந்தது. அலகால் முத்தமிட்டது.

“நான் விடை பெறுகிறேன் மகிழ்ச்சி இளவரசே…”

“கதகதப்பான பூமியை நோக்கி செல்கிறாய் அல்லவா?…”

“இல்லை மரண இல்லத்தை நோக்கி …. உறக்கத்தின் சகோதரி மரணம் அல்லவா?“

தங்க சிலையின் பாதங்களில் சிட்டுக் குருவி உலகத்திடமிருந்து விடை பெற்றது.

***

மறு நாள் . பொழுது விடிந்ததும் கதிரவன் ஒளி பரப்பியதும் அந்த நகரத்தின் மேயரும் கவுன்சிலர்களும் அந்த சிலையின் கீழ் வந்து நின்றனர்.

குரல்கள் ஒலித்தன.

“இது என்ன இந்த தங்க சிலை , தங்கமே இல்லாமல் விகாரமாக இருக்கிறது.”

“இளவரசன் மாதிரியாக இல்லை . பிச்சைக் காரன் போல் இருக்கிறது. பறவை செத்துக் கிடக்கிறது. அதைத் தூக்கிப் போடுங்கள்“

“இந்த சிலையத் தகர்த்துத் தள்ளுங்கள் . அந்த சிலை உலோகத்தை உலைக்களத்தில் கொடுத்து உருக்குங்கள்”

***

நகர சபைக் கூட்டம் . மேயர் , அந்த இடத்தில் என்னுடைய சிலை வைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் ஏன் என்னுடைய சிலையை வைக்க கூடாதா என்றனர். ஒரே கூச்சல் குழப்பம்.

***

உலைக்களம்.

“என்னப்பா இந்த சிலையில் இந்த இதயப் பகுதி மட்டும் உருகவில்லை அப்பா”

“அதை தூக்கிப் போடுப்பா”

இதயப் பகுதி தூக்கி எறியப்பட்ட இடத்தில் சிட்டுக் குருவியின் உடல் இருந்தது.

***

கடவுள் ஒரு தேவதையை அழைத்தார். இந்த நகரில் மிகச்சிறந்த இரண்டு வஸ்துக்களைக் கொண்டு வா என்றார்.

தேவதை திரும்பி வந்த போது, மகிழ்ச்சி இளவரசனின் இதயப் பகுதியையும் சிட்டுக் குருவியையும் கொண்டுவந்தாள்…

கடவுள் மகிழ்ந்தார் – இந்த இருவரும் பொக்கிஷம் போன்றவர்கள் தான். இவர்கள் இருவரும் என் பொன்னுலகில் என் புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள் என்றார் கடவுள்.

(முதுபெரும் ஆங்கில எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்டு அவர்களின் கிளாசிக் சிறுகதையான Happy Prince கதையின் அடியேனுடைய சொல் ஓவியம் இந்த சிறுகதை)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *