(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கல்லூர்க் கிராமம் விடியலுக்கு முன்னே பரபரப்புக்கு ள்ளாகியிருந்தது. இதமான சீதளக்காற்று மரங்களைத் தழுவி வந்து வீசியது. முன் தினம் இரவு அர்த்தராத்திரியில் நிகழ்ந்த அந்தக் கொடூரம், கிராமவாசிகளின் உரையாடலுக்கு கருப்பொருள் ஆனது. சம்பவத்தை செவியுற்ற கணத்திலிருந்து என் மனம் அதிர்ந்து துடிக்கிறது. இது போன்ற துர்ச்சம்பவங்களால், எனக்குள் இருக்கும் இலக்கிய ஆன்மா விகசித்து, அலறத் தொடங்கவிடும். கண்ணுக்கு நேரே சாட்சியாகிப் போன வேண்டாத நிகழ்வுகள், மனதில் சங்கடத்தை தோற்றுவிக்கின்றன.
நிஜங்கள் மட்டும் கதைகளாகி விடுமா? இதை ஒரு விவாததத்திற்காக மட்டுமே, எழுப்பிப் பார்த்தாலும், கற்பனை களின் ஆதாரத்தினால் மட்டும் எழுதுபவை எப்படி யதார்த்த இலக்கியமாகிவிடும்? என்ற கேள்வியும் கூடவே வருகிறது.
ஜெயகாந்தன் சொன்னது ஞாபகத்தில் இழை பின்னுகிறது. “கதைகள் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், உண்மை இல்லாமல் கதையே இல்லை !” என்றார். நிஜம் கலந்த கற்பனை, சிறந்த விவரணை, உயிர்த்துவமுள்ள கதையோட்டம், இயல்பான பேச்சு வழக்கு இவற்றின் கலவைதானே யதார்த்தக் கலைப் படைப்புக்கள்? கற்பனை என்பது வாழ்வின் சாரங்களிலிருந்து விலகி ஓடும் பிம்பங்களா?
நிஜத்தின் தீவிர வெளிப்பாடுகள், எதிர்கொள்ளலில் கசப்பானவைகளா? எந்தச் சிந்தனைக்கும் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், கருத்தியலுக்கு அறிவார்த்த தளத்தில் வரம்பிருக்கிறது. அதிர்ஷ்ட சீட்டை வாங்கிய ஒருவன், பரிசு தனக்குத்தான் என்ற கற்பிதத்தில் கற்பனைச் சுகம் காண்கிறான். அதிர்ஸ்டம் என்ன எல்லோரினதும் கடைக்கண் பார்வைக்கும் எளிதில் வசியமாகிவிடும் மலினப் பொருளா?
கற்பனை என்பது வெறும் மாயை என்ற இறுதி ஸ்திதிக்கு வந்துவிட முடிகிறதா நம்மால்? கற்பனைகளும், கனவுகளும் நிஜமாகிப் போன சாட்சியங்கள் இருக்கிறதே, தாராளமாய் சிருஷ்டிப் படைப்புகளுக்கு இவையிரண்டும், ஆதார சுருதிகள் தாம். வாழ்விற்கும், இருப்பிற்கும் கூட, இவை இரண்டுக்குமான இடைவெளி குறுகிப் போனது.
காக்கைத் தீவு கடற்கரைக் காட்டுக்குள், ரீட்டா ஜோன் என்ற மும்பாய் அழகியை காடையர்கள் கடத்திக் கொண்டு போய், சித்திரவதைகளுடனான, பாலியல் வல்லுறவும், படு கொலையும் நிகழ்ந்ததே! இது நடந்து பல நாட்கள் கழியும் வரை ஊண் உறக்கமின்றி, நான் மனம் கசங்கிக் கிடந்தேன். ஊடகங்களும், பொதுமக்களும் குமுறியெழுந்தது, இன்னும் நினைவிலிருக்கிறது.
வடக்கில் இராணுவ வெறியர்கள் தமிழ்ப் பெண்களை, விசாரணைக்கென இட்டுச் சென்று, இருட்டறைகளில் நிர்வாணமாக்கி, கற்பை சூறியாடிவிட்டு, கொலை செய்து குழிகளில் போட்டு மண் நிரப்பிய இரத்தக்கறை படிந்த அத்தியாயங்களை, நம்மால் எளிதில் மறந்துவிட முடிகிறதா? யுத்தச் சூழலில் காட்டுமிராண்டிகளின் தர்பார் கொடிகட்டிப் பறந்தது. அன்று ரீட்டா ஜோனின் சிதைவு, என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூரக் காட்சி என் நினைவுகளிலிருந்து விலகிட மறுத்தன. அந்த உறுத்தல் ‘ஒரு குயிலின் சித்திரவதை’ என்னும் கவிதையாக உருவெடுத்தது. அதன் சிறப்பை சிலாகித்து என்னை விதந்து பாராட்டி, பலரும் உற்சாகமூட்டினர்.
அந்தக் கவிதையினை ரீட்டா ஜோனின் கணவர் படித்திரு ப்பாரேயானால், அந்தப் படைப்பு அழியா ஓவியமாக அவர் நெஞ்சில் நிலைத்திருக்கக்கூடும். கல்லூர்க் கிராமம் நித்திரா தேவியை அணைத்து மகிழும், இரவு வேளை. தெருவிளக்குகள் ஒளி மங்கிச் சுடர்ந்தன. சாத்திய முகப்புகளோடு, இல்லங்கள் சலனமின்றி ஓய்ந்து போய் இருந்தன. கிராமத்து இருளுக்கு இறுக்கம் அதிகம்.
அடர்ந்து சடைத்து, வளர்ந்த காட்டு மரங்கள் இராப் பொழுதில் பீதியூட்டிக் கொண்டிருந்தன. நகரத்தைப் போலன்றி, கிராமம் பத்து மணிக்கு மேல், உயிர்ப்பற்று ஓய்ந்து போயிருக்கும். கிராமவாசிகள் முன்தூங்கி, முன்னெழும்பும் வர்க்கத்தினர். ஒரு மணியைத் தாண்டிய பின்னிரவு வேளை, அவன் நிம்மதியற்ற மனநிலையில் தெருவில் அலைந்து கொண்டிருந்தான். எங்கும் ஆளரவமில்லை. கஞ்சாவும் ஹெரோயினும் ஏற்றிய போதையில் அவன் கால்கள் தடுமாறின. விழிகள் தீக்கங்குள்களாக சிவந்து துடித்தன.
சதைப் பிடிப்பற்ற அவனது முகத்தில், எலும்புகள் துருத்திக் கொண்டு மிதந்தன. கோடு போட்ட சாரமும், கட்டைக்கை சேர்ட்டும் அணிந்திருந்தான். ஒரு முப்பதைத் தாண்டாத மெலிந்து உயர்ந்த தோற்றம். அலை பாயும் பெரிய விழிகளும் அடர்த்தி யில்லாத முகத்தாடியும், அவனுக்கு இந்தக் கிராமமே தன் ஆளுகைக்கு கீழிருப்பதான நெஞ்சு நிமிர்த்திய தோரணை சந்தடியில்லாமல் வீடுகள் பலவற்றைத் தாண்டி ஒழுங்கையால் நடந்து சென்றான்.
ஒரேயொரு வீட்டில் மட்டும், தொலைக்காட்சி ஒலியெழுப்பிக கொண்டிருந்தது. ஆண்களும், பெண்களும் குழுமியிருந்து, சினிமா ரசனையில் லயித்திருந்தார்கள். கொல்லென்ற கூட்டுச் சிரிப்பொலி உரத்துக் கேட்டது. தமிழ்த் திரைப்படமொன்றின் மூன்றாந்தர நகைச்சுவைக் காட்சியொன்றினை மனம் குதூகலித்து, ரசித்துக் கொண்டிருந்தார்கள் போலும். அவன் போதையேறிய விழிகளால் அனைத்தையும் அனுமானித்தவனாக பதற்றமின்றி நடந்து சென்றான்.
திரைப்பட கலகலப்பிற்கு அடுத்தாற் போன்று, ஒரு சிறிய குடிசை. அதில் வாசம் செய்வோரின் வறுமையைத் துல்லியமாக பறைசாற்றிக் கொண்டிருந்தது. குடிசைக் கதவு லேசாகத் திறந்த நிலையிலிருந்தது. அவன் ஓசைப்படாமல், கதவை மெல்லத் தள்ளினான். காற்று ஓசையின்றி சுற்றுச் சூழலுக்கு குளிர்மையை விதைத்துச் சென்றது.
ஒரு ஏழு வயதுச் சிறுமி, முகத்தில் மழலைப் பாவம் சுடர பாயில் உறங்கிக் கொண்டிருந்தாள். அவன் அர்த்தபுஷ்டியோடு அவளை வெறித்துப் பார்த்தான். சிமினி விளக்கு மேசையில் எரிந்தும் எரியாமலும் போக்குக் காட்டியது. இவனை ஆட்டிப் படைக்கும் மிருகம், பூதாகரமாய் விழித்துக் கொண்டது. கிறங்கும் விழிகளால் சுற்றுச்சூழலை அளந்தான். ஆளரவமோ, ஓசைகளோ சிறிதுமில்லை . சிறுமியின் தாயும், தந்தையும் பக்கத்து வீட்டு சினிமா ரசனையில் மூழ்கிப் போய் கிடந்தனர். இவனது மனதில் என்றுமில்லாத தைரியம் வலுத்தது.
சிறுமியைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டான். போர்த்தியிருந்த துணியினால் அவளை நன்றாக மூடிக் கொண்டான். எதிர்ப்புகள் எதுவும் இல்லையென்பதை நன்றாக உறுதி செய்து கொண்டு, ஆட்டைக் கவ்விய ஓநாயாக, மரங்களடர்ந்த காட்டுப் பாதையினூடாக, இருளில் மறைந்தான்.
ஊரின் பரபரப்பு உச்சக்கட்டத்தில் இருந்தது. லரீபுடைய ஏழு வயது பெண்பிள்ளையை எவனோ இரவு கடத்திக் கொண்டு போய், கெடுத்து விட்டு, தெருவில் போட்டுவிட்டுப் போய்விட்டானாம். யார் என்று தெரிந்திருந்தால், அவனை ஒரே வெட்டாய் வெட்டிக் கொன்று போட்டிருக்கலாம். பலர் ஆத்திரம் கொண்டு கதைக்கத் தலைப்பட்டனர். ஒழுக்கம் மரியாதையோடு வாழ்ந்து வந்த கல்லூர்க் கிராமவாசிகளுக்கு, இந்தப் பயங்கரச் சம்பவம், முதல் அனுபவமாக அதிர்ச்சி தந்தது.
சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிறப்புறுப்பில் ஐந்து தையல்கள் இடப்பட்டன. அந்தப் பிஞ்சு உடல் பெரிய பாதிப்புக்குள்ளாகியிருந்தது. தாய்மார்கள் ஒன்றுகூடி, அந்த முகமறியாக் காமுகனை மனம் குமுறிச் சபித்தார்கள். அச்சத்தினால் தங்கள் பெண்பிள்ளைகளை வெளியில் அனுப்பாது வீட்டினுள் பாதுகாத்தனர்.
பொலிசார் லரீபிடம், யார் மீது சந்தேகமென வினவினார்கள். எப்போதும் போதையில் திரியும் கரீம், இதைச் செய்திருக்கக் கூடுமென, ஊகம் தெரிவிக்கப்பட்டது. சிறுமி அடிக்கடி மருத்துவ மனையில் நினைவிழப்பதும், அதிர்ச்சியுறுதுமாகத் துயருற்றாள். தாய் கண்ணீர் விட்டுக்கதறி அழுது வருவோர், போவோரிடம் நெக்குருக முறையிட்டாள்.
நாட்கள் நகர்ந்தன. குற்றவாளி யார், என்பதை கண்டு பிடிக்க கஷ்டமாக இருந்தது. கரீமை சந்தேகத்தின் பேரில் பொலிஸ் கைது செய்தது. அவனை அடித்துத் துன்புறுத்தி வாக்குமூலம் பெற முனைந்தது.
“நான் சிறுசிறு களவுகள் செய்திருக்கிறேன். போதைப் பொருள் பாவித்திருக்கிறேன். இந்தக் காரியத்தை நான் செய்யவில்லை ! நான் நிரபராதி” என்று கரீம் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான். காவல் துறையினருக்கு நேரடி சாட்சி இல்லாதிருந்ததால், வெறும் ஊகங்களை வைத்துக் கொண்டு, வழக்குத் தொடுப்பது சங்கடமாக இருந்தது.
கரீமின் சகாக்கள் இருவரைப் பிடித்து வந்து விசாரித்தும், சம்பவத்திற்கான ஆதாரங்கள் எதுவும் கிட்டவில்லை . சிறுமி பொலிசாரைக் கண்டு மிரண்டாளே தவிர, மேலதிக தகவல் கூற அச்சப்பட்டாள்.
கரீம் திருட்டுமுழி கொண்டவன். கட்டாக்காலி மாடு போல், தொழிலில்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பவன். களவு, சூது, போதைப் பொருள் பாவித்தல் போன்றவற்றில் பெரிதும் ஐக்கியப்பட்டிருந்தான். தூர இடமொன்றில் திருமணம் முடித்து, இரண்டு குழுந்தைகளுக்குத் தந்தை என்றாலும், குடும்பத்தோடு எந்தத் தொடர்புகளுமற்று வாழ்பவன். அவன் வம்புச் சண்டைக்குப் போய், பலரிடமும் அடிவாங்கிய அனுபவம் அதிகம்.
சிறுமியைப் பார்ப்பதற்கு ஊரவர்கள் மருத்துவமனைக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். யாரும் சிறுமியிடம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, என்பது மருத்துவரின் கண்டிப்பு. அதனால் சிறுமியின் மனநிலை மேலும் பாதிப்படையலாம், என்பது அவர்களது கருத்து. பிள்ளைக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து தாயும், தந்தையும், துடித்தழுதனர்.
சிறுமியின் தந்தை லரீப், அன்றாடக் கூலி வேலை செய்து பிழைப்பவன். பரம ஏழை, அவனிடம் மருந்துச் செலவுகளுக்கோ , வழக்கை, தொடர்ந்து கொண்டு செல்வதற்கோ, பணமில்லை என்ற காரணத்தால், ஊரார் மனமுவந்து உதவி வந்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் மீது இரக்கங்கொண்டு, நானும் அடிக்கடி மருத்துவமனை சென்று, உதவிகள் புரிந்தேன்.
அது ஒரு மதியப் பொழுது!
தாடி வளர்த்து, விழிகள் பெருத்த, ஒல்லியான ஒருவன், சிறுமியின் அடுத்த கட்டிலில் இருந்த, நோயாளியைப் பார்ப்பதற்காக, வார்டினுள் பிரவேசித்தான். சிறுமி அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு கலவரமடைந்தாள்.
“இவன்தான்……! இவன்தான், என்னைத் தூக்கிக் கொண்டு போனவன்!” என்று பீதியோடு பிதற்றத் தொடங்கினாள். எனது தேகாந்திரம் புல்லரித்தது. தீர்க்கமாக அவனை ஊடுருவிப் பார்த்தேன். அவன் ஒரு பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவன். முஸ்லிம் கிராமத்திற்குள் துணிவோடு வந்து இந்தப் பயங்கரத்தை எப்படிச் செய்வான்?
ஆனபோதும், எந்தப் புற்றில் எந்தப் பாம்பிருக்குமோ? என குழம்பிப் போனேன். அவனை நெருங்கி நளினமாகக் கதைகொடுத்தேன். “இந்தப் பிள்ளையை இதற்கு முன் உனக்குத் தெரியுமா?” என்று வினாத் தொடுத்தேன். அவனது முகபாவங்களிலிருந்து, இச்சம்பவத்திற்கும் இவனுக்கும் தொடர்பிருக்கச் சாத்தியமே இல்லையென்பதைத் தெளிவாக உணர்ந்தேன்.
அவனது முகத்தை மீண்டும் கூர்ந்து நோக்கினேன். உள்புதைந்து கிடக்கும் யதார்த்தமொன்று, என் அடிமனதில் நிழலாடியது.
நான் லரீபின் தோள்களை ஆதரவுடன் பற்றினேன். “என்னைத் தோளில் போட்டுக் கொண்டு போனவன் இவன்தான்!” என்று சிறுமி மீண்டும் பிதற்றினாள். “இவனல்ல!, இவன் கரீமின் சாயலை அப்படியே ஒத்திருக்கிறான்! கரீமை கூட்டிவந்து இவள் முன், நிறுத்தினால் உண்மை வெளிச்சத்துக்கு வரும்” என்றேன். நானும் லரீபும் காவல்நிலையம் சென்று இன்ஸ்பெக்டரிடம் நடந்த விடயத்தைக் கூறினோம். அவர் உற்சாகமடைந்து, அப்படிச் செய்து பார்ப்போம் என்றார்.
“எங்களைக் கண்டவுடன் பிள்ளை நடுங்குகிறது. நாங்கள் பின்னணியில் மறைந்து இருந்து, கொண்டு தான் விசாரணை களைத் தொடர வேண்டும்” என்று கூறினார் அவர். இதன் பெறுபேறுகள் எப்படியமையப் போகிறதோ? இந்த முயற்சியும் பிழைத்துப் போனால், குற்றம் புரிந்தவனை எவ்வாறு கண்டு பிடிப்பது? என்ற எண்ணச் சுழற்சியில் தடுமாறிப் போனேன் நான். ஒரு அறையில் கரீமை சுற்றிலும் பாதுகாப்போடு நிறுத்தி விட்டு, சிறுமியைக் கூட்டிவந்து அவன் முன் நிறுத்தினோம்.
பொலிசார் மறைந்திருந்து அங்கு நடப்பவற்றை கெசட்டில் பதிவு செய்தனர்.
“இந்த நாய்தான், இவனேதான், எனக்கு அநியாயம் செஞ்சவன்!” சிறுமி குமுறிக் குமுறி அழுதாள்.
கரீம் மீண்டும் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, இரவு பூராவும் கடும் சித்திரவதை செய்யப்பட்டான். முகம், கை, கால்கள் தாக்குதல்களால் வீங்கிப் புடைத்திருந்தன. உண்மையை அவனது வாயினால் எடுப்பதற்கு அதீதப் பிரயத்தனம் செய்யப்பட்டது. “உண்மையைச் சொல்லாவிட்டால், உன்னை விடிவதற்கு முன், பிணமாக்கிப் போடுவோம்!” என்று பொலிசார் அச்சுறுத்தினர்.
வலியையும், வேதனையையும் சகித்துக் கொள்ள இயலாத அவன், இறுதியில் தானே குற்றம் புரிந்ததாக ஒப்புக் கொண்டான். விசாரணை தீவிரமாக முடுக்கிவிடப்பட்ட நிலையில், அவனை சம்பவம் நடந்த இடத்திற்கு ஊருக்குள் கூட்டி வந்தனர் பொலிஸார். காட்டில் நீண்டு வளர்ந்திருந்த ஒரு புளியமரத்தின் அடிப்பாகத்தை அவன் சுட்டிக்காட்டினான்.
இங்கு, சிவப்பு நிறத்தில் பழுப்பேறிய உள்ளாடையொன்று கண்டு பிடிக்கப்பட்டது. அது கரீமினுடையதுதான் என அவனது சகாக்கள் அடையாளம் காட்டினார். அவனைப் பொலிஸார் ஊருக்குள் நடையிலேயே அழைத்து வந்தனர். ஊரே திரண்டிருந்தது. ஆத்திரத்தால் ஊரவர்கள் அவனைத் தாக்கத் தொடங்கினர். சிலர் ஆக்ரோஷம் கொண்டு அவன் மீது கல்லால் எறிந்து காயப்படுத்தினர்.
நிலைமை மோசமாகவே, பொலிஸார் சிரமப்பட்டு அவனை விடுவித்து, அழைத்துச் சென்றனர். இச் செய்தி ஊடகங்களில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாயின. அடையாள அணி வகுப்பில் சிறுமியினால் சரியாக இனங்காணப்பட்டான். அவன் தான் குற்றமிழைத்தவன் என்பதற்கு போதிய வைத்திய ஆதாரமிருந்தது. பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“குற்றவாளியை தப்பிச் செல்ல விடாதே! கரீமுக்கு மரண தண்டனை கொடு!” என்று, பதாதைகளைப் பிடித்தவாறு பெண்கள் போராட்டம் நடத்தினர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பத்து வருடத்திற்கு குறையாத, கடூழியச் சிறைத் தண்டனை கரீமுக்கு நிச்சயம் கிடைக்கும் என வக்கீல்கள் உறுதியாகக் கூறினர்.
வைத்தியசாலையில் அன்று ஒரு அசாதாரண பரபரப்பும் அதிர்ச்சியும் நிலவியது. எல்லோர் முகங்களிலும் பதற்றம் கவிந்திருந்தது. லரிபின் மகள் காலையில் மலசலகூடத்தில் கால்வழுக்கி விழுந்து, அவசர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டாள். கீழே விழுந்ததில் கடும் காயத்திற்கு ஆளானாள். பாதிக்கப்பட்ட இடத்தில், உடன் ஆப்பரேஷன் நடத்தப்பட வேண்டுமென டொக்டர்கள் கூறினர்.
அக்கினி மழை பொழிந்தது!. வானத்திலிருந்து அல்ல!
அந்த ஏழைப் பெற்றோரின் கசிந்த விழிகளிலிருந்து. பூத்துக் காய்ப்பதற்கு முன் – சிறுதளிர், சிதைந்து போன அவலத்திற்காக.
– மல்லிகை, 39ஆவது ஆண்டு மலர், ஜனவரி 2004 – நிஜங்களின் வலி – சிறுகதைத் தொகுப்பு , மீரா பதிப்பகம், முதற்பதிப்பு: 23.05.2005