சமையல்காரன்




(‘இல்லாள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது.)
மனைவி மரகதத்தின் காரியங்கள் முடிந்ததும், மகள்கள் இருவரும் சபரிநாதனை தங்களுடன் வந்து இருக்கும்படி வருந்தி வருந்தி அழைத்தனர்.
ஒரு மாற்றத்திற்காக ஹைதராபாத் மகள் வீட்டில் சில நாட்களும்; பெங்களூர் மகள் வீட்டில் சில நாட்களும் இருந்துவர எண்ணிக் கிளம்பிச் சென்றார்.
மகள்கள் இருவரின் அவசர வாழ்க்கை அவருக்கு மிகவும் அலங்கோலமாகத் தோன்றியது.
காலையில் ரொட்டிகளைத் தின்றுவிட்டு பேரக் குழந்தைகளும் மருமகன்களும் ஸ்கூலுக்கும், ஆபீஸுக்கும் ஓடுவார்கள். சபரிநாதன் இல்லாவிட்டால் மகள்களுக்கு மத்தியான உணவு தயாரிக்கிற வேலையே கிடையாது. எதையாவது தின்றுவிட்டு சும்மா இருப்பார்கள். ஆனால் “உங்களுக்கு பிடிச்சதை சொல்லுங்கப்பா, செஞ்சி தரேன்…” என்று கேட்கத்தான் செய்தார்கள்.
இரவில் மொபைலில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்வார்கள். கண்டேன் கண்டேன் என்று பீஸாவை ரசித்துச் சாப்பிடுவார்கள். மைதாமாவு. கண்றாவி…
ஒரு மரபுக்குக் கட்டுப்பட்டவர் மாதிரி, இரண்டு மகள்கள் வீட்டிலும் இருந்துவிட்டு சரியாக முப்பத்தி ஆறாவது நாள் சபரிநாதன் திருநெல்வேலிக்கு ரயில் ஏறிவிட்டார். ரயில் கிளம்பி தனித்து விடப்பட்டதும், தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை மரகதம் இல்லாமல் தொடரப்போவது குறித்து மலைத்தார்…
வாழ்க்கை என்பது மனைவியோடு வாழ்கிற நிலை மட்டும்தானா என்ற ரகசிய கோபம்கூட அவர் மன ஆழத்தில் எழுந்தது. அதே நேரம், மனைவியை இழந்ததில் வாழ்வின் மிக முக்கிய பிடிமானம் ஒன்றைப் பறிகொடுத்துவிட்ட வெறுமை உணர்வும் நடுநிசித் தெரு விளக்குப் போல எரிந்து கொண்டிருந்தது. சம்பவங்களின் கோர்வைதான் வாழ்க்கை. அதில் மரகதத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு துக்கமான சம்பவம்…
அந்த நீண்ட ரயில் பயணம் சபரிநாதனின் மனதில் பெரிய பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியிருந்தது. அதே எண்ணத்துடன் ஊருக்கு வந்து இறங்கினார். பெரிய பூட்டுப் போட்டு பூட்டிக் கிடந்த அவருடைய அத்தனை பெரியவீட்டைத் திறந்தபோது அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.
மரகதம் இல்லாத வெற்றுக் கூடத்தையும், தூசி படிந்து கிடந்த சமையல் அறையையும் பார்த்ததும் தோளில் கிடந்த துண்டை எடுத்து வாயைப் பொத்திக்கொண்டார். எந்தத் தாட்சண்யமும் இல்லாமல் மரணம் வந்து போயிருந்த அவரின் வீட்டைப் பார்க்க அவருக்கே தாங்கவில்லை. வீட்டின் ஓவ்வொரு இடமும் மரகதத்தைப் பற்றிய ஒவ்வொரு நினைவுகளையும் ஞாபகப்படுத்தின. நினைவுப் படிமங்கள் அலை அலையாய் வந்து மோதின.
வெளியூர்களில் இருந்து அவருடைய மதினிகள், சித்திகள், அத்தைகள் என்று ஆள் ஆளுக்கு வந்து இரண்டொரு நாள் இருந்து அவருக்கு சமைத்துப் போட்டார்கள். நடைமுறையில் அதற்குமேல் யாராலும் அவரோடு இருந்து சமைத்துப் போட்டுக்கொண்டிருக்க முடியவில்லை. சபரிநாதனும் அதை விரும்பவில்லை.
சம்பளத்துக்கு சமைத்துப்போட நல்ல சமையல்காரனாக தேட ஆரம்பித்தார். அவருக்கே சமையல் தெரியும். ஆனால் ஒரு அவசரத்துக்கு ஒருநாள் இரண்டுநாள் சமைக்க முடியுமே தவிர சமையலை தொடர்ந்து செய்ய அவருக்கு இஷ்டமில்லை. சமைத்துக்கூட விடலாம்; ஆனால் சமைத்த பாத்திரங்களை கழுவும் வேலை மிகவும் அயர்வானது.
அதனால் வெளியூரிலிருந்து ஒரு சமையல்காரனை வரவழைத்தார். அவன் பெயர் அருணாசலம். ஆனால் அவன் வேலைக்கு வந்த முதல் மாதமே சம்பளத்தைத் தீர்த்து அனுப்பி வைத்துவிட்டார். அந்த அருணாசலம் வாரத்திற்கு ஒரே ஒருநாள்தான் குளித்தான். அது சரிப்படவில்லை சபரிநாதனுக்கு. அவரும் சரி; மரகதமும் சரி தினசரி தினமும் இரண்டு வேளை குளியல் போடுகிறவர்கள். அதுவும் மரகதம் காலையில் குளித்து விட்டுத்தான் அடுப்பையே தொடுவாள். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்நானப் பொடியை போட்டுத் தேய்த்து தேய்த்து குளித்து அவளுடைய உடம்பே துலக்கிய செப்புப் பாத்திரமாக மினுமினுக்கும். ஆற்றுத் தண்ணீருக்கு ஒரு வாசனை; கிணற்றுத் தண்ணீருக்கு ஒரு வாசனை என்று இருப்பதுபோல மரகதத்தின் உடம்புக்கென்றே ஒரு தனி வாசனை இருக்கும்.
அந்த வாசனையை நுகர்ந்து நுகர்ந்து பழகிப் போயிருந்த சபரிநாதனுக்கு அழுக்கு வாசனை தூக்கலாக இருக்கிற அருணாசலம் போன்ற சமையல்காரனை எப்படி சகித்துக்கொள்ள முடியும்…!?
அடுத்த ஆளை கொஞ்சம் யோசனை செய்து பார்த்த பின்தான் முடிவு செய்தார். “தினசரி குளிப்பியா?” என்று முதலிலேயே கேட்டுத் தெரிந்து வைத்துக்கொண்டார். ஆனால் அதைக் கேட்டு வைத்து என்ன செய்ய? இரண்டாவதாக வந்த சமையல்காரன் குமரேசனுக்கு வாரத்திற்கு ஒருநாள் உடம்புக்கு ஏதாவது வந்துவிடும். ஒருநாள் தலைவலி; இன்னொரு நாள் வயிற்று வலி; மற்றொரு நாள் பேசக்கூட முடியாமல் பல்வலி!
“உனக்கு வால் இல்லை… இருந்திருந்தால் வாலிலும் ஏதாவது வலி வந்திருக்கும்…” என்று எரிச்சல் தாங்காமல் ஒருநாள் சபரிநாதன் சொன்னாரோ இல்லையோ, அந்தக் குமரேசன் அவன் பாட்டுக்கு வீட்டை விட்டு ஓடிவிட்டான். வேலையை ராஜினாமா செய்து விட்டதாக அவன் சொன்னதுகூட பக்கத்து வீட்டுக்காரரிடம்தானே தவிர, சபரிநாதனிடம் இல்லை…
கவலையே படவில்லை சபரிநாதன். அவரைப் பொறுத்தவரையில் கூரைமேல் இரையைப் போட்டால் ஆயிரம் காக்கா. ஒரு குமரேசன் போனால் இன்னொரு சுந்தரேசன்..! ஆனால் என்ன ஒரு இழவு, இன்னொரு சுந்தரேசன் வந்து சேரும் வரை சமையல் கரண்டி மறுபடியும் அவர் கையில் ! இந்த மாதிரியான நேரத்தில் அவருக்கு திடீரென்று மரகதத்தின் மேலும் கோபம் வரும். ‘இப்படிக் கரண்டியை கையில் கொடுத்து விட்டுப் போய்விட்டாளே பாதகத்தி…!’
உடனடியாக அடுத்த சமையல்காரன் யாரையும் ஏற்பாடு செய்யப் பிடிக்காமல் கொஞ்ச நாள் சபரிநாதன் கடுப்புடன் கரண்டியை கையில் அவரே வைத்திருந்தார். அவரைப் பொறுத்த வரையில் முதலில் சமையலுக்கு வந்த குரங்கு அழுக்குப் பிடித்த குரங்கு; இரண்டாவதாக வந்த குரங்கு ஒரே சீக்குப் பிடித்த குரங்கு; மூன்றாவது குரங்கு எப்படி இருக்குமோ, ஏது பண்ணுமோ…!
ஆனால் சபரிநாதன் பயந்த மாதிரி மூன்றாவது குரங்கு மோசமாக இல்லை. குரங்கு நீட்டாக இருந்தது. குரங்கின் பெயர் சிவக்குமார். நாற்பது வயசு. ஊர் பாலக்காடு. சிவக்குமாரை நேரில் பார்த்ததும் சபரிநாதனுக்குத் தெரிந்து விட்டது. சிவக்குமாரை குரங்கென்று சொல்லக்கூடாது.
சிவக்குமார் பாலக்காட்டில் சின்னதாக சொந்த ஹோட்டல் நடத்தி எப்படியோ எதனாலோ நொடித்துப் போனவர். எது எப்படி இருந்தால் என்ன? சிவக்குமார் வந்த நேரம் நல்ல நேரமோ என்னவோ சபரிநாதனுக்கு அவருக்கும் நன்றாக ஒத்துப் போய்விட்டது.
மனைவி மரகதம் இறந்தபிறகு அவரிடம் சுய இரக்கம் பெரியதாக வந்து ஒட்டிக்கொண்டது. மரகதம் இருந்த வரைக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது என்ற பிரக்ஞை அவருக்குள் ஒருநாள்கூட வந்தது கிடையாது. ஆனால் மரகதம் போய்ச் சேர்ந்த பிறகு அந்தப் பிரக்ஞை வராத நாள் ஒன்று கூடக் கிடையாது.
யார் வீட்டிலாவது கல்யாணம் காட்சியென்று பத்திரிகை வைக்க வந்தால், “நமக்கு எதுக்குங்க கல்யாணமும் காட்சியும்… அவளே போயாச்சி…” என்று முக்குவார் அல்லது முனகுவார். அதைக்கேட்டு வந்தவர்கள், “பாவம் அண்ணாச்சி, அவுகளுக்கு என்ன இருந்து என்ன செய்ய… மதினி போனாங்க, அண்ணாச்சிக்கு நிம்மதி போச்சி…” என்று பாவப்பட்டு சொல்லும்போது சபரிநாதனுக்குள் பீறிடும் சுய இரக்கம் அவருடைய மனசுக்கு ரொம்ப இதமாக இருக்கும்.
மரகதம் இருந்தவரை உடம்புக்கு என்ன வந்தாலும் கலங்க மாட்டார். படுக்கையிலும் சாய்ந்திருக்க மாட்டார். போர்த்திக்கொண்டாவது வயலுக்கும் தோட்டத்திற்கும் ஒரு நடை போய்விட்டு வருவார். இப்போது சிறிய காய்ச்சல் வந்து விட்டால்கூட இழுத்துப் போர்த்திப் படுத்து விடுகிறார்.
ஒருநாள் அவருக்குத் திடீரென்று தலை சுற்றி விழப்போவது மாதிரி இருந்தது. டாக்டரிடம் ஓடினார். ரத்தக் கொதிப்பு; ஷுகர் இரண்டும் இருப்பது அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது. நடுங்கிப் போனார். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கள் மேகக் கூட்டம் போல சர சரவென்று மனசுக்குள் வந்து குவிந்துவிட்டன. அவருள் பயமழை கொட்டியது. அதனால் பய வெள்ளமும் கரை புரண்டோடியது. வெள்ளத்தில் இருந்து கரை ஏறத்தானே பார்க்க வேண்டும்? சபரிநாதன் அதைச் செய்யவில்லை. பய வெள்ளத்தில் விழுந்து புரண்டு அவர்பாட்டுக்கு நீச்சல் அடித்துக் கொண்டிருந்தார்.
இப்படிப் பயப்படலாமா என்று யாராவது கேட்டால், “பெண்டாட்டியை வாரிக் குடுத்திட்டு நிக்கிற மனுசன் பயப்படாம என்ன செய்வான்..” என்ற சோகப்பாட்டு படுவார்…!
இப்படி ஓடிக் கொண்டிருக்கிறது சபரிநாதனுடைய நாட்கள்…