ஊக்குவிப்புக்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2023
பார்வையிட்டோர்: 1,734 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பெயின்ட் அடிச்ச செவரெல்லாம் நாசமாகுது” என்று அவர்கள் சாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ரபாய்டீனின் மனைவி ஹாரிசா, மகள் ரிசானா, மருமகன் சீடின்…. கத்தல்கள் ஓய்வதாகத் தெரியவில்லை .

“கை முறிஞ்சி போகோனும்…..” ரிசானாவின் சாபம்.

“கைக்கி சூடு போட ஓணும்….” ஹாரிசா

“செவத்துல கீத்துரத நா கண்டா கைய வெட்டிப் போடுவன்….” சீடினின் சீற்றமும் குமுறலும்.

ரபாய்டீன் மட்டும் ஓரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தில் அவர் மௌனிதான் எப்பவுமே!

ஹாரிசாவின் கோபம் அடங்குவதாக இல்லை .

“வெள்ளென காட்டிம் எழும்பின சீருக்கு சோக்கட்டிலதான் முழிக்கிறது. செவர்ல இனி எடமில்ல கீற….”

பேரன் சப்வான் சிலையாக நின்று கொண்டிருந்தான். சுவ ரெல்லாம் கீறல்களும் சித்திரங்களும் அவனைப் பார்த்து நகைக்கின்றன.

சப்வானின் கைகளில் எல்லாம் மஞ்சள், சிவப்பு, நீலம் என்று வர்ணங்கள் அப்பிக் கிடக்கின்றன. உடைகளிலும்தான்! அலங்கோல மாக நின்றான்.

வரைந்து, அழித்து மீண்டும் வரைந்து மீண்டும் மீண்டும்…. சுவர் பொது மலசலகூடச் சுவராக இருந்தது.

“இதுக்கா எந்த வருஷமும் செவத்தில் பெயின்ட் அடிக்கிறது……?” கத்திக் கத்தி ரிசானாவின் தொண்டை கட்டிவிட்டது.

திடீரென்று மனைவி ஹாரிசாவின் கடுகடுப்பான குரலின் ஓங்காரக் கனல் கக்கும் வார்த்தைகள், ரபாய்டீனின் பக்கத்துக்குத்திரும்புகிறது.

அவர் எதிர்பார்த்ததுதான்! வழக்கமாக அவரது மனைவியின் எந்தவொரு கைகூடாத விடயமும் அவரை நோக்கித்தான் பாயும்.

ஹாரிசா சரமாரியாக வார்த்தைகளைக் கொட்டினாள்.

“நானும் ரிசானாவும் மருமவனும் எவ்வளவோ செல்லிப் பாத்தாச்சி. பெரம் பால அடிச்சும் பாத்தாச்சி, மூலமுடுக்குல இருந்த சோக்கட்டி எல்லாம் கூட்டி மூட்ட கட்டி குழிதோண்டி பொதைச்சு மாச்சி…. சப்வான் என்டா திருந்தமாட்டான். இஸ்கூலுக்குப் பெய்த்து திரும்பி வரப்போகக்கல, பேக்ல கலர் சோக்கட்டி நெறஞ்சிருக்கும்….. எல்லார்ட கண்லயும் மண்ணத்தூவி செவத்து மூலையில் புதிசா கீத்தி வச்சிருப்பான்… கள்ளத்தனமா அவன் கீத்தாம செவர்ல மொளச்சா வருது….?”

ஹாரிசா தொடர்ந்து கத்தினாள்.

“…நானும் தெரியாமத்தான் கேக்குறன்… நாங்க எவ்வளவு கத்துறம், அடிக்கிறம், செவரெல்லாம் அநியாயமா போவுது எண்டு. நீங்க மட்டும் வாய் தொறந்து ஒரு நாளாவது பேரன புத்தி செல்லி நிப்பாட்டி இருக்கா…?”

புயல் ஓய்ந்ததும் ரபாய்டீனின் நீடித்த மௌனம் இளகியது. மிகவும் நிதானமாகப் பேசினார், நகைச்சுவையுடன். “சுவர் இருந்தால்… சித்திரம் வரையத் தானே வேணும்?”

“ஆ! ரிசானா இங்க பார் இவர…!”

மகள் ரிசானா சிரித்துக் கொண்டே வந்தாள். “ட்டா….. என்ன செல்றீங்க….?”

“… இல்ல ரிசானா… சொவரில்லாத ஊட்டுக்குப் போனா என்ன எண்டுதான் கேக்கிறன்….?”

“இவருக்கு எல்லாமே பரியாசம் சிரிப்புத்தான்…”

“இது பரியாசம் இல்ல ஹாரிசா… நா ஒங்களுக்கு எப்படி வெளங்கப் படுத்துறது எண்டுதான் யோசிக்கிற….”

“இப்ப என்ன செல்ல வாரீங்க…?”

“நா… ஒருநாளும் சப்வானிடத்தில இருந்து வெளிப்படுற கலைத்திறன்கள கட்டுப்படுத்தமாட்டன். வரையும் திறமை அவனோட பிறந்த ஒன்று… அவன் சித்திரம் வரையப் பிறந்தவன். அது இறைவன் கொடுத்த பரிசு. அத பிரம்பால

அடிச்சி சாகடிக்கக் கூடாது. அநியாயம்.”

“அப்ப செவரெல்லாம் வீணாப் போனா காரியமில்லயா…? யாரு வெள்ளையடிச்சி தருவாங்க… நீங்களா?”

“சரி… சரி… நாபாத்துக்கிறன்…”

அதற்குப் பிறகு அவர்கள் தர்க்கம் செய்யவில்லை .

ரபாய்டீன் தீவிரமாக யோசனையில் ஆழ்ந்திருந்தார். சப்வான் சுவரில் கீறுவதை எப்படி நிறுத்துவது? ஒரு முடிவு எடுத்தாயிற்று.

“சப்…வா…ன்….” ரபாய்டீன் மிக்க அன்புடன் அழைத்தார்.

அவன் அவர் முன் வந்து நின்றான்.

“சப்வான் நீ வரைஞ்சியிருக்கும் கீறல்களையும் நா நல்லா பாத்துட்டன்…. வெரிகுட்… அருமையா இருக்கு…”

இதைக் கேட்டதும் அவனுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

ஆனால் ஹாரிசாவின் முன்கோபம் மீண்டும் ‘புஷ்’ என்று பொத்துக் கொண்டு சுவர்களையே எரித்துவிடுவது போல் இருந்தது.

“அவன் செவத்தில் கீத்தி நாசமாக்கி வச்சிருக்கான். இவர் நல்லமெண்டு செல்லி… இதென்ன கூத்து…”

மகள் ரிசானாவுக்கு ஏதோ ஒன்று விளங்கியது. “உம்மா… கொஞ்சம் பேசாம இருங்க. வாப்பா என்னதான் செய்யப் போறதெண்டு பாப்பமே…”

‘வெறும் கிறுக்கல்கள் என்று நோக்கினால் அவை கிறுக்கல்களாகத்தான் தோன்றும். கிறுக்கல்களுக்குப் பின்னாலும் ஒரு செய்தி இருக்கு என்று நோட்ட மிட்டால் அவை பேசும் சித்திரங்களாக செய்தி சொல்லும்…’

ரபாய்டீன் பேரனின் கைவண்ணத்தை ஆழ்ந்து ரசிக்கும் போது சில இடங்களில் அப்படியே ஸ்தம்பித்து நின்று சிலையாகி விடுவார். அவருக்கு ஒரே நேரத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் கலந்து திக்குமுக்காடச் செய்துவிடும்.

சுவர்ச் சித்திரங்களைச் சுற்றிப் பார்த்து, விறாந்தை வழியாக வந்து முன் கூடத்தின் சோபாக்களில் அமர்ந்தார்கள் பாட்டனும் பேரனும்.

ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“இனி நீங்க யாரும் கவலைப்படத் தேவை இல்லை… எனக்கு இரண்டுநாள் டைம் கொடுங்க. இனி சப்வான் சுவரில் கீறமாட்டான். நீங்கள் தாராளமாக கலர் வாஷ் பண்ணி சுத்தமாக வைத்திருங்கள்….”

ரபாய்டீன் உறுதியாகவும், சற்று அழுத்தமாகவும் வாக்களித்தார்.

காலை பத்து முப்பது. ரிசானா சப்வானுக்கு ஒரேஞ் ஜூசும், ரபாய்டீனுக்கு தேநீரும் பரிமாறினாள்.

அதைத்தொடர்ந்து ரபாய்டீன் இரண்டு நாட்களாகச் சப்வானை அவனுக்குத் தெரியாமல் கூர்மையாக அவதானித்தார். கூடுதலாக மேலும் ஒருநாள் அவதானம் நீடித்தது.

சுவர்களில் எந்தவிதமான புதிய கீறல்களும் பதிந்திருக்கவில்லை.

நான்காம் நாள் காலை எல்லாரும் முன்கூடத்தில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரபாய்டீன் பேரனைக் கூப்பிட்டு, ஒரு பெட்டி நிறையப் பெரிய அளவிலான சித்திரம் வரையும் கொப்பிகளையும், டியூப் கலர், பிரஷ் வகைகளையும் கையளித்தார்.

“சப்வான் இனிமேல் தாள்களில்தான் உன் திறமைகளைக் காட்டவேணும்… சரியா?”

“ரபாய் அப்பா, இதில நான் என்ன வரையவேணும்?” சப்வான் கேட்டான்.

“இவ்வளவு நாள் வீட்டுச் சுவர்களில் வரைந்தாய். இனித்தாள்களில் உன் திறமைகளைக் காட்டு, விருப்பமானதைக் கீறு.”

சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் கலந்து நிறக்கலவை தயாரிக்கும் முறைகளை விளக்கினார் ரபாய்டீன்.

“தேவையில்லாமல் சித்திரத் தாள்களையோ நிறங்களையோ வீணாக்கக் கூடாது” என்று ஒரு கட்டுப்பாட்டை விதிக்காமல், வேறுவிதமாகக் கேட்டார்.

“சப்வான் கிழமைக்கு எத்தனை நாளைக்கு சித்திரம் வரையலாம்?” ஒரு வினாவைத் தொடுத்தார்.

அவன் சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தான்.

“லீவு நாள் சனிக்கிழமை. சனிக்கிழமை நாளில் அரைநாள் மட்டும் போதும் தானே…!” அவன் கூறியபோது, ரபாய்டீனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அவரும் அப்படித்தான் எதிர்பார்த்தார்.

சில நாட்களுக்குப் பிறகு சப்வானை அழைத்துத் தண்டு, காம்பு இலைகளுடன் ஒரு செவ்வரத்தைப்பூ கொண்டுவரச் சொல்லியிருந்தார்.

வாடிப் போகாமல் கொண்டு வந்திருந்த தண்டை ஒரு போத்தலில் திணித்துத் தண்ணீரை நிறைத்தார்.

ரபாய்டீன் தனது அலுவலக அறையில் ஒரு மேசையை ஒழுங்கு செய்து போத்தலை நடுவில் வைத்து யன்னலைத் திறந்து விட்டார். யன்னலின் ஊடாக வெளிச்சம் பூந்தண்டில் விழும் போது ஒளி நிழல் மிகத் தெளிவாகத் தெரிந்தது.

வர்ணம் தீட்டும் போது ஒளிபடும் இடங்களுக்கு மெல்லிய மஞ்சள் நிறமும், நிழலில் மறைந்து கிடக்கும் பகுதிகளுக்குக் கருமை கலந்து வர்ணம் பூசும் முறைகளையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார் ரபாய்டீன்.

ஏலவே வர்ணக் கலவை பற்றி விளக்கி, சித்திரங்களுக்கு வர்ணம் பூசும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளையும், சித்திரம் நீர்த்தன்மையுடைய தாகவும், யதார்த்தபூர்வமாகவும் மிளிர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

மாதிரிக்கு ஒரு வெள்ளைத்தாளில் அந்தச் செவ்வரத்தைப் பூந்தண்டை இலேசாகப் பென்சிலால் உருவகித்து, பின்னர் டியூப்களில் இருந்து தேவையான நிறங்களை எடுத்து மிக அற்புதமாக வர்ணம் பூசிக் காட்டினது மாத்திரம்தான்! அரை மணிநேரத்திற்குள் அந்தத் தண்டை அப்படியே படம் பிடித்து வெட்டி ஒட்டினாற் போல அமைந்தது சப்வானின் படம். ஒளிநிழல் மிக யதார்த்தம்!

சப்வானின் அவதானத்தை மிகவும் மெச்சினார் ரபாய்டீன்.

இப்படியாகப் பல சந்தர்ப்பங்களில் குரோட்டன் தண்டு, கெனாஸ் பூ, மேசை மீது அடுக்கி வைக்கப்பட்ட ஒரு பொருட் கூட்டம் என்று வயதுக்கும் வகுப்புக்கும் மீறிய வரைதல் பயிற்சியைப் பேரனுக்கு வழங்கினார்.

படங்கள் என்று எடுத்துக்கொண்டால் இனிய மாலைக்காட்சி, காலைக்காட்சி, கடலோரக்காட்சி, வயலில் உழுதல், நாற்று நடுதல், அறுவடை என்று வளர்ச்சி யடைந்தது.

இப்பொழுதெல்லாம் சப்வான் வீட்டின் சுவர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வீட்டின் உட்சுவர்களுக்கும், வெளிச்சுவர்களுக்கும் வெள்ளை யடிக்கப்பட்டுச் சுத்தமாகக் காட்சி தந்தது.

மீண்டும் முன் கூடத்தில் சந்திப்பு. ராபாய்டீன் கேள்வி எழுப்பினார்.

“இப்ப என்ன எல்லாரும் ஊமையாகிட்டீங்க? சப்வான் சொவர்களில் கீறாததாலோ …?”

“ஆ…! போதும் ஓங்கட கெட்டித்தனம்…” ஹாரிசா விட்டுக்கொடுக்காமல் இளக்காரமாகப் பேசினாள். விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத தோரணை.

ரபாய்டீன் கம்பீரமாகக் குரல் எழுப்பினார். “ஹாரிசா, நான் ஒண்டு சொல்ல மறந்துட்டன். என்னுடைய ஆர்ட் ரூமுக்கு மட்டும் கலர்வாஷ் அடித்து அசிங்கப் படுத்தி விடாதீங்க.”

“என்ன? அசிங்கப்படுத்துறதா? அப்ப ஊட்டுக்கு கலர் அடிக்கிறது… அசிங்கப்படுத்தவா?”

“அதென்னமோ எனக்குத் தெரியாது. நீங்க ஒங்க விருப்பத்துக்கு சிலெக்ட் பண்ணும் கலர்ஸ்……. பொருத்தமில்ல…. என் பார்வைக்கு அப்படித்தான்படுது…. நா சொன்னா நீங்க கேக்கப் போறீங்களா….? என்ட ரூமை எப்படி செய்யோனும் எண்டு எனக்குத் தெரியும்…. நா பாத்துக்கிறன், ஒங்களுக்கு என்னத்துக்கு செலவு…..? ஆனா ஒன்னு….. என் ஆர்ட்ரூம், ஒங்கட கண்ணப் பறித்து வாயப் பொளக்க வைக்கும்”

“ஆ….ம்… பரவாயில்ல. மருமவனுக்கும் செலவு மிச்சந்தானே!”

அதற்குப் பிறகு அதைப் பற்றி ஒன்றும் அலட்டிக் கொள்ளாமலே ஓய்வு பெறாத காலச்சக்கரம் சப்வானை ஓர் ஓவியனாக உருவாக்கிக் கொண்டிருந்தது.

“சப்வான் கிட்டத்தில நீபாத்த இல்லாட்டி மனசில பதிஞ்ச, மறக்க ஏலாத ஒரு…. ஏதாவது ஒரு படத்த வரஞ்சி, கலர் பூசிக்காட்ட ஏலுமா….?” ரபாய்டீன் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒரு தகுதிகாண் பரீட்சை வைத்தார்.

சப்வான் சற்று யோசித்துவிட்டுச் சொன்னான். “கிட்டத்தில நா…. டி.வியில பாத்த ஒரு சீன் என்னால மறக்க ஏலாது…..”

“சரி அத வரஞ்சி காட்டு…..”

“ஓகே….. அது சிம்பள்…..”

யோசனையில் ஆழ்ந்தவன் அன்று மதியபோசனத்திற்குப் பிறகு ரபாய்டீனின் அலுவக அறையில் இருந்து வரையத் தொடங்கினான்.

நீல நிறத்தை வெள்ளையோடு குதப்பி அப்பிவிட்டு, ஏதோ செய்தான். தூரிகையால் நீரைச் சற்று அதிகமாகத் தொட்டுத் தொட்டு வானத்தின் குழப்ப நிலையை யதார்த்தமாகக் காட்டினான். ஆங்காங்கே சாம்பல் நிறமும் பூசப்பட்டது.

பாய்ந்து வரும் அலைகள் கோபாவேசங் கொண்டு மீண்டும் உயரத்திற்குப் பாய்ந்து கடலின் கொந்தளிப்பையும் ஆர்ப்பரிப்பையும் காட்டின.

தென்னை மரங்கள் வேருடன் பெயர்ந்து வீழ்வதும், வீட்டின் கூரைகள் அந்தரமாய்த் தூக்கி எறியப்படுவதும், வாகனங்களும் மனிதர்களும் தலை கீழாக வீழ்வதும்…. சோகமாய்ச் சித்தரிக்கப்பட்ட காட்சிமிக அற்புதமாய், இரண்டாயிரத்து நான்கு டிசம்பர் இருப்பத்தாறைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.

அன்று மாலை ரபாய்டீன் அந்தப் படத்தைப் பார்த்ததும் அதிர்ந்து போய் சிலையாக நின்றுவிட்டார்.

“சப்வான் ! ஆழ்கடலின் கோரத் தாண்டவம் அப்படியே கிடக்கு… பார்த்துக்கிட்டே இருக்கலாம்…. சோகத்தைக் கிளப்புகிறது”

ரபாய்டீனின் பாராட்டு சப்வானை மென்மேலும் ஊக்குவித்தது. நாட்களின் நகர்வில் ஒரு தணியாத வேகம் எப்படி வந்தது!

சப்வான் வரையும் சித்திரங்களை எல்லாம் மிக உன்னிப்பாக விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் ரபாய்டீன், “சப்வான்… நீ எங்கேயோ போய்ட்டடா” என்று உள்ளத்தில் முகிழ்ந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வருட முடிவில் பாடசாலையி லிருந்து ஒரு கடிதம் வந்தது.

பாடசாலைச் சித்திரப் போட்டியில் உங்கள் மகன் சப்வான் முதலாம் பரிசுக்குத் தெரிவாகியுள்ளார். பெற்றார் பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு தயவாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

இது ரபாய்டீன் எதிர்பார்த்ததுதான்.

அவர் சப்வானைப் பாராட்டும் போதெல்லாம் ஹாரிசா, ரிசானா, சீடின் முதலியோரின் வாய்கள் தானாகவே தாழிட்டுக் கொள்ளும். அவர்களுக்குச் சித்திரம் ஏழாம் பொருத்தம்.

ரபாய்டீன் நின்றுவிடவில்லை. தொடர்ந்தும் பயிற்சியளித்துக்கொண்டிருந்தார்.

சப்வானின் ஓவியங்களிலிருந்து அவர் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவை வெறும் பொழுதுபோக்கு ஓவியங்கள் அல்ல. ஓவியம் என்பது சம்பவங்களைக் கலை நுட்பங்களோடு வரைந்து, வெகு யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு கலை என்பதை அவன் காட்டிவிட்டான்.

வழக்கம் போல் இவ்வருடமும் நீண்ட இடைவெளிக்குப் பின் ரபாய் டீனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது!

“சேர்… இந்த வருடமும் தாங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள நவீன சித்திரப் போட்டியில் நடுவராகக் கடமையற்ற வேண்டும்…”

ரபாய்டீன் ஒருகணம் யோசித்துக் கொண்டிருந்தார்.

“சேர்… ரபாய்டீன் சேர்…”

ரபாய்டீன் பணிவுடன் இடைமறித்து, “மன்னிக்க வேண்டும் சேர்… இந்த முறை எனது பேரன் போட்டியில் பங்குபற்றவிருப்பதால் நான் நடுவராகக் கடமை யாற்றுவது பொருத்தமில்லை என்று அபிப்பிராயப்படுகிறேன்…!”

“ஆ…! அப்படியா… சந்தோசம்… இருந்தாலும் நாங்கள் அரைமணி நேரத்திற்குப் பிறகு கோல் எடுப்போம்… சிரமத்திற்கு மன்னிக்கவும்…”

சப்வான் வரைந்தால் மட்டும் போதாது. ஓவியம் சார்ந்த வரலாற்றுப் பின்னணியையும் கருத்துக்களையும் ஓரளவு படித்துத் தெளிந்திருக்க வேண்டும்

என்பதற்காகப் பல நூல்களைப் புரட்டி தேவையான குறிப்புக்களை எழுதிக் கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்புமணி…

“… ரபாய்டீன் சேர்…, உங்கள் நேர்மையான மறுதலிப்பு ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்”

“சப்வான் ஒரே செவத்தில கீத்திக் கொண்டிருக்கான்”

“செவரெல்லாம் நாசமாகிக் கொண்டிருக்கு” போன்ற கோசங்கள் இக்கட்டத்தில் வேறுவிதமாக உருவெடுக்கத் தொடங்கியிருந்தன.

“சப்வான் ஒரு டாக்டராக வரணும்.”

“சப்வான் ஒரு இஞ்சினியராக வரணும்.” இப்படியான கருத்துக்கள் மேலோங்கிக் கொண்டிருந்த கட்டத்திலும், சப்வானின் சித்திரப் பாடப் பயிற்சிக்கு ரபாய்டீனின் பங்களிப்பு சலசலப்பில்லாமல் தங்குதடைகள் இல்லாமல் நடந்துகொண்டிருந்தது.

சப்வானை எப்படியும் ஒரு நுண்கலைக் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும் என்பது அவரது அவா.

“என்ன நீங்க இப்படி கவனமில்லாம ஈந்தா சப்வான் டாக்டருக்குப் படிக்கிறது… எப்படி? கூப்பிட்டு தலைய தடாவி … புத்திமதி சொல்றதில்லயா?”

“ஹாரிசா அத அவன்தான் யோசிச்சி முடிவெடுக்கணும். நீங்களோ நானோ புத்திமதி சொல்றத உட்டுட்டு, அவன, கூப்பிட்டு கேளுங்க.”

“சப்வான்….! சப்வான்….” ஹாரிசா உரத்துக் கூப்பிட்டாள். அவன் வந்து நின்றான்.

ரபாய்டீன் குரல் கொடுத்தார்.

“இங்காள பார் சப்வான்…. உம்மா, டடா, உம்மம்மா…. எல்லாரும் நீபெரிய டாக்டரா வரணும்னு விரும்புறாங்க… நீ என்ன சொல்ற? உன்ட விருப்ப மென்ன….?” ரபாய்டீன் உருக்கமாகவே வினாவெழுப்பினார்.

தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த மகத்தான கேள்விக்கு அவன் உடன் பதில் சொல்வது எப்படி?

“யோசிச்சி சொல்றன்” என்று மட்டும் நிதானமாகக் கூறிவிட்டு நழுவினான், அன்று மாலை அவன் தன் முடிவைச் சொன்னான்.

“உம்மம்மா…. மொதல்ல நான் ஓ.எல். சோதனை நல்லா செய்யணும். அதுக்குப் பொறகு ஏ.எல்…. இதில் வார மார்க்கை வச்சித்தான் நா டொக்டரா இஞ்சினியரா எண்டு முடிவு எடுக்கணும். எல்லாம் ஏ.எல். ரிசல்ட்லதான் இருக்கு. அதுக்கு காலம் இருக்குத்தானே! ஆனா ஒன்னமட்டும் சொல்ல ஏலும். இதுவரை காலமும் என்னோடு ஒட்டிக்கொண்டு வந்த ஓவியத்தை மட்டும் கைவிட மாட்டன்.”

இதைக் கேட்டதும் ரபாய்டீன் உள்ளூர மகிழ்ச்சியால் பூரித்துப் போய் நின்றார். வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நாட்கள் நகர்ந்தன. ரபாய்டீன் திட்டமிட்டபடி தமது விசாலமான அலுவலக அறையை ஒரு சிறந்த சைத்திரிகனின் விஷேட கூடமாக மாற்றிவிட்டிருந்தார்.

அறையின் வலது பக்கச் சுவரில் ஒரு சாதாரண பசுமை வெளி. ஓரிரு மரங்கள். மலை, மலையை ஊடறுத்துக் கொண்டு ஒரு மலையூற்று. அதேபோல இடதுபக்கத்திலும் ஒரு சூரியோதயக் காட்சி. பளீரென்று அறையை ஒளி மயமாக்குவது போல். அதுதான் விஷேசம். பார்வையாளர்களை ஸ்தம்பித்து நிற்க வைக்கும் சக்தி எப்படி வந்தது?

மாகாணப் போட்டியில் முதலிடம் பெற்ற சப்வான் அகில இலங்கை ரீதியில் பங்குபற்றுவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

ரபாய்டீனின் வழிகாட்டலில் சப்வான் ஆக்கிய சுவர் ஓவியங்கள் இரண்டையும் பார்த்ததும் அதன் அழகு அல்லது ஏதோவொரு கவர்ச்சி ஏற்படுத்திய கிறக்கம் நீங்குவதற்கு நீண்டநேரம் பிடித்தது ஹாரிசாவுக்கு.

“பேரன் சப்வானின் ஆர்வமும் திறமையும்தான்” ரபாய்டீன் அறிமுகப் படுத்தும் போது, ஹாரிசாவல் நம்ப முடியவில்லை .

நடந்த, நடந்து கொண்டிருக்கிற அவலங்களைப் படைத்து, ஓவியக்கலை காலத்தின் கண்ணாடி என்பதை நிரூபிக்கின்றன!

உதாரணத்திற்கு 1958ம் ஆண்டு கண்டி பெரஹராவில் ஏற்பட்ட யானைக் குழப்பத்தால் மக்கள் சிதறி ஓடிக் கண்டியின் வாவியில் விழுந்து மரணத்தைத் தழுவியதும்… யானை மிதித்து இறந்ததையும் தத்ரூபமாக சித்திரமாக்கி யிருக்கிறான்.

பொதுவாகச் சொல்லப் போனால் பல கோணங்களில் இருந்து பார்க்கும் போது சப்வானின் சித்திரங்களில் அவனை அறியாமலேயே சமகால அவலங்கள் ஓவியங்களாகப் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.

பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்து பேயாட்டம் ஆடும் சித்திரமும், மக்கள் கூட்டம் வாழ்வதற்காகச் சிதறி ஓடும் சித்திரமும் மனதைக் கௌவிப் பிடிக்கின்றன!

“ஓவியத்தில் இவ்வளவு விசயங்கள் அடங்கி இருக்கா?” ரிசானாவின் ஆர்வம் பொங்கி எழுந்தது.

ஓவியர்களின் திறமைகளை ஓவியக் கண்காட்சிக்குப் போனால்தான் பார்க்கலாம். சப்வானின் சில படங்கள் கண்காட்சியில் வைக்கக் கூடிய தகுதி இருக்கு. அதற்கு நா ஒழுங்கு செய்வேன்.

பிற்பகலில் சமையல் வேலைகளெல்லாம் முடிந்த பிறகு மீண்டும் நடு கூடத்தில் ஒன்று கூடல்….

சப்வானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் ‘ஆட்டா வந்து நின்றது. மணி இரண்டுக்கு ஐந்திருக்க.

சப்வான் பாடசாலையிலிருந்து வந்து இறங்கினான்.

“ஓவியரே வருக! வருக” ரபாய்டீன் வரவேற்றார்.

வந்ததும் முகம் கை கால்கள் அலம்பி, உடைமாற்றி வந்து அமர்ந்தான்.

அடுத்து பகலுணவு.

அதற்கு முன்ஹாரிசா தொடங்கினாள். “சப்வான்…. ரபாய்டீன் அப்பா ரூம்ல நீ கீத்திருக்கிற படம் சுப்பரா இருக்கு. அத மாதிரி இந்த ஹோல்லயும்… சொவர்ல படம் வரைஞ்சா நல்லாருக்கும் சப்வான்… ஊடு பசுந்தா வரும்.”

சப்வான் உரக்கச் சிரித்துவிட்டு மௌனம் சாதித்தான். வலது கை முஷ்டியிலுள்ள மாறாத வடுவை பார்த்துக் கொண்டிருந்தான். அது சுவரில் கீறிக் கொண்டிருந்தமைக்காக ரிசானா போட்ட நெருப்புச் சூடு. மனதை விட்டும் நீங்காத

ஞாபகச் சின்னம். முதற் தடவையாகக் கிடைத்த ஓவியப் பரிசு.

அப்புறம் நீடித்துக் கொண்டிருந்த அந்த மௌனத்தை உடைத்துக்கொண்டு அவன் கேட்டுவிட்டான் ஒரு கேள்வி.

“என் கீறல்கள் உங்களுக்கு அழகாக இருக்கா? அது எப்படி?”

ஹாரிசா ரபாய்டீனைப் பார்த்துக் கேட்டாள். “என்ன, நீங்களாவது சொல்லுங்க….”

பழைய நினைவுச்சுழியில் மூழ்கியிருந்த சப்வானின் ஆணித்தரமான குரல் எல்லாரது மனங்களையும் உசுப்பி விட்டது.

“டடா என்ன சும்மா இருக்கார். நா சொவர்ல கை வச்சா கைகளை வெட்டிப் போடுவாரோ!”

“சுவர்ல தொங்கிக் கொண்டிருக்கும் பிரம்பு உம்மாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கு. நா திரும்ப சொவர்ல கீறினா…. அடுத்த கை முஷ்டிக்கும் பரிசு கிடைக்குமோ?”

“உம்மம்மாவின் தொண்டை கிழியும் கத்தல்கள் ஓஞ்சி போயிருச்சோ!”

ரபாய்டீன் குறுக்கிட்டார். “சப்வான்… சரி… சரி… எல்லாத்தையும் மறந்துடு… இப்பதான் எல்லாரும் உன் படங்களுக்கு அடிமை ஆயிட்டாங்களே…!”

இன்றைய சமுதாயத்தின் அவலங்களை ஓவியமாக்கி நாளைய சமுதாயத்தின் சிந்தனைக்கு விடவேண்டும்.

அதுக்கு இனித்தான் நா நுண்கலைக் கல்லூரியின் விசாலமான பாட நெறியை முறையாகப் படித்துப் பயிற்சி பெறவேண்டும்!

அவன் திடசங்கற்பம் செய்து கொண்டான்.

முன் ஹாலில் ஹாரிசா அமர்ந்திருந்தாள். பக்கத்தில் ரிசானா சோகமாய்! நேரெதிராக ரபாய்டீனும் சப்வானும்.

மௌனம் நீடித்தது.

“அப்ப முன் ஹோல் டெக்கரேஷன்?” ஹாரிசாவின் ஆவல்.

சப்வான் தன் வலது கைமுஷ்டியில் பதிந்துள்ள மாறாத அந்த வடுவைத் தடவிக் கொண்டே சொன்னான். “… மன்னிக்கணும் என்னால முடியாது.”

– மல்லிகை ஜூன்-2012

– கொங்கணி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2014, எஸ்.கொடகே சகோதரர்கள் பிரைவேட் லிமிடெட், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *