சரசுவின் சௌந்தர்ய லஹரி
கதையாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2026
பார்வையிட்டோர்: 223
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 21-24 | அத்தியாயம் 25-27
19. தெம்மாங்கு – II

கூலவாணிபத் தெரு வழியாகவும், சில்லறைக் குடைகள் உள்ள நாளங்காடி வழியாகவும் வண்டி வந்தபோது அதைப் பின் தொடர்ந்தே வந்து கொண்டிருந்தான் புரவியில் வந்த வாலிபன்.
ஏராளமான புரவிகள் நடமாடும் இடத்தில் அவன் மட்டும் ஆச்சரியமாகக் காணப்பட்டான்.
சாதாரணமாக அவன் புரவியில் அங்காடி வழியாக வருவதில்லையாம், ஊரிலுள்ள பெரும் வணிகனாதலால் சில்லறை வணிகர்களெல்லாம் அவனைச் சிரம் தாழ்த்தி வணங்கினார்கள்.
அவனுக்கு கூலவாணிகமும் உண்டு. பிறவகையான இறக்குமதி வாணிபமும் உண்டு.
வெளி தேசங்களிலிருந்து விலையுயர்ந்த புரவிகனை வரவழைத்து விற்பனை செய்வதில் வல்லவன்.
ஆகவே அங்காடியில் எல்லோருமே அவனுக்கு மரியாதை செய்தார்கள்.
எல்லோராலும் மதிக்கப் பெறுகின்ற ஒருவன் தன்னையே பார்த்துக்கொண்டு வருவது தங்கத்துக்கு வியப்பாகவும் அதே நேரத்தில் உள்ளுக்குள் சந்தோஷமாகவும் இருந்தது.
சித்தி தெய்வநாயகியின் வீட்டருகே வண்டி வந்து நின்றபோது அந்த வீட்டை நன்றாகக் கவனித்துக் கொண்டு வாலிபன் போய்விட்டான்.
அப்போது வாசலில் நின்ற தெய்வநாயகி, அவனைப் பார்த்து மரியாதையோடு வணக்கம் தெரிவித்ததையும் தங்கம் கவனித்தாள்.
தங்கத்தை, எல்லோரும் வீட்டிலே செல்லமாக ‘தங்கம்’ என்றழைத்தாலும். சித்தி தெய்வநாயகி ‘மாணிக்கவல்லி’ என்றுதான் அழைப்பாள். அப்படியும் ஒரு பெயர் தங்கத்துக்கு உண்டு.
ஒவ்வொருவருக்கும் இரண்டு பெயர் வைப்பது அந் நாளைய வழக்கம். அதனை ‘இட்ட பெயர்’ என்றும், ‘அழைக்கும் பெயர்’ என்றும் உரைப்பார்கள்.
“அடி, மாணிக்கவல்லி! எனக்கு இடது கண் துடித்ததடி, காலையிலேயே காகம் கரைந்தது. அவரும் வாணிபத்துக்குப் போய்விடுகிறார், நான் தனியாகவே கிடக்கிறேனே. இந்த வீட்டில் நீங்கள் எல்லோருமே என்னோடு தங்கிவிடக் கூடாதா?” என்று ஆதங்கத்தோடு கேட்டாள் தெய்வநாயகி.
“தங்கலாம் என்று தான் வந்தோம். கிராமத்தில் சக்களத்தியின் கொண்டாட்டம் அதிகமாகி விட்டது. இத்தனை வயதாகியும் இவளுக்குத் திருமணமாகவில்லை. சக்களத்தி மகளுக்கு நாளை மறுநாள் திருமணம். ஊர் மக்கள் முகத்தில் விழிக்க முடியாமல் புறப்பட்டு வந்து விட்டோம்” என்றாள் அன்னபூாணி.
“ஆமாம். ஆமாம். இப்போது உங்கள் பின்னாலேயே புரவியில் வந்தானே, அரச நாராயணன், அவன் தான் மணமகன். நாளை இங்கிருந்து நூற்றுப்பத்து வண்டிகள் புறப்படுகின்றன. ஏறக்குறைய ஊரிலே பாதிப்பேர் போவார்கள் போலிருக்கிறது. எங்களையும் கூட வந்து அழைத்தார்கள். அக்கா! உன் சக்களத்தி வீட்டிக்கு நான் எப்படிப் போவது? அதையே சொல்லிவிட்டேன்” என்றாள் தெய்வநாயகி.
தங்கத்துக்கு உள்ளுறப் பயம் வந்து விட்டது. ‘அந்தப் பாவி நம்மையே பார்த்துக் கொண்டு வந்தானே. ஒரு வேளை பெண் வேட்டைக்காரனாக இருப்பானோ? பாவம் தங்கை’ என்று மனத்திற்குள்ளேயே எண்ணிக் கொண்டாள்.
“சரி, நேரமாகிவிட்டது. வழியெல்லாம் உங்களுக்கு என்ன கிடைத்திருக்கப் போகிறது?வழிப்போக்கர் சந்திரங்களிலெல்லாம் இறங்கி இரண்டு நாழிகைக்குப் பிறகுதான் சாப்பாடாகும். உங்களைப் பார்த்தாலே வாட்டமாகத் தெரிகிறது. நான் சமைக்கிறேன்” என்று என்று எழுந்தாள் தெய்வநாயகி.
‘”நான் சமைக்கிறேன்.” என்று இடுப்புச் சேலையை வரிந்து கட்டினாள் தங்கம்.
ஒரு பெண் பாத்திரம் கழுவ ஒரு பெண் காய்கறி நறுக்க எல்லோருக்கும் ஒரு புது நிம்மதியும் மகிழ்ச்சியுமே ஏற்பட்டது.
எப்படியோ திருமணத்தன்று அங்கிருந்து செத்துச் செத்துப் பிழைக்காமல், நல்ல நேரத்தில் தப்பி ஓடி வந்து விட்டது போலவே தோன்றிற்று.
”அந்த மங்கல வாத்தியங்களின் ஓசை மட்டும் தங்கத்தின் காதுகளில் விழுந்திருக்குமானால் அவள் மடிந்து போவாளே” என்று அன்னபூரணி கலங்கினாள்.
‘திருமணத்தன்று அங்கிருந்திருந்தால் தாய் இறந்து போவாளே’ என்று தங்கம் நினைத்தாள்.
கடலில் விழுந்தவர்கள் கரையேறி விட்டது போன்ற ஒரு நிம்மதி.
சோறு தளதளவென்று கொதித்துக் கொண்டிருந்தது. குழம்பு வெந்து கொண்டிருந்த சட்டி மேலே மூடியிருந்த மூடியைத் தூக்கித் தூக்கிப் போட்டது,
பேச்சும் பரபரப்புமாக வீடு கலகலவென்றிருந்தது.
அப்போது. வெளியே பறையறிவிக்கும் சப்தம் கேட்டது.
சின்னப் பெண் செவ்வல்லி வெளியே வந்து கேட்டாள். பறை அறிவிப்பவன் பின்வருமாறு சொன்னான், ”வணிகப் பெருமகனார் அரசநாராயணன் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை யாரும் புறப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொள்கிறார்”.
இவ்வளவுதான் அறிவிப்பு.
‘வேறொரு நாள் எது?’ என்பதை அறிவிப்பாளன் சொல்லவில்லை.
“அக்கா அக்கா! இங்கே வா வா” என்றழைத்தாள் செவ்வல்லி.
தங்கம், அன்னபூரணி, தெய்வநாயகி எல்லோருமே வெளியிலே வந்து அறிவிப்பைக் கேட்டார்கள்.
திரும்ப உள்ளே வரும்போது. தெய்வநாயகி சொன்னாள். ”அப்பனுக்குப் புத்தி இல்லாவிட்டாலும் தெய்வம் ஒன்று இல்லாமலா போகிறது?”
அன்னபூரணி கேட்டாள். “ஏன் திருமணம் நின்று போய்விட்டது?”
“என்னவோ தெரியவில்லை. அரச நாராயணவின் தாயார் எனக்கு மிகவும் வேண்டியவர்கள். அவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன்!” என்றாள் தெய்வநாயகி.
தங்கத்தைத் தவிர பாக்கி தங்கைகளெல்லாம் இதை ஒரு வெற்றி விழாவாகத்தான் கொண்டாடினார்கள்.
‘அக்காளை அழ வைத்த அப்பாவும், அவளும் அழுது சாகட்டும்’ என்று கறுவிக் கொண்டார்கள். அன்னபூரணிக்குக்கூட உள்ளுற அவளுடைய பண்பாட்டையும் கடந்து ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.
அன்றையச் சாப்பாடு, அவர்களுக்கே ஒரு கல்யாணச் சாப்பாடு போன்றிருந்தது.
அரச நாராயணனின் தாயாரைச் சந்திக்க மாலையில் தெய்வநாயகி அங்கே போவதாக இருந்தது. ஆனால் அதற்கு வேலையே இல்லாமல் அவர்கள் வீட்டு வாசலில் ஒரு அழகான ரதம் வந்து நின்றது. அந்த ரதத்திலிருந்து அரச நாராயணனின் அன்னையே இறங்கினார்.
பின்னால் வந்த வண்டிகளில் வெள்ளிப்பாத்திரங்கள், தட்டுகளில் பழவகைகள், பரிவர்த்தனைகள் வந்திறங்கின.
20. தெம்மாங்கு – III
அவர்கள் வந்து இறங்குவதைப் பார்த்து, வாசலில் ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது;
தெய்வநாயகி திகைத்துப் போய் வாசலுக்கு வந்தே அரச நாராயணனின் அன்னையை வரவேற்றாள். “அடடா! நானல்லவா அங்கே வருவதாக இருந்தேன். இந்தத் தள்ளாத காலத்தில் தங்களுக்கு ஏன் தொல்லை” என்று கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச் சென்றாள்.
வந்திருக்கும் சீர் வரிசைகளைப் பார்த்து அன்னபூரணி திகைத்தாள், தங்கமோ ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
ஏதோ ஒரு அடையாளத்தைக் கொண்டு யாரோ ஒரு பெண்ணைத் தேடுவது போல் ஓடிய அந்த அம்மையார். கடைசியில் தங்கத்தைப் பார்த்து, “வண்டி வரும்போது பின்னால் உட்கார்த்திருந்தது நீதானா?” என்று கேட்டார்.
நாணத்தோடு, “ஆமாம்” என்றாள் தங்கம்.
”பையன் பெண்ணைப் பார்க்கும் போது கழுத்தையும் நன்றாகக் கவனித்திருக்கிறான்! அடி, தெய்வநாயகி, அவர்கள் உனக்கு எப்படி முறை?” என்று கேட்டார் அரச நாராயணனின் தாயார். அவர் பெயர் மங்கையர்க்கரசி.
தன் உடன் பிறந்த அக்காள் என்பதைத் தெளிவு படுத்தினாள், தெய்வநாயகி.
“என் மகன் இந்தப் பெண்ணைப் பார்த்ததிலிருந்து தான் திருமணத்தையே நிறுத்தச் சொல்லிவிட்டான். மணத்தால் இவளைத்தான் மணப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறான். எங்களுக்கு இருக்கிற சொத்து சுகம் உனக்குத் தெரியும். இதில் அது இது என்று விளக்கங்கள் சொல்லிக் கொண்டிராமல் உடனடியாக அவர்கள் ஒப்புதல் தரவேண்டும். நாளை மறு நாள் அதே முகர்த்த நேரத்தில். இங்கேயே திருமணத்தை நடத்திவிடுவோம். அவர்கள் ஒன்றும் சீர்வரிசைகள் செய்ய வேண்டியதில்லை. எல்லாம் எங்கள் பொறுப்பு” என்றார், மங்கையர்க்கரசி.
தெய்வநாயகி குறுக்கிட்டாள்.
“பெருமாட்டி! என்னை மன்னிக்க வேண்டும். தங்கள் மகனுக்குத் திருமணம் செய்வதாக இருந்தது, என் அக்காளது சக்களத்தியின் மகள்தான். மூத்தவள் இருக்க இளையவளுக்குத் திருமணம் நடக்கிறதே என்ற கவலையில் தான் அவர்கள் இங்கே புறப்பட்டு வந்தார்கள். வரும் போது இந்த ஊர்தான் மணமகனின் சொத்த ஊர் என்பது தெரியாது. அந்த திருமணத்தை நிறுத்திவிட்டு, எங்கள் குழந்தையைக் கொடுப்பது எப்படி?” என்று கேட்டாள், தெய்வநாயகி.
அதையே கேட்க நினைத்தவள் போல் தலையாட்டினாள் அன்னபூரணி.
விஷயம் இப்படி என்றறிந்ததும் வேறு பக்கம் போய் மறைந்து கொண்டாள், தங்கம்.
“இதில் சம்பிரதாயங்களுக்கென்ன வேலை? நியே சொல்லுகிறாய் மூத்தாளிருக்க இளையாளுக்குத் திருமணமாக இருந்ததென்று! இப்போது நியாயம் அரங்கேறப் போகிறது. அவ்வளவு தானே?” என்றார், மங்கையர்க்கரசி.
தெய்வநாயகி கைகளைப் பிசைத்தாள். ஆசை ஒருபுறம், அச்சம், ஒருபுறமாக அவள் தவித்தாள்.
‘கணவனோடு இன்னும் ஜென்மப் பகை வந்து சேருமே?’ என்று கலங்கினாள், அன்னபூரணி.
ஆனால் எல்லோருக்குமே கோடிக்கதிபதி வீட்டில் பெண் கேட்கிறார்களே என்ற பெருமிதம் இருந்தது.
கடைசியில் தெய்வதாயகிக்கு ஒரு துணிச்சல் வந்தது.
‘நம் அக்காளை இவ்வளவு அவமானப் படுத்தியவர்களுக்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? தங்கம் ஓர் அந்தஸ்தில் போய் அமர்ந்துகொண்டால், எல்லோரும் போய் அவள் கால்களில் சரணடைய மாட்டார்களா?’ இப்படி ஒரு வஞ்சகமும் எழுந்தது.
அக்காளை தனியே அழைத்துக் கொண்டு பேசி பேசிக் கரைத்தாள்.
தங்கையின் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்ல முடியாதவளாக, அக்காள் ஆனாள்.
சம்மதத்தைத் தெரிவித்து விட்டாள், தெய்வநாயகி.
தங்கத்துக்கோ மகிழ்ச்சியைவிடப் பயமே அதிகமாக இருந்தது? அப்பாவுக்கும் ஆத்தாளுக்கும் இடையே என்ன ஆகுமோ என்பதே கவலையாக இருந்தது.
அவளையும் தேற்றினாள், தெய்வநாயகி.
ஐநூறு வராகன் பெறக்கூடிய வெள்ளிப் பாத்திரங்களை அங்கே வைத்துவிட்டு, மருமகளுக்குக் குங்குமச் சாந்து அணிவித்துவிட்டுப் புறப்பட்டாள் மங்கையர்க்கரசி.
மறுநாள் நகரமெங்கும் பறையறிவிப்பு: மூன்றாவது நாள் திருமணம். பளிங்கு மேடையில் மாக்கோலமிட்டு எண்பது வகை மலர்களாலே அதை அலங்கரித்து, மணமக்களை அமர்த்தினார்கள்.
அந்த நீலப் பட்டாடையில் ‘தங்கம்’ என்ற மாணிக்கவல்லி ஜொலித்தாள்.
ஆனால் திருமணம் நின்று போய்விட்ட செய்தி கிடைத்ததும் ஊரிலே தலை காட்ட முடியாமல் மறுநாளே மனைவியை அழைத்துக் கொண்டு புறப்பட்ட தங்கத்தின் தந்தை, சரியாக மாங்கல்யம் சூட்டும் நேரத்தில் பந்தலுக்குள் நுழைந்தார்.
அங்கே ஒரு திருமணம் நடப்பதையும், அமர்ந்திருப்பது தன் மகளே என்பதையும் கண்ட அவர் ஒன்றும் புரியாமல் திகைத்தார்.
கூட்டத்தோடு கூட்டமாக நின்ற அவரையும் அவரது இளையாளையும் யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
தங்கத்தின் அலங்காரத்தையும் அன்னபூரணியின் ஆனந்தத்தையும் கண்டு கொதித்தாள் மகேஸ்வரி.
ஆந்திரம் தாங்க முடியாமல் பார்த்திபனார் மணவறையை தோக்கி விரைந்தார். “தங்கம்! எழுத்திரு!” என்று கத்தினார்.
திடீரென்று தந்தையைக் கண்ட தங்கம். நெருப்பை மிதித்தவள் போலானாள். “அப்பா!” என்றாள். அன்னபூரணி நடுங்கினாள்.
அப்பொழுதே புரிந்து விட்டது. அரச நாராயணனுக்கு.
ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தார் பார்த்திபனார்.
சபை, சலசலத்தது.
ஒன்று என்றால் பத்துப் பேசும் கிராமமாயிற்றே!
எழுந்து நின்ற ஊர் மக்கள் ஒவ்வொரு முலையிலும் ஒவ்வொன்றைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“பஞ்சாயத்தைக் கூட்டுவேன்” என்று கத்தினார், பார்த்திபனார்.
அன்னபூரணி மூர்ச்சையுற்று விழுந்தாள்.
என்ன செய்வது? மாங்கல்யம் சூட்டப்பட்டு விட்டது.
செல்வாக்குப் படைத்த அரச நாராயணன் அவரைக் கொன்றிருப்பான். ஆனால் ஊர் மக்கள் மத்தியில் காரியம் நடந்துவிட்டதனால், செயலற்றவனானான்.
தகப்பனுக்குத் தெரியாமல் மகளைக் கூட்டி வந்த குற்றம் பற்றி விசாரிக்க பஞ்சாயத்து அன்றிரவே கூடிற்று.
பஞ்சாயத்தார் முன்னிலையில் சாட்சி சொல்ல வேண்டியவள் அன்னபூரணி.
தன்னைக் கணவன் ஒதுக்கி வைத்ததையும், தான் பிரிந்து வாழ்வதையும், தன் மகள் வயது வந்தவள் என்பதையும் அவள் வாயால் சொல்லி சொல்லி விட்டால், பார்த்திபனார் தலை குனிந்து போக வேண்டியிருக்கும்.
பஞ்சாயத்துச் சவுக்கையின் முன்னால் அன்னபூரணி எப்படித் தோன்றுவாள்? கணவனே தெய்வம் என்று வாழ்ந்த கண்ணகி ஆயிற்றே அவள்.
மகள் தங்கத்தை அழைத்தாள், “ஆத்தா! சபையின் முன்னால் நான் வரக்கூடாது. சபையின் முன்னால் நீயே சென்று, நீ வயது வந்தவள் என்பதையும், உன் இஷ்டப்படி ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் கொள்ள உரிமை உண்டு என்பதையும் சொல்லிவிட்டால் உன் வாழ்வும், என் மானமும் காப்பாற்றப்பட்டு விடும். நீ என் மகளல்ல; என் தாய். இந்த நேரத்தில் எனக்கிந்த உதவியைச் செய்ய மாட்டாயா?” என்று கெஞ்சினாள்.
தாயின் கண்ணீரைக் கண்ட மகள் தைரியம்மிக்கவளானாள். தெய்வநாயகியும் துணிச்சலை ஊட்டினாள்.
துணிந்து சபைக்குச் சென்றாள் தங்கம்.
சபையின் முன்பு எண்ணெய் விளக்குகள் நூற்றுக் கணக்கில் எரிந்து கொண்டிருந்தன. பெரும் கூட்டம் கூடியிருந்தது.
“உன் தாய் வரவில்லையா?”
“ஏன், நான் வந்தால் போதாதா?”
“இவர் உன் தந்தைதானே?”
“சிறு வயதில் பார்த்திருக்கிறேன்!”
”தந்தைக்குத் தெரியாமல் ஓடிவந்ததேன்?”
“எனக்கு வயது இருபத்தியாறு!” – சபையில் முணு முணுப்பு, பரபரப்பு.
“வயதாகி விட்டால் ஓடி வரலாமோ?”
“தந்தை மகளைப் பற்றிச் சிந்திக்காமலும் இருக்கலாமோ?”
மீண்டும் சபை முணு முணுப்பு.
பழக்கத்துக்கும், அவளது பண்பாட்டுக்கும் விரோதமாக தங்கம் சரமாரியாகப் பொழிந்து தள்ளிவிட்டாள்.
“திருமணம் தவறில்லை” என்று தீர்ப்பாகி விட்டது.
பார்த்திபனார் கொதித்தார். எங்கே அன்னபூரணி என்று ஓடினார். தெய்வதாயகியின் வீடு அவருக்கு தெரியும்; அங்கே அவர் ஓடினார்.
அங்கே மரண தருவாயில் இருந்தாள் அன்னபூரணி.
அவளைக் கடுமையாகப் பேசுவதற்கு வந்த பார்த்தியனார் வாயடைத்துப் போனார். ஆனால், அந்த கல்மனத்தவரின் கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வெளி வரவில்லை.
“சாகட்டும்” என்று சொல்லிவிட்டு அவர் வெளியேறும்போது “ஆத்தா!” என்று ஓடி வந்து தங்கம் அவள் மீது விழுந்தாள்.
அவள் தலையைத் தொட்டு ஆசிர்வதித்த அன்னபூரணியின் ஆவி பிரிந்தது.
இறுதிக் காரியங்களுக்குப் பார்த்திபனும் இல்லை. அவனது துணையாளுமில்லை.
ஆனால் ராஜமரியாதையோடு அந்தச் சடலத்தை அடக்கம் செய்தான், அரச நாராயணன்.
அப்பாவிப் பிள்ளையாக வளர்ந்துவிட்ட அன்னபூரணியின் ஒரே மகன் கொள்ளி வைத்தான்.
தாயைப் பிரித்த பெண்ணையும், பையனையும் தன்னுடனேயே வைத்துக் கொண்டான் அரச நாராயணன்.
பிறகு தங்கம் என்ற மாணிக்க வல்லியின் மன நிம்மதிக்காக, இரட்டைக் குதிரைகள் பூட்டிய எட்டு ரதங்களில் பொருள்களையும் வேலையாட்களையும், தங்கத்தையும், அவளது சகோதரிகளையும் ஏற்றிக்கொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.
ராயகவுண்டன் பட்டியில் அவனுக்கிருந்த அளவு செல்வாக்கு, பன்னாரி மேட்டுப்பட்டியில் பார்த்திபனாருக்கும் இருந்தது.
இவர்களது நடவடிக்கைகளைக் கவனிக்க, கையாட்களையே அவர் அங்கே நியமித்திருந்தார்.
அவர்களும், அரச நாராயணனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்தார்கள்.
பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்ற பிறகு, வடுகர் நாட்டில் அவர்கள் சாரதாம்பாள் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.
21. பாகேஸ்வரி
வடுகர் நாட்டில் இந்து சமயம் தழைத்தோங்கிய காலம் அது. சேர, சோழ, பாண்டிய நாடுகளில் பௌத்தமும், ஜைனமும் இந்து மதத்துக்கு இணையாக இணையாக வளர்ந்திருந்த நேரத்தில், வடுகர் நாட்டில் மட்டும் இந்து மதமே மேலோங்கி நின்றது.
காஞ்சி காமகோடி பீடத்தின் முயற்சியால் தமிழகத்தில் இந்து மதம் வளர்ந்தது போல, சிருங்கேரி சாரதா பீடத்தின் முயற்சியால் வடுகர் நாட்டிலும் இந்து மதம் வளர்ந்தது.
அரச நாராயணனும், தங்கமும் குடும்பத்தினரும், நேரே சாரதா பீடத்திற்குச் சென்றனர்.
நன்கு குளித்து முழுகி பரிசுத்தமாக வந்திருந்த அவர்களுக்கு, சுவாமிஜி காட்சி தந்தார்.
சங்கரமடத்து அதிபதிகளில் யாரும் அதிகமான வாக்குகள் கொடுப்பதில்லை, வலது கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்வார்கள் அவ்வளவுதான்.
ஸ்ரீ ஆசாரிய சுவாமிகள் அவர்களை ஆசிர்வதித்தார். தங்கம் கீழே விழுந்து வணங்கியபோது, அவள் கழுத்தில் தொங்கிய மாங்கல்யம் தரையைத் தொட்டது.
ஆச்சாரிய சுவாமிகள் ஏனோ அரச நாராயணனை அனுதாபத்தோடு கவனித்தார்.
ஒரு வெற்றிலையில் கொஞ்சம் குங்குமமும், தங்கத்தாலான சாரதாம்பாள் முத்திரைக் காசும் அவர் அவர்களுக்குக் கொடுத்தார்.
பக்தியோடு அவர்கள் நேரே சாரதாம்பாள் கோவிலுக்குச் சென்றார்கள். கோவிலைப் பிரகாரம் வந்து கொண்டிருக்கும் போதுதான், “முத்திரைக் காசை எங்கே வைத்தாய்?” என்று தங்கத்தைக் கேட்டான் அரச நாராயணன்.
அவள் மடியிலும், மார்புக் கச்சிலும் தேடிப்பார்த்தாள்; காசைக் காணவில்லை. அவளுக்கும் அதை எங்கே போட்டோம் என்று தெரியவில்லை.
“ஐயோ, அது இருந்தால் சாரதாம்பாளின் முன்னிலையில் அதை மாங்கல்யத்தில் சேர்த்துப் போட்டுக்கொள்ளலாமே?” என்றாள் அரச நாராயணன்.
அந்த நேரத்தில் பார்த்திபனார் அனுப்பிய ஆட்கள், வடுக தேசத்து ஆட்களைப் போலி மாறுவேடமணிந்துக் கோவிலுக்குள் பிரகாரம் வந்து கொண்டிருந்தார்கள்.
சாரதாம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டபோது, எதிரெதிரே இரண்டு வரிசையாக அவர்கள் நின்றார்கள். ஒரு வரிசையில் அரச நாராயணனும், தங்கமும், அவளது சகோதரியும், சகோதரனும் நின்றார்கள்.
தீபாராதனை வெளிச்சத்தைத் தவிர, வேறு எத்த லெளிச்சமும் மூலஸ்தானத்தில் இல்லை.
திடீரென்று பார்த்திபனாரின் ஆட்களில் ஒருவன் இடுப்பில் இருந்த கத்தியை உருவி அரச நாராயணனின் அடிவயிற்றில் ஓங்கிக் குத்தினான்.
“ஐயோ! தங்கம்” என்று அலறினான் அரச நாராயணன். கூட்டம் பயந்து கலைந்து ஓடிற்று.
“ஐயோ சாரதாம்பாள்” என்று அலறியபடி கணவனைத் தாங்கிக் கொண்டாள் தங்கம்.
”அக்கா! அக்கா” என்று சகோதரியும், சகோதரனும் கதறினார்கள்.
கோவிலிலிருந்து யார் கைக்கும் பிடிபடாமல், கொலைகாரர்கள் தப்பிவிட்டார்கள்.
கோயிலுக்குள்ளேயே இருந்த சித்த மருத்துவர். உடனடியாக அவனுக்குச் சிகிச்சையளித்து, பச்சிலை வைத்துக் கட்டி ரத்தம் வராமல் நிறுத்தினார்.
அதோடு அதிர்ச்சியும் ஆனந்தமும் அளிக்க ஒரு செய்தியையும் சொன்னார்.
“நிச்சயமாக உயிருக்கு ஆபத்தில்லை” என்று சொன்னது அவளுக்கு ஆனந்தத்தையளித்தது. ‘ஆனாலும் இனி அவர் ஓர் ஆண் மகனாக இயங்கமுடியாது’ என்று அவர் கூறியது அவளுக்கு லேசான கவலையைத் தந்தது.
ஆண்மை என்ற இயக்கம் இல்லாவிடினும் கணவன் உயிரோடிருப்பார் என்பதிலேயே அவள் பெரிதும் மகிழ்ச்சி யுற்றாள்.
தீர்த்தயாத்திரையை முடித்துக்கொண்டு, கணவனோடு ஊர் திரும்புவது என்று தங்கம் முடிவு கட்டினாள்.
வழிநெடுக மாற்றிக் கட்டுவதற்கு, மருத்துவர் நிறைய மூலிகைகளைக் கொடுத்தார்.
வழியில் மீண்டும். கொலைகாரர்கள் வந்துமிடக் கூடாதே என்று பயந்து தங்களுடன் இருந்தவர்களோடு மேலும் பத்துக் கிராமவாசிகளை வடுகர் நாட்டிலிருந்து அழைத்துக் கொண்டு கணவனோடு தங்கம் ஊருக்குப் புறப்பட்டாள்.
ரதத்தில் தன்மடியிலேயே அவனைச் சாத்திக் கொண்டு, குழந்தை போய் அவனைக் கொஞ்சினாள்.
“எனக்கு வந்த கோபத்தில் சாரதாவின் சிலையையே நான் உடைத்திருப்பேன்?” என்றான் அரச நாராயணன்.
“ஐயோ, அப்படிச் சொல்லாதீர்கள்! அம்பிகை எப்போதும் தலைமாட்டில் நிற்பவள், நம்முடைய தலையெழுத்து இப்படி இருக்கும்போது அவள் என்ன செய்வாள்?” என்றாள், தங்கம்.
வைத்தியர் சொன்னது போல, ராயகவுண்டன்பட்டி வருகின்றவரை அரசநாராயணனுக்கு எந்தவித ஆபத்தும் நேரவில்லை.
ஊரில் வந்து அவர்கள் இறங்கியதும், தங்கள் எஜமானனைப் பார்த்துப் பதறிப்போன ஊழியர்கள் எடுத்துக்கொண்ட முதற்சபதம் ‘பார்த்திபனார் குடும்பத்தைக் கருவறுப்பது’ என்பதே. அரசநாராயணனும் அதைத் தடுக்கவில்லை.
ஆனால் தந்தைக்கு எதும் தேர்த்துவிடக்கூடாதே என்பதில் தங்கம் கொஞ்சம் அக்கறை உள்ளவளாக இருந்தாள்.
“உன் தந்தை என்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம். என்னுடைய ஆட்கள் அவரை மட்டும் கொல்லத் கூடாதோ…?” என்று ஆத்திரமாகவே கேட்டுவிட்டான் அரசநாராயணன்.
“ஐயோ சாரதாம்பாள் மீது ஆணை! நீங்கள்தான் எனக்கு முக்கியம். ஏதோ ரத்தம் பேசி விட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள்!” என்று அவன் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள், தங்கம்.
அரசநாராயணனின் ஆட்கள் வைத்த குறி தப்ப வில்லை. சரியாகப் பனிரண்டாவது நாள், பார்த்திபனாருடைய சடலம், தங்கம் தண்ணீரெடுக்கும் ஏரிக்கரையில் கிடந்தது. அவருடைய தலை மட்டும் ஒரு ‘பாலா’ விலே சொருகப்பட்டு, மாமரத்தடியில் ஊன்றப்பட்டிருந்தது.
தந்தை இறந்ததற்கு தங்கம் உள்ளுக்குள்ளேயேதான் அழவேண்டியிருந்தது. அதைக் கூட அரசநாராயணனுக்குத் தெரியாமல்தான் செய்யவேண்டி இருந்தது.
ஆனால் அவளுடைய தங்கை, தம்பிகள் இரண்டும் சொட்டுக் கண்ணீரோடு துக்கத்தை முடித்துக் கொண்டார்கள்.
கோலாகலமாகத் திருமணம் நடந்த வேண்டிய மகேஸ்வரி. குமுறியழுது வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டாள்.
மகேஸ்வரியின் தம்பி வஞ்சம் தீர்க்க முனைந்தான்.
“என் உயிர் போனாலும் கவலை இல்லை” என்று சபதமெடுத்து, ஐம்பது ஆட்களோடு மாறுவேஷத்தில் ராயக்கவுண்டன் பட்டிக்கு வந்தான்.
இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று எதிர்பார்த்து அரசநாராயணனுடைய மாளிகைக்கு அவனுடைய ஆட்கள் பெரும் காவல் போட்டிருந்தார்கள்.
அன்று இரவு அரசநாராயணனோடு சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தாள் தங்கம், படையெடுப்பு நடத்துவது போல், ஐம்பது பேர் வாளும் கையுமாக வந்து, காவலர்களைக் கொன்று குவித்துவிட்டு உள்ளே நுழைந்தார்கள்.
அரச நாராயணனைக் கட்டிப்போட்டுவிட்டு, மகேஸ்வரியின் சகோதரன் சித்திரன் அவன் கண்ணெதிரே தங்கத்தை நிர்வாணமாக்கிக் கற்பழித்தான்.
தங்கத்தின் கால்களையும் கைகளையும் தோழர்கள் பிடித்துக்கொள்ள சித்திரன் கற்பழித்து முடித்துவிட்டு கத்தியால் குத்தினான்.
அவளுக்கு அவ்வளவுதான் ஞாபகமிருந்தது.
இப்போது கோபிசெட்டிப்பாளையத்துப் பன்னாரி மேட்டுப்பட்டி ஏரிக்கரையில் நின்ற சரசு வீல் என்று கத்தினாள்.
பக்கத்தில் நெருங்கிய கணவனைப் பார்த்து, “சீ! போ என்னை நெருங்காதே!” என்று ஆத்திரமாகப் பேசினாள்.
காரில் ஏறும்போது அவன் பக்கத்தில் உட்காரக் கூடாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டாள். மாமியாருக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது.
”ஏன்? என்ன விஷயம்?” என்று. கெஞ்சும் பாவனையில் மருமகளைக் கேட்டாள்.
”அதை நான் சொல்ல மாட்டேன். போன ஜென்மத்தில் நான் மரணமடைந்ததற்கு அவர்தான் காரணம், இனி, அவரை என் கணவராக ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!” என்றாள் சரசு.
“என்ன இது பிரமை! வெறும் அர்த்தமில்லாத பேச்சு? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதால், எல்லோருக்கும் பிடிக்கவேண்டுமா? போன ஜென்மம், இந்த ஜென்மம், வெறும் பினாத்தல்!” என்று முதன் முறையாகக் கடிந்து கொண்டார் மாமியார்.
“உங்களுக்கு எப்படித் தெரியும் என் கதை? எனக்குத் தெரியும்! அவர் இனி என்னை தொடவே முடியாது! போன ஜென்மத்தில் செய்த பாவத்திற்குத்தான் இவருக்கு இந்த வியாதி வந்திருக்கிறது! நன்றாக அனுபவிக்கட்டும். எனக்கு எங்கோ போக வேண்டும் போல் தோன்றுகிறது! நான் போகிறேன்!” என்று வெளியே ஓடினாள் சரசு.
அவளைத் தடுக்கப்போன தன் தாயாரைத் தடுத்து நிறுத்தினான் சிங்காரவேலன்.
தலைவிரிகோலமாக ஓடிய சரசு, ஒரு பஸ்ஸிலே ஏறிக் கொண்டான், நேரே தனது கிராமத்துக்குப் புறப்பட்டாள்.
கிராமத்தில் அவளை எதிர்பார்க்காத தாயார், “என்ன அம்மா, கணவன் துணையில்லாமல் தனியாக வருகிறாய்?” என்று கேட்டாள்.
“கணவனா அவன்? பேய், காமுகன், சண்டாளன். நீ எதையும் என்னிடம் கேட்காதே! பாமா எங்கே?” என்று கேட்டாள்.
”அவள் கணவனோடு கொடைக்கானலுக்குப் போயிருக்கிறாள். எப்பொழுது பார்த்தாலும் அவளுக்குக் கொடைக்கானல் தான்?” என்றார் தாயார்.
கோடைக்கானல் என்ற வார்த்தையைக் கேட்டதும், திடீரென்று சரசுவுக்கு நெற்றி வியர்த்தது. தன் போன ஜென்மக் கணவன் அரச நாராயணன் அங்கே இருப்பது போல அவளுக்குத் தோன்றிற்று.
– தொடரும்…
– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 9, 2026
அம்மாவின் பிறந்த நாள்
ரா.நீலமேகம்
October 9, 2026
கருப்பசாமி தர்மத்தின் சலங்கை
எஸ்.ஜி.மணிகண்டன்
October 9, 2026