கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி நாடகம்
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 1,128 
 
 

குறிப்பு – கதைக் களம் . 2010 ஆம் ஆண்டு .

முதற் காட்சி

(திரை எழுகிறது.விளக்குகள் ஒளிர்கின்றன. சாலை போன்ற அமைப்பு . இரவு நேரம். மேடையின் வலப் பக்கத்திலிருந்து ஒடிசலான , பாவாடை தாவணி அணிந்த துருதுரு இளம்பெண் வருகிறாள். மேடையின் இடப் பக்கத்திலிருந்து வாட்டசாட்டமான உருவம் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியும் அப்பாவி இளைஞனும் வருகிறார்கள்.)

இளம்பெண் : தமிழ்த் தம்பி …

அதிகாரி : ஏய்… என்னை பேர சொல்லி கூப்பிடறே?

இளம்பெண் : கூப்பிடலீங்க ஐயா ஒங்க பெயரைப் படிச்சேன். எங்க சாரை ஏன் பிடிச்சுட்டு போறீங்க?

தமிழ்த்தம்பி : சாரா ? இவரைத் தெரியுமா? இவுரு நீ படிச்ச ஸ்கூல் வாத்யாரா?

இளம்பெண் : அய்யா நான் டிஸ்டன்ஸ்ல டிகிரி படிக்கறேன். கான்டாக்ட் கிளாஸ்ல சார்தான் வந்து கிளாஸ் எடுக்கறாரு . அவரை விட்டுடுங்க . அவரு ரொம்ப இன்னொசென்ட்.

தமிழ்த்தம்பி : பராவாயில்லையே இத்தனை இங்கிலீஷ் வார்த்தை பேசறியே..

இளம்பெண் : ஏன் ஏழைங்க ஆங்கிலம் கலந்த தமிழ் பேசக் கூடாதா? எங்க சாரை விட்டுடுங்க… ஐயா..

இளைஞன் : சாயா…

தமிழ்த்தம்பி : என்ன சாயா வாங்கி கொடுக்க சொல்றானா?

இளம்பெண் : என் பேரு சாயா ஐயா..நாராயணன் சாரை விட்டுடுங்க எங்கே அழைச்சுட்டு போறீங்க..

தமிழ்த்தம்பி : இவன் பேரு நாராயணனா ? இது வரைக்கும் பேரை சொல்லலை இவன்..

நாராயணன் : சாயா.. நீ வீட்டுக்கு போ..

சாயா : இருங்க நாநா சார் கேட்கறதுக்கு ஆள் இல்லையா ? நான் இருக்கேன் உங்களுக்கு.. ஆபீசர் சாரை எதுக்கு எங்கே அழைச்சுகிட்டு போறீங்க ?

தமிழ்த்தம்பி : ஏதாவது தேறுமான்னு தான்…

சாயா : என்னது…?

தமிழ்த்தம்பி : விசாரணைக்கு…

சாயா : பேர் கூட கேட்காம என்ன விசாரணை ? அப்படி என்ன பண்ணிட்டாரு சாரு ?

தமிழ்த்தம்பி : லாட்ஜ்ல ரூம் போட்டு தங்கி ஏதோ நாச திட்டம் போட்டிருக்காரு …

சாயா : இவுரு சூதுவாது இல்லாத சாது

தமிழ்த்தம்பி : நீ நல்லா பேசற மாது … நான் இவனை விசாரணைக்கு அழைச்சுகிட்டு போறேன். நீ என்னை என்ன குறுக்கு விசாரணை செய்யறே ?

சாயா : நீங்க என்ன பழைய ரஜினி படம் நான் சிகப்பு மனிதன் படத்தை பார்த்துட்டு இப்படி இறங்கிட்டிங்களா ? சார் நீங்க போங்க பார்த்துக்கலாம் ..

(மேடையின் வலப் பக்கத்திலிருந்து உயரமான , கனமான சரீரம் கொண்ட மற்றொரு காவல் துறை அதிகாரி வருகிறார்)

சாயா : வணக்கங்க ஏட்டையா…

வந்தவர் : என்ன ம்மா நல்லா படிக்கறியா?

சாயா : ஐயாதான் டிஸ்டன்ஸ்ல படிக்க சேர்த்து விட்டிங்க.. நல்ல வழி காமிச்சிங்க.. இந்த சார்தான் எனக்கு வகுப்பு எடுக்கறாரு..

ஏட்டையா : நல்லா சொல்லிக் கொடுங்க…ஐயா

தமிழ்த்தம்பி : என்ன மிஸ்டர் … இங்க அசோக் பில்லர் மாதிரி போலீஸ் ஆபீசர் நின்னுகிட்டு இருக்கேன்.. சல்யூட் பண்ண மாட்டியா?

ஏட்டையா : வணக்கம் சார் நான் ஜானகிராமன் இந்த ஏரியா ஸ்டேசன் ஹெட் கான்ஸ்டபிள்.. நீங்க எந்த ட்ரூப்ன்னு தெரியலையே …

தமிழ்த்தம்பி : என்னது ட்ரூப்பா..

ஜானகிராமன் : இல்ல ஐயா டங் ஸ்லிப்..எந்த சரகம்னு கேட்க வந்தேன்.

தமிழ்த்தம்பி : உன்னோட மேலதிகாரி திருநாவுக்கரசு தானே நான் அவர்கிட்ட ஒன்னை பத்தி பேசிக்கறேன்..

ஜா.ரா: அவர்கிட்ட தாராளமா பேசிக்க இப்ப இவரை எங்கே கூட்டிகிட்டு போற?..

தமிழ்த்தம்பி : (அச்சத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்)

என்னய்யா அதிகாரிய ஒருமையில வா போன்னு பேசறே ? நான் நெனச்சா உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியுமா?

ஜா.ரா: உன்னால என்னை ஒண்ணும் பண்ண முடியாது .. போலீஸ் ஆபீசர் வேஷம் போட்டு ஊரை ஏமாத்திகிட்டு வர்றதுக்கு உன்னை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே வேக்கணும் வா…

தமிழ்த்தம்பி : (பயத்துடன்) அய்யா ஆழம் தெரியாம காலை விட்டுட்டேன். என்னை விட்டுடுங்க என்னை மன்னிசிடுங்க நாராயணன் சார் என்னை மன்னிசிடுங்க.. (ஓடுகிறான்)

ஜா. ரா : மச்சான்.. லாட்ஜ்ல போலீஸ் ஆபீசர் வா என்னோட ன்னு கூப்பிட்டா வந்திடுவியா … எனக்கு போன் பண்ணி இருக்கலாம் இல்ல அவன் ஒன் கிட்டேந்து பணம் பறிக்க திட்டம் போட்டு இருக்கான்.

சாயா : ஐயா சாமி இவுரு ஒங்க சொந்தமா?

ஜா.ரா. : ஆமாம் . இவுரு என் மைத்துனரு.. என் மனைவி சாந்தியோட தம்பி

சாயா : இதைப் பாருங்க கொடுமையை.. மாமன் வீடு இருக்கும் போது வீட்டுக் காரன் ரூமை காலி பண்ண சொல்லிட்டா ஏன் லாட்ஜ்ல போய் தங்கறாரு ?

ஜா.ரா : என் கிட்ட கேட்டா.. உனக்கு பாடம் எடுக்கிற உன் சார் கிட்டேயே கேளு …

நாராயணன் : வேலைக்கு போன ஆள காணோம்ன்னு ஒங்க வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க இல்ல ஒங்க அப்பா அம்மா.. நீ போ..

சாயா : அது சரி மாமாவுக்கும் மச்சானுக்கும் நடுவுல நான் எதுக்கு ? ஆமாமாம் வீட்ல காத்துகிட்டு இருப்பாங்க என்ன ஆனாளோன்னு இல்ல .. நான் போய் தான் தோசை மாவை வாங்கி தோசையை சுட்டுக் கொடுக்கணும் அப்பா சித்தி தம்பி தங்கச்சிக்கு .. நான் வரேன் . லாட்ஜ்ல தங்காம மாமன் வீட்ல போய் தங்குங்க.. ஒண்ணும் கவுரதை குறைஞ்சுடாது அக்கா வீட்ல இருந்தா.. நான் வரேன்.. ஓவர் பேச்சா இருந்தா மன்னிச்சிடுங்க ஏட்டையா வரேன்..

( சாயா ,மேடையின் வலப் பக்கம் நோக்கிச் செல்கிறாள்)

ஜா.ரா : ஏம்பா.. வீட்டுக் காரன் காலி பண்ண சொன்னா நம்ம வீட்டுக்கு வர வேண்டியதுதானே … சரி வா வீட்டுக்கு..

நாராயணன் : மாமா அது வந்து…

ஜா.ரா : யோவ் நீ அங்க வந்து இருன்னு நான் வற்புறுத்த மாட்டேன். சாந்தி உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு சொல்லிகிட்டு இருக்கா .. வந்து அக்காவையும் கண்மணியையும் பாரு வா…

நாராயணன் : சரி வரேன் வாங்க..

(திரை)

இரண்டாம் காட்சி

(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. தெருவின் ஒதுக்குப் புறத்தில் உள்ள சிறிய வீடு . வீட்டுக்கு வெளியே உள்ள திண்ணையில் சாயா தேவி அமர்ந்து பாடங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.)

வீட்டின் உள்ளிருந்து வயதான பெண்மணியின் குரல் வெளியே கேட்கிறது – சாயா… பேரைப் பாரு… ஒங்க அம்மாவோட இந்திக்கார சிநேகிதி சாயாவாம் அந்த பேர ஒனக்கு வெச்சிட்டு போய் சேர்ந்துட்டா.. படிக்கறாளாம்…

படிச்சு படிச்சு நீ என்ன கலக்ட்டராவா ஆகப் போற.. உனக்கும் புத்தி கெட்டுப் போச்சு உன் அப்பனுக்கும் புத்தி கெட்டுப் போச்சு..

சாயா : ஆமாம் சித்தி … உனக்கு புத்தி நல்லா இருக்கு அது நீ செஞ்ச புண்ணியம் … கஞ்சியும் மாத்திரையும் கொடுத்துட்டேன் இல்ல சும்மா இரு .. எங்க அப்பா கிட்ட குடிக்காதேன்னு சொல்லி நிறுத்த முடியல என்னை படிச்சு என்ன கிழிக்கப் போறேன்னு கேட்க மட்டும் வாய் நீளுது …

பெண் குரல் : வாயைப் பாரு…

(சாயாவை இந்த உலகம் படிக்க விடாது போலிருக்கிறது. வாட்டசாட்டமான இரண்டு இளைஞர்கள் மற்றொரு இளைஞனை துரத்திக் கொண்டு வருகிறார்கள் . துரத்தப்பட்ட இளைஞன் மூச்சிரைக்க சாயா வீட்டுத் திண்ணையின் அருகில் வந்து நிற்கிறான் . சாயா எழுந்து நிற்கிறாள்)

சாயா : ஐயா ஏன் ஒருத்தர இப்படி ரெண்டு பேர் துரத்தறீங்க?

துரத்துபவரில் ஒருவர் : ஒவ்வொருத்தரா துரத்தணும்ங்கறியா ? டேய் எடுடா பணத்தை…

சாயா: அட நம்ம போலீசு வேசம் போட்ட தமிழ்த்தம்பி… அன்னிக்கு என்னம்மா ஆக்ட் கொடுத்தீங்க நான் நிச போலீஸ்ன்னு இல்ல நெனச்சுட்டேன். பாடம் கத்துக் கொடுக்கற புரபசரையே ஏமாத்திட்டியே சார் கில்லாடி…

துரத்துபவரில் ஒருவர் : அப்படி ஆக்ட் கொடுத்து தாம்மா எங்க காந்தி மார்க்கெட்ல எல்லா கடையிலயும் வசூல் பண்ணிட்டான்..

சாயா : என்ன ஐயா நீங்க யானை வாயில போன கரும்பு திரும்பி வருமா என்ன?

துரத்துபவரில் மற்றொருவர் : அப்படியா? யானைக்கு வெல்லத்துல விசம் வைச்சு கொடுத்துட வேண்டியதுதான்… இல்ல யானை மிதிக்கிற மாதிரி மிதிக்கணும் இவனை…

சாயா : யோவ்.. அவங்க பணத்தை திருப்பி கொடுத்துடறேன்னு கெஞ்சி கேட்டுக்கோ இல்லேன்னா அவங்களுக்கு இருக்கிற வேகத்துக்கு ஒன்னை சும்மா விட மாட்டாங்க

தமிழ்த்தம்பி : வணிகர்கள் எனக்கு கொடுத்த நன்கொடையை… மறுபடியும் அடிக்காதீங்க.. நான் வசூல் பண்ண மாமூல் பணத்தை வர்ற பிப்ரவரி 30 க்குள்ளே காந்தி மார்க்கெட் வணிகர் சங்கத்துல வந்து கொடுத்துடறேன்.

(மீண்டும் அவர்கள் அவனைத் தாக்குகிறார்கள்)

தமிழ்த்தம்பி : சாயா என்னைக் காப்பாத்து…

சாயா : சாமி நான் இதுக்கு எல்லாம் சாட்சியாகணுமா? இந்த சாரை வேற எங்கேயாவது கூட்டிகிட்டுப் போய் வெளுத்து வாங்குங்க…

தமிழ்த்தம்பி : சாயா ப்ளீஸ்

சாயா : பிப்ரவரி மாசம் 30 ன்னா… கவனிப்பாங்க… வாங்கிக்க

தமிழ்த்தம்பி : பிப்ரவரி 28க்குள்ள கொடுத்துடறேன்.

சாயா : சாருங்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்க.

துரத்தியவர்களில் ஒருவன் : நீ பெரிய புள்ளியோட வீட்ல வேலை செய்யறவங்கிறதுக்காக நீ சொன்னதை மதிச்சு இவனை விட்டுட்டு போறோம் வாக்கு தவறினான்னா அவ்வளவு தான் மார்க்கெட்ல காந்தி சிலை பக்கத்துல இவனுக்கு சமாதி கட்டிடுவோம்..

(போகிறார்கள்)

சாயா : பரீச்சைக்கு படிக்க விடாம எனக்குன்னு வந்து சேர்றீங்களே..

(தமிழ்த்தம்பி திண்ணையில் அமர்கிறான்)

தமிழ்த்தம்பி : இடைஞ்சல் ஆயிடுச்சு இல்ல.. சாரி உன் கல்வி ஆர்வத்தை நான் பாராட்டறேன்…

சாயா : நீலச்சாயம் வெளுத்துப் போகும்ன்னு தெரியாம இருந்த நரி கதையா தான் இருக்குய்யா உன் கதை … அன்னிக்கே அந்த ஏட்டையா ஒன்னை ஒரு வழி பண்ணி இருந்தா நீ வியாபாரிங்க கிட்ட உன் வேசத்தை போட்டு இருப்பியா … அவர் பண்ண தப்பு.. திருந்தட்டும்னு அவர் தப்ப விட்டாரு நீ அடங்க மாட்டே போலிருக்கே…

தமிழ்த்தம்பி : இவ்வளவு பேசறியே உன் அறிவுக் கூர்மையைப் பாராட்டறேன்.

சாயா : பெரிய மனுசங்க பாராட்டினா பெருமையா சொல்லிக்கலாம்.. ஒன்ன மாதிரி ப்ராடு தர்ற பாராட்டு எனக்கு எதுக்கு ? ஏதோ உன் நல்ல நேரம் மேலும் மொத்தமா விட்டுப் போய்ட்டாங்க… அந்த பணத்தை திருப்பி தர்ற வழியைப் பாரு

தமிழ்த்தம்பி : நானும் பெரிய மனுசனா ஆக மாட்டேனா என்ன?

சாயா : அது சரி..

தமிழ்த்தம்பி : நாம ரெண்டு பேரும் ரெண்டு தடவை சந்திச்சுட்டோம் . உன் பொருளாதார கஷ்டம் தீரவும் என் பொருளாதார நெருக்கடி தீரவும் ஒரு புராஜெக்ட் இருக்கு நீ ஒத்துழைக்கிறியா?

சாயா : ரெண்டு தடவை பேசிட்டா பொண்ணு கிட்ட காதலிக்கறேன்னு சொல்ல வேண்டியது இல்ல ஏதாவது ப்ராடு பண்ண புரொஜெக்ட்ன்னு இழுத்து விட வேண்டியது … இதுதான் ஆம்பிளைங்க பொண்ணுங்களுக்கு விரிக்கிற வலை . இதுல தான் பொண்ணுங்க விழுந்து புதைகுழில விழுந்தா மாதிரி ஆயிடறாங்க…

(உள்ளிருந்து பெண் குரல் – யார்கிட்ட டி பேசிகிட்டு இருக்கே படிக்கறேன்னு சொல்லிட்டு..)

சாயா : ம்ஹூம் என் காதலன் வந்திருக்கான் சின்னம்மா .. எப்ப ஓடிப் போகலாம்னு பேசிகிட்டு இருக்கோம்

தமிழ்த்தம்பி : அவங்க தான் உன் அம்மாவா ? குடிக்க தண்ணி எதுவும் கொடுக்க மாட்டியா ? சரி முறைக்காதே புராஜெக்ட் என்ன்னு சொல்றேன் .

சாயா : படிப்பை கெடுத்துட்டே சொல்லு உன் ப்ராடு புராஜெக்ட் என்னன்னு..

தமிழ்த்தம்பி : என் ப்ரெண்டு மாணிக்கம் , ஒரு பெரிய புள்ளியோட பொண்ண லவ் பண்றான். பொண்ணு வீட்ல அப்பா அம்மா இருக்கிற பையனுக்குத் தான் கட்டிக் கொடுப்பாங்க போலிருக்கு… நீயும் நானும் அப்பா அம்மாவா வேசம் போட்டு நடிச்சு மாணிக்கம் கல்யாணத்தை நடத்திக் கொடுத்துடுவோம் .. மாணிக்கம் நம்மை நல்லா கவனிப்பான்…

சாயா : இதுக்கு பேரு புராஜெக்ட்… உன்னோடசேர்ந்து நானும் ஆக்ட் கொடுக்கணும்னு..

தமிழ்த்தம்பி : உன் கிட்ட கோரிக்கை வைக்கிறேன்

சாயா : உன்னோட பண நெருக்கடிக்காக… மாணிக்கம் , காதலிக்கிற பொண்ணு – நான் வேலை செய்யற பெரிய மனுஷரோட பேத்தி சங்கீதா தான். நான் அந்த வீட்ல வேலைக்காரி இல்ல குடும்பத்துல ஒருத்தர் மாதிரி .. சங்கீதாவோட காதலன பத்தி விசாரிக்க சொன்னாங்க …. மாணிக்கத்தை பத்தி நான் துப்பறிஞ்சு அவரைப் பத்தின தகவல் சொல்லிட்டேன். அவங்களும் சம்மதம் கொடுத்துட்டாங்க . அவர்தான் அப்பா அம்மா இல்லேங்கறதை மறைச்சுட்டாங்கறதையும் நான் சொல்லிட்டேன்.

தமிழ்த்தம்பி : நீ இவ்வளவு பெரிய கில்லாடி ஆளா இருப்பேன்னு நான் நெனக்கல…

சாயா : நான் உன் பணக் கஷ்டம் தீர ஒரு உதவி செய்ய முடியும்

தமிழ்த்தம்பி : என்ன சொல்லேன்..

சாயா : உன்னை பத்தி எங்க முதலாளி கிட்ட சொன்னா உன்னை எங்கே இருந்தாலும் தேடிப் பிடிச்சு உள்ளே வைக்கறா மாதிரி செஞ்சிடுவாரு . ஏட்டையா மாதிரி போகட்டும்னு விட மாட்டாரு.. அதனால உள்ளே போயிட்டா உனக்கு கஷ்டம் இருக்காது பாரு…

தமிழ்த்தம்பி : உன் சங்காத்தமே வேணாம் ஆளை விடு

(மேடையின் வலப் பக்கத்தை நோக்கி ஓடுகிறான் . சாயா ,பாடப் புத்தகத்தை கையில் எடுக்கிறாள்.)

(ஓதுவது ஒழியேல் – ஔவையார்)

(திரை)

(நிறைந்தது)

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *