உறவுகளின் அருமை

”வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன், வள்ளிக் கணவன் பேரைச் சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்..”. என்ற இனிமையானப் பாடலுடன் வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. பாட்டை ரசித்து கேட்டுக் கொண்டே படுத்திருந்தேன். பழைய பக்தி பாடல்களும், அதற்குண்டான பின்னணி இசையும் அடடா, அடடா, அருமை, அருமை. இதனை ரசிப்பதற்கு ஒரு தனி ஞானம் வேண்டும் என்று சுகமாக, இலவம் பஞ்சு மெத்தையில், தலையின் கீழ் இரண்டு கைகளையும் கோர்த்து வைத்து படுத்துக்கொண்டு, விட்டத்தைப் பார்த்தபடி ஒரு கால் மேல், மற்றொரு காலைப் போட்டு ஆட்டிக்கொண்டே, பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
“ஏங்க இன்னும் எழுந்திருக்கலையா..? “ என்ற அவளின் வழக்கமான காலைப் பாடலைப் பாடினாள் என் மனைவி.
“எழுந்திட்டேன் ரேகா, இதோ குளிக்க கிளம்பிட்டேன்” என்றேன் படுத்துக் கொண்டு காலை ஆட்டியபடியே…
அவள் சமையலறையில் இருந்தபடியே, ” சீக்கிரம் வாங்க. டிகாஷன் போட்டு அரை மணி ஆகுது., ஆறிடும்”.! காலைல சூடான பால்ல, சூடான டிகாஷன் போட்டு காபி குடிச்சா தான் மற்ற வேலைகள் சுறுசுறுப்பா போகும்” என்றாள்.
அவளுக்காக எழுந்தேன். என் காலடிச் சத்தம் அவளுக்குக் கேட்காதிருக்க வேண்டி நைசாக குளியலறைக்குள் சென்றேன். தலைக் குளித்து, முடித்து வெளியே வந்து… “என்ன ரேகா ஹீட்டர் வேலை செய்யலையே?” என்றேன்.
அப்படியா? “நான் குளிக்கும் போது சூடா ஆவி பறக்க வந்ததே… ஏங்க? ஹீட்டர் ஸ்விட்சை ஆன் பண்ணீங்களா?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள்
“காலையில எங்க கவனம் ? அப்படி என்ன மறதி ?” .
அப்போது தான் கவனித்தேன், ஸ்விட்ச் ஆன் செய்யல..!… அதை அவளும் பார்த்து விட்டாள். என் காலடி சத்தம் ரேகாவுக்கு கேட்க கூடாது என்று கவனமாகச் சென்றதில் ஹீட்டர் ஸ்விட்சை ஆன் செய்ய மறந்துட்டேன் போல.
எதுவும் கூறாமல் தலையை டவலால் துவட்டிக்கொண்டே நகர்ந்தேன். மணக்க, மணக்க நல்ல சூட்டுடன் காபி கொடுத்தாள், ரசித்து, ருசித்து சாப்பிட்டேன்.
“ஏங்க? நம்ம லதாவைப் பெண் பார்க்க என்னிக்கு வரர்தா சொன்னாங்க..?”
“அவங்க இன்னும் எதுவும் சொல்லலையே..!.. ரேகா”
“தரகரை நாம தான் போய் கேட்டு பார்க்கணும். பெண்ணைப் பெத்தவங்க தான் இறங்கி போய் கேட்கணும். வீடு விட்டா ஆபீஸ். ஆபீஸ் விட்டா, வீடு. இப்படி இருந்தா எப்படிங்க? தரகருக்குப் போன் பண்ணிக் கேட்டுப் பாருங்க”.
ரேகா, “நான் ஒன்னு சொல்லவா? அதை தப்பா எடுத்துக்காதே. என்ன, சரியா? என்னச் சொல்லப் போறீங்க?
அதாவது ரேகா.. “இந்த தரகர் சொன்ன சம்மந்தம் நமக்குத் தேவையா….?”
ஏங்க? அப்படி கேட்கறீங்க..?
“பையன் போட்டோல நிறம், உயரம் சிரித்த முகம், ஜம்முன்னு நம்ம லதாவுக்கு நல்ல பொருத்தமா இருக்கான். மும்பையில நல்லக் கம்பெனியில ஜெனரல் மேனேஜர் வேலை, மாதம் நாலு இலட்சம் சம்பாதிக்கிறான். சொந்தமா வீடு இருக்காம், டொயோட்டா கார் வச்சிருக்கானாம். நல்ல வசதியாம். கூட புறந்தவங்க வேற, யாரும் இல்லையாம், அதனால நம்மப் பொண்ணுக்கு நாத்தனார், மச்சினர்னு எந்த தொல்லையும் இல்லை. மாப்பிள்ளையோட அப்பாக்கு.. திருச்சில வேலையாம். அதனால பையனோட அம்மாவும், திருச்சில இருக்காங்களாம். மாமியார், மாமனார் அதிகாரம் என்பதும் இல்லாமல் நம்ம பொண்ணு சந்தோஷமா அவ புருஷனோட மும்பையில குடும்பம் நடத்துவா. நாமளும் மாதம் ஒரு தடவை மும்பை போயிட்டு வரலாம். நம்ம பொண்ணைப் பார்த்த மாதிரியும் இருக்கும், அப்படியே மும்பையில மஹாலட்சுமி கோவிலைப் பார்க்கலாம், சித்திக் விநாயகரை தரிசிக்கலாம், எல்லா இடத்தையும் நல்லா, நிதானாமா, சுத்திப் பார்த்துட்டு லதா வீட்டிலேயே தங்கிக்கலாம்”.
“வேற ஏதாவது விட்டுப் போச்சா?”.
“நீங்களா, எங்களை எங்கேயும் கூட்டினு போக மாட்டீங்க. நானும் உங்கள பல முறைக் கேட்டுனு தான் இருக்கேன்… பக்கத்தில இருக்கிற பெசண்ட் நகர் அஷ்ட லக்ஷ்மி கோவிலுக்குப் போகலாம்னு. உங்களைக் கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்து வருஷம் இருபத்தி நான்கு ஆச்சு, ஒரு தடவையாவது அந்தக் கோவிலுக்கு நாம போய் வந்தோமா?”.
“ரேகா, நீயா இப்படிப் பேசறே..! அவ்வளவு தானா.., இன்னும் பாக்கி இருக்கா..?
“ஏங்க.. நான் பேசினது ஏதாவது தப்பா..?”
ரேகா..,”.நமக்கு கல்யாணம் ஆன நாலாவது மாசத்திலேயே, உனக்கு டைபாய்டு ஜூரம் வந்து பத்து நாட்கள் ஆஸ்பத்திரியிலும், பத்து நாள் வீட்டிலேயும் உன்னையும், என்னையும், நம்ம வீட்டையும், என் அம்மாவும், அக்காவும் தானே மாத்தி, மாத்தி வீட்டை சுத்தம் பண்ணாங்க, நம்ம துணிகளைத் தோய்த்து கொடுத்துக் கொண்டும், சமையல் செய்துக் கொண்டும், நம்மை எப்படி நல்லா கவனிச்சிகிட்டாங்க..!.. என் மாமாவும் எவ்வளவு ஒத்தாசைப் பண்ணினார்?, அவங்க முணு பேரும் இல்லன்னா நம்ம நிலைமை என்ன ஆகியிருக்கும்? “.
“இப்ப என்னச் சொல்ல வர்றிங்க..?”
“உங்க அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போறதாலயும், தொடர்ந்து லீவு போட முடியாது, உங்க விட்டுல உன் தங்கை தனியா இருக்க மாட்டா எனவும் காரணம் காட்டி ஒரு நாள் இருந்துட்டு உடம்ப பார்த்துக்கோ ரேகான்னு சொல்லிட்டு அவங்க கிளம்பி போயிட்டாங்க…. அப்பறம் ஒரு மாதம் கழித்து உனக்கு உடம்பு தேவல என்று கேள்விப் பட்டு வந்து பார்த்து விட்டு
அன்னைக்கே புறப்பட்டு போயிட்டாங்க..!!..அடுத்த தெருவுல இருந்த என் அண்ணி இரண்டு நாளைக்கு ஒரு தரம், உன்னை நலம் விசாரிக்க வரும் போதெல்லாம், ஜூரம் அடிச்ச நாக்கு, ருசியா சாப்பிட்டா நல்லா இருக்கும், உனக்கு என்ன வேணும் கேளு, செஞ்சு எடுத்து வரேன்னு சொல்லி, நீ கேட்டதை அவங்க வீட்டிலேயே செஞ்சு கொண்டு வந்து கொடுத்தாங்களே..! அதையும் மறந்துட்டியா? நம்மைச் சுற்றி நல்ல மனுஷங்க, நல்ல உறவுகள் என நாலு பேர் இருந்தா, நம்ம கஷ்டபடறப்ப ஓடி வந்து உதவுவாங்க..! பணம், அந்தஸ்து, பெரிசில்ல, நல்ல குணம் உள்ள உறவுகளும், மனுஷங்களும் பக்கத்துல இருக்கணும். நாத்தனார் இல்ல, மச்சினார் இல்ல, மாமியார், மாமனார் பையனை விட்டு தனியா இருக்கா, என் மகள் மும்பையில தனிக் குடித்தனமா, சந்தோஷமா குடும்பம் நடத்துவான்னு சொல்றியே..!
“அதுக்கில்லிங்க…”
“உன் மகளுக்கோ, இல்ல அவள் வீட்டுகாரருக்கோ ஒரு அவசர, அவசிய உதவித் தேவைப்பட்டா அந்த மும்பை சிட்டியிலே அவங்களுக்கு யாரு ஓடி போய் உதவி செய்வாங்க?.., உன்னால் அங்க போய் இருக்க முடியுமா?, இல்ல, என்னால தான் ஆபீஸ்க்கு ஒரு வாரம் லீவு போட்டுட்டு மும்பைக்கு போக முடியுமா…?, அடிக்கடி போய் பார்க்க உன் மகள் என்ன பக்கத்தில் இருக்கிற அண்ணா நகரில் இருக்கிறாளா? உங்க அப்பா அம்மா உன்னை விட்டுட்டு ஓடின மாதிரி, என் பொண்ணை மும்பையில தனியா விட்டுட்டு…என்னால ஓடி வர முடியாதும்மா!…”
“எங்க அப்பா, அம்மாவை குறைச் சொல்லாம இருக்க மாட்டீங்களே..”
“அப்படி சொல்ல வரல ரேகா. மாப்பிள்ளையை போட்டோல பார்த்தோம் சரி. ஜம்முனு தான் இருக்கான், போட்டோஷப்ல கூட எடிட் பண்ணி போட்டிருப்பாங்க, யாருக்குத் தெரியும்? நாம நேர்ல போய் பார்க்க வேணாமா? அந்த பையன் எப்படிப் பட்டவன்? அவன் குணம் எப்படி? பழக்க வழக்கங்கள் என்ன? எவ்வளவு நாளா மும்பையில் வேலைப் பார்க்கிறான்? இதுக்கு முன்னாடி எங்க வேலைப் பார்த்தான்? ஏன் வேலைக்கு மும்பை போனான்? இத பத்தி விசாரிக்கணும். இன்னும் எவ்வளவோ இருக்கு. அவங்க சொந்தகாரங்க எல்லாம் எங்க இருக்காங்க?, எப்படி இருக்காங்கன்னு நாம விசாரிக்கணும், ஜாதகப் பொருத்தம் பார்க்கணும். நம்ம பொண்ணு அந்த பையன் கிட்டப் பேசி பார்க்கணும்னு சொல்லுவா..!.., அவளுக்கு அந்த பையனைப் பிடிக்கணும், ஒரு வேளை பிடிச்சிப் போய், கல்யாணம் ஆகி, நம்ம லதா மும்பைக்குப் போனா, அவளுக்கு புது வேலையைத் தேடணும்,. அதுக்குள்ள, நாத்தானார் இல்ல மச்சினார் இல்ல, மாமியார், மாமனார் அதிகாரம் இல்ல, மாதம் ஒரு முறை மும்பை போகாலாம், மஹாலட்சுமி கோவிலுக்குப் போலாம், சித்திக் விநாயகரை தரிசிக்கலாம், மும்பையைச் சுற்றிப் பார்க்கலாம், அட, அட, எத்தனை சுய நலமான எண்ணங்கள்… இதுவா முக்கியம்…? நம்ம பொண்ணு ஒத்தாசைக்கு உதவி செய்ய சொந்தங்கள், கூட பிறந்தவர்கள், நல்ல மனுஷங்கள் வேண்டாமா?”
ஆமாங்க!, “நீங்க சொல்றது தான் சரி, ஏனக்கு ஏன் இதெல்லாம் தோணல….?”
ஏங்க..!. “ஆபீஸ் வேலையைத் தவிர உங்களுக்கு எதுவுமே தெரியாதுண்னு இத்தன நாளா நினைச்சிருந்தேன், இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே..! எப்படிங்க….?
“எல்லார் வீட்டிலேயேயும் இது மாதிரி தான் நினைச்சினு இருக்காங்க. எங்களுக்குத் தெரிஞ்சதை வெளியில காட்டிக்க மாட்டோம். அவ்வளவுதான் “
“என்னை மன்னிச்சிடுங்கோ. இருபத்தி முணு வருஷம் நம்ம பொண்ணு லதாவைக் கண்ணுல வச்சி வளர்த்துட்டோம், போற இடத்துலேயும் அவ நல்லா வாழணும், அதனால் தான் ஒரு பக்கத்த பார்த்த நான், மறு பக்கத்தைப் பார்க்க மறந்துட்டேன். தரகர் கிட்ட, சொல்லும் போது சென்னையிலேயே வேலைப் பார்க்கிற நல்ல குடும்பத்தில, கூட புறந்தவங்க அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி, அப்பா, அம்மா கிட்ட பாசம இருக்கிற பையானாப் பார்த்து நல்லா விசாரிச்சு, சொல்ல சொல்லுங்க” என்றாள் ரேகா.
November 23, 2026