சண்டீதாசர்





(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆண் பெண் காதலைத் தூயதாக்கி, தேக விகாரம் எதுவும் இல்லாத உள்ளத உயரங்களுக்கு உயர்த்தினால் அதுலே பக்தியாகிவிடும்.

காதலனும் காதலியும் காதலும் மூன்றும் இணைந்து ஒன்றாவதை பிரேமானந்தம் என்று சொல்வார்கள்.
ஆங்கிலத்தில் Platonic love என்பது இந்த வகையைச் சேர்ந்தது.
பக்திக்கும் இதுபோன்ற தூய காதலுக்கும் அதிக வித்தியாசமில்லை.
ஆற்றங்கரையில் அழகிய இளப் பெண் ராமியைக் கண்ட சண்டீசுவரருக்கு புலன்கள் ஸ்தம்பித்துவிட்டன.
சுவாசம் நின்றுவிட்டது. இமைக்காமல் அவளைப் பார்த்தார். உடம்பில் எந்த விதச் சலனமும் இல்லை. உயிரில்கூட இல்லை. ஆனால் ஆழமான ஆழத்துள் கிடக்கும் அவன் ஆன்மாதான் கண் விழித்தது.
இந்த அழகி யார்? இந்த இளம் பெண் யார்? மயக்கும் விழிகள் உள்ள இந்தப் பருவ மங்கை யார்? இந்த ஆற்றில் துணி துவைத்துக்கொண்டு நிற்கிறாளே! என்னைப் பார்த்து இவளும் மெய் மறந்து நிற்கிறாளே! ஏன் துவைப்பதை நிறுத்தினாள்? ஏன் இப்படி என்னைப் பார்வையால் பருகுகிறாள்?
சண்டிதாசர் பௌவ்னம் நிரம்பிய வாலிபர், வசீகரமும் உள்ளவர், விசால நெற்றியும் அழகான மேனியும் உடையவர்.
கல்வி கேள்விகளில் சிறந்தவர், அறிவாளி, அந்தணர் குலத்தில் பிறந்து விசாலாட்சி கோவிலில் பூசாரியாக இருந்தார்.
ராமி துணி வெளுக்கும் இனத்தைச் சேர்ந்தவள். அபூர்வ அழகு அவளிடம் இருந்தது. பக்குவ வயது. ஒரு தெய்வ கன்னிகை போல் நின்றாள்.
வங்காள தேசத்து ஆற்றங்கரை ஓரம் சுமார் 430 ஆண்டுகளுக்கு முன் எதேச்சையாக நடந்த சந்திப்பு இது.
வித்தியாசமான ஜாதிகளைச் சேர்ந்த இவர்களது வாழ்க்கையில் இந்தச் சந்திப்பு எவ்வளவு மகத்தான மாறுதலை ஏற்படுத்தியது!
ராமி வெறும் அழகி மட்டுமல்ல. அறிவு உள்ளவள். ஒழுக்கம் உள்ளவள்.
அந்த யௌவன இளைஞரைப் பார்த்து மெய்மறந்து நின்றாள்.
ஒரே ஒரு பார்வைதான், ஜன்மங்களாக உள்ள உறவை அது உடனே உணர்த்திக் காட்டியது.
இருவரும் தங்கள் நிலை இழந்தார்கள். மற்றவரை மனத்தில் நினைக்கத் தொடங்கினார்கள். அந்த நினைப்பு அவர்களுக்குக் கற்கண்டான ஆனந்தங்களை வாரி வழங்கத் தொடங்கியது.
தினமும் சண்டீதாசர் ஆற்றுப் பக்கம் வந்தார். ராமி அவளுக்காகவே காத்திருந்தாள். இருவரும் கண்களால் பேசினார்கள். பிரிந்தார்கள்.
இந்தக் கண் பாஷைதான் அவர்களது நீண்ட நாள் பேச்சு, அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஒரே ஒரு பார்வை! அது ஒரு நாளுக்குப் போதும்! அதையே மனத்தில் உருட்டி அவர்கள் ஆனந்த நிலையில் இருந்தார்கள்.
கண்களின் நெருக்கம் வெகு நாட்களுக்குப் பிறகு முறுவலாகியது. ஒன்று இரண்டு வார்த்தைகளாகப் பரிணமித்தது. அவர்களது நேயம் அதிகமாகிவிட ஒருவரை ஒருவர் பிரிந்திருப்பது கஷ்டமாகியது.
அந்த விரகம் பொறுக்க முடியாத நிலைக்கு வந்தது. சண்டீதாசர் ராமியைத் தமது கோயிலுக்கு அழைத்தார், கோவிலில் பணி புரியும் வேலைக்காரியாக வைத்துக் கொண்டார்.
விசாலாட்சி கோயில் அது, சண்டீதாசர் மனம் நெகிழ்ந்து பூஜை செய்யும் பூசாரி! ராமி வந்ததால் அவரது கடவுள் பக்தி குறையவில்லை. இன்னும் அதிகமாகியது. அவரது எல்லாக் காரியங்களுக்கும் அவள் உதவினாள், அவரது மனம் உருரூம் பிரார்த்தனையில் அவளும் கலந்து கொண்டாள்.
கோயிலில் ராமியை வேலைக்காரியாக நியமித்து சண்டீதாசரும் அவளும் இணக்கமாக ஈடுபாட்டில் இருப்பது வெளியே மற்றவர்களுக்கு அசூயையைக் கொடுத்தது.
ஊரில் அவர்களைப் பற்றிய வதந்திகள் உலாவத் தொடங்கின.
ஜனங்கள் ஆத்திரம் அடைந்தார்கள்.
புனிதமான கோவிலில் இவர்கள் கேளிக்கை வாழ்வு வாழ்வதா என நினைத்தார்கள்.
ஒரு தான் கோவிலுக்குள் புகுந்து இருவரையும் வெளியே தள்ளினார்கள்.
இருவரும் மனம் தளரவில்லை.
அவர்கள் ஒருவருக்கொருவர் இருக்கும் பிரேமையும், இருவருக்கும் கடவுள் மீது இருக்கும் பக்தியும் அதிகமாகியது.
ராமி இந்த நிலையில் சண்டீதாசரின் மனத்தை ராதா-கிருஷ்ணர் மீது திருப்பி விட்டாள்.
இருவரது பிரேமைக்கும் அந்த ராதா- கிருஷ்ண பக்தி மிகவும் ஒத்ததாக இருந்தது.
சண்டீதாசர் மனம் உருக ராதா-கிருஷ்ண லீலைகள் பாடத் தொடங்கினார்.
அவருக்கு ராமி ராதையாகத் தோன்றினாள்.
ராமிக்கும் சண்டீதாசர் தனது கண்ணனாகவே தோன்றினார்.
வெறும் ஆண் – பெண் காதலே ஆன்மீக உயரங்களுக்கு ஏறிக் கடவுள் பிரேமையாகப் பரிணமித்தது.
இருவரும் பாடித் திரிய. அவர்களது பாடல்கள் வங்காளம் முழுதும் பிரசித்தமாகி விட்டது.
பண்டிதர், பாமரர் நாவுகளில் அவர்கள் கீதங்கள் தவழத் தொடங்கின.
‘துமி ஸே ஆமார் ஆமி ஸே தோமார்
ஸஹ்ருக்கே ஆசே ஆர்!
கேதே ‘ராமி’ சுய சண்டீதாஸ் பின ஜகத்
தேகி ஆந்தரர்!’
‘நான் உம்முடையவள். நீங்கள் என்னுடையவர். என்னது என்று வேறு யாரும் எனக்கில்லை’
சோகம் நிரம்பிய ராமி சொல்கிறாள்: ஓ, சண்டீதாஸ்! நீங்கள் இல்லாவிடில் உலகம் எனக்கு அந்தகாரம்!’
அந்த ராமியை சண்டீதாசர் நமஸ்கரிக்கிறார்.
ராமியையே சண்டீதாசர் தமது பாடல்களில் கடவுளுக்குச் சமமாக ஏற்றி அவளையே வழிபடத் தொடங்கினார்.
இன்னொரு பாடலில்,
“துணி துவைப்போர் இனத்தைச் சேர்ந்த ராமியே!
உனது இரு தாமரைப் பாதங்களில் சரணடைகிறேன்.
அவைகள் எனக்குக் குளிர்ச்சி தந்து என் மனத்தை இதமாக்குகின்றன.
உன்னை வணங்குகிறேன். உள்ளைப் பற்றிய பாமாலைகளை முன் கழுத்தில் பூமாலைகளாக அணிகிறேன்.
நீதான் சகல அறிவுக்கும் கடவுள்!
என் கண்களின் வெளிச்சம் நீ!
துணி துவைக்கும் இனப் பெண்ணாக ராதை தான் தோன்றியிருக்கிறாள்.
கேவலம் உடல் விகாரங்கள் அவளை நெருங்காது.
ராமியின் மீதுள்ள சண்டீதாசரின் இக் காதல், ஒளிரும் பொன்னுக்குச் சமானம்.
இன்னொரு பாடலில்,
“நான் யாருக்குக் கவலைப்படுகிறேன்? சமூகத்தை நான் புறக்கணிக்கிறேன். சட்டதிட்டங்களை நான் ஒதுக்குகிறேன். என் அடைக்கலம் கடவுள்தான்!” என்கிறார்.
பக்திப் பாடல்களில் கண்ணன் லீலைகளைப் புகுத்தி சண்டீதாசரும், ராமியும் பாட அவர்கள் பாடல் கேட்பவர் மனத்தையெல்லாம் போதை ஆக்கியது.
புகழ் பெற்ற ஆஸ்தான கவிஞரான வித்தியாபதி வெகு தூரம் நடந்து வந்து சண்டீதாசரைச் சந்தித்து அவரை வெகுமானித்துச் சென்றார்.
அறுபது ஆண்டுகள் வாழ்ந்த சண்டீதாசர் வங்காளத்தையே உன்மத்தமாக்கி விட்டார்.
ராமியும் அவரும் ஒரு நாள் ஒரு கட்டடத்தில் தங்கி இருக்க, அது இடிந்து விழுந்து இருவரையும் சமாதியாக மூடி விட்டது. (கி.பி. 1477)
– மங்கையர் மலர், மே 1981.