கொக்கிளாய் மாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 71 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாமிக்கு வருத்தம் கடுமை. ஒரு மாதம் ஆசுப்பத்திரியிலை வச்சுப் பாத்தம். வருத்தம் குறைஞ்சபாடில்லை தமிழ் வைத்தியம் செய்து பாத்தம். சிவசம்புப் பரியாரியார் என்னென்னவோ குளிசையெல்லாம் குடுத்துப் பார்த்தார். சுகம் வரயில்லை அவரும் கையை விரிச்சுப்போட்டார். இன்னும் கொஞ்ச நாள்தான் எண்டு சொல்லிப் போட்டார். சொந்தக்காரர் வந்து பாத்திட்டுப் போகினம் சகோதரங்கள் பிள்ளையள் பேரப்பிள்ளையள் சுத்தி நிண்டு கண்ணீர் விடுகினம். மாமிக்கு இடைக்கிடை நினைவு தப்பிப் போகும். நினைவு வந்தபோது அவ குஞ்சியரைச் சைகை காட்டிக் கூப்பிட்டா. குஞ்சியர் கிட்டப்போனார். “வயல் எல்லாம் உழுது விதைச்சாச்சா இந்த முறை கச்சான் போடவேணும்” எண்டு சொன்னா. குஞ்சியர் தலையாட்டினார் வேறை என்ன செய்யிறது? 

மாமிக்கு சாகிற நேரத்திலும் வீடு வாசல் தோட்டம் துரவு வயல் எண்ட நினைப்புத்தான். 

மாமி அப்புவின் கடைசித் தங்கச்சி முள்ளிவளையிலைதான் பிறந்து வளந்தவ. கொக்கிளாய் உடையாரைக் கலியாணம் செய்து புகுந்த ஊரையே சொந்த ஊராக்கிப் போட்டா. மாமிக்கு மூண்டு பெட்டைக் குஞ்சுகள். ஒரேயொரு பெடியன். பெடியன் சங்கக் கடை மனேச்சர். கொஞ்ச நாள் கிராமச்சங்க அங்கத்தவராகவும் இருந்தார். உடையாரின் பேரைச் சொல்லித்தான் சனம் அவருக்குத் துண்டு போட்டுதாம். 

சொத்துச் சேர்க்கத் தெரியாத உடையார் மாமா சின்ன வயதிலையே செத்துப்போனார். மாமி கொஞ்சம் தடதடத்துப் போனார். ஒரு விதவைக்குரிய கெட்டித்தனம் மாமிக்கு வந்துட்டுது. எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பிள்ளையளை வளத்து ஆளாக்கிக் கரை சேர்த்துப் போட்டா. மாமாவின் தாய் வள்ளிநாச்சிக் கிழவி நல்ல உயரமான சிவப்பி. கிழவியின் துணையும் மாமிக்கு இருந்தது. வயது போன நேரத்திலும் காட்டிலை கிராஞ்சி வெட்டித் தலையிலே சுமந்து வந்து வேலி அடைச்சுப்போடும். 

மாமிக்கு முப்பது முப்பத்தைஞ்சு வருஷம் கொக்கிளாய் சீவியந்தான். வயல் தோட்டம் துரவு எண்ட மாமாவின் பரம்பரைச் சொத்தைப் பராமரிக்க வேணுமே. 

இப்ப எலும்பும் தோலுமாய் கிடக்கும் மாமி முன்பு தளதள எண்டு நல்ல வடிவாய் இருந்தா. ஐம்பத்தைஞ்சு வயசெண்டு சொன்னால் எவரும் நம்பமாட்டினம். நல்ல துடியாட்டம், எடுத்த கருமத்தை எல்லாம் ஒப்பேத்திப் போடுவா. 

கொக்கிளாய் மாமி எண்டுதான் நாங்கள் சொல்லுவம். அப்புவின் தமக்கை பெரியமாமி வத்தாப்பளையில். அவவை வத்தாப்பளை மாமி எண்டு தான் சொல்லுவம். 

சின்ன வயசிலிருந்தே கொக்கிளாய் மாமியிடந்தான் எங்களுக்குப் பட்சம் அதிகம். மாசம் ஒருக்கா கொக்கிளாயிலிருந்து வருவா. கூப்பன் வண்டியில்தான் அவவின் பிரயாணம். வேறு வாகனப் போக்குவரத்து இருக்கேல்ல. வண்டில் அம்பிடாட்டால் இருவத்தைஞ்சு மைலையும் நடந்து வந்துடுவா. நடக்கிறதுக்கும் அவ ஒரு சீமாட்டிதான். சங்கக்கடைக்குக் கூப்பன் சாமான் வாங்க முல்லைத் தீவுக்கு வண்டி வரும். இதனைக் கூப்பன் வண்டில் எண்டுதான் சனம் சொல்லும். 

மாமி வந்திட்டால் எங்களுக்கு ஒரே கும்மாளம், தோடம்பழ முட்டாசு, விசுக்கோத்து இல்லாட்டால் புடிப்புட்டு கொண்டு வருவா. 

பத்து வயதுச் சிறுவன் நான் மாமியைக் சுத்திச் சுத்தி வருவன். அவ தாற இனிப்புப் பண்டங்களைச் சாப்பிடுவன். அண்ணன்மார் தூர நிண்டு மாமியைப் பாப்பினம். கிட்டவரக் கூச்சம் போல. அவையளையும் கூப்பிட்டுக் குடுப்பா. மாமிக்கு மூத்த அண்ணரிலை ஒருகண். மாமியின்ரை புடிப்புட்டுச் சோக்காய் இருக்கும். தின்னத் தின்ன ஆசையாய் இருக்கும். ஆச்சியும் இடைக்கிடை புடிப்புட்டு அவிச்சுத்தாறவதான். மாமியின்ரை புடிப்புட்டுப் போல ருசியாய் இருக்காது. இதைச் சொன்னால் ஆச்சிக்கு மூக்கின் மேலை கோவம் வரும் எண்டதாலை நாங்கள் ஒண்டும் சொல்லுறேல்லை. 

மாமியின்ரை தாய் சின்னாச்சிப் பெத்தாச்சி குஞ்சி யரோடைதான் இருக்கிறா. அவவுக்கு சின்னமோள் எண்டால் உயிர். தாயையும் அப்பு, குஞ்சியர் பெரிய மாமி பிள்ளையள் எல்லாரையும் பார்க்கத்தான் மாமி வாறவ. நாங்கள் மிக அருமையாகத்தான் கொக்கிளாய் போவம். 

குஞ்சியரிடம் ஒரு சோடி கிண்ணியாய் மாடுகள் நிண்டன. அது மாமியின்ரை எண்டு பிறகுதான் அறிஞ்சன். ஒவ்வொரு வருஷமும் குஞ்சியர் மாடுகளைக் கொண்டுபோய் மாமியின்ரை வயலை உழுது விதைச்சுக் குடுத்திட்டு வருவார். மாமியாலை மாடுகளைப் பராமரிக்க ஏலாது. இதனால் மாடுகளை முள்ளியவ ளைக்குக் கொண்டு வந்து விடுவார். வண்டில் மாடுகளால் குஞ்சிய ருக்கும் வருமானம் உண்டு. 

நான் கொக்கிளாய்க்கு மூண்டு முறைதான் போயிருக்கிறன். ஒருமுறை சின்னப்பிள்ளை மச்சாளின் கலியாணத்துக்குப் போனனான். அப்பு, ஆச்சி, சின்னண்ணன், நான் எல்லோரும் வண்டிலில் போனம். மூத்தண்ணை வரயில்லை. சின்னப்பிள்ளை மச்சாளை மூத்தண்ணருக்குச் செய்யிற தெண்டுதான் பேச்சு அடிபட்டுது. ஆனால் அது நிறைவேற வில்லை. அதுக்கு ஆச்சிதான் இடைஞ்சலாய் இருந்தவ எண்டு கதைக்கினம். ”கழுத்துக்கும் காதுக்கும் ஒண்டுமில்லாத பொம்பிளையை எடுத்துப் போட்டுக் கோயில் குளத்துக்குக் கூட்டிக் கொண்டு போறது எப்பிடி” எண்டு ஆச்சி சொன்னதாகக் கேள்வி. 

கொக்கிளாய்க்கு நாயாத்தால் போறதெண்டால் வண்டில் மாடுகளைப் பாதையில் ஏத்தி அக்கரை சேர்க்கோணும். ஆண்டாங்குளம் வழியாலே போறதெண்டால் ஆத்தைக் கடக்கத் தேவையில்லை. நாங்கள் ஆண்டாங் குளம் வழியாகத்தான் போனம். ஒரு முழுநாள் பிரயாணம். இவ்வளவு தூரத்தையும் மாமி எப்பிடித்தான் நடந்து வந்தா எண்டு நினைச்சுப்பாத்தன். 

கொக்கிளாய் அழகான சிறிய கிராமம். நாப்பது அம்பது குடும்பங்கள்தான். பால்போல வெள்ளை மண் மிதிக்கப்பட்டுப்போல இருக்கும். கச்சான் செய்கைக்கு ஏத்த மண் கத்தரி, பயித்தை, வெண்டி, மிளகாய், வெங்காயம் நட்டுத் துரவிலைபட்டையால் தண்ணி ஊத்தி வளப்பினம். தாழ்வான நிலம் இருவாட்டி மண் வளமான மண்ணெண்டு சொல்ல முடியாட்டாலும் வயலில் விளையும் நெல் சாப்பாட்டுக்குப் போதும். மானாவரிதான். கடற்கரை ஓரம் தென்னஞ்சோலை. இதமான காற்று. மாமியின் வளவிலும் பத்துப் பன்னிரண்ெடு தென்னை மரங்கள் உண்டு. காலமை வெள்ளெனக் கடற்கரைக்குப் போனால் காசு கொடுக்காமல் மீன் வாங்கலாம். மீன் பிடிக்கிற காலத்தில் சிங்கள மீன்பிடிகாரர் வந்து வாடி அமைச்சு மீன் பிடிப்பினம். ஊராக்கள் தூண்டில் போட்டு மீன்பிடிப்பினம். சிலபேர் கட்டுமரத்தில் போய் வலைவீசி மீன்பிடிப்பினம். சிங்கள மீன்பிடிகாரர் ஊர் மக்களுடன் அன்னி யோன்னியமாகப் பழகுவர். இன வேறுபாடு மருந்துக்கும் இல்லை. 

ஒரு பாடசாலை, ஒரு வாசிகசாலை, உபதபால் கந்தோர், சங்கக்கடை என்பன சின்னச் சின்னக் கட்டிடங்களில் இயங்கின. 

பாடசாலை ஆசிரியர் மிக நல்ல மனுசன். ஒழுங்காகப் படிப்பிப்பார். அதனால் அவருக்கு நல்லபேர். ஆள் கொஞ்சம் குள்ளமானவர். அவர் மனைவி அவரைவிட உயரம். சில வேளை கணவனுக்கும் மனைவிக்கு மிடையே சண்டை வரும். மனைவிக்கு அடிக்கத் தடியை எடுப்பார். அவள் தடியைப் பறிச்சு உயர இறப்பில் செருகிவிடுவா. வாத்தியார் தொங்கித் தொங்கிப் பாப்பார் எட்டாது. மனைவி கொடுப்புக்குள் சிரிப்பா. வாத்தியாருக்குக் கோபம் ஆறிவிடும் முகத்தை நீட்டிக் கொண்டு பேசாமல் இருப்பார். 

கலியாண வீட்டில் ஒரு பிரச்சனை. மாப்பிள்ளை நீல நிறத்தில் கூறை வாங்கினது மாமிக்குப் பிடிக்கேல்லை. கூறை சிவப்பில்தான் இருக்கவேணுமெண்டு அவ நினைக்கிறா. உந்தக் கூறையை உடுக்க விடமாட்டன் எண்டு மாமி அடம்பிடிச்சா. அப்புவும் குஞ்சியரும் மாமியைச் சமாதானப்படுத்திச்சினம். 

கலியாண வீடெண்டால் ஓமம் வளத்து அம்மி மிரிச்சு அருந்ததி காட்டி நடக்கவேணும். கொக்கிளாயில் குருக்கள் இல்லை. பிள்ளையார் பிடிச்சுவைச்சு கர்ப்பூரம் கொழுத்துவினம். ஊர்ப் பெரியவர் ஒருவர் தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுத்தார். தேங்காய் உடைக்க மாப்பிள்ளை தாலியைக் கட்டினார். 

பொம்பிளை வீட்டில் வழக்கமான சடங்குகள் முடியப் பொம்பிளை மாப்பிளை கூடார வண்டியில் மாப்பிளை வீட்டுக்குப் போச்சினம். முன்னும் பின்னும் மூண்டு நாலு கூடார வண்டிகளில் சொந்தக்காரர் போவினம். மாடுகளின் கழுத்தில் வெண்டயம் கட்டப்பட்டிருந்தது. வெண்டயச் சத்தம் அரைகட்டை தூரத்துக்குக் கேக்கும். மாப்பிளை பொம்பிளை வரவைக் குறிக்கும் கோடாலி வெடியும் எறிவெடியும் முழங்கும். 

மாமி கலியாணம் செய்த காலத்தில் நல்ல வசதியாகச் சந்தோஷ மாகத்தான் வாழ்ந்தா. அவ நாலு பின்ளையளைப் பெத்த பிறகுதான் மாமா மோசம் போனவர். 

கொக்கிளாய் வடக்கையும், கிழக்கையும் இணைக்கிற கிராமம், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு வந்து நாயாத்து வழியாய்க் கொக்கிளாய் போகலாம். கொக்கிளாயிருந்து ஆத்தைக் கடந்தால் புல்மோட்டை என்னும் முஸ்லிம் கிராமம். அங்கையிருந்து திரியாய் குச்சவெளி நிலாவெளி வழியாய் திருகோணமலை போகலாம். அங்கிருந்து வெருகல் ஆத்தைக் கடந்தால் மட்டக்களப்பு போகலாம். எல்லாமே தமிழ்க் கிராமங்கள். வடக்கும் கிழக்கும் காலாதி காலமாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்கள். 

கொக்கிளாய்ச் சனம் புல்மோட்டைக்குப் போய் உடும்பு பிடிச்சு வருவினம். 

1984 வரை எல்லாம் நல்லாய்த்தான் இருந்தது. கொக்கிளாய்ச் சனம் சந்தோஷமாக இருந்ததுகள். உண்மையோ பொய்யோ தெரியாது. மீன்பிடிகாரர் தண்ணி அள்ளுறகிணத்திலை ஆரோ செத்த நாயைப் போட்டிட்டாங்களாம். ஆமிதான் பிரச்சினை யைக் கிளப்ப அப்பிடிச் செய்தது எண்டும் கதை அடிபடுகுது. எங்கை எண்டிருந்த ஆமிக்கு இது நல்ல சாட்டாகப் போட்டுது. சாணி அப்பின மாடு போல ஆமி குபு குபு எண்டு ஊருக்கை புகுந்தது. சனம் பயக்கெடுதியிலை காட்டுக்கை போட்டுது. ஆமிலவுட் ஸ்பீக்கரிலை சனத்தைக் கூப்பிட்டுது. எல்லாச் சனத்தையும் உடனடியாக ஊரைவிட்டு ஓடும்படி சொல்லிச்சுது. போய்விடு எண்டு சொன்னதும் நலிவடைஞ்ச சனங்கள் உடுத்த துணியோடு வெளிக்கிட் டிட்டுதுகள். 

வெளிக்கிட்ட சனம் தனியுத்து, வத்தாப்பளை, முள்ளிய வளை, வண்ணான்வயல், புதுக்குடியிருப்புக் கிராமங்களுக்குப் போச்சினம். அவையளைச் சொந்தக்காரர் ரெண்டு மூண்டு நாள் ஆதரிச்சினம். நிவாரணம் எண்டு மூண்டுமதம் ஏதோ குடுத்தாங்கள் பிறகு அதுகுமில்லை. 

இப்பிடி வேரோடும் வேரடி மண்ணோடும் வாழ்ந்த நிலத்திலை இருந்தது பிடுங்கி வீசப்பட்ட சனங்களுள் ஒருத்தியாக மாமியும் வந்தா. சோர்வடைஞ்ச நிலையிலும் அவ நம்பிக்கையை இழக்கவில்லை. மற்றச் சனங்களைப் போல எண்டைக்கோ ஒருநாள் ஊருக்குத் திரும்பலாம் எண்டு மாமி நம்பினா. வீடு வாசல் தோட்டம் துரவு வயல் நிலம் எல்லாத்தையும் பார்க்க வேணுமெண்ட துடிப்பு மாமிக்கு. 

இந்தியன் ஆமி வந்த காலத்தில் மாமி நடமாடித் திரிஞ்சா. அவையள் திரும்பவும் தங்களை ஊருக்குப் போக விடுவினம் எண்டு அவ நம்பினா. 

நான் ஆசிரியனாகி ஒரு பள்ளிக்குடப் பிறின்சிப்பலாகவும் வந்திட்டன். எங்கட ஊரில் இது ஒரு பெரிய சாதனைதான். கொக்கி ளாய்ச் சனங்களை திரும்பக் குடியமர்த்தப் போவதாகக் கதை அடிபட்டுது. கொக்கிளாயில் பள்ளிக்குடம் துடங்குமாறு டிப்பாட்மென்ருக்கும் அறிவித்தல் வந்திட்டுது. கொக்கிளாய் போகும் குழுவிலை என்னையும் சேத்தினம். 

ஆமியின்ரை அனுமதி பெற்றுத்தான் அங்கு போக முடியும். முல்லைத்தீவு ஆமிக் கொம்மாண்டரைச் சந்திக்க அனுமதி கேட்டம். வெலிஓயாவுக்கு வேறை ஆமிக் கொம்மாண்டர் இருக்கிறார். அவரைத்தான் கேட்கவேணும் எண்டு சொன்னார். 

நாங்கள் கொக்கிளாய்க்குத்தான் போகப்போறம் வெலி ஓயாவுக்கல்ல எண்டம். இப்ப கொக்கிளாயை வெலிஓயா எண்டுதான் சொல்லுறது எண்டார் அவர். ‘வெலிஓயா’ முன்பு எப்போதும் கேட்டறியாத சொல் அது. 

மாமி எப்பிடியோ இதைக் கேள்விப்பட்டுவிட்டா. தன்ரை வீட்டையும் காணியளையும் பார்த்து வருமாறு என்னட்டைச் சொன்னா. தலையாட்டி விட்டுக் கொக்கிளாய்க்கு (வெலிஒயாவுக்கு போனம். அங்கை கொக்கிளாய் எண்ட ஊர் இருந்த அடையாளமே இல்லை. பெரியதொரு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது. அகலமான வீதிகள் இருமருங்கும் பெரிய பெரிய கடைகள், பெரிய வைத்திய சாலை, வாசிகசாலை, கிராம முன்னேற்றச் சங்கம், தபால் கந்தோர், றெஸ்ற் ஹவுஸ், நிரந்தரமான கல்வீடுகள், பப்பாசி மரங்கள் இவையளைத்தான் பார்க்க முடிஞ்சுது. பெரும்பான்மை இனமக்கள் நெருக்கமான வீடுகளில் வசித்துக் கொண்டிருந்தனர். அநுராதபுரம் கச்சேரி அவையளுக்குக் காணி உறுதி கூடக் குடுத்திட்டுதாம். இந்த நிலையில் மாமியின் வீட்டையோ காணியளையோ எப்பிடிக் கண்டு பிடிப்பது? 

இந்த உண்மையை மாமிக்கு எப்படிச் சொல்லுறது? “வீடு காணி எல்லாம் அப்பிடியே இருக்குது” என மனமறிந்து பொய் சொன்னன். மாமிக்கு நல்ல புளுகம். 

இது நடந்து மூண்டு வரியம் ஓடிவிட்டது. மாமி ஊர் நினைவிலேயே உருக்குலைஞ்சு போனா. வருத்தமும் கூடிவிட்டது. நினவு வந்தபோது ஒருக்கால் என்னைக் கூப்பிட்டா “என்ன மாமி” எண்டன். 

“என்னைக் கொக்கிளாய்க்குக் கொண்டு போங்கோ’ ‘எப்பிடி மறுப்பது? “நான் ஒழுங்கு செய்யுறன்” எண்டு சொல்லி ஒரு டிறாக்ரரில் மாமியை ஏத்தினன். ஊருக்குப் போற சந்தோசம் அவ முகத்தில் பளிச்சிட்டது. டிறாக்ரர் வைத்தியசாலையை நோக்கிப் போனது. மாமி மீண்டும் மயக்க நிலையில் மூண்டு முறை விக்கல் எடுத்தா; தலை சாய்ந்தது. அப்பு நாடியைப் பிடிச்சுப் பார்த்தார்; கையை விரிச்சுக்காட்டினார். ஊருக்குப் போறன் எண்ட நிம்மதியோடு மாமி போய்ச் சேந்துவிட்டா. 

இப்ப கொக்கிளாயும் இல்லை மாமியும் இல்லை. நினைவு மட்டும் என் நெஞ்சை நெருடிக்கொண்டிருக்குது. 

(முதற்பரிசுச் சிறுகதை) 

முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளையில் 1933 இல் பிறந்த முல்லைமணி வே.சுப்பிரமணியம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எழுத்துத்துறையில் தடம்பதித்து எழுதிவருகிறார். இதுவரை 13 நூல்களை வெளியிட்டுள்ளார். கலைக் கழகப் பரிசு, தேசிய சாஹித்ய மண்டலப்பரிசு (இரு முறைகள்) வடக்கு, கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் இலக்கியப் பரிசு (இரு முறைகள்), துறை நீலாவணை இலக்கியப் பேரவைக் கவிதைப்பரிசு, வீரகேசரி பிராந்திய நாவல் போட்டியில் பரிசு என்பவை இவரின் ஆக்கங்களுக்காகக் கிடைத்த பரிசுகளாகும். 

இவரது நான்கு நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுதிகள், ஒரு நாடகநூல் (பண்டாரவன்னியன்), மூன்று பக்திப்பாமாலைகள், பாடநூல் ஒன்று, இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என்பன நூலுருப் பெற்றுள்ளன. வடக்கு – கிழக்கு மாகாண ஆளுநர் விருதினைப் பெற்ற இவர் கலாபூஷணம், தமிழ்மணி, கலைஞர் திலகம், இலக்கியச் செல்வர். தமிழ் அறிஞர் முதலிய பட்டங்களையும் பெற்றுள்ளார். 

– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *