கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதந்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 12, 2025
பார்வையிட்டோர்: 6,350 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்லச் சந்நிதி முருகனுடைய கோவில் சரித்திரப் பிரசித்தி பெற்ற புண்ணிய ஷேத்திரங்களிலொன்று. உற்சவ காலத்தில் பத்து இருபது மைல்களிலிருந்தும் பக்தர்கள் வண்டிகளிலும் கால் நடையிலும் வந்து குவிவார்கள். 

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. காளை எருதுகள் பூட்டிய இரட்டை மாட்டு வண்டியிலிருந்து இரு பெண்கள் பால்,தேங்காய், வெற்றிலைப் பாக்குடன் கோவிலுக்குள் செல்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு நாற்பத்தைந்து வயசிருக்கும். மற்றையவர் இளம் பெண். இருபத்தி ரண்டு, இருபத்தி மூன்று வயசிருக்கலாம். இளம் பெண்ணின் கண்க ளில் நீர் துளிர்த்துப் போயிருந்தது. பக்தியோடு ஒவ்வொரு விக்கிர கத்தையும் மூன்று முறை வலம் வந்த அவள் நெற்றியில் முத்து முத்தாய் வியர்வை அரும்பியிருந்தது. 

“அம்மா சடையம்மாவிடம் போகலாமா” என்றாள் அந்தப் பெண். “பிரசாதம் வாங்கிக் கொண்டு போவோம்” என்றாள் தாயார். வண்டியில் பட்டுத் துண்டால் மூடப்பட்டிருந்த ஒரு தட்டை எடுத்துக் கொண்டு இருவரும் சடையம்மா இருந்த மடத்திற்குச் சென்றனர். தட்டைக் கீழே வைத்துவிட்டு வீழ்ந்து சடையம்மாவை நமஸ்கரித்தாள். அந்தப் பெண். சடையம்மா நமஸ்காரத்தை விரும்பாதவள் போல் திடீரென்று எழுந்து இருவரையும் உட்காரும்படி அன்பாய் வேண்டினாள்

சடையம்மாவுக்குச் சுமார் இருபத்தைந்து அல்லது இருபத்தாறு வயதிருக்கும். நல்ல சிவந்த மேனி. வருடக்கணக்கான எண்ணெயைக் தலைமயிர் சடைப்பிடித்துப் போயிருந்தது. அந்தச் சடைக்குள்ளிருந்த அவளது அழகான முகத்தில் கண்களும் ஒளி வீசிக் கொண்டி ருந்தன. இளமையிலே சந்நியாசத்தை ஏற்றுக் கொண்ட அந்த யௌவன சந்நியாசினியின் வாழ்க்கை வரலாறு! எல்லோருக்குமே புதிராயிருந்தது. அவள் கபட சந்நியாசிகளைப் போல் சம்போ மகாதேவா” ஒன்றுங் கூறவில்லை. விபூதியை அள்ளிக் கையில் வைத்து மந்திரம் செபிக்கவில்லை. தன் சகோதரியையும், அன்னையையும் போல் இருவரையும் வாதத்சல்யத்தோடு தழுவினாள். தான் ஒரு தெய்வப் பிறவியென்றோ யோகியென்றோ அவள் பிரசாரம் செய்யவில்லை. ஆனால், குழந்தையில்லாத பெண்கள் அவளின் ஆசீர்வாதம் பெற – குழந்தை வரம் பெற வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். சடையம்மாவின் நிம்மதிக்கு இவை இடையூறாயிருந்த போதிலும் அவளோடு கூடப்பிறந்த சகிப்புத்தன்மை சீறிச் சினக்காமல் எல்லோருடனும் அன்பாய் நடத்த இடங்கொடுத்தது. வரங்கொடுக்கும் சக்தி தன்னிடமில்லை என்று அவள் எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால், ஜனங்கள் பக்தி தேவியே மானிட உருவில் வந்திருக்கிறாளென்று போற்றினர். அவள் தரிசனத்தால் வருடக் கணக்காய் குழந்தையில்லாதவர்கள் பிள்ளைப் பாக்கியம் பெற்றனராம். 

இன்று வந்திருந்த இளம் பெண் பூரண கர்ப்பவதி. இற்றைக்குச் சுமார் ஒரு வருடத்திற்கு முன் சடையம்மாவைத் தரிசித்து ஆசீர்வாதத்தைப் பெற்றமையாலே தான் கர்ப்பவதியாகி யிருப்பதாக அவள் எண்ணிக் கொண்டிருக்கிறாள். பிற ஊரில் உத்தியோகம் வகிக்குங் கணவரோடு குடித்தனம் நடத்தியவளைப் பிரசவத்திற்காகத் தாயார் போய் அழைத்து வந்திருக்கிறாள். 

எப்படியம்மா சௌக்கியமாயிருக்கிறாயா? என்றாள் சடையம்மா. 

“உங்கள் அனுக்கிரகத்தாலும் ஆசீர்வாதத்தாலும் சுகமாயிருக்கிறேன் தாயே” என்றாள் அந்த இளம் பெண் பக்திப் பெருக்கோடு. 

தட்டில் கொண்டுவந்தவற்றையெல்லாம் எடுத்து வைத்தாள் அந்தக் கர்ப்பிணி. சடை யம்மா தரித்தாள். “என்னை ஏனம்மா இப்படி உபத்திரம் செய்கிறாய். பணத்தையும் எடுத்துக் கொண்டுபோ பழங்களை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். பணத்தை வைக்க என் னிடம் பெட்டி இல்லையே?” 

அந்த இளம் பெண்ணின் முகம் வாடிவிட்டது. பதில் பேசாமல் பணத்தையும் பட்டுத் துண்டையும் எடுத்துக் கொண்டாள். “அபசாரத்தை மன்னிக்க வேண்டும்” என்றாள். அவள் தொண்டை கம்பிப் போயிருந்தது. 

சடையம்மாவின் முகத்திலும் வருந்தக் குறிகள் தென்பட்டன. ஏனம்மா வருதப் படுகிறாய். உன் அபரிமிதமான அன்பை யாராவது அபசாரமாகக் கருதுவார்களா? உனக்குப் பிறக்கப் போகும் போக்கிரிப் பயலுக்கு என்னை நினைத்துக் கொண்டு இந்தப் பட்டுத் துண்டில் சட்டை தைத்துப் போடு”. 

அந்த இளம் பெண்ணின் கண்கள் ஆனந்தத்தால் மலர்ந்தன. சடையம்மாவின் வாயிலிருந்து ஆண் குழந்தை என்ற சொல் வெளி வந்ததே அந்த ஆனந்தத்திற்குக் காரணம். அவள் அதை அவள் தெய்வவாக்காக எண்ணினாள். பட்டுத்துண்டை எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொண்டாள். தனக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டது என்ற உணர்ச்சி அவளுக்கு. 

ஒரு வருடங் கடந்துவிட்டது. அன்று ஏனோ சடையம்மாவின் மனம் அலைமோதிக் கொண்டிருந்தது. அவளிடமிருந்த மடத்து வாசலிலிருந்த பவள மல்லிகை மரம் பூத்துச் சொரிந்துகொண்டிருந்தது. மெல்லிய தென்றலில் மலர்களின் இதமான வாசனை மிதந்து வந்து கொண்டிருந்தது. கோவிலில் ஜன சந்தடி அற்ற நேரம். அமைதி கலந்த தனிமை சடையம்மாவின் உள்ளத்தே பழைய வாழ்க்கைச் சம்பவங்களைக் கிளறிவிட்டுக் கொண்டிருந்தது. 

இன்றோடு சடையம்மா கணவனைப் பிரிந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அவளுடைய கணவன் சாதாரணமானவனல்லன். அவனொரு பிரபல எழுத்தாளனும் ஒரு பத்திரிகையின் ஆசிரியனுமாவான். அவன் புகழ் பரவிக்கொண்டிருக்கும்போதே அவள் அவனைக் கைப்பிடித்தாள். அவள் பணக்காரியல்லள். அவனும் பணக்காரனல்லன். அவளிடம் நகையொன்றுமே கிடையாது. அவனும் சம்பாதித்துக் கொடுக்கவில்லை. அவளும் அதைப்பற்றி எண்ணவில்லை. அவனது புகழ் மாலைகளே அவள் ஆபரணங்கள். அறிவின் சிகரமான கணவனைப் பெற்ற அவளுக்கு வேறு எந்த ஆபரணமும் வேண்டிக் கிடக்க வில்லை. 

ஒரு வருடங் கழிந்தது. இரண்டு வருடங்கள் கழிந்தன. வாழ்க்கை இன்பமாகவே ஓடிக் கொண்டிருந்தது. அவன் எழுதும் கட்டுரை, கதைகளின் பாணி மாறிக் கொண்டிருந்தது. அநேகமாக எல்லா – எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகளிலும் அவர்கள் உள்ளத்துடன் பிரதிபலிக்கிறது. விவாகமாகாத ஓர் எழுத்தாளனின் காதல் சம்பவங்களே உதயமாகின்றன. விவாகமான புதிதில் தாம் பத்திய வாழ்வின் சிறப்புப் பற்றியே கற்பனை ஓடிக்கொண்டிருக்கும். சிறிது காலம் சென்ற பின் பண நெருக்கடி குடும்பக் கஷ்டங்கள். இப்படியெல்லாம் கற்பனை வரும். ஆனால், எல்லா எழுத்தாளனின் விஷயத்திலும் இந்த அபிப்பிராயம் ஒத்து வருவதில்லை. 

“தாயன்பு” “குழந்தைப் பாசம்” இப்படியெல்லாம் ஏராளமான கதைகளை எழுதிக் குவித்தான். அவன் எழுத்தில் அவனுக்கொரு குழந்தை இல்லாக்குறை நன்றாகப் பிரதிபலித்தது. வாசகர்கள் ரசித்துப் படித்தனர். அவன் தன் இதயத்தைக் கையால் பிடித்துக் கொண்டு எழுதினான். அவள், அவன் எழுகின்றமையைக் கண்ணீர் சிந்தியபடியே வாசித்தாள். 

புருஷனின் மனக்குறை அவளுக்கு நன்றாகத் தெரியும். இயற்கையிலேயே அவனுக்கு குழந்தைகளென்றால் உயிர். ஊர்க்குழந்தைகளை அவன் அன்புடன் அணைக்கும் போது அவள் இதயம் குமுறும். அவளுக்கு மட்டும் குழந்தையிருந்தால்… விவாகமாகி மூன்று வருடங்களாகிவிட்டன. ஒரு குழந்தையில்லை. ஒரு குழந்தை வேண்டுமென்ற நினைவு அவனை வாட்டிக் கொண்டிருந்தது. அவளைவிட அதிகமாக அவன்தான் ஆசைப்பட்டான். தன் மனதிலுள்ள ஆசையை அவன் வெளிக்காட்டிக் கொள்ளு பவன் அல்லன். ஆனால். எப்படியோ தன் புருஷன் மனத்திலுள்ளதை அவள் அறிந்திருந்தாள். அதிர்ஷ்டக் கட்டையான கணவன் மேல் அவளுக்கு அனுதாபமேற்பட்டது. 

“நீங்கள் இன்னொரு விவாகம் செய்து கொண்டாலென்ன” என்று கேட்டாள். அவள் தொண்டை கனத்துப் போயிருந்தது. 

“எனக்கு ஒரு மனைவி போதாதென்று உனக்கு யார் சொன்னார்கள்” என்றான் சிரித்துக் கொண்டே. 

“நீங்கள் விளையாடுகிறீர்கள். நான் உண்மையாகத்தான் கேட்கிறேன்.” 

“இவ்வித தண்டனைக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?” 

“போதும் உங்கள் பரிகாசம் என்னை நீங்கள் மணந்து என்ன சுகத்தைக் கண்டீர் கள். நீங்கள் வைத்துக் கொஞ்சிக்குலாவ ஒரு குழந்தை…” மேலே அவளால் பேச முடிய வில்லை. தொண்டை கம்மி விட்டது. அவள் கண்கள் நீரைப் பெருக்கின. 

அன்போடு அவள் கண்ணீரைத் துடைத்தானவன். அவன் இதயமும் துடித்தது. “பைத்தியமே, ஏன் சிறு குழந்தையைப் போல் அழுகிறாய் இப்போது ஒரு குழந்தைக்கு என்ன அப்படி அவசரம் வந்துவிட்டது.” 

“நீங்கள் உண்மையாகத்தான் கூறுகிறீர்களா?” 

“உண்மையாகத்தான் கூறுகிறேன்” 

“அப்போ உங்கள் கதைகள் கட்டுரைகளெல்லாம் ….” 

ஓ அதைக் கொண்டா அனுமானிக்கிறாய். அப்போ யோகி சுத்தானந்த பாரதி காதல் கதைகளெல்லாம் எழுதுகிறாரே அதைக் கொண்டு அவர் காதல் பித்துத் தலைக்கேறி அலை கிறாரென்று கூறிவிட முடியுமா? எழுத்தாளன் கற்பனை எல்லாம் திசைகளின் மோகம். அவன் கற்பனையையும் வாழ்க்கையையும் ஒன்றுபடுத்திப் பார்க்க முடியுமா?” 

அவன் சாதுரியமாக ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து முடித்தான். ஆனால், அவள் உள் ளம் சாந்தியடையவில்லை. அவன் உண்மையை மறைக்கிறானென்பதை அவள் திடமாக நம்பினாள். நாள்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவளுடைய மனக்கவலை அதிகரித்துக் கொண்டே வந்தது. அவள் மீது அவன் கொண்டுள்ள அன்பு அளவு கடந்தது என்பது அவ ளுக்கு நன்றாகத் தெரியும்தான். உயிருடனிருக்கும் வரை அவன் மறுவிவாகம் செய்யமாட்டா னென்பது அவளுக்குத் தெரியாத விஷயமல்ல. சிந்தனை செய்த பின் ஒரு முடிவுக்கு வந்தாள். 

மழை சோவென்று கொட்டிக் கொண்டிருந்தது. போர்வையை நன்றாக இழுத்து மூடிக் கொண்டு நித்திரை செய்தானவன். இரவு சுமார் பதினொரு மணியிருக்கும். கடைசி முறை யாக அவன் பாதங்களை நமஸ்கரித்துவிட்டு பொருமுமிதயத்தைக் கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு வெளிக் கிளம்பினாள். சில நாள் எங்கெல்லாமோ அலைந்தாள். சதி செய்யும் அவள் பருவமும், அழகும் கயவர் கண்களில் அவளைக் காட்டிக் கொடுக்கப் பார்த்தது. உலகம் இவ்வளவு பயங்கரமானது என்று வீட்டைவிட்டு வெளிக்கிளம்பும் முன் அவளறிந்திருக்க வில்லை. தற்பாதுகாப்புக்காகவே கோவிலுக்குள் சரண் புகுந்தாள். கோவிலுக்குள் புகுந்த அவ ளைச் சனங்கள் சுவாமியாக்கிவிட்டார்கள். பால சந்நியாசினியின் பெருமை எங்கெல்லாமோ பரவிவிட்டது. இப்பொழுது அவளிடம் குழந்தை வரம் பெற இளம் பெண்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர். எண்ணெயைக் காணாத பரட்டைத் தலையினால் அவளுக்குச் சடையம்மா என்ற பெயர் பக்த கோடிகளால் வழங்கப்பட்டது. 

கணவனைப் பிரிந்து வாழ்ந்த ஐந்து வருட காலத்தில் சடையம்மாவுக்கு எவ்வளவோ அனுபவம் ஏற்பட்டுவிட்டது. ஐந்து வருடமாய்க் குழந்தையில்லாமலிருந்தவள் குழந்தை பெறுவதும். பத்து வருடமாயிருந்து குழந்தை பெறுவதும் இயற்கையென்று அவளுக்குத் தோன்றியது. தான் அவசரப்பட்டுத் தன் அன்புக் கணவனைப் பிரிந்து வந்தது எவ்வளவு மகா தப்பிதமான செயல் என்று இப்பொழுதுதான் அவளுக்குத் தோன்றியது. அந்த நடு ராத்தியில் தன்னைத் தேடித் தன் அருமைக் கணவன் கொட்டும் மழையில் எவ்வளவு கஷ்டப்பட்டானோ என்ற நினைவு அவள் உள்ளத்தே பேய்க்காற்றாய் வீசியது. ஒரு வேளை என் பிரிவைச் சகிக்காமல் அவர் தற்கொலை செய்திருப்பாரானால்? அவளை அறியாமலே அவள் வாய் ஐயோ என்றலறிவிட்டது. 

அவள் அவனிடம் போகத் தீர்மானித்து விட்டாள். அவளை முந்தி அவளிதயம் பறந்தது. ஐந்து வருடம் அவனைப் பிரிந்து அமைதியாக வாழ்ந்தவள் போல் சென்று கொண்டிருந்தாள். 

காடுகளையும், மலைகளையும் தாண்டி புகையிரதம் வேகமாய் அலறிக்கொண்டு சென்றது. ஆனால் அது ஆமை போல் ஊர்ந்து செல்வது போலிருந்தது. அவள் பறக்குமுள் ளத்திற்கு எப்படியோ பட்டணம் போய்ச் சேர்ந்துவிட்டாள். கால்கள் அவள் பழைய வீட்டை நோக்கி வேகமாய்ச் சென்றன. தன் கணவன் உயிரோடு சுகதேகியாயிருக்க வேண்டுமே என்ற எண்ணமே அவள் உள்ளத்தில் நிரம்பியிருந்தது. 

அவள் வீட்டையடையும் போது இரவு சுமார் ஒன்பது மணியிருக்கும். வெளிக்கதவு சாத்தியிருந்தது. கதவைத் தட்டுவோமா என்று ஒரு கணம் சிந்தித்தாள். அடுத்த நிமிஷம் தன் முன்தோன்றப் போகும் கணவனை எண்ணியதும் அவள் நெஞ்சு “திக் திக்” என்றடித்துக் கொண்டது. பாதி திறந்திருந்த ஜன்னல் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. கதவைத் தட்டாமல் ஜன்னலூடாய் உள்ளே எட்டிப் பார்த்தாள். 

அவள் கணவன் ஒரு சோபாவில் படுத்திருந்தாள். அவன் மார்பில் ஒரு குழந்தை உட்கார்ந்து கொண்டு “பாப்பா” என்று மழலை பொழிந்தபடியே தளிர்க் கரங்களால் அவன் கன்னங்களைக் கிள்ளிக் கொண்டிருந்தது. 

அப்பாவை ஒன்றுஞ் செய்யாதேடா போக்கிரிப் பயலே” என்று செல்லமாகக் கோபித்துக் குழந்தையின் கன்னங்களில் தட்டினான். சோபாவின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெண். அவள் தான் அன்று சடையம்மாவிடம் சென்ற இளம் கர்ப்பிணி. 

ஜன்னல் கம்பிகளைப் பிடித்திருந்த அவள் கரங்கள் தளர்ந்தன. கால்கள் தள்ளாடி அசைந்தன. தன் அன்புக் கணவனின் வாழ்வில் ஆத்ம திருப்தி கொண்டவள் போல் இருளில் அவள் சென்று மறைந்தாள். 

– சுதந்திரன் – 10.12.1950.

– ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *