கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை நாடகம்
கதைப்பதிவு: October 8, 2026
பார்வையிட்டோர்: 62 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

(1947ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாத்திரங்கள்

உபகுப்தர் : அசோக மகாச் சக்கரவர்த்தியின் குருவும், முற்றத் துறந்த முனிவரு மாகிய ஒரு பௌத்த பிக்ஷு.

வாசவதத்தை: பாடலிபுத்திரம் முழுவதும் அழகிற் சிறந்த ஒரு தாசி.

ராதா, ஹீரா, மாயா – வாசவதத்தையின் தோழிகளும், பணிப் பெண்களும்.

சில கழுகுகள்!

முதல் அங்கம் 

முதற் காட்சி 

இடம் : அசோக சக்ரவர்த்தியின் தலை நகரமாகிய பாடலிபுத்திரம் 

[இரவு நேரம்.பாடலிபுத்திரத்தில் மூன்றுமாடிகள் உள்ள ஓர் அழகிய மாளிகை. படுக்கை யறையில் பாடலிபுத்திரம் முழுவதிலும் அழகிற் சிறந்த வனிதை என்று பெயர் பெற்ற தாசி வாசவதத்தை, தந்தக் கட்டிலில், பட்டு மெத்தையின் மீது படுத்துப் புரண்டு கொண்டிருக்கிறாள். அவளுடைய வேலைக்காரியும், தோழியுமான ராதா உள்ளே நுழைகிறாள்.] 

ராதா : பொழுது விழுந்து பத்து நாழிகைக்கு மேல் ஆகிறதே, அம்மா! ஏதாவது சாப்பிடக் கூடாதா? எல்லாம் ஆறி, அலர்ந்து போகிறதே.

வாசவதத்தை: எனக்கு ஒன்றும் வேண்டாமடி ராதா. நீ சாப்பிட்டுவிட்டுப் படுத்துக்கொள். 

ராதா : உடம்புக்குச் சௌகரியம் இல்லாவிட்டால், வெறும் கிச்சடியாவது சாப்பிடுங்களம்மா. சிறிது கொண்டு வரட்டுமா? 

வாசவதத்தை : ஒன்றும் வேண்டாம். 

ராதா : அப்படியானால் கொஞ்சம் பாலாவது சாப்பிட்டுவிட்டுத் தூங்குங்கள். கொண்டு வருகிறேன். (அறையை விட்டுச் செல்லுகிறாள். சிறிது நேரத்தில் ஒரு வெள்ளி டம்ளரில் பால் எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் நுழைகிறாள்) எழுந்திருங்களம்மா! இதோ கொண்டு வந்திருக்கிறேன். 

வாசவதத்தை: (மிகுந்த கோபத்துடன்) போடி வெளியே! அந்த வதை போதாதென்று நீயும் ஏண்டீ என்னை இப்படி வதைக்கிறாய்? கொஞ்ச நேரமாவது என்னை நிம்மதியா யிருக்க விடு. 

(ராதா பயத்துடன் வெளியே செல்கிறாள்.)

வாசவதத்தை : நிம்மதி! நிம்மதி! எனக்கு ஏது இனி நிம்மதி? ஐயோ என் மனம் ஒரு நிலையில் இல்லை. இந்தச் சமயம் பக்கத்திலிருந்தாலாவது சற்று ஆறுதலாயிருக்குமே, அவள் எங்கே தொலைந்து விட்டாள்? அடீ ராதா! ராதா! எங்கடீ அதற்குள் தொலைந்து விட்டாய்? ராதா! 

ராதா : (அவசர அவசரமாய். ஓடிவந்து) என்னம்மா, கூப்பிட்டீர்களா? 

வாசவதத்தை : ஏண்டீ, நீயாவது என் பக்கத்தில் சற்று ஆறுதலாய் இருக்கப்படாதா? எங்கடீ தொலைந்து விட்டாய்? 

ராதா : ஏனம்மா ஐந்தாறு நாட்களாய் ஒரு மாதிரி இருக்கிறீர்கள்? உடம்புக்கு என்னம்மா செய்கிறது? 

வாசவதத்தை : ஐயோ! என் மார்பு ஏன் இப்படி விம்முகிறது? வெடித்துவிடும் போல் தோன்றுகிறதே! 

ராதா : வைத்தியரைக் கூட்டிக்கொண்டு வரட்டுமா, அம்மா? 

வாசவுதத்தை: இந்த வியாதிக்கு வைத்தியர் வந்து என்னடி செய்யப் போகிறார்? 

ராதா: உங்களுக்கு என்னம்மா வியாதி? 

வாசவதத்தை: பெண்களின் விரக வேதனை எப்படி இருக்கு மென்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறதடீ! 

ராதா : ஓஹோ! 

வாசவதத்தை: (உணர்ச்சி பொங்க) வாசவதத்தை பிறர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டாள் என்பதைக் கேள்விப்பட்டிருப்பாய். ஆனால் வாசவதத்தையின் உள்ளத்தை ஒருவர் கொள்ளை கொண்டார் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறாயா, ராதா? 

ராதா: (உணர்ச்சி அற்றவள்போல்) ஓ! அப்படியா விஷயம்! 

வாசவதத்தை : (மிகுந்த வேதனையுடன்) அவரைப் பார்த்த க்ஷணத்திலிருந்து என் உள்ளம் அவரையே நாடுகின்றதடி! 

ராதா : ஊஹும்! 

வாசவதத்தை : அவருடைய முகத்தில்தான் என்ன அழகு, என்ன பொலிவு! அவருடைய வதனத்தில் பால் வடிந்ததே, பார்க்கவில்லையாடீ, சகீ!

ராதா : ஆமாம்! வடிந்தது! வடிந்தது! 

வாசவதத்தை: அவருடைய முகத்தில்தான் எத்தனை அமைதி! எத்தகைய சாந்தம்! 

ராதா : உம்,அப்புறம்? 

வாசவதத்தை : என்னுடைய வீட்டிற்கு எத்தனையோ பிரபுக்களும், அரசர்களும் வருகிறார்களே, அவர்களைப் போல் அவர் பட்டாடையா அணிந்திருந்தார்? இல்லை. வாசனைத் தைலம் பூசியிருந்தாரா? இல்லை. அலங்காரம் செய்திருந்தாரா? 

ராதா: (புன் சிரிப்புடன்) இல்லை! 

வாசவதத்தை : (அதைக் கவனியாமல்) வாகனாதிகளில் வந்தாரா? அதுவுமில்லையே! பின் எப்படியடீ, அவர் என் உள்ளத்தைக் கவர்ந்தார்? 

ராதா : கொஞ்சம் பொறுங்களம்மா. என்னுடைய உள்ளம் என்னிடம் இருக்கிறதா, அதையுங் கவர்ந்து சென்றுவிட்டாரா என்று பார்த்துக் கொள்ளுகிறேன்! 

வாசவதத்தை : ராதா, என்னுடைய நிலைமையை நீ உணரவில்லை. 

ராதா : உம்! 

வாசவதத்தை: நீ என்ன நினைத்தாலுஞ் சரி; நான் அவரிடம் காதல் கொண்டுவிட்டேன். (பெருமூச்சுடன்) காதல் என்ன வென்பது எனக்கு இப்பொழுதுதான் விளங்குகிறது ராதா! 

ராதா: (புன்சிரிப்புக் கலந்த உபதேசம் செய்யும் தோரணையில்) காதலாவது, கழுதைக்குட்டியாவது! நமக்கு. ஏதம்மா காதல்? பெண்ணாம், விரகமாம், வேதனையாம், வதனமாம், பாலாம், வடிகிறதாம்! என்னம்மா பிதற்றுகிறீர்கள்? எவெனொருவனிடம் பணம் இருக்கிறதோ, அவனிடம் பணமிருக்கும் வரை அத்யந்தக் காதல் கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்து பணம் பறிக்க வேண்டியது; பின்பு அவனுடைய மூஞ்சியில் எச்சிலைக் காறி உமிழ்ந்து, காலால் மிதித்துத் தள்ள வேண்டியது! காதலுக்கும் நம்ம தொழிலுக்குங் கட்டிவருமா அம்மா! 

வாசவதத்தை : அடி ராதா, என்னைக் கேலியா பண்ணுகிறாய்? 

ராதா : முன்னொரு சமயம் நான் இப்படி வேதனைப் பட்டபோது, என்னை எந்தவிதம் ஏளனம் செய்தீர்கள்? 

வாசவதத்தை: அதற்கு இப்பொழுது பழிக்குப் பழியா வாங்க விரும்புகிறாய்? 

ராதா: பழி வாங்குவது என் இஷ்டமல்ல; ஆனால் ‘தலைவலியுங் காய்ச்சலுந் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். காதலும் அதுபோலத்தான்! 

வாசவதத்தை: அடி ராதா, எனக்கும் வந்துவிட்டதே! இவ்வளவு போதாதா? இன்னுமா வரவேண்டும்? ராதா, எனக்கு உதவி செய்ய மாட்டாயா?

ராதா : (கம்பீரத்துடன்) அம்மா, இதெல்லாம் உள்ளமும், உள்ளமும் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் மூன்றாமவர் எப்படி உதவி செய்ய முடியும்? பிறருடைய உதவியை இதில் நாடுவது அறிவீனம்! 

வாசவதத்தை: அடி அம்மா, நான் சொன்னதெல்லாம் தப்பிதம்! கன்னத்தில் போட்டுக் கொள்ளட்டுமா? என்னை ஏண்டி இப்படிக் குத்திக் குத்திக் காட்டுகிறாய்? 

ராதா: நான் என்ன கேட்டேன்? அந்த ரத்தின சிம்மரிடம் ஒரு வார்த்தை தானே சொல்லச் சொன்னேன். அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்? நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் அவன் தட்டி விடுவானா? யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் அம்மா! 

வாசவதத்தை: வந்து விட்டதே! இனியுமா வர வேண்டும்? ஐயோ! பிச்சை வாங்க வந்த பிக்ஷு, பிச்சையா வாங்கிக்கொண்டு சென்றார்? என்னுடைய உள்ளத்தையல்லவா பறித்துக் கொண்டு சென்று விட்டார்! 

ராதா : எந்தப் பிக்ஷுவம்மா? 

வாசவதத்தை : அவர் தான், நான்கைந்து நாட்களுக்கு. முன்னால் வந்தாரே உபகுப்தர், அவர்தான். 

ராதா: என்ன! யார்? 

வாசவதத்தை : அவரைப்போன்ற அழகிய புருஷர் வேறு யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா, ராதா? 

ராதா : (தலையிலடித்துக் கொண்டு) தலைவிதி! எத்தனை அரசர்களும் பிரபுக்களும் உங்களுடைய ஒரு கடைக்கண் ணோக்கிற்காக நமது மாளிகையின் முற்றத்தில் காத்திருக்கிறார்கள்? நீங்கள் போயும், போயும் ஒரு பௌத்த பிக்ஷுவின் மீதா காதல் கொள்ள வேண்டும்? 

வாசவதத்தை : அவ் வரசர்களும், பிரபுக்களும் உபகுப்தருடைய காலடித் தூசுக்கு ஒப்பாவார்களா, ராதா? 

ராதா : அம்மா, எனக்கொரு பழமொழி ஞாபகம் வருகிறது; சொல்லட்டுமா? 

வாசவதத்தை : என்ன? 

ராதா: கோபித்துக் கொள்ளக்கூடாது. 

வாசவதத்தை : (மௌனனம்) 

ராதா : (புன்சிரிப்புடன்) வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் ஆசை; வண்ணாத்திக்கு…? 

வாசவதத்தை: (கோபத்துடன்) சீ! கழுதை! என்னடி வேடிக்கை, சந்தர்ப்பம் அறியாமல். 

ராதா : சரி, இப்பொழுது என்னை என்னம்மா செய்யச் சொல்கிறீர்கள்? 

வாசவதத்தை : அப்படிக்கேளடி தோழி! இப்பொழுது தான் நீ என் பிராண சகியானாய்! உபகுப்தரிடம் போய், நான் அவரிடங் கொண்ட காதலை அவருக்கு ரகசியமாய்த் தெரியப்படுத்தி, அவரை எப்படியாவது நம்முடைய மாளிகைக்கு அழைத்து வரவேண்டும். அவ்வளவுதான்.

ராதா : ஆம், அவ்வளவுதான்! புத்தபகவானுடைய சிஷ்யர்களில் ஒருவரும், ராஜரிஷியான அசோகரின் குருவுமான உபகுப்தரை, முற்றத்துறந்த முனிவரைத் தாசி வாசவதத்தை வீட்டிற்குக் கூட்டி வரவேண்டும். அவ்வளவுதானே! வெகு சுலபம்! 

வாசவதத்தை : கஷ்டமான வேலைதாண்டீ! அதற்காகத் தானே உன்னை அனுப்புகிறேன். வாசவதத்தை யின் மையலில் மயங்காத மானிடருமுண்டா? அதையும் ஞாபகம் வைத்துக்கொள்? 

ராதா: கைமாறு? 

வாசவதத்தை : (புன்சிரிப்புடன்) ரத்ன சிங்கிடம் உன்னை…

ராதா : (அவளுடைய வாயைப் பொத்தி ) போதும்! அதற்கு மேல் சொல்ல வேண்டாம்! 

இரண்டாம் காட்சி 

[அந்தி நேரம்.வாசவதத்தையின் மாளிகையில் ஓர் அறை.வாசவதத்தையின் மனம் சஞ்சலமுற்றிருப்பது போல் அவளுடைய உடலும் அவதிப்படுகிறது. சிறிது நேரம் படுக்கிறாள்: சிறிது நேரம் உட்காருகிறாள்; சிறிது நேரம் நடக்கிறாள்; எதையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்க அவளுக்குச் சக்தியில்லை. அறையிலுள்ள சாமான்களெல்லாம் நிலை குலைத்திருப்பன போல் தோன்றுகின்றன. இங்கிருப்பதை அங்கும், அங்கிருப்பதை இங்குமாக எடுத்து வைக்கிறாள். அதிலும் திருப்தியில்லை. பின்பு குறுக்கும் நெடுக்குமாக அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருக்கிறாள். அடிக்கடி தனக்குள் ‘ராதாவை இன்னும் காணோமே!’ என்று முணுமுணுத்துக் கொள்கிறாள். அச்சமயம் ராதா பரபரப்புடன் அறைக்குள் நுழைகிறாள்.]

ராதா : அம்மா! அம்மா! வலி பொறுக்க முடியவில்லையே! உடம்பெல்லாம் வலிக்கிறதே! ஐயோ, என்ன செய்வேன்! 

வாசவதத்தை: (மிகுந்த கலவரத்துடன்) ராதா! ராதா! உனக்கென்னம்மா! என்னடி செய்கிறது! 

(தன் மெத்தையில் படுக்க வைக்கிறாள்.) 

ராதா : ஐயோ! ஐயோ! உடம்பெல்லாம் குத்துகிறதே! 

வாசவதத்தை: ஏனம்மா குத்துகிறது? என்னடி நடந்தது? போகும்போது உனக்கு ஒன்று மில்லையடி! 

ராதா : இப்படி வருமென்று நான் நினைக்கவில்லையே! ஐயோ! அம்மா! இப்படி ஆகுமென்று நினைத்தால், நான் போயிருக்க மாட்டேனே. 

வாசவதத்தை : ஐயோ! என்ன நடந்தது சொல்லேன்? கண்ணே, ராதா! 

ராதா : ஐயோ! ஐயோ! பொறுக்க முடியவில்லையே!

வாசவதத்தை: நடந்ததைச் சொல்லடி. ஐயோ ! என் மனம் பதைக்குதே! உபகுப்தர் ஏதாவது சாபமிட்டு விட்டாரா? சொல்லேன். 

ராதா : ஆ ஆ! ஊ ! ஊ ! 

வாசவதத்தை : உனக்கு உடம்பைப் பிடித்து விடட்டுமா, ராதா? (பிடித்து விடுகிறாள்.) 

ராதா : ஐயோ ! ஐயோ ! வெப்புத் தாங்க முடிய வில்லையே! 

வாசவதத்தை : ஐயோ! இது உபகுப்தருடைய சாபந் தாண்டி! உனக்கு வெப்பு நோய் வந்து விட்டதே! என்னடி செய்வேன்? (பக்கத்திலிருந்து பன்னீரை எடுத்து அவளுடைய உடம்பெல்லாம் தெளிக்கிறாள். சந்தனத்தை நெற்றியிலும் மார்பிலும் அப்புகிறாள்.)

ராதா: (உபத்திரவம் சற்று நீங்கியவள்போல்) பன்னீர் தெளியுங்கள்! இன்னும் தெளியுங்கள்! சந்தனத்தைப் பூசுங்கள்! 

(வாசவதத்தை மேலும் பன்னீரை ஊற்றுகிறாள். சந்தனத்தைப் பூசுகிறாள்.) 

ராதா : இம்மாதிரி இடங்களுக்கெல்லாம் இனி என்னை அனுப்பாதீர்களம்மா. உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகிறது! 

வாசவதத்தை : நடந்ததைச் சொல், ராதா! இனி அனுப்பவில்லை. 

ராதா: (புன் சிரிப்புடன்) ஒரு பிக்ஷூவினுடைய கண்ணம்பு பட்டே, நீங்கள் இந்தப் பாடு படுகிறீர்கள்! அத்தனை பிக்ஷூகளும் சேர்ந்து என் மீது கண்ணம்புகள் எய்தால் என்னால் பொறுக்க முடியுமா, அம்மா? (கலகல வென்று சிரிக்கிறாள்.)

வாசவதத்தை: அடி, நீ நாசமாப்போக! என்னமோ, ஏதோ என்றெல்லவோ நான் பயந்துவிட்டேன். உனக்காக ஒரு செம்பு பன்னீரையும், வாசனைச் சந்தனத்தையும் பாழாக்கினேனே! 

ராதா : உங்களுடைய பன்னீரும் சந்தனமுந்தான் உங்களுக்குப் பெரிது! நான் எத்தனை கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன். அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை? 

வாசவதத்தை: அடி ராதா, போன காரியம் என்னடி, சொல்லடி ராதா! ராதா! (அவளுடைய நாடியைப்- பிடித்துக் கெஞ்சுகிறாள்.) 

ராதா : அம்மா, எனக்கொரு யோசனை தோன்றுகிறது! 

வாசவதத்தை : (மௌனம்.) 

ராதா : நீங்கள் தான் உபகுப்தராம், நான் ராதையாம்…… 

வாசவதத்தை : இந்த நாடகமெல்லாம் எதற்கடி உபகுப்தர் சம்மதித்தாரா? சீக்கிரம் சொல்லடி! 

ராதா : அப்படியானால் நான் சொல்ல மாட்டேன், போங்கள்! 

வாசவதத்தை : சரி, சரி, அப்படியே வைத்துக் கொள்வோம், சொல். 

ராதா: சுவாமி! என் எஜமானி, வாசவத்தை தங்களை அழைத்து வரச்சொன்னார்கள். 

வாசவதத்தை : (காதுகளைப் பொத்திக்கொண்டு) ஆ! என்ன! வாசதத்தையா! தாசி வாசவதத்தையா! ஐயோ! இங்கே நில்லாதே! போ! போ! 

(ராதையைத் துரத்துகிறாள்.) 

ராதா : அம்மா! அம்மா! உபகுப்தர் வேஷம் போட்ட வுடனேயே உங்களுக்கு இவ்வளவு வைராக்கியம் வந்து விட்டதே? உண்மையான உபகுப்தர் எவ்வளவு வைராக்கியசாலியா யிருக்க மாட்டார்? 

வாசவதத்தை: உன் வேலை கஷ்டந்தானம்மா, நான் இல்லையென்று சொன்னாலல்லவா இந்த சாகச் மெல்லாம் நீ செய்ய வேண்டும்? சொல்லடி ராதா! உபகுப்தர் வருவாரா? 

ராதா : திடீரென்று சொல்லிவிட்டால் உங்களால் துக்கம் பொறுக்க முடியாதே என்றுதான் நினைத்தேன். ஒரு வரியில் சொல்ல வேண்டுமனால், நீங்கள் உபகுப்தர் மீது கொண்ட ஆசையை மறந்துவிடுவதே நலம். 

வாசவதத்தை : அடி ராதா, என்னடி சொல்லுகிறாய் நீ! நீலோற்பலம் போன்ற என் கருவிழிகளின் பார்வையும்,பவளச் செவ்வாயில் இலேசாக எட்டிப் பார்க்கும் முல்லை அரும்புகள் போன்ற என் பற்களின் இளநகையும் அவரை மயக்கத் தவறிவிட்டன என்றா சொல்கிறாய்? 

ராதா : அம்மா, ஆசையெல்லாம் வெறுத்த அருந்தவ முனிவரல்லவா, அவர்! 

வாசவதத்தை : முனிவர்! முனிவராம்! நடுக்கடலில் பெருமழை பெய்வது போல, முனிவருக்கு ஏன் இத்தனை அழகையும் கொடுத்தான் ஈசன்?

ராதா : உங்களைப் போன்ற நாரீமணிகள் அனுபவிக்க வேண்டுமென்றுதான்! 

வாசவதத்தை: (ஆத்திரத்துடனும், பரபரப்புடனும்) அடி ராதா, என்னை ஏண்டி இப்படித் துன்புறுத்துகிறாய்? அவர் என்னடி சொன்னார்? ராதா! ராதா! தெளிவாய்ச் சொல்லமாட்டாயா? 

ராதா : வருவதாகச் சொன்னார்! 

வாசவதத்தை: வருவதாகச் சொன்னாரா? உபகுப்தரா?

ராதா : ஆமாம், சாக்ஷாத் உபகுப்தரே வருகிறதாகச் சொன்னார். 

வாசவதத்தை : அடி ராதா! உனக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனடி, கண்ணே (வைரங்கள் பதித்த ஒரு மாங்காய் மாலையைக் கழற்றி அவள் கழுத்தில் போடுகிறாள்.) எப்பொழுது வருவார்? இன்றிரவே. வருவாரா? 

ராதா : அவசரப்படாதீர்களம்மா… வருவார்! 

வாசவதத்தை: இன்றிரவா? 

ராதா: (சற்று நேரம் மௌனமாயிருந்து) உம், வருவார்.

வாசவதத்தை : அடி சகீ! ஒரு விஷயம் சொல்லட்டுமா? (வாசவதத்தையை, ராதை ஏறிட்டு நோக்குகிறாள்.)

வாசவதத்தை : மாதர் வலையில் சிக்காத மாமுனிவன் எவனும் இம் மகிதலத்தில் இல்லை! 

ராதா : உம்! 

வாசவதத்தை : (சந்தோஷம் மிகுதியினால் ஆர்ப்பரித்து ) வாசவதத்தையின் அழகுக்கு மயங்காதார் வானுலகத்திலுமில்லை. பூவுலகத்தைப்பற்றிக் கேட்கவா வேண்டும்? (குதித்துக்கொண்டு வெளியேறுகிறாள்.) 

ராதா : அம்மா ரத்னசிங்? 

வாசவதத்தை : (வெளியேறும் பொழுதே) இதில் பிறர் சொல்வதில் எல்லாம் என்னடி இருக்கிறது, ராதா? அவரவர் அழகினாலல்லவா, ஆடவரை வசீகரிக்க வேண்டும்! 

ராதா : ஓஹோ! 

மூன்றாம் காட்சி 

[இரவு நேரம்,வாசவதத்தையின் மாளிகை. வாசவதத்தை ஓர் அறையில் உட்கார்ந்திருக்கிறாள்.]

வாசவதத்தை: (கூப்பிடுகிறாள்) ஹீரா! 

ஹீரா : (ஓடிவந்து) படுக்கையை அலங்கரித்து விட்டேன் அம்மா. 

வாசவதத்தை : எப்படி அலங்கரித்தாய்? சொல் பார்க்கலாம். 

ஹீரா: நான் சொல்வதைவிட, நீங்களே வந்து பார்த்துவிட்டால் நன்றாயிருக்கும், அம்மா ஏதாவது குற்றங்குறை இருந்தாலும் திருத்தி விடலாம். 

வாசவதத்தை : எனக்கு இப்பொழுது அங்கு வருவதற்கு நேரமில்லை. நீ சொல்; ஏதாவது குறையிருக்கிறதா என்று பார்க்கலாம். 

வீரா: புதிதாகத் தைத்து வந்திருந்த மிருதுவான அழகிய இரண்டு பட்டு மெத்தைகளை முதலாவது கட்டிலில் விரித்தேன். அவைகளின் மீது அழகிய பூவேலைகள் செய்த, பட்டினாலாகிய விரிப் பொன்றை விரித்து, இரண்டு தலையணைகளைப் போட்டேன். பின்னர் நீலமேக சாமள வர்ணத்தினாலாகிய பட்டு விதானம் ஒன்றைக் கட்டிலுக்கு மேலே கட்டினேன். ஆகாயத்தில் மேகங்களுக்கிடையில் சந்திரனும், நக்ஷத்திரங்களும் எங்ஙனம் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனவோ, அதேபோல் அவ் விதானத்தில் சித்திரம் தீட்டப்பட்டிருக்கிறது. பின்பு நாலா புறங்களிலும் பலவிதமான சித்திரங்கள் எழுதப் பட்ட அழகிய படுதாக்களைத் தொங்கவிட்டேன். முன்னால் தொங்கிக் கொண்டிருக்கும் படுதாவை அழகாய் மடித்துக் கட்டி, முத்துச் சரங்களைத் தொங்கவிட்டிருக்கிறேன். படுக்கையினுள் மேலே நான்கு மூலைகளிலும் மரகதத்தினால் இழைக்கப்பட்ட கிளிகளைத் தொங்கவிட்டு அலங்கரித்திருக்கிறேன். அம்மா, நான் அங்கு செய்திருக்கும் அத்தனை அலங்காரங்களையும் எப்படியம்மா நாவினால் வர்ணிக்க முடியும்? நீங்களே வந்து பார்த்து விட்டால்… 

வாசவதத்தை : அதெல்லாம் சரிதான். எல்லாம் நீ நன்றாய்த்தான் செய்திருப்பாய். படுக்கையின் சமீபத்தில் பன்னீர், கலவைச் சந்தனம், ஜவ்வாது இதர வாசனைத் திரவியங்கள் எல்லாம் வைத்திருக்கிறாயா? 

ஹீரா : ஆம், அம்மா. 

வாசவதத்தை : மிட்டாய் வகைகளெல்லாம் தயார் செய்து வைக்கும்படி உன்னிடந்தானே சொன்னேன்? 

ஹீரா : ஆம், அம்மா; அவைகளை இப்பொழுதே அங்கு. கொண்டு போய் வைத்துவிடவா? 

வாசவதத்தை : வேண்டாம். இப்பொழுதே வைத்தால் ஆறிவிடும். அந்தச் சமயத்தில் கொண்டுவந்தால் போதும். 

ஹீரா: சரி, அம்மா, அப்படியே செய்கிறேன்.

வாசவதத்தை: ஒன்று கேட்க மறந்து விட்டேனே. படுக்கையின்மீது ரோஜா இதழ்கள் பரப்பினாயா? 

ஹீரா: ரோஜாப்பூ இப்பொழுது இல்லையே அம்மா.

வாசவதத்தை : இல்லையானால் வேலைக்காரியை அனுப்பி சீக்கிரமாய் வாங்கிக்கொண்டு வரச்சொல். ஓடு! அப்படியே ராதையை இங்கே வரச்சொல்.

ஹீரா: அவள் ஏனோ இன்று ஒரு வேலையிலும் மனங் கொள்ளாமல் இருக்கிறாள், அம்மா.

வாசவதத்தை: சரி, நீ அவளை வரச்சொல். 

(ராதை கடுகடுத்த முகத்துடன் வருகிறாள்)

வாசவதத்தை: ஏண்டி ராதா, ஒரு மாதிரி இருக்கிறாய்?

ராதா: ஒன்றுமில்லை. 

வாசவதத்தை : நான் வேடிக்கையாகப் பேசினதை நினைத்துக்கொண்டா இப்படி இருக்கிறாய்? ரத்ன சிங்கிடம் அவசியமாய் உன்னைப் பற்றிச் சொல்கிறேன். அவர் வரும்பொழுது நீ இப்படி முகத்தை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா? போய்த் தலையை வாரிக்கொண்டு சீக்கிரம் வா. மாயாவை உடனே இங்கே அனுப்பு. எனக்கு அலங்காரங்கள் செய்ய வேண்டும். அவள்தான் நன்றாய்ச் செய்வாள்.

(மாயா வந்து வாசவதத்தையை அலங்கரிக்கிறாள் சிறிது நேரத்தில் ராதை வருகிறாள்.)

வாசவதத்தை: ராதா வந்துவிட்டாயா? வீடு முழுதும் நீ ஒரு தடவை சுற்றிச் சென்று, எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டனவா என்று பார்த்துவிட்டு வா. எல்லாம் நன்றாய்ப் பார்க்க வேண்டும். அவருடைய மனம் நோகும்படி ஒரு குறையும் இருக்கக்கூடாது. 

(சிறிது நேரங்கழித்து ராதை வருகிறாள்)

ராதா: வாசலுக்கு நேராக புத்த பகவானுடைய சித்திரம் ஒன்று மாட்டப்பட்டிருக்கிறதே அது… 

வாசவதத்தை : அடி ராதா, இதற்காகத்தானே உன்னைப் போகச் சொன்னேன். நல்லவேளையாக ஞாபகப் படுத்தினாய். வாசலில் நுழைந்தவுடன் அச் சித்திரத்தைக் கண்டு, மீண்டும் வைராக்கியம் கொண்டு உபகுப்தர் திரும்பிவிட்டால் என் செய்வது? அதை உடனே அகற்றிவிடு. 

(ராதை அச்சித்திரத்துடன் திரும்பி வருகிறாள்.)

வாசவதத்தை: அடி ராதா, அவர் எப்பொழுது வருவார்? இன்னுங் காணோமே! 

ராதா : ஆத்திரப் படாதீர்கள் அம்மா, வந்துவிடுவார்.

வாசவதத்தை: அடி ராதா, என்னைப் பார்த்துச் சொல். நான் நன்றா யிருக்கிறேனா? உபகுப்தர் என் அழகில் மயங்குவாரா? 

ராதா: உங்கள் அழகில் மயங்காமலா வருகிறேன் என்று சொன்னார்? 

வாசவதத்தை: அவர் மீது நான் உண்மையான காதல் கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்ட, அவர் வந்தவுடன் நான் என்னடி செய்யவேண்டும்? எனக்கு இத்தனை அனுபவமிருந்தும் இந்த விஷயத்தில் ஒன்றுந் தெரியாதது போலவே தோன்றுகிறதடீ. 

ராதா: அதைப்பற்றிப் பயப்படவேண்டாம். அதெல்லாம் இயற்கையாகவே உங்களுக்குத் தெரிந்து விடும். 

(மாயா வருகிறாள்.) 

மாயா: யாரோ வந்திருக்கிறார், அம்மா. 

ராதா: அவர் வந்துவிட்டார் போலும். 

வாசவதத்தை: ராதா நீ போய் அவரை அழைத்து வா. (அவளுடைய மார்பு துடிக்கிறது.) 

ராதா (திரும்பிவந்து) அம்மா, பாடலிபுத்திரத்துப் பிரபலப் பட்டு வியாபாரி கிருஷ்ணதத்தர் வந்திருக்கிறார். 

வாசவதத்தை : ஐயோ! இந்தச் சனியன்களை யெல்லாம் யார் இன்றைக்கு வரச் சொன்னது? ஏதாவது சாக்குச்சொல்லி அனுப்பிவிடு. உடம்புக்குச் சௌகரியமில்லை என்று சொல். 

ராதா : (தனிகரை அனுப்பிவிட்டுத் திரும்பிவந்து) அம்மா, இன்றைக்கு அவர் கட்டாயம் வருவாரென்று தான் எனக்குத் தோன்றுகிறது. 

வாசவதத்தை : வாசற் கதவு திறந்திருக்கிறதா? 

ராதா: திறந்துதான் வைக்கப்பட்டிருக்கிறது.

வாசவதத்தை: எதற்காகக் கேட்கிறேனென்றால் இந்த பௌத்த பிக்ஷுக்களெல்லாம் வைராக்கியம் மிக்கவர்கள். ஏதாவது சிறிய தடை ஏற்பட்டாலும் திரும்பிச் சென்றுவிடுவார்கள். 

(சிறிது நேரம் இருவரும் மௌனம்) 

வாசவதத்தை : ராதா, எனக்கொரு யோசனை தோன்றுகிறது. அவர் பின்புற வாசல் வழியாக ஒரு வேளை வருவாரோ? 

ராதா: ஆமாம் அம்மா,வந்தாலும் வரலாம். 

வாசவதத்தை : நீ உடனே ஓடிப்போய் பின்புற வாசலைத் திறந்து, அங்கே ஹீராவைக் காவல் வைத்து விட்டு வா. 

(சிறிது நேரத்தில் ராதை திரும்புகிறாள். இதற்குள் மாயா ஓடிவருகிறாள்.) 

மாயா: அம்மா! இளவரசர் வந்திருக்கிறார். 

வாசவதத்தை : ஐயோ! என் தலைவிதி! யார் யாரோ வருகிறார்கள்; அந்தப் பிக்ஷுவை இன்னுங் காணோமே! இளவரசரை எப்படிப் போகச் சொல்வது? இந்தச் சமயம் உபகுப்தர் வந்தால் என் செய்வது? ராதா, என்னடி செய்யலாம்?

ராதா: அம்மா நான் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். உபகுப்தர் வந்தால் சமிக்ஞையால் தெரிவிக்கிறேன். இளவரசரை எப்படியாவது அனுப்பிவிடுங்கள். 

வாசவதத்தை : ஆமாம், அதுதான் வழி. அரசர் வந்திருக்கிறார் என்று சொல்லலாம். சரி, அப்படியே செய். 

(விடிய ஏழெட்டு நாழிகை யிருக்கும்போது இளவரசர் வாசவதத்தையின் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். வாசவதத்தை, ராதையை அழைக்கிறாள்.) 

என்னடி ராதா? 

ராதை : அவர் வரவில்லை! 

வாசவதத்தை : வரவில்லையா! ஐயோ, எப்பொழுது வருவாரோ! 

(மிகுந்த ஏமாற்றத்துடன் படுக்கையில் சாய்கிறாள்.) 

இரண்டாம் அங்கம் 

[நகரத்திற்கு வெளியில் ஓர் அழகிய தோப்பின் மத்தியில் பௌத்த பிக்ஷக்கள் தங்கும் பௌத்த விகாரம் ஒன்று. அதில் ஓர் அறையில் உபகுப்தர் ஆசனத் தமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் ராதை வணங்கி நிற்கிறாள்.] 

உபகுப்தர்: ஏதாவது விசேஷமுண்டா? 

ராதா : தங்களைத்தான் அடியாள் தேடிவந்தேன். 

உபகுப்தர் : (மௌனம்) 

ராதா: (அவரையே சற்றுநேரம் கண்ணிமையாது பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தனக்குள்) இத்தகைய சுந்தர புருஷர் வாசவதத்தையின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? 

உபகுப்தர் : விசேஷ முண்டானால் சொல். 

ராதா: நேற்றிரவு முழுதும் என் எஜமானி தங்களுடைய வருகைக்காகக் காத்திருந்தாள். 

உபகுப்தர் : ஓஹோ! 

ராதா: தாங்கள் வராததைக் கண்டு மிகுந்த ஏமாற்ற மடைந்தாள். அவளுடைய வதனம் வாடி விட்டது! உடல் மெலிந்து விட்டது! அழகு நலிகிறது! 

உபகுப்தர் : அப்படியா? எனது வரவை அவ்வளவு தூரம் விரும்புகிறாளா? 

ராதா : ஐயோ! அதை எப்படி நான் உங்களுக்கு விளங்க வைப்பேன்? 

உபகுப்தர்: என்னை வரவேற்க அவள் தயாரா யிருந்தாளா? 

ராதா : ஆமாம்,தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டிருந்தாள். 

உபகுப்தர் : அப்புறம்? 

ராதா: வீடு முழுதும் நன்றாய்ச் சுத்தம் செய்யப் பட்டு அழகாய் ஜோடிக்கப் பட்டிருந்தது.

உபகுப்தர்: உம்… 

ராதா: நீங்கள் எந்த க்ஷணமும் வரலாமென்று நினைத்து வாசற் கதவு இரவு முழுதும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. 

உபகுப்தர் : வாசற்கதவு மட்டுந்தானா? 

ராதா : (ஒரு குறும்பு நகைப்புடன்) தங்கள் உள்ளக் கிடக்கை எனக்கு நன்கு விளங்குகின்றது! நீங்கள் ஒரு வேளை பின்வாசல் வழியாக வருவீர்களென்று நினைத்துப் பின்புற வாசலையுந் திறந்தே வைத்திருந்தோம். 

உபகுப்தர்: (புன்முறுவலுடன்) வேறு எக்கதவுந் திறக்கப்பட வில்லையா? 

ராதா: (திகைக்கிறாள்.) 

உபகுப்தர் : விளக்கு ஏற்றப்பட்டிருந்ததா? 

ராதா. ஆமாம். அநேக தீபங்களும், தீவர்த்திகளும் ஏற்றப்பட்டு, மாளிகை ஜெகஜ்ஜோதியாய் விளங்கிற்று! 

உபகுப்தர் : ஓ, அப்படியா? நான் வந்து பார்த்தபோது வீடு தாளிடப்பட்டிருந்தது! 

ராதா: தாளிடப்பட்டிருந்ததா? வாசவதத்தையின் வீடா? 

உபகுப்தர்: ஆம், வாசவதத்தையின் வீடுதான்! ஒரு தாள் மட்டுமல்ல. நான் எவ்வகையிலும் உட்புகாதவாறு அநேக தாள்கள் இடப்பட்டிருந்தன. 

(ராதா ஆச்சரியத்துடன் விழிக்கிறாள்.) 

உபகுப்தர் : வீடு முழுதும் இருள்மயமா யிருந்தது! 

(ராதை மேலும் ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்.)

உபகுப்தர்: ஆமாம், ஒரே இருள் மயமா மிருந்தது! வாசவதத்தை நன்கு அலங்கரித்திருந்தாள் என்று சொன்னாயே; ஆனால் அவ்விருளில் அவள் மிகக் குரூபியாகத் தோன்றினாள்! 

ராதா : யார்? வாசவதத்தையா? என் எஜமானியா?

உபகுப்தர்: ஆம். வாசவதத்தைதான். அவள் இயற்கையில் மிக அழகு வாய்ந்தவளே. ஆனால் அப் பொழுது மிகக் குரூபியாகத் தோற்ற மளித்தாள்! 

ராதா : அப்படியானால் நான் சென்றுவருகிறேன். 

(வணங்குகிறாள்.) 

உபகுப்தர்: : வாசவதத்தையை அடையவேண்டுமென்று என் உள்ளம் துடிக்கிற துடிப்பை நான் உனக்கு எங்ஙனம் விளங்க வைப்பேன்! 

(ராதா பிரமித்து உபகுப்தரை நோக்குகிறாள்.)

உபகுப்தர் : ஐயோ! என் மனம் என்ன பாடுபடுகிறது! அவளுடைய உள்ளத்தை என்னால் கவர முடியுமா? அவளுடைய அன்பைப் பெறுங் காலம் எக்காலமோ? 

(பெருமூச்சு விடுகிறார்) 

ராதா: என் எஜமானியும் இவ்விதமேதான் ஏங்குகிறாள்! 

உபகுப்தர்: ஏங்குகிறாளா, இவ்விதமா? 

ராதா: (சரியாய்ப் புரிந்துகொள்ளாமல்) ஆம், தாங்கள் தயவு கூர்ந்து வருவீர்களா? 

உபகுப்தர்: ஓ! அவசியம் வருகிறேன்! 

ராதா : எப்பொழுது வருகிறீர்கள்? 

உபகுப்தர்: வாசவதத்தையிடம் செல்ல வேண்டுமென்று ஒவ்வொரு விநாடியும் என் உள்ளம் துடிக்கிறது! 

ராதா: அப்படியானால் அவசியம் இன்று வருவீர்கள்! 

உபகுப்தர் : அவள் வீட்டைச் சுத்தி செய்யட்டும்; தீபத்தை ஏற்றட்டும்! கதவைத் திறக்கட்டும்! அவசியம் வருகிறேன். 

ராதா : அப்படியே சொல்கிறேன். கருணை கூர வேண்டும்; சென்றுவருகிறேன். 

(வணங்குகிறாள்) 

மூன்றாம் அங்கம் 

[பல வருடங்கள் சென்று விட்டன. நகரத்திற்கு வெகு தூரத்திற்கப்பால் இடுகாடாயும், சுடுகாடாயும் உபயோகப்படும் ஓர் பாழ் வெளி. தன்னுடைய துர் வாழ்க்கையினால் குஷ்டநோயுற்று,அங்கங்களெல்லாம் அழுகிக் கேவலமான ஸ்திதியையடைந்த வாசவதத்தை அங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கிறாள். அவளுடைய செல்வமெல்லாம் சென்ற இடந் தெரிய வில்லை. அவளுடைய செல்வாக்கும் அங்ஙனமே. அவளுடைய அழகு? அதைச் சொல்வானேன்! அச் சுடுகாட்டுப் புழுதியில் புரண்டுகொண்டிருக்கிறாள். உடல் வேதனை பொறுக்க மாட்டாமல் அரற்றுகிறாள்.]

வாசவதத்தை : ஐயோ! ஐயோ! வேதனை பொறுக்க முடியவில்லையே! ஆ! இப்பாழும் சுடுகாட்டில் கொண்டு வந்து போட்டுவீட்டார்களே! தரை கொதிக்கின்றதே! என் முதுகெல்லாம் கொப்பளித்து விட்டதே! (திரும்பிப் படுக்கிறாள்.) ஐயோ! எந்தப் புறந் திரும்பினாலும், சூடு பொறுக்க முடியவில்லையே! இந்தக் கடைசிக் காலத்தில் படுத்திருக்க ஒரு குடிசை நிழல் கூட இல்லாமல் போய்விட்டதே. ஆ! கடவுளே! நானிருந்த நிலையென்ன? இப்பொழுது படுங் கஷ்டமென்ன? எனக்குக் கை அமுக்குவதற்கு எத்தனை பேர், கால் அமுக்குவதற்கு எத்தனை பேர், நூற்றுக்கணக்கான சேடிகளுடன் நான் இன்பவாழ்வு வாழ்ந்தேனே! ஐயோ, இப்பொழுது என்னை ஏனென்று கேட்பார் ஒருவருமில்லையே! ஆ கடவுளே! 

(ஒரு கழுகு வந்து அவளுடைய ஸ்தனத்தைக் கொத்தித் தின்கிறது, அதைத் துரத்துவதற்கு வீணில் முயற்சி செய்கிறாள். மேலும், மேலும் கொத்தித் தின்கிறது.) 

வாசவதத்தை: ஏ! ஈசா ! என் கதி இப்படியுமா ஆக வேண்டும்? இன்று என்னைச் சுற்றிப் பருந்துகளும், கழுகுகளும் வட்டமிடுகின்றன! என்னே என் விதியிருந்தவாறு! என்னே மாய வாழ்க்கை! 

(கழுகு மீண்டும் கொத்துகிறது.) 

வாசவதத்தை : இதை விரட்டுவதற்காவது ஒருவரும் வரமாட்டார்களா? எனக்கு உதவி செய்வோர் ஒருவருமில்லையா?ஐயோ! இப்படியா நான் அனாதையாய்ச் சாகவேண்டும்? என் சொத்து எங்கே? சுகமெங்கே? வீடெங்கே? வாசலெங்கே? என் அழகெங்கே? என்னைச் சூழ்ந்திருந்த மன்னர்களும், பிரபுக்களுமெங்கே? ஐயோ! ஐயோ! வலி பிராணன் போகிறதே. 

(வலி பொறுக்க முடியாமல் துடிக்கிறாள்.) 

வாசவதத்தை: வாழ்க்கை! மாய வாழ்க்கை! 

(அச்சமயம் உபகுப்தர் அங்கு வருகிறார்.) 

உபகுப்தர்: (அன்பு மிகுந்த குரலில்) வாசவதத்தை! வாசவதத்தை! 

வாசவதத்னத: ஐயோ ! ஆ! ஐயோ! 

உபகுப்தர் : வாசவதத்தை! 

வாசவதத்தை: இவ்வளவு அன்பான குரலை நான் கேட்டு வெகு நாட்களாய் விட்டனவே! யார் என்னை இவ்வளவு அன்பாய்க் கூப்பிடுவது?

உபகுப்தர்: வாசவதத்தை, என்னைத் தெரியவில்லையா உனக்கு? 

வாசவதத்தை : என் பார்வை எல்லாம் மழுங்கி விட்டது. தாங்கள் யார் என்று தெரிய வில்லையே!

உபகுப்தர் : யாருடைய வருகைக்காகப் பல வருடங்கள் காத்திருந்தாயோ, அந்த உபகுப்தனே நான்!

வாசவதத்தை : சுவாமி! சுவாமி! உபகுப்தரா! உபகுப்தரா! என் காதுகளை நம்ப முடியவில்லையே!

உபகுப்தர் : ஆம், அம்மா வாசவதத்தை! உபகுப்தன் தான் வந்திருக்கிறேன். 

வாசவதத்தை : அரசர்களும் பிரபுக்களும் என்னுடைய அழகுக்காகப் போட்டி போட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. அக் காலத்தில் எல்லாம் வராமல், நாய்களும், நரிகளும், கழுகுகளும், காகங்களும், என் உடலைப் பற்றி இழுத்துக் கடித்துத் தின்னும் இக்காலத்திலா தாங்கள் வர வேண்டும்? இத்தகைய ஸ்திதியிலா தாங்கள் என்னைப் பார்க்கவேண்டும்? ஐயோ! வல்விதியே! 

உபகுப்தர்: அவர்கள் வரவேண்டிய காலத்தில் அவர்கள் வந்தார்கள். நான் வரவேண்டிய காலத்தில் நான் வந்திருக்கிறேன். இதில் என்னம்மா ஆச்சரியம்? 

வாசவதத்தை : உபகுப்தருக்குச் சமீபத்தில் நான் இருக்கிறேன் என்று நினைப்பதற்குக் கூட எனக்கு வெட்கமா யிருக்கிறதே. இப்பொழுது நான் அவ்வளவு குரூபியா யிருக்கிறேனே, சுவாமி!

உபகுப்தர் : அழியுந் தன்மைக்கான அழகை இழந்த தற்கு ஏனம்மா வருந்துகிறாய்? அழியாத அழகைப் பெறுவதற்கு முயற்சி செய்.

வாசவதத்தை: அழியாக அழகு! – அது உலக இயற்கைக்கே மாறானதல்லவோ சுவாமிகளே!

உபகுப்தர் : அழியாத அழகு! மாறாத இளமை! குன்றாத செல்வம்! இவைகளைக் கொடுக்கவல்ல மார்க்கம் ஒன்றிருக்கிறது! 

வாசவதத்தை: சுவாமி, தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் மீண்டும் இளமையும், அழகும் பெறலா மென்றா சொல்கிறீர்கள்? 

உபகுப்தர்: ஆம், முன்னைவிட அதிக இளமையும், அழகும் பெறலாம். அது என்றும் அழியாது!

வாசவதத்தை: அதைக் கொடுக்கவல்ல மஹான் யாரோ? அம்மார்க்கம் எது சுவாமி? 

உபகுப்தர்: அவர்தான் பகவான் புத்தர்! அவருடைய பூத உடல் மறைந்து இன்று அநேக நூற்றாண்டுகள் ஆகின்றன.ஆயினும் அவருடைய அருள், அவருடைய அன்பு, அவருடைய தூய்மை இவ்வுலகம் முழுதையும் ஆட்கொண்டிருக்கிறது! 

வாசவதத்தை: புத்த பகவான் எங்கே? இப்பதிதை எங்கே? அத் தூய்மையான மார்க்கம் எங்கே? எங்ஙனம் பெற அவருடைய அருளை நான் முடியும், சுவாமி? 

உபகுப்தர் : பாவிகளுக் கெல்லாம் அபயமளிக்கும் அருட் சாகரம் புத்தர்! ஹிருதய பூர்வமாக நீ விழைந்தால், அவருடைய அருள் உனக்கும் கிடைக்கும். அவருடைய சத்சங்கத்தில் சேர்ந்து விடு. அப்பெருமானைப் பூஜி. அவருடைய போதனைகளைப் பின்பற்று.அதுவே உனக்குச் சாந்தி கொடுக்கும்! 

வாசவதத்தை: அடியேனை ஆட்கொள்ள வந்த பிரபு: குருநாதா! அப்படியானால் இப் பாவியைப் புத்த பகவானின் சத் சங்கத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பீர்களா, சுவாமி? 

உபகுப்தர் : அப்படியே! 

(மிகுந்த பரிவுடனும் அன்புடனும் வாசவதத்தையை தூக்கிக்கொண்டு பாடலிபுத்திரத்திலுள்ள பௌத்த விஹாரத்தை நோக்கிச் செல்கிறார்.) 

[திரை] 

– உபகுப்தர் (நாடகங்கள்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *