குமார சம்பவம்
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 30,849
பாகம் மூன்று | பாகம் நான்கு | பாகம் ஐந்து
ஈஷ்வரனுக்கு பார்வதியுடன் விவாகம் நடைபெற வேண்டும். அதனால் அவரது சார்பாக இமவானிடம் பெண் கேட்பதற்கு சப்தரிஷிகளும் செல்கின்றனர்.
ரிஷிகளை எதிர் கொண்டு வரவேற்க ராஜதானிகள் விரைந்து வருகின்றனர். இமவானும் சப்தரிஷிகளை வரவேற்று கௌரவப்படுத்துகிறான். ரிஷிகளும் பர்வதராஜனிடம் சிவனது அபிலாக்ஷைகளை எடுத்துக் கூறுகின்றனர். பர்வதராஜனும் மிகுந்த ஆனந்தத்துடன் விவாகத்திற்கு ஒப்புதல் அளிக்கிறான். தனது பரிபூரண சம்மதத்தை தெரியப் படுத்துகிறான்.
உலகம் உய்யும் பொருட்டு சிவனுக்கும் பார்வதிக்கும் விவாக வைபவங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மணமகனும் மணமகளும் பிதாமகனாகிய பிரம்ம தேவனிடம் ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். பிரமதேவனும், “ஹே, கல்யாணி! வீரமான புத்திரனைப் பெறுவாயாக” என்று கூறி ஆசீர்வதிக்கிறார்.
சிவ – பார்வதி திருமணத்தில் சாப விமோசனம் பெற்ற மன்மதனும் இருக்கிறான்.
மகேஷவரன் பார்வதியை அழைத்துக் கொண்டு கைலாச பர்வதம் செல்கிறார். அங்கு பார்வதியுடன் வெகு ஆனந்தமாக பல காலங்களை கழிக்கிறார். இப்பொழுது , இந்த காலகட்டத்தில் தாரகாசுரனின் அட்டூழியங்கள் வளர்ந்து அதிகமாகிக் கொண்டு போகிறது. அதனால் துயரமடைந்த இந்திரன் முதலிய தேவர்களும் அக்னிதேவனை அழைத்து , சிவனிடம் சென்று தாரகனின் துர் செயல்களை கூறும் படி சொல்கிறார்கள். அக்னிதேவனும் ஒரு புறா வடிவம் எடுத்து கைலாச பர்வதத்திற்கு செல்கிறான்.
புறா வடிவில் உள்ள இந்திரன் கைலாச மலையில் சிவன் – பார்வதியின் பள்ளியறையின் உள்ளே பிரவேசித்தான். அதனால் சிவனுக்கு கோபம் உண்டாகிறது. அக்னியும் பயந்து தான் வந்த கார்யமான இந்திராதி தேவர்களுடைய விண்ணப்பங்களைக் கூறுகிறான். தாரகனின் மீது அதிக கோபமடைந்த சிவன் தனது முன்றாவது கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஒளிப்பிழம்பை அக்னிதேவனிடம் கொடுத்து அனுப்புகிறார்.
அக்னிதேவன் உசிதமின்றி தனது பள்ளியறையில் பிரவேசம் செய்தது கண்டு பார்வதி தேவி கோபம் அடைந்தாள். அதனால் அக்னிதேவனுக்கு சாபம் தருகிறாள். “நீ எல்லாவித உணவுகளையும் சாப்பிடுவாய். பவிததிரம் அல்லது பவித்திரமில்லாத அனைத்தையும் உணவாகக் கொள்வாய். குஷ்டரோகம் உன்னைப் பீடிக்கும். எப்பொழுதும் புகைந்து கொண்டு புகையால் மூடப் பட்டவனாக இருப்பாய்”.
பார்வதி தேவியிடம் பெற்ற சாபத்தினால் வருத்தமடைகிறான் அக்னி. என்றாலும் லோக மாதாவின் சாபம் கூட ஒரு வரமாகத் தான் இருக்கும் என்று தேவர்கள் சமாதானப் படுத்துகிறார்கள். சிவன் தன்னிடம் அளித்த ஒளிப்பிழம்பை இந்திரனின் ஆலோசனைப்படி , அறிவுறையின்படி கங்கையில் கொண்டு சேர்க்கிறான்.
கங்கா தேவி அந்த ஒளிப்பிழம்பை தனது கரையில் உள்ள அடர்ந்த நாணல் புல்களின் இடையே பத்திரப் படுத்துகிறாள். அந்த அடர்ந்த நாணல் புதர்களிடையே குமார ஜனனம் நிகழ்ந்தது.
இத்துடன் குமார சம்பவம் நான்காம் பாகம் நிறைவடைந்தது.
குமார சம்பவம் பாகம் ஐந்து தொடரும்.