குரு பார்வை
குரு – சீடர் உறவு என்பது அற்புதமானது. கல்வி, கலை, போர்ப் பயிற்சி உள்ளிட்ட பிற வித்தைகளிலாயினும் அப்படியே. எனினும் ஆன்மிகத்தில் இது பன்மடங்கு மேலானது.

நமது இந்திய மரபில், மாதா – பிதா – குரு – தெய்வம் என்ற ஒரு மரபுத் தொடர் இருப்பது பரவலாகத் தெரிந்த விஷயம். அவ் வகையில் பார்க்கும்போது, பெற்றோருக்கு அடுத்தபடியாகவும், தெய்வத்திற்கு முன்னதாகவும் இருக்கக்கூடிய சிறப்பிடம், குரு ஸ்தானத்தினுடையது.
உண்மையான குருவானவர், தனது சீடர்களுக்கு தாய் ஸ்தானத்திலிருந்து அன்பையும், தந்தை ஸ்தானத்திலிருந்து அறிவையும் கற்றுக் கொடுப்பார்.
குருவருள் என்று சொல்வார்கள். அதுவும் இறையருள் போன்ற ஒன்று. குருவருள் உள்ள சீடரே, சீடர்களில் தலை சிறந்தவராகவும், பிற்காலத்தில் சிறந்த குருவாகவும் ஆக இயலும்.
சூஃபி மெய்ஞானிகளில் பிரசித்தி பெற்ற ஒருவர் ஜூனைத். அவர் மிகவும் வித்தியாசமானவர். அவரது அனுபவங்களும் வழக்கத்திற்கு மாறுபட்ட விதமாக இருக்கும். தனது குருவிடம் அவர் சீடராகச் சேர்ந்த அனுபவமும் அதே மாதிரியானதுதான்.
ஜுனைத்தின் குரு யார் என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. எனினும், இக் கதை, அவர் ஒரு குருவிடம் சீடராக இருந்த அனுபவத்தைப் பற்றித் தெரிவிக்கிறது.
அந்த குரு மிகவும் சிறந்தவர் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் சீடராக சேர்வதற்காக ஜுனைத் அவரிடம் சென்றார்.
அந்த குருவிடம், ‘நான் உங்கள் சீடனாக விரும்புகிறேன்’ என்று சொல்லி, யாரும் சீடராக சேர்ந்துவிட முடியாது. அவராகப் பார்த்து, சீடனாக சேர்த்துக்கொண்டால்தான் உண்டு.
அவரைக் காண ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்வர். அவரும் அவர்களுக்கு உபதேசங்களைச் செய்வார். ஜுனைத் அவர்களில் ஒருவராக, குருவின் பார்வையில் படும்படி தினமும் அமர்ந்திருந்து, அந்த உபதேசங்களைக் கேட்பது வழக்கம். மூன்று வருடங்களாக அவர் அப்படி குருவின் பார்வையில் பட்டிருந்தும், குரு ஜுனைத்தைக் கண்டுகொள்ளவே இல்லை.
மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் குரு அவரைப் பார்த்தார். உள்ளுக்குள் இருப்பதை ஊடுருவிப் பார்க்கும்படியான கூரிய பார்வை அது. அவ்வளவுதான்! ஆனால், அதற்கு மேல் ஒன்றும் செய்யவில்லை.
மேலும் மூன்று வருடங்கள் அதே போல் கழிந்தன. அதன் பிறகு குரு ஒரு நாள் ஜுனைத்தைப் பார்த்து புன்முறுவல் செய்தார். இதயத்தை மலரச் செய்யும் விதமான இனிய புன்னகை அது. இப்போதும் அதற்குப் பிறகு வேறு எதுவும் செய்யவோ, பேசவோ இல்லை.
மீண்டும் மூன்று வருடங்கள் அதே போல் கழிந்தன. அதன் பிறகு ஒரு நாள், குரு ஜுனைத்தை அழைத்தார். அவரது நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வதித்து, “நீ பூரணம் அடைந்து விட்டாய்! இனி நீயும் மக்களுக்கு செய்திகளைச் சொல்லலாம்!” என்றார்.
ஆனால், எந்த செய்தியை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று அவர் எதுவும் சொல்லவில்லை. ஆயினும் ஜுனைத்திற்கு அது தெரிந்திருந்தது.
குருவுக்கும், பூரணத்துவம் பெற்ற சீடனுக்கும் இடையேயான உரையாடல் என்பது இப்படித்தான், மௌனத்தில் நிகழக் கூடியதாக இருக்கும். அவர் சீடனுக்கு தனியே போதிக்க வேண்டியதில்லை. அவரே போதனையாக இருப்பார். அவரே அந்த போதனைகளை வாழ்ந்து காட்டவும் செய்வார்.
இதெல்லாம் ஒரு புறமிருக்க, குரு சிஷ்யன் உறவின் மேன்மையும், ஒரு சீடர் சிறந்த சீடராக இருப்பது எப்படி என்பதற்கான உதாரணமும் இந்தக் கதையில் உள்ளது.
சீடன் குருவைத் தேர்ந்தெடுப்பதில்லை; குருதான் சீடனைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது ஆன்மீகத்தில் பிரசித்தமான பழமொழி. சீடன் தேடி வந்து குருவிடம் சேர்வது கூட, குருவின் தேர்ந்தெடுப்புதான்.
குரு ஏற்கனவே அவனைப் பற்றியும், இந்த சமயத்தில் அவன் தன்னிடம் சீடனாக வந்து சேர்வான் என்றும் அறிந்திருப்பார் என்றும் சொல்வார்கள். விவேகானந்தர் முதல் முறையாக ராமகிருஷ்ணரை சந்திக்கச் சென்றபோது, “நீ ஏன் இங்கு வர இவ்வளவு தாமதம்? உனக்காகத்தான் நான் இவ்வளவு காலமும் காத்திருந்தேன்!” என்று ராமகிருஷ்ணர் சொன்ன பிரபல சம்பவம் உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.
ஜுனைத்தின் குரு இவ்வாறு மட்டுமன்றி, சீடர்களுக்கு கடுமையான சோதனை வைத்து தேர்ந்தெடுக்கக் கூடியவர் என்பதும் இக் கதையிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது. ஆகவே, அவர் சாதாரண குருமார்களைப் போல அன்றி, மிகவும் கறாரானவர் என்பதும், தகுதி மிக்கவர்களையே சீடராகத் தேர்ந்தெடுப்பார் என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.
ஜுனைத்தும் அதே போல், மிகச் சிறந்த சீடருக்கு உதாரணம். குரு தன்னை அழைத்து சீடராக ஏற்றுக்கொள்ளும் வரை அவர் காத்திருக்கிறார். சில வாரங்களோ, மாதங்களோ அல்ல; ஒன்பது வருடங்கள். அவரது குரு பக்தி மிக ஆழமானது. அதுதான் அவரை ஒரு தலைசிறந்த சீடராக, ஞானியாக உருவாக்கியது.
அது மட்டுமன்றி, குரு அவருக்கு எந்த உபதேசமும் செய்யத் தேவையில்லாத அளவுக்கு, அவர் தனது குருவை, அவரது போதனைகளை, உள்வாங்கிக் கொண்டிருக்கிறார். ஜுனைத்தின் இந்தத் தகுதி அவரது குருவுக்குத் தெரியும். அதனாலேயே அவர் ஜுனைத்திற்கு எந்த போதனையையும் செய்யவில்லை.
முதல் முறையாக, மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகுதான் அவர் ஜுனைத்தை ஏறெடுத்தே பார்க்கிறார். அவரது ஊடுருவல் பார்வையில், ஜுனைத்தின் ஆன்மா எவ்வளவு பரிசுத்தமானது; தனக்கு சீடர் ஆவதற்காக அவர் எவ்வளவு குரு பக்தியோடும், நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கிறார் என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்துவிட்டது.
இரண்டாவது முறையாக அவர், மீண்டும் மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகுதான் ஜுனைத்தை நோக்கி புன்முறுவல் செய்கிறார். அப்போது அவரது குரு அருளினால் ஜுனைத்தின் இதயமே மலர்கிறது. அதன்பிறகு படிப்படியாக ஜுனைத்திற்குள் ஆன்மீக மலர்ச்சி தானாகவே நிகழ்கிறது. அதைத் தொடங்கி வைத்தது குருவின் புன்னகையும், அவரது அருளும்தான்!
இன்னும் மூன்று ஆண்டுகளில் அந்த மலர்ச்சி பூர்த்தியாகி, ஜுனைத் பரிபூரணம் அடைகிறார். இப்போது அவரும் குரு ஸ்தானத்தை அடைந்துவிட்டார். அவர் மக்களுக்கு போதிக்கலாம். எனவேதான் குருநாதர் அவரை அழைத்து, அவரது நெற்றியில் முத்தமிட்டு, “நீ பூரணம் அடைந்து விட்டாய்! இனி நீ செய்திகளைப் பரப்பலாம்!” என்று சொல்கிறார்.
இந்து மதத்தில், தீட்சை அளிப்பதில் பல விதங்கள் உள்ளன. ஞான நூல்களைக் கற்றுக் கொடுப்பதன் மூலம், உபதேசிப்பதன் மூலம், சடங்குகள் மூலம், தொட்டு ஆசீர்வதிப்பதன் மூலம் என பல விதமாக தீட்சைகள் கொடுக்கப்படுகின்றன. நயன தீட்சை என்பதும் தீட்சை முறைகளில் ஒன்று. அது, குருவானவர் தனது பார்வை மூலமாகவே சீடர்களுக்கு தீட்சை வழங்குவது ஆகும்.
ஜுனைத்தின் குருநாதரும் கிட்டத்தட்ட இதே மாதிரியாகத்தான், தனது பார்வை மூலமாக முதல் முறையும், புன்னகை மூலமாக இரண்டாவது முறையும், நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வதித்ததன் மூலம் மூன்றாவது முறையுமாக தீட்சையை வழங்கி, ஜுனைத்தைப் பூரணப்படுத்துகிறார்.