சதாசிவப் பிரம்மேந்திரர்





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
(‘மானஸ ஸஞ்சரரே’ பாடியவர்)
அந்த இளைஞன் வீட்டுக்குத் திரும்பும் போது வெகுவாகக் களைத்திருந்தான். பசி வயிற்றைக் கிள்ளியது. உடனேச் சாப்பிட வேண்டும் என்று ஆவலோடு வந்தான்.

வீட்டுப் படிகளில் ஏறியதும் உள்ளே பல மனிதர்கள் வந்திருப்பது தெரிந்தது. அவனது அம்மா எதிரே வந்தாள்,
“அம்மா! பசிக்கிறது. சாதம் போடு!” என்றான்.
“இரு!” என்ற அம்மா, “உன் ஆத்துக்காரி ருதுவாகியிருக்கிறாள். அதைச் சொல்ல அவாத்து மனுஷாள் வந்திருக்கா. உள்ளே விருந்து தயார் ஆயிண்டிருக்கு!”
நின்றான்.
வெறும் கால் மட்டும் நிற்கவில்லை. மனம் கூட நின்றது.
‘சம்சாரத்தில் முதல் படி வைக்கவில்லை. இப்போதே ‘இரு’ என்று கட்டளை வந்து விட்டதே! இன்னும் எத்தனை முறை எத்தனை காலம் இருக்க வேண்டுமோ!’ என்ற எண்ணம் அவனுக்கு உதித்தது.
பேசாமல் திரும்பினான். படிகளை விட்டுக் கீழே இறங்கினான். “பிச்சு! பிச்சு!” என்று அம்மா கூப்பிடுவதையும் பொருட்படுத்தாது போய்க்கொண்டே இருந்தான்.
பிச்சுவின் உண்மைப் பெயர் சிவராமகிருஷ்ணன், அவனுடைய தந்தை பெயர் மோக்ஷம் சோமசுந்தர அவதானி, தாயார் பார்வதி அம்மாள்.
தஞ்சை அரசர் ஷாஹாஜி கொடுத்த மான்யத்தில் தந்தை ஜீவித்து வத்தார், வெகு காலம் அவருக்குக் குழந்தை பிறக்கவில்லை, பல நோன்பு விரதங்களுக்குப் பிறகு கடைசியாக சிவராம கிருஷ்ணன் பிறந்தான். காலம் கடந்து பிறக்கும் குழந்தைக்கு ஒரு விதப் பிரார்த்தனையாக பிச்சு, குப்பு என்று அந்த நாளில் பெயர் இடுவது உண்டு. சிவராமகிருஷ்ணனை பிச்சு குப்பு ஐயர் என்று அந்த நாளில் அழைத்தார்கள்.
பையன் உரிய வயதில் பூணூல் போட்டுக் கொண்டு, கல்வி கற்பதில் இறங்கினான்.
குருகுலத்தில் வரித்தபோது பிற்காலத்தில் பிரசித்தி பெற்ற பெரியவர்கள் அவனுக்கு வகுப்புத் தோழர்களாக இருந்தார்கள்.
மகாபாஷ்யம் கோபாலகிருஷ்ண சாஸ்திரி ராமபத்ர தீட்சிதர், ஸ்ரீதர வெங்கடேச கவி (ஸ்ரீதர அய்யர்வாள்) அவர்களில் சிலர்.
குருகுலத்தில் கற்கும்போது சிவராம கிருஷ்ணனின் மனம் தத்துவ விசாரத்தில் அதிகம் ஈடுபட்டது. கடவுள் மீது பக்தியும் சம்சார வாழ்க்கையில் வெறுப்பும் தோன்ற ஆரம்பித்தன். எல்லா சாஸ்திரங்களையும் முறையாகக் கற்ற பின் துறவறத்தில் அதிகமாக நாட்டம் விழுத்தது.
அந்நாளின் முறைப்படி இளம் வயதிலேயே அவனுக்குத் திருமணம் செய்து விட்டார்கள்.
மனைவி பெரியவள் ஆகாததால் முறையான இல்லற வாழ்க்கை ஏற்படவில்லை, இப்போது அவள் ருதுவாகிலிட்டாள் என்று கேள்விப்பட்டதுப் இனி சம்சாரத்தில் இறங்கி ஆயுள் வரை மூழ்க வேண்டியது தான் என்று தெரிந்துவிட்டது.
அவள் மனம் அதற்கு ஒப்பவில்லை.
துறவு பூண வேண்டும் என்று நினைத்தான், அந்தக் கணமே வீட்டை விட்டு அகன்று விட்டான்.
அன்றிலிருந்து அலைந்து திரிந்த அந்த இளைஞனுக்கு பரமசிவேந்திரர் என்ற குரு கிடைத்தார், மகா ஞானி. அனுபூதி பெற்றவர். அவர் அந்த இளைஞனைத் தமது சீடனாக் ஏற்றுக் கொண்டு அவனை ஆத்ம வித்தைகளில் திருப்பி விட்டார்.
யோகங்களிலும், அத்வைத தத்துவங்களிலும் அவன் மனதைத் திருப்பி, சீக்கிரத்தில் அவனுக்கு சித்திகள் ஏற்படும்படி செய்தார்.
பரிபூரண ஞானியாகவும் யோகியாகவும் பக்தராகவும் விளங்கிய அந்த இளைய துறவியை எல்லோரும் சதாசிவ பிரம்மேந்திரர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அவர் பெயரும் கீர்த்தியும் எங்கும் பரவலாயிற்று.
குருவின் கட்டளைப்படி பிரம்ம சூத்திரத்துக்கும் யோக சூத்திரத்துக்கும் விருத்தியுரை எழுதினார்.
கவி இயற்றுவதிலும் புலமை பெற்றதால் தோத்திரங்களையும், சங்கீதத்தில் தேர்ச்சி இருந்ததால் கீர்த்தனைகளையும் எழுதினார்.
மானஸ ஸஞ்சரரே. ப்ரூஹி முகுந்தேதி, பஜரே கோபாலம், காயதி வனமாலீ போன்ற உள்ளம் உருக்கும் அரிய பாடல்கள் அவர் இயற்றியவை.
தத்துவ விசாரணைகளில் வெகு கூர்மையாக இருந்ததால் பிரம்மேந்திரர் தம்மிடம் வருபவரிடம் சில நுட்ப விஷயங்களில் பெரிய தர்க்கங்களைச் செய்து அவர்களை வாயடைத்து விடுவார்.
இவரது தர்க்கிக்கும் பழக்கமுறை குருவரை எட்டியது.
அவர் ஒரு நாள் பிரம்மேந்திரரை அழைத்து “சதாசிவா! நீ எப்போ சும்மா இருக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.
“இப்போதிலிருந்தே!” என்று கூறினார்.
அந்தக் கணத்திலிருந்து அவர் வாழ்க்கை முழுவதும் மௌனியாகி விட்டார்.
குருவிடம் விடைபெற்று அவர் காடுகளிலும் மலைகளிலும் அலைய ஆரம்பித்தார். பிரம்மம் ஒன்றிலேயே மனத்தைச் செலுத்தி உடை, உணவு எதிலும் அக்கறை கொள்ளாமல் ஜடம் போல் திரிந்தார். கடவுளோடு ஐக்ய பாவத்தில் எப்போதும் மூழ்கியிருக்க, இந்த உலக சிந்தனை அவரை அறவே விட்டு ஓடிவிட்டது.
இந்திலையில் இவர் வாழ்க்கையில் நடந்த சித்துக்கள் பிரசித்தி பெற்றவை.
ஒருமுறை ஆற்று மணலில் அவர் உட்கார்ந்து தியானம் பண்ணிக் கொண்டிருக்க, ஆற்று வெள்ளம் இவரை அடித்துக்கொண்டு போயிற்று. வெகு தூரத்தில் இவரைக் கொண்டுபோய் மணலுக்குள் புதைத்து விட்டது. பல மாதங்களுக்குப் பிறகு, சிலர் மண்ணைத் தோண்டும்போது இவரது தேகம் இருப்பதைப் பார்த்து அதிசயிக்க,
இவரும் எதுவும் நடவாதது போல எழுந்து நடந்து போகத் தொடங்கினார்.
திரியும் காலத்தில் அவர் ஒரு முஸ்லிம் குறுமன்னரின் அந்தப்புரத்தின் அருகில் போய் விட,
மன்னர் வெகுண்டு இவர் முதுகில் கசையடி கொடுத்தார்.
இரத்தம் ஆறாகப் பெருகியும், இவர் எதையும் பொருட்படுத்தாது போவதைப் பார்த்த மன்னர்,
இவரை ஒரு மகான் என்று நினைத்து எழுத்துபோய் அவர் முன்னால் வணங்கி நின்றான்,
பிரம்மேந்திரர் தமது சைகையால் அவருக்கு ‘”முதலில் நினைத்தபடி எதையும் செய்யாதே, அதன் பிறகு நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்று உணர்த்தினார்.
ஒரு சமயம் இரவில் ஒரு களத்துத் தானியக் குவிப்பு அருகில் இவர் படுத்துக் கிடக்க, காவல்காரன் இவர் ஒரு திருடன் என்று நினைத்து அடிக்கக் கையை ஓங்கினான்.
தூக்கிய கை அப்படியே நின்று விட்டது, பிரம்மேந்திரா மறு நாள் காலையில் எழுந்து போகும்வரை கை பழைய நிலையை அடையவில்லை.
ஒரு சமயம் சில குழந்தைகள் இவரைச் குழ்ந்துகொண்டு சீண்ட ஆரம்பித்தன. கேலிக்காக ஒரு பையன், ”சுவாமி! மதுரையில் இப்போது திருவிழா நடக்கிறது. நாங்கள் ரிஷப வாகன ஊர்வலத்தைப் பார்க்கணும்” என்று கூறினான்.
பிரம்மேந்திரர் அவர்களது கண்களை மூடி வைக்க,
அடுத்த கணமே அவர்கள் மதுரையை அடைந்து அந்த ஊர்வலத்தைப் பார்ப்பது போல் அனுபவம் ஏற்பட்டது.
பின்னர் கண் திறந்த பிள்ளைகள் அதிசயப்பட்டு, தங்கள் வீடுகளுக்குச் சென்று தாங்கள் மதுரை போய் வந்த அனுபவத்தை அற்புதத்தோடு விவரித்தார்கள்.
எங்கும் அலைந்து திரிந்து போகிற இடங்களில் எல்லாம் அருளையும் ஆசியையும் வழங்கிக்கொண்டு கடைசியில் அவர் தேரூரை அடைந்தபோது தமது தேகத்துக்கு முடிவு நெருங்குகிறது என்பதை அறிந்தார்.
அவரை நாடி வந்த ஜனங்களிடம் ஒரு வில்வ மரத்தடியைக் காண்பித்து, தமது சமாதி கட்டுவதற்காக ஒரு குழியைப் பறிக்கச் சொன்னார்.
குறிப்பிட்ட நாளில் ஆயிரக் கணக்கான மக்கள் சூழ நின்று பார்த்திருக்க,
பிரம்மேந்திரர் அந்தக் குழிக்குள் இறங்கி அமர்ந்து கொண்டார்.
தாம் சமாதி ஆனபிறகு, காசியிலிருந்து ஒரு அந்தணர் ஒரு லிங்கத்தை தமது சமாதியில் கொண்டு வைத்து பூஜை பண்ணுவார் என்று சூழ இருந்தவர்களிடம் குறிப்பால் உணர்த்தினார்.
பிறகு சமாதியை மூடும்படி சைகை காட்டினர்.
சமாதி மூடப்பட்டது.
பிரம்மேந்திரர் இவ்விதம் ஜீவன் முக்தி அடைந்த தினம் வைசாக சுத்த தசமி (கி.பி. 1750).
இன்று அந்த ஜீவன் முக்தி சமாதி ஒரு புனித யாத்திரை ஸ்தலமாக இருந்து வருகிறது.
தாயுமானவர் இவரைச் சந்தித்தார் என்றும், புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாத தொண்டைமான் (1730-1769) இவரை அணுகி அருள் பெற்றார் என்றும் செய்திகள் உண்டு.
பிரம்மேந்திரர் எழுதிய சில முக்கிய நூல்கள் ‘யோக சூத்திர விருத்தி’, ‘ப்ரம்ம சூத்ர விருத்தி’, ‘பிரம்ம தத்வ பிரகாசிகை’, “சித்தாந்த கல்ப வல்லி”.
– பக்தவிஜயக் கதைகள், மங்கையர் மலர், செப்டம்பர் 1981.