சாந்தி பூமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2025
பார்வையிட்டோர்: 290 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் சமாதான தேவதை! 

அவளே ஊழிக்கால உருத்திர தேவி! அவன் பாட்டாளி !

சாந்தி சாகரத்தின், சாந்தி பூமியின் ஏகச்சக்ராதிபதி ! 

கதிரவன் பிரபஞ்ச யாத்திரைக்கு ஆயத்தமாகிறான் நீலக்கடலும் நெடிய வானும் தழுவி நிற்கின்றன. கீழ் வானத்தின் கடைக்கோடியில் செந்நிறம் பெற்ற மேகக் கீறல்களுக்கிடையில் தாராகணங்கள் மின்னுகின்றன. கடல் மடியில் வெண்ணுரை ‘பளீ’ ரிடச் சிரித்து விளை யாடுகிறாள் அலைமகள். தென்றல் ஒயிலாக நடை பயில் கிறாள். கடலில் வெகு தூரத்தில் மழை பெய்கிறது. 

கதிரவனைக், கார்மேகம் கவ்வி விழுங்க முயல்கிறது. “சிலு சிலு’ வென குலுக்கி நடக்கிறாள் தென்றல். 

”ஏ ! தென்றலே… எங்கே ஓடுகிறாய்… உனக்கேன் இத்தனை வேகம்… என்னோடு இரேன்… ஊஹும்… உன்னை விடமாட்டேன்” என்று துள்ளிக் குதித்துத் தென்றலைத் தழுவுகிறாள் அலைமகள்… 

“அடி, பைத்தியமே நமக்கெல்லாம் ஓய்வு ஏது… நமது உழைப்பில் தான் நாம் உருவம் பெறுகிறோம்… நீர் சலன மற்று இருந்தால் அதற்கு அலையென்ற பெயர் ஏற் படாதே… என்னை விடு நான் போகிறேன்…” என்று படபடப்போடு கூறிவிட்டு மீண்டும் தவழ்ந்து விரைகிறாள் தென்றல். 

பேய்நிழல் போல் புரண்டு, தன்னைக் கவ்வி விழுங்க வந்த கார்மேகத்தை, பல கூறுகளாகச் சிதைத்து, தனது ஒளிக்கரங்களை உயர்த்தி மேலெழுகிறான் கதிரவன். 

கடற்கரையை அடுத்த ஒரு தென்னந்தோப்பு. தென்ற லின் வருகையால் ஆனந்த ஆட்டம் போடுகின்றன தென்னை மரங்கள். தென்னந்தோப்பை அடுத்து ஒரு மலர்ச்சோலை அதனருகே ஒரு குன்று. 

சோலைக்குள், மல்லிகையும் சண்பகமும் தறிகெட்டு வளர்ந்து மண்டிக் கிடக்கின்றன சோலை நடுவே ஓர் அழகிய சிறிய தடாகம்… அதைச் சுற்றிலும் பன்னீர் மரங்கள் வெண்ணிற மலர்களை உதிர்க்கின்றன. மல்லிகை யின் இதழ்களில் பனி நீர் மின்னுகிறது. அடர்த்திமிக்க மாவிலைச்செரிவினூடே- சிகப்பும் பச்சையுமாய் ஒளி வீசும் கனியாக் கனிகள் தொங்குகின்றன. அணில்கள் ‘சலசல’த்து அங்கும் இங்கும் ஓடுகின்றன. ஓங்கி உயர்ந்த வேம்பின் வேர்ப்பாதத்தில் நட்சத்திரங்கள் உதிர்ந்து நிரவிக் கிடப்பது போல் வெண்மை. ‘கீ கீ’ என்ற கிளிகளின் பேரிரைச்சல். 

“அக்கூவ்… அக்கூவ்’ வென்று வெகு நேரமாய் கூவும் விடாய் தீராத குயிலினம். 

தென்றல் அந்த மோகனப் பூங்காவில் நுழைகிறாள். மலர்களும் தழைகளும் மழையாய்ப் பொழிந்து உஷை தேவிக்கு வரவு கூறுகின்றன. 

சோலை நடுவே ஒரு பளிங்குமேடை! அதன் மீது மூவர் உறங்குகின்றனர்- 

ஒரு தாய் இரு புதல்வர்கள். 

அவர்கள் மூவரையும் தென்றல் தன் அன்புக் கரங் களால் தழுவுகிறாள். அவர்களின் ஆடைகள் ‘படபட’க்கின்றன. 

அன்னை விழித்து, தன் புதல்வர்களை எழுப்புகிறாள் 

அவள் முகத்தில் எல்லையற்ற சாந்தியின் நிறைவு. எவ்வளவோ வயதானவள்தான் என்றாலும் இளமை குன்றாதவள்; மெருகு குலையாதவள். 

அவளுடைய சிகைதான் கார்மேகம்; அவளுடைய தோழன் கதிரவன்; அவளுடைய விளையாட்டுத் தோழி தென்றல். அவள் சிருஷ்டியின் மகாமேதத்வங்கள் தான் வானவெளியும் அதிற் சுழலும் கிரகங்களும், வானவில்லும் அதன் சோபையும், தென்றலும் சுகமும், பூமியும் அதில் அவள் சொரிந்த அழகும், நிலவும் முகிலும், மலையும் கடலும் யாவும் அவளுள் அடக்கம். 

அவள், பொறையின் உறைவிடம்! மென்மையின் உரு! கருணையின் வடிவம்! அன்பின் சிகரம்! ஆனந்தமே அவள் இலட்சியம். அவள் பிருகிருதி தேவி. 

அவள், விதி வசமாகவோ, அறியாத்தனமாகவோ ஒரு கொடியவனை மணந்தாள். அவனால் தென்றல் புயலாயிற்று. 

அவன், அக்கினியை மலையினுள் புகைத்து அழகை அழித்தான். கடலைக் கலக்கி நாசமூட்டினான். கார்மேகத் தின் அழகான மின்னலைக் கொடிதாக்கி, இடியென கோரக் களியோடு நகைத்தான். அன்னையின் சிருஷ்டி களைச் சிதைத்து. அழகை அழித்து எட்டு திக்கிலும் எக் காளமிட்டுச் சிரித்துத் திரிகிறான். 

அவனுக்கும் அவளுக்கும் தீராப்பகை. அவனிடம் அவள் இருபு தல்வர்களைப் பெற்றாள். அன்னையின் சாயையில் ஒருவன்… அந்தக் கொடியவனின் அவதாரமே போன்று மற்றொருவன். 

மூத்தவன் முரடன்- இளையவன் அவனுக்கு நேர் மாறானவன். அவர்களிருவரையும் வைத்துக்கொண்டு அன்னை, படாத பாடுகள் பட்டாள். 

கண் விழித்த அன்னை, புதல்வர்களை எழுப்பி அணைத்து முத்தமிடுகிறாள் 

அவள் தன் புதல்வர்கள் இருவரையும் ஒன்றாகத்தான். பாவித்தாள். ஆனால் அவர்கள் தன்மையில் வேறுபட்ட வர்கள் என்றும் அவளால் உணர முடிந்தது. 

அதோ முத்தவன், வருகிறான். அவன் கண்களில் என்ன குரூரம்! நெற்றியில் சுருள் சுருளாகக் கேசம் புரள் கிறது. அதனிடையே நெரித்த புருவ வளைவுகள். மேலேறி நோக்கி வெறியோடு விழிக்கும் விழிகள். உள்ளத்தே எதையோ நினைத்துக் கருவி, உதட்டைக கடிக்கிறான். முகம் சிவக்க இளையோனைப் பார்க்கிறான். அவன் இடையில் குரூரமான கட்டாரி; அது அவன் விளையாட்டுப் பொருள்! 

இளையவன், கைநிறைய மலர்க் கொத்துக்களைத் தாங்கி நிற்கிறான். கண்களில் கள்ளமற்ற குறுகுறுப்பு; அகன்ற நெற்றி, பால்வடியும் வதனம், பவள உதடுகள், அவன் தோள் மீது புறா ஒன்று உரிமையோடு வந்து அமர்ந்திருக்கிறது. அவனைச் சுற்றி முயல் குட்டிகள் துள்ளிக் குதித்தோடுகின்றன. மயிலொன்று அவனருகே அழகுற நடம் புரிறது. அவற்றுடன் அவன் விளையாடுகிறான். 

மூத்தவன் மரத்தடியில் கோபத்தால் சிவந்த விழிகளு டன் ஒரு பெரிய கழுகை அணைத்துக் கொண்டு உட்கார்ந் திருக்கிறான். அதுவும், அவனைப் போலவே, சமயம் பார்த்து ஏமாறும்பொழுது அந்த வெண்புறாவை. தன் கோர நகங்களுக்கிடையே நெரித்துக் கொன்று, தன் கூரிய அலகால் அதன் வயிற்றைக் கொத்திப் புசிக்க, கண்களில் கரை தத்திப் புரளும் ரத்த வெறியுடன் பார்க்கிறது. 

மூத்தவன் தன் கரத்திலிருக்கும் கட்டாரியால் மல்லிகைக் கொடியின் வேர்களைக் கல்லி எறிகிறான். பழுக்காத மாம்பிஞ்சுகளை கல்லெறிந்து வீணாக்கு கிறான், சண்பகத்தையும் மல்லிகையையும், மிதித்துத் துவைக்கிறான்… மண்ணை வாரி வீசிப் புழுதி கிளப்புகிறான். அவன் மேனி முழுதும் புழுதி படிந்து அலங்கோலமாக நிற்கிறான். 

இளையவன் சற்று தூரத்தில் குன்றின் அடிவாரத்தில் பாறையொன்றின் மேல் அமர்ந்து குழலில் மோகன கானம் பொழிந்து பரவசமடைகிறான். 

குழலிசை வரும் திக்கை நோக்கி வெறித்து விழிக் கிறான் மூத்தவன். பற்களை ‘நறநற’ 

பற்களை ‘நறநற’ வெனக் கடிக் கிறான். ஹும் என்று சீறி, தன் கையிலுள்ள கட்டாரி யால் வேப்ப மரத்தின்மீது ‘சதக்’கெனக்குத்தி இழுக்கிறான். 

“டேய்… மடையா!… என்ன சப்தம் செய்கிறாய்…” என்று இளையவனை நோக்கிக் கத்துகிறான். 

குழலிசை திடீரென நிற்கிறது. 

அவன் சத்தத்தைக் கேட்டுப் புறாவும் கிளியும் பயத்தால் உடல் நடுங்குகின்றன. 

“அண்ணா…உனக்கேன் இத்தனைக் கோபம்…? இதென்ன விளையாட்டு… அழகான மல்லிகைச்செடியைட் பாழ்செய்து விட்டாயே… மாங்காய் பழுத்தால் எல் லோரும் புசிக்கலாமே… பிஞ்சிலேயே உலுக்கிவிட்டாயே. உன் மேலெல்லாம் புழுதி நிறைந்திருக்கிறதே! அட அண்ணா. உனக்கே இது நன்றாக இருக்கிறதா…” என்று குழைவாகக் கூறுகிறான் இளையவன். 

“ஓ!… பெரிய மேதாவி… புத்தி சொல்ல வந்துட்டான்… மரியாதையாகக் கிட நாயே! இன்னொரு முறை புல்லாங்குழல் சத்தம் கேட்டதோ… அப்புறம் தெரியும் சேதி! நீயும் உன் புல்லாங்குழலும்…” 

”ஏன்? நான் புல்லாங்குழல் ஊதத்தான் ஊதுவேன்… உனக்கென்ன?” 

“ஹும் ஊது பார்ப்போம்!” 

“ஊதினால் என்ன செய்வாய்…?” 

“என்ன செய்வேனா… இதோ செய்கிறேன் பார்” என்று கட்டாரியை உயர்த்தியவாறு அவனை நோக்கிப் பாய்ந்தான் மூத்தவன். 

”ஐயோ! மகனே…” என்று தன் இளைய புதல்வனை ஒடி அணைத்துக் கொள்கிறாள் உணவு சேகரித்து வந்த அன்னை. அவள் கையிலிருந்த கனிவகைகள் பூமியில் சிதறிக்கிடந்தன. 

”பாவி… உனக்கேன் இந்தக் கொலைவெறி?” என்று நெஞ்சு பதறி கண்ணீர்க் வடிக்கிறாள் அன்னை. அவள் வெள்ளைத் துகில் கண்ணீரில் நனைகிறது. 

“உம்… உனக்கு அவன்மேல் தான் ஆசை! அவன் புல்லாங்குழல் ஊதி, பாம்பை வரவழைத்து என்மேல் கடிக்க விட இருக்கிறான். அதைக் கேட்கமாட்டாய்!” என்று சீறுகிறான் மூத்தவன். 

“சீ… வீண் குரோதம் வளர்க்காதே!… தம்பி நல்லவன்… அதை உணர்ந்து நட; வீணாய் வெறிபிடித்து ஏன் அலைகிறாய்? உங்களிடையே ஒற்றுமை நிலவினால் தான் என் இதயத்தில் சாந்தி நிலவும். என் இதய சாந்தி தான் உங்கள் மூச்சு. உன் கையில் எதற்கு அந்தக் கட்டாரி? பாபம் பிடித்த அக்கட்டாரியைத் தூக்கி ஏறி! அது இருக்கும் வரை யாரைக் கொல்லலாம் என்று தா ன் உன்மனம் வெறிபிடித்து அலையும்! அதைத்தூக்கி எறிந்து விட்டு உன் தம்பியிடம் அன்பு செய்து வாழடா!” என்று உளம் நெகிழக் கூறுகிறாள். 

“ஓ ஹோ… உங்கள் சூழ்ச்சியெல்லாம் எனக்குத் தெரியும். நீங்கள் இருவரும் சேர்ந்து என்னைக் கொன்று விடுவீர்கள்! தற்காப்புக்காக வைத்திருக்கும் என் கட்டாரியை எறிந்து விடச் சொல்லி, என்னைக் கொன்று விடச் சதி செய்கிறீர்கள்! அதுதானே என்னிடம் நடக்காது.” 

“முட்டாள்… உன் கொடுமைகளைச் சகித்துக்கொண் டிருப்பது உன் கையிலிருக்கும் கட்டாரியினால் அல்ல! நீயும் என் மகன் என்ற பாசத்தினாலும் அல்ல. குற்றங்களுக்குரிய தண்டனை பெறும் காலம் உனக்கு இன்னும் வரவில்லை. இயற்கையின் நியதி – சட்டம்- அது உன்னை நிர்ப்பந்தப் படுத்தும் காலம் வரும். அப்பொழுது அதன் முன் நீ பதில் சொல்ல வேண்டும் மகனே! அந்தச் சட்டத்தை மீறும் எவரும் அதன் கோர தண்டனையிலிருந்து தப்ப முடியாது.” 

“சூ… சும்மா பூச்சி காட்டாதே அம்மா! அதெல்லாம் யாருகிட்டே” என்று கேலி பேசியவாறு கீழே சிதறிக் கிடந்த பழங்களை யெல்லாம் புசிக்கவாரம்பித்தான். 

சூரியன் இப்பொழுது உச்சிக்கு வந்து விட்டான். அன்னை சேகரித்து வந்த உணவு அனைத்தையும் புசித்து விட்டு மரநிழலில் படுத்துறங்குகிறான் மூத்தவன். 

அன்னைக்குத் தன் மகனின் போக்கு மனதைக் குடைந்தது. பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந் தாள். அவள் எண்ணமெல்லாம் மரப்பொந்தில் மறைத்து வைத்திருந்த மைந்தனின் கட்டாரியில் பதிந்தது. அவள் நினைவு மரப் பொந்தில் கருநாகம் போல் குடிக் கொண்டது. 

இளையவன் காய் கனிகளைப் பறித்து வந்து தாய்க்குக் கொடுத்துத் தானும் புதித்தான். தன் அன்பு மைந்தனை மார்போடு அணைத்து நெஞ்சுவிம்மினாள்… மூத்தவனை எண்ணி, கண்ணீர் வடித்தாள். 

மரநிழலில் படுத்துறங்கிய மூத்தவன் கண்விழித்தான். அவனுடைய வல்லூறு பசியுடன் பக்கத்திலிருந்தது. 

மூத்தவன் பார்வை இளையவனருகே இரை பொறுக்கிக் கொண்டிருந்த புறாவின்மீது விழுந்தது… அந்தப் புறாவைக் கொன்று தன் கழுகுக்கு உணவாக்கினால் என்ன… என்று அவன் நினைத்தபொழுது, அவன் உள்ளம் அந்த வெண்புறாவின் செங்குருதியில் மூழ்கித் திளைக்க வெறிகொண்டது. 

இளையவனின் முன்னே சென்று துள்ளி நின்றான்…

“உன் புறா எனக்கு வேண்டும்…” 

“அம்மாடி… நான் மாட்டேன்… நீ அதைக் கொன்று விடுவாய்…” 

“ஹும்… புறாவைக் கொன்றால் உனக்கென்னடா… என் வல்லூறுக்கு அதிகப்பசி… கொடுக்கிறாயா… இல்லையா?” என்று சீறினான். 

“முடியாது…” 

“ஹும்… முடியாதா… இதோ”… 

ஆனந்தமாக இரை பொருக்கிக் கொண்டிருந்த அந்த வெண்புறாவை அவன் முரட்டுக்கரத்தால் நெறித்துப் பிடித்தான்… அதன் சிறகுகள் ‘படபட’த்தன… அதன் அழகிய செந்நிற விழி களில் மரணத்தின் பயங்கர சாயை படிந்தது… அதன் ஹிருதயத் துடிப்பு, கொஞ்சம் கொஞ்சமாகத் தளர வாரம் பித்தது. 

கழுகின் கண்களில் பிணப்பசி! நிண நாற்றத்தை மோப்பம் பிடிக்கத் தயாராகும் நாசி; புறாவின் வயிற்றைக் கொத்திக் கிழிக்க தீராத வெறி… அந்த ரத்தத்தில் விடாய் தீர வேட்கை. 

இளையவனின் பொறுமை எல்லை கடந்தது. மூத்தவனின் மீது பாய்ந்து அவன் பிடரியில் குத்தினான்… பதிலுக்கு இளையவனின் மோவாயில் ஒரு பலமான குத்து விழுந்தது… வாயில் ரத்தம் வழிய மலர்ந்து விழுந்தான் சிறியவன். 

இளையோனின் சுரங்கள் முறுக்கேறின… மீண்டும் மூத்தவன் மீது பாய்ந்து தாக்கினான்… 

மூத்தவன் மாமரத்தடிக்கு ஓடினான்… கட்டாரியை எடுக்க மரப்பொந்தினுள் கையை விட்டுத் துழாவினான். 

“அம்மா…” வென்ற அலறல்… அவன் கையிலிருந்த வெண்புறா சிறகடித்துப் பறந்தது… 

மூத்தவன் கீழே விழுந்து புரண்டு துடித்தான். மரப் பொந்திலிருந்து வெளிவந்த கருநாகம் படமெடுத்துச் சீறி நின்று ஆடியது. மறுகணம் அந்தக் கழுகு அதன் மீது பாய்ந்தது. 

அந்தக் கிழட்டுக் கழுகைக் கடித்துக்குதறிச் சின்னா பின்னாமாக்கிவிட்டு எங்கோ ஓடி மறைந்தது கருநாகம்! 

அன்னை எழுந்து வந்து இக்காட்சியைக் கண்டாள். 

அவள் முகத்தில் ஒரு சோகப் புன்னகை. “எனக்குத் தெரியும் அவன் முடிவு இதுதான்!” இளையோனின் கண்கள் கலங்கின. “மகனே! இயற்கையின் சட்டத்தை நமக்குச் சாதகமாக மாற்றுவதில் தவறில்லை; அது இயற்கை அன்னையை எழிற்படுத்துவதாகும். ஆனால் மனித குலத்தை அழிக்க, நாசம் புரிய விரும்பினால் அது தற்கொலை! இயற்கை அன்னை அதைச் சகிக்கமாட்டாள். ஜீவனெனும் பால்சுரந்த அவள் ஸ்தனங்களை அறுக்க முயன்றால். அவள் நெஞ்சத்துடிப்பின் அதிர்ச்சியிலே, அந்த வெம்மையிலே பொடி சூரணமாகி விடுவீர்கள்… 

“மகனே! அந்தப் பணியிலே, பாலூட்டிய ஸ்தனங்களை அறுத்து மாமிசம் சுவைக்கும் வெறிச்செயலில் ஈடுபட்டான் உன் தமையன். அதன் விளைவு அவன் முடிவு! இனிமேல் எனது லட்சியம் உன்னால் கைகூடும்” என்று கூறி, தன் அன்பு மகனை வாரி உச்சிமோந்து முத்தமிடுகிறாள். அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவளுடைய ஆனந்த வெள்ளத்தில் மெய் மறந்தான் இளையவன். 

கதிரவன் மலைவாயிலில் இறங்குகிறான். பறவைகள் ஆனந்தமாக, வல்லூறுகளின் அச்சுறுத்தலின்றி வான வீதியில் பறந்து செல்கின்றன. வானில் தாரகைகள் கண் சிமிட்டுகின்றன. கடலும்கூட, அமைதியாக இருந்து, பிறகு சந்தோஷ ஆரவாரம் செய்கிறது. 

ஆழியின் அலைகள் திரைத்து நெரித்து ஆனந்தப் பள்ளுப் பாடுகின்றன. அமைதியின் பூரணப்பொலிவுடன் கீழ்வானத்தில் வெண்மதி செந்நிறத்துடன் வட்டமாகத் திகழ்கிறது… எங்கும் பேரமைதி; சாகரத்தின் சாந்தி கீதம்! 

கடற்கரையில், மணல் மேட்டில் லோகமாதாவும் அவள் மைந்தனும் அமர்ந்திருக்கின்றனர் 

“தாயே அந்த நிலவின் நடுவில் அந்தக் கலவையின் சாயல், கருநிறக் களங்கம் இல்லாமலிருந்தால்…” 

”உன் எண்ணம் இயற்கைக்கு மாறானது… 

“மகனே நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சாந்தி நிலவ. நம்முடைய ரத்தம் பூமியில் பாய்ந்தோடத் தானே செய்கிறது… அது இறுதி சத்தியம்! நமது சக்தி யனைத்தையும் திரட்டி, ரத்தம் சிந்தி, போர் புரிந்து அந்தப் பேய்த்தகையை அழித்த பின்புதான் பரிபூர்ண சாந்தி நிலவும். 

“அந்தக் கறைதான் நாம் சாந்திக்காக – சமாதானத் துக்காகப் போராடியதைப் பிரபஞ்சமுள்ளளவும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கும்…” 

“இந்த அகில உலகமும் உனக்காக நான் படைத்ததுதானே! குளிர்ச்சிமிக்க இந்தச் சந்திரனைப் படைக்க உன் தந்தையோடு நான் எவ்வளவு போராடினேன்… எவ்வளவு ரத்தம் சிந்தினேன்… அந்த ரத்தக் கறைதான் அது! அதைச் சிருஷ்டிக்க நான் பட்ட சிரமங்களை அந்தக்கறை நினைவூட்டுகிறது அல்லவா?… அத் தத்துவங்கள் உனக்குப் புரியாது…. 

“லோக புதல்வா… நாம் இனிமேல் நிச்சலமாக வாழலாம். 

‘வாழ்க சாந்தி’ என்று கடலன்னை கீதமிசைப்பதைக் கேளடா…’ 

“வையம் சிறக்க, வாழ்வாங்கு வாழ தென்றல் நிம்மதியாக உலா வரும் கோலத்தைப் பார் மகனே! பார்… கண் குளிரப் பார்… இந்த அகிலவெல்லாம் உன்னுடையது… அமைதி பொலிய அண்டங்களில் மீதெல்லாம் ஆட்சி செலுத்தி அன்பு செய்து வாழ்வாயாக!” என்று ஆசி கூறுகின்றாள். 

அந்த மைந்தன் அவள் முன் வணங்கி நின்றான்… கடல் ஆரவாரிக்க நிலவு ஒளி மழை பெய்கிறது. 

அவள், கால அன்னை! சமாதான தேவதை! லோக மாதா… 

அவளே ஊழிக்கால உருத்திரதேவி! 

அவன், வளரும் சக்தி! அகிலத்தின் உயிர்நாடி…

பாட்டாளி! சாந்தி சாசுரத்தின், சாந்தி பூமியின், 

ஏகச்சக்ராதிபதி! 

– உதயம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1954, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *